தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 11]
- ஜெயந்தி சங்கர்

குமார் மட்டும் ஒரு தடவையும், நானும் குமாரும் சேர்ந்து ஒரு தடவையும் பெங்களூருக்குப் போய்ட்டு வந்தாச்சு. உமா பிரசவம் முடிஞ்ச இந்த ஒரு வருஷத்துக்குள்ள. அசைவேனாங்கறேனே இந்த வசந்த். மொதல்லயெல்லாம் அவனுக்கு உள்ளூர உமாவச் சந்திக்கறதுல இஷ்டமில்லையோன்னு தான் நான் மொதல்ல நெனச்சேன். ஆனா, உமாவப்பத்தியும் கொழந்தையப்பத்தியும் போறவா வரவா கிட்டயும், அங்கியிருந்து போன் பண்ணியும் தெரிஞ்சுக்கறதுல அவன் காட்டின அக்கறையும் என்னோட சந்தேகம் தேவையில்லாததுன்னு புரிஞ்சுடுத்து. உமா பேர்ல அவனுக்கு இன்னும் அபிமானம் இருக்கத்தான் இருந்தது.

வசந்த்துக்கு விஷயம் சொல்றதுக்காகவே ஷீலா வாரம் ஒருதடவையாவது உமாவாத்துக்குப்போய் பார்த்துட்டு வரா. கொழந்தைய போட்டோ எடுக்கறா. வசந்த்துக்கு அனுப்பறான்னெல்லாம் தெரிஞ்சுது. வசந்த் தான் ஷீலா மூலமா வேற ஒரு டிராவெல் ஏஜென்ஸில உமாவுக்கு வேலை ஒன்றை வாங்கிக்கொடுத்தான். பகல்ல நிவேதிதாவை அகிலாதான் பார்த்துண்டா. கையில வேல ஒண்ணு இருக்கறது எவ்வளவு பெரிய பலம்னு உமாவுக்கு நன்னா புரிஞ்சுதே அப்போதான்னு நெனக்கறேன். கொழந்தையையும் பார்த்துண்டு வேலைக்கும் போறது உமாவுக்கு ஆரம்பத்துல கொஞ்சம் சிரமமாத்தான் இருந்தது. ஆனாலும் உமாவுக்கு மனசுக்கு மிகப்பெரிய மாறுதலா இருந்தது.

உமாவுக்கு நானும் எவ்வளவோ அட்வைஸ் பண்ணிட்டேன். ஒரு போன் பண்ணி வசந்த்தோட பேசுன்னு. அவளுக்கு ஏனோ அவ்வளவு தயக்கம். 'போன்னா போகவும் வான்னா வரவும் வசந்த் என்ன நாம வச்ச ஆளா, என்ன நியாயம்',னு கேட்டுண்டேயிருந்தா. பேசாம ஷீலாவக்கல்யாணம் பண்ணிண்டு அவர் நன்னா இருக்கணும்னு வேற சொன்னா. தன்னப் பார்த்தா வசந்த்துக்குக் குற்றவுணர்ச்சிகூட வரலாம்னு வருத்ததோட சொல்லிண்டா.

உமாக்கு ஷீலாவோட விஷயம் தெரியாது. குமார் அவளுக்குக் கொடுத்திருந்த ஒரு வருஷக்கெடு பற்றியும் அவளுக்குத் தெரியாது. ஒரு வருஷம் எப்பவோ முடிஞ்சாச்சு. குமார் காத்துண்டிருக்கான். ஷீலாவும் சரின்னு சொல்லிடுவான்னுதான் நெனக்கறேன். குமாரோட வருஷக்கணக்கான பொறுமைக்கிப் பலன் கெடைச்சாச் சரி.

தன் வாழ்க்கைல இன்னொருத்திக்கு இடமில்லன்னு வசந்த் இருக்கறது உமாக்குப் புரியல்ல. "அதெப்படி அவுன்ஸ் மாமா, இப்படியெல்லாம் ஒங்களால யோசிக்கமுடியறது. வசந்த்தக் கூப்பிடு, கல்யாணம் பண்ணிக்கோன்னெல்லாம் சொல்றேளே, உங்களுக்கே நியாயமா இருக்கா? ஷீலா இல்லாட்டா, அவர் வேற நல்ல பொண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிண்டு சௌக்கியமா இருக்கணும்", னெல்லாம் என்னைக் கோச்சிண்டா. கோபமாப் பேசறச்சே தான் உமா, என்ன அவுன்ஸ் மாமா கூப்டுவோ. அதுவும் ஒரு உரிமையோடதான்.

நாணு அவண்ணா பேச்சக் கேட்டுண்டு உமாவ மாமியாராத்துக்கு அனுப்பத்தான் பார்த்தான். உமாவோட மாமியாரும் மாமனாரும் இந்தியாவுக்கே வந்துட்டா, திரும்பி சிங்கப்பூர் போறதாயில்லையாம். உமாவ அவா ரெண்டு பேரும் வெளிப்படையாவே வேண்டாம்னு சொல்லிட்டா. பேத்தியக்கூடப் பாக்கவரல்ல. பேரனாப் பொறந்திருந்தா நாட்டுப் பெண்ணையும் சேர்த்திண்டிருப்பாளாம். என்ன பணக்காராளா இருந்தென்ன மனசுல பெருந்தன்மையில்லையே. பொறந்தாத்துலயே இருக்கட்டும்னு சொல்லிட்டா உமாவ.

உமாவும் அங்கதான் இருந்தா பாவம் வேற வழியில்லாததால. ஆனா, அவளுக்கும் அங்க ஒண்ணும் சரிப்படல்ல. நாணுவுக்கு பொண்ணு பொட்டழிஞ்சு நிக்கறாளேன்னு ரொம்ப வருத்தம் தான். பொண்ணு வாழ்க்கை இப்படியானதுல அகிலா வாரக்கணக்குல படுக்கைல விழுந்து எழுந்தா, வாழ்வா சாவான்னு போராடிட்டு. வெங்கட்டே நிறுத்திடலாம்னு நெனச்ச கல்யாணத்த முரட்டுப்பிடிவாதமா நடத்தி தன்னையும் தன் கொழந்தையையும் இப்படி தனியாக்கினதுல உமாவுக்கு பெத்தவாபேர்ல கோபம். அம்மா அப்பா தனக்கு செஞ்ச அநியாயத்த மனசுல வச்சிண்டு கொஞ்சம் சிடுசிடுன்னு பேசிட்டா உமா.

நாணு மெதுவா உமாக்கு மறுகல்யாணம் பண்ணலாம்னு பேச்ச ஆரம்பிச்சான். மறுபடியும் உமாக்குக் கல்யாணம் பண்றதாவதுன்னு சுப்பராமன் பெரிய சாஸ்திர சிரோன்மணியாட்டமாக் குதிகுதின்னு குதிச்சான். அழுதிண்டே," உமாவுக்கு ஒரு வாழ்க்கை வேண்டாமா, பிற்காலத்துல அவ கதிதான் என்ன?",னு அகிலாவும் நாணுவும் பேசிப்பார்த்தா. ஒண்ணுத்துக்கும் சுப்பராமன் அசையல்ல.

இது எதுவுமே உமாவுக்குத் தெரியாது. சுப்பராமன், பொண்ணுக்கு மறுகல்யாணம் பண்ணினா ஊர் பக்கம் மட்டும் வந்துடாதேன்னு சத்தம் போட்டானாம். மாயவரத்துலயும் கும்பகோணத்துலயும் ஒறவுக்காரா எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சாளாம்," சுப்பராமன் ஏன் இப்படி வெறிபிடிச்சுண்டு ஆடறான், தம்பியையும் ஆட்டி வைக்கறான், அதுவும் இந்தக்காலத்துல போயி இப்படி. இதே அவம்பொண்ணுக்குன்னா இப்படித்தான் பேசுவானா",னு. அங்க அவா பேசின கேலியெல்லாம் காத்துவாக்குல என் காதுக்கு வந்துசேர்ந்தது.

ரெண்டு வாரம் முன்னாடிதான் நாணு என்னத் தேடிண்டு வந்திருந்தான். போஸ்டாபீஸ¤க்குப் போயிருந்த நான் திரும்பி வந்ததும், பக்கத்தாத்துக்காரா தான் சொன்னா. என்னவோ ஏதோன்னு லொங்கு லொங்குன்னு தாம்பரத்துக்கு ஓடினேன். நாணு ஒரு போன் வச்சுக்கலாம்னு நெனச்சுண்டேன் அப்பதான். போறவழியெல்லாம் என்னவோ ஏதோன்னு ஒரே பதட்டம்.

நாணு மறுபடியும் உமாவுக்குத் தெரியாம சில வேலைகள செஞ்சுண்டிருந்தான். உமாவுக்கு ஒன்றும் தெரியாதுன்னு அவன் பேசப்பேசப் புரிஞ்சது. யாரோ திருச்சியில பிள்ளையாம். அவனுக்குப் பொண்ணாட்டி செத்துப்போயி ரெண்டு வருஷமாச்சாம். வயசுதான் கொஞ்சம் கூடவாம். நாப்பத்தியொண்ணு.

"மணி, பார்க்க முப்பத்தஞ்சுதாண்டா, மதிக்கலாம். நேர்லயே போய் பார்த்தேண்டா. அண்ணாக்கு சொல்லல்ல. சொல்றதாவும் இல்ல. அவன் தான் இதுக்குச் சம்மதிக்கமாட்டேன்னு சொல்லிட்டானே. உமாவப் பண்ணிக்க அவாளுக்கு முழுச்சம்மதம். நல்ல மனுஷாளா இருக்கா. ஒரே ஒரு கண்டிஷன் தாண்டா சொல்றா. கொழந்தைய மட்டும் நானும் அகிலாவும் இங்க வச்சு வளர்த்துக்கணும்னு,." நாணு பேசப்பேச எனக்குக் கோபம் சுருசுருவென்று ஏறியது. அவனை அறைஞ்சுடுவேனோன்னு கூட பயமா இருந்தது.

" நாணு, ஏண்டா உனக்கு புத்தி இப்படிப்போறது? ஒரு மாடு வாங்கினாக் கூட, பசுவோட சேர்த்து கன்னையும் தான் ஓட்டிண்டு போவா. எத்தன கேவலமான காரியம் இது, தாயையும் கொழந்தையையும் பிரிக்கறதாவது? நீயும் தலையாட்டிண்டு வந்தியாக்கும்",னு என்னையறியாமல், உரக்கக் கத்திட்டேன். உள்ள இருந்த அகிலாவும் உமாவும் என்னவோ ஏதோன்னு பதறிண்டு ஓடிவந்தா.

கொழந்த தூங்கிண்டிருந்தா போல்ருக்கு. உமா இன்னும் ஆபீஸிலிருந்து வந்து டிரெஸ் கூட மாத்திருக்கல்ல. ரெண்டு பேரும் பேந்தப்பேந்த முழிச்சுண்டு நின்னா. நாணு தடுத்ததப் பொருட்படுத்தாம உமாட்ட நான் சொன்னேன். "உமா உங்கப்பா மறுபடியும் உனக்குத் தெரியாம கல்யாண ஏற்பாடு பண்றாம்மா. திருச்சியாம். ரெண்டாம் தாராமாம். நிவேதிதாவ உங்கம்மாவும் அப்பாவும் வெச்சு வளர்க்கணுமாம்,.."

சொல்லச் சொல்ல அப்படியே வாயப்பொளந்துண்டு அப்பாவையே எரிச்சுடறாப்ல பார்த்தா உமா. கொஞ்ச நேரம் பேசாம நின்னா. தீவிரமா யோசிச்சா போல்ருக்கு.

"மாமா, நானும் கொழந்தையும் இங்க இருக்கக்கூடாது இனிமே. அங்கப்பா அம்மாவாலயே எனக்கு மறுபடியும் ஒரு பிரச்சன வரும்னா, எனக்கு இங்க இருக்கறதுக்கே பயமா இருக்கு. மறுபடியும் இவா பேச்சுக்கு ஆட என்னால ஆகாது. நெறைய பட்டாச்சு. அழுதாச்சு. இப்ப எனக்கு தைர்யம் வந்திருக்கு. அனுபவமும் தான். எனக்கு இங்க இருக்க வேண்டாம். உங்காத்துக்கு நான் வந்துடறேன் மாமா", னு உமா சொன்னதும், அதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்காததால என்ன சொல்றதுன்னு புரியாமல் அப்படியே நின்னேன்.

மௌனம் சம்மதம் என்று நினைச்சுண்டோ என்னவோ உமா விடுவிடுன்னு உள்ள போனா. ஒரு பெட்டில தனக்கும் நிவேதிதாவுக்கும் துணிகள எடுத்து வச்சிண்டா. அகிலாவும் நாணும் அறைக்குள்ள எட்டி பார்த்தா.

" உமா, என்னடி பண்ற? ஏதோ கோபத்துல சொல்றன்னு நெனச்சேன்,"னு அகிலா கேட்டதுக்கு, "அம்மா, இனிமே எனக்கு எல்லாமே இந்தக் கொழந்ததான். அவளுக்காக நான் வாழணும். ஒரு தடவ என்னவோ பண்ணி பொண்ணு இப்படி நிக்கறாளேன்னு கொஞ்சமாவது ஒங்க ரெண்டுபேருக்கும் புத்தி வந்திருக்கோ,..ம்? உங்ககிட்ட இன்னொரு உமா உருவாகறத என்னால நெனச்சுகூடப் பாக்கா முடியல்ல. என்னப் போக விடுங்கோ",னு சொல்லிட்டு பெட்டியத் தூக்கி என்கிட்ட கொடுத்தா. தூங்கிண்டிருந்த கொழந்தையத் தூக்கித் தோள்ள சாய்ச்சிண்டா. கூடையையும் தானே தூக்கிண்டு வாசலப்பார்க்க நடந்தா.

எனக்கு உமா என் மேல வச்சிருந்தா நம்பிக்கை ரொம்ப சந்தோஷத்த கொடுத்ததுன்னாலும், அவ எடுத்த முடிவு சரிதானான்னு புரியல்ல. அப்போதைக்கு உமா வேற எங்கயும் போறதவிட என்கூட பத்திரமா இருக்கட்டும்னு மட்டும் தோணித்து. அவளோடயே போனேன். ஆட்டோ வச்சுண்டு எங்காத்துக்கு வந்து சேர்ந்தோம்.

உமா ஒரு வாரத்துக்கு லீவு போட்டா. கொழந்தையப் பார்த்துண்டு ஆத்தோடதான் இருந்தா. அவ தயவுல மெஸ் சாப்பாட்டுலயிருந்து எனக்குக் கொஞ்சம் விடுதலை கெடைச்சது.

கொழந்தையப் பார்த்துக்கற கிரெஷ்ல போய் விஜாரிச்சுண்டு வந்தா. ஒண்ணு ரொம்ப தூரத்துல இருந்தது. இன்னொண்ணு அவளோட ஆபீஸ¤க்குப் பக்கத்துல இருந்தாலும், பீஸ் அதிகமா இருந்தது. யோசிச்சு யோசிச்சு உமா கொழம்பினாப்ல இருந்தது.

நானே கொழந்தையப் பாத்துக்கறேன்னு சொல்லிப் பார்த்தேன். "உங்களுக்கு ஏம்மாமா சிரமம்? நானே ஒரு சின்ன போர்ஷன் பார்த்துண்டிருக்கேன். சொல்லி வச்சாச்சு. கெடைச்சதும் போயிடுவேன்,"ன்னா. உமா தனியாப்போய் இருக்கறது சரியில்லன்னு தோணித்து எனக்கு. பேசாம பொறந்தாத்துக்கே நீ போயிடலாம்னு அப்பறமாச் சொல்லிப் பார்க்கலாம்னு நெனச்சுண்டேன். அப்போ அவ இருந்த மனநிலைல எதுவும் சொன்னா அழுதுடப்போறாளேன்னு பேசாம இருந்தேன்.

ஒரு வாரத்துக்குள்ளையே அக்கம்பக்கம் எல்லாரும் விதவிதமா கேள்விகேட்க ஆரம்பிச்சா. எல்லாருக்கும் உமா யாரு, ஏன் எங்காத்துல இருக்கான்னு தெரிஞ்சுக்கணும். சிலபேர் நேரடியா கேக்கவே செஞ்சா. வேற சிலபேர்,"எனக்கு வம்பு பிடிக்காது"னு காமிச்சுண்டே உள்ளுக்குள்ள ரகசியமா வம்புக்கு அலைஞ்சா.

இது ஒண்ணுமே தெரியாம உமா அவபாட்டுக்கு உள்ள இருந்தா. ஒருநாள் நாணுவையும் அகிலாவையும் போய்ப் பார்த்துப்பேசினேன். "மணி, நீ அவளுக்கு புத்தி சொல்லி இங்கயே அனுப்பி வை. நாங்க இனிமே அவளக் கேக்காம ஒண்ணுமே செய்யல்லன்னு சொல்லு அவகிட்ட. வேற எங்கயும் அவ போயிடாம நீதான் பார்த்துக்கணும்"னு கைப் பிடிச்சு கண்கலங்கக் கேட்டுண்டான் நாணு. ஆயிரம் இருந்தாலும் பெத்தவனாச்சே, அவனப் பார்க்கப் பாவமாயிருந்தது. சீக்கிரமே கூட்டிக்கொண்டு வந்து விடறதாச் சொல்லிட்டுத் திரும்பி வந்தேன்.

வழியெல்லாம் உமாவப்பத்தியே தான் நெனச்சுண்டு வந்தேன். தெரியாத யாரையோ கல்யாணம் பண்ணிக்கறதுக்குப் பேசாம உமா வசந்த்தையே பண்ணிக்கலாம். சொல்லிப்பார்த்தேன் நாணுகிட்ட. இவ்வளவு நடந்தும் மடையனுக்கு அறிவேயில்லையே. மறுபடியும் பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிப்பிடணும்னு, எங்கெங்கயோ அலைஞ்சு யார்யாரையோ பார்த்து முயற்சிப்பானாம். ஆனா வசந்த்தை மட்டும் உமா பண்ணிக்கறதுக்கு ஒத்துக்க மாட்டானாம். இன்னொருத்தன் உமாவப் புரிஞ்சுண்டு அவ பொண்ணையும் தம்பொண்ணா நெனச்சுண்டு இருப்பானா? வசந்த் அளவுக்கு இன்னொருத்தனுக்கு அவ பேர்ல அன்பிருக்குமா? இருக்காது, இருக்கவேயிருக்காது.  தவிர, உமாவுக்கும் இன்னொருத்தனப் பண்ணிக்கறது கஷ்டம். வசந்த்னா, ஏற்கனவே நன்னாத் தெரிஞ்சவன். யார் சொல்றது நாணுக்கு?

அகிலாவானா ஒரேயடியா பூள்பூள்னு அழுகறா. இல்லையானா உமாவ நெனச்சுண்டு பகவானையே சபிக்கறா. வேற ஒண்ணுமே யோசிக்க ஓடல்ல அவளுக்கு. உமாவுக்கு இந்ததடவையாவது, வசந்த்தோட நல்லபடியா கல்யாணம் நடக்கணும். நல்லவாளுக்குத் தான் சோதனை அதிகமா வருது. அந்த கற்பகாம்பாளுக்கு இந்தத் தடவையாவது என்னோட ப்ரார்த்தனை காதுல விழணும்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors