தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர் : ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை [பாகம் : 3]
- ஆருரான்

இலங்கையின் வரலாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் திரிக்கப்பட்டாலும், சிங்களவர்களின் சரித்திரமான மகாவம்சத்திலேயே தமிழர்கள் இலங்கையின் பூர்வீகக்குடிகள் என்பதற்கான ஆதாரமும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இலங்கைத் தீவில் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் உண்டு. அதனால் சிங்களவர்களுக்கு எந்தளவு உரிமை இலங்கையிலுண்டோ, அந்தளவு உரிமை ஈழத்தமிழர்களுக்குமுண்டு என்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால், சிங்கள அரசின் இனவாதச் சட்டங்களையும், சிங்களச் சார்பு ஆதிக்கத்தையும் ஏற்றுக் கொண்டு, தமது சொந்த மண்ணில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ ஈழத்தமிழர்களின் தன்மானம் இடம் கொடுக்காது. யாழ்ப்பாண இராச்சியத்தின் இறைமையைப் போத்துக்கேயரிடம் போராடி இழந்த தமிழர்கள், ஆங்கிலேயர்கள் காலத்தில் சிங்களவர்களுடன் வலுக்கட்டாயமாக
இணைக்கப்பட்டனர். அதன்பின், 1948 பிரித்தானிய அரசால் வழங்கப்பட்ட இலங்கைக்கான அரசியல் அமைப்புக்கமையத் தேர்வுசெய்யப்பட்ட சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த அரசியலமைப்பைப் புறக்கணிக்கச் சிங்கள மக்கள் தங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர் எனக்கூறிப் புதிய அமைப்பை உருவாக்கி, தமது இறைமையைச் சிங்களவர்கள் தாமே எடுத்துக்கொண்டனர். அப்படிப் பார்க்கும்போது, தமிழ் மக்களால் அங்கீகாரிக்கப்பட்ட தமிழ்த் தலைவர்களினூடாகத் தமிழர்கள் தம் இறைமையை எடுத்துக்கொள்வது தவறில்லையே!

ஐரோப்பியர்கள் 1505 ஆம் ஆண்டு ஈழத்தீவிற்கு வந்தனர். அவர்களின் வருகையின்பின், ஈழத்தீவில் தமது இறைமையை முதலில் இழந்த சிங்களவர்கள், ஈழத்தீவில் தாம் கோட்டை அரசை இழந்தபின்னர் தமிழர்களின் யாழ்ப்பாண அரசையும் அதன்பின்னர் கண்டியரசையும் ஐரோப்பியர்கள் கைப்பற்ற உதவிசெய்த சிங்களவர்கள், இன்று ஈழத்தீவு முழுவதற்கும் உரிமை கொண்டாடி, தமிழர்களை அடிமையாக்கி ஆள நினைப்பது வேடிக்கைமேல் வேடிக்கை!

ஐரோப்பியர் ஈழத்திற்கு வந்தபோது தமிழர்கள் காலியிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்புத்துறை, கற்பிட்டி, நீர்கொழும்பு வரை வாழ்ந்து வந்தனர். இவை யாவும் தமிழர்களின் யாழ்ப்பாண அரசின்கீழ் அமைந்திருந்தது. இன்று காலியில் சிங்களவர்கள்தான் இருக்கின்றார்கள். அம்பாறையில் தமிழர்கள் தொகை மூன்றில் ஒன்றாக
மாறிவிட்டது. நீர்கொழும்பு இருக்கும் புத்தள மாவட்டத்தை சிங்களமயமாக்கி விட்டனர். மன்னார், வவுனியா, திரிகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழ் நிலங்களைச் சிங்களவர்கள் அபகரித்து அங்கிருந்த தமிழரைச் சிறுபான்மையினராக்கிவிட்டனர்.

கண்டியரசனால் 1660 இல் சிறைவைக்கப்பட்டு பின்னர் தப்பிச்சென்ற ரோபர்ட் நொக்ஸ் என்பர் 1679 இல் தப்பியோடியபின்னர் தன் அனுபவத்தை ஒரு நூலாக வெளியிட்டிருந்தார். அதில் தான் அநுராதபுரத்தைச் சென்றடைந்ததாகவும், அங்கே சிங்கள மொழி தெரியாதவர்கள் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அநுராதபுரத்தை ஆண்ட மன்னனுக்கு சிங்களம் தெரியவில்லை என்பதால் தான் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளரின் மூலமாக மன்னனிடம் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று அநுராதபுரத்தில் தமிழ்பேசுபவர்களைக் காண்பதே அரிது!

ஐரோப்பியர்கள் யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றியபோது, யாழ்ப்பாண அரசின் கரையோரப் பிரதேசங்களையே அவர்களால் கைப்பற்ற முடிந்தது. ஈழத்தீவின் நடுப்பகுதியில் இருந்த வன்னிமைகள் (சிற்றரசுகள்) ஐரோப்பியரின் பிடியில் சில நூற்றாண்டுகளாக வீழாமல் ஆட்சிபுரிந்தன. போர்த்துக்கேயர்கள் சிங்களவரின் கோட்டை அரசை 1519 ஆம் ஆண்டு கைப்பற்றியதிலிருந்து, வன்னியின் இறுதி மன்னன் பண்டார வன்னியனை 1811 ஆம் ஆண்டு தோற்கடிக்கும்வரை தமிழ்மண் முற்று முழுதுமாக தமிழர்களின் கைகளில் தான் இருந்தது.

போர்த்துக்கேயர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின்னர், அவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிக்கும் போர்த்துக்கேயர்களால் வன்னிமைகள் (வன்னி நிலத்தின் சிற்றரசர்கள்) மேல் தொடுக்கப்பட்ட போரினால், கண்டி அரசிற்கும் ஈழத்தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். அவ்வாறு தமிழர்கள் இடம்பெயர்ந்தபோது, அவர்கள் வாழ்ந்து வந்த செழிப்பான நிலங்கள் அழிவுற்று,
குளங்கள் மண்தூர்ந்து பற்றை, காடுகளாகின. அதனால்தான், வன்னியில் உள்ள மரங்களின் வயது 400 - 500 ஆண்டுக்குமேல் இருக்காது. மேலும், ஆங்கிலேயர்கள் நெற்பயிர் செய்கைக்கு முக்கியத்துவமளிக்காமல் இறப்பர், தேயிலை பயிர்செய்வதில் நாட்டம் காட்டியதால் தமிழரின் விவசாய நிலங்கள் கருகிப்போயின என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஈழத்தீவின் நான்கில் மூன்று பகுதி அரச காணியாக இருந்தது. அவற்றுள் பெரும்பாலானவை தமிழரது வன்னிச் சிற்றரசு அல்லது வன்னிமைகளின் முடி சார்ந்த காணிகளாக இருந்தன. 1815 ஆம் ஆண்டு கண்டியரசைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள், அங்கிருந்த சிங்களவர்களின் காணிகள் பலவற்றைக் கையகப்படுத்தி, அங்கு தேயிலை,  இறப்பர் பயிரிடுவதற்காகத் தென்னிந்தியத் தமிழர்களைக் குடியமர்த்தினர். அவற்றால் தமது நிலங்களை இழந்த சிங்களவர்கள் அநுராதபுரம், பொலநறுவை, மட்டக்களப்பு, காலி போன்ற தமிழ்ப் பகுதிகளில் குடியேறினார்கள்.
(தொடரும்...)

Copyright © 2005 Tamiloviam.com - Authors