தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 7]
- ஜெயந்தி சங்கர்

பெற்றுவிட்ட ஒரே உரிமையில், அவர்கள் சாவி கொடுத்தால் ஆடவேண்டிய 'ரோபா'வாய் என்னை அம்மாவும் அப்பாவும் நினைத்தார்கள். அதைத்தான் என்னால் சகிக்கவே முடியவில்லை. படித்து வேலையிலிருக்கும் இருபத்து நான்கு வயதுப்பெண்ணாகவே என்னைப் பார்க்க மறுக்கிறார்களே என்று நினைக்கும் போதெல்லாம் எப்போதுமில்லாத அளவிற்கு என்னுள் கோபமும் கழிவிரக்கமும் பொங்கியது.

ஊரிலிருக்கும் பெரியப்பாவை வரவழைத்து என் முடிவை வலுக்கட்டாயமாக மாற்றி ஒரு மாதம் கூட ஆகியிருக்கவில்லை. அப்போது அவர்கள் இழுப்புக்கு நான் இழுபட்டேன் என்ற குறைந்தபட்ச திருப்தியிலாவது, அன்று நான் சொன்ன நிபந்தனைக்குக் கட்டுப் படுவார்கள் என்றே முழுமையாக நம்பியிருந்தேன். எனக்குப் பிடித்திருந்த கல்யாணம் அவர்களுக்குப் பிடிக்கவில்லையானால், எனக்குக் கல்யாணமே வேண்டாம் என்றபோது, சரி சரியென்று இருவரும் சொன்னதுகூட அப்போதைக்குத்தான் போலிருக்கிறது.

அடுத்தடுத்த நடவடிக்கைகள் எனக்குத் தெரியாமலே நடந்திருக்கின்றன. ஜாதகப்பொருத்தம் பார்த்து லீவு நாளான ஞாயிறன்று பிள்ளை வீட்டாரை 'பெண் பார்க்க' வரச்சொல்லியிருந்ததை அம்மா மெதுவாகக் கடைசி நேரத்தில் சமையலறையின் வெங்காயம், ஏலக்காய் கலவைமணத்துக்கிடையில் சொன்னபோது எனக்குக் கட்டுக்கடங்காமல் கோபம் தான் வந்தது. ஒரு வாரமாகவே இருவரும் கூடிக்கூடிப் பேசுவதும், நான் வந்ததுமே கப்சிப்பென்று இருப்பதும் ஏனென்ற என் கேள்விக்கு விடை கிடைத்தே விட்டது.

முறைத்துப் பார்த்த என்னைச் சிறிதும் பொருட்படுத்தாமல், "அம்பி மாமா பொண் கல்யாணத்துக்குக் கட்டிண்டியே, 'லெமென் யெல்லோ' சாரி, 'காண்ட்றாஸ்ட் கிரீன்' ஜாக்கெட் அதையே கட்டிக்கோடி. அன்னிக்கி கூட்டத்துல உன்பக்கம் திரும்பிப்பாக்காதவ இல்ல தெரியுமோ?", என்று ஏதேதோ பெருமையாகச் சொல்லிக்கொண்டே புடைவை ரவிக்கையை பீரோவிலிருந்து எடுத்து வைத்தாள். வாசல் கதவு தட்டப்படும் ஓசை கேட்டதுமே, அதற்காகவே காத்துக்கொண்டிருந்தாற்போல குடுகுடுவென்று ஓடினாள்.

என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும். இப்படியெல்லாம் திடீர்திடீரென்று திட்டங்கள் போட்டால் எப்படியும் இவர்களின் வழிக்கு நான் வந்து விடுவேனென்றா? இதென்ன ஏமாற்று வேலை, அதுவும் பெற்ற ஒரே மகளிடம். புடைவையை மாற்றிக்கொள்ளாமல், அப்படியே கட்டிலின் மீது உட்கார்ந்தேன் தொப்பென்று.

கழுத்தைக் குனிந்து தாலிகட்டிக்கொள்ள மறுத்தால் தலையை டபக்கென்று சாய்த்து, பக்கத்தில் உட்கார்ந்திருப்பவனிடம்,'ம், கட்டு', என்பார்களோ ! என்ன அராஜகம்? மனதிற்குள் மட்டும் தானே கோபப்பட முடிகிறது என்னால்? செயலில் ஒன்றுமே கிடையாது. நான் கோழையோ? இல்லை, பெற்றோரை தேவைக்கு அதிகம் மதிப்பதால், என்னை மேலோட்டமாய்ப் பார்க்கும்போது அப்படித் தோன்றுகிறதோ?

பெண்பார்க்கவந்த கும்பலோடு அப்பாவும் கூடத்திற்குள் நுழைந்தது சளசளவென்ற பேச்சிலிருந்தே புரிந்தது. ஓஹோ, இவர்களையெல்லாம் எதிர்கொண்டழைக்கத்தான் போயிருந்தாரா? செயற்கையாகப் பேசி, தேவைக்கதிகமாகச் சிரித்துக் கொண்டிருந்ததைக் கேட்கக்கேட்க என்னில் இருந்த கோபம் பன்மடங்கு எகிறியது. எனக்கிருந்த கோபத்தில் செயற்கையாகத் தோன்றியதோ என்னவோ. ஹாலில் யார் ஜோக்குக்கு யார் சிரிக்கிறார்கள் என்றே புரியாத குழப்பமான ஒருவித கூச்சல் நிலவியது. அதில் சம்பிரதாயத்திற்காக வலுவில் வரவழைத்துக்கொண்ட செயற்கைக் குதூகலம். இடையில் 'அவுன்ஸ்' மாமா குரலும் கேட்டது. ஓ, இவரும் இதெற்கெல்லாம் உடந்தையா?

வெளியாட்கள் வந்திருந்த நேரத்தில் அநாவசிய சர்ச்சையோ ரசபாசமோ வேண்டாமென்று பேசாமல் எடுத்து வைத்திருந்த புடைவையை கட்டிக்கொண்டேன். தலைப்பை மேலே போட்டுக்கொண்டு கொசுவத்தைச் சரி செய்யும் போது சாத்தியிருந்த கதவை அம்மா டொக் டொக்கென்று லேசாகத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள். விட்ட இடத்திலிருந்து தொடருவதைப்போல நேருக்கு நேர் பார்த்து, இமைக்காமல் அம்மாவை முறைத்தேன்.

நான் ஏதும் கேட்பதற்குள் முந்திக்கொண்டு, "வா உமா , சும்மா எல்லாருக்கும் கா·பி செர்வ் பண்ணிட்டு, அங்கேயே பிடிச்சா இரு, இல்லேன்னா ரூமுக்கு வந்துடு", என்று என் முறைப்பிற்கான அர்த்தத்தைப் புரிந்துகொண்டும், புரியாதமாதிரி பேசிக்கொண்டே போனாள். வேறு வழியில்லாமல் அம்மாவைத்தொடர்ந்து நான் சமையலறைக்குள் நடந்தேன்.

கையில் டிரேயுடன் ஹாலுக்கு வந்த என் பார்வையில் 'அவுன்ஸ்' மாமா தான் முதலில் பட்டார். என் கண்ணில் இருந்த கோபத்தைப் புரிந்து கொண்டவர், மென்று கொண்டிருந்த வெற்றிலையை மேலும் வேகமாக மென்றுகொண்டே அசட்டுக்கோணல் சிரிப்புடன் மறுபுறம் திரும்பிக்கொண்டார்.

பத்துகோடி லாட்டரியில் அடித்த பிரகாச முகத்த்துடன் அப்பா வந்திருந்தவர்களோடு பேசிக்கொண்டிருந்தார். நடுத்தரவயதுப் பெண்கள் இருவர். ஐம்பதைக் கடந்திருக்கக்கூடிய ஆண் ஒருவரும், 'மாப்பிள்ளை', என்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒருவரும். எல்லோரும் என்னையே பார்த்துக்கொண்டு விரித்திருந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்திருந்தனர்.

சிலைமாதிரி நின்றிருந்தேன். ஏதும் பேசிக் காரியத்தைக் கெடுத்துவிடுவேனோ என்று பயந்தாற்போல், அம்மாவே என்னிடமிருந்து டிரேயை வாங்கி எல்லோருக்கும் காபியைக் கொடுத்தாள். மீண்டும் அம்மாவை முறைத்தேன். வேறு வழியில்லாமல் மற்றவர்கள் பக்கம் திரும்பி, சிரிக்காமல், கை கூப்பிப் பொதுவாய் வணங்கிவிட்டு நின்ற என்னை அப்பாதான் உட்காரச்சொன்னார். நானும் அப்படியே ஜமக்காளத்தின் விளிம்பில் உட்கார்ந்துகொண்டேன்.

அட ராமா, என்னையும் அவனையும் தவிர எல்லோர் முகத்திலும் தான் எத்தனை மகிழ்ச்சி. ஆனால், ஏன்? கல்யாணத்திலேயே விருப்பமில்லையா, இந்தக் கல்யாணம்தான் வேண்டாமா? பேசவேண்டிய ஆள் இதோ எதிரில். சரி, எப்படியும் என்னிடம் பேச முயற்சிப்பான். அப்போது உள்ளது உள்ளபடியே சொல்லிவிடலாம் என்ற நம்பிக்கைக் கீற்று என் மனதில் தீற்றியது.

கல்யாணம் செய்துகொள்ளவேண்டிய இருவரைத் தவிர மற்றவர் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி என்றால், அதெல்லாம் ஒரு கல்யாணமா என்ன?! இப்படிப் பெரியவர்கள் தங்களின் சௌகரியம் மற்றும் கனவுகள் பூர்த்தியாக சிறியவர்களைப் பயன்படுத்துக் கொள்வதற்கும், குழந்தைத் தொழிலாளர்களை பிழிந்து வேலை வாங்கும் முதலாளிகளுக்கும் ஏதும் வித்தியாசமிருக்கிறதாகத் தெரியவில்லை.

மனதுக்குள் கனன்றுகொண்டிருந்த எரிச்சலும் கோபமும் முகத்தில் பிரதிபலிக்காமல் இருக்க மிகவும் பிரயத்தனப் பட வேண்டியிருந்தது. என்ன முயன்றும்  என் முகம் இயல்பாய் இல்லையென்று என்னால் உணர முடிந்தது. குனிந்துகொண்டே எப்படியோசமாளித்தேன்.

அவன் குனிந்து தன் அப்பாவின் காதில் ஏதோ சொன்னான். அவர் முறைத்துக்கொண்டே, பேசாமலிரு என்று செய்கையாலேயே அவனை அடக்கினார். என்னைப்போலவே அவனுக்கும் விருப்பமில்லையென்றால், சொல்வதற்கென்ன? பார்க்க வாட்டசாட்டமாய் வளர்ந்து நிற்கிறான். ஒரு ஆண் மகனான இவனுக்கே தன் கருத்தைச் சொல்ல முடியாவிட்டால், நானெல்லாம் எம்மாத்திரம்?

ஆனால் அதற்காக கழுத்தை நீட்டிவிடவா முடியும்? நினைத்தாலே என் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி படபடவென்று பறந்தது.

"போட்டோவுல இருந்ததவிட நேர்ல இன்னும் லக்ஷணமாயிருக்கா, இல்ல மன்னி?", என்று நற்சான்றிதழ் வழங்கினார், நங்கநல்லூரில் இருந்த அவனின் அத்தை. அவர்கள் வீட்டில் தான் தங்கியிருந்தார்களாம். இவர்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் என்ன என்று பரபரத்தது மனம்.

அவனின் ஜாடையிலிருந்த அவனுடைய அம்மா தலையை ஆட்டிக்கொண்டே கன்ணிலும் மூக்கிலும் வைரங்கள் நீலத்தைக் கொட்ட," பாடுவியோ? ", என்று என்னைக் கேட்டதும், என்னை பதில் சொல்லவிடாமல், அவுன்ஸ் மாமா முந்திக்கொண்டு," எங்க உமா 'ம்யூஸிக் ஹையர்' பாஸ் பண்ணியிருக்கா. வீணைகூடா ஜோரா வாசிப்பா", சொல்லிவிட்டார். அந்தக்கணம் நான் ஆசையாய் கற்றுக்கொண்ட சங்கீதத்தின் மேல் அர்த்தமேயில்லாமல் வெறுப்பு மண்டியது எனக்கு.

"எங்க வெங்கட்டும் கிடார் வாசிப்பான். வெஸ்டர்ன் க்ளாஸிகல். சிங்கப்பூல இண்டியன் ·பைன் ஆர்ட்ஸ்ல கொஞ்ச நாள் மிருதங்கம் கூட கத்துண்டான்", என்று பிள்ளையைப் பற்றியளந்தாள் தன் பங்கிற்கு.

ஒரே மாசத்திற்குள் எளிமையாக கல்யாணத்தை முடித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பத் திட்டமாம். வளவளவென்று எல்லோரும் பேசிக்கொண்டிருந்தார்கள். வரதட்சிணை அது இது என்று ஒன்றுமே வேண்டாம் என்ற அவர்களின் பேச்சு அவர்களிடம் இருந்த வசதியினாலா இல்லை, பெருந்தன்மையினாலா இல்லை, வேறு ஏதும் காரணமா என்று யோசித்துக்கொண்டிருந்தேன். பாடு என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்துகொண்டே மெதுவாய் எழுந்து நழுவி அறைக்குப் போய்விடலாம் என்று எழுந்தேன். அவனின் அத்தை," ஒரு பாட்டுப் பாடேன்", என்று கேட்டதும் மாட்டிக்கொண்டோமே என்றாகிவிட்டது. வேறு வழி? பாடினேன்.

"நானொரு விளையாட்டு பொம்மையா,..", என்ற கீர்த்தனையைப் பாடினேன். பல்லவியைத் தொடும் போதெல்லாம் அம்மாவையும் அப்பாவையும் பார்த்துக்கொண்டேன். இருவருக்கும் புரிந்தமாதிரியே இல்லை. அம்மா திருதிருவென்று விழித்தாள். அம்மாவுடைய கண்கள் அகலமாக அழகாக இருந்ததை ஆயிரத்தியோராவது தடவையாக ரசித்தேன். அம்மாவுக்கு ஏனோ என்னோட கண்களைத் தான் பிடிக்கும். சொல்லிச்சொல்லி ரசிப்பாள்.

பாடி முடித்ததுமே, "ப்ளீஸ் எக்ஸ்க்யூஸ் மீ," என்று பொதுவாய்ச் சொல்லிவிட்டு அறைக்குள் போய் கட்டிலில் மல்லாக்கப் படுத்துக் கொண்டேன். ஓடிக்கொண்டிருந்த ·பேனைப்பார்த்துக் கொண்டே யோசித்தேன். அழுகையாக வந்தது. வசந்த்தை நினைத்துக் கொண்டே அழுதேன். அம்மாவையும் அப்பாவையும் நாலு கேள்விகள் நறுக்கென்று கேட்க வேண்டும் என்று கோபமும் வந்தது.

ஸ்வீட், காரம், காபி என்று எல்லாம் முடிந்து ஒரு வழியாய் வீடு பழைய நிலைக்குத் திரும்பியது போலிருந்தது. மெதுவாய் அம்மாவும் அப்பாவும் அறைக்குள் நுழைவதைப்பார்த்ததுமே, " அப்பா, நீங்க செய்யறது உங்களுக்கே நியாயமா இருக்கா? அன்னிக்கி அவமானம் அதுஇதுன்னேள். நானும் சரி, வசந்த்தை மீட் பண்ணமாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணினேன். ஆனா, இப்ப எங்கிட்டகூட சொல்லாம எனக்கு கல்யாண ஏற்பாடு. என் சம்மதமில்லாம என் கல்யாணமா?", என்று சத்தமாகக் கேட்ட என்னை அடிக்கக் கையோங்கினார் அப்பா. ஓங்கிய கை இறங்குமுன் சற்று நிதானத்துக்கு வந்தார்.

"கல்யாணம் பண்ணாமப் பின்ன? ஒன்ன ஆத்துல ஒக்காரவச்சுண்டு ஊறுகா போடவா? இல்ல, என்னதான் சொல்ற நீ? எப்படியும் ஒரு கல்யாணம் பண்ணிண்டுதானே ஆகணும்? ஔவையாரா இப்படியே டக்குன்னு கெழவியாயிடறதுக்கு? எங்க காலத்துக்கப்புறமா ஒனக்கு ஒரு ஆதரவும் பாதுகாப்பும் வேண்டாமா?"

எனக்கிருந்த ஆத்திரத்துக்கு பிள்ளையார் மட்டும் கொஞ்சம் ஒத்துழைத்தால், இன்னொரு ஔவையாராகவும் நான் தயாராய்த்தானிருந்தேன்.

"வேண்டாம். வேண்டாம்பா. என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும். என்னைப்பத்தின கவல ஒங்க ரெண்டு பேருக்கும் இனிமே வேண்டாம்", என்று நான் சொன்னதும் அம்மாவைப் பார்த்து," என்னடி பேத்தறது இது, தத்துப்பித்துன்னு. இப்படியே இருந்துடுமாமே. இருக்கறது ஒண்ணே ஒண்ணுன்னு 'ஓவர' எடம் கொடுத்துக் குட்டிச் செவுரா ஆக்கி வச்சிருக்க ஒம்பொண்ண", மெதுவாக அபஸ்வரமாய் ஆரோகணத்தில் ஏறிக்கொண்டே போய் உச்சத்தைத் தொட்டது. "ஆமா, இப்ப மட்டும் 'ஒம்பொண்ணு'. நான் தான் கெடுத்தேனே, நீங்க ஏன் வந்து தடுக்கல்ல?", என்று அம்மா விவாதத்த்தின் திசையைத் திருப்பப் பார்த்தாள். அப்பா பதில் பேசாததால் அம்மாவின் முயற்சி தொற்றது.

" என்னடி பேசற. தெரிஞ்சுதான் பேசறியா இல்ல புத்திகித்தி பிசகிடுத்தா? ம்?கல்யாணமே பண்ணிக்காம இருக்கறதாவது? இங்க பாரு உமா. உனக்கு நல்லதுதானே செய்வோம் நாங்க", என்று என் முகவாயைப் பிடித்துக் குழந்தையைக் கொஞ்சுவதுபோல, குரலில் கோபத்தைக் குழைத்து என் முகத்தைப் பார்த்துக்கேட்டாள் அம்மா.

"எது நல்லது? சொல்லு,. எதும்மா நல்லது? ஒரு நல்ல மனுஷன ஊரவிட்டு விரட்டினதா? இல்ல, கம்பிய வளைக்காறாப்ல ஒங்க ரெண்டு பேர் மனசுபோல என்னை வளைக்கறதா? அதுக்கு உங்களுக்குத் தேவை ஒரு பொம்மை", என்று சொன்னேன் முறைத்துக்கொண்டே, கொடகொடவென்று என் கண்களிலிருந்து கொட்டிய கண்ணீரைப் பொருட்படுத்தாமல்.

"ஓஹோ,. அந்த கிருஸ்தவனப் பண்ணிண்டா பண்ணிக்கறேன். இல்லன்னா இப்பிடியே இருக்கேன்றியா?", என்று பின்னால் நின்று கொண்டிருந்த அப்பா முன்னால் வந்து கத்தினார். கோபத்தில் அப்பாவின் முகசேஷ்டைகள் கிட்டத்தட்ட நான் கோபப்படும் போது என் முகம் இருப்பதைப் போலவே இருந்தது. அப்பா மூக்கு விடைத்துக்கொண்டது கோபத்தில். அதிகஜாடையும் நிறமும் அம்மாவைப்போல தான் நான். ஆனாலும் மூக்கும் கண்ணும் எனக்கு அப்பாவை மாதிரி.

"அப்பா, அவரோட ரிலிஜனத் தவிர வேற எதாவது ஒங்க மனசுக்குப் பிடிக்கல்லன்னு சொல்லுங்கோ, பாக்கலாம். சொல்ல ஒண்ணுமிருக்காது. ஆனா, அந்த ஒண்ணையே பிடிச்சுத் தொங்கிண்டிருங்கோ அண்ணாவும் தம்பியும்", என்று குரலை உயர்த்திக்கத்தினேன்.

" என்ன கத்து கத்தறா பாருடி ஒம்பொண்ணு. முடியாது, நான் உயிரோட இருக்கற வரைக்கும் நீ நெனைக்கறது மட்டும் முடியாது. நடக்க விடமாட்டேன்", என் பெரியப்பாவைப் போலவே பேசினார் அப்பா.

"சரி, வேண்டாம். ஆனா, கல்யாணம் அது இதுன்னு மட்டும் என்னத் தொந்தரவு பண்ணாதீங்கோ."

"அதெப்படி விட?", என்று அம்மா இடையில் முகுந்து கேட்டதும், எரிச்சல் தாங்காமல், " அம்மா இங்க பாரும்மா. நீங்க ரெண்டு பேரும் பெத்துட்டேள்ங்கறதுக்காக எல்லாத்துக்கும் என்னைக் 'கண்ட்ரோல்' பண்ணிண்டிருக்க உங்களுக்கு 'ரைட்ஸ்' கெடையாது. நா 'மேஜர்'. இந்த ஒலகத்துக்கு நான் வர நீங்க ரெண்டு பேரும் உதவியிருக்கேள், ஒரு கருவியா. அவ்ளோதான். சும்மா என்னை அடிமையாட்டம் 'ட்ரீட்' பண்றத நிறுத்துங்கோ மொதல்ல", என்று சொல்லிக்கொண்டே விருட்டென்று அறையை விட்டு ஹாலுக்கு வந்து உட்கார்ந்து கொண்டேன். பார்த்துக் கொண்டே நின்றாள் அம்மா.

இருவரும் உள்ளே ஏதோ கோபமாயும், ஒருவருக்கொருவர் சமாதானமாயும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டார்கள்.

கூடத்திலிருந்த நாற்காலியில் உட்கார்ந்திருந்தேன் யோசித்தபடியே சில நிமிடங்களுக்கு. பேசாமல் பெங்களூருக்கு போன் செய்து வசந்த்தை வரச் சொல்லலாமா என்று கூடத் தோன்றியது. இவர்களிடமிருந்து தப்புவதற்கு வேறு வழியே புலப்படவில்லை. பெரியவர்களின் பேச்சுக்கு மரியாதை கொடுத்து ஊரைவிட்டே போனவர், எனக்குக் கட்டாயக் கல்யாணம் நடக்கும் என்று எதிர்பார்த்திருப்பாரா? நானேகூட எதிர்பார்க்கவில்லையே. அப்பாவையும் அம்மாவையும் எவ்வளவு நம்பினேன்.

அறையிலிருந்து அப்பா வந்தார். கைவைக்கும் கட்டையின் மீது இருகைகளையும் வைத்துக்கொண்டே, வில்லன் பிணைக் கைதியை மிரட்டுவதைப்போல, என் முகத்துக்கு நேராகத் தன் முகத்தை வைத்துக்கொண்டு, "உமா, இந்தக் கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கல்லேன்னா, நாங்க ரெண்டு பேரும் ஆத்துலயோ கொளத்துலயோ விழுந்து சாவோம். இல்லேன்னா இருக்கவேயிருக்கு, தூக்கமாத்தரை", என்று அப்பா சொல்லச்சொல்ல அம்மா பூம்பூம் மாடுமாதிரி தலையைத் தலையை ஆட்டினாள். தொடர்ந்து ஏதேதோ கத்தினார் அப்பா.

பூனைக்குட்டி ஒன்றைக்கூட முழுவதுமாய் மூள்கடிக்கக்கூடிய நீர்த்தேக்கமற்ற சென்னை வறட்சியில் ஆறாவது குளமாவது?! வருத்தத்திற்கிடையேயும் எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. ஒருவேளை, கடலைத்தான் சொல்கிறாரோ? சரி, அதே கடலோ தூக்கமாத்திரையோ தன் மகளுக்கும் கைகொடுக்கும் என்ற அடிப்படையையும் மறந்து காச்மூச்சென்று கத்தி ஓய்ந்த அப்பாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு புறம் பெற்றவர்களுடன் அப்படியெல்லாம் பேசிப் பழகியிருக்காததால், அப்படிப் பேச வேண்டி வந்ததே என்ற வருத்தத்தில் அழுகையாக வந்தது. மறுபுறம், கோபமும் வந்தது.

உப்புச்சப்பில்லாத விஷயங்களுக்கெல்லாம் சண்டை போட்டுக்கொண்டு இரண்டு எதிர்துருவங்களாக நிற்கும் அம்மாவும் அப்பாவும் திடீரென்று ஒற்றுமையாக ஏகமனதாக அப்படிச்சொன்னதும் அவர்களின் ஒற்றுமையை நினைத்துக் களிப்பதா, இல்லை அவர்களின் அச்சுறுத்தலை நினைத்து அழுவதா என்றே எனக்குத்தெரியவில்லை.

ஒன்றும் சாப்பிடாமல் தூங்கிப்போனேன். வெறும் வயிற்றில் படுத்ததால், ஒரே கனவுகள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிண்டம் போடுவதைப் போலவும், ஊரிலிருந்து வந்திருந்த பெரியப்பா காட்டுக்கத்தல் கத்திவிட்டு, காரியங்கள் எல்லாம் முடிந்ததும் மாயவரத்துக்குக் கூட்டிக்கொண்டுபோய், அங்கே குடுமியுடன் இருந்த ஒரு வைதிக பிராமணனுக்கு என்னை ஒப்பேற்றிவிடவென்று ஒரு சம்பந்தம் பேசுவதைப்போல அப்படியே நிஜத்தில் நடப்பதைப்போல ஏதேதோ காட்சிகள் கனவுகளாய் விடியற்காலையில்.

திடுக்கென்று விழித்துக்கொண்டவள் முதலில் போய் அடுப்படியில் மூக்கைச் சிந்திக் கொண்டே காபி ·பில்டரில் வெந்நீர் ஊற்றிக்கொண்டிருந்த அம்மாவையும், ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பாவையும் பார்த்தபிறகுதான் நிம்மதியே வந்தது. அம்மா எனக்காக அழுகிறாளா, தனக்காக அழுகிறாளா, இல்லை ஜலதோஷமா என்று ஒன்றுமே புரியவில்லை. அருகில் போய்க் கேட்டவும் ஏனோ கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.

Copyright © 2005 Tamiloviam.com - Authors