தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 6]
- ஜெயந்தி சங்கர்

துபாயில் நான் இருந்தபோது ஒரு முறை சிங்கப்பூரிலிருந்து வெங்கட் தொலைபேசினான். சற்று எதிர்பாராதநேரத்தில் அவனுடைய குரலைக்கேட்டதுமே இனிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது. உற்சாகமாகப் பேச ஆரம்பித்தேன். ஆனால், அவன் பேச ஆரம்பித்த போதுதான் அவன் மகிழ்ச்சியாக இல்லை என்று புரிந்தது. அரை மணிநேரம் பேசினோம்.

அவன் பிரச்சனை என்று சொல்லிக்கொண்டிருந்தது உண்மையில் பிரச்சனையேயில்லை என்று தான் எனக்குத்தோன்றியது. அவன் ஏன் தான் எதிர்மறையாகவே யோசிக்கிறானோ தெரியவில்லை. அவனிடமே கேட்டேனே, அதற்கும் 'மீண்டும் கட்டி வந்துவிட்டால், கட்டிவந்துவிட்டால், என்ற அதே பழைய பல்லவி, விடாமல் தொடர்ந்து. வராது என்று நேராக யோசிக்க ஏன் அவனுக்குத் தோன்றவில்லை. சொன்னதற்கும் தயாராய் பதில். வரும் என்று யோசித்து பிரச்சனைகளைத் தவிர்ப்பதையே புத்திசாலித்தனம் என்றான்.

என் தங்கையும் நானும்தான் என் பெற்றோருக்கு. அப்படிப்பார்த்தால், ஒரே மகன்தான் நானும் கூட. வெங்கட்டிற்கு இருபத்தியைந்து வயதிலேயே அவனுடைய அம்மா அவனுக்குப் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

என் பெற்றோர் எங்களின் வாழ்க்கையைத் தேர்ந்துடுக்கும் பொறுப்பை எங்களிடமே விட்டுவிட்டார்கள். நிச்சயம், அலட்சியமல்ல அதற்குக்காரணம். பிரச்சனை வந்தால் பிள்ளைகள் நம்மைக் குறை சொல்வார்களே என்ற பயமும் இல்லை. மிக இயல்பாகக் கொடுக்கப்பட்ட அபரிமிதமான சுதந்திரம் தான் காரணம். சிங்கப்பூரில் எல்லா இந்தியர்களும் இப்படித் தானா, என்று கேட்டால் அதுதான் இல்லை. இன்னமும் 'ஏற்பாடு' செய்யப்பட்ட திருமணங்களையே விரும்பி நடத்தும் பெற்றோரும் நிறையபேர் இருக்கிறார்கள். அவ்விதத்தில் எல்லாவிதமான மக்களும் கொண்ட கலாசாரக் கலவைதான் சிங்கப்பூரின் இந்திய சமூகமும்.

"கல்யாணத்துக்கு வற்புறுத்தறாங்கடா எங்கம்மா", என்று திரும்பத்திரும்ப புலம்பித்தள்ளினான். சிரிப்பை அடக்கவே முடியவில்லை எனக்கு. நான் சிரித்ததைக்கேட்டு அவனுக்குக் கிளம்பியது கோபம். "சரி. சரி. என்னாச்சுன்னு இப்ப இவ்வளவு கொழப்பிக்கற. நல்லபடியா பார்த்துப்பண்ணி வைக்கிறேன்றாங்க உங்க பேரண்ட்ஸ். நல்ல விஷயம் தானே. பீ ஹாப்பி ஐ ஸே. ஜஸ்ட் கோ அஹெட் அண்ட் கெட் மேரிட் மேன், வாழ்க்கையோட ஓட்டத்துக்கேற்ப அதோட ஓடிக்கிட்டே இருடா", என்று ஊற்சாகப்படுத்த முயற்சித்தேன். நான் அப்படிச்சொல்வேன் என்று அவன் எதிபார்க்கவில்லை போலும்.

"இப்படிச் சாதாரணமாச் சொல்லிட்டியேடா, என்னோட நிலை தெரிஞ்சும்."

" என்ன? அதான் குணமாயிடுச்சுன்னு டாக்டரே சொல்லிட்டாரேடா."

"ஒரு வேள மறுபடியும் வந்துதுன்னா?"

"டோண்ட் கீப் சேயிங்க் தட். வாழ்ந்து பாருடா வாழ்க்கைய. சும்மா ஆராய்ச்சி பண்ணிகிட்டு, ஜோஸியம் சொல்லிகிட்டு, யோசிச்சு யோசிச்சு தேயாதடா", என்றேன் உரிமையோடு.

நான்கு வருடங்களுக்கு முன்னால், அனிதாவோடு பழகிக்கொண்டிருந்தேன். நல்லவள் தான். கிட்டிமுட்டி கல்யாணத்தில்போய் தான் நிற்கப்போகிறோம் என்று கனவுகள் கூடக் கண்டேன். ஆனால், இடையில் ஏதேதோ சில்லறைப்பிரச்சனைகள். அவளுக்கு என்னைவிட எடுப்பான தோற்றத்துடன் அதிக சம்பளம் வாங்கும் ஒருவன் மாட்டினான். அவனைத் தேர்ந்தெடுத்து என்னை உதறினாள். கல்யாணம்னு ஒண்ணு ஆகியிருந்தால் அவள் அவ்வாறு செய்திருக்க மாட்டாளோ என்றெல்லாம் யோசித்தேன். ஆனால், எங்களிடையே கல்யாணம் என்ற ஒரு கட்டுப்பாடும் இருக்கவில்லையே.

வேறுவிதத்தில் கட்டுப்படுத்த மதமோ, சட்டமோ கூட இல்லை. அவரவர் இஷ்டம். தேர்வு செய்யச் சுதந்திரமும் வேறு ஆண்களும் பெண்களும் இருக்கும்போது அனிதாவைப் போன்றவர்களுக்குக் குழப்பம் வருவது சகஜம்தானே. குழம்பாமல் நிலையாகத் தொடர்ந்து போய் கல்யாணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்பவர்களும் இருக்கத்தானே இருக்கிறார்கள். அவர்கள் பாக்கியசாலிகள்.

அனிதா பிரிந்து, கொஞ்ச நாளைக்கு வருத்தமாகத்தான் இருந்தது எனக்கு. ஆனால், என்ன செய்ய? வாழ்க்கை அதன் ஓட்டத்தில் போய்க்கொண்டேதான் இருந்தது. அதுதானே நல்லதும்கூட.

"டேய் வெங்கட், சொல்றதக்கேளுடா. இப்ப என்னை மாதிரி, சாய்ஸ் அதிகமா இருக்கும்போது கொழப்பமும் அதிகமாகும். சிலந்நேரங்கள்ள யோசிச்சு யோசிச்சு திணறலே வரும். அந்த சாய்ஸ் விஷயங்கள் எல்லாத்தையும் அலசி, ஒனக்கு ஏத்த மாதிரி பொண்ணாப் பார்த்துக் கொடுக்கற மிகக் கஷ்டமான வேலைய ஏத்துச் செய்யறேங்கறாங்க உங்க பேரண்ட்ஸ். நல்லதாப்போச்சுன்னு, சரின்னுவியா,...சும்மா பொலம்பிகிட்டு", என்றவனிடம்,

"அறைஞ்சேன்னா,.. கல்யாணமே வேணாம்ன்றேன். நீ என்ன சாய்ஸ் அது இதுன்னுகிட்டிருக்க,..", என்று போனில் கத்தினான்.

"ஆமாப்பா, சொந்த அனுபவம், அதான் பேசறேன். இங்கபாரு. நீ பேசாமப் போயி கல்யாணத்தப் பண்ணிகிட்டுவா. சிங்கப்பூர்ல சூப்பரா ஒரு ரிஸெப்ஷன் கொடுத்துடுவோம்."

"நா அவங்ககூடப் போகத்தான் போறேன். ஆனா, கல்யாணம் பண்ணிக்க இல்லடா. நிறுத்த."

"டேய் ·பூல், ஏண்டா கெடுத்துக்கற. பாஸிடிவா நெனச்சிக்கோ, கல்யாணம் பண்ணிட்டு வாடா."

" நீ இப்படிச் சொல்லுவன்னு நா எதிர்பார்க்கவேயில்லடா. அதுபோகட்டும். நீ எப்பத் திரும்பற சிங்கப்பூருக்கு?"

" வர இருபத்தெட்டு,.."

" டேய் இருபத்தேழு நாங்க கெளம்பறோம். ஒருநாள் முன்னாடி வாயேன்."

" கஷ்டம்தான். ஆனா, ட்ரை பண்ணறேன்."

"சரி, பை."

"பை."

ஒரு வருடமாய் ப்ரியாதான் எனது நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்தாள். முன்பு ஏற்பட்ட அனுபவம் தான் சிலவேளைகளில் நம்பிக்கையையே கொல்கிறது. எப்போதும் நிலையற்ற ஓர் உணர்வு. என்னைவிட்டுப் போய்விடுவாளோ என்று நானும், அவளைவிட்டுப் போய்விடுவேனோ என்று அவளும் நினைத்துக்கொள்வதைத் தவிர்க்க முடிவதில்லை. அவளுக்கும் என்னைப்போல முன்பே சிலபல அனுபவங்கள் வாய்ந்திருந்தன.

ஆக, ஒருவருக்குகொருவர் சிலசமயம் அவநம்பிக்கையும், சிலசமயம் நம்பிக்கையும் கொண்டு, உறவுப்பயணத்தை திருமணம் வரைகொண்டு சேர்க்க முயன்றபடிதான் இருந்தோம். பயணம் தொடர்கிறது என்ற ஒரே திருப்தி. என்னால் 'பிரிவு' வந்தது என்றிருக்கக்கூடாது என்று நானும்,  அவளால் 'பிரிவு' வந்தது என்றிருக்கக்கூடாது என்று அவளும் மிகக் கவனமாக இருந்தோம். பிரிவு வருவதைக் காட்டிலும், இதுதான் முக்கியமாய்ப் பட்டது எங்களுக்கு என்பதுதான் நகைமுரண். பிரிவு வந்தாலும் அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்ற அக்கறை என்று நினைத்தீர்களானால், அதுதான் தவறு. உண்மையில் பிற்காலத்தில் மனசாட்சிக்கு உறுத்தல் எதுவும் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற அக்கறையே அதற்குக் காரணம்.

அனிதாவிடம் பழகும்போது இவ்வுணர்வு இன்னும் அதிகமாய் இருந்ததாக நினைவு. ஒரு வேளை அடுத்த முறை என்று ஒன்று இருக்குமானால், இன்னும் குறையக்கூடுமோ என்னவோ?! 'அடுத்த முயற்சி'க்குத் தயாராக எப்போதுமே இருக்கவேண்டிய கட்டாயம் என் மனதுக்கு. இது உண்மையில் பெரும் சலிப்பைக்கொடுக்கக்கூடிய அவஸ்தைதான். அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும். அளவிற்கு மிஞ்சிய சுதந்திரமும் கூட நிலையற்ற தன்மைக்குத் தான் வழிவிடுகிறது.

வெங்கட்டோடு பேசிக்கொண்டிருந்ததில் எனக்கும் கல்யாண ஆசை வந்தது. அத்தகைய எண்ணம் வந்ததுமே சிரிப்பும்தான். நான் அவனைவிட ஒரு வயது மூத்தவன். தொடர்ந்து ப்ரியாவின் நினைவு வந்தது. அவளுக்கு போன் செய்தேன்.

"ஹலோ, ரகுவா?"
" ஹலோ, ப்ரியா மை ஸ்வீட்டி,  எப்டியிருக்க? ஏன் போனே பண்ணல்ல நீ? நான் எப்பப்போன் செஞ்சாலும் நீ வீட்டுல இருக்கறதில்ல. ஹேண்ட் போனை வேற ஆ·ப் பண்ணி வச்சிருக்க போல. ஏன் ம்?"
" ...."
" ஏன் ஏதோ போல இருக்க? ஏண்டா, ஒடம்பு சரியில்லயா?"
" இல்லயே."
"எம்மேல கோபமா?"
"இல்லயே."
ஒற்றை வார்த்தையில் பதில்கள். என்னாவாயிற்று இவளுக்கு? ஒன்றும் புரியவில்லையே. "ப்ரியா, நா வர இருபத்தெட்டு அங்க வந்துடுவேன், உனக்கு ஏதும் வேணும்னா மெயில் பண்ணு", என்று சொல்லிவிட்டு துண்டித்தேன். ப்ரியா ஏன் ஒரு மாதிரியிருந்தாள் குரலில் வழக்கமான உற்சாகமில்லையே. உடம்பு சரியில்லையோ. சகஜமாகப் பேசவேயில்லையே ஏன்? என்ற கேள்வி சுழன்று சுழன்று எழும்பியது என்னுள்.

ஒன்றரை மாதங்களுக்கு முன்பு நான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன் தினம். இருவரும் விடுப்பெடுத்துக்கொண்டோம். நாள் முழுவதும் கைகோர்த்து எந்தவித இலக்குமின்றி சுற்றினோம். களைத்து ஓய்ந்து காபிகுடித்துக்கொண்டே மணிக்கணக்கில் பேசினோம். "ரகு, நீங்க போய் தான் ஆகணுமா, நீங்க இல்லாட்டி எனக்கு போரடிக்குமே", என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டேயிருந்தாள். "வேலை விஷயமாச்சேம்மா. போகாட்டி எப்பிடி சொல்லு. ம்? ப்ராஜெக்ட் முடிஞ்சதுமே வந்துடுவேன்" ,என்று நானும் சமாதானப்படுத்தியபடியே இருந்தேன்.

ஆனால், இன்று ஏன் உணர்ச்சியற்றுக் கிடந்தது அவள் குரல்!? யோசித்துப்பார்த்ததில் அவளோடு போனில் பேசியே பலநாட்கள் ஆகியிருந்தது என்று கணக்கிட்டது மனம்.

கொஞ்ச நேரத்திலேயே போன் சிணங்கியது. ப்ரியாவாகயிருக்கும் என்று எடுத்தால், அம்மா!

"ஹலோ, ரகு எப்படிப்பா இருக்க? நேத்தி இங்க ப்ரியா வந்துச்சி. கொஞ்ச நேரம் பேசிகிட்டிருந்துச்சு. உங்கிட்ட சொல்லச் சொல்லுச்சுப்பா. நானே உனக்கு போன் போடறதா இருந்தேன், அதுக்குள்ள நீ அவளுக்கு போன் போட்டியாமே. இப்பத்தான் ப்ரியா போன்ல எங்கிட்ட பேசிச்சி. உங்கிட்ட சொல்ல கஷ்டப்பட்டுகிட்டு தான் என்னவிட்டு சொல்லச்சொல்லிச்சு. 'ஷி வாண்ட்ஸ் டு ப்ரேக் ஆப்' லா. 'ப்ளீஸ் ஆண்டி, சொல்லிடுங்கன்'னு ஒரே கெஞ்சல்", என்று அம்மா சொல்லிக்கொண்டே போனார்.

இப்படியொன்றை எதிர்பார்க்காமல் வேறு ஏதேதோ எண்ணிக் குழம்பியதை நினைத்து எனக்கே வெட்கமாகிவிட்டது. "என்ன ஆச்சு அவளுக்கு? அவளே என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே. உங்ககிட்ட என்ன ரெகமெண்டேஷன்? ஆமா,. எதுக்கு இப்ப 'ப்ரேக் ஆப்'னு கேட்டீங்களா?",கோபத்தை அம்மாவிடம் வெளிப்படுத்தி என்ன செய்ய? ஆனாலும், அம்மாவிடம் தான் எரிந்துவிழுந்தேன்.

"அதான் அந்த ப்ரவீன் இருக்கானே, அவனோட பழக ஆரம்பிச்சிட்டாப்பா. அதான், உன்னக் கழட்டிவிட்டுட்டுடா. வேற என்ன. நீ இங்க வரதுக்கு முன்னாடியே, போன்ல பேசி உன் கிட்ட 'ப்ரேக் ஆப்'னு சொல்லச் சொல்லி ப்ரவீன் சொல்லிகிட்டேயிருக்கானாம்."

"ஓ,.. ,.. அம்மா, நா இருபத்தெட்டாம் தேதி சிங்கப்பூருக்கு வந்துடுவேன். ஆமா,.இன்னிக்கி நீங்க லீவா?"
"இல்ல., இதோ கெளம்பிகிட்டே இருக்கேன், ரகு 'சீயர் அப்'லா. இதுக்கெல்லாம் கவலப்படாத என்ன, பை"
"பை", சொல்லிவிட்டுத் துண்டித்தேன். யோசனையில் அப்படியே உட்கார்ந்தேன்.

பிறகு, ப்ரியாவைப் பார்த்து நாலு கேள்வி கேட்கவேண்டும், ரெண்டு அறை விடவேண்டும் என்றெல்லாம் கோபமாகப் பொங்கியது, கொஞ்ச நேரத்துக்கு. இருந்தாலும் அனிதாவிடமிருந்து பிரிந்தபோது இருந்த அளவிற்கு வருத்தமும், கோபமும் இருக்கவில்லை. மனமுதிர்ச்சிதான் காரணமோ, இல்லை அனுபவம் கொடுத்த பாடமோ, ஏதோ ஒன்று ! 'அடச் சே, இந்த ப்ரியாவும் இப்படி செஞ்சிட்டாளே', என்று மனம் அரற்றியபடி இருந்தது.

இதேகதியில் போனால், முப்பத்தியைந்து வயதுக்குக்கூட எனக்குக் கல்யாணம் நடக்காதோ! அதற்குப் பிறகு, எப்போது குழந்தைகள் பெற்று, எப்போதுதான் வாழ்க்கையில் ஒரு நிலைத்தன்மையை அடைய?

பேசாமல் வெங்கட்டின் பெற்றோரிடம் சொல்லி எனக்கும் ஒரு பெண்ணைபார்க்கச் சொன்னால் என்ன? என் அம்மாவிடமும் சொல்லலாம். முதலில் விழுந்துவிழுந்து சிரிப்பார். பிறகு, புரிந்துகொண்டு தெரிந்தவர்களிடம் சொல்லிவைத்து உதவுவார். எனக்கு வேறு ஒரு கவலையில்லை. வயது ஏறிக்கொண்டே போகிறதே என்பதுதான்.

அந்தமாதிரி 'ஏற்பாடு' செய்யப்பட்ட கல்யாணத்தில் ஒரு ஈர்ப்பு இருந்தாலும், நடைமுறைச் சிக்கல்கள் வரும் என்று தோன்றியது. உள்ளூர ஆசை வந்தாலும், அந்தத் தயக்கம் இருக்கத்தானே செய்தது. ஒரு வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டுவிட்டு, வேறு ஒன்றைத் தழுவ நினைப்பது சரிவருமா? கையில் தனக்கிருக்கும் வழியை விட வேறொருவருக்குக் கிடைத்த வழியே ஈர்க்கிறதே ! ஒருவேளை, இதுதான் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என்பதோ?!

வெங்கட்டுக்குச் சொன்னதே தான் எனக்கும். டேய் ரகு, பேசாம நீயும் வாழ்க்கை கூட்டிப்போகும் போக்கில் இயல்பாகப் போய்க்கொண்டேயிருடா என்று சொல்லிக் கொண்டேன். வேற வழியும் இல்லையே? !

Copyright © 2005 Tamiloviam.com - Authors