தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 5]
- ஜெயந்தி சங்கர்

உமா இருக்காளே உமா, அவளப்போல ஒரு பொண்ணப் பாக்கறதே அபூர்வம் தெரியுமோ?  கெட்டிக்காரி. படிப்புன்னு இல்ல, பொதுவாவே ரொம்பச் சமத்து. அமைதியா அடக்கமாயிருப்போ. பெரியவாகிட்ட மரியாதையா இருக்கற இளசுகள இந்நாள்ள பாக்கவா முடியறது? அபூர்வம் தானே, இல்லையா? உமாவும் அந்த அபூர்வங்கள்ள ஒருத்தி.

என்னோட அம்மாஞ்சியோட ஆத்துக்காரியோட தம்பிதான் உமாவோட அப்பா லக்ஷ்மிநாராயணன். உமாக்கு ஒரு பெரியப்பா உண்டு. அவம்பேர் சுப்பராமன். நாங்கள்ளாம் அவன 'துர்வாசர்' னுதான் கூப்டுவோம். அது அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ. அவன் எனக்கு பீயூஸீல க்ளாஸ்மேட் வேற. அவன் சிரிச்சுப்பேசி என் ஆயுசுல நான் பார்த்ததில்ல. அன்னிக்கி உமாவ அடிச்சுடாம கிடிச்சுப் பண்ணிடாம இருக்கணுமேன்னு ஸ்வாமிய வேண்டிண்டே இருந்தேன். நல்லவேளை, என்னையும் இழுத்துண்டு வசந்த் கிட்ட போய் தன் கோபத்தையெல்லாம் காமிச்சான். அப்படியே உமாவ அடிக்கக் கைய ஓங்கியிருந்தா, ஒருவேள நாணு பார்த்துண்டு சும்மா இருந்துருப்பானோ என்னவோ, ஆனா நா சும்மா இருந்திருக்கவே மாட்டேன்.

சுப்பராமன் ஆசைக்கின்னு ஒண்ணும் ஆஸ்திக்கின்னு ஒண்ணும் பெத்தானே, ரெண்டும் அசுர வித்துகள். பெரியவா சின்னவான்ற ஒரு மட்டுமரியாத கெடையாது. அப்டின்னா என்னன்னு கேக்கும் ரெண்டும். இப்ப கல்யாணமாகி வந்த உறவையெல்லாம் ஆட்டி வச்சிண்டிருக்குகள்.

அதுகள் தான் சின்ன வயசுலயே எனக்கு 'அவுன்ஸ் மாமா'னு பேர் வச்சுதுகளாம். காபின்னா எப்பவுமே எனக்குச் சித்த சபலம் உண்டு. அடிக்கடி குடிச்சா பித்தமாயிடறதேன்னு கொஞ்சம் அளவுல கொறச்சுண்டுடுவோமேன்னு கொஞ்ச வருஷமா ஒரு அவுன்ஸ்க்கு மேல குடிக்கறதில்லன்னு வச்சிண்டிருந்தேன். அதுவே பழக்கமாயிடுத்து. கூடக்குடுத்தா கொறச்சுக்கச் சொல்லிட்டுதான் குடிப்பேன். யாராத்துக்குப் போனாலும் பேசிண்டே காபிகுடுக்க சிலசமயம் மறந்துபோயிடுவா. ஆனா, நான் காபிக்கி மட்டும் சங்கோஜமே படறதில்ல தெரியுமோ. 'ஒரு அவுன்ஸ் காபி கெடைக்குமா?",னு கேட்டு வாங்கிச்சாப்டுவேன்.

அதையே சுப்பராமன் பெத்தெடுத்த ரெண்டு வாண்டுகளும் பேரா வச்சுடுத்து எனக்கு. ரெண்டும் பிஞ்சுல பழுத்ததுகள். அதுகள் கிட்ட பேசறச்சே, அப்பவே எனக்கு பெரியவாகிட்ட பேசறாப்லயே இருக்கும். உமாகிட்டதான் பெத்தபொண் கிட்ட பேசறாப்ல ஒரு வாத்ஸல்யம் வரும் எனக்கு. உமாவும் மாமா மாமான்னு இயல்பா ஒட்டிப்போ என்கிட்ட. "நெத்திய நாய் வந்து நக்கித்தாடி உமா?"னு கேட்ட விச்சுவோட நின்னுண்டு கௌஸி கைகொட்டிச் சிரிச்சா. பாவம், உமாவுக்கு தன்னோட ஸ்டிக்கர் பொட்டு விழுந்ததத்தான் அவா கேலி பண்றான்னுகூடப் புரியல்ல.

என்னோட பட்டப்பேரப் பத்தி என் கிட்ட சொன்னதே உமாக்குட்டி தான். அப்ப அவளுக்கு நாலஞ்சு வயசுதான் இருக்கும். சுப்பராமன்," எம்பிள்ளைக்கி பூணல் போடறேண்டா. மொதநாள் வேதபாராயணம், நாந்தி எல்லாம் நடக்கப்போறது. மறக்காம வந்துடு",னு மாயவரத்துலயிருந்து 'கார்ட்' போட்டிருந்தான். கூப்டா, நானும் நமக்குத் தான் கொழந்தகுட்டின்னு கொடுப்பினையில்லயே, இப்பிடியாவது போவோம்னு போயிடறது. புருஷசூக்தம், ருத்ரமெல்லாம் பாடம் தான் எனக்கும். சேர்ந்து சொல்வேன். என்ன கல்யாணம் பண்ணிண்டு பதினோரு வருஷம் வாழ்ந்துசெத்த புண்ணியவதி பொண்ணோ பிள்ளையோ ஒண்ணப் பெத்துக் கையில குடுத்துட்டுப் போயிருக்கலாம். அதுதான் இல்லன்னு ஆயாச்சு. நானும் ஒண்டிக்கட்டையாவே ஓட்டிண்டிருக்கேன் காலத்தை.

பூணூலுக்கு போயிருந்தேனில்லையா. விசேஷமெல்லாம் முடிஞ்சு உமா கிளம்பறப்போ," அவுன்ஸ் மாமா, வெத்தல போட்டா படிப்பே வராதுன்னு பெரியப்பா சொல்றா. நீங்க ஏம்மாமா எப்பப்பாரு தின்னுண்டேயிருக்கேள்?",னு கேட்டா. அப்போ அவளத்தான் கேட்டேன், 'அவுன்ஸ் மாமா'னு யார் சொல்லிக்குடுத்தான்னு. விச்சு அண்ணாவும் கௌசி அக்காவும் சொல்லிக்கொடுத்தான்னு சொல்லித்து கொழந்த. விச்சுவும் கௌசியும் நைஸா எடத்தவிட்டு நகர்ந்துபோயிட்டா, நான் அவாகிட்ட கேட்டிடப் பொறேனேன்னு.

நாணு இருக்கானே, உமாவோட அப்பா, அவன் தன் அண்ணாவக்கேக்காம 'ஒண்ணு'க்கு மட்டும்தான் போவன். மத்ததுக்கெல்லாம் மாயவரத்துக்கு தபால்போட்டு பதில் வந்துதான் அடுத்த அடியே வைப்பான். போகப்போக, போன் பேசிகேட்டுக்க ஆரம்பிச்சான். அவனோட ஆத்துக்காரி, தன் ஆம்படையான் அண்ணாவக்கேட்டுதான் பெரிய விஷயங்களுக்கு முடிவெடுக்கறார்னு தெரிஞ்சுண்டா. சின்ன விஷயங்களுக்காவது நானே முடிவெடுத்ததா இருக்கட்டும்னு, தன் சின்னச் சின்ன ஆசைகள நெறவேத்திக்க அவனோட சண்டை பிடிச்சு சாதிச்சுப்பள். எப்படியும் நாணு விட்டுக்கொடுத்துடுவன். அண்ணா, அகிலா ரெண்டுபேரும் ரெண்டு பக்கம் மொத்தும் மத்தளம்தான் நாணு.

அவா ரெண்டு பேர்கிட்ட எனக்குப் பிடிக்காததுன்னு ஒண்ணு உண்டுன்னா, அது அவா உமாவ 'பாசம்', 'கரிசனம்' ன்ற பேர்ல படுத்தறதுதான். சில சமயங்கள்ள உமா அவாகிட்டப் படறதப்பார்த்தா பாவமாயிருக்கும். தனியா மாட்டிண்டுட்டாளேன்னு தான் எனக்கு மனசுக்குக் கஷ்டமாயிருக்கும்.

உமாக்கு ஒரு தம்பியிருந்தான். ஒரே வயசுல, ஆனாலும் அல்ப ஆயுசுல நிமோனியாவோ, ஜாண்டீஸோ வந்து போயிடுத்து அந்தக்கொழந்த. அவன் இருந்திருந்தா நாணுவும் அகிலாவும் படுத்தறபாட்டுல பாதிய அவனும் பட்டிருப்பான். அதுவும் இல்லாமப் போச்சு. உமா ஒரே கொழந்தையாப்போயிட்டா.

உமாவாயிருக்கக் கொண்டு சமாளிக்கறா. வேற ஒரு பொண்ணாயிருந்தா வேற விதத்துல கெட்டுகூடப் போயிருக்கலாம் வெளி சகவாசங்களயெல்லாம் வலிய வளர்த்துண்டு.

கேவலம் ஒரு சோப்பு விஷயம். அதுலகூட உமாவுக்கு தானா முடிவு பண்ற உரிமையில்ல. அவ ஒம்போதாவது படிச்சுண்டிருந்தா. அவளோட சிநேகிதி சொன்னான்னு ஏதோ ஒரு வாசன சோப்பு வேணும்னு ஆசப்பட்டா. நாலஞ்சு நாளைக்கி அம்மாகிட்டயும் அப்பாகிட்டயும் கேட்டு, திரும்பத்திரும்பக் கெஞ்சிக்கேட்டு, அப்பறம் பிடிவாதம் பிடிச்சு ஒரு வழியா வாங்கினா. அன்னிக்கிப் பாத்து அவளுக்கு அச்சு அச்சுன்னு தொடர்ந்து தும்மல் வந்துது. மூக்கொழுகல் ஆரம்பிச்சுது. கொழந்தைகளுக்கு ஜலதோஷமே வரக்கூடாதா என்ன? காக்கா ஒக்கார பனம்பழம் விழுந்த கதையா, சோப்புனாலதான்னு சொல்லி அகிலா சொப்பைத் தூக்கிப் போட்டுட்டா. பழையபடி அகிலா வாங்கின சோப்பு உபயோகத்துக்கு வந்துது. அன்னிக்கி உமா அழுத அழுகைல ஜலதோஷம் இன்னும் தான் அதிகமாச்சு.

இப்பிடி நெறைய சொல்லலாம். ஐஸ்க்ரீமே வாங்கிகொடுக்க மாட்டா பொண்ணுக்கு. ஒடம்புக்கு வந்துடுமாம். ஜன்னி வந்துதானே பிள்ளைபோனான், அதனால ஒரே பயம். ஆனா, அதுக்காக இப்படியா? திங்கற வயசுல திங்காம எழுபது வயசுலயா திங்க? ஆனாலும் பாவம், உமா ஆத்துக்கு தெரியாம ஒரு சாமான் வாங்காது. எல்லாமே பெத்தவா வாங்கிக் கொடுத்தாத்தான்.

ரெண்டாவது படிக்கும்போது உமா, 'பாலே' டான்ஸ் கத்துக்கறேம்பான்னு ஆசையாசையா வந்து சொன்னா. சுப்பராயன் அப்ப அவாத்துக்கு வந்திருந்தான். "நாணு, வேணா பரத நாட்டியம் கத்துக்கட்டும். நா எங்க கௌசல்யாக்கு அதுகூட கெடையாதுன்னுட்டேன் தெரியுமோ? வெறும் வாய்ப்பாட்டுதான்",ன்னு சொன்னதுமே நாணு உமாவை வலுக்கட்டாயமா பரதநாட்டியம் கத்துக்க சேர்த்தான்.

இப்பிடித்தான் உமா என்ன ஆசப்பட்டாலும் ஆயிரம் காரணம் சொல்லி அவா சௌகரியத்துக்கும் விருப்பத்துக்கும், அவா என்ன சொல்லுவாளோ இவா என்ன சொல்லுவாளோன்னு முட்டுக்கட்டை போடுவா. மொத்தத்துல உமா பாடுதான் கஷ்டம். ரெண்டுபேரோட ஆட்டத்துக்கும் உமாவால தான் ஈடுகொடுத்துண்டு ஒழுக்கமாவும் இருக்க முடியறது. பிடிவாதம் பிடிச்சுப் பார்ப்போ உமாவும். ஆனா, எப்பவுமே முடிவான முடிவு அகிலா நாணுவோடதாத் தானிருக்கும். இருபத்திமூணு முடிஞ்சு இருபத்திநாலு நடக்கறது உமாக்குன்னு நெனைக்கறேன். இந்த வயசுக்குள்ள அவளுக்கு பெத்தவா மனசு நோகாம நடக்க ரொம்ப நன்னாவே தெரிஞ்சுடுத்து. சும்மா சொல்லக்கூடாது, அம்மா அப்பா கிழிச்ச கோட்ட தாண்டணும்னு நெனக்கக்கூடா மாட்டா. அதுவேகூட அவா ரெண்டு பேருக்கும் தோதாப்போயிடுத்தோ என்னவோ.

ஆரம்ப நாள்ள சம்பாதிக்கறதையெல்லாம் அண்ணா குடும்பத்துக்கு செஞ்சுண்டிருந்தான் நாணு. வாத்தியார் உத்யோகத்துல எப்படியும் வருமானம்னு என்ன பெரிசா வந்துடப்போறது. அதுல எப்படியோ விழுந்து எழுந்து குடித்தனம் பண்ணினான். கைக்கும் வாய்க்குமாவே தான் அல்லாடுவன். ஆனாலும், அண்ணாகிட்ட கூடச் சொல்லிக்கமாட்டானே. உதவியா, கேக்கறதா, மூச் ! அவண்ணா தான் அப்பப்போ பணமுடை வந்தா கேப்பான் இவங்கிட்ட. இவனும் வேற எடத்துல கடனாவாவது வாங்கிக் கொண்டு கொடுப்பன்.

போன வருஷம் தான் நாணு ரிட்டையர் ஆனான். மொத்தமா வந்த பீஎ·ப் பணத்தை உமா கல்யாணத்துக்காக புதையலக் காக்கற பூதமாக் காத்துண்டிருக்கான். எப்படியும் சுமாராக் கல்யாணத்தை ஒப்பேத்திட முடியும்னு ரொம்ப நம்பறான்னு நெனைக்கறேன்.
பென்ஷன் வருது சுமாரா. ஓட்டிண்டிருக்கான். தாம்பரத்துல ஊர்க்கோடியில 'ஓ'ன்னு இருந்த எடத்துல ஒரு கிரௌண்ட் வாங்கி குட்டியா பொட்டிமாதிரி, ஒரு ரூம், ஒரு ஹால், கிச்சன்னு கட்டி முடிச்சான். அதுக்குள்ள நாக்கு வெளித்தள்ளிடுத்து அவனுக்கு.

இப்பதான் மூணு வருஷமா உமா சம்பாதிக்க ஆரம்பிச்சுதான் அவாத்துல கொஞ்சம் பணப்புழக்கமே ஆரம்பிச்சது. ஸ்காலர்ஷிப்லயே பீஏ வரைக்கும் முடிச்சுட்டு ஒரு நல்ல டிராவல் ஏஜென்ஸில வேலைக்கி சேர்ந்தா. வேலபாத்துண்டே 'கரஸ்'ல எம்ஏ முடிச்சா. ப்ரமோஷனும் வாங்கினா.

சம்பாதிக்கற திமிர்ல எப்டியெல்லாம் ஆடறதுகள் இந்தக்காலத்துல. ஹ¥ஹ¥ம், சொல்லப்டாது. உமா அநாவசியமா ஒரு ஆட்டோக்குக் கூட செலவு செய்யமாட்டா. அதனாலதான் அன்னிக்கி ஆட்டோப்பிடிச்சு வசந்த் ஆத்துக்குப் போனேன்னு அவ சொன்னப்போ ஆச்சரியமாப்போச்சு எனக்கு. அவ்ளோ பதட்டத்துலயும் அவசரத்துலயும் இருந்திருக்கா அன்னிக்கி. தினமும் தாம்பரத்துலயிருந்து ஆயிரம் விளக்கு வரைக்கும் எலக்ட்ரிக் ட்ரெயின்ல தான் போவா. செயற்கையா நாணிக்கொணிக்கறதும் கெடையாது. அதுக்காக அடக்கமில்லாமவும் இருக்கமாட்டா. பளிச்சுன்னு அலங்காரம் பண்ணிப்போ. ஆனா, கண்ணு உறுத்தாத படிக்குதான் எல்லாமே.

போன மாசம் சுப்பராமனும் வந்து, கத்தி ஓஞ்சு எல்லா டிராமாவும் ஆச்சு. ரெண்டு நாள்கூட ஆயிருக்காது, நாணு திடீர்னு என்னப்பார்க்க ஆத்துக்கே வந்துட்டான். எனக்குக் கொஞ்சம் இருமலா இருந்துது.  படுத்துண்டிருந்தேன்.

கண்ணாடிய எடுத்துப்போட்டுண்டே, பனியனக் கொடியிலயிருந்து இழுத்துண்டே வெளியில வந்தேன். பனியனக் கொசுவி, தல வழியாப் போட்டுண்டு கைய ரெண்டையும் நொழச்சுண்டே வந்து உக்கார்ந்துண்டேன்."ஏதுடா இது, வராதவாள்ளாம் வரா. மழதான் கொட்டப்போறது",னு சொல்லிண்டே உள்ள கூப்டு உக்கார வெச்சேன். நான் போட்டுக்குடுத்த காபிய சாப்டான். "மணி, நீ எனக்கொரு ஒத்தாச பண்ணனுமே",னு ஆரம்பிச்சான். நாணு வேஷ்டி கட்டிண்டு வெளியில வரது அபூர்வம். அதுவும் தூரமாப் போனா பேண்ட் தான் போட்டுப்பன். அன்னிக்கி பளிச்சுன்னு வேஷ்டி கட்டிண்டு, மொழுமொழுன்னு ஷவரம் பண்ணிண்டு, முழுக்கை சட்டையும் போட்டுண்டிருந்தான்.

யார் மூலமோ ஒரு ஜாதகம் வந்திருக்கு. பொருத்தமும் பார்த்துட்டான். ஜோஸியரும் பொருந்திருக்கு, இந்த வரன் தான் முடியும்னு சொல்லிட்டாராம். மாப்பிளையோட சொந்தக்காரா நங்கநல்லூர்ல இருக்காளாம். அங்க போயி பார்த்துபேசிட்டு விவரமெல்லாம் விஜாரிச்சுண்டு வான்னான். எப்பிடியாவது உமா கல்யாணம் நடக்க உதவி செய்யின்னு கையப் பிடிச்சு வேண்டிண்டான்.

உமா பேர்ல எனக்கிருக்கற அபிமானத்தப் புரிஞ்சிண்டுதான் என்கிட்ட வந்திருந்தான் நாணு. அவனுக்காக இல்லாட்டியும் உமாவுக்காக நிச்சயமா செய்வேன்னு மனசுக்குள்ள நெனச்சிண்டு விலாசம், போட்டோ எல்லாத்தையும் வாங்கிண்டேன். " போன வாரம் 'பொண் பார்க்க' வாரான்னு சொன்னதுமே ஒரு குண்டத்தூக்கிப் போட்டா. இப்ப ஏதும் பிரச்சன வராம நடக்கணுமேன்னு பகவானத்தான் வேண்டிண்டிருக்கேன்", னு சொன்னான். "அதுக்கு தான் அகிலாவும் நானும் ரகசியமா ஏற்பாடு பண்றோம், நீ பாட்டுக்கு உமாட்ட சொல்லிவச்சுடாத",னு வேற சொன்னான்.

"நாணு, உமாட்ட சொல்லிட்டா என்ன?அவோ ரொம்ப புத்திசாலி, படிச்சவ. சொன்னா புரிஞ்சுப்பா. சமத்து. நீ,...", னு நான் முடிக்கறதுக்குள்ள, "மணி, முடிஞ்சா ஹெல்ப் பண்ணு. இல்லன்னே நானே ஒரு நட போயி பாத்துப்பேசிட்டு வரேன். எனக்கு மாயவரத்து அவசரமாப் பொகவேண்டியிருக்கு. இல்லேன்னா உன்னக் கேப்பேனா?",னு கொஞ்சம் கடுகடுன்னு சொல்லிண்டே எழுந்துக்கப்போனான். "சரி, கோச்சுக்காத. நானே போயி விவரமா கேட்டுண்டு வரேன்",னு சொன்னதும், அடுத்த நாளே, ஒரு நடை வந்து கேட்டுக்கறதாச் சொல்லிட்டு போயிட்டான்.

அன்னிக்கே நங்கநல்லூருக்குப் போனேன். மாப்பிள்ளை போட்டோல நன்னாயிருந்தான். நல்ல பசையுள்ள எடம்தான்னு தோணித்து. சிங்கப்பூர்லயே வளந்தவனாம். ஒரே பிள்ளை. அங்கேயே எஞ்சினியரா கைநெறைய சம்பாதிக்கறானாம். வந்து பொண் பார்த்து சிம்பிளா அடுத்த மாசமே கல்யாணம் பண்ணிக் கூட்டிண்டு போற ஐடியாவாம். அவா தான் பொருந்தி வர ஜாதகத்த, போட்டோ பார்த்து தான் செலக்ட் பண்ணி அனுப்பி வைக்கறாளாம். அந்த மாமி சொன்னா. உமாவப் போட்டோல பார்த்ததுமே ரொம்பப் பிடிச்சுடுத்து போல. மாமி முகம் பிரகாசமாயிடுத்து. ஆனா ஒண்ணு, உமாவப்பிடிக்காமப் போனாத்தானே ஆச்சரியம். மாப்பிளைக்கு ஒண்ணு விட்ட அத்தையாம் அந்த மாமி.

ரொம்ப நல்ல எடமாத்தான் தெரிஞ்சுது. எங்கேயிருந்தாலும் உமா மனசுக்கு அவோ நன்னாதான் இருப்பா. நன்னா இருக்கணும். கூடிவந்து கல்யாணம் நல்லபடியா நடக்கணும். நான் பார்த்துப் பொறந்து வளர்ந்த பொண்ணு. வசந்த்தை மனசுல வச்சிண்டு கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டாளோன்னு நாணு மனசுல பயமிருக்கு. நன்னாத் தெரிஞ்சுதே. ஏன், எனக்கேகூட தான் அந்த பயம் இருக்கு.

வசந்த் பயலப்பார்த்தேன். பையன் நல்லவந்தான். உமா மட்டும் என் வயத்துல பொறந்த பொண்ண இருந்தா, யாரையும் லட்சியமே பண்ணாம அவனுக்கு பண்ணி வச்சிருப்பேன். இல்ல ஒருவேள, சொந்தப் பொண்ணுன்னா தான் இன்னும் வீம்பு, பிடிவாதம் எல்லாம் அதிகமா வருமோ. அப்படியும் இருக்கலாம்.

ஆனா, காலம் மாறிண்டுதானே வருது. அத ஒத்துண்டுதானே ஆகணும். இல்லயா? பொருத்தம் பார்த்துப் பண்ணி வச்ச எல்லா கல்யாணமும் ஓஹோன்னு சிறக்கறதுமில்ல. தானா மதம், குலம், கோத்தரம்னு ஒண்ணுமே பாக்காம பண்ணிண்டவா எல்லாரும் சீரழிஞ்சு போயிடறதுமில்ல. அததுகள் தலையெழுத்து நன்னா இருக்கணும். இருந்தா எல்லாமே சரியாயிருக்கும். உமாவுக்கு எந்தக் கொறையும் வராம நன்னா இருக்கணும்னு அந்த கற்பகாம்பாள வேண்டிக்கறேன். வேற என்னத்தத் தான் நான் செய்ய?

Copyright © 2005 Tamiloviam.com - Authors