தமிழோவியம் (http://www.tamiloviam.com)
தொடர்கதை : வாழ்ந்து பார்க்கலாம் வா [அத்தியாயம் 9]
- ஜெயந்தி சங்கர்

வசந்த் பெங்களூருக்குப் போய் ஆறு மாதமாகிறது. ஒரு மாசம் வேலை கிடைக்காமல் இருந்தான். அதுக்குப் பிறகு மளமளவென்று நான்கு கம்பெனிகளிலிருந்து ஒரே நேரத்தில் வேலை கிடைத்தன. அதிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்வதில் தான் அவனுக்குக் குழப்பமாக இருந்ததாம். ஏற்கனவே மிகவும் குழம்பிய நிலையில் இருந்தானல்லவா? அதுவும் ஒரு காரணம். ஒவ்வொன்றுமே நல்ல வேலையாக இருந்தது இன்னொரு காரணம். தனக்குத் தோதான ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு ஒருவழியாக சேர்ந்தான்.

முட்டாள் ! உமாவை இழுத்துக் கொண்டு போய் திருமணத்தைப் பதிவு செய்துகொள்ளத் துணிவில்லாமல் அவளின் பெரியப்பா சொன்னாராம், இவனும் ஊரைவிட்டுப் போனானாம். அவ்வாறு செய்வானென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உமாவும் அவனும் உண்மையாகவும் ஆழமாகவும் காதலித்ததை நானே உணர்ந்திருந்தேன். இருவரும் வாழ்வில் இணையவேண்டும் என்று எண்ணிய ஒரு சிலருள் நானும் ஒருவன்.

ஒரு சின்ன சுயநலமும் அதில் அடங்கியிருந்தது என்று தான் சொல்லவேண்டும். வசந்த்தின் அத்தைமகள் ஷீலாவை நான் கடந்த நான்கு வருடங்களாக ரகசியமாகக் காதலித்து வருகிறேன். அது வசந்த்துக்குக் கூடத் தெரியாது. ஷீலாவுக்கு வசந்த்தைக் கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் இருந்ததை அறிந்திருந்தேன். வசந்த் உமாவை விரும்பினான். உமாவுக்கும் வசந்த்துக்கும் மணமாகிவிட்டால், ஷீலாவின் மனதை என் பக்கம் திருப்புவது எளிது என்று மிகத்திடமாக நம்பினேன்.

அன்று உமா போன் செய்து வசந்த்தின் வீட்டு முகவரி கேட்டதுமே எதற்கு என்று தான் முதலில் தோன்றியது. நான் சொல்லச் சொல்ல அவள் எழுதிக்கொண்டாள். போனைத் துண்டிக்குமுன் எதற்கு என்று உரக்கவே கேட்டுவிட்டேன். கேட்டபிறகு தான் அநாகரிகமாகக் கேட்டுவிட்டதாக நினைப்பாளோ என்றும் தோன்றியது. வசந்த்தின் வீட்டுக்குப் போகப்போகிறேன் என்று உமா சொல்வாள் என்று துளியும் எதிர்பார்க்கவில்லை. அவள் குரலில் பதட்டம் தெரிந்தது. நிலைமை ஏதோ தீவிரமாக இருந்ததால் தான் அவள் வீட்டிற்கே வசந்த்தைப் பார்க்கப்போகிறாள் என்று புரிந்துகொண்டேன்.

அன்றே உமா வசந்த்தின்  கல்யாணமேளச் சத்தத்தைக் கேட்டேன் மானசீகமாக. அதன் நீட்சியாக ஷீலாவை மாலையுடன் என் பக்கத்தில் நிற்கவைத்துக் கனவும் காண ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால், வசந்த் துணிச்சலில்லாமல் நடப்பான் என்றுதான் நான் நினைக்கவேயில்லை. உமாவாவது சாதுவான நடுத்தர பிராமணப் பெண். அவளிடம் துணிச்சலை எதிர்பார்க்கமுடியாது. அவள் வளர்ந்தவிதம் அப்படி. இவனுக்கென்ன வந்தது?

வாரயிறுதி ஒன்றில் பெங்களூர் போனேன். "டேய் குமார், மறுபடியும் மறுபடியும் அதையே சொல்லாதடா. அன்னிக்கே சொல்லிட்டேனில்ல போன்ல. இப்ப என்ன புதுசா?", என்னையே திருப்பித் திட்டினான்.

உமாவுக்கு வீட்டில் பிரச்சனையில்லாமல் இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையாம் ஐயாவுக்கு. அவளை வீட்டைவிட்டு ஓடிவா என்று கூப்பிட அவனால் எப்போதுமே முடியாதாம். ஏற்கனவே இருவரும் அது பற்றியெல்லாம் பேசியதுதானாம். "ஏண்டா பின்ன காதலிச்ச? ம்?", என்று கேட்டேன். பேசாமலேயே இருந்தான். அவன் ஒன்றுமே சொல்லப்போவதில்லை என்று நான் நினைத்த நேரத்தில், "உமாவுக்கு அம்மா அப்பா தான் முக்கியம்னா உன்னை ஏண்டா காதலிச்சா?", என்று நானே மீண்டும் கேட்டேன்.

மௌனம். மீண்டும் மௌனம். பத்து நிமிடத்திற்குமேலானது. திடீரென்று, " வாழ்க்கைல காதல் பொருந்தணும்னா மனசுலயிருந்து இல்லாம, மூளையிலயிருந்து அது பிறந்திருக்கணுமோன்னு இப்ப நான் நெனக்கிறேன். பாட் லக், எங்களுக்கு அப்படி அமையல்ல. குமார், காதலிச்சுப்பாரு தெரியும்", என்று ஏதோ எனக்குப் புரியாத மாதிரி பேசினான்.

"ஷீலா, உன்னயே நெனச்சிகிட்டிருந்தவ. தெரியுமா? அவளுக்கு உன் பதில் என்ன ?", என்று நான் கேட்டதுமே, "இல்லையே அவளுக்குப் புரியும். என்னையும் உமாவையும் சேர்த்து வைக்க அவதானே உதவினா. அவ புரிஞ்சுப்பா",என்றான்.

"டேய், அது தான் இல்லன்னு ஆயாச்சே, இப்ப நீ ஷீலாவக்கட்டிக்கிறியான்னு உங்கப்பா அம்மா கேட்பாங்க, என்ன சொல்லுவ?"

"குமார், யார் எப்பக் கேட்டாலும் ஒரே பதில். என் மனசுலயும் வாழ்க்கையிலயும் வேற ஒருத்திக்கி இடமேயில்ல",என்று வசந்த்சொன்னதும் 'அப்பாடா' என்ற நிம்மதி பிறந்தது எனக்குள்.

சென்னை திரும்பியதும் அடுத்தநாளே ஷீலாவின் ஆபீஸ¤க்குப் போனேன். என்னை எதிர்பார்க்காததால் கொஞ்சம் அதிர்ந்து பின் சகஜநிலைக்கு வந்தால். சிரித்துக்கொண்டே வரவேற்றாள். காத்திருக்கச் சொன்னாள். மெதுவாகப் பேசிப்பார்ப்போம் என்று வந்த என்னிடம் அவளுக்கு ஏதோ சொல்லவேண்டுமாம். ஆபீஸ் முடிந்ததுமே இருவரும் கிளம்பி டிரைவின் போனோம். " குமார், உமாவோட ஹஸ்பண்ட் விஷயம் தெரியுமா ?", என்று சொல்லிக் கொண்டே போனாள்.

உமாவின் கணவன் சீரியஸாக இருந்தானாம். அவனுக்கு மூளையில் மீண்டும் கட்டியாம். ஆபரேஷன் செய்யவிருந்தார்கள். அதெல்லாம் கூட எனக்குப் பெரிதாகத் தெரியவில்லை. அவுன்ஸ் மாமா ஷீலாவிடம் வேறு பல விஷயங்கள் சொல்லியிருந்தாராம். வெங்கட் தானே கல்யாணத்தை நிறுத்தவென்று மொட்டைக் கடிதங்கள் எழுதியது, உமாவின் அப்பா யாரிடமும் சொல்லாமல் மறைத்தது என்று வரிசையாக. அந்த வெங்கட்டுக்கு புத்தியில்லாமல் போனதேன்? படித்தவன் செய்யும் காரியத்தையா செய்திருந்தான். கல்யாணத்திற்குமுன்பே நேராகப் போய் உமாவிடம் சொல்லக்கூட முடியாமல் போனதா? இல்லை, இரட்டை மனமோ?

பெற்ற மகளை உமாவின் அப்பா இப்படித் தெரிந்தே படுகுழியில் தள்ளிவிட நினைத்திருக்கவேண்டாம். பெண்ணின் வாழ்க்கையைவிட ஜாதியும் மதமும் முக்கியமானதாகிப் போனதோ?! இல்லை, பெண்ணைக் கட்டுபவன் சீக்காளியாக இருந்தாலும் சீமையில் இருக்கவேண்டும் என்ற நினைப்போ?! இப்படியெல்லாம் படுத்தும் அப்பா இருப்பதை விட என்னைப்போல அப்பா அம்மா இல்லாமல் இருப்பதே மேல் என்று தோன்றியது.

மொட்டைக் கடிதங்களை உமாவின் கல்யாணத்தை நிறுத்தவென்று வசந்த் தான் எழுதியிருப்பான் என்று நினைத்தாராம். காமாலைக் கண்ணுக்குக் கண்ணடதெல்லம் மஞ்சள் ! மனிதருக்கு அப்படித்தோன்றியதே, மகளிடமே கேட்டிருக்கலாமே. இல்லையானால், வசந்தின் வீட்டிற்குப் போய் கூட கேட்டிருக்கலாமே. சரி, எழுதியவனைக் கண்டு பிடிக்கத்தான் முயற்சிக்கவில்லை. குறைந்த பட்சம், அதில் எழுதியிருந்த செய்தியையாவது நன்றாக நான்கு இடங்களில் விசாரித்துப் பார்க்கவேண்டாம்? செய்யவில்லை. அண்ணாவும் தம்பியுமாக உமாவிடமும் அவளுடைய அம்மாவிடமும்கூடச் சொல்லாமல் மறைத்து விட்டனர்.

சரி, அவர்களுக்கெல்லாம் கூடத் தெரியவேண்டாம். அவுன்ஸ் மாமாவிடம் சொல்லியிருந்தால், அவர் உமாவிற்காக அலைந்து எப்படியாவது தெரிந்துகொண்டிருப்பார். கல்யாணத்தை நிறுத்தியிருக்கலாம். எப்படியாவது உமாவை வெங்கட் தலையில் கட்டி, அவளை மூட்டை கட்டி நாட்டைவிட்டே கிளப்பியனுப்பத்தான் நினைத்தார்.

இப்போது தன் மாப்பிள்ளையே தான் எழுதியதாகச் சொல்லிவிட்டிருந்ததால், மீண்டும் மூளையில்கட்டி வந்திருந்த நேரத்தில், "ஐயோ, தெரிஞ்சே தப்புப் பண்ணிட்டேனே,"என்று தலையிலடித்துக்கொண்டு ஓவென்று அழுதாறாம்.

"ஷீலா, உமாவைப் பத்தி இவ்வளவு யோசிக்கற, பேசற, உன்னப் பத்தி யோசிக்கறதேயில்லயா?"என்று கேட்டேன்.

"என்ன திடீர்னு? அதுவும் என்னப்பத்தி,."

"ம், இல்ல, சொல்லேன். என்ன நெனச்சிருக்க உன்னப்பத்தி?"

" நீங்க கேட்டதும் தான் அதப்பத்தியே நான் யோசிக்கல்லன்னு தெரியுது."

"ஓ ! இப்ப யோசியேன்."

" அப்படின்னா?"

" அப்படின்னா,ம்,.. சரி நேரா ஒடச்சுசொல்லிடறேனே. நாலு வருஷமா உன்னயே நெனச்சுகிட்டிருக்கேன். யாருக்கும் தெரியாது. நா உன்னக் கல்யாணம் பண்ணிக்க ஆசப்படறேன். தனிக்காட்டு ராஜா. எந்தப் பிரச்சனையும் இல்ல,.."

"ஸ்டாப், ஸ்டாப். நீங்க என்ன பேசிகிட்டே போறீங்க? குமார், எதுக்கு இப்ப இந்த டாப்பிக்?அஞ்சு நிமிஷத்துல என்னோட வாழ்க்கையையே முடிவு பண்ணக்கூடிய துணிவும் திறமையும் எனக்கில்ல. என்னை யோசிக்கவே விடமாட்டீங்க போலயிருக்கே. நாம வேற எதையாவது பேசுவோம்."

"சரி, பேசுவோம்."

"ஆமா, என்னவோ சொல்லணும்னு ஆபீஸ¤க்கு வந்தீங்களோ,..?"

"இப்ப கேளு. இத்தனநேரம் என்ன பேசிகிட்டிருந்தேனோ அதேதான்."

" ஓ, இதப்பத்திதானா,..?"

"ஆமாம்மா. பேசவேண்டியத நான் பேசிட்டேம்மா. ஆனா நீதான் ச்சூ னு நாய வெரட்டற மாதிரி அந்த மேட்டரையே தள்ளிட்டியே."

"ஐ'ம் சாரி குமார். ஆனா, நீங்க எங்கிட்ட பேசும்போதெல்லாம் இந்தக் கேள்வியக் கேட்டுறப்போறீங்களேனு நான் பலதடவை பயந்திருக்கேன்."

"அதாவது என் மனசு உனக்குப் புரிஞ்சிருக்கு."

"ம்,. ம்,.அப்படியும் சொல்லலாம்."

"நல்லதாப்போச்சு. உன்னோட பதில்?"

"நா இப்ப கொஞ்சம் கொழப்பத்ல இருக்கேன். யோசிக்க டைம் வேணும்."

"எடுத்துக்கோ. ஒரு வாரம்? ஒரு மாசம்?"

"இல்ல,.. ம்,...எனக்கு ஒரு வருஷம் வேண்டியிருக்கும் குமார்."

" ஆங்க், ஐயோ,. ஒரு வருஷமா?"

"ரொம்ப அதிகமா, சரி, நோ ப்ராப்ளம். அப்ப நீங்க வேற நல்லப்பொண்ணாப்,"

"சரி, ஷீலா, சரி. ஒரு வருஷம் காத்திருக்கேன். நீயா பதில் சொல்லு. அதாவது 'எஸ்'னு சொல்லு."

"குமார், ஒரு வருஷத்துக்கு முன்னாலேயே கூட சொல்லிடுவேன். ஆனா, 'எஸ்'ஸா, இல்ல 'நோ'வான்னு எனக்கு அப்பதானே தெரியும்."

ஷீலா அந்த அளவாவது யோசித்துச் சொல்கிறேன் என்று சொன்னாளே என்று பேசாமல் அவளுடன் கிளம்பினேன் அவரவர் யோசனையுடன் வெளியேறினோம். ஒரு ஆட்டோவைப் பார்த்துப்பேசி ஷீலாவை ஏற்றிவிட்டுவிட்டு, என் மோட்டார்பைக்கில் ஏறிக் கொண்டு, எங்கே போகலாம் என்று யோசித்தேன். கோவிலுக்குப் போகலாமா? ஜிம்முக்குப் போகலாமா?

ஒரு வருடம் கேட்பாள் ஷீலா என்று நினைக்கவேயில்லை. சரி, நான்கு வருடங்கள் காத்திருந்தாயிற்று, இன்னும் ஒரே வருடம் தானே? ஆனால், ஷீலா மறுத்துவிட்டாலும் வசந்த்தைப் போல நான் ஒன்றும் அப்படியே உட்கார்ந்துவிடமாட்டேன். வேறு நல்ல பெண் கிடைப்பாள் என்ற நம்பிக்கையில் மீண்டும் தேடுவேன். அதிகம் வயதாகுமுன் திருமணம் முடித்துவைக்க எனக்கோ யாருமில்லை. ஆனால், ஷீலா மாதிரி பொறுமையான ஒரு குணவதி கிடைப்பாளா?

Copyright © 2005 Tamiloviam.com - Authors