தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 8]
- ஜெயந்தி சங்கர்

எக்கச்சக்கமான புதிர்களைத் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் வாழ்க்கையை நாம் புரிந்துகொள்ள முயற்சிப்பதற்குள், வாழ்க்கைதான் மளமளவென்று எவ்வளவுதூரம் நகர்ந்துவிடுகிறது. வாழ்க்கையின் வேகத்தை நினைக்க நினைக்க எப்போதும் எனக்கு ஒரே ஆச்சரியமாகவேயிருக்கும்.

கல்யாணத்தை நிறுத்திவிடும் தீவிர எண்ணத்துடன் இந்தியாவுக்குக் கிளம்பியவன் திருமணத்தையே முடித்துக்கொண்டு சிங்கப்பூர் திரும்பியதை நினைத்தால் என்னால் நம்பவே முடியவில்லை. ஆறு மாதமும் முடியப்போகிறது. இன்று நினைத்தால் எத்தனை பிரமிப்பாக இருக்கிறது?

திட்டமிட்டபடியே உமாவீட்டாருக்கு மொட்டைக் கடிதமும் எழுதினேன். அது அவர்களுக்குக் கிடைத்ததா என்றே தெரியாமல் ஒரு வாரம் போய் விட்டது. அவர்கள் பக்கத்திலிருந்து எந்த விதமான எதிர்வினையும் இல்லையென்றால், என்னவென்று புரிந்துகொள்ள? ஒரு வேளை 'கடிதம்' கிடைக்கவேயில்லையோ என்று மீண்டும்," மாப்பிள்ளையாக்கிக்கொள்ள நினைக்கிறீர்களே அவனுக்கு மூளையில் கட்டி. உங்களை ஏமாற்ற நினைக்கும் அவர்களிடமா உங்கள் மகளை ஒப்படைக்கப்போகிறீர்கள்?", என்று சற்று காட்டமாகவே எழுதிப்போட்டேன். அதற்கும் ஒரு பலனையும் காணோம். சென்னை வெயிலில் என் எரிச்சல் மேலும் அதிகமானது மட்டும்தான் நடந்தது.

உமாவைப்பற்றி என் அத்தை முகவரிக்கு ஒன்று எழுதிப்போட்டால் கல்யாணம் நின்று விடுமே என்ற யோசனை தோன்றியது. அப்படிச்செய்தால் கல்யாணத்தை நிறுத்த வேண்டுமானால் முடியலாம். ஆனால், ஒரு பெண்ணைப்பற்றி தாறுமாறாய் எழுதவதா? ஹ¥ஹ¤ம் துளிக்கூடப் பிடிக்கவில்லை. மேலும், ஒரு பெண் சரிவரவில்லையென்றால், இன்னொன்று என்று அம்மாவும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டேதான் இருப்பாள் என்று நினைத்ததும், அந்த யோசனையையும் கைவிட்டேன்.

நிச்சயத்திற்கு நாள் குறித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்த அம்மாவுக்கும் அத்தைக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சி என்னை எரிச்சல் படுத்தியது. ஒரே சிரிப்பு, கும்மாளம், ஷாப்பிங்க். ஆமாம், யாருக்குக் கல்யாணம்? கைவசமிருந்த லீவெல்லாம் போய்க்கொண்டிருந்தது. எந்தக்கவலையுமில்லாமல் கொண்டாடிக்கொண்டிருந்தைப் பார்க்கப் பார்க்க என்னுள் கையாலாகத கோபம் தான் வெடித்தது.

ஒரே வாரத்தில் எளிமையாக கோவிலில் கல்யாணம், பிறகு சிறு விருந்து, வரவேற்பு என்று அப்பாவேறு தன் பங்கிற்கு பிள்ளையைப் பெற்றவர் என்ற தோரணையுடன், உமாவுடைய அப்பா மற்றும் பெரியப்பாவுடன் சேர்ந்து தடபுடலாய் ஏகத்திற்கு திட்டங்களைத் தீட்டினார்.

உமாவுடன் பேசக்கூடிய சந்தர்ப்பத்திற்குத்தான் நான் மிகவும் காத்திருந்தேன். ஆனால், அப்படியொரு சந்தர்ப்பம் தான் அமையவேயில்லை. பெண்பார்க்கப் போகும்போது, அவளோடு பேசவேண்டும் என்று கேட்க எவ்வளவோ முயற்சித்தேன். ஒவ்வொரு முறையும் அப்பா என் காதருகே குனிந்து, ஒரே போடாய்ப்போட்டு என்னைத் தடுத்துவிட்டார்.

நிச்சயதார்த்ததின் போது உமாவிடம் பொதுவாய் ஓரிரு வார்த்தைகள் பேசினேன். அதுவும் அப்பாவின் மேற்பார்வையில். என்னால் ஏதும் பிரச்சனை வரக்கூடும் என்று அப்பாவால் உணர முடிந்தது ஆச்சரியம்தான். நான் போகுமிடமெல்லாம் கூடவே ஒட்டிக்கொண்டிருந்தார். அதையும் தாண்டி அப்பாவிடமே உமாவிடம் பேசவேண்டும் என்று கேட்டுப்பார்த்தேன். அது அப்பாவை இன்னும் அதிக விழிப்புணர்வுடன் நடக்கத்தூண்டியதேயொழிய நான் நினைத்தது மட்டும் நடக்கவில்லை. அம்மாவிடம் பேசுவதற்கு முயசிப்பதற்குள் ஆயிரம் குறுக்கீடுகள்.

நிச்சயதார்த்ததிற்கு முதல்நாள் தான், உமாவுடைய அப்பா போன் செய்து," நமஸ்காரம். எல்லாரும் சௌக்கியமா?", என்று ஆரம்பித்து, ஏதேதோ பேசிவிட்டு, "மாமா, மொட்டக்கடுதாசி ஏதும் வந்தா பொருட்படுத்தாதீங்கோன்னு சொல்லத்தான் போன் பண்ணினேன்", என்றார்.

அப்பா," உங்களுக்கு ஏதும்?", என்று கீழ்ஸ்தாயியில் ஆரம்பித்து, " இல்லையா, ஓ, அப்ப சரி,..ம்,.. ஆமாமா. இந்தக்காலத்துல ஏதேதோ பண்ணி கல்யாணத்த நிறுத்தி வேடிக்கை பாக்கறவா பெருகிட்டா",உரக்கப் பேசினார். தொடர்ந்து,"அதையெல்லாம் நம்பிண்டிருந்தா முடியுமா,..ம்,. அதேதான், யூ டோண்ட் வொர்ரி. உமாதான் எங்காத்து நாட்டுப்பொண்ணு. எங்களுக்கு அவளையும் உங்க குடும்பத்தையும் ரொம்பப்பிடிச்சுப்போச்சு. அதான், சீக்கிரமே முகூர்த்தம்னு தீர்மானிச்சோம். ம்,.அதுசரி, உமாவோட 'விஸா' அடுத்த வாரம் வந்துடுமோல்யோ? ,...அவ்ளோதான்.,அப்பறம் என்ன கவலை? சரி, ஆட்டும் சொல்றேன், வச்சுடட்டா", என்று வெகு உற்சாகமாக போனில் பிரஸ்தாபிச்சார்.

அப்பா சந்தேகமாய் என் பக்கம் ஒரு பார்வையை வீசினாற்போலிருந்தது எனக்கு. உமாவின் அப்பா தனக்கு ஏதும் மொட்டைக்கடிதம் வரவில்லை என்று சொன்னதன் காரணம் புரியாமல் திருடனுக்குத் தேள் கொட்டிய நிலையில் தவித்தேன்.

நிச்சயத்தன்று உமா முகத்தில் மகிழ்ச்சியே இல்லையே என்று யோசித்தேன். ஏன்னென்று தெரிந்துகொள்ள யாரும் சிநேகிதிகள் கூட இல்லை அவளுக்கு. ரொம்ப ரிஸர்வ்டோ என்று தோன்றியது. கல்யாணம் முடிந்தபிறகு தானே தெரிந்தது, அவளின் நண்பர்களை அழைக்க அவளுடைய அம்மாவும் அப்பாவும் தடுத்துவிட்டிருந்தார்கள் என்று. அவளுக்கும் அந்தக் கல்யாணத்தில் இஷ்டமில்லை என்றும் தானே தெரிந்துகொண்டேன்.

என்னுடைய அப்பா என்னை மேற்பார்வை பார்த்தமாதிரி, அவளுடைய அப்பா அவளை மேற்பார்வை பார்த்துக்கொண்டேயிருந்தார். நிச்சயதார்த்தம் சின்ன நிகழ்ச்சி என்றாலும், எண்ணி பத்துபேர் என்பது கொஞ்சம் அவசர ஏற்பாடு என்பதாலோ என்று தோன்றியது. ஆனால், இருபக்கத்தாருமே திட்டமிட்டுதான் அவ்வாறு செய்திருந்தனர் என்று பிறகுதான் புரிந்தது.

அன்று இரவு கடைசி அஸ்திரமாக, மொட்டை மாடியில் அம்மாவிடம் பேசினேன். "அம்மா இப்பவும் லேட்டாகல்ல. நிச்சயம் தானே ஆயிருக்கு. ப்ளீஸ் புரிஞ்சுக்கோம்மா,. உங்க ரெண்டு பேர் சுயநலத்துக்காக பாவம், அந்த உமாவ,..", நான் முடிக்குமுன், "இங்க பாருடா. இந்தக் கல்யாணம் நடந்தேயாகணும். ஒனக்கு எந்தப்பொண்ணோட ஜாதகமும் பொருந்தியே வல்ல. அம்மாடி, எவ்வளவு ஜாதகம் பார்த்தாச்சு. ஹ¥ஹ¤ம், இவளோடதுதானே , பொருந்தினதோட குடும்பமும் ஒத்து வந்திருக்கு. பொண்ணும் பார்க்க லக்ஷணமா இருக்கா. நானே இப்பதான் சந்தோஷமா இருக்கேன், பகவான் நல்ல சம்பந்தமா கொடுத்திருக்கானு, நீ வேற மறுபடியும் கிளப்பாத," என்று வெட்டிப்பேசினாள்.
"அம்மா ப்ளீஸ்மா, இப்பக்கூட கெட்டுப்போகல்ல, நிறுத்திடும்மா."
" உமா வரவேளை நீ ரொம்ப நன்னா இருக்கப்போற பாரேன். "
"அம்மா, நிறுத்திடுநிறுத்திடுன்னு கெஞ்சறேன், நீ என்ன காதுலயே போட்டுக்க மாட்டேங்கற," என்று குரலை உயர்த்தினேன்.
"இங்க பாருடா. இந்தக் கல்யாணம் நடக்கல்லேன்னா நா உயிரோட இருக்கமாட்டேன். திரும்பிப்போறபோது, நாம நாலு பேராப் போகப்போறோமா, இல்ல உங்கப்பாவும் நீயுமா திரும்பிப்போவேளான்றது ஒங்கையிலதான் இருக்கு."

இந்தப்பிடிவாதம் பிடிப்பவளிடம் என்னவென்று பேச ? ! எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எங்கேயாவது ஓடிப்போய் விட்டால் என்ன? நினைத்த மாத்திரத்திலேயே, அப்படிச் செய்தால் என்ன என்று தோன்றியது.

நிறைய நேரம் யோசித்தேன். ஆனால், அதனால் எத்தனை பேருக்கு என்னென்ன பிரச்சனைகள் எழும், அம்மா எப்படித் தவிப்பாள் என்று சிந்தனை விரிந்ததேயொழிய எப்படி, எங்கு ஓடிப்போவோம் என்று தோன்றவேயில்லை. அப்பாவையும் அம்மாவையும் விட்டுவிட்டு ஓடிவிட என்னால் என்றுமே முடியாது என்று புரிந்துகொண்டேன். இயலாமையில் கோபம் தான் கட்டுக்கடங்காமல் வந்தது.

உமாவோடு பேசமுடியுமா என்று கேட்க, அடுத்தநாளே ஒரு முறை அவர்கள் வீட்டிற்குப் போன் செய்தேன். அவளுடைய பெரியப்பாதான் எடுத்தார். "மாப்ளையா, சௌக்கியமா?", என்று ஆரம்பித்தவர்," உமா அவம்மாவோட ஜவுளிகடைக்கிப் போயிருக்கா. வந்தாவுட்டு, சொல்றேன்", என்றார். ஆனால், அவர்களிடமிருந்து போனே வரவில்லை. கொஞ்சம் பழமைவாதிகளாகத் தெரிந்தார்கள். அதனால் தான் என்னோடு உமா பேசுவதை அவர்கள் விரும்பவில்லையோ என்னவோ என்று நினைத்துக்கொண்டேன்.

நிச்சயத்துக்கு வந்திருந்த அவுன்ஸ் மாமாவும் ஊரில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவரோடும் பேச முடியாமல் ஒரே தவியாய்த் தவித்தேன். முகூர்த்தநாள் நெருங்க நெருங்க அதுவரை இருந்த பசியும் தூக்கமும் இல்லாதுபோனது.

ஜானவாசம், நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்தநாள் காசியாத்திரை, கனூஞ்சல், மாலைமாற்றுதல், கன்னிகாதானம் என்று காதைப்பிளக்கும் மேளச்சத்ததிலும், பட்டு, பூ, சந்தனம் என்று கலவை மணத்தோடு சளசளவென்ற பெண்கள் பேச்சுக்கிடையில் ஏதோ செலுத்தப்பட்ட பொம்மையைப்போலச் செயல்பட்டிருக்கிறேன். கல்யாணத்தன்று ஐந்தாறு முகங்களைத் தவிர வேறு தெரிந்த முகங்களே இல்லை. திருமாங்கல்யத்தை நானா கட்டினேன் உமா கழுத்தில் என்று பிறகு நினைக்கும்போதெல்லாம் வெற்றுத் தாளைப்போல என் நினைவு சூன்யமாய்த்தான் இருந்தது.

சிங்கப்பூருக்கு வருமுன்பே உமா தனக்கிருந்த இக்கட்டைப்பற்றியும், குடும்பத்தினர் செய்த அச்சுறுத்தலையும் பற்றி சொல்லி விட்டாள். அதையெல்லாம் நான் அம்மா அப்பாவிடம் அப்போதைக்கு மறைத்துவிட்டேன். என் உடல்நிலைகுறித்துச் சொல்லி, குணமாகி விட்டது என்று மட்டும் உமாவிடம் சொன்னேன். அதற்கு மேல் சொல்லி அவளை பயமுறுத்த வேண்டாமென்று தோன்றியது. கல்யாணம் நடந்த நிர்பந்தமே எங்களுக்கிடையே பொருத்தமாக அமைந்திருந்தது என்றெல்லாம் அப்போது அபத்தமாய்த் தோன்றியது எனக்கு. நடக்கக்கூடாத திருமணம் நடந்துவிட்டது என்று நினைப்பதை அடுத்து வந்தநாட்களில் நான் மெதுவாக நிறுத்திவிட்டிருந்தேன்.

சிங்கப்பூரில் ரிஸெப்ஷன் என்ற பெயரில் அம்மா மீண்டும் ஒரு ஆடம்பரக் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தாள். யார்யாரோ வந்தார்கள். அதில் பாதிபேரை நான் அதற்குமுன் பார்த்ததுகூட இல்லை. அப்பாவுக்குத் தெரிந்தவர்கள், அம்மாவுக்குத் தெரிந்தவர்கள் என்று நிறையபேர். சில பேருடன் பேசும்போது, 'கல்யாணத்தை நடத்திவிட்டேன் பார்', என்ற தற்பெருமை அம்மாவின் முகத்தில் அப்பிக்கிடந்தது. ஆபரேஷன் முடிந்தபிறகு, எனக்குக் கல்யாணம் ஆவது கஷ்டம் என்று சிலர் பேசிக்கொண்டதாக அம்மா கற்பனைதான் செய்திருந்தாளோ, இல்லை வேறு யாரும் சொல்லித் தான் தெரிந்துகொண்டாளோ தெரியாது. ஆனால், அவர்கள் எல்லோரையும் கூப்பிட்டிருந்தாள் தன் பெருமையைப் பறைசாற்ற.

என் நண்பர்களில் சிலரும் அதிகம் நெருங்கிய நண்பர்கள் என்ற வகையில் ரகுவும் சௌம்யாவும் தான் வந்திருந்தனர். அவர்களும் இல்லாதிருந்தால் ரிஸெப்ஷனில் எனக்கே அசுவாரஸியமாகிவிட்டிருக்கும்.
 
உள்ளூரில் உமாவுக்கு ஒவ்வொரு இடமாகக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினேன். அவளோடு போகும் போது எல்லாஇடமும் புதிதாயும் அழகாயும் தோன்றியது. அவள் முகத்தில் படர்ந்திருந்த கவலை ரேகைகள் மெதுவாக மறையத் தொடங்கியிருந்தன. அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. நிம்மதியையும்தான். எனக்கு அவளைப் பிடித்தது போலவே அவளுக்கும் என்னைப் பிடித்தது என்று புரிந்துகொண்டேன்

வந்த சிலநாட்களிலேயே உமா வேலை ஒன்றைத் தேடிக்கொள்ள ஆசைப்பட்டாள். நானும் சம்மதித்திருந்தேன். ஆனால், அம்மாதான், "இந்தாத்துல வேண காசு இருக்கு உமா இங்க. எங்களுக்கு வேண்டியது ஒரு பேரன். பெத்துக்குடு. உனக்கு வேண்டியத வெங்கட்டே வாங்க்¢க் கொடுப்பான்", என்று மறைமுகமாய்த் தன் மறுப்பைச் சொல்லிவிட்டாள்.

வேலை என்பது பணம் பற்றிய விஷயம் மட்டுமில்லை, அது தன்னம்பிக்கை என்று என்னிடம் தனிமையில் சொன்னாள் உமா. எனக்கும் அது மிகச்சரியென்றே பட்டது. மீண்டும் சீக்கிரமே அம்மாவிடம் சொல்லி சம்மதம் வாங்குகிறேன் என்று வாக்குக் கொடுத்தேன். ஆனால், அதற்குச் சந்தர்ப்பமே அமையாதுபோகும் என்று நான் அந்தக் கணம் நினைக்கவேயில்லை.

உமா மிகவும் நல்ல பெண். அம்மாவிடமும் அப்பாவிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துக்கொண்டாள். எனக்கு வேண்டியதையெல்லாம் அக்கறையோடு கவனித்துக்கொண்டாள். புது ஊரில் வாழ்வதற்குச் சீக்கிரமே பழகிக்கொண்டாள். அவரவர் கடந்த காலத்தை மறந்து மகிழ்ச்சியில் திளைத்தோம். திருமண வாழ்க்கை இத்தனை சுவையுடையாதா என்று ஆச்சரியமாக இருந்தது எனக்கு. மாதங்கள் ஓடியதே தெரியவில்லை.

திருமணமாகி நாங்களிருவரும் தேனிலவுக்கு எங்கேயும் போகவேயில்லையே என்று போன வாரம் தான் அப்பா நினைவூட்டினார். டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் ரம்யமாகயிருக்குமே என்று நான் கொடுத்த ஆலோசனையை உமாவும் ஆமோதிக்கவே, உடனே டிக்கெட், விஸா எல்லாவற்றிற்கும் மளமளவென்று ஏற்பாடு செய்தேன். வேண்டியவற்றையெல்லாம் வாங்க கடைகடையாகச் சுற்றினோம். உமாவின் முகத்தில் ஏதோ ஒரு பளபளப்பைப் பார்த்தேன். கேட்டபோது, "ஒண்ணுமில்லையே, எப்பவும் போலத்தானே இருக்கேன்", என்று சொல்லிச்சிரித்தாள்.

பெட்டிகளில் அழகாக உடைகளையும் பொருட்களையும் அடுக்கிவைத்தாள் உமா. கிளம்புவதற்கு இன்னும் இரண்டே நாட்கள் இருந்தன. தேனிலவிற்குப்போகப்போகும் குதூகலம் என் முகத்தில் தெரிந்தது போல. ஆபீஸில் எல்லோரும் கேலிசெய்தார்கள்.

மதியம் ஆபீஸில் லேசாகத் தலை வலித்தது. கொஞ்சநேரம் தான். ஆனால், பழைய தலைவலியைப்போலவே இருந்ததால், சட்டென்று என்னுள் ஒரு வித பதட்டம் வந்து உட்கார்ந்துகொண்டது. அந்த வலி ஏற்படுத்திய கலவரத்தை என் முகம் காட்டிவிடாமல் இருக்க பிரத்யேக முயற்சிகள் எடுக்கவேண்டியிருந்தது. உமாவைப் பற்றி நினைத்து, தொண்டை அடைத்துக்கொண்டது. அவளோடு வாழ்ந்த ஆறு மாத வாழ்க்கையின் ருசி என்னுள் வாழும் ஆசையை விதைத்து, மரணத்தை நினைத்து அதுவரை வராத பயத்தைக் கொணர்ந்தது.

சௌம்யாவிற்கு போன் செய்தால், வாய்ஸ் மெயில் வந்துகொண்டே இருந்தது ஒவ்வொரு முறையும். சலிப்பாக இருந்ததால், முயற்சியைக் கைவிட்டேன். பாவி, இந்த ரகுவும் நேரத்துக்கு இல்லாமல் போனானே . மீண்டும் வேறு ப்ராஜெக்ட் விஷயமாக துபாய் போய்விட்டான்.

உமாவைவிட்டுப் போய்விடுவேனா? நான் பயந்ததைப் போலவே மீண்டும் கட்டி வருகிறதா என்றெல்லாம் காரை ஓட்டிக்கொண்டு வீடு வந்து சேர்வதற்குள் பலவிதமான யோசனைகள். உமாவை நினைத்தபோது, வயிற்றுக்குள் என்னவோ செய்தது.

வீட்டிற்குப் போனதுமே உமா என் முகத்தைப் பார்த்து, "என்னாச்சு, மொகமே சரியில்லையே? ஏதும் பிரச்சனையா ஆபீஸ்ல?", என்று கேட்டாள். அம்மாவும் என் முகத்தைக் கூர்ந்து பார்த்தாள். தலை வலி என்று சொன்னால், எல்லோரும் கலவரப்படுவார்களே என்று நான் ஒன்றுமே சொல்லவில்லை. விடாமல் கேட்டதும் களைப்பு என்று சொல்லிச் சமாளித்தேன்.

ஊருக்குப் போகும் நேரத்தில் என்ன இது? உண்மையில் பயணத்தை ரத்துசெய்யத்தான் தோன்றியது. போன இடத்தில் ஏதும் பிரச்சனையென்றால் பாவம் உமா என்ன செய்வாள்? ஆனால், பயணத்தை ரத்து செய்தாலே இவர்கள் கேள்விகேட்டு நான் தலைவலி என்று சொல்லும் படியாகிவிடும். அதற்குப்பிறகு, இவர்களையெல்லாம் சமாளிப்பதுதான் எப்படி? அப்படியே போய் படுத்துக் கொண்டேன், ஒன்றும் பேசாமல்.

மறுநாள், மாலை நான்கு மணியளவில் விமான நிலையத்தில் இருக்கவேண்டும் நாங்கள். அப்பாவும் அம்மாவும் எங்களை ஏர்போர்ட்டில் விட்டுவிட்டு காரைத் திரும்ப ஓட்டிக்கொண்டு வந்துவிடுவதாய்த் திட்டம். மதியம் சுமார் ஒரு மணி இருக்கும். சமையலறையிலிருந்து  அறைக்கு நடந்து போய்க்கொண்டிருந்தவன், நடுக்கூடத்தில் மயங்கி பொதேர்ரென்று விழுந்துவிட்டேன். ஓடிவந்த உமாவின் அலறல் கேட்டது. அதற்குப்பிறகு நடந்தது என்னவென்று எனக்குத் தெரியாது. நான் இருளுக்குள், மிக அடர்ந்த இருளுக்குள் போய்க் கொண்டேயிருந்தேன்.

Copyright © 2005 Tamiloviam.com - Authors