தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 12]
- ஜெயந்தி சங்கர்

உமா அந்த அளவிற்கு பயந்துபோவாள் என்று நான் நினைக்கவேயில்லை. குழந்தையை எடுத்துக்கொண்டு அறைக்குள் போயிருந்தவள், கூப்பிடக் கூப்பிடத் திறக்கவேயில்லை கதவை. வாழ்க்கையில் சந்தித்த திடீர்திடீர் மாற்றங்களினால் உமா சமீபகாலங்களில் சட்டென்று பதட்டமடைந்தாள் என்று தோன்றியது. ஓரளவிற்கு அவளுக்குள் இருந்த தைரியமும் காணாமல் போய்விட்டிருந்தது.

கொஞ்ச நேரத்துக்கு முடிந்தவரை முயற்சித்த பிறகுதான் அவுன்ஸ் மாமா எனக்கு போன் செய்து கூப்பிட்டிருந்தார். "அவசரம், உடனே வா ஷீலா", என்றாரே தவிர விவரம் ஒன்றையும் சொல்லவில்லை. என்னவோ ஏதோ என்று குழப்பமும் பதட்டமும் என்னில் கிளம்பி, அடுத்து என்ன என்று கூட யோசிக்கமுடியாது ஆட்டி வைத்தன சில நொடிகளுக்கு.

கொஞ்சநேரத்திலேயே சுதாரித்துக்கொண்டு, பாஸிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு கீழேயிறங்கி வந்தேன். ஆட்டோ ஒன்றை அமர்த்திக்கொண்டு விரைந்தேன் வடபழனிக்கு. கேட்டைத் திறந்துகொண்டு போகும்போதே மாமா அறைக்கதவைத் தட்டியபடி நின்றுகொண்டிருந்தது தெரிந்தது. "வா ஷீலா, அழுதுண்டேயிருக்கா உள்ள. கொழந்தையும் அவளோட சேர்ந்து விடாம அழறது. என்ன நடந்ததுன்னும் தெரியல்ல", என்றார் பதட்டத்துடன். அவர் முகத்தில் ஒரே பயம்.

அடுத்த வீட்டுக்காரார் வந்தார். நடந்ததைச்சொல்ல ஆரம்பித்தார். அவுன்ஸ் மாமா உமாவின் பெற்றோருடன் பேசிவிட்டு வரவென்று போயிருந்தாராம். போகும் அவசரத்தில் கேட்டைச் சரியாகப் பூட்டவில்லை போலிருக்கிறது.

தெருக்கோடியில் எப்போதும் நின்றிருக்கும் ரௌடி ஒருவன் காலையிலேயே குடித்திருந்தானோ, இல்லை முதல் நாள் குடித்த மப்பு அடங்கியிருக்கவில்லையோ, தெரியவில்லை. கேட்டைத் திறந்துகொண்டு மெதுவாக உள்ளே போயிருக்கிறான். உள்ளே வந்தவன்,  உமாவைப்பார்த்து, "என்னம்மே? ஒம்பேர் என்னா?", என்று கேட்டானாம். உமா அதிர்ந்து, "ஏய் நீ யாரு? இங்க எப்டி வந்த?", என்று மிரட்சியுடன் கேட்டாள். "நானா, இந்தப்பேட்டதான்மா. இந்தவூட்டு ஐயர எனக்குத் தெரியுமே,.", என்றபடி உமாவின் கையைப் பிடித்திருக்கிறான். அதிர்ந்தவள், கையை உதறிக்கொண்டே குழந்தையைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் போய் தாழ்பாள் போட்டுக்கொண்டவள் தான். அந்த ரௌடி, "கதவத்தொறம்மே. ரொம்ப 'பிலிம்' காட்டாத. ஐயர் கெழத்த தான் உனக்கு ரொம்பப் பிடிக்குமோ?", என்று கன்னாப் பின்னாவென்று வெளியில் நின்று கத்திக்கொண்டே இருந்தானாம். கொஞ்சநேரத்திற்குப் பிறகு ஆடிகொண்டே போய்ச் சேர்ந்தானாம்.

எல்லாவற்றையும் ரௌடிக்கு பயந்துகொண்டே பக்கத்துவீட்டுக்காரர்கள் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்கள். " ஏங்க, நீங்க கொஞ்சம் உமாவுக்கு ஹெல்ப் பண்ணியிருக்கக்கூடாதாங்க?", என்று நான் கேட்டதற்கு, "நீ வேறம்மா,. சொந்த வீடு கட்டிகிட்டு இங்க வாழ்ந்துகிட்டு இருக்கோம். இருக்கற பிரச்சன பத்தாதா? அவனோட பிரச்சனை பண்ணிண்டா அதுக்கப்புறமா இங்க இருக்கவா முடியும்?", என்று சொல்லிவிட்டுப் போய்ச்சேர்ந்தார்.

"உமா, உமா, நா ஷீலா வந்துருக்கேன். ப்ளீஸ் கதவத்தெறயேன். இங்க அவுன்ஸ் மாமாவும் நானும் தான் இருக்கோம். பயப்படாத, வெளில வாம்மா", என்று கூப்பிட்டுவிட்டு இரண்டு முறை கதவைத் தட்டினேன். மெதுவாகக் கதவைத் திறந்துகொண்டு வெளியில் வந்தாள். அம்மாவும் மகளும் கட்டிக்கொண்டு நீண்ட அழுதிருக்கிறார்கள். இரண்டு பேருக்கும் முகமும் மூக்கும் சிவந்து கிடந்தன.

ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு என்பது தான் என்ன? பெற்றோரா? கணவனா? திருமணமா? அவள் இதிலொன்றைச் சார்ந்தே இருக்கவேண்டியதுதானா? இல்லாவிட்டால், புறம்போக்கு நிலமாய் நினைத்து ஆக்கிரமிக்கலாமென்று கண்டவனும் கையைப் பிடித்துத்தான் இழுப்பானா? பெண் என்றால் ரத்தமும் சதையுமாக சகமனுஷியாக நினைக்காமல், ஒரு போகப்பொருளாக நினைப்பதால் வந்த வினையோ இதெல்லாம். நினைக்க நினைக்க என் மனம் ஆறவேயில்லை.

உமாவைச் சமாதானம் செய்து சாப்பிடவைத்து ஆசுவாசப்படுத்தவே மதியத்திற்கு மேலானாது. நிவேதிதா உறங்கிவிட்டாள். ஆபீஸ¤க்கு போன் செய்து லீவு சொன்னேன். குமாரையும் போனில் கூப்பிட்டேன் மாலையில் ஒரு நடை வரச்சொல்ல.

மாலையில் குமார் வந்து, நடந்தவற்றைக் கேட்டு, அதிர்ந்து கண்ணால் காணாத அந்த ரௌடியை காச்மூச்சென்று கத்தித் திட்டி ஓய்ந்தான். "அவம்மட்டும் எங்கண்ணுல படட்டும்,. ஒரு வழி பண்ணிடறேன்", என்று புசுபுசுவென்று கோபத்தில் பொங்கிக்கொண்டிருந்த அவனைப் பார்க்க எனக்கு மிகவும் வேடிக்கையாக இருந்தது. அவன் போனபிறகும் நினைத்து நினைத்துச் சிரித்தேன்.

"ஷீலா, நீ பேசாம நாலு நாள் லீவு போடு. உமா கூடவே இரு. ஆக்சுவலா, இங்க இருக்கறதவிட, அவங்க வீட்டுக்குப் போயிடறது தான் பெஸ்ட். நா எதுக்கும் வசந்த்துக்குப் போன் செஞ்சி விவரம் சொல்றேன்", என்று சொல்லிவிட்டு குழந்தைக்கும் எங்களுக்கும் தேவையான, பிஸ்கட், பால், பழம் எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டுப் போனான்.

நான் வசந்த்தின் அப்பாவைப் போனில் கூப்பிட்டுப் பேசினேன். உமாவின் நிலைகுறித்து மிகவும் கவலைப்பட்டார் மாமா. அடுத்தநாளே மாமியையும் அழைத்துக்கொண்டு வந்தவர், "உமா, தைரியமா இரு. உங்க வீட்டுக்குப் போயி இரு. உன்ன மீறி எதுவும் அவங்க செஞ்சிடமுடியாது. சமாளிக்கணும் நீ தைரியமா. அப்பிடியில்லன்னா, நம்ம குமார் சொல்ற மாதிரி,.."என்று ஆறுதல் சொல்லும்போது, உமா,"என்ன?", என்பதுபோல மாமாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றாள்.

நான் சட்டென்று, "மாமா, இப்ப உமா ரொம்ப பயந்து கொழம்பியிருக்கா. அதெல்லாம் அப்பறமாப் பேசிக்கலாமே. உமா அவங்க வீட்டுக்கேப் போயி இருப்பா, இல்ல உமா?", என்று சமாளித்தேன். உமா சரியென்று தலையாட்டினாள். மாமி, உமாவின் கைகளைப்பிடித்து வார்த்தைகளில் சொல்ல முடியாத ஆறுதலைத் தன் தொடுகையில் சொல்லிக்கொண்டு நின்றார்.

அவுன்ஸ் மாமா அப்படியே திருவிழாவில் தொலைந்த பிள்ளைபோலத் திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்தார். "உமா, நீ இங்க இருக்கறபோது நான் உன்னத் தனியா விட்டுட்டுப் போயிருக்கக்கூடாது. ஆனா, பகல்தானேன்னு,..",

"மாமா, அது உங்க தப்பில்ல. நா போயிட்டு வரேன். உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணிட்டோமா? நிவிக்குட்டி, தாத்தாக்கு டாட்டாச் சொல்லு", என்று உமா சொன்னாள். குழந்தை கையாட்டிச் சிரித்தது. மாமி வீட்டிற்குப் போய்ச்சேர்ந்தார்கள். நானும் மாமாவும் தான் உமாவை அவர்கள் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தோம்.

அடுத்து வந்த மாதங்களில் வசந்த் அவ்வப்போது சென்னை வந்து அவர்கள் வீட்டிற்கே போய் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தார். உமா மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்பினாள். நிவேதிதா நம்பமுடியாத அளவிற்கு வசந்த்திடம் ஒட்டிக்கொண்டாள். வசந்த்தும் அவளை மேலும் அடிக்கடி பார்க்கவென்றே சென்னைக்கு மாற்றல் கிடைக்குமா என்று தீவிரமாக முயற்சிக்க ஆரம்பித்துவிட்டார்.

நிவேதிதாவின் மழலையைக் கேட்டு உமாவின் அம்மாவும் அப்பாவும் உலகையே மறந்தனர். ஆனால், வசந்த்தின் வருகையோ, அவன் அவர்கள் மேல் கொள்ளும் அக்கறையோ அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதைப்பற்றிப் பேசாமல் சகித்துக்கொண்டதைப்போலத் தோன்றியது. உமாவின் மேல் இப்போதெல்லாம் அவர்களுக்கு ஒரு வித பயம் உண்டாகிவிட்டிருந்தது. ஆகவே, சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்ததாக அவர்கள் இருவரும் அவுன்ஸ் மாமாவிடம் ஒரு முறை குறைப்பட்டுக்கொண்டனராம்.

யார் சொன்னார்களோ என்னவோ, கும்பகோணத்திலிருந்த உமாவின் மாமியார் மாமனாருக்கு மூக்கில் வியர்த்துவிட்டது. ஒரு நாள் கிளம்பி வந்துவிட்டார்கள். அந்த சமயம் அவுன்ஸ் மாமாவும் அங்கே தான் இருந்தார். அப்போது நல்லவேளை, நிவேதிதாவும் உமாவும் என்னோடுதான் ஷாப்பிங்க் வந்திருந்தனர்.

உமாவின் பிரசவம் ஆனபிறகு, ஒருமுறைகூட வந்து பார்க்காதவர்கள், ஒன்றரை வயதாகும் நிவேதிதாவைத் திரும்பிக் கூடப்பார்க்காமல் வந்ததும் நேராக சண்டையில் இறங்கினர். "உங்க பொண்ணு என்ன கண்டனோடல்லாம் சகவாசம் வச்சிக்கறா? கண்டிக்கமாட்டேளா நீங்க ரெண்டு பேரும்? நாலுபேர் நாலுவிதமாப் பேசறதக் கேக்க சகிக்கல்ல. அவமானம் தாங்கல்ல,..அதான் ரெண்டு வார்த்தை கேட்டுட்டுப் போலாம்னு,.."

"என்ன அவமானம்? இல்ல கேட்டேன், வயத்துல இருக்கறபோதே பொண்கொழந்தன்னு தெரிஞ்சதும் நாட்டுப்பொண்ண வேண்டாம்னு ஒதுக்கினேளே, அதவிடவா? அப்ப வராத நாலுபேர், உமா வந்த வேள வெங்கட்டுக்கு மறுபடி ட்யூமர் வந்துடுத்துன்னு நீங்க சொன்னப்ப வராத அந்த நாலுபேர் இப்ப வந்துட்டாளாக்கும். இதோ! இந்த ரெண்டு பேர் பொறந்த கொழந்தையக்கூடப் பார்க்க வரல்ல. யாரோ நாலுபேரப்பத்தி சொல்ல வந்துட்டா அங்கேர்ந்து கெளம்பி."

"உமாவப் பெத்தவா இதோ இருக்கா. அவாளப் பார்த்துக் கேட்டுண்டிருக்கோம். நடுவுல நீங்க யாரு?", என்று வேண்டுமென்றே அவமானப் படுத்தினார்கள் அவரை, கிடைத்த வாய்ப்பை விடாமல்.

" நான் தான் உமாவுக்கு மாமா. உமாவ வசந்த்துக்கு கல்யாணம் பண்ணிக்குடுக்கறதா இருக்கோம். இப்பவும் அந்த நாலு பேர் வருவாளா? இல்ல அந்த நாலுபேர்ல ஒருத்தர் உமாவப்பண்ணிண்டு கொழந்தைக்கி அப்பாவா இருந்து கடசிவரைக்கும் பார்த்துப்பாளா? சொல்லுங்கோ, ம்? உமா கஷ்டப்பட்டப்போல்லாம் எந்த நாலூபேர் வந்தா சொல்லுங்கோ பாக்கறேன். நாலுபேராம் நாலு பேர்? எனக்கு வரகோபத்துக்கு,.", ஆவேசம் வந்தாற்போல கத்தினார் அவுன்ஸ் மாமா.

கப்சிப்பென்று அடங்கிவிட்டனர் உமாவின் மாமனாரும் மாமியாரும். உடனேயே கிளம்பியும் போய் விட்டனர்.

நடந்ததையெல்லாம் உமாவிடம் அவுன்ஸ் மாமா சொல்லிக்கொண்டிருக்கும்போது நானும் உடன் அவர்கள் வீட்டிற்குப் போயிருந்தேன்.
"இதுக்கெல்லாம் ஒரே வழி நீ வசந்த்தைக் கல்யாணம் பண்ணிண்டுடு உமா", என்று மாமா முடித்தார். உமா விரக்தியான ஒரு சிரிப்பு சிரித்தாள். ஒன்றுமே பேசவில்லை. நீண்ட அமைதி. முன்பெல்லாம் அந்தப்பேச்சை அவுன்ஸ் மாமா பேசும்போதெல்லாம் அவளிடம் கிளம்பிய எரிச்சல் எங்கே?

திடீரென்று, "ஆமா, ஷீலாஒரு வருஷம் கேட்டு ரெண்டு வருஷமாகப்போறது. குமாருக்கு நீ எப்ப பதில் சொல்லப்போற? ", என்று உமா கேட்பாளென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை நான். உமா என் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். "ம்,. சொல்லணும்", என்று பொதுவாக மட்டும் சொல்லிவிட்டு மெதுவாக இடத்தைவிட்டு நழுவி விட்டேன்.

'நீ வசந்த்தைக் கல்யாணம் பண்ணிக்கொள்", என்று அடிக்கடி என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தவள் அப்படிக் கேட்டது எனக்கு ஒரு விதத்தில் மிகுந்த ஆறுதல் கொடுத்தது. வசந்த்தின் மனம் இன்னமும் தன்னிடம் தான் உள்ளது என்ற உண்மையை உமா உணர்ந்து கொண்டுவிட்டாள் என்பதற்கு அதைவிட வேறு ஒரு சான்றும் வேண்டுமா?! மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அந்த மனமாற்றம் ஒன்றே போதும் உமா மறுமணத்திற்குச் சம்மதிக்க என்று தோன்றியது. அந்த நாள் நெருங்கி விட்டது என்பது புரிந்தது.

வீட்டிற்குப் போனதுமே குமாருக்கு போன் செய்து உமா கேட்டதையும், நான் யோசித்ததையும் அப்படியே சொல்லி மகிழ்ந்தேன். அவனுக்கும் உமாவின் மனமாற்றம் நல்ல முன்னேற்றம் என்றே பட்டது. "அப்ப, உமா கேட்ட கேள்விக்கு பதில்?, என்று என்னையே கேட்டான்.

"உமா கேட்ட கேள்விக்கா? இல்ல முன்னாடி நீங்க கேட்ட கேள்விக்கா?"

"என்னோட கேள்விக்கே நேரடியா பதில் சொல்லிடும்மா. புண்ணியமாப்போகும். நீ சிக்கிரமாச் சொன்னாதானே நான் வேற யாரையாவது ட்ரை பண்ண டைம் இருக்கும் எனக்கு. வயசு ஏறுதும்மா."

"ஓகே."

"என்ன ஓகே? கேள்விக்கு பதில் என்ன?"

"கேள்விக்கு பதில்தான்."

எளிமையாக சாந்தோம் சர்ச்சில் நடந்தது எங்கள் திருமணம். வசந்த்தோடு என் திருமணம் என்று நினைத்திருந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஆரம்பத்திலிருந்த வருத்தம் நாளடைவில் மறைந்தது. நானே எதிர்பார்க்காத அளவிற்கு இருவருக்கும் குமாரை மிகவும் பிடித்துப்போனது.

நிவேதிதாவின் இரண்டாவது பிறந்த நாளன்று உமாவிடம் வசந்த் மெதுவாகத் திருமணப்பேச்சை எடுத்தபோது, உமாவால் எந்தவிதக் குழப்பமோ வருத்தமோ இல்லாமல் தெளிவாகச் சரியென்று சொல்ல முடிந்தது.

உமாவின் பெற்றோருக்குப் பிடிக்கத்தான் இல்லை. ஆனாலும், முன்புபோல 'தற்கொலை செய்துகொள்வோம்', என்று மிரட்டும் அளவிற்கும் எதிர்ப்பில்லை. எதிர்க்க முன்பிருந்த அவர்களிடமிருந்த மனோபலமும் இருக்கவில்லை. அப்படியே அவர்கள் எதிர்த்திருந்தாலும் துணிந்து அவர்களை எதிர்க்கவும், சமாளித்துத் தன் மனம்போலச் செயல்படவும் அவர்களிடமிருந்து காணாமல் போயிருந்த அந்த மனோபலம் உமாவிடம்  வந்துவிட்டிருந்தது.

வசந்த் உமாவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து சர்ச்சிலும் இல்லாமல் கோவிலிலும் இல்லாமல் எளிய பதிவுத் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார். கொஞ்சம் விமரிசையாகத் தன் மகனின் திருமணத்தை நடத்த ஆசைப்பட்ட மாமாவுக்கு அதில் கொஞ்சம் மனக்குறை தான். வசந்த்தின் அண்ணா ஆல்பர்ட் தன் குடும்பத்தோடு வந்திருந்தார் ஊட்டியிலிருந்து. ஆல்பர்ட் தான் மாமாவின் புலம்பலை அடக்கினார் ஒரே போடு போட்டு.

உமாவின் ஆசைகளை நிறைவேற்றுவது மட்டுமே தன் கடமை என்று வாயால் சொல்லாமல் செயலால் சொல்லிக் கொண்டிருந்தார் வசந்த். ஒரு வருடமாக சைவச்சாப்பாடு மட்டுமே சாப்பிட்டுப் பழகிவிட்டார். அதற்குப்பிறகு, தன் உடலாரோக்கியம் மிகவும் நன்றாக இருப்பதாக பார்ப்பவரிடமெல்லாம் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருந்தார். கல்யாணத்தன்று மாமாவுக்கும் மாமிக்கும் பிள்ளையைப் பார்த்து பெருமை பிடிபடவில்லை.

"நிவேதிதா, குட்டியோட அப்பா பேர் என்ன?", என்று யார் கேட்டாலும் 'வசந்த்' என்று சொல்லப் பழகிவிட்டாள்.  உமா தன் அப்பாவையும் அம்மாவையும் பார்த்து," வசந்த்தோட எனக்குக் கல்யாணம் ஆயாச்சு. நீங்களும் பெரியப்பாவும் இன்னும் உயிரோடதானே இருக்கேள்?", என்று அறைக்குள் ரகசியமாக் கேட்டது அவ்வழியே போகநேர்ந்த எனக்கு மட்டும் கேட்டது. அவர்களை நினைத்து எனக்கு வருத்தமாக இருந்தது. மூன்று வருடங்களில் இருவரிலும் முப்பது வருடத்தின் மூப்பு வந்து கவிந்திருந்தது. வெந்த புண்ணில் ஏன் உமா வேலைப் பாய்ச்சுகிறாள்? உமா அப்படிப்பேசக்கூடியவளே அல்ல. அவள் அனுபவித்தவற்றின் மனரணம் அவளைப்பேசவைத்திருந்தது.

நான் உமாவைத்தனியாகக் கூப்பிட்டு, " உமா வேண்டம்மா ப்ளீஸ், நீ இப்படியெல்லாம் பேசினா நல்லாவேயில்ல. நீ நீயாவே இரு உமா. ஆயிரமிருந்தாலும் அவங்க உன்னப்பெத்தவங்க இல்லையா. நடந்ததெல்லாம் நடக்கணும்னு யார் தான் ஆசைப்பட்டிருப்போம். அதுவும் அவங்க நிச்சயமா மனசாலக் கூட உனக்குத் தீங்கு நெனைக்கமுடியுமா சொல்லு. இனிமே எப்பவுமே நீ அவங்க கிட்ட அப்டி பேசக்கூடாது", என்று அவள் காதுக்கு மட்டும் கேட்குமாறு சொன்னேன். இயல்பிலேயே நல்லவளான உமா சட்டென்று உணர்ந்து கொண்டு, என் கையை அழுத்தித் தன் இசைவைச் சொன்னாள் அழகான புன்னகையோடு. உமாவின் கண்களில் பளபளவென்று உணர்ச்சிக்கலவை. அம்மா அப்பா காலிலும், மாமா, அத்தை காலிலும் விழுந்தார்கள் இருவரும். அவுன்ஸ் மாமாவிடம் ஆசிர்வாதம் வாங்கும்போது அவர் மிகவும் நெகிழ்ச்சியில் தொண்டையடைக்க வாழ்த்தினார்.

வசந்த்துக்கு சென்னையிலேயே மிகநல்ல வேலை கிடைத்து விட்டது. தனிக்குடித்தனமும் வைத்தாயிற்று. வேலையை விட்டுவிட்டு குழந்தையையும் வீட்டையும் பார்த்துக்கொள்ளும்படி வசந்த் சொல்லியும் கேட்காத உமா தொடர்ந்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். நிவேதிதாவும் பாலர்பள்ளிக்குப் போவ ஆரம்பித்தாள்.

நான்கு வருடங்களுக்கு முன்பு வசந்த்தும் உமாவும் வாழ்வில் இணையவேண்டும் என்று நான் விரும்பியபடியே நடந்து விட்டது. "எனக்கு என்ன புரியல்லன்னா, ரெண்டுபேருக்கும் தானே போட்டிருக்கு முடிச்சு. அதுக்கு நடுவுல ஏன் இவ்வளவு பிரச்சனைகள்?", என்று அடிக்கடி குமார் புலம்பித்தள்ளினார்.

இருவருக்கும் பல்வேறு அனுபவங்கள் கிட்டியிருந்தன என்பதுதானே உண்மை. பட்ட கஷ்டங்கள் உமாவையும் பண்படுத்தியிருந்தது. இடைப்பட்ட அவ்வனுபவங்களால் வசந்த்துக்கும் உமாவுக்கும் கிடைத்திருக்கும் வாழ்க்கையின் அருமை இன்னும் மிக நன்றாகப் புரியும். நேரடியாகத் திருமணம் நடந்திருந்தால் அந்தத் திருமணத்தை அவர்கள் கொண்டாடுவதை விட, இன்னும் அதிகம் கொண்டாடிப்போற்றுவர். அதுமட்டுமா அவ்வனுபவங்கள் மூலம் திரட்டிய வாழ்க்கைப் பாடங்கள் அவர்களுக்கு மகளை வளர்க்க உதவும். அவ்வகையில் நிவேதிதாவிற்கு மிக அற்புதமான அப்பாவும் அப்பாவும் அமைந்திருந்தார்கள்.

உமாவின் மனநிலையும் மாறத் துவங்கிவிட்டிருந்தது. ஜாதிமத வேற்றுமைகளைக் காட்டியதோடு, தாம் பெற்ற மகளைத் தம் விருப்பத்திற்கு வளைத்துவிடத் துடித்ததால், தனக்கும் தன் மகளுக்கும் விளைந்த பல்வேறு சோகங்களிலிருந்து கிட்டத்தட்ட உமாவின் பெற்றோர் மீண்டுவிட்டனர். அவர்களிருவரும் காலங்கடந்தாவது அவ்வுண்மையைப் புரிந்துகொண்டார்களே என்று எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. இனிமேல் உருவாகக்கூடிய தலைமுறைக்கு அவ்வுண்மையைக் கொண்டு செல்ல அவர்களுக்கு நிச்சயம் அவர்களது அந்தப் 'புரிதல்' மிகவும் உதவும். 

வாழ்க்கை அடித்துச் சென்ற போக்கில் போய், அவர்கள் வாழ்ந்து பார்த்து விட்டார்கள். ஆகவே, உமாவும் அவளுடைய பெற்றோரும் இறந்த காலத்தை மறந்து, எதிர்காலத்திலேயே லயித்தும் விடாமல், நிகழ்காலத்தில் அனுபவித்து வாழக்கற்றுக் கொண்டு விட்டனர்.

(முற்றும்)

Copyright © 2005 Tamiloviam.com - Authors