தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 3]
- ஜெயந்தி சங்கர்

தன்னோட வேல பாக்கற ஷீலாவாத்துக்குப் போயிட்டு வரேன்னு அன்னிக்கிக் கிளம்பினாளே என்னோட சீமந்தபுத்திரி உமா, திரும்பிவரச்சே 'அவுன்ஸ்' மாமாவோட வந்தா. வழிலதான் மீட் பண்ணினாளா இல்ல, என்னன்னு அப்போப் புரியவேயில்ல. வேற ஏதாவது பிரச்சன? என்னவோ ஏதோன்னு கொஞ்சம் கொழம்பித்தான் போயிட்டேன். ஒண்ணுமே தெரியல்ல.

ஷீலாவோட வீடு கூடுவாசேரிலன்னா இருக்கு, இவதான் வடபழனிக்கிப் போனாளா இல்லை, அவுன்ஸ் தான் கூடுவாஞ்சேரிக்கி வந்துதானு ஏதேதோ யோசிச்சேன். மொதல்ல எனக்கு ஒண்ணுமே புரியல்ல.

"என்ன அகிலா, நாணு ஆத்துல இருக்கானோல்யோ?"னு கேட்டுண்டே உள்ள வந்தார் அவுன்ஸ். "ம், இருக்கார், தூங்கறார். எழுந்துக்கற நேரம் தான். வாங்கோ, சௌக்கியமா?",னு கேட்டுண்டே உமாவைத்தான் பார்த்தேன். "என்னடீ, இவர எங்கடி மீட் பண்ணின?", னு ரகசியமா நாங்கேட்டத கொஞ்சங்கூட சட்டையே பண்ணிக்காம, விடுவிடுன்னு பாத்ரூமுக்குள்ள போயிட்டா.

அவுன்ஸ் ரொம்ப ஸ்வாதீனமா உள்ள வந்து ·பேனைப் போட்டுண்டு தோள்ள கிடந்த ஜோல்னாப் பைய முன்னால மடியில தூக்கி வச்சிண்டு, சேர்ல ஒக்காந்துண்டார். மூக்குக்கண்ணாடிய கீழ்மூக்குல சரிய விட்டுண்டு நேர அங்கயிருந்து அடுப்படிய நோக்கி நகரப்போனஎன்னப்பார்த்து, "காபி வேண்டாம். ஜில்லினு ஒரு டம்ளார் மோர் போறும்", னு சொன்னார்.

அவுன்ஸோட பஞ்சடைஞ்ச கண்ணப்பார்த்தா பத்து வருஷம் முன்ன செத்துப்போன எங்கமாமா ஞாபகம் தான் வரும் எனக்கு எப்பவும். எங்க மாமா இவரப்போல ஒல்லி கெடையாது. ஆனா, வழிச்சு பின்னோக்கி வாரின முடியெல்லாம் இதே மாதிரிதான் அவருக்கும்.

"ஏதுடா, இவன் காபி வேண்டாங்கறானேன்னு பாக்கறியா",னு வேற கேட்டுண்டார். "என்ன வெயில் அடிக்கறது, நானே காபி வேண்டாம்னு சொல்றேன்னா, வெயில் கடுமைன்னு தானே அர்த்தம்",னு தானே பதிலும் சொல்லிண்டார். அவரோட வ்யாக்யானங்களக் கேட்க கூடத்துல யாருமில்லயேன்னு அவருக்கு ஒண்ணும் லட்சியமாயில்ல.

உமா மூஞ்சி, கை கால் அலம்பிண்டு வந்திருந்தா. அவுன்ஸப் பார்த்தா ஏதோ சேதியோட வந்திருக்காப்ல இருந்தது. உமாவும் கூடவே வந்தது தற்செயலா இல்ல முன்னேற்பாடா, ஒண்ணும் யூகிக்க முடியல்ல. உமா அவரோட வளவளன்னு பேசுவோ எப்பவும். ஏன் பேசாம இருக்கா? வழியெல்லாம் வேணது பேசியாச்சோன்னு நெனச்சுண்டேன்.

"யாரு, மணியா?"னு கேட்டுண்டே நெகிழ்ந்து அவிழ்ந்த வேஷ்டியக் கட்டிண்டே இவர் வந்தார். "உங்களுக்கு காபி கலக்கவா?"னு கேட்டதக் காதுலயே வாங்கிக்கல்ல. "மணி ஏது இவ்வளவு தூரம்?"னு கேட்டுண்டே பக்கத்துல இருந்த நாற்காலில போய் ஒக்காந்துண்டார். "ம், இருக்கே விஷயம். நாணு நீ வேணா காபி கீபீ சாப்டு வாயேன். நா சாவகாசமாப் பேசிட்டுதான் கெளம்புவேன்",னு சொன்ன அவுன்ஸை ஒரு மாதிரியா உத்துப் பார்த்தார் இவர். சரின்னு சொல்லிட்டு எழுந்து பாத்ரூமுக்குள்ள போனார் இவர். அவுன்ஸ் எழுந்து ஜன்னல் கிட்டபோய் எட்டிப்பார்த்துண்டிருந்தார்.

"அப்பாடா, ஆறு மணியாட்டமா இருக்கு, என்ன வெயில்", னு சொல்லிண்டே மறுபடியும் வந்து உக்காந்துண்டார். மொகத்தத் தொடச்சிண்டே திரும்பி வந்த இவர், "ம், அப்பறம்? என்ன செய்தி?", னு எடுத்துக்கொடுத்தார் .

"உமா, வா. இங்கன்னா இருக்கணும் நீ. உள்ள இருந்தா எப்டி, ம்?", னு கூப்டதுமே உமா ரூம் வாசல்ல, ஹாலப்பார்த்தமாதிரி ஒக்காந்துண்டா. ஏதோ இருக்குன்னு நான் யோசிச்சது உறுதியாப்போச்சு. நானும் இவருக்குக் காபியையும் அவுன்ஸ¤க்கு மோரையும் கொடுத்துட்டு சமையக்கட்டு வாசல்ல ஹாலப்பார்த்து உக்காந்துண்டேன்.

"நாணு, நா சொல்றத பொறுமையாக்கேக்கணும் நீ. நெறைய புத்திமதி உமாக்கு நான் சொல்லிட்டேன். இப்ப நீ கோபப்படாம நிதானமாக்கேளு. உமா சார்புலதான் ஒரு சேதி சொல்லப்போறேன்",  னு பீடிகைபோட்டுண்டே இருக்கறப்ப, இவர் திரும்பி பொண்ண ஒரு பார்வை பார்த்துண்டார். உமா டக்குன்னு தலையக் குனிஞ்சுண்டுட்டா. உமா பத்தின விஷயமா?எனக்கு அப்பத்தான் வயத்துல புளியக் கரைக்க ஆரம்பிச்சது. 

"உமாவுக்கு உன்கிட்ட சொல்ல பயம். அதுக்குத்தான் நான்,,",

"விஷயத்தச்சொல்லு மணி",னு இவர் அவசரப்படுத்தினார். அவருக்கும் என்னப்போலவே படபடப்பு வந்துடுத்தோன்னு நான்நெனச்சுண்டேன்.

"வசந்த்னு ஒரு பையன். இவா ஒருத்தர ஒருத்த விரும்பறா. நாமளாத் தேடிப்பார்த்தாக்கூட இத்தன நல்ல பிள்ளையப் பார்த்துப்பண்ணி வைப்போமான்றது சந்தேகம். இப்பதான் பார்த்தேன் அவன. வருஷக்கணக்கப் பழகினாதானா, அரை மணிபோறாதோ ஒரு பயல எடைபோட,.."

மேற்கொண்டு பேசவிடாம, இவர், "நிறுத்து. இது எத்தன நாளா? இதுக்கெல்லாம் நீயும் கூட்டாடா மணி? உனக்கு நான் என்னடா கெடுதல் பண்ணினேன்?"னு சத்தமாக் கேட்டார்.
"நாணு, இதோ பார், எனக்கு இப்ப ஒரு மணிநேரம் முன்னாடிதான் விஷயமே தெரியும். உங்கிட்ட சொல்ல பயந்தா உமா. அவளுக்கு ஹெல்ப் பண்ணலாம்னுதான். மத்தபடி இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல",னு அவுன்ஸ் சொல்றதுக்குள்ள,"பாவி",னு கத்திண்டே இவர் எழுந்துண்டார்.

அப்போதான் உமா எழுந்து வந்து," அப்பா,ப்ளீஸ் அவுன்ஸ் மாமாவ ஒண்ணும் சொல்லாதீங்கோ. பாவம், நான் பயந்ததாலதான் வந்தார். இப்ப அனாவசியமா அவமானப்படறார்",னு ரொம்ப தைரியமாச் சொன்னா. என்னால நம்பவே முடியல்ல. இவ்வளவு துணிச்சலாப்பேசி உமாவ நான் பார்த்ததேயில்ல. அதிர்ச்சியா இருந்தது.

நாம்பெத்த பொண்ணுதானா பேசறதுன்னு எனக்கு ரொம்ப நேரத்துக்கு சந்தேகமாப்போயிடுத்து. உமாவா? உமாவான்னு அலறித்து எம்மனசு. இவளா இந்தமாதிரி காரியமெல்லாம் செஞ்சிருப்பான்னு ஒரேயடியா உள்ளுக்குள்ளயே மாஞ்சுபோனேன். என்னோட கண்ணையும் காதையுமே என்னால நம்ப முடியல்ல.

இவர் உமாவ மொறச்சுண்டே அப்படியே மறுபடியும் ஒக்காந்துண்டார். கொஞ்சநேரத்துக்கு யாரும் ஒண்ணுமே பேசல்ல. அவுன்ஸ் தான் மெதுவா தொண்டையச்செருமிண்டு," நாணு உன்னோட கோபம் வருத்தம் எல்லாம் புரியறது. ஆனா, உமா தப்பா ஒரு முடிவெடுப்பான்னு நான் நெனக்கல்ல. பெத்தவன் நீ,. நீயும் அவ மேல நம்பிக்கை வை. வசந்த் ரொம்ப நல்ல வேலைல இருக்கான். மரியாத தெரிஞ்சவனாவும் இருக்கான். கிருஸ்தவனா இருந்தாலும்,.",னு சொல்லுண்டே போறபோது, "ஓ, அதுவேறையா,.ம் அப்பறம் இன்னும் வேற என்னென்ன இருக்கு?"னு இவர் தூக்கத்துல பேசறமாதிரி கண்கலங்கக் கேட்க ஆரம்பிச்சு, ரொம்பக் கோபமா முடிச்சார்.

"மணி, உமா எனக்கு இருக்கற ஒரே கொழந்த,.."னு மேற்கொண்டு ஏதும் சொல்றதுக்கு முன்னாடி, நான் கொஞ்சமும் எதிர்பார்க்கல்ல, கொழந்த மாதிரி அழுதுட்டார். "கண்ணுக்குள்ள வச்சு வளத்துண்டு வரேன். அவளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு நானும் அகிலாவும் பார்த்துப் பார்த்து செஞ்சிண்டு வரோம். நாளைக்கி பொண் பார்க்க வரா. மாப்ள அமெரிக்கால இருக்கான். நெறைய சம்பாத்யம், போட்டோல பார்க்க ராஜாவா இருக்கான். அவா குடும்பம் எப்பிடியாப்பட்ட குடும்பம் தெரியுமா? நானும் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நல்ல எடம்னு முடிக்கப்பார்க்கறேன். எப்படியும் முடிச்சுடலாம்னு தான் நம்பறேன். இப்பிடி குண்டத் தூக்கிப்போடாறாளேடா,.", னு சொல்லிண்டே போனார் கண்ணத்தொடச்சிண்டே.

உமாவப் பளார் பளார்னு நாலு அறைவிடலாமான்னு வந்துது எனக்கு. திரும்பி அவ மூஞ்சியப்பார்த்தேன். உமா மூஞ்சியே நன்னாயில்ல. உள்ளுக்குள்ள ரகசியமா அழறாப்போல இருந்தா. அவ குனிஞ்சிண்டு இருந்ததால என்னால அவ மூஞ்சியச் சரியாப்பாக்க முடியல்ல.

"நாணு அதான், அதான் பிரச்சனையே. உமாவுக்கும் சில ஆசைகள் இருக்கும்னு நீ நினைக்கறதேயில்ல. அவ போக்குக்கு அப்படியே விட்டுடுன்னா சொல்றேன். கொஞ்சம் அவபக்க நியாயத்தையும் கேளுன்னு மட்டும் தான்,.."

திடீர்னு இவர் மடேர் மடேர்னு தலையில அடிச்சுண்டார். அவுன்ஸ் டமால்னு எழுந்துண்டு இவரோட கைப்பிடிச்சுண்டே,"நாணு, இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி இமோஷனலாகற",னு கேட்டு, சமாதானப்படுத்தி, என் பக்கம் பார்த்து,"அகிலா கொஞ்சம் குடிக்க இவனுக்கு ஜலம் குடேன்", னு சொன்னதுமே ஓடி போயி டம்ப்ளர்ல தண்ணி கொண்டுவந்து கொடுத்தேன். மடக்மடக்னு குடிச்சார் இவர். அதுக்கப்புறம், தரையையே வெறிச்சுப்பார்க்க ஆரம்பிச்சுட்டார். தீவிரமா யோசிக்கும் போது அப்படித்தான் பண்ணுவார்.

மௌனமா என்பக்கம் கையசைச்சுண்டே அவுன்ஸ் கிளம்பினார். டக்கென்று இவரும் எழுந்துண்டார். செருப்பைப் போட்டுண்டே," அகிலா, நான் அண்ணாக்கு போன் பண்ணிட்டு இதோ வந்துடறேன்",னு சொல்லிண்டே அவுன்ஸோட போனார்.

கதவைச்சாத்திட்டு உள்ளே வந்தபோது உமா ரூமுக்குள்ள போயிட்டா. கிட்டப்போய்,"உமா, என்னடி இதெல்லாம்? கருவேப்பிலக் கொத்தா ஒண்ணே ஒண்ணுன்னு ஒன்ன எப்படியெல்லாம் வளர்த்தோம்,"னு கேக்கறதுக்குள்ள எனக்கு அழுகையும் கோபமும் பொத்துண்டு வந்துது. "அம்மா, இப்ப என்னம்மா ஆச்சு? ஒண்ணுமில்லாதத நீங்க ரெண்டுபேரும் ரொம்பப் பெரிசு பண்றேள்மா",னு சொன்னா.

அடுத்த நாள் கார்த்தால, தரகர் வந்து, பிள்ளையாத்துக்காரா பொண்பார்க்க வரல்ல, அவாளுக்கு வேற எடம் முடிவாயிடுத்துன்னு சொல்லிட்டுப்போனார். மத்தியானம் மச்சினர் வந்தார். அவர் தூங்கி எழும்போது அவுன்ஸ¤ம் வந்து சேர்ந்தார்.

எல்லாரும் ஹால்லதான் இருந்தோம். உமாவக் கூப்டார் மச்சினர். "இங்க பாரு உமா. மணி விவரமெல்லாம் சொன்னான். நம்ம குடும்பத்துல இதெல்லாம் நடந்ததில்ல. நா உயிரோட இருக்கற வரைக்கும் இதெல்லாம் நடக்கவிடவும் மாட்டேன். நீ இனிமே வேலைக்கிப் போகவேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம்", னு சொன்னார்.

எல்லாருக்கும் காபி எடுத்துண்டி வர அடுப்படிக்குப் போனேன். பின்னாலயே வந்த அவுன்ஸ்,"அகிலா எதுக்கு இப்ப துர்வாசரக் கூப்டான் நாணு? நானும் வேண்டாம்னு நேத்திக்கி எவ்வளவோ எடுத்துச்சொன்னேன். இதையெல்லாம் நீயாவது கொஞ்சம் சொல்லப்டாதா? இவ்வளவு காட்டமா நியாயம் பேசறானா,.. இவம்பொண்ணு கௌசல்யா என்ன பண்ணினா? ஒன் நாத்தனார் ராஜி பையன், அவம்பேரென்ன, ம், கண்ணன்? ஆங்க் கண்ணன், அவனோட ஊரெல்லாம் சுத்தினா. ஆத்துல எல்லார் காதுல விழவும், ஒரே குலமாவும் ஜாதியாவும் போச்சு, இவாளா முடிவு பண்ணினாப்ல கல்யாணத்த முடிச்சு வச்சா. இப்போ பெரிசா மார்தட்டிண்டு பேசறான்", னு குசுகுசுன்னு மச்சினரப்பத்தி எங்கிட்ட சொன்னார். "ப்ச், என்ன செய்ய?", னு நான் சொல்லிண்டேன் பொதுவா. "இப்ப உமா என்ன பெரிசாத் தப்பு பண்ணிட்டானு வேலைக்கிப் போகாத, கால ஒடிப்பேன், கைய ஒடிப்பேன், மாயவரத்துக்கு கூட்டிண்டு போயிடறேன்னு குதிக்கறான் இவன்? அவனோட நாணுவும் சேர்ந்துண்டு ஆடறான்".

நியாயமாதான் எனக்கும் பட்டது. பெத்த வயிறாச்சே, உமாவுக்கும் சில ஆசையிருக்கும்னு என் புத்திக்கு புரிஞ்சாலும் மனசுக்கு இன்னும் அந்தப்பக்குவம் வரல்லயேன்னு. ஆனா, எப்படியும் இவர எதிர்த்துண்டு, மச்சினர எதிர்த்துண்டு நான் உமாவுக்குப் பரிஞ்சு பேச மட்டும் மாட்டேன். எனக்கேகூட இதுலயெல்லாம் அவ்வளவா இஷ்டமில்ல. அவளுக்கு எது நல்லது எது கெட்டதுன்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியாதா என்ன? அதென்னெ அப்டித் தானே ஒரு தொணையத் தேடிக்கறது?

ஒவ்வொருத்தாரா காபிகொடுத்துண்டு வந்தேன். "பெரியப்பா, நா வேலைய மட்டும் விடமாட்டேன். உங்க எல்லாரோட விருப்பத்துக்கு மாறா நான் ஒண்ணுமே பண்ணிட மாட்டேன். சென்னையிலயே தான் இருப்பேன்",னு சொன்னா.

உமாவோட வார்த்தைகள்ள இருந்த தெளிவும் உறுதியும் அவரை மேற்கொண்டு பேசமுடியாதபடிக்கு ஆக்கிடித்து. அவர் அவ அப்படியெல்லாம் பேசுவோன்னு கொஞ்சம் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். அவன்  ஒண்ணுமே பேசாததைப்பார்த்து ரூமுக்குப் போயிட்டா உமா.

"ஓஹோ அப்படியா?", னு சொல்லிண்டே கொஞ்ச நாழி முள்ளுமுள்ளா வளர்ந்திருந்த தாடிய சொரசொரன்னு தேய்ச்சுண்டே யோசிச்சார் மச்சினர். அண்ணா மொகத்தையே பார்த்துண்டு நின்னார் இவர், அரசனின் கட்டளைக்குக் காத்திருக்கும் அடிமையைப்போல. "ஏதோ நாஞ்சொல்றதயெல்லாம் சொல்லிடேண்டா. இனிமே மேற்கொண்டு பார்த்துக்கவேண்டியது நீதான். அகிலா, வெளில கொஞ்சம் வேலையிருக்கு. நான் கெளம்பறேன்."

அப்படியே ராத்திரி ரயிலுக்கு ஊருக்குப் போறதச்சொல்லிண்டு அப்பவே அவுன்ஸக் கூட்டிண்டு கிளம்பிட்டார் மச்சினர்.

நேர போய் வசந்த்தையும் அவனோட அப்பா ஹ்ருதயராஜையும் பார்த்துப் பேசினாளாம். மொதல்ல கொஞ்சம் சண்டை வராப்ல இருந்துதாம். அதுக்கப்புறமா," உமாவ ஊரவிட்டே கிளப்பிண்டு போயிடுவோம். அதெல்லாம் ஒரு பெரிய விஷயமேயில்ல. அவளோட வேலையோ மத்ததோ எங்களுக்கு லட்சியமில்ல",னு சொன்னதும், அந்தப்பையன் "உமாவோட வேலை அவளுக்கு முக்கியம். அது அவளோட எதிர்காலத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் ரொம்ப முக்கியம். ப்ளீஸ் அப்படியெல்லாம் செய்யாதீங்க, இனிமே நாங்க மீட் பண்ணல்ல, பேசிக்கல்ல", னு சொன்னானாம். அப்போதான்,"அப்டின்னா நீ ஊரவிட்டுப் போயிடு",னு சொல்லியிருக்கார் மச்சினர். ஒரு வாரம் கெடுவாம்.

வேலைய ரிஸைன் பண்ணிட்டு பெங்களூருக்குப் போய் வேற வேல தேடிக்கறேன்னு வாக்குக்கொடுத்துட்டானாம் அவன். ஒரே வாரத்துல சொன்னமாதிரியே செஞ்சிட்டான்.

உமாதான் பட்டினி கெடந்தா ரெண்டு மூணு நாளைக்கு. அழுது அழுது மூஞ்சி செவந்து வீங்கிப்போயிருந்து. ஆபீஸ¤க்கும் போகவேயில்ல. மூணு நாளாச்சு. அவள அப்படிப்பார்க்க எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப வருத்தம்தான். ஆனா, என்ன செய்ய? இதுக்கெல்லாம் மசிஞ்சு குடுத்துடாதன்னு அவண்ணா சொல்லிட்டுப்போயிட்டார். இவரும் பல்லைக்கடிச்சுண்டு தான் இருந்தார். நானும் உள்ளுக்குள்ள அழுதுண்டு இருக்கும்படியாயிடுத்து.

Copyright © 2005 Tamiloviam.com - Authors