Tamiloviam
  << முதல் பக்கம்

Tamiloviam - Search இந்த தேடு பொறியில் தமிழ் யுனிகோடில் மட்டுமே தேட முடியும்.

தமிழ் யுனிகோடில் நேரடியாகத் தட்டச்ச செய்ய முடிந்தால், "தமிழில்:" என்ற பெட்டிக்குள் தட்டச்சு செய்யவும்.

இல்லையேல், "ஆங்கிலத்தில்:" என்ற பெட்டிக்குள் ரோமன்/அஞ்சல் [தங்கிலீஷில்] முறையில் உள்ளிட்டால் தமிழில் மாற்றிக் கொள்ளப்படும்.


  ஆங்கிலத்தில் :   
  தமிழில்     :   (நன்றி : சுரதா.காம்)
   
  தேடுவது [உன்னையறிந்தால்]
   
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : "ஒட்டுண்ணிகள்" - எஸ்.கே - {OCT - 20 - 05}  
  இத்தகைய பேர்வழிகளின் முக்கிய ஆயுதம் அவர்களின் வாசாலகமான பேச்சுதான். நேரத்திற்கு ஒத்தாற்போன்ற சொல்லாடல் அவர்களுக்கு கைவந்த கலை. மேலும் அவர்கள் பன்மொழி வல்லுனர்களாக இருப்பார்கள். அப்பட்டமான புகழ்ச்சி (இதில் கவிழாதவர் யார் - இதன் சிகரம் "உங்களுக்கு flattery-ன்னாலே பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும் சார்"!)
http://www.tamiloviam.com/unicode/10200505.asp
Expand / Collapse
 

நான் ஒரு நபரை தொடர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். எல்லா முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவரைக் காணலாம். அதுவும் ஒரு அமைச்சர் அல்லது முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் பங்கெடுக்கும் விழாக்களில் எல்லோருக்கும் முன்னால் வந்து அந்த முக்கிய புள்ளியின்முன் பெரிய கும்பிடு போட்டு சிரிப்பார். "நேற்றைக்கு உங்கள் டிவி பேட்டி அபாரமாக இருந்தது. எல்லாரும் அசந்து போய்ட்டாங்க!" - இதுபோல் சமயோசிதமாக ஏதாவது சொல்வார். புகழ்ச்சி எந்த இடத்திலிருந்து வந்தாலென்ன என்று அந்த புள்ளியும் அதை சிரிப்புடனும், தலையசைப்புடனும் ஏற்றுக் கொள்வார். நான் குறிப்பிடும் நபர் நன்கு "டீக்காக" டிரெஸ் செய்துகொண்டிருப்பதாலும், அவருடைய நடை, பாவனை, பேச்சு எல்லாம் ஒரு பெரிய மனித தோரணையாக இருப்பதாலும், யாருமே அவரை இன்னார் என்று வினவாமலே கொஞ்சம் இடம் கொடுத்துவிடுவார்கள். ஒரு சுண்டுவிரல் நுழைய இடைவெளி கிடைத்தால் போதுமே நம் நண்பருக்கு, யானையே நுழைத்துவிடுவார்!

இத்தகைய பேர்வழிகளின் முக்கிய ஆயுதம் அவர்களின் வாசாலகமான பேச்சுதான். நேரத்திற்கு ஒத்தாற்போன்ற சொல்லாடல் அவர்களுக்கு கைவந்த கலை. மேலும் அவர்கள் பன்மொழி வல்லுனர்களாக இருப்பார்கள். அப்பட்டமான புகழ்ச்சி (இதில் கவிழாதவர் யார் - இதன் சிகரம் "உங்களுக்கு flattery-ன்னாலே பிடிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும் சார்"!), தேன் சொட்டும் குசல விசாரிப்புகள் போன்றவை இவர்களின் அம்பறாத்தூணியில் இருக்கும் பிற அஸ்திரங்கள். அவர்களது இன்னொரு சிறப்பம்சம் பொது அறிவு. இலக்கியத்திலிருந்து இன்டெர்நெட் வரை எந்தப் பொருளிலும் எல்லாம் தெரிந்த தோரணையில் பேசி அசத்திவிடுவார்கள். அவர்கள் பல படாடோபமான கிளப்புகளிலும், பல அரசு-சாரா பொதுத் தொண்டு நிறுவனங்களிலும் அங்கத்தினராகவோ, செயற்குழு உறுப்பினாராகவோ நிரந்தரமாக இருப்பார்கள் - இன்னொருவர் சிலவில்தான்! பல என்.ஜி.ஓ நிறுவனங்களில் இதுபோன்ற டுபாக்கூர் பேர்வழிகள்தான் நிரம்பியிருப்பார்கள். அவர்களுடைய விசிடிங் கார்டில் பல நிறுவனங்கள் பெயர் இருக்கும். ஆய்ந்து பார்த்தால் அதில் பெரும் பகுதி போகஸாக இருக்கும்.

இதுபோன்ற ஒருவரை நான் பலமுறை பல முக்கிய நிகழ்ச்சிகளில் ஏதேனும் ஒரு வி.ஐ.பி அருகில் பேசி ஜோக் அடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் அந்த பெரிய மனிதர் எனக்குத் தெரிந்தவராக இருந்ததால் அவரிடம் சென்று, "சற்றுமுன் உங்களிடம் பேசிக்கொண்டிருந்தவர் யார்?" என்று கேட்டதற்கு, "யாரோ திட்டமாகத் தெரியாது, ஆனால் நன்கு அறிமுகமான முக்யஸ்தர் போல் தெரிகிறது. ஏனென்றால் இந்தக் குழுவின் செயலரிடம் மிக நெருக்கமாக இருக்கிறார்" என்றார் விழித்தபடி. ஆனால் அந்த செயலரிடம் என் நண்பருக்கு நெருங்கியவராக காண்பித்துக் கொண்டிருப்பார்! இதுபோல் subtle deception game ஆடிக்கொண்டு வாழ்வில் ஜெயித்துக் கொண்டிருக்கும் பலரை நான் கண்டிருக்கிறேன்.

உங்களை ஒரு இலக்காக மனத்தில் குறியிட்டுக்கொண்டபின் அதற்கான சில ஆயத்தப்பணியில் ஈடுபடுவார்கள். முதலில் உங்கள் சொந்த ஊர், இன்னார் மகன் போன்ற விவரங்கள், குடும்பம், குழந்தைகள், நெருங்கிய உறவினர் பற்றிய குறிப்புகள், மற்றும் உங்களுக்கு உள்ள குறைபாடுகள், பலவீனங்கள் ஆகியவைகள் நுட்பமாக ஆராயப்படும். அததுக்கு ஏற்ப வாத்தியங்கள் வாசிக்கப்பட்டு கோழிக்குஞ்சு அமுக்குவதுபோல் அமுக்கப்படுவீர்கள். இதுபோன்ற பேர்வழிகள் கட்டாயம் ஒரு பெண் உதவியாளரை (கொஞ்சம் மூக்கும் முழியுமாக, வழித்து விட்டார்ப்போல்!) வேலைக்கு வைத்திருப்பார்கள். அப்புறம் என்ன, நீங்கள் ஜொள்ஸில் வழுக்கல்தான்! (யார்யார் B.J.P (படா ஜொள்ளு பார்ட்டி) என்று அவர்களிடம் ஒரு பட்டியலே இருக்கும்.)

அவர்களுடைய டெக்னிக்குகள், உங்களால் சரியாக உணரப்பட்டு, அதற்கான தற்காப்பு நடவடிக்கை ஏதும் எடுத்துவிட இயலாத வகையில் இருக்கும். நாலு முக்யஸ்தர்கள்முன் உங்களுக்கு வணக்கம் சொல்லி இரெண்டு வார்த்தை விசாரிப்பார்கள். நீங்கள் புன்னகையுடன் ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும். அந்த சூழ்நிலை அதுபோல் அமைந்துவிடும். அவரைக் காணாததுபோல் போனால் அங்கிருக்கும் வேறு பலர் உங்கள் அடிப்படை குணங்களை தவறாகக் கணித்துவிட ஏதுவாகும். உங்கள் இலேசான தலையசைப்பு, ஒரிரெண்டு மில்லிமீட்டர் சிரிப்பு, தெரிந்தவர் போன்ற அங்கீகரிப்பு - இவை போதும் அந்த நபருக்கு. உங்கள் உடன் அல்லதுகீழ் பணிபுரிபவரிடம் மறுநாள் சர்வ ஸ்வாதீனமாக அடுக்களை வரை சென்று தனக்கு வேண்டியவற்றை சாதித்து விடுவார். உங்கள் தனி உதவியாளரிடமே வேலை வாங்கிவிடுவார். இதெல்லாம் ஒரு subtle mind game. கடல்வாழ் பிரம்மாண்டமான மிருகமான திமிங்கிலத்தின் தோல்மேல் பல parasites உயிர்வாழ்வதுபோல் உங்களையறியாமலேயே உங்கள் பெயரைச் சொல்லி அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். அது மட்டுமில்லை உங்களுக்குப் போய்ச்சேரவேண்டிய பங்கு என்று சொல்லி பலரிடம் லஞ்சம் வாங்கிச் சென்றுவிடுவார்கள். இதெல்லாம் வாழ்வில் வெற்றிக்கு நீங்கள் உங்களையறியாமல் அளிக்கும் விலை!

ஆனால் அத்தகைய புல்லுருவிகள் உங்கள் பெயரையும் பதவியையும் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் மதிப்பையும் தன் சுயநலத்திற்காக துஷ்பிரயோகம் செய்ய அனுமதிக்கக் கூடாது. ஏனென்றால் உங்கள் வெற்றியும் பெருமையும் உங்கள் முயற்சியாலும் உழைப்பாலும் பெற்றது அதை "குந்தினாற்போல்" இன்னொருவர் உறிஞ்சுவதற்கு இடம் கொடுக்கக் கூடாது. மேலும் அத்தகைய நபர்கள் உங்கள் நற்பெயரைக் கெடுத்துவிடுவர்.

சரி, இவர்களிடமிருந்து தப்பிப்பது எப்படி? சில அடிப்படை விதிகளை தவறாமல் கடைப்பித்தீர்களேயானால் இதுபோன்ற ஒட்டுப்புல்களை அண்டவிடாமல், உங்கள் பெருமைக்குப் பங்கம் வராமல் காப்பாற்றிக்கொள்ளலாம். கொஞ்சம்கூட மன நெகிழ்வுக்கோ, சபலத்திற்கோ இடம் கொடுக்கக்கூடாது.

 1. சில்க் ஜிப்பா, சில்க் வேஷ்டி(சிலர் கதரில் அல்லது "கரை"யில் பவனி வருவதும் உண்டு), செண்ட், மூக்குப்பொடி கலரில் சஃபாரி சூட், சந்தனக் கலரில் சல்வார் சூட், நல்ல கத்திரி வெய்யிலில் அந்துருண்டை வாசத்துடன் "கரேல்' என்று கோட், சூட் - இதுபோன்ற உடையலங்காரத்துடன் ஆரவாரமாக யாராவது உங்களிடம் வந்து ஏதாவது அழைப்பு விடுத்தால் உடனே ஒப்புக் கொள்ளாதீர்கள். அதில் ஏதாவது முள் இருக்கும். உங்களிடம் ஏதாவது காரியம் சாதித்துத் தருவதாக யாரிடமாவது வாக்களித்து, அதில் பெருத்த ஆதாயமடைவதற்கு திட்டம் போட்டு வைத்திருப்பார்கள். உங்கள் உதவியாளர்கள் மூலம் முழுமையாக ஆராயாமல் எந்த நிகழ்ச்சிக்கும் ஒப்புதல் கொடுக்காதீர்கள்.

 2. உங்களுடன் இருக்கையில், அல்லது உங்களிடம் ஏதேனும் மனு போன்றவற்றை கொடுக்கும்போது புகைப்படம் எடுத்துக் கொள்கிறேன் என்று யாராவது சொன்னால் தவிர்த்துவிடுங்கள். அந்தப் புகைப்படம் பின்னால் எப்படி வெடிக்கும் என்று உங்களால் அப்போது கணிக்க இயலாது.

 3. ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் மேடையில் அமர்ந்திருக்கும்போது திடீரென்று முன்பின் தெரியாத ஒருவருக்கு மாலை அணிவிக்கவோ, ஏதேனும் பொருளை அளிக்கவோ வேண்டினால் தவிர்த்துவிடுங்கள். நீங்கள் தலைமை தாங்கும் அல்லது முக்கிய விருந்தினராக இருக்கும் பொது நிகழ்ச்சிகளில் முன்கூட்டியே யார்யார் அமர்ந்திருப்பார்கள், யார் பேசுவார்கள், நிகழ்ச்சி நிரலில் வேறு என்னென்ன இருக்கும் என்று அமைப்பாளர்களிடம் தீர விசாரித்துவிடுவது நலம். மேடையில் surprise ஏதும் கொடுக்காதீர்கள் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

 4. சில வில்லங்கமான இடங்களுக்குச் சென்றால் அங்கு நிகழும் தவிசல்கள், சலசலப்புகள் போன்றவற்றில் நீங்களும் இழுக்கப்படும் அபாயம் இருக்கிறது. கொஞ்சம் ஏடாகூடமாகத் தோன்றினால் கட்டாயம் தவிர்த்துவிடுங்கள். உங்கள் உள்மன எச்சரிக்கைகள்படி நடத்தல் நலம்.(Follow your intuition.)

 5. நன்கு அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து ஏதும் பரிசுப் பொருளை பெற்றுக்கொள்ளாதீர்கள். அவற்றுடன் கண்ணுக்குத் தெரியாமல் சிக்கல் ஒட்டிக் கொண்டிருக்கும்.

 6. உங்கள் பெயரைச் சொல்லிக்கொண்டு யார் என்ன கேட்டாலும் உங்களைக் கலக்காமல் செயலில் இறங்க வேண்டாம் என்று உங்கள் உதவியாளர்கள் மற்றும் உடன் பணியாற்றுபவர்களிடம் திட்டவட்டமாக ஆணையிட்டுவிடுங்கள். பெரிய மனிதர்கள் பலர் இதுபோல் செய்வதை நான் கண்டிருக்கிறேன்.

 7. எல்லாவற்றிற்கும் மேல் எப்போதும் விழிப்புடன் இருங்கள்! உங்கள் வெற்றியில் குளிர்காய ஒரு கூட்டமே காத்துக் கொண்டிருக்கிறது.

Eternal vigilance is the price of success and your efforts to sustain it!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஏற்ற தருணம் நோக்கி எடுத்துவை உன்னடியை. - எஸ்.கே - {OCT - 06 - 05}  
 
http://www.tamiloviam.com/unicode/10060506.asp
Expand / Collapse
 

யாரிடமாவது உதவி கேட்கச் செல்லும்போது கட்டாயம் கவனிக்க வேண்டியது ஒன்று உண்டு. அந்த நபர் தனியாக இருக்கும்போதுதான் நீங்கள் உங்கள் பிரச்னையை அவருடன் பகிர்ந்துகொண்டு, அவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் உதவி என்ன, அது உங்களுக்கு எவ்வளவு முக்கியம், அதனை அவர் எவ்வாறு செய்ய இயலும் என்பதை விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். யாராவது கூட இருக்கும்போது - முன்னேபின்னே அறியாத அந்நியன், அயலான், காக்கன்போக்கன், வேற்றான், யாராக இருந்தாலும் சரி - பேசத் தொடங்கக்கூடாது. இதே கருத்தினை இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதியில் இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர் என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். உதவி கேட்பதற்காக மட்டுமின்றி தொழில் நிமித்தமாக முக்கிய முடிவுகளை எடுப்பது தொடர்பாகவோ, அந்தரங்கமான விஷயங்களைப் பற்றியோ முக்கிய ஆலோசனைகளை கேட்கச் சென்றாலும், நீங்கள் சந்திக்கும் நபர் தனியாக இருக்கும்போது கேட்டல் நலம். இதற்கு நான் கூறியிருந்த காரணம் - அருகிலிருக்கும் நபர்கள் குறுக்கே புகுந்து ஏதாவது சொல்லி காரியத்தைக் கெடுத்துவிடுவர். அல்லது நீங்கள் அங்கிருந்து வெளியேறியதும் ஏதாவது சொல்லி அந்த முக்கியஸ்தரின் மனத்தை மாற்றி உங்களுக்கு பாதகம் விளைவித்துவிடுவர். மேலும் நீங்கள் விவாதித்த பொருள் உடனிருந்த நபருக்கு ஏதானும் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாக இருக்கலாம். உங்களுக்கு உதவி கிட்டுமானால் அது அவருக்கு பாதகமாக அமையலாம். ஆகையால் தனியே சென்று "காதும்-காது"மாக அணுகுங்கள் என்று சொன்னேன்.

ஆனால் இத்தகைய அணுகுமுறைக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என்பதை இப்போது விளக்க முற்படுகிறேன். சமூகத்துக்கு முன்னால் வேஷம் போட முனைவது மனித இயல்பு. இல்லாத ஒரு பிம்பத்தை மக்கள் மனதில் புகுத்த இதுபோன்ற வெளித்தோற்றத்தை காண்பிக்க முயல்வர். அதனால்தான் மனிதர்கள் ஒரே விஷயத்தில் தனியாக இருக்கும்போது ஒருவித நிலைப்பாட்டையும், நாலுபேர் முன்னிலையில் அதற்கு மாறான நிலைப்பாட்டையும் எடுக்கிறார்கள். சமூகத்தின் முன் ஒரு இமேஜை காண்பிக்க முயல்வது இயற்கை. நீங்கள் ஒரு உதவிவேண்டி ஒரு பெரிய மனிதர்முன் நிற்கிறீர்கள். அப்போது அந்த அவையில் பலர் இருக்கின்றனர். அங்கு குழுமியுள்ளவர்கள்முன் அந்த பெரிய மனிதர் தன்னை பெருமையாக வெளிக்காண்பிக்க முற்படும் நோக்கில் இருப்பவர் என்றால், உங்களுக்காக இரங்கினால் தான் ஒரு மனவலிமையற்ற, எளிதாக பிறரால் தன்வசப்படுத்தக்கூடியவன் என்று கணக்குப் போட்டுவிடுவார்களோ என்றெண்ணி, மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, அது உங்களுக்கு பாதகமாக அமையக்கூடிய வாய்ப்புள்ளது. இதில் இன்னொரு அபாயமும் இருக்கிறது. தனியாக இருக்கும்போது, முதலில் முடியாது என்றாலும், பின்னால் மனம் மாறி சாதகமான பதில் கூற ஏது உண்டு. ஆனால் பலர் முன்னிலையில் அடித்துக் கூறப்பட்ட முடிவு "அசலே உறுதி" என்று கட்டமைக்கப்பட்டுவிடும். அதனின்று மாறினால் எங்கே தன் ஆளுமைக்கு பங்கம் வந்துவிடுமோ என்றஞ்சி அந்த முடிவையே வலியுறுத்திவிடுவர். அதனால் நீங்கள் பொதுவில் கொணர்ந்து உங்கள் வேண்டுகோளை வைப்பதால் நீங்களே உங்களுக்கு சாதகமில்லாத ஒரு முடிவை இறுக்கி முடிச்சுப் போட்டுவிடும் ஆபத்து உள்ளது.

ஏதாவது பணமோ, பொருளோ ஒரு பொதுக் காரியத்திற்காக வசூல் செய்ய ஒரு பெரிய மனிதரைக் காணச்செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நாலுபேர் முன்னால் தான் பெரிய கொடையாளி என்று காண்பிக்க ஒரு ஒலிம்பிக் கஞ்சன் கூட ஏதாவது பத்துகாசு உண்டியலில் போட வாய்ப்புள்ளது. அல்லது அதற்கு எதிர்மாறாக "தன் மனத்தை இதுபோல் இளைக்க வைக்க முடியாது; தனக்கு இதுபோன்ற விஷயங்களில் தீர்மானமான கொள்கைகள் உண்டு" என்பதுபோல் சித்தரிக்க எண்ணி, "எனக்கு இதுபோல் அதற்கு, இதற்கு என்று வசூல் பண்ணுவது கொஞ்சமும் பிடிக்காது. தினந்தோறும் இதுமாதிரி நாலுபேர் ரசீது பொஸ்தகமும் கையுமா கெளம்பி வந்தூடராங்கப்பா. இவங்க தொல்லை தாங்க முடியல்லை. என்ன நான் சொல்றது? ஹஹ்ஹா!" என்று எகத்தாளமாகக்கூறி கூடிருப்பவர்களைப் பார்ப்பார். அங்கே குழுகியிருக்கும் ஒன்றிரண்டு "லோட்டாக்கள்", "சரியான போடு போட்டீங்க. இதையெல்லாம் தடுக்க ஒரு சட்டமே வேணும்" என்று ஒத்து ஊதுவார். மனித மனமே சூழ்நிலைகளின் கைதிதானே. இந்த அடிப்படை மனப்பாங்குதான் நாம் எடுக்கும் முடிவுகளையும் கட்டுப்படுத்துகிறது. மனிதனின் இந்த உள்ளப்பாங்கை நாம் நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப நம் அணுகுமுறையை மாற்றிக்கொண்டால் நம் முயற்சிகளில் வெற்றிகாணலாம்.

இதுபோல் நம் தனிப்பட்ட விண்ணப்பங்களை பொது இடங்களில் கூறுவது சரியா என்ற கேள்வி எழும். அதாவது, ஒரு பார்ட்டியிலோ, இசை நிகழ்ச்சியிலோ, இரயில் நிலையம் அல்லது ஏர்போர்ட்டில் காத்திருக்கும்போதோ ஒருவரை தனிமையில் (இது மிக முக்கியம்) சந்திக்க நேரும்போது உங்கள் கோரிக்கைகளை அவர்முன் வைக்கலாமா என்றால், அவர் அப்போது இருக்கும் மனநிலைப்படி சாதகமாக இருந்தால் தாராளமாக அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசத் தொடங்கலாம். அவர்கள் மனம் இளகி உங்களுக்கு அனுகூலம் கிட்டும் வாய்ப்புள்ளது. "நாளைக்கு ஆபீசில் வந்து பாருங்கள்" எனலாம். அல்லது நீங்கள் சந்திக்கும் இடம் வாஸ்துப்படி உங்கள் கிரகங்களுக்கு இணக்கமாக இருந்தால் அவர் தன் செல்பேசியின் துக்கினியூண்டு பட்டன்களைத் தட்டி அங்கேயே உங்கள் வேண்டுகோள் தொடர்பான ஆணைகளை பிறப்பிக்கலாம்!

இன்னொரு விஷயம். உங்களுக்கு இருக்கும் சில பிரச்னைகளை எடுத்துக்கூறி அதற்கான நிவாரணம் தேடி அதனை அளிக்கக் கூடிய நபரிடம் செல்கிறீர்கள். அவர்கள் மனத்தில் இரக்கம் தோற்றுவிப்பதற்காக உங்கள் குறைகளை விலாவாரியாக நீட்டிமுழக்கி ஓலமிடாதீர்கள். அல்லது அழுத்தி மனதில் படிய வைக்கிறேன் என்று பன்னிப்பன்னி சொன்னதையே திருப்பித் திருப்பி உருட்டாதீர்கள் கேட்பவருக்கு உங்கள்மேல் சலிப்பு வந்துவிடும். அவர்கள் உங்களைத் தவிர்க்க முயல்வர். அப்புறம் "வந்தூட்டான்யா" கேஸ்தான்! உங்கள் பெயரைக் கேட்டாலே ஓடிஒளிவர். மனித மனத்தின் எண்ண ஓட்டங்கள் செல்லும் திசையைப் புரிந்துகொள்ளவேண்டும். எல்லோருக்கும் பிரச்னைகள் இருக்கும். எல்லோர் மனத்திலும் ஏதாவது கவலைகள், ஏக்கங்கள், ஆற்றாமைகள், இழப்புக்களைப் பற்றிய சிந்தனைகள் போன்றவை மனத்தினுள் அரித்துக் கொண்டிருக்கும். இதுபோன்ற சாதகமற்ற, நலக்கேடான நிகழ்ச்சிகள் பற்றிய சிந்தனைகளை அவர்கள் தன் மனக்கண்முன் எழாவண்ணம் ஒரு மூலையில் பூட்டிவைத்திருப்பார்கள். நீங்கள் பாடும் புலம்பல்கள் அவர்களுக்கு தன் இழப்புக்களையும் வேறுபல பிரச்னைகளையும் நினைவுக்குக் கொணர்ந்து அவர்கள் மனத்தில் முன்னின்று ஆக்கிரமித்துக் கொள்ளும்படி செய்துவிடும். பிறகு உங்கள்மேல் எரிச்சல் கொண்டு, உங்கள் நினைவே அவர்கள் மனத்தில் கசப்பான உணர்ச்சிகளையும் எதிர்மறையான பிம்பத்தையும் தோற்றுவிக்கும். அதனால் உங்கள் sob story-ஐ சுருக்கமாக கோடி காண்பித்து, சொற்களை அடுத்தவர் முகக்குறிபார்த்து மாற்றியமைத்து நம் கருத்தை முன்வைக்கவேண்டும்.

நான் எடுத்துரைக்கும் கருத்துக்கள் வாழ்வோடு ஒன்றியவை. ஆனால் எதுவும் புதிதல்ல. பல நன்னூற்கள் வாயிலாக நாம் அறிந்தவைதான். பிறர்மனம் செல்லும் போக்கை கருத்தில் கொண்டு நம் செயல்பாட்டை சிறிது மாற்றியமைத்துக் கொண்டால் இவ்வுலகம் நமக்கு ஆட்படும். நம் வாழ்வில் வெற்றியும் மகிழ்வும் கிட்டும் என்பது திண்ணம்.


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : அனைவரையும் ஆசானாக்கு! - எஸ்.கே - {SEP - 29 - 05}  
  நாம் நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களின் நடை, உடை, பாவனை, அவர்களின் பேச்சு, செய்கை ஆகியவற்றின்மூலம் பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். பற்பல துறைகளில் வெற்றி பெற்றவர்களிடமிருந்து அவர்களின் வெற்றியை ஈட்டுக் கொடுத்த செயல்பாடுகள் என்னென்ன என்பதையும், வாழ்வில் தோல்வி கணடவர்களிடமிருந்து அவர்கள் இழைத்த தவறுகளையும் அவற்றைத் தவிர்ப்பது எங்ஙனமென்பதையும் கற்றுக் கொள்கிறோம்.
http://www.tamiloviam.com/unicode/09290506.asp
Expand / Collapse
 


சில வருடங்கள் முன்பு ஒரு அபார்ட்மெண்ட் வாங்குவது சம்பந்தமாக விசாரிப்பதற்காக ஒரு நிறுவனத்திற்குச் சென்றேன். அங்குள்ள மேலாளரிடம் வீட்டு விலை பற்றி சீரியஸாக உரையாடிக் கொண்டிருக்கும்போது, ஒருவர் "படாரெ"ன்று கதவைத் திறந்துகொண்டு அந்த மேலாளரின் பெயரை உரக்க அழைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தார். ஆரவாரமாக நுழைந்து அவருக்கு எதிரே அமர்ந்துகொண்டு, அவர் எங்களுடன் பேசிக்கொண்டிருந்ததை சட்டை செய்யாமல் "என்ன மச்சான்" என்பதுபோல் கொச்சையாக பேச ஆரம்பித்தார். அது தவிர மேஜையின் மேலிருந்த பேப்பர் வெயிட்டை உருட்டி விளையாடத் தொடங்கினார். குண்டூசியை எடுத்து பல் குத்திவிட்டு திரும்பி அதன் குப்பியிலேயெ திரும்பி வைத்தார் (இதுபோன்று குண்டூசியால் பல்குத்துவது மட்டுமின்றி அதை மீண்டும் அதன் திண்டிலேயே சொருகுகிறவர்களுக்கு அன்னியன் ஸ்டைலில் கண்காட்சி டில்லி அப்பளம் பொரிக்கும் எண்ணைக் கொப்பரையில் கரம் மசாலா தடவி பொரிக்க வேண்டும்!). மேஜையின் மேலிருந்த பேப்பரை எடுத்தார். பேனாவை எடுத்து உருட்டினார். இன்னும் ஏதேதோ சேட்டைகளை செய்தவண்ணம் இருந்தார். அவர் தன் சட்டையின் மேல் பொத்தானகளை போடாமல், பார்ப்பதற்கு படிப்பறிவில்லாத காட்டான் போல் தோற்றமளித்தார். அந்த சூழ்நிலையில் அவருடைய தோற்றம், நடத்தை, செயல் எல்லாமே ஒவ்வாமல் இருந்தது. மேலாளர் மென்று விழுங்கிக் கொண்டிருந்தார். அந்த நபர் ஏதோ கடன் கொடுத்திருப்பார் போலிருக்கிறது, அதனால்தான் இவ்வாறு உரிமையை எடுத்துக் கொண்டார் என்று தோன்றியது.

அவர் நுழைவதற்கு முன்னால், அந்த மேலாளரும், அலுவலக முகப்பில் அமர்ந்திருந்த பெண்ணும், "தஸ் புஸ்" என்று வெட்டிய ஆங்கிலத்தில் அந்த நிறுவனத்தைப் பற்றி மிகப்பெருமையாக அளந்து கொண்டிருந்தார்கள். இந்த இடைச்செருகலுக்குப் பிறகு "ஏதோ இடிக்கிறதே" என்று எண்ணிய நான் வெளியே எடுத்த செக் புத்தகத்தை அவசர அவசரமாக உள்ளே வைத்துவிட்டு அந்த இடத்தை விட்டுக் கிளம்பினேன்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் கற்கும் பாடம் என்ன? பிறர் தங்கள் நடத்தையினால் நம் மதிப்பைக் குறைக்க அனுமதிக்கக்கூடாது. அவரவர்களை தகுதி பார்த்து அங்கங்கே நிறுத்த வேண்டும். நம்மீது விழுந்து பிடுங்க விடக்கூடாது. சிலர் "தோதோ" என்றால் மூஞ்சியை நக்கும் பிராணி போன்று நடந்து கொள்வர். அவர்களை அடையாளம் கண்டு "கட்" பண்ணி சற்று தூரத்தில் வைக்க வேண்டும். இதனை நாசூக்காக செய்ய வேண்டும். நான் முன்னமையே குறிப்பிட்டுள்ளபடி மண்பாண்டம் செய்பவர் கண்ணுக்குத் தெரியாமல் வடிவமைத்த பானையை அடித்தளத்திலிருந்து "கட்" பண்ணுவதுபோல் வெட்டிய சுவடு தெரியாமல் செய்யவேண்டும். நம் இடத்தில் நாம்தான் தலைமை என்பதை நன்கு தெரியும்படி வெளிப்படுத்தவேண்டும். நம் தலைமையையும் ஆளுமையையும் காக்க பிறரை எவ்வாறு ஒரு தூரத்திலேயே வைக்கவேண்டும் என்ற கருத்தை  தலைமை ஒரு திறமை என்ற தலைப்புடனமைந்த (இந்தத் தொகுதியின்) ஒரு  முந்தைய கட்டுரையில் விளக்கமாக எழுதியிருந்தேன். அந்தக் கருத்தினையொட்டிய இன்னொரு கூறை விவாதிக்க முற்படுகிறேன்.

நாம் நம்மைச்சுற்றியுள்ள மனிதர்களின் நடை, உடை, பாவனை, அவர்களின் பேச்சு, செய்கை ஆகியவற்றின்மூலம் பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறோம். பற்பல துறைகளில் வெற்றி பெற்றவர்களிடமிருந்து அவர்களின் வெற்றியை ஈட்டுக் கொடுத்த செயல்பாடுகள் என்னென்ன என்பதையும், வாழ்வில் தோல்வி கணடவர்களிடமிருந்து அவர்கள் இழைத்த தவறுகளையும் அவற்றைத் தவிர்ப்பது எங்ஙனமென்பதையும் கற்றுக் கொள்கிறோம். வாழ்வில் ஒவ்வொரு பாடத்தையும் நாமே அனுபவித்து அறிய முற்படுவது முட்டாள்தனம். முன்னால் போகிறவன் தடுக்கி விழுந்தால் அங்கே ஒரு பள்ளம் இருக்கிறது என்றறிந்து நாம் கவனமாகச் செல்கிறோம். அதுபோல் நாம் பிறரை கூர்ந்து கவனித்து நமக்கு வேண்டிய படிப்பினைகளை அறிகிறோம். அது தவிர நாம் நம் தொழிலுக்கு வேண்டிய வித்த அறிவையும் பொது ஞானத்தையும், மற்றும் பல்துறைப் புலமையையும் பெற முயல வேண்டும். நாம் அன்றாடம் சந்திக்கும் அனைவருமே நமக்கு ஏதோவொரு வகையில் அவர்களறியாமலேயே ஆசானாகிறார்கள். ஆனால் அந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி ஏற்கவேண்டிய படிப்பினைகளைப் பெறுவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

The Tipping Pointஇந்தக் கருத்தில்தான் பல வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ரோட்டரி, லயன்ஸ் சங்கங்கள், கிளப்புகள் போன்ற அமைப்புக்கள் மூலம் அடிக்கடி கூடி தம் துறை சார்ந்த, அரசு சார்ந்த மற்றும் பொது அறிவு ஞானத்தையும் பெருக்கிக் கொண்டு, அதனை தமக்கு சாதகமாக ஆக்கிக் கொள்கிறார்கள். ஆழ்ந்த ஆராய்வுக்குப்பின் அறியப்படக்கூடிய விஷய ஞானம் கூட சில சமயம் இன்னொருவரிடம் சாதாரணமாக உரையாடும்போது கிட்டிவிடும் சாத்தியம் இருக்கிறது. பெரிய வணிக பிரச்னைகள் நம்முடன் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் தற்செயலாகக் கூறும் அறிவுரையினால் தீர்ந்திருக்கின்றன. யாரோ ஒருவர் (சற்றும் தொடர்பில்லாத நபர்) சொல்லிய ஒரு சொல், ஒரு உவமை, ஒரு கூற்று, ஒரு குறிப்பு போன்றவை பெரிய மாற்றங்களுக்கும், மாபெரும் வெற்றிகளுக்கும் காரணகர்த்தாக்களாக விளங்கியிருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகளின் சாத்தியம் பற்றி மால்கம் க்ளாட்வெல் (Malcom Gladwell) என்பவர் தன் The Tipping Point - How little things can make a big difference என்ற நூலில் விளக்கியிருக்கிறார்.

Bloomberg என்னும் நிறுவனத்தின் அதிபர் தன் அதிகாரிகளை பொது இடங்களிலும், கேண்டீன்களிலும் பலருடன் கலந்து பழகி உரையாடும்படி ஊக்குவிப்பாராம். மேலும் அவர்களை மாடிப்படிகளிலும், ஸ்டோர்களிலும் வாய்ப்புகிடைக்கும்போதெல்லாம் எல்லோரிடம் பேசி நாட்டு நடப்புகளை அறிந்துவரச் சொல்வாராம். நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் பேசினால்தான் என்ன நடக்கிறது என்பது தெரியும். இன்றைய நிலையில் மனிதனுக்கு அன்றாட வாழ்க்கையிலேயே பலதரப்பட்ட விஷய ஞானம் தேவைப்படுகிறது. சொத்து வாங்குதல், விற்றல், முதலீடுகள், வருமான வரி, சொத்து வரி - அவை பற்றிய அடிப்படை அறிவு, பிள்ளைகள் படிப்பு பற்றி சரியான முடிவெடுக்க ஏதுவான விஷயங்கள், எதெதுக்கு எத்தகைய ஆவணங்கள் தேவை என்பது பற்றிய விவரங்கள், பாஸ்போர்ட், வாகன ஓட்டுதற்குரிய உரிமம் பெருவது எப்படி, ரேஷன் கார்டு வாங்க எங்கே காத்துக் கிடக்க வேண்டும் - இதுபோல் நூற்றுக்கணக்கான விஷயங்கள் பிறர்மூலம் அறிந்துகொள்ள சாத்தியம் இருக்கிறது. அதனால் நம் வேலை லகுவாகும்.

ஆகையால் உம்மணாமூஞ்சியாய் இல்லாமல் எல்லோரிடமும் கலந்து பழகி பிறரை நமக்கு உலகத்தை காண்பிக்கும் கண்ணாடியாக மாற்ற வேண்டும். அதுபோல் நம் உரையாடல் வெறும் வெட்டிப்பேச்சாக இல்லாமல் பொருள் பொருந்தியதாக அமைய வேண்டும். பேசும்போதே சில கொக்கிகள் போட்டு பிறரிடமிருந்து தன்னையறியாமல் அவர்கள் அறிந்தவற்றை கிரகித்துக் கொள்ளும் விதமாக உங்கள் சொல்லாடல் அமையவேண்டும். நடுநடுவே நீங்கள் தொடுக்கும் கெட்டிக்காரத்தனமான கேள்விகள் பிறரை மேன்மேலும் தன் அறிவை பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கும் முகமாக அமையவேண்டும். அவர்கள் சொல்வதை முக மலர்ச்சியுடன் அங்கீகரித்து, தலையசைத்து, அவர்கள் நம்முடன் பேசுவதை ஒரு பெருமை சார்ந்த விஷயமாகக் கருத வைக்கவேண்டும். அதே நேரத்தில் நம் பொன்னான நேரத்தை அவர்கள் வீணடிக்க விடக்கூடாது. அதுபோல் நம்மீது அவர்கள் அளவுக்கதிகமான உரிமைகளை எடுத்துக் கொண்டு, நம் ஆளுமைக்கு குறைவு ஏதும் ஏற்படுத்தாவண்ணம் காத்தலும் வேண்டும்.

ஒட்டுறவாடல் என்பது அவரவர் தன்மைப்படி, ஆற்றல்படி, தகுதியின்படி அமைய வேண்டும். ஒவ்வொருவர் வெற்றியிலும் பலரின் பங்கு கட்டாயம் இருக்கிறது. இந்த விரிந்த, பரந்த உலகம் உங்களை "வெற்றிகொள்ள வா" என்றழைத்த வண்ணம் இருக்கிறது. அதனை நோக்கி அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு உங்கள் கால்களில்தான் உள்ளது!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஆதிக்கம் கொள்ள அனுமதியோம்! - எஸ்.கே - {SEP - 22 - 05}  
  ஒரு அவையில் உங்களருகில் அமர்ந்திருக்கும் நபர் உங்கள்மேல் படும்படியாக கால்மேல் கால்போட்டு அமர்கிறார். நீங்கள் உங்கள் உடலைக் குறுக்கிக்கொண்டு நகர்ந்துகொள்கிறீர்கள். அவர் உங்கள் சங்கடத்தைக் காணாதவர்போல் இன்னும் சௌகரியமாக காலை நீட்டி அமர்கிறார். இதனை உங்களைச் சுற்றியுள்ள பலர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
http://www.tamiloviam.com/unicode/09220507.asp
Expand / Collapse
 

என் உடன் பணியாற்றும் ஒருவர். அவர் பெயர் சிதம்பரம் என்று வைத்துக் கொள்வோம். அவர் யாரையும் சட்டென்று ஏக வசனத்தில் அழைக்க ஆரம்பித்துவிடுவார். ஒருமுறை பழகினால்கூட அடுத்தமுறை சந்திக்கும்போது "வாப்பா, போப்பா" என்று ஆரம்பித்து ஆழம் பார்ப்பார். ஏதும் எதிர்ப்பு வரவில்லையானால் "வா, போ"; பிறகென்ன, "வாடா, போடா"தான்! எடுத்த எடுப்பில் எகத்தாளமான, எடுத்தெரிந்த பேச்சு வரும் என்பதால் அவரிடம் எல்லோருமே சற்று அச்சத்துடன்தான் பேசுவர். அவரிடம் ஒரு கேள்வி கேட்டால் பதில் வராது. எதிர்க்கேள்விதான் வரும். "இதை ஏன் என்னிடம் கேட்கிறாய்? உன் உள்நோக்கம் என்ன?" என்று பிளேட்டை திருப்பிவிடுவார். அவருடைய மேலதிகாரிகளை ஒரு குற்ற உணர்வுடனேயே தவிக்கும்படி செய்து விடுவார். அவர் பணிபுரியும் நிறுவனத்தின் உள்ளந்தரங்கமெல்லாம் தனக்கு அத்துப்படி என்கிற உணர்வை எல்லோரிடமும் எப்படியோ ஏற்படுத்திவிடுவார். சமநிலையிலும் கீழ்நிலையிலுமிருப்பவர்கள் இவர் மேலிடத்தில் மிகுந்த செல்வாக்கு பெற்றிருப்பவர் என்று திடமாக நம்பினார்கள். மேலிட நிர்வாகிகள் இவர் கீழ்மட்டத்திலும், தொழிற்சங்க மத்தியிலும் மற்றும் சமூக அந்தஸ்திலுள்ள முக்கியஸ்தர்களிடையேயும் மிகுந்த செல்வாக்கு பெற்றவர் என்று நம்பினார்கள். ஆனால் இந்தப் பொய்த்தோற்றத்தை (facade) யாரும் கிழிக்கவில்லை. இவர் காலம் கடைசிவரை சிறப்பாக ஓடியது. இவரிடம் குற்றம் காணவேண்டுமென்பதற்காக வரும் ஆய்வார்களை மடக்கி அவர்களின் பதவி உயர்வு பற்றிய விவரம் ஏதாவதொன்றை எப்படியோ தெரிந்து கூறி தடுமாற வைத்துவிடுவார். அல்லது கணையை இன்னொருவர் பக்கம் திசைதிருப்பி விடுவார். Red herring என்கிற அஸ்திரத்தை முழுதுமாக பயன்படுத்தியவர் இவராகத்தான் இருக்கமுடியும்.

அவருடைய ஓய்வுபெறும் நாளன்று நடந்த பிரிவுபசார விழாவன்று நான் பேசும்போது அவருடைய இந்த அருமை பெருமைகளைக் குறிப்பிட்டு, "இந்த தொழில்நுணுக்கங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் செல்கிறாரே" என்று ஆதங்கத்துடன் கூறியதற்கு பதிலாக அவர் "Scott Adams எழுதியுள்ள நூல்களை வாசித்து அதில் கூறியுள்ளபடி நடவுங்கள்" என்றார்.

ஆனால், அந்த எத்தரின்கீழ் பணியாற்றிய ஒருவரிடம் அவர் இதுபோல் "வா, போ" என்று விட்டு ஆழம் பார்த்திருக்கிறார். அவர் பட்டென்று "என்னிடமெல்லாம் இந்த வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள். மரியாதை கொடுத்து மரியாதையை வாங்குங்கள்" என்று (அது ஒரு cliche-யாக இருந்தாலும் பரவாயில்லை என!) "கண்ட்ரைக் கோடாலி" போட்டார். உடனே "டபால்" என்று ஜகா வாங்கி "என்னங்க நான் உன் அண்ணன் மாதிரி" என்று குழைந்து, ஆனல் அதன்பின் அவரிடம் எச்சரிக்கையுடன் உரையாடத் தொடங்கினார்.

இதுபோல் நம்மை அடக்கியாண்டு ஆதிக்கம் கொள்ள பலர் இவ்வுலகில் என்னேரமும் தயாராக இருப்பார்கள். நாம்தான் மிகுந்த ஜாக்கிரதை உணர்வுடன் இருக்கவேண்டும். இதுபோன்ற நபர்களுக்கு ஊசிநுழையும் இடம்கூட கொடுக்கக் கூடாது. அவர்கள் அதில் யானையையே நுழைத்துவிடுவார்கள். இவர்கள் நம்மை மரியாதைக் குறைவுடன் நாலுபேர் எதிரில் அழைக்கவோ, நம்மீது ஆதிக்கம் கொள்ளவோ அனுமதித்தால் அது நம் ஆளுமையை பாதித்து, அதள பாதாளத்தில் தள்ளிடும். நம்மையறியாமல் பிறர்மேல் நம் பேச்சு எடுபடாமல் போய்விடும். ஆகையால் இத்தகைய சைத்தான்களை அடையாளம் கண்டுகொண்டு, நம் மேல் அவர்கள் அவ்வாறு அகந்தையுடனான ஆதிக்கம் செலுத்தாதவாறு காத்துக் கொள்ளல் அவசியம். நம் தனித்தன்மையையும் பெருமையையும் நாம்தான் காத்துக் கொள்ளவேண்டும். அதற்கு சிறிதும் பங்கம் ஏற்படாதவாறு ஒவ்வொரு கணமும் கவனமாகக் காக்கவேண்டும். நம் பெருமையையும் அதன் காரணமாக நமக்கு ஏற்படும் சக்தியையும் குலைக்க பிறர் முனைவது இயற்கை. ஆனால் அதை முறியடித்து நம் மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்வது நம் கடமை. இவ்விஷயத்தில் நாம் எப்பொதும் விழிப்புடனிருக்க வேண்டும். பிறருடைய முயற்சிகள் எல்லாமே தெளிவுடன் வெளிப்படாது. மிக நுட்பமாக காய்களை நகர்த்துவார்கள் சில தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள். இவர்களுடைய சூழ்ச்சியை உடனுக்குடன் முறியடித்து "நான் விழித்துக் கொண்டிருக்கின்றேனடா" என்று தெளிவாகக் காண்பித்துக் கொண்டேருக்கவேண்டும்.

கீதையில் இந்தக் கருத்தை, "நீயே உனக்கு முதல் நண்பனும், முதல் எதிரியுமாக அமைகிறாய்" என்றும், "உன்னை நீயேதான் உயர்த்திக் கொள்ள வேண்டும். உன்னை ஒருபோதும் தரம் தாழ்த்திக்கொள்ளாதே" என்றும் கூறப்பட்டிருக்கிறது.

 "உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானம் அவசாதயேத்
  ஆத்மன்யே வாத்மனோ பந்து ராத்மைவ ரிபுராத்மனஹா"

என்ற செய்யுளில். (இதன் தமிழாக்கத்தை வெண்பா வடிவில் இக்கட்டுரைத் தொடரின் ஒரு முந்தைய பகுதியில் இங்கே காணலாம்.)

பிறர்மேல் தான் கொள்ள முற்படும் ஆளுமை, ஆதிக்கம், அகந்தையுடனான அதிகாரம் போன்றவற்றை உலகறிய வெளிப்படுத்தும் விதமாக சில சிறுசிறு நடைமுறைகளை நுட்பமாக சிலர் செய்துகாண்பிப்பார்கள். இவை ஏதோ தற்செயலாக நடந்தவைபோல உங்களுக்குத் தோன்றும். ஆனால் அதைக் காணுறும் பிறருக்கு அவர்கள் உணர்த்தும் செய்தி என்னவெனில், "இந்த நபர்மேல் எனக்கு ஆதிக்கம் இருக்கிறது" என்பதுதான். இத்தகைய செயல்முறைகள் யாவை என்பதைப் பார்க்கலாம்.

 • ஒரு அவையில் உங்களருகில் அமர்ந்திருக்கும் நபர் உங்கள்மேல் படும்படியாக கால்மேல் கால்போட்டு அமர்கிறார். நீங்கள் உங்கள் உடலைக் குறுக்கிக்கொண்டு நகர்ந்துகொள்கிறீர்கள். அவர் உங்கள் சங்கடத்தைக் காணாதவர்போல் இன்னும் சௌகரியமாக காலை நீட்டி அமர்கிறார். இதனை உங்களைச் சுற்றியுள்ள பலர் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 • இதேபோல் நீங்கள் அருகிலமர்ந்திருப்பவரிடம் ஏதோ பேச முற்படுகிறீர்கள். அதற்காக அவர்பக்கம் கொஞ்சம் தலையைச் சாய்த்துத் திருப்பி உரையாடுகிறீர்கள். அவரோ, தன் முகத்தை உங்கள் பக்கம் திருப்பியோ, அல்லது தன் காதை உங்கள் பக்கம் கொணர்ந்தோ உங்கள் சொற்களைக் கேட்பதற்கான முயற்சி ஏதும் செய்யாமல் தலையை இன்னும் நன்றாக பின்னோக்கி சாய்த்து smug-ஆக அம்ர்ந்தபடியே, ஒரு அரை மில்லிமீட்டர் உதட்டை சுழிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இதிலிருந்து ஏனையோர் உணர்வது என்ன?

இவை சிறிய, சாதரணமான நிகழ்ச்சிகள்தான். ஆனால் subtle-ஆக அங்கு நிலவும் இந்த சூழ்நிலை உரக்கக் கூறும் செய்தி என்னவெனில், உங்கள் கை தாழ்ந்தும், அந்த நபர் கை உயர்ந்தும் இருக்கிறது என்பதுதான். "நாசூக்கு கருதி ஒதுங்குவதுதான் சிறந்தது, அதுதான் பண்பாடு, அதுதான் பிறர் கருத்தில் மேம்பட்டு நிற்கும்" என்று நீங்கள் நம்பினால், நீங்கள் மனித இயல்பினைப் பற்றிய கல்வியில் அரிச்சுவடிகூட தேறவில்லை எனப் பொருள். உங்கள்மேல் பிறர் கழிவிரக்கம் கொள்ளலாம். "பாவமய்யா அவர், இன்னொரு ஆளின் திமிரைப் பார்" என்று அவர்கள் எண்ணலாம். ஆனால் உங்களைவிட அந்த நபருக்குத்தான் அவர்கள் மதிப்பும் மரியாதையும் கொடுப்பர் என்பது திண்ணம். இது தன்னிச்சையாக நிகழ்வது. மனித மனம் வெற்றிபெறுவோரையும், ஆதிக்கம் செலுத்துவோரையும்தான் மதிக்க முற்படும். இரக்கம், தாழ்வு, பரிதாபம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும் நபர்களிடமிருந்து மக்கள் ஒதுங்க முற்படுவர். இதனால்தான் Nothing succeeds like success என்பார்கள்.

நான் இவ்வுலகில் பல திறமைசாலிகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் அவர்களைவிட பல படிகள் குறைவாக திறமை கொண்ட நபர்கள் பல பெருமைகளை அள்ளிச்செல்கிறார்கள்; உலகமே அவர்களைப் புகழ்ந்து தள்ளுகிறது. சமுதாயத்தில் உயரிய அந்தஸ்துகளைப் பெறுகிறார்கள். எல்லா பொது நிகழ்ச்சிகளிலும் அவர்களை அழைத்துச் சிறப்புச் செய்கிறார்கள்; விருதுகளை வழங்குகிறார்கள். வானளாவப் புகழ்கிறார்கள். அவர்கள் எதிரில் கூழைக் கும்பிடு போடுகிறார்கள் அவர்கள் என்ன வேண்டினாலும் தட்டாமல் செய்கிறார்கள். அந்தப் பெரிய மனிதர்கள் செய்யாததையெல்லாம்கூட அவர்கள் சாதித்துள்ளதாக முரசறைகிறார்கள். பெரிய அரசியல் தலைவர்கள், வெளி நாட்டிலிருந்து வரும் பிரமுகர்கள் எல்லோரும் இவரை கௌரவிக்கிறார்கள். இவர்கள் தொடர்புள்ள துறைகளில் மான்யங்கள் பெருவது, வெளிநாட்டு விஜயம், விருதுகள், நுழைவுகள் எல்லாவற்றிற்குமே இவர்களுடைய சிபாரிசு தேவை என்கிற நிலைமை உண்டாகிறது. ஆனால் உண்மையிலேயே இவர்களைவிட பன்மடங்கு திறமை கொண்ட வல்லுனர்கள் பலர் எங்கோ ஒரு மூலையில் முடங்கிக் கிடப்பார்கள். (அத்தகைய சிலர், திறமையில்லாத நபர்கள்கீழ் பணியாற்றும் சிறுமையைக் கூட அனுபவித்துக் கிடப்பர்). அவர்களை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்களுடைய திறமை பற்றித் தெரிந்திருந்தும்கூட சூழ்நிலை அனுகூலங்கள் கருதியும் (expediency), இற்றைப்படுத்தப்பட்ட நடைமுறைகளை எதிர்க்கும் சக்தியின்மையாலும், அவர்களை ஓரங்கட்டிவிட்டு "பவர்" உள்ளவர்கள் சொற்படித்தான் செய்வர். "இது நியாயமா" என்று நீங்கள் கேட்கலாம். அய்யா, இவ்வுலகம் இப்படித்தான் சுழல்கிறது. அதை உணர்ந்து புத்திசாலித்துவத்துடன் பிழைத்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம். இந்தக் கருத்தைத்தான் பில் கேட்ஸ் கூறுகிறார், "Life is not fair. Get used to it" என்று!

ஆனால் இந்த நிலைமையைப் பற்றி சற்று சிந்தித்து "ஏனிப்படி நிகழ்கிறது?" என்று கூர்ந்து நோக்கினால் ஒரு உண்மை தெளிவாகத் தெரிகிறது. பலரின் கூற்றுப் போல் இதற்கு அதிர்ஷ்டமோ, கிரஹங்கள் குந்தியிருக்கும் கட்டங்களோ காரணமல்ல. சமுதாயத்தில் பெருமை பெற தொழில் திறமையோ, நுண்கலை நுட்பங்களின் வல்லமையோ மட்டும் நிச்சயம் போதாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதைத்தாண்டி மனித இயல்புகளின் நெளிவுசுளிவுகளைப் புரிந்து, கொஞ்சம் ஈகோ போஷாக்கு, கொஞ்சம் அனுசரிப்பு, இடம் பொருள் ஏவல் அறிந்து சமயத்திற்கேற்ப ஒழுகுதல் -இவைதான் திறமையின் மேல் ஒரு லேயராக செயல்பட்டு வெற்றியையும் மதிப்பையும் தேடிக் கொடுக்கிறது.

நீங்கள் ஏதோ பத்தோடு பதினொன்றாக நானும் வாழ்ந்தேன் என்பதுபோலல்லாமல் பிறர் மதிக்கும் வண்ணம் தனித்தன்மை பெற்று விளங்க வேண்டுமானால் உங்கள் செயல்பாடுகள் dogmatic-ஆக அல்லாமல் மனித இயல்புகளுக்கேற்ப அமைந்திருத்தல் வேண்டும். அப்போதுதான் உங்களை, "Here is somebody" என்று இன்னொருமுறை திரும்பிப் பார்ப்பார்கள். ஏனெனில், If you are not somebody, you are nobody!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : சிறப்புப் பார்வை - எஸ்.கே - {JUN - 30 - 05}  
  உடல் தோற்றத்தைத் தவிர, நம் தோரணை, நடத்தை, நம் உடை, அதை நாம் அணிந்திருக்கும் முறை, நம் பேச்சு இதுபோன்ற செயல்பாடுகளினாலும் நாம் அடையாளம் காணப்படுகிறோம். இது இயற்கையல்லவே.
http://www.tamiloviam.com/unicode/06300512.asp
Expand / Collapse
 

எல்லா உயிரினங்களும் தன்னை முன்னிறுத்தி பலர் முன் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்றே எப்போதும் விரும்புகின்றன. அதற்காகக் கடுமையாகப் போராடியவண்ணம் இருக்கின்றன. வலிமை வாய்ந்த சிங்கம் புலி போன்ற விலங்குகளின் உணவாவதற்கே பிறப்பெடுத்த (being part of the natural food chain) சைவ உணவு உண்ணும் மான், வரிக்குதிரை போன்றவைகள்கூட தமக்குள் யார் பெரியவன் என்ற போராட்டத்தை நிகழ்த்தியவண்ணம் இருக்கின்றன. மனித இனம் இத்தகைய உந்துதலை இன்னும் பல பரிமாணங்களில் வெளிப்படுத்தி வருகிறது. தான் மதிக்கபட வேண்டும், "நான்" என்கிற அகப்பாடு என்னேரமும் திருப்திப்படுத்தப்பட வேண்டும் என்கிற மனப்பான்மையுடந்தான் மனிதன் ஆசைப்படுகிறான். அந்த அவாவை வெற்றியுடன் நிறைவேற்றும் வண்ணம் எல்லோருடைய செயல்பாடும் அமைவதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின்முன் பெருமையுடனும், சிறப்புடனும், எல்லோரும் கொண்டாடும் வண்ணம் வாழத்துடிக்கும் மனிதர்களில் சிலரே அதனை அடையக்கூடிய வழிமுறைகளை அறிந்து செயல்படுகின்றனர். அவர்களை நாம் எல்லோரும் போற்றுகிறோம்.

பிறர் மதிக்க வாழவேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் சச்சின் தெண்டுல்கராகவோ, ஷாருக்கானாகவோ, அம்பானியாகவோ, அமிதாப்பச்சனாகவோ, மேரியா ஷரபோவாவாகவோ, ஐஸ்வர்யா ராயாகவோ ஆகமுடியுமா? அல்லது அத்தகைய முதன்மைநிலையை எட்டினால்தான் பெருமை அடைந்ததாக ஆகுமா? அது நிச்சயம் இயலாது. ஏனெனில் எந்தத் துறையிலும் உச்சிமுனையில் இடம் மிகக் குறைவாக இருக்கும். நிறையபேர் அங்கு நிற்கமுடியாது. தொடர்ந்து அதே நிலையை தக்கவைத்துக் கொண்டு இருப்பதும் முடியாது. பின் நான் பெருமை பெறுவது எங்ஙனம் என்று கேட்கலாம். ஏன் நாம் இருக்கும் இடத்திலேயே சிறப்பு பெற முயலக்கூடாது. In search of excellence என்ற நூலில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் துப்புரவுத் தொழிலாளியாகவோ, ஒரு கடையில் விற்பனை உதவியாளராகவோ இருந்தாலும் அந்த நிலையிலேயே பெருமை வாய்ந்தவர்களாக விளங்க முடியும். ஒரு உணவகத்துக்குச் சென்றால் நம்மை நன்கு கவனித்து சிறப்பாக நமக்கு சேவை செய்யும் பணியாளைரை மதிப்புடன் நோக்குகிறோமா இல்லையா? அதேபோல் திறமையான மற்றும் நல்ல அணுகுமுறை கொண்ட மனிதர்கள் எந்த தளத்தில் இருந்தாலும் அடையாளம் காணப்பட்டு மதிக்கப்படுகிறார்கள். எல்லோரிடமும் ஒரு சிறப்பம்சம் இயற்கையிலேயே இருக்கும். அதனை அடையாளம் கண்டு அந்தத்துறையில் தன் திறனை வளர்த்துக் கொண்டால் நிச்சயம் பெருமை பெறமுடியும்.
 
சிலர் நம்மைக் கடந்து சென்றால் "யார் அது" என்று நம்மையறியாமல் வினவுகிறோம். அதற்கு அவர்கள் தோற்றம் காரணமாக இருக்கலாம். அது இயற்கை அளிப்பது அல்லவா? இல்லை. அது முழுமையான காரணம் இல்லை. இயற்கையில் கண், காது, மூக்கு, தோலின் நிறம் என்று சிறப்பம்சங்கள் கொண்டிருந்தாலும், அதனை சரியான முறையில் பிறர்கண்முன் காண்பிக்கும் வகையில் செயல்படாத பலர் "டல்"லடித்துக் கொண்டு, பிறர் இன்னொருமுறை நோக்கத் தோன்றாத பலரை நாம் கண்டிருக்கிறோம். அதே நேரத்தில் மிகச் சாதாரண தோற்றத்தையுடைய பலர் எல்லோருடைய பார்வையும் ஒருசேர தன்மேல் பாயும்வண்ணம் சிறப்புப் பெருகிறார்கள் (cynosure of all eyes). இதன் காரணம் அவர்களின் ஆளுமை, முனைப்புடன் தன்னை முன்னிறுத்தும் முறை, அவர்கள் வளர்த்துக் கொண்ட திறமை, தன் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து உள்நோக்கி, பிறர்கள்முன் தான் எப்படித் தோன்றவேண்டும் என்கிற கணக்கில் பிசகிலாமல் வெளிக்காண்பிக்கும் திறன் ஆகியவைதான். இதெல்லாம் தானகத் தோன்றுவதல்ல. நாம் முழு கவனத்துடன் ஈடுபடவேண்டிய செயல்பாடுதான் இத்தகைய சிறப்பை அளிக்கிறது.

உடல் தோற்றத்தைத் தவிர, நம் தோரணை, நடத்தை, நம் உடை, அதை நாம் அணிந்திருக்கும் முறை, நம் பேச்சு இதுபோன்ற செயல்பாடுகளினாலும் நாம் அடையாளம் காணப்படுகிறோம். இது இயற்கையல்லவே. ஒவ்வொரு சிறிய செயல்நிலையும் நன்கு திட்டமிடப்பட்டு, பிறர்கண்முன் இது எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை ஆராய்ந்து, தெரிவு செய்து செயலாற்றினால், நாம் எதிர்பார்க்கும் எதிர்வினையை அடுத்தவர் மனத்தில் தோற்றுவிக்கலாம்.

நம் ஒவ்வொருவர் உள்ளும் ஒரு பொரி அடங்கியிருக்கும். அதனை அடையாளம் கண்டு, ஊதிப் பெரி¾¡க்கி வெளிக்கொணர்ந்து பிறர் கண்முன் வெளிச்சம் போட்டுக் காண்பிப்பது நம் கையில்தான் இருக்கிறது. எந்தத் திறமையும் அதனைப் பரிமளிக்க வைக்கும் பாங்கினால்தான் பெருமை பெருகிறது. அதனை எங்கேயோ பதுக்கி வைத்திருந்தால் யாருக்கும் தென்படாது. நம்மிடம் என்னென்ன மேன்மைகள் பொதிந்து கிடக்கின்றன என்பதை ஊன்றித் தோண்டியெடுத்து உற்றுநோக்கி, முத்துக் குளித்து அறிந்துகொள்ள யாருக்கும் தேவையுமில்லை, உந்துதலுமில்லை, பொறுமையுமில்லை. நான் முன்னமையே கூறியுள்ளபடி What is invisible, doesn't exist. நம் கைப்பொருளை வெளிச்சம்போட்டுக் காட்டி செலாவணியாக்குவது நம் பொறுப்பல்லவா.

ஏதோ படித்தோம், பட்டம் வாங்கினோம், வேலையில் சேர்ந்தோம் என்று விளக்கெண்ணை வாழ்க்கை வாழாமல், உபரியாக ஒரு திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் நிறுவனத்திலோ, நண்பர் குழுமத்திலோ, குடியிருப்பிலோ ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், நீங்கள் அதில் ஏதேனும் ஒரு வகையில் முயன்று பங்கெடுக்க வேண்டும். கூட்டத்தில் சொற்பொழிவாற்றலாம். பாட்டுப் பாடலாம். மேலாண்மை செய்யலாம். நிச்சயம் "அது யார்" என்று கேட்கப் படுவீர்கள். என் நண்பர் ஒருவருக்கு mouth organ வாசிக்கத் தெரியும். எங்கு சென்றாலும் அதை வாசித்துக் காண்பித்து எல்லோருடைய கைத்தட்டலையும் பெற்றுவிடுவார். இது ஒரு சிறிய விஷயம்தான். ஆனால் பிறர் முன் நாம் சிறப்பாக அறியப்படும்போது அது எத்தகைய மனநிறைவைக் கொடுக்கிறது!

குறைந்த சிலவில் சிறந்த பொருட்களை வாங்கி பாவிக்கும் திறமை சிலரிடம் காணலாம். நாம் நிறை காசு சிலவு செய்து வாங்கியுள்ள பொருட்களை விட அந்த நபர் சல்லிசாகப் பெற்றுள்ளவை சிறப்பாக அமைவதைப் பார்க்கிறோம். இதுபோல் ஒரு தனித்திறமை மற்றும் தனித்தன்மையைக் காண்பிக்கும் உத்தியைக் கடைப்பிடித்தால் நாம் பத்தோடு பதினொன்றாக இல்லாமல் ஒளிக்கற்றைகள் நம்மீது பாய்ந்து தனியாக "சிறப்புப் பார்வை" பெருவோம் என்பது திண்ணம்.


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : Networking செயல்பாட்டு - எஸ்.கே - {JUN - 23 - 05}  
  இந்த networking செயல்பாட்டினால் சாதாரணமானவர்கள்கூட பெருமை பெற முடியும். தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், மற்றும் பிறருக்கும் மிக உபயோகமான வாழ்க்கை வாழலாம். அதனால் சமுதாயத்தில் முக்கிய புள்ளியாக அறியப்படலாம். அனைவராலும் ஒரு "ஆபத்பாந்தவனாக"க் கொண்டாடப்படலாம்!
http://www.tamiloviam.com/unicode/06230503.asp
Expand / Collapse
 

கேள்வி:

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் சாதாரணமான வேலையில் இருப்பவன். ஆனால் சமூகத்தில் எல்லோருடைய மதிப்பையும் பெற்று, ஒரு முக்கிய புள்ளியாக அடையாளம் காட்டப்பட வேண்டும் என்ற துடிப்பு எப்போதும் உண்டு. அதற்கு என்ன செய்யவேண்டும்? பெரிய பதவியைப் பெறுவதோ, அல்லது யாரும் செயற்கரிய சாதனை ஏதாவது செய்வதோ, கிரிக்கெட் வீரர், சினிமா நடிகர், இசைக் களைஞர், எழுத்தாளர், கவிஞர், அல்லது வேறு நுண்கலை வல்லுனர் இதுபோல் ஏதாவதொரு வகையில் போற்றுதற்குறிய பெருமை உள்ளவனாக ஆவதோ என்னால் ஆகுமென்று தோன்றவில்லை. இவை தவிர வேறு ஏதாவது வழிமுறை உண்டா?

பதில்:

எனக்குத் தெரிந்த ஒருவர், மைய அரசில் ஓரளவு சொல்லிக் கொள்ளக்கூடிய அளவில் பெரிய அதிகாரியாக சென்னையில் இருந்தார். அவருக்கு தன் சொந்த ஊரின்மேல் பெருமை மிக அதிகம். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தன் ஊரைப்பற்றி பேசிக்கொண்டிருப்பார். அவர் கீழ் பணியாற்றுபவர்கள் "கடனே"வென்று தலையாட்டிக் கொண்டிருப்பார்கள். அவ்வப்போது, "அப்படியா, சார்" என்று வாயசைத்து வைப்பார்கள். பிறகு அவர் இல்லாதபோது, "என்ன, இன்னைக்கு கடையநல்லூர் புராணம் புதுசா என்னமாச்சும் உண்டா?" என்பார் ஒருவர். "என்னத்தை புதுசா இருக்கு, எல்லாம் ஏக்கனையே அரைச்சமாவுதான்" என்று அடுத்தவர் சலித்துக் கொள்வார். ஆனால் இந்த சொந்த ஊர் அபிமானம்தான் அந்த அதிகாரியை சமூகத்தில் மிகவும் பிரபலமாக ஆக்கிக்கொண்டிருந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது.

அந்த அதிகாரியின் பெயர் அய்யனார் என்று வைத்துக் கொள்வோம். அவருடைய ஊர்க்காரர் எவரையாவது கண்டால் அய்யனார் அவரிடம் முழுவதுமாக குசலம் விசாரித்து எப்படியாவது ஒரு நெருக்கமான தொடர்பை இற்றைப்படுத்திவிடுவார். பிறகு அந்த ஊர்க்கார நண்பருக்கு வேண்டிய வசதிகளை செய்வித்து வழியனுப்புவார். அந்த நபர் தன் ஊர்போய்ச்சேர்ந்தவுடன் செய்யும் முதல் வேலை நம் அய்யனார் பெருமையையும் அவர் செய்த உபசரிப்புகள் பற்றிய பெருமிதத்தையும் தம்பட்டம் அடிப்பதுதான். மேலும் சென்னை போன்ற பெரிய நகரங்களில் வசிக்கும் தன் ஊர் மற்றும் சுற்றுப்புரத்தை சொந்த ஊராகக் கொண்ட முக்கியஸ்தர்களை அறிமுகம் செய்துகொண்டு, அவர்களுடைய பிறந்தநாளன்றும், பொங்கல், தீபாவளி நாட்களுக்கும் மறக்காமல் வாழ்த்து அனுப்புவார். ஒரு நோட்டு போட்டு எல்லோருடைய பிறந்த நாள், குழந்தைகளின் படிப்பு, உடல்நலம், அவர்களுடைய உறவினர்கள் பற்றி, வீடுகட்டுவது போன்ற செய்திகள், வேலைபார்க்கும் இடம், அதிலுள்ள விவகாரங்கள் - இது போன்ற எல்லா விவரங்களையும் சேகரித்து, அவற்றை அவ்வப்போது update-செய்தும் வைத்திருப்பார்.

மிகவும் இங்கிதத்துடன் பழகுவார். பெண்கள், சிறுவர்கள், வயதில் பெரியவர்கள், கோபக்காரர்கள், தற்பெருமை கொண்டவர்கள், அகப்பாடு மிக்கவர்கள் (people with king-sized ego) இதுபோன்ற பலதரப்பட்ட மனிதர்களிடம், ஆளுக்குத் தகுந்தாற்போல் பேசுவதில் சமர்த்தர். குறிப்பாக பெண்களிடம் பேசும்போது மிக நாசூக்காக சொற்களைக் கையாளுவார். ஒரு கோடு போட்டுக்கொண்டு அதைத் தாண்டாமல், அதே நேரத்தில் அவர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட நெருக்கமானவர்போல் தோற்றமளிக்கும்படி பழகுவார். இதனால் அய்யப்பன் எவர் வீட்டுக்குச் சென்றாலும் ருசியான டிபன், காப்பி ரெடியாக இருக்கும் (உங்களுக்கும் எனக்கும் கிடைப்பதுபோலல்லாமல்)!

இப்படி தன் ஊர்க்கார நண்பர்கள் பலருடன் உரையாடும்போது சிலர் தங்கள் பிரச்னைகளை மனம்விட்டு இவரிடம் சொல்வார்கள். இவர்தான் மிகுந்த அனுசரணையுடன் பேசுபவர் ஆயிற்றே; இவரிடம் யாரும் எதையும் மறைக்க விரும்ப மாட்டார்கள். சரி, வைப்புநிதி ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு பையன் பள்ளியில் சேருவதில் பிரச்னை. அதைக் குறித்து வைத்துக் கொள்வார். பாஸ்போர்ட் ஆபீசில் வேலை செய்யும் இன்னொருவருக்கு வங்கியில் கடன் வாங்குவதில் தாமதம். முனிசிபல் ஆபீசில் இருக்கும் மற்றவருக்கு பாஸ்போர்ட் சீக்கிரம் கிடைக்க வேண்டும். இரெயில்வே அதிகாரி ஒருவருக்கு கட்டிட வரைபடம் அந்த முனிசிபாலிடியின் ஒப்புதல் உடனே கிட்டவேண்டும். வங்கி அதிகாரி ஒருவர் வீட்டில் விருந்தினர் வந்த வண்ணம் இருப்பர். அவர்களுக்கு இரயில் டிக்கட் முன்பதிவு செய்யாமல் உடனே இடம் கிடைக்கவேண்டும். (அவருடைய மனைவிக்கு உறவினர்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா!). இப்போது நம் அய்யனார், ஒருவர்மூலம் இன்னொருவர் பிரச்னையைத் தீர்த்து வைத்து எல்லோருடனும் உறவை நெருக்கமாக்கிக் கொள்வார்! அது சுலபமான செயல் அல்ல. நிறைய நினைவாற்றலும், அலுப்பு பாராமல் தொடர்ந்த follow-up-ம் வேண்டும். இத்தகைய செயல்பாட்டின் மூலம் நம் அய்யப்பன் தன்னை மையமாக வைத்து ஒரு வலைப் பின்னலையே ஏற்படுத்துவதில் வெற்றி கண்டார். இதில் முக்கியமான strategy என்னவென்றால், இவர்கள் அனைவரும் தன் தேவைகளுக்கு ஐயப்பனையே அணுகுவரேயன்றி, தங்களுக்குள் ஒரு short-circuit ஏற்படுத்திவிடாதபடி அவர் கவனித்துக்கொள்வதுதான்!

அடுத்த கட்டமாக இந்த Network-ஐ விரிவாக்க தன் சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வேறு பலரையும் சேர்த்துக் கொண்டார். வெளியூரில் இருப்பவர்களிடம்கூட தனக்கு வேண்டியவற்றை சாதித்துக்கொள்ள ஆரம்பித்தார். "கட்டாயம் எனக்காக நீங்கள் இதைச் செய்துமுடிக்கவேண்டும். சாக்குப்போக்கு சொல்லக் கூடாது" என்று தொலைபேசி மூலம் அன்புக்கட்டளை இடுமளவுக்கு பல பெரிய மனிதர்களிடம் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. இத்தணைக்கும் அப்போது கைப்பேசி, செல்பேசி போன்றவையெல்லாம் கிடையாது.

ஐயப்பன் நேர்மையானவர். எவருடைய அறிமுகத்தையும் தவறான முறையில் பயன்படுத்த மாட்டார். யாராவது ஒரு மாதிரி இன்னொருவரை exploit செய்து parasaite போல் வாழ்பவர்கள் என்று தெரிந்தால் நாசூக்காக வெட்டிவிடுவார். அவருடைய நண்பர்கள் பலர் தங்கள் அந்தரங்க விஷயங்களில்கூட அவருடைய அறிவுரையைக் கேட்பார்கள். ஒருவருடைய அந்தரங்கத்தையும் அவர் "ஊரம்பலத்துரைக்க" மாட்டார். இதனால் அவர்சார்ந்த குழாம் முழுவதற்கும் அவர் ஒரு குடும்ப நண்பராகவே எற்றுக் கொள்ளப்பட்டார். இத்தகைய அணுகுமுறையை முழுதுமாகக் கடைப் பிடிக்கவேண்டும் என்பதற்காகவே அரசியல்வாதி எவருடனும் எந்தவிதத் தொடுப்பும் வைத்துக் கொள்வதில்லை. பல நேரம் அவருக்கு அரசியல்வாதிகளிடன் வேலை ஆகவேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதை அறவே தவிர்த்துவிடுவார்.

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அய்யப்பன் network செய்து வைத்திருந்த பலர் அவரைவிட பெரிய பதவியிலும், உயர்ந்த சமுதாய அந்தஸ்திலும் இருந்தார்கள். ஆனால் அய்யப்பனை சமமாக வைத்துப் பழகுவதிலோ, அவரிடமிருந்து உதவிகள் பெருவதையோ சிறுமையாகக் கருதவில்லை. அந்த அளவுக்கு நாசூக்காக அய்யப்பன் பழகியிருந்தார். யாருடைய ஆளுமைக்கும் குறைவு ஏற்படுத்தாமல் அவருடைய செயல்பாடுகள் அமைவதால் அவர்கள் அய்யப்பனுடைய அருகாமையில் comfortable-ஆக இருந்தனர். அசடு வழிய ஜோக் அடிக்க மாட்டார். பேசவேண்டுமே என்று ஏதாவது வேண்டாத விஷயத்தைப் பற்றி பிரஸ்தாபித்து மூக்கறுபட மாட்டார்.

அய்யப்பன் இதுபோன்ற வெகுஜனத் தொண்டில் ஈடுபட்டிருந்தாலும் தன் குடும்பத்தாரையும் விட்டுக் கொடுப்பதில்லை. எல்லா முக்கிய நிகழ்ச்சிகளுக்கும் அவர்களை அழைத்துச் சென்று எல்லோரிடமும் அறிமுகம் செய்து வைப்பார். அவர்களை தன்னம்பிக்கையுடையவர்களாக வைத்திருந்தார். இத்தகைய balanced approach இருந்ததால் சுற்றம், சூழல் எல்லோரும் அவரைப் பெருமையுடன் நினைத்தனர்.

இந்த networking செயல்பாட்டினால் சாதாரணமானவர்கள்கூட பெருமை பெற முடியும். தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும், மற்றும் பிறருக்கும் மிக உபயோகமான வாழ்க்கை வாழலாம். அதனால் சமுதாயத்தில் முக்கிய புள்ளியாக அறியப்படலாம். அனைவராலும் ஒரு "ஆபத்பாந்தவனாக"க் கொண்டாடப்படலாம்!

நீங்களும் முயற்சி செய்யலாமே!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : பகை மூலம் பயன் கொள் - எஸ்.கே - {JUN - 02 - 05}  
  Ego self improvement helping others
http://www.tamiloviam.com/unicode/06020505.asp
Expand / Collapse
 

ஒரு எதிரியை உருவாக்குவது எங்ஙனம் என்று ஒருவர் கேட்டார். அதற்கு ஒரு அறிஞர், “இது மிகச் சுலபம். உங்கள் சமநிலையிலுள்ள ஒரு நண்பருக்கு ஒரு உதவி செய்யுங்கள். பிறகு பொதுவில் அதை ஓரிருமுறை எடுத்துக் கூறுங்கள். அவ்வளவுதான். ஒரு எதிரி முளைத்தாயிற்று! ஏனெனில் யாரும் தான் பிறரின் உதவியால்தான் எதையும் பெற்றொம் என்பதை அவர்தம் ஆழ்மனம் ஒப்புக் கொள்ளாது. இது நான் முன்னமையே விளக்கிக் கூறியபடி நம் ஈகோவின் செயல்பாடு. அதுபோல் முழுமனத்துடன் ஒப்புக் கொள்வது நம் இயற்கை இயல்புக்கு ஒவ்வாது. நம் மனம் நம் மேல் ஒருசார்பாகத்தான் செயல்படும். ஆகையால் நம்மைப் பற்றிச் சிந்திக்கும்போதெல்லாம் நம் உதவியைப் பெற்றவரிடத்தில் ஒருவித தாழ்வு மனப்பான்மை பொங்கும் அதனால் அவர் மனம் மருகுவர். நாளடைவில் உங்களுக்கு ஏதாவது இடர் செய்து, மூளியான தன் ஈகோவை இட்டு நிரப்ப அவர்தம் மனம்  “நம நம”வென்று இடித்துக் கொண்டிருக்கும். இந்த நிலையில் நீங்கள் ஒரு முழுதான பகைவனைப் பெற்றிருப்பீர்கள்”  என்றார்.

வெளிப்படையாக தம் சொல்லாலும் செயலாலும் நம் பகையாக அடையாளம் காணப்பட்டவர்கள் முன் நாம் மிக்க எச்சரிக்கை உணர்வுடன் இருப்போம். ஆனால் உட்பகை உணர்வுடன் கூடிய உங்களால் நண்பர்களாக வரிக்கப்பட்டவர் எதிரில் உங்களுக்கு எந்தவித பாதுகாப்புமில்லை. அவர்கள்தான் மிக ஆபத்தானவர்கள் என்பதை என் உட்பகை பற்றிய முந்தைய கட்டுரையில் விளக்க முற்பட்டிருக்கிறேன். நம்மைச் சுற்றி நிற்கும் நம் நண்பர்கள் உண்மைநிலை நம் கவனத்துக்கு எட்டாமல்  ஒரு அரணை எழுப்பி விடுவர். பிறகு நீங்கள் அவதானிப்பது எல்லாம் அந்த குழுவினர் கையினால் அளிக்கும் பதப்படுத்தப்பட்ட செய்தியே. அது அந்தக் கோஷ்டியினருக்கு இணக்கமானதாக அமைந்தாலும், உங்களைப் பொறுத்தவரையில் இது ஒரு ஆபத்தான நிலையே. இரானில் முன்பு ஆட்சி செய்த ஷா என்பவர்  “அரசர்களுக்கு அரசன், ஆரியர்களின் விடிவெள்ளி, ஷா-இன்-ஷா முகமமது ரீஸா ஷா பஹலவி” என்று தன்னை அழைத்துக் கொண்டு தன் நாட்டு மக்கள் தன்னை மிகவும் கொண்டாடுவது போல் நம்பிக் கொண்டிருந்தார். ஆனால் அவருடைய அதிகாரம் முழுதும் விலகிப் போய் அடிப்படைவாதிகள் கையில் சென்றடைந்ததை அவர் அறிந்தாரில்லை.  தன்னைச் சுற்றியுள்ள  துதிபாடிகளையே நம்பிக் கொண்டிருந்தவர் கடைசியில் தன் நாட்டைவிட்டே ஓடவேண்டிய நிலை ஏற்பட்டது நமக்கெல்லாம் தெரியும்.

சாதாரணமாக நல்ல நண்பர்கள்கூட தன்னறியாமல் நமக்கு ஒரு வகையில் தீங்கு செய்கிறார்கள் என்பதுதான் உண்மை. நண்பர்கள் பெரும்பாலும் உங்களெதிரே அப்பட்டமான உண்மையை உரைக்க மாட்டார்கள். என்னதான் திருக்குறளிலும் வேறுபல வாழ்க்கை நெறிகளை வலியுறுத்தும் நன்னூல்களிலும் நட்புக்கு இலக்கணங்கள் வகுக்கப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் கடைப்பிடிப்பது நடைமுறைச் சாத்தியமில்லை. “மிகுதிக்கண் மேற்சென்று இடித்துக்” கொண்டிருக்கும் நண்பர்கள் நிச்சயம் நம் மனத்திற்கு இசைந்தவர்களாக இருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். அவர்களை நாம் தவறாகத்தான் முதலில் புரிந்து கொள்வோம். அவர்களின் உன்னத, பழுதில்லாத நோக்கினைப் புரிந்து கொள்ளும்போது நட்பு முறிந்திருக்கும். இதனால்தான் நண்பர்கள், நண்பர்களாகவே தொடர்வதற்காக கூடியவரையில் பிணக்குக்கு இடம் கொடுக்காமல் பேசுவார்கள். நல்லிணக்கத்திற்காக உங்கள் மனத்திற்கு இசைந்தவற்றையே பேசுவார்கள். அதனால் அவர்கள் மூலம் உங்கள் சூழலின் உண்மை நிலையை உங்களால் முழுதுமாக அறியமுடியாது. “அவர்கிட்ட இதை எப்படிப்போய் சொல்வது. நம்பளைப் போய் தப்பா நினைச்சுக்கிட்டா என்ன செய்யறது? நமக்கெதுக்கு பொல்லாப்பு?” இப்படிப்பட்ட பேச்சுக்களை நீங்கள் நிறையக் கேட்டிருப்பீர்கள்.

உண்மையில் நீங்கள் உங்கள் நண்பர்களைப் பற்றி முழுதுமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய ஒரு பக்கத்தைதான் உங்கள் அவதானிப்புக்கு அளித்திருப்பார்கள். அவர்களுடைய மறுபுறம் தெரிய வேண்டுமா? அவர்களை உங்கள் கீழ் வேலையிலமர்த்துங்கள். அல்லது நீங்கள் அத்தகைய ”நெருங்கிய” நண்பரொருவர் கீழ் வேலயிலமருங்கள். பிறகு தெரியும் உண்மை நிலை. 

 எனக்கு அறிமுகமான தொழிலதிபர் ஒருவர் தன்னுடன் அடிநாளில் படித்தவர் ஒருவர் மிக ஏழ்மையான தோற்றத்துடன்  சாலையில் நடந்து செல்வதைக் கண்டிருக்கிறார். அவரைச் சந்தித்து குசலம் விசாரித்ததில், அந்த நபர் வேலையில்லாமல் ஒரு வேளை சாப்பாட்டிற்கே சிரமப்படுவதாகவும், தன் இரத்தத்தை மருத்துவ மனைகளுக்கு விற்று சமாளிப்பதாகவும் கூறினார். அவர்மேல் இரக்கப்பட்ட தொழிலதிபர், தன் நிறுவனத்திலேயே வேலை கொடுத்தார். சில மாதங்கள் கழித்து அவருடைய அலுவலகம் ஒன்றில் ஒரு தொழிலாளர் தகராறு நடந்து, அது முற்றி “கேரோ”, வேலை நிறுத்தம் வரை சென்றது. அந்தக் கலவரங்களையெல்லாம் முன்னின்று நடத்தி வம்பு செய்தது அவர் இரக்கப்பட்டு வேலையிலமர்த்திய அவருடைய முன்னாள் நண்பன் தான். அவன் மறுபடியும் தன் முந்தைய  “இரத்த தானம்” செய்யும் நிலைக்கு சீக்கிறமே திரும்பினான் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. பழைய நண்பர்கள் தம் ஒப்பு நோக்கும் தன்மையால், “இவனுக்கெல்லாம் வந்த வாழ்வைப் பாருய்யா. என்னோட படிக்கும்போது என் பலப்பத்தை வாங்கித் தான் எழுதுவான். இப்ப இவன்கீழ நான் வேலை செய்யவேண்டிய நெலமை. ம்ம்ம்” என்று மருகுவரேயன்றி உங்களிடம் நன்றியுடையவராக இருப்பார்கள் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் மனித மனத்தின் செயல்பாட்டினை அறிந்தவரில்லை என்றே பொருள்!

உங்கள் குறைநிறைகளை தெளிவாக அறிந்து கொள்ளவேண்டுமானால் உங்களுடைய வெளிப்படையான  பகைவர்களை அணுகிக் கேளுங்கள். புட்டுப் புட்டு வைப்பார்கள். ஏனெனில் உங்கள் நன்மதிப்பைப் பெறும் நோக்கோடு அவர்கள் உரையாட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை. உங்களை எந்த அளவுக்கு மனம் புண்படுத்தும்படி உரைக்கலாம் என்பதுதான் அவர்தம் உந்துதலாக இருக்கும். அந்த அணுகுமுறை கட்டாயம் உங்கள் மனத்தைக் காயப்படுத்தும் என்றாலும் அதையே உங்கள் உண்மை முகத்தைக் காண்பிக்கும் கன்னாடியாக ஏற்றுக் கொள்ளலாம். நீங்கள் ஏதேனும் தேர்தலில் நின்றால், உடனே உங்கள் எதிரிகள் கூர்மாவதாரம் எடுத்து உங்களைப் பற்றியும் உங்கள் பின்புலம் பற்றியும் நீங்களே அறிந்திராத பல உணமைகளை அகழ்வாராய்ச்சி செய்து வெளிக்கொணர்வார்கள்!

ஒரு அரசனின் எதிரி அவனிடம் “உன் வாய் சாக்கடைபோல் நாற்றமடிக்கிறது” என்று இகழ்ச்சியுடன் கூறினான். “இவன் கூற்று ஒருவேளை உண்மையாக இருக்குமோ? ஆனால் இதுவரை இந்த விவரத்தை யாரும் என்னிடம் கூறவில்லையே” என்று எண்ணிய அரசன், யாரிடம் கேட்டு இது விவரமாகத் தெளிவு பெறலாம் என்று யோசித்தான். தன் மந்திரி பிரதானிகளிடம் கேட்கலாமென்றால், அவர்கள் அரசனை மகிழ்வடையச் செய்வதற்காக, “மன்னா, தங்கள் திருவாய் மலர்த்தோட்டம்போல் மணக்கிறது. அந்த எதிரி மன்னனின் கூற்று விஷமத் தன்மையானது. உடனே அவன் நாட்டின்மேல் படையெடுப்போம். இந்த அவமானத்தை சகியோம்” என்று ஜால்ரா தட்டுவார்கள். இப்படியெல்லாம் யோசித்த மன்னன் கடைசியில் கற்பில் சிறந்தவளான தன் மனைவிடம் சென்று, “உண்மையிலேயே என் வாய் நாறுகிறதா” என்று வினவினான். “ஆம்” என்றாள் அவள். “ஏன் இத்தனைநாள் இதனை என்னிடம் கூறவில்லை?” என்று கோபமாகக் கேட்டான். அதற்கு அந்தப் பேதை, “எனக்கென்ன தெரியும்; ஆண்கள் வாயே இப்படித்தான் நாறும் என்று எண்ணினேன்” என்றாள்!

பகைவர் மூலமும் நாம் நன்மை பெறலாம் என்பதைத்தான் வள்ளுவர்,

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி பெறும்

என்ற குறளில் நடித்துச் சிரிக்கும் நண்பர்களைவிட, நேருக்கு நேர் நிற்கும் பகைவர்களால் பத்துக் கோடி  மடங்கு நன்மை விளையுமென்கிறார்.

உட்பகையை விட வெளிப்பகை மேல் என்பதைக் கண்டோம். வள்ளுவர் “பகைத்திறம் தெரிதல்” எனும் அதிகாரத்தில் “பகை நட்பாக் கொண்டொழுகும்” பண்பைப் பற்றி விளக்குகிறார். ஆனால் பகையும் நட்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் அல்லவா? தரம் பார்த்து இனம் கண்டு, அதனை யொத்து ஒழுகுதல் நம் கடன் அல்லவா!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : "அப்படியே கொட்டுதல் அறிவின்மை" - எஸ்.கே - {MAY - 19 - 05}  
  மனிதர்களில் பலருடைய எண்ண ஓட்டம் உங்களுடையதைப் போன்றுதான் இருக்கிறது. அவர்கள் "திறந்த புத்தகமாக"வே இருக்க விரும்புகிறார்கள். என்ன நினைக்கிறார்களோ அதனை அப்படியே (உப்பு, மிளகு கூட தூவாமல்!) உலகின்முன் இறைக்க முனைகிறார்கள். தம் கருத்துக்களை அப்பட்டமாக பறைசாற்றுகிறார்கள்.
http://www.tamiloviam.com/unicode/05190503.asp
Expand / Collapse
 

கேள்வி. 3

அதிகமாகப் பேசக்கூடாது என்று சொன்னீர்கள், சரி. ஆனால் வெளிப்படையாக என் எண்ணங்களை ஏன் அனைவரும் அறிய பொதுவில் வைக்கக்கூடாது? போர்த்தந்திரங்கள், அரசியல் சூழ்ச்சிகள் போன்றவற்றுக்கு நீங்கள் கூறும் அறிவுரை பொருத்தமாக இருக்கும். ஆனால் அன்றாட வாழ்க்கையில் நம்மைச் சுற்றியுள்ள அனைவரையும் எதிரிகளாகவும், நம்மைக் கவிழ்க்க அனவரதமும் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்ற சூழ்ச்சிக்காரர்களாகவும்  பாவித்துக் கொண்டு, பூரண கவசத்துடன் உரையாடுவது சாத்தியமா? மனம்விட்டுப் பேசி, முழுமையாக ஒளி ஊடுருவும் கன்னாடிபோல், தெளிந்த நீர்போல்தான் நான் நானாகவே இவ்வுலகத்துக்கு வெளிக்காண்பிக்க விழைகிறேன். இதில் தவறென்ன இருக்கிறது?


பதில்:

மனிதர்களில் பலருடைய எண்ண ஓட்டம் உங்களுடையதைப் போன்றுதான் இருக்கிறது. அவர்கள் "திறந்த புத்தகமாக"வே இருக்க விரும்புகிறார்கள். என்ன நினைக்கிறார்களோ அதனை அப்படியே (உப்பு, மிளகு கூட தூவாமல்!) உலகின்முன் இறைக்க முனைகிறார்கள். தம் கருத்துக்களை அப்பட்டமாக பறைசாற்றுகிறார்கள். தம் செயல் திட்டங்களையும், பிறரைப் பற்றிய தம் அயிப்பிராயங்களையும் எல்லோர் முன்னிலையிலும் முரசறைவர். இது தன்னிச்சையாக விளையும். மிகச் சுலபமான விஷயம். ஆனால் சொற்களை அளந்து, நிதானமாக, அளவாக வெளிப்படுத்துவதுதான் கடினம். அதற்குத்தான் முயற்சி தேவை.

இவ்வுலகத்தின் அடிப்படை உண்மை ஒன்றினை நாம் எப்போதும் நம் மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். இயற்கையில் தானாகக் கிடைக்கும் எப்பொருளும் அவை நம் கைக்குக் கிட்டும் இயற்கை நிலையிலேயே நம்மால் பாவிக்க ஏற்றதாக அமைவதில்லை. அவற்றின் தன்மை நாம் விரும்பும் வண்ணம் அமைய வேண்டுமானால் அவற்றை சில வேதிய மாற்றங்களுக்கும், மற்றும் பல புறமாற்றங்களுக்கும் உட்படுத்த வேண்டும். அதன்பின்தான் அவற்றை நாம் பாவிக்க இயலும். இரும்பு, தங்கம் போன்ற உலோகங்கள் தவிர வைரம் போன்ற உருமாற்றம் செய்ய வேண்டிய பொருட்களுக்கும் இந்த விதி பொருந்தும். இத்தகைய ஜடப்பொருட்களுக்கே பொருந்தும் இந்த செயல்பாடு மனிதர்களுக்கும் முழுதும் பொருந்தும் இயல்புடையது.

“அப்பட்டமான" உண்மைகளை இந்த உலகம் தாங்காது! “யதார்த்தவாதி வெகுஜன விரோதி" என்பார்கள். நீங்கள் பாட்டுக்கு மனதில் பட்டதையெல்லாம் இவ்வையமெங்கும் இறைத்துக்கொண்டே சென்றீர்களானால், உங்களை "எல்லார்க்கும் கள்ளனாய், ஏழ்பிறப்பும் தீயனாய், நல்லார்க்கும் பொல்லனாய்"த்தான்  நாடு நோக்கும் என்பது திண்ணம்! "உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைத்தால்" உங்கள் கதி என்னவாகும்?

பேசுவது என்பதே பிறர் மனத்துக்கு இதமாய், இசைவாய் அமைவதுதான் சரி, உங்கள் எண்ணங்களை அப்படியே உப்புத்தாள் கொண்டு தேய்ப்பதல்ல. உங்கள் அணுகுமுறை, எண்ணப்பாங்கு, கண்ணோட்டம், முடிவுகள் முதலியவை அடிப்படையில் தவறாயிருக்கும் பட்சத்தில் அதன் வெளிப்பாடு பிறர் மனத்தைப் புண்படுத்துவது மட்டுமல்லாது, உங்களுக்கும் தீங்கு விளைவிப்பதாய் முடியும். ஒரே விஷயத்திற்கு வெவ்வேறு கோணங்கள் இருக்குமல்லவா? அனைவற்றையும் நாம் ஆராந்திருக்கிறோம் என்று தீர்மானமாகக் கொள்ளமுடியாத சூழ்நிலையில், நம் கூற்றுதான் சரி என்று அதனை அப்படியே உரைத்தல் எவ்வாறு தகும்? அதனால் உங்கள் சொற்களை அறிவுசார்ந்த விழிப்புடன் பகுத்துணர்ந்து, அவற்றின் பின் விளைவுகளையும் நன்கு ஆராய்ந்து அதன் பின் வெளிப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்.

நம் உரையாடல்கள் நம்மை மட்டும் சார்ந்த செயல்பாடு அல்ல. நாம் ஒன்றை உரைக்கிறோம் என்றால், முதலில் ஒரு எண்ணத்தை மனதில் இருத்தி அதற்கு நாம் தேர்ந்தெடுக்கும் மொழியில் ஒரு சொல்வடிவம் கொடுக்கிறோம். பின் அது நம் குரல் மூலம் வெளிவருகிறது. நம் எண்ணங்கள் இவ்வாறு சொல்வடிவம் பெற்று ஓசையாக வெளிவரும்போது, அவை எத்துணை பாங்குடன் வெளிவருகின்றன என்பது நம் சொல்லாட்சியின் தன்மை, சக்தி, திறமை, ஆற்றல் மற்றும் நம் இயலாமைகள், பலவீனங்கள் போன்ற அடிப்படை இயல்புகளைப் பொருத்து அமையும். நான் முன்னமையே விளக்கியுள்ளபடி நம் "மெய்ப்பாடு" வேறு அதன் வேலையைச் செய்யும். இத்தனையும் தாண்டி நம் சொற்களைச் செவி மடுப்பவர்தம் இயல்புகள், நிறைகுறைகள், பின்புலம் ஆகியவற்றைப் பொருத்து அவர்களின் புரிதல் அமையும். அவர்களுடைய கண்ணோட்டம், அதன்பால் எடுக்கப்படும் தீர்வுகள் - போன்றவை அவர்தம் புரிதல் பொருட்டமையும். இத்தனை variables, தடைக்கற்கள், பேதங்கள் ஆகியவற்றைத் தாண்டி நம் பேச்சு நம் எண்ணப்பாங்கை எந்த அளவுக்கு இலக்குக்கு கொண்டு சென்றிருக்கிறது என்பது ஒரு ஐயப்பாடான விஷயம். இந்த நிலையில் "நான் பேசுவதுதான் சத்தியம், அதனை நான் என்ணியபடி வெளிப்படுத்துவேன், அதனைக் கேட்பது பிறருடைய கடன்" என்பது எப்படி சரியாகும்?

சரி, இப்போது உறுதியாகத் தெரிந்த விஷயம் என்னவென்றால் நாம் உரையாடுவது நமக்குள்ளே மட்டும் அல்ல. அது இன்னொருவருக்குச் சென்றடைவதற்காக. ஆகையால் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை மட்டும் மனத்தில் கொண்டு, “என் மனத்தில் என்ன தோன்றுகிறதோ அதையெல்லாம் 'பொட்'டென்று உரைப்பேன். அது பிறரால் எவ்வகையில் புரிந்துகொள்ளப்படும், அது என்னென்ன பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை" என்கிற வாதம் எவ்வாறு சரியாகும் சொல்லுங்கள்! அது ஒருதலைப்பட்சமான அணுகுமுறை அல்லவா?

இது தவிர, பலர் இன்னொரு தவறான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். நம் எண்ணங்களையும், செயல் திட்டங்களையும், முடிவுகளையும் "உள்ளது உள்ளபடி" உரைத்தல்தான், நியாயம், நேர்மை போன்ற உன்னத குணங்களின் லட்சணம் என்பது பலரின் கோட்பாடு. இதைவிட முட்டாள்தனமான கருத்து வேறொன்று இருக்க முடியாது. இத்தகைய அணுகுமுறையால் நமக்கும் மற்றோருக்கும் பெருத்த தீங்குதான் விளையும். இதனால் நம்மை சமூகம் வெறுத்து ஒதுக்கும். "ஓட்டைவாய்" மனிதரிடம் யாரும் "ஒட்ட" ஆசைப்பட மாட்டார்கள். "வெட்டிவிட"த்தான் எண்ணுவார்கள்.

உண்மை பெரும்பாலும் கசப்பும் அருவருப்பும் கலந்ததாகத்தான் இருக்கும். இதனால் பலர் அதனை நேருக்குநேர் எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள். ஆகையால் பிறர் தவிர்க்க நினைப்பதை பிடிவாதமாக அவர்கள் முன் நீங்கள் திணிப்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். மேலும் இது பிறர் மனத்தைக் காயப்படுத்தும்.  “அப்பட்டமான நேர்மை” என்று நாம் கற்பனை செய்துகொண்டிருப்பது உண்மையில் ஒரு துருப்பிடித்த மொட்டைக் கத்தி. அதைக்கொண்டு நோண்டிநோண்டி புண்களைத்தான் உருவாக்கத்தான் முடியும்.  ஆகையால், பிறர் கேட்க ஆசைப்படும் சொற்களைப் பேசுதல்தான் நேர்மையாகும். இதனை ஸமஸ்கிருதத்தில் “ஹிதவாதா” என்கிறார்கள். இதே கருத்தைத்தான் பல நன்னூல்கள் வலியுறுத்துகின்றன:“சுளிக்கச் சொல்லேல்”
“நொய்ய உரையேல்”
“வெட்டெனப் பேசேல்”

"திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்."

"குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்."

ஆர்.கே.நாரயணனின் “மால்குடி நாட்கள்” (Malgudi Days) என்னும் கதையில்  ஒருவர் வெகு சிரமப்பட்டு தன் பெண்ணின் திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்நிலையில் அவருடைய நெருங்கிய உறவினர் ஒருவர் காலமாகிவிட்ட செய்தி அவருக்கு தபால் மூலம் வருகிறது (பழைய காலம்). அதனைக் கொண்டு சேர்க்க வேண்டிய தபால்காரர்  அந்தக் குடும்பத்தின் நிலைமையை முழுதும் அறிந்தவர். பெண்ணின் தகப்பனாரின் சிரமங்கள் பற்றியும், இந்த செய்தி போய்ச்சேர்ந்தால் திருமணம் தள்ளிப் போகும் என்பதையும், அதனால் ஏற்படும் பின்விளைவுகளையும் யோசித்து, அக்கடிதத்தை திருமணம்  முடியும்வரை கொடுக்கவேயில்லை. நீங்கள் சொல்லுங்கள், இத்தகைய மனிதாபமான அணுகுமுறை சிறந்ததா, இல்லையா என்று. “புரைதீர்ந்த நன்மை” பயக்கும் தன்மை கொண்டதாகத்தான்  நம்சொற்களும் செயலும் அமையவேண்டும். “வரட்டிழுப்பு” வேலைக்காகாது!

இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. நம் செயல்திட்டங்களையும் முடிவுகளையும் வெளிப்படையாகத் தெரியப்படுத்துவது, நம் கையிலிருக்கும் எல்லா சீட்டுக்களையும் முகம்தெரிய மேஜைமேல் பரப்பிவைத்துவிட்டு, பின் சீட்டு விளையாடுவது போன்றதாகும்! பிறர் எப்போதும் நம்கைவசம் பல "ஏஸ்கள்" குடிகொண்டிருப்பதாகக் கருதவேண்டும். அதுபோன்ற மெய்ப்பாட்டை நாம் வெளிப்படுத்தவேண்டும். அப்போதுதான் நம் ஆளுமை வெளிப்படும். நம்மிடம் பிறர் மரியாதை கலந்த பயத்துடன் அணுகுவர். இல்லையெனில் நம்மிடம் சலிப்புக் கொண்டு, நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்கள். படித்து முடித்த பழைய பேப்பராக நாம் ஆகிவிடுவோம். சிவகாசியில் வெடிமருந்து சுற்றக்கூட நாம் பயன்பட மாட்டோம்!

ஒரு வெற்றித்தலைவனுக்கு அமைய வேண்டிய முக்கியமான குணநலன், அவனுடைய எண்ண ஓட்டங்கள், நுட்பங்கள், செயல்திட்டங்கள், தீர்வுகள் போன்றவை கடைசி நிமிஷம் வரை யாராலும் எளிதில் புரிந்து கொள்ளமுடியாதவையாக இருக்க வேண்டும். இதன் முக்கியத்துவம் கருதி என் கட்டுரைத் தொடரில் இக்கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன்.

ஒரு செயலை முடிக்க எண்ணி, அதற்கான நாம் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்து முன்னேறும்போது, நாம் செல்லும் திசையையும் நம் நடவடிக்கைகளையும், உபாயங்களையும் (strategies) பிறர் கணித்துவிடாவண்ணம் அவர்கள் கவனத்தை திசைதிருப்ப வேண்டும். இதனை "red herring", "smokescreen" என்று அழைப்பார்கள். உங்கள் எதிரிகளும், பொறாமை கொண்டவர்களும் உங்கள் திட்டங்களை அறியவேண்டி ஒரு "திக்குத் தெரியாத காட்டில்" அலையும்போது, நீங்கள் வெற்றி இலக்கை எட்டிவிட வேண்டும்!

இவ்வுலகம் நீங்கள் எவ்வளவு வெளிப்படையாக இருக்கிறீர்கள் என்பதை வைத்து உங்களை எடைபோடுவதில்லை. நீங்கள் எவ்வளவு வெற்றிகரமான சாதனைகள் படைத்திருக்கிறீர்கள், எந்த அளவுக்கு ஒரு புதிராக இருக்கிறீர்கள், எவ்வளவுதூரம் பிறர் மனத்தில் பயம் கலந்த மரியாதை உணர்வை தோற்றுவித்திருக்கிறீர்கள் என்பதுதான் உங்கள் ஆளுமையின் அளவுகோல்!

மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். நீங்கள் அறிந்ததாகக் கருதும் நீங்கள் உண்மையில் நீங்களல்ல. பிறர் கண்ணுக்குத் தெரியும் நீங்கள் யார் என்பதுதான் உங்களுடைய அசல் வடிவம்!

சாமர்த்தியமாகப் பிழைச்சுக்கோங்க!

[உங்கள் கேள்விகளை skichu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்]


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : அளந்து பேசி ஆளுமை கொள் - எஸ்.கே - {MAY - 05 - 05}  
  நம்மில் பலர் உரையாடும்போது அநாவசியமாக நீண்ட நெடிய விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள்தான்.
http://www.tamiloviam.com/unicode/05050503.asp
Expand / Collapse
 

கேள்வி. 2:

நான் பிறருடன் உரையாடும்போது அளவுக்கதிகமாகப் பேசுகிறேனோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும், "இனிமேல் குறைவாகப் பேசவேண்டும்" என்று முடிவு செய்து கொண்டாலும், அடுத்த முறை என்னையறியாமல் நிறையப் பேச ஆரம்பித்துவிடுகிறேன். அதனால் எனக்கு ஒன்றும் குறைவு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஆனாலும் ஏதோ தவறு செய்வதாக என் உள்மனம் உறுத்துகிறது. இது ஒரு குறையா? அப்படியானால் இதனைப் போக்க என்ன செய்வது?

பதில்:

நம்மில் பலர் உரையாடும்போது அநாவசியமாக நீண்ட நெடிய விளக்கங்களைக் கொடுக்க ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் நம் ஆழ்மனதில் தங்கியிருக்கும் தாழ்வு மனப்பான்மை அல்லது பாதுகாப்பின்மை போன்ற உணர்வுகள்தான். அடிக்கடி எதையாவது சாப்பிட்டுக் கொண்டிருக்கவேண்டும் என்ற உந்துதலும் இதனால் ஏற்படுகின்றது என்பர் (நீரிழிவு தவிர இந்த மனப்பான்மையும் ஒரு காரணம்). பேச்சு தவிர எழுதும்போதுகூட அனாவசியமாக தன் கூற்றை உறுதிப் படுத்துவதாக எண்ணிக்கொண்டு, பத்தி பத்தியாக ஒரே விஷயத்தை எழுதிக் கொண்டிருப்பார்கள். இவர்கள் எழுதும் கடிதங்கள் இரண்டு மூன்று பக்கங்கள் ஒரே பாராவாக இருக்கும். முற்றுப் புள்ளியிட இவர்களுக்கு லேசில் மனம் வராது. தாம் கூறுவதை யாராவது நம்பாமலிருந்து விடுவார்களோ என்று இவர்கள் மனதில் ஒரு நம்பிக்கையின்மை "நமநம"வென்று அரித்துக் கொண்டிருக்கும். இதே காரணத்தினால், தான் கூறுவது உண்மைதான் என்று நிரூபிக்கும் முகமாக, யாரும் கேட்காமலேயே பலவித சான்றுகளையும் நிரூபணங்களையும் அடுக்கிய வண்ணம் இருப்பர். தான் சும்மா புருடா விடுவதாக அடுத்தவர் எண்ணிவிடக்கூடாதே என்பதற்காக "அங்கே ஒரு வேலைக்காரர் இருந்தார், அவர் பெயர் இராமசாமி. பஸ் சரியாக காலை 10-12க்கு வந்தது. அங்கே தாடி வைத்துக் கொண்டு ஒரு பிச்சைக்காரன் நின்றான்.“ இது போன்ற உப்புப் பெறாத விவரங்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருப்பர். அடுத்தவருக்கு இது அலுப்புத் தட்டுமே என்கிற உணர்வு எதுவுமில்லாமல் இதுபோல் செய்வதற்குக் காரணம் தன்னைப் பற்றியே சரியான மதிப்பீடு இன்மைதான்.

என்னுடன் பணியாற்றிய ஒரு பெரிய அதிகாரி தான் எழுதிய ஒவ்வொரு கடிதத்திற்கும் ஒரு நகலெடுத்து தனியாக ஒரு ஃபைல் செய்து தன் அறையில்  வைத்துக் கொள்வார் - அவையெல்லாம் அவர் அதிகாரத்திற்கு உட்பட்ட அலுவலகத்தில்தான் இருக்கும் என்றபோதும் கூட. அது தவிர ஏதாவது மீட்டிங்கில் பங்கெடுப்பதென்றால், தன் உதவியாளர்கள் கொண்ட ஒரு படையையே அழைத்துச் செல்வார். அவர்கள்  தங்கள்அலுவலகத்தையே பெயர்த்து எடுத்துச் செல்வதுபோல் ஒரு வண்டி ஃபைல்களை சுமந்துவரச் செய்வார். “ஏதாவது மேல்விவரம் கேட்டால் என்ன செய்வது" என்பார். தன் பெயரைக் கேட்டால்கூட ஒன்றுக்கு இரண்டுமுறை check செய்துவிட்டுத்தான் பதில் சொல்வார் என்பார்கள்! அவ்வளவு தன்னம்பிக்கையின்மை. இவர்கள் "படு பேஜார்" கிராக்கிகள். இதுபோன்ற மேலதிகாரி கிடைப்பதற்கு அவருடைய உதவியாளர்கள் முன்பிறவியில் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு அந்தக் கோயில் சுவற்றிலேயே கையைத் துடைத்துவிட்டுச் சென்றதுபோன்ற பல கொடிய பாவங்களைச் செய்திருக்க வேண்டும் என்பது திண்ணம்!

அளவுக்கதிகமாகப் பேசுவது கண்டிப்பாக ஒரு குறைதான். ஆனால் எது அளவு? எந்த அளவுகோலைக் கொண்டு அதை நிர்ணயிப்பது என்ற கேள்வி நியாயமானது. மேடைப் பேச்சென்றால் "இன்னும் கொஞ்சம் பேசமாட்டானா" என்று பிறர் நினைக்கும் நேரத்தில் முடிக்க வேண்டும் என்பர். அதுபோல் பொதுவாக எப்போதுமே நிறையப் பேசினால் நம் கூற்று மட்டுமில்லாது நம் ஆளுமையும் நீர்த்துப் போகும் அபாயம் இருக்கிறது. நம் இமேஜ் மிகச் சாதாரணத் தோற்றம் கொண்டுவிடும். இதுதவிர, நம் பேச்சு செல்லும் திசையும் நம் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஏதேதோ பேசி வம்பில் கொண்டுவிடும் ஆபத்தும் இருக்கிறது. சூழ்நிலையும் நம் கையின் ஆளுமையில் நிற்காது. நாம் சொல்வது மிகச் சாதாரணமானதாக, எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக,  ஊடகங்களில் அடிக்கடி தென்படுவதாக இருந்தாலும் கூட, அதனை நீங்கள் பூடகமாக, “எல்லாம் தெரிந்த தோரணையில்", மிகக் குறைந்த சொற்களில், அர்த்தம் தொக்கி நிற்கும்படியாக உரைத்தீர்களானால், அது மிக முக்கியத்துடன் பிறரால் உன்னிப்பாகக் கேட்டு ரசிக்கப்படும் சாத்தியம் உள்ளது.

குறைவாகப் பேசுபவர்கள்மேல் எப்போதும் ஏனையோர் தன்னையறியாமல் ஒருவித அச்சம் கலந்த மரியாதையுடன் அணுகுவார்கள். மூடிமறைத்தாற்போல் உரையாடினால்தான் உங்கள்மேல் தொடர்ந்து ஆர்வம் இருக்கும். இது காதலர்களுக்கும் பொருந்தும். அதிகமாகப் பேசப்பேச, ஏதாவது முட்டாள்தனமாகப் பேசிவிட ஏதுவாகும். ஒவ்வொரு சொல்லும் நம் முழுக் கட்டுப்பாட்டுடனும், நம் சிந்தனை அடிப்படையில் முடிவு செய்யப்பட்டும் வந்து விழவேண்டும். அது பாட்டுக்கு லீக்கான குழாய்போல கொட்டக் கூடாது. நாம் சொல்வது சரிதான் என்கிற நம்பிக்கை நமக்கு முழுமையாக இருக்கும்போது ஒவ்வொரு சொல்லுக்கும் நிரூபணங்கள் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.

நீங்கள் எப்போதும் ஒரு "மூடிய கை"யாகத் தோன்றவேண்டும். எல்லாவற்றையும் எல்லோருக்கும் உடைத்துச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அத்தியாவசியத் தேவையிருந்தாலொழிய விளக்கங்கள் அளிக்கக் கூடாது. திரு. எஸ்.எஸ். இராஜேந்திரன் ஒரு திரைப்படத்தில் "நான் எல்லாத்தையும் ஒடைச்சுத்தான் சொல்லுவேன்" என்று பேசும் ஒரு யதார்த்தவாதியாக  வந்து மிகுந்த அல்லல் படுவார். அதற்கு அவருடைய மனைவி, “ஒடைச்சு சொல்லுங்க.பரவாயில்லை. அதுக்காக இப்படி சுக்குநூறா ஒடைக்கணுமா" என்பார்.

நாம் உரையாடும்போது அடுத்தவர் நம்மை எப்போதும் அளவெடுத்துக் கொண்டேயிருப்பர். நம் மனத்தினுள்ளே புகுந்து நம் எண்ணங்களை அகழ்வாராய்ச்சி செய்ய முற்படுவர். நம் எண்ண ஓட்டங்கள் பிறரால் முழுமையாகக் கணிக்கப்படுமேயானால், நம் மேல் அவர்களின் ஆதிக்கம் ஏற்படும். பவர் அவர்கள் கைக்கு ஏறிவிடும். அதனால் பொருள்பொதிந்த சொற்கள் சிலவற்றைப் பேசிவிட்டு நிறுத்திவிட வேண்டும். "இந்த ஆள் என்ன நினைத்துக் கொண்டு இப்படிச் சொல்கிறானோ தெரியவில்லையே" என்று அவனவன் மண்டையை உடைத்துக் கொள்ளவேண்டும். நாம் கூறிய ஒவ்வொரு சொல்லையும் அவர்கள் நினைத்து ஆராய்ச்சி செய்யச் செய்ய நம் ஆளுமை கூடிக் கொண்டே போகும். சொற்கள் குறைவாகவும் மௌனம் அதிகமாகவும் இருந்தால் பிறரை ஒரு  தடுமாற்ற நிலையிலேயே வைக்கலாம். அப்போதுதான் நம் வேலைகளை சுலபமாக சாதித்துக் கொள்ளலாம்.

இதில் இன்னொரு நன்மையும் உள்ளது. நாம் குறைவாகப் பேசி மௌனத்தைக் கடைப்பிடிக்கும்போது ஏனையோர் தங்கள் பேச்சினால் இட்டு நிரப்பத்தலைப்படுவர். இன்னும் சிலர் தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க இன்னும் அதிகமாகப் பேசுவர். அவர்கள் அந்தத் தவற்றை செய்யச் செய்ய அவர்கள்பால் உங்கள் ஆதிக்கம் அதிகரிக்கும்.

இதுபோல் உங்களால் பேசப்பட்ட (சிறிது மர்மம் கலந்த) "தொக்கி நிற்கும்" சொற்கள் பலரால் "பாஷ்யம்" எழுதப் பட்டு, பலரால் அவை சிந்தனைக்கு உட்படுத்தப்பட்டு, அதனால் மக்கள் மனதில் உங்களப் பற்றிய ஒரு மரியாதை கூடும். பிகாஸோவின் ஓவியங்கள்போல் சுலபமாகப் புரிந்து கொள்ள இயலாதவைகளுக்குத்தான் மனித குலம்  மதிப்புக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சீன அறிஞர் ஹன் ஃபை சூ இவ்வாறு கூறுகிறார்:-


"உன்னைச் சுற்றியுள்ளவர்கள் வாயைத் திறக்குமுன் நீ வாயைத்திறவாதே. நீ எவ்வளவு நேரம் உன் உதடுகளையும் நாவையும் கட்டி வைத்திருக்கிறாயோ, அவ்வளவு சீக்கிறம் மற்றவர்கள் தம் வாயைத் திறந்து பேசத் தொடங்கி விடுவர்.  பிறகு அவர்களின் மனத்தை நீங்கள் முழுமையாகப் படித்து அறியலாம். ஆள்பவன் எப்பொதும் ஒரு புரியாத புதிராகவே இருக்க வேண்டும்."

மோனாலிஸா புன்னகை இவ்வளவு தூரம் எல்லோராலும் பேசப்படும் காரணம் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதுதான். முன்பு சீனத்தின் சர்வாதிகாரியாக இருந்த மாவோ இந்திய தூதரைப் பார்த்து ஒரு அரை மில்லி மீட்டர் சிரிப்பதுபோல் உதட்டைச் சுழித்தார் என்று பத்திரிகைகள் பக்கம்பக்கமாக "இதன் பொருள் மற்றும் வீச்சு சர்வதேச அரசியலில்  என்னவாயிருக்கும்" என்று ஹேஷ்யங்களை வெளியிட்டவண்ணம் இருந்தது பலருக்கு நினைவிருக்கும்.

முழுநிலவன்று சிப்பிகள் தங்கள் வாயை அகலத் திறக்கும். அச்சமயம் பார்த்து பெரு நண்டுகள் அவற்றின் வாய்க்குள் ஒரு கல்லைப் போட்டுவிடும். பிறகென்ன? சிப்பியால் தன் வாயை மூட முடியாது. அது அந்த நண்டின் டைனிங் டேபிளுக்கு செல்ல வேண்டியதுதான்! மனிதர்கள் தன் வாயைத் திறந்து பேசிக் கொண்டேயிருந்தால், வாயில் அல்ல, அவர்தம் தலையில் கல்லைப் போட பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் கொண்டு, பொருக்கியெடுத்த முத்துக்களாக நம் சொற்கள் வெளிப்பட நாம் பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறர் நம் மனத்தை ஆள்வதிலிருந்து தப்பிக்கலாம். நாமும் இவ்வகிலத்தை ஆளலாம்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : மெய்ப்பாடு படுத்தும் பாடு - எஸ்.கே - {APR - 28 - 05}  
  ஒருவருடைய பெருமையும் சிறுமையும், அவர்தம் மெய்ப்பாட்டின் எண்வகை புறத்தோற்றங்கள் எவ்வாறு பிறரால் அறியப்படுகிறதோ அதனளவே ஆகும் என்பதைக் காண்கிறோம். நம்முடைய மெய்ப்பாட்டை செம்மைப் படுத்தி பிறர்மனத்தின்பால் நம்மைப் பற்றிய அவதானிப்பை சீரியதாக்குவதற்கான சில வழிமுறைகளை ஆராய்வோம்.
http://www.tamiloviam.com/unicode/04280505.asp
Expand / Collapse
 

கேள்வி. 1

நான் எல்லோருடன் நட்புடனும் அன்போடும்தான் பழக விரும்புகிறேன். அடிப்படையில் நான் வெளிப்படையானவள். எளிதில் சிரித்து விடுவேன். “உர்"ரென்றிருப்பதில்லை. ஆனால் என்னை எல்லோரும் தவறாகவே புரிந்து கொள்கிறார்களே, அது ஏன்? கொஞ்சம் "முசுடு", “கர்வி" என்பது போன்ற புரிதலே முதலில் பிறருக்குத் தோன்றுகிறது. நாளடைவில் என்னோடு நெருங்கிப் பழகிய நண்பர்களிடமிருந்து இதனை அறிந்தேன். இத்தகைய உண்மை நிலைக்குப் புறம்பான தோற்றம் என்னைப் பற்றி பிறருக்கு ஏன் அமைகிறது? என் அணுகுமுறையில் தவறா? அல்லது என் புறத்தோற்றம் என் எண்ண ஓட்டங்களுக்கு மாறான புரிதலை பிறருக்கு அளிக்கிறதா? நான் இந்த நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

பதில்:

ஏதோ தவறிருக்கிறது, அதுவும் உங்களிடமே இருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறீர்களே, அதுவே இந்த முயற்சி வெற்றி பெற வாய்ப்பளிக்கும் முதல்படி. சாதாரணமாக மனிதர்கள் பலர் தான் செய்வது எல்லாமே சரி, தவறு பிறரிடம்தான் என்று நிலைநிறுத்த தீவிரமாக முயற்சிப்பார்கள். இத்தகைய உந்துதலைத் தோற்றுவிக்கும் , “ஈகோ", “எட்" போன்ற அடிப்படை மனித  இயல்புகளைப் பற்றி இக்கட்டுரைத் தொகுப்பின் முந்தைய இதழ்களில் வாசித்திருப்பீர்கள்.

 நாம் வாழ்நாள் முழுதும் வெளி உலகத்துடன் தொடர்ந்து கருத்துப் பரிமாற்றம் செய்துகொண்டிருக்கிறோம். நம் செயல்பாட்டில் நிகழும் தொடர்புகள் தவிர, தானாக, தன்னிச்சையாக நம் உடல்மூலம் நிகழும் உரையாடல்தான் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாம் அன்றாடம் சாதாரணமாகச் செய்யும் நடத்தல், அமர்தல், உணவருந்துதல், இருமுதல், செருமுதல், சொரிதல், கொட்டாவி விடுதல் மற்றும் பல தன்னிச்சையாக நிகழும் செயல்கள்கூட, பிறருக்கு நம்மைப் பற்றி வெவ்வேறுவிதமான கண்ணோட்டத்தை உண்டாக்குகின்றன. “இவர் இப்படித்தான்" என்று தங்கள் மனத்திரையில் ஒரு உருவத்தை தீட்டிவிட்டு அந்த உருவகத்தின் அடிப்படையில்தான் உங்கள் ஒவ்வொரு அசைவுக்கும் பொருள் கொள்வார்கள். இத்தகைய தவறான கண்ணோட்டம் ஏன் அமைகிறது, அது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதாக இல்லையே என்ற கேள்வி உங்கள் மனத்தில் எழுவது நியாயம். ஆனால் அதுதான் இயற்கை. மனித மனத்தின் செயல்பாடு உணர்வுகளின் உந்துததால் நிகழ்வது, "லாஜிக்"-களால் அல்ல. இந்த அடிப்படையை ஐயத்துக்கு இடமின்றி புரிந்து கொண்டால் நம்மை பற்றிய பிறரின் புரிதல்களை எளிதில் மாற்றியமைக்கலாம். நாம் விரும்பும் தோற்றத்தை மக்கள் மனத்தில் பதியவைக்கலாம்.

இந்த அடிப்படையில் பார்த்தோமானால், உங்களைப் பற்றிய தோற்றம் நீங்கள் விரும்பிய வண்ணம் அமையாததற்குக் காரணம், உங்கள் வெளித் தோற்றம் பற்றி நீங்கள் கவனம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் என்று தோன்றுகிறது. நம் அங்க அசைவுகள், தோற்றக் குறிகள் மற்றும் தன்னிச்சை இயக்கங்கள் தோற்றுவிக்கும் மெய்ப்பாடு (body language) மிகவும் தாக்கம் கொண்டது. நீங்கள் பேசாதபோதெல்லாம் உங்கள் மெய் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறது. அந்த "மெய்" பேசுவதெல்லாம் "மெய்"தான் என்று நம்பும் வண்ணம் அது பிறரிடம் ஒரு அவதானிப்பை ஏற்படுத்துகிறது.  இது போன்ற "பேசா மொழி"கள் தான் 93 விழுக்காடு செய்திகளைக் கொண்டு செல்கின்றன. உங்கள் எண்ணங்கள், சொற்கள் இவைகளுக்கு ஒப்ப உங்கள் மெய்ப்பாடு அமையப்பெறவில்லையானால் உங்களைப் பற்றிய புரிதல் எதிர்மறையாகத்தான் அமையும். "ஆமாம்" என்று சொல்கிறது வாய். ஆனால் உங்கள் தலை பக்கவாட்டில் அசைகிறது. அப்படிப்பட்ட நேரத்தில் அந்த "ஆமாம்" பிறரிடம் போய்ச்சேராது. “இல்லை" என்றுதான் உங்கள் பதிலாக அறியப்படும். அதுமட்டுமல்ல. இந்த நபர் நம்பத் தகுந்தவரல்ல என்பது போன்ற முடிவும் அடுத்தவர் மனத்தில் எழும். பிறர் கண்களை நேர்கொள்ளாமல் இருத்தல் (not making eye contact) ஒரு பெரிய தவறு. பலர் பிறரிடம் உரையாடும்போது மோட்டுவளையைப் பார்த்துப் பேசிக்கொண்டிருப்பார்கள். இத்தகைய நடவடிக்கையால் பிறருக்கு நம்மிடம் நம்பிக்கை தோன்றாது. இருக்கின்ற நல்மதிப்பையும் இழக்க நேரிடும்.

தொல்காப்பியத்தில் இந்த "மெய்ப்பாட்டியல்" பற்றி மேலதிக விளக்கம் பெறலாம் என்பதை, அனுமனை மிக்க "வனப்புடன்" வார்த்தளித்திருக்கும் "வெண்பாச் சித்தர்"  ஹரி கிருஷ்ணன் மூலம் அறிந்தேன். ஆங்கே மெய்ப்பாட்டின் வெளிப்பாடுகள் எண்வகைப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற இந்த எட்டே மெய்ப்பாடு என்ப. சரி, இந்த மெய்ப்பாட்டின் செயல்பாடும் ஆக்கமும் என்ன? அதனையும் விளக்குகிறது தொல்காப்பியம் இவ்வரிகளால்:-

“பெருமையும் சிறுமையும் மெய்ப்பாடு எட்டன்
 வழி மருங்கு அறியத் தோன்றும் என்ப"

ஒருவருடைய பெருமையும் சிறுமையும், அவர்தம் மெய்ப்பாட்டின் எண்வகை  புறத்தோற்றங்கள் எவ்வாறு பிறரால் அறியப்படுகிறதோ அதனளவே ஆகும் என்பதைக் காண்கிறோம்.

நம்முடைய மெய்ப்பாட்டை செம்மைப் படுத்தி பிறர்மனத்தின்பால் நம்மைப் பற்றிய அவதானிப்பை சீரியதாக்குவதற்கான சில வழிமுறைகளை ஆராய்வோம்.

முதலில் உங்களுடைய அங்கங்கள் பற்பல சூழ்நிலைகளில் எவ்வாறு செயல்படுகின்றன, எவ்வகை அசைவுகளை வெளிப்படுத்துகின்றன, அவை அனைத்தும் உங்களுடைய முழு உணர்வுடன் ஆக்கப்படுகின்றனவா என்பவற்றை ஆராய வேண்டும். அதற்கான வழி, உங்களை நீங்கள் ஒரு மூன்றாம் மனிதரின் பார்வையில் அணுக வேண்டும். அது எவ்வகையில் சாத்தியம்?

நீங்கள் பங்கெடுத்துக் கொண்ட விழாக்கள் - காது குத்துதல் (இது புறக்காது - உள்ளே தோன்றும் குத்தல் வலி அல்ல), பூப்புநீராட்டு விழா, மண ஒப்பந்தம், திருமணம், (மொய்) வரவேற்பு, புத்தக வெளியீட்டு விழா, பிரிவுபசார விழா - இது போன்ற நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலுமே வீடியோ படம் எடுக்கிறார்கள். அவற்றை வாங்கி, நீங்கள் தோன்றியுள்ள பகுதிகளை மீண்டும் மீண்டும் போட்டுப் பாருங்கள். அப்போதுதான் தெரியும் நீங்கள் எத்தகைய அங்க சேஷ்டைகளை புரிந்து கொண்டிருக்கிறீர்கள் என்று! சில நேரங்களில் நமக்கே வெறுப்பாயிருக்கும் அளவிற்கு நாம் நடந்து கொண்டிருப்பதைக் காணலாம். முக்கை நோண்டுதல், தலை மற்றும் தொடை சொறிதல், கையை "சொஸ்திக்" போல் வைத்துக் கொள்ளல், உதடுகளைச் சுழித்தல், முகத்தை அஷ்டக் கோணலாக்கிக் கொள்ளல், பின்னல் திருகுதல், வித விதமான தலையாட்டல், எதையாவது சுரண்டிக் கொண்டிருத்தல், காலாட்டுதல், பொருத்தமில்லாத கைபிசைதல் போன்ற பலவித சேட்டைகளை நாம் செய்திருப்பதைக் காண முடியும். அவை யாவும் நம் கட்டுப்பாடில்லாமல் நிகழ்வது. சில சமயம் நம் சொல், அங்க அசைவு முதலியன நாம் அத்தருணத்தில் வெளிப்படுத்த எண்ணிய கருத்துக்கு எதிர்மறையாக அமைந்துள்ளதை நீங்களே உணரலாம். “Hindsight is always twenty-twenty”அதாவது முந்தைய நிகழ்வுகளைப் பின்னோக்கிப் பார்க்குங்கால் நம் பார்வை முழு உணர்வுகளுடனும், கூர்மையாகவும் அமையும். அத்தகைய அணுகலுடன் சீர்தூக்கிப் பார்க்கையில், முன்னால் புலப்படாத பல நுட்பமான விஷயங்கள் கண்ணெதிரே தோன்றும். பின்னர் அவற்றை செம்மைப் படுத்தி, எவற்றை எவ்வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்து, பெரிய கண்ணாடி முன் நின்று (நீங்கள் மணிக்கணக்காக  அதன்முன் நின்று அழகு பார்க்கிறீர்களே, அதுதான்!) பலவகை செயல்பாடுகளைப் பரிசீலித்து, எது சரி என்பதை முடிவெடுத்து, அவற்றை அடுத்தமுறை உங்கள் சுயக் கட்டுப்பாட்டுடன் வெளிப்படுத்த முயல வேண்டும். இதுபோல் செம்மைப் படுத்தப்பட்ட மெய்ப்பாட்டினால் பிறர் போற்றும்படியான ஆளுமையைக் கொணர்வது சாத்தியமாகும்.

“கண்ணோடு கண்ணோக்குதல்" பற்றி பலமுறை அடிக்கோடிட்டுக் கூறியிருக்கிறேன். என் இள வயதில் என் காதலியிடமிருந்து வெகுநாட்கள் பிரிய நேரிட்ட நேரத்தில் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு "சென்று வருகிறேன்" என்று சொல்லிவிட்டுச் சென்றேன் என்பதால் சினமுற்று பலநாட்கள் தொடர்பு கொள்ளாமலிருந்தாள். Eye contact என்பது அவ்வளவு முக்கியம்!

பிறர் சொல்வதை ஆர்வத்துடன் செவிமடுக்கிறோம் என்பதை உணர்த்த, அவர்கள்பால் சற்றே தலையைச் சாய்த்து, “உம்" கொட்டிக் கொண்டு, அவ்வப்போது அவர்கள் சொல்லிய கடைசி சொற்களைத் திருப்பிச் சொல்லி, உக்குவிப்பதுபோல் "நன்றாகச் சொன்னீர்கள்" என்று ஒரு "ஷொட்டு" கொடுத்து முழு ஈடுபாட்டுடன் கேட்கவேண்டும். மேலும் கண்களை அகல விரித்து "நான் உன் பேச்சுக்கு மிகுந்த மரியாதை கொடுக்கிறேன்" என்று வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டும். இதனை Active listening அல்லது Power listening என்பார்கள். “கேள்வி" என்பது ஒரு கலை.

அதுபோல் நீங்கள் பேசும்போதும் பிறருக்கும் சிறிது பங்களிப்பு கொடுங்கள். உடனிருப்பவர்களின் பெயரைக் குறிப்பிட்டு "இன்னார் கூறியது போல" என்று பிறர் கூற்றுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.எல்லா கிரெடிட்டுகளையும் நீங்களே அள்ளிக்கொள்ளாமல்  இருந்தால் தன்னையறியாமல் அவர்களுக்கு உங்கள் மேலுள்ள மதிப்பை அதிகரிக்கும்.

பிறர் கருத்துக்களை வெட்டிப் பேச நேர்ந்தால், அவர்கள் மனம் புண்படாமல், அவர்களின் கூற்றிலும் சிறப்புகள் இருக்கின்றன, ஆனால் என் எண்ணம் சற்றே மாறுபட்டிருக்கிறது என்று நாசூக்காக எடுத்துரைத்தால், அவர்களுடைய ஈகோ சேதமடையாமலிருக்கும். ஏனென்றால் சொல்பவரும் சொல்லப்பட்ட கருத்தும் ஒன்றோடு ஒன்றாக உருவகப் படுத்தப்பட்டுவிடும். கருத்தை எதிர்த்தலும் ஆளை எதிர்ப்பது போல்தான். இது மனித இயற்கை. இதனை எபோதும் நினைவில் கொண்டு நுட்பமாகக் கையாள வேண்டும்.

நீங்கள் நன்கறிந்துள்ள ஒரு விஷயம் பற்றி பிறருடன் பேசும்போது சில சமயம் உங்களையறியாமல் நீங்கள் ஒரு பள்ளி ஆசிரியர் தோரணையில் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவீர்கள். அது பிறருடைய ஈகோவை மிகவும் பாதிக்கும். இத்தகைய நிகழ்வுகளை நான் பலமுறை கண்டிருக்கிறேன். என்னுடன் பணியாற்றிய ஒருவர் மிகச் சிறந்த அறிவாளி. தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர். ஆனால் அவரை மேலதிகாரிகள் யாருக்கும் அறவே பிடிக்காது. பலமுறை பதவியேற்றம் அவருக்குத் தவறியிருக்கிறது. இத்தனைக்கும் மிகப் பணிவானவர். கடுஞ்சொல் அறியாதவர். நான் பலமுறை அவருக்காக வாதாடியிருக்கிறேன். ஆனால் இன்னதென்று கூறமுடியாத வகையில் அவர் மேலதிகாரிகளின் மனத்தில் ஒரு வெறுப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆழ்ந்த கண்காணிப்பிற்குப்பின் அத்தகைய நிகழ்தலின் காரணம், அவருடைய பொருள் விளக்கமளிக்கும் முறைதான் என்பது புலப்பட்டது. இதற்கு நேர்மாறாக, பல மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் தாங்கள் சந்திக்கும் மருத்துவர்களிடம், "நீங்கள் முன்னமையே அறிந்துள்ளபடி" (as you know, Doctor) என்று தொடங்கித்தான் தன் மருந்துகளின் சிறப்புகளையும் செயல்பாடுகளையும் விளக்குவார்கள். மனிதருடைய ஈகோ எளிதில் நொறுங்கக் கூடிய வஸ்து. மிக ஜாக்கிறதையாகக் கையாள வேண்டும் (Fragile. Handle with care!).

எப்போதும், பிறர் நம்மைக் குறைத்து மதிப்பிட்டுவிடுவார்களோ என்கிற complex-ஐக் கொண்டிருக்காதீர்கள். அது உங்கள் தன்னம்பிக்கையின்மையை வெளிப்படுத்தும். அது உங்கள் மனத்திண்மையையும் பாதிக்கும். எவ்விதத் தாழ்வு மனப்பான்மைக்கும் இடம் கொடுக்காமல், "என் குறை நிறைகளை நான் நன்கறிவேன். அவற்றால் எந்தவித பாதிப்புமில்லை" என்று உறுதிப்படுத்திக் கொண்டு, பிறரை அணுகுங்கள்.

எல்லாவற்றையும்விட, உங்கள் அருகாமையே பிறருக்கு ஆறுதலளிக்கும்படியாக, இதமளிக்கும்படியாக, துன்ப உணர்ச்சிகள் நீங்கி மகிழ்ச்சியளிக்கும்படியாக அமைய வேண்டும். அத்தகைய உணர்வுகளைத் தோற்றுவிக்குமுகமாக உங்கள் பேச்சு சுவையுடனும், இதமாகவும், மென்மையாகவும், அகம்பாவம் இல்லாமலும், அனைவரையும் அணைத்துக் கொண்டு செல்லும் இயல்புடனும் அமையப் பெற்றால், ஒரு முறை உங்கள் சந்திப்பினைப் பெற்ற அனைவரும், பின்னொரு முறை என்றைக்கு அந்தப் பேறு கிட்டும் என்று எதிர்நோக்கிய வண்ணம் இருப்பர் என்பது திண்ணம்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : அறனும் ஆக்கமும் - எஸ்.கே - {APR - 15 - 05}  
  "அப்படியானால் இதுபோல் பிறரை ஏமாற்றுவதுதான் வாழ்வின் வெற்றிக்கு ஒரே வழி என்று கூறுகிறீர்களா" என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். அந்தக் கேள்வியை பலர் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
http://www.tamiloviam.com/unicode/04150511.asp
Expand / Collapse
 


நம் வாழ்க்கையில் வெற்றிகரமான சாதனைகள் புரிந்து, சமூகத்தில் நான்குபேர் நம் பெயரைச் சொல்லும் நிலை ஏற்பட வேண்டுமெனில், அதற்கு பிறருடைய பங்களிப்பு மிகவும் அவசியம் என்பதை பலமுறை வலியுறுத்தி வருகிறேன். அதுபோல் நம் நன்மைக்காக பிறர் மனமுவந்து தம் பங்களிப்பை அளிக்க முன்வரவேண்டுமானால் அது நம் ஆளுமையினால்தான் எற்படவேண்டும். நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தை நம் இஷ்டப்படி வளைத்து, நம் நன்மைக்காக  அதன் செயல்பாடுகளை மாற்றியமைப்பதுதான் சாமர்த்தியம். ஆனால் வெளிப்படையாக தாம் பிறரால் பயன்படுத்தப் படுகிறோம் (getting exploited) என்னும் எண்ணம் தோன்றாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம். அவ்வாறான எண்ணப்பாங்கு அவர்களின் ஈகோவை பாதிக்கும். நமக்காக உழைப்பதில் அவர்களுடைய தன்னலமும் சேர்ந்திருக்கிறது என்பதுபோன்ற பிரமையை ஏற்படுத்துவதுதான் இவ்வகை செயல்பாட்டின் முதல் படி.

"அப்படியானால் இதுபோல் பிறரை ஏமாற்றுவதுதான் வாழ்வின் வெற்றிக்கு ஒரே வழி என்று கூறுகிறீர்களா" என்ற கேள்வி உங்கள் மனதில் எழக்கூடும். அந்தக் கேள்வியை பலர் என்னிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இதில் அறநெறிக்கு ஒவ்வாத செயல்பாடுகள் ஏதுமில்லை. நாம் எல்லோருமே ஒரு வகையில் பிறருக்காகத்தான் உழைத்துக் கொண்டிருக்கிறோம். நம் ஒவ்வொரு செயலும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ பலருக்கு லாபங்களை கொண்டு சேர்த்தவண்ணம்தான்  இருக்கிறது.நம்மையறியாமல் விளம்பரங்கள் மூலமாகவும், பரிந்துரைகள் மூலமாகவும், ஆங்காங்கே கவனமாகச் சிதறப்பட்ட தேர்ந்தெடுத்த சொற்றொடர்கள் மூலமாகவும் பிறரால் ஆளப்பட்டு, அவர்கள் சித்தப்படிதான் செயலாற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவை துல்லியமாக நம் மனதால் அடையாளம் காட்டப்படுவதில்லை. இதையே அறிவார்ந்த முறையில் திட்டமிட்டு, நம் இலக்குகளை எட்ட நம்மைச் சுற்றியுள்ளவர்களின் பங்கெடுப்புடன் முனைப்புடன் செயல் புரிந்தால் வெற்றி நிச்சயம். பெயரும் பெருமையும் கைகூடும். நம்முடன் ஒருங்கிணைந்து ஈடுபாட்டுடன் பங்கெடுத்தால் அவர்கள் நிச்சயமாக பயன்பெறுவார்கள்; அவ்ர்களுடைய நன்மை நம் நன்மையுடன் பிணைந்திருக்கிறது என்ற கருத்தை பிறர் மனத்தில் பதித்துவிட்டால், அதுவே பாதி வெற்றி. மீதம் தானே நம்மிடம் வந்துசேரும்!

ஆள்பவர், ஆளப்படுபவர் என்ற பாகுபாடு எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதொரு அமைப்பு. இது இயற்கையின் கட்டாயம். இத்தகைய செயல்முறை இல்லையெனில் சமூக அமைப்பு என்பது சாத்தியமே இல்லை. புலி, கரடி போன்ற தனிக்காட்டு ராஜாக்கள் தவிர, கூட்டுக் குடும்பமாக இயங்கும் எல்லா விலங்கினங்களும், எறும்பு, தேனீ போன்ற ஒட்டுமொத்த காலனி வாழ்க்கை வாழும் பூச்சி வகைகளும் இத்தகைய வழிமுறையையே கடைப்பிடிக்கின்றன. ஏற்றத்தாழ்வு அதிகமில்லாத அமைப்புகளில்கூட கடைசியாக ஒப்புதல் அளிப்பவர் என்று ஒருவர் கட்டாயம் இருப்பார்.

நீங்கள் ஒரே ஒரு நபரை வேலைக்கமர்த்தி உங்கள் வீட்டை வர்ணமடிக்கச் சொன்னீர்களானால், நீங்களே அந்த வேலையின் வரையறைகளை உறுதிசெய்து மேற்பார்வையிட்டு செய்து முடிக்கலாம். ஆனால் 2, 3 பேருக்குமேல் கொண்ட ஒரு குழுவை அமர்த்தினீர்களேயானால் அவர்களின் பங்கெடுப்பை ஒழுங்கு செய்து நிர்வகிக்க ஒரு மேலாளர் தேவைப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஈடுபட்டவுடனேயே அந்த நிலை ஒரு நேரியல் சமன்பாட்டிலிருந்து வேறுபட்டுவிடும்.  அப்போது அந்த செயலின் வெற்றி தோல்வி, அந்த மேலாளரின் ஆளுமைத்திறன் பொருத்து அமையும். இதுவும் ஒரு மனவியல் சார்ந்த இயற்கை நியதிதான்.

எருதுகள் பூட்டிய வண்டியில் பாரம் ஏற்றி அவற்றை விரட்டுவதில் நாம் உடன்படுகிறோம். குதிரைகள் நமக்காகத்தான் பிறவி எடுத்திருக்கின்றன. கொசுக்கள் விரட்டப்பட வேண்டியவை. கரப்புகள் அழிக்கப்பட வேண்டியவை.  கிளிகள் கூண்டிலடைக்கப்பட்டு நம் இல்லங்களை அலங்கரிக்க வேண்டியவை. நாய்கள் இருப்பதே நமக்கு உழைப்பதற்காகத்தான். அவற்றின் utility value நாம் நினைக்கும்படி இல்லையென்றால் அவை அழிக்கப்பட வேண்டியவை.  இப்படி எல்லாவற்றையுமே நம் நோக்கப்படி பார்த்துத்தான் முடிவெடுக்கிறோம். அத்தகைய அணுகுமுறை உண்மையில் அறநெறிப்படி சரியா என்ற கேள்வியே நம் மனதில் எழுவதில்லை. அது போகட்டும். ஒரு நிறுவனத்தில் சம்பளத்துக்கு வேலைபார்த்துக் கொண்டு, வேலைப் பளு மற்றும் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டிய அவசியத்தைப் பற்றியும், உரிமைகள் பற்றியும் கோஷமிட்டுக் கொண்டு,  கடிகாரத்தின் முட்களைப் பிடித்துத் தொங்கும் ஒரு தொழிலாளி தன் சொந்த வேலைக்காக இன்னொரு தொழிலாளியை (பகுதி நேரத்திற்காகவாவது) வேலைக்கமர்த்தினால், அவர் அணுகுமுறை எவ்வாறிருக்கும்? அவர் பறைசாற்றும் தொழிலாள உரிமைகளை தன்  கைக்காசிலிருந்து கூலி பெரும் தொழிலாளியின்பால்  அனுசரிப்பாரா? நிச்சயமாக இல்லை. சீனாவில் வேலைநிறுத்தம் என்று எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறோமா? ஏன் இந்த இரட்டை வேட நிலை? இதுதான் இயற்கை. இந்த இரட்டை அணுகுமுறையைத் தவிர்க்க முடியாது. நான், எனது என்கும்போது சட்டங்களும், கோட்பாடுகளும் வேறு அர்த்தம் பெறுகின்றன. மனித மனம் அத்தகைய ஓர்நிலைச் சார்பை நிலைநிறுத்தும்படிதான் படைக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது பிறர் மனத்தின்மேல் ஆளுமை செலுத்தி அவர்களை நம்போக்குக்கு மாற்றி நமக்கு ஆகவேண்டியவற்றை நடத்திக் கொள்வதில் நெறி பிழைதல் என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது உலக நியதி. நான் ஆளப்பிறந்தவன், என் சொல்கேட்டு பிறர் நடக்க ஏதுவாக என் செயல்பாட்டை மாற்றியமைப்பேன், பிறர் மனதில் என்னைப் பற்றிய மேன்மையான இமேஜை உருவாக்கி, அதனை எனக்கு சாதகமாக பயன்படுத்துவேன். இத்தகைய கண்ணோட்டத்தில் எந்தவிதத் தவறும் இல்லை. இதனால் உங்கள் மனத்தூய்மைக்கு எவ்விதக் கேடும் இல்லை. ஆனால் பொதுவில் இதனை பறைசாற்றாதீர்கள். பிறர் நம்மிடமிருந்து எத்தகைய சொற்களைக் கேட்க விரும்புகிறார்களோ, அதனையே அளிப்போம். நம் மனதிலுள்ளதை, நம் செயல் திட்டங்களை அப்படியே "சுக்குநூறாக" உடைத்துச் சொல்லவேண்டிய அவசியமில்லை. அதனை மக்கள் விரும்பவும் மாட்டார்கள். தேவை புத்திசாலித்தனம்தான்!

நம் மனம் ஒருமித்து ஓர் சிந்தனையில் லயித்திருக்கும்போது, நம் உடலின் அங்கங்கள் எவ்வித சேஷ்டைகளில் ஈடுபடுகின்றன என்பது நம் கவனத்திற்கு வராது; அவை நம் மனத்தின் கண்ணிற்கும் புலப்படாது. அதுபாட்டுக்கு கோணங்கித்தனமாக ஏதாவது செய்து கொண்டிருக்கும். நாம்தான் அவற்றை கவனிக்கவில்லையேயன்றி நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம் ஒவ்வொறு அசைவையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதன்மூலம் அவர்கள் நம்மைப் பற்றிய கணிப்பை மனதிலிருத்திக் கொள்கிறார்கள். Body language-க்கு உள்ள தாக்கத்தை நீங்கள் அறிவீர்கள். அத்தகைய தன்னிச்சை செயற்கள்:

 1. மூக்கிலிருந்து தூர்வாருதல். சிலர் அங்கு புல்பிடுங்கி கையில் வைத்து அழகுபார்க்கவேறு செய்வார்கள்.
 2. பல் குத்துதல். இது முழு கவனத்துடன் பாத்ரூமில் செய்யவேண்டியது.
 3. சட்டை பொத்தானை சரிசெய்தல், தலை சொரிதல், கனைத்தல், செருமுதல் - இவை தன்னம்பிக்கையின்மையை பறைசாற்றும்.
 4. இருமி இருமி கோழையை வெளிக்கொணர்தல். இதைவிட அருவருப்பான செயல் வேறு இல்லை என்பது என் கருத்து.
 5. குறுக்கே பேசுதல். வெட்டிப் பேசுதல். எதெற்கெடுத்தாலும் தர்க்கம் செய்தல்.

எங்கோ என்னமோ நடக்கிறது, நமக்கும் இந்த உலகத்துக்கும் தொடர்பில்லை என்பதுபோன்ற மந்த நிலையைத் தவிர்க்க வேண்டும். Full of energy என்ற என்று உங்களை பிறர் எண்ணவேண்டும். எதையும் ஒத்திப் போடுதல், நமக்கு ஆதரவளிக்கக் கூடியவர் யார்யார் என்பதை அடையாளம் கொள்ளாதிருத்தல், வாய்ப்புக்கள் நெருங்கி வரும்போது அவற்றை அசட்டை செய்தல் போன்றவை வெற்றிக்கு வழிகாண்பிக்காது.

சிலர் குள்ளமாயிருப்பர். சிலர் ஒட்டைச் சிவிங்கி போலிருப்பர். சிலருக்கு கழுத்து எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு "தனிப்படை" அமைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு சப்பை மூக்கு. மற்றும் சிலருக்கோ கிளி மூக்கு, சிலர் முடிக்கற்றை நெற்றியில் விழ ஸ்டைலாக தலையசைப்பர். சிலருக்கு தலையில் வழவழ மைதானமே அமைந்து, அதனை யாரும் திருடிச் செல்லாதபடி அதற்கு ஓரத்தில் கோரைப்புல்லால் பாத்தி கட்டியிருக்கும். இதுபோல் வெளித்தோற்றத்தில் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், அவற்றை மறைத்து, மக்கள் கவனம் அவற்றிலிருந்து விடுபட்டு நம்முடைய சிறப்பியல்புகள்பால் செல்லும்படி கவனமாக அவர்கள் மனதை திசை திருப்புவதில்தான் உங்கள் வெற்றி அடங்கியிருக்கிறது. அதனை ஒரு திட்டத்துடன், ஒருவித "பாணி"யைக் கடைப்பிடித்து முழு ஈடுபாட்டுடன் செய்ய முற்பட்டால் பூமி, வானம், பாதாளம் அனைத்துமே வசப்படும்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஆற்றல் தரும் ஆதிக்கம் - எஸ்.கே - {APR - 07 - 05}  
  கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீச்சாளர் தன் கையில் பந்தை எப்படிப் பிடித்துக் கொண்டு, எந்த முறையில் விடுவிக்கிறார் என்பதை பேட்ஸ்மேன் மிக உன்னிப்பாகக் கவனிப்பார். அதன்மூலம் பந்து எத்தகையது என்பதைக் கணித்து, அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற தயார் நிலையை முடிவு செய்துகொள்வார்.
http://www.tamiloviam.com/unicode/04070503.asp
Expand / Collapse
 

இந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்தபோது மற்ற அமைச்சர்களோ, கட்சிப் பிரமுகர்களோ, அதிகாரிகளோ, யாரும் அவர் மனதில் என்ன இருக்கிறது என்பதை எளிதில் ஊகிக்க முடியாதபடி "மூடிய கையாக" இருந்தார் என்று கூறுவார்கள். மற்றவர்களின் கருத்துகளைக் கேட்டு அறிவாரேயன்றி தன் உள்ளத்தை ஒருபோதும் பிறர் அறிய வெளிக்காண்பித்ததே  கிடையாது. காதும் கருத்துந்தான் வேலை செய்யுமேயன்றி வாய் அல்ல. அதுபோல் அவருடைய தோற்றக்குறிகள் மூலமாகக்கூட எதுவும் அறியமுடியாது.  தக்க தருணம் வரும்போது, கடைசியில்தான் தன் முடிவை அறிவிப்பார். அதனால் அவரிடம் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை உணர்வு தொடர்ந்து இருந்தது. பிறர்மேல்  அவர் கொண்ட ஆளுமை, கடைசி வரையில் குறையாமல் இருந்தது. She kept people guessing as to what she was up to, all the time.

கிரிக்கெட் மைதானத்தில் பந்து வீச்சாளர் தன் கையில் பந்தை எப்படிப் பிடித்துக் கொண்டு, எந்த முறையில் விடுவிக்கிறார் என்பதை பேட்ஸ்மேன் மிக உன்னிப்பாகக் கவனிப்பார். அதன்மூலம் பந்து எத்தகையது என்பதைக் கணித்து, அதனை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற தயார் நிலையை முடிவு செய்துகொள்வார். ஆனால் சில பந்துவீச்சார்கள் அவ்வாறு பந்தை முழுவதும்  படித்துவிடாதபடி கையை மூடியபடி வீசுவார்கள். சிலர் கடைசி நிமிடத்தில்தான் சரியான கைக்கு பந்தை மாற்றிக் கொண்டு, பின் வீசுவார்கள். கூக்ளி, Reverse swing போன்றவை இதுபோல் மட்டையாளர்களை ஏமாற்றும் உத்திகள். இதுபோல் நம் எண்ணங்களையும் செயல் திட்டங்களையும் பிறர் எளிதில் கணித்துவிட முடியாமல் காக்க வேண்டும். எல்லா சீட்டுக்களையும் முகம் தெரிய விரித்து வைத்துவிட்டு விளையாட முடியுமா? நம்மிடம் எவ்வளவு Ace-கள் இருக்கின்றன என்பதை எதிராளி அறியாமல் காப்பதுதான் புத்திசாலித்தனம். சென்ற இதழில் நான் குறிப்பிட்டிருந்தபடி, நாம் முழுவதும் படிக்கப்பட்ட புத்தகமாக இல்லாமல் கொஞ்சம் புதிராக (Enigma) இருந்தால்தான் பிறருக்கு நம் மேல் ஒரு ஆர்வமும் மதிப்பும் தொடர்ந்து இருக்கும் (sustained interest and curiosity).

நீங்கள் வங்கி போன்ற ஒரு பொது சேவை அலுவலகத்துக்கு சென்று மேலாளரை சந்திக்கிறீர்கள். அவர் ஏதோ வேலையில் பிஸியாக இருக்கிறார். பிறகு உங்களுக்கு அடுத்தபடி வந்தவர்களைக் கவனிக்கிறார். ஆனால் உங்கள் பக்கம் அவர் கண்கள் நோக்கவேயில்லை. என்ன செய்வீர்கள்? அவர் எப்போது பெரிய மனது வைத்து உங்கள் பக்கம் திரும்புகிறாரோ அதுவரை பொறுத்துக் கொண்டிருப்பீர்களா, அல்லது அவர் செய்வது தவறு, உங்களை உடனே கவனிக்க வேண்டும் என்பதை உணர்த்தி, உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவீர்களா? நீங்கள் சும்மா உட்கார்ந்திருந்தால் உங்களை மிதியடியாகத்தான்  மதிப்பார்கள். அதனால் உங்கள் தோற்றத்தை முன்னிலைப் படுத்தல் அவசியம்.

உங்கள் பேச்சு, செயல் எல்லாமே பிறர் கவனத்தைத் தூண்டும் வண்ணம் அமைய வேண்டும். Make yourself interesting to others. இதற்கு சுலபமான வழி நகைச்சுவை உணர்வுதான். ஆனால் அது இயல்பானதாக, புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். மலிவாகவும், தரக் குறைவானதாகவும் இருக்கக் கூடாது. நகைச்சுவையாக பேசக்கூடியவர்களுக்கு சமுதாயத்தில் விசிறிகள் அதிகம். நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள்தான் பெண்களை அதிகம் கவர்கின்றனர் என்கிறார்கள்.

உங்கள் கீழ் பணியாற்றுபவர்களிடம் உரையாடும்போது chatty-ஆக இடம் கொடுத்து பேசாதீர்கள். எந்தவித மேலாதிக்க உணர்வுமின்றி சகஜமாக உரையாடுபவர் நீங்கள் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் நீங்கள் தோற்றுவித்தாலும், இங்கு யார் சொல் கடைசி, யார் ஆளுமை செலுத்துபவர் என்கிற செய்தி அடித்தளத்தில் ஐயத்திற்கு இடமின்றி ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும்.

ஒருமுறை ஒருவர் சரியான அறிவுரை கொடுத்தார் என்ற காரணத்திற்காக  அந்த நபர் என்ன சொன்னாலும் அப்படியே முழுதும் ஆராயாமல் கேட்பது என்ற வழக்கத்தைக் கைக்கொள்ளாதீர்கள். நிலையாக இன்னார் அறிவுரையைத்தான் நீங்கள் கேட்டு அதன்படிதான் எப்போதும் செயல்புரிவீர்கள் என்பதுபோன்ற செய்தி பரவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இது மற்றவர்களுக்கு தவறான புரிதலுக்கு இடமளித்து, அந்த நபர்கள் உங்களைப் பற்றி ஓர் எதிர்மறை இமேஜை பரப்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் ஒரு முக்கிய பதவியில் இருந்தால், அல்லது ஒரு நிறுவனத்தை நிர்வகிப்பவராக இருந்தால், தகுதி பார்த்து அறிவுரை கேளுங்கள், அருகாமை கொடுங்கள். சம்பந்தமில்லாத வெளிக்காரணங்கள் அடிப்படையில் உங்கள் முடிவுகள் அமையுமானால், அத்தகைய நபர்கள் மனம் மாறி உங்களுக்குக் கெடுதல் செய்ய வாய்ப்பிருக்கிறது. உறவினர் என்றோ, வேண்டியவர் சிபாரிசு செய்தார் என்றோ,ஒருவரை அருகில் இருத்திக் கொண்டீர்களானால், அவர் உங்கள் அருகாமையை தவறான வகையில் பயன்படுத்த தன் சுயநலத்தால் உந்தப் படுவார்கள். இது போன்ற காரணங்களினால் பல பேரசுகள் வீழ்ந்த வரலாறுகளை நாம் அறிவோம்.

Reputation is the cornerstone of power என்பார்கள். உங்கள் புகழ், நற்பெயர், கௌரவம், கீர்த்தி முதலியவற்றை நீங்கள்தான் பேனிக்காக்க வேண்டும். ஏனென்றால் இவை உங்களுக்கு ஒரு நாளில் கிட்டுவதல்ல. இதற்காக நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் சேர்த்த நற்பெயரைத் தொலைப்பது மிகச் சுலபம். ஒரே ஒரு தவறான சொல், தவறான இடத்தில் சொல்லப் பட்டால், அது தீபோல் பரவி உங்கள் புகழை "பரமபத சோபன" படத்திலுள்ள பெரிய பாம்புபோல் பாதாளத்தில் தள்ளிவிடும். மலைச் சிகரங்களில் அதிக இடமிருக்காது. கொஞ்சம் சருக்கினாலும் சீரழிவுதான். அதுபோல்தான் வாழ்க்கையின் மேல் நிலையும்.

உங்களைச் சுற்றியுள்ள கூட்டத்தைவிட நீங்கள் எதோ ஒருவகையில் மேம்பட்டவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்துங்கள். மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும்  காந்த சக்தி ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தியவண்ணம் இருக்க வேண்டும். ஒளி உங்கள் திசையில்தான் பாய வேண்டும். இதற்கு முதல் படி தன்னம்பிக்கை கொள்ளல். ஒரு சொல் சொன்னாலும் தீர்மானமாக வெளிப்பட வேண்டும். ஏனையோர் அதைக் கேட்டே ஆகவேண்டும்!

இத்தகைய ஆளுமையையும், பிறர்மேல் செலுத்த வேண்டிய "பவரை"யும் பெறுவதற்கு உங்கள் கைவசம் உள்ள எல்லாவிதக் கருவிகளையும், சாதனங்களையும் பயன்படுத்தலாம். இத்தகைய கருவிகளில் மொழியும் ஒன்று. இதனை பலர் சாதகமாகக் கையாண்டதைப் பார்த்திருக்கிறேன். உதாரணமாக, உங்கள் காரோ, டிவியோ பழுதாகியுள்ளது; ஆனால் சேவையாளர் அசட்டையாக உள்ளார். அந்த நிலையில் நீங்கள் உங்கள் குரலை லேசாக உயர்த்தி "இந்தவித சாக்குகள் என்னிடம் செல்லாது" என்பதை தெளிவாக உணர்த்தவேண்டும். அந்த சூழ்நிலையில், ஒப்பந்தப்படி அமைந்த கடமைகளிலிருந்து தப்புவதற்குள்ள முயற்சியில் இறங்குவது பொதுவான மனித இயற்கை. ஆனால் அதற்கு நீங்கள் சிறிதும் இடம் கொடுக்கக் கூடாது. உங்களுக்கு என்ன வேண்டும், அதன் காரணங்கள் என்ன என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி  இருக்க வேண்டும். அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிடக் கூடாது. எந்தவித சால்ஜாப்புக்களுக்கும் செவிசாய்க்கக் கூடாது. இதனை Broken record method என்பார்கள். உங்கள் தேவை என்ன, உங்களுக்கு அது நியாயமான முறையின்படி நிச்சயமாகக் கிட்டவேண்டும் என்பதில் தெளிவான கருத்துக் கொண்டு அத்தகைய நிலைப்பாட்டில் எவ்வித குழப்பமுமில்லாமல் வெளிக்காண்பித்தீர்களானால், அவை உங்களுக்குக் கிட்டியே தீரும். இதுதான் இயற்கையின் நியதி. If you insist on getting only the best, you most often get it என்பது ஒரு பொன்மொழி.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆங்கிலத்தில் உரையாட முனைவார்கள். ஆனால் பலருக்கு சரளமாகப் பேச வராது. ஆங்கிலமும் தமிழும் கலந்து "மணிப்பிரவாள"நடையில் பேசுவார்கள். அத்தகையவர்களிடம் நீங்கள் கொஞ்சம் "ஸ்டைல்" கலந்த ஆங்கிலத்தில் தொடர்ந்து ஆளுமையுடன் உரையாடுங்கள். அவ்வளவுதான், அந்த நபரிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டு அவர்களின் நிலை கொஞ்சம் தொய்வு கண்டுவிடும். இதுதான் சரியான தருணம் உங்கள் பவரை செலுத்துவதற்கு! இது ஆங்கிலம் மட்டுமின்றி ஹிந்தி, தமிழ் போன்ற எல்லா மொழியையும் சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தலாம். ஒரு பணிமனையில் நடைபெற்ற விழாவில் பேச்சாளர்கள் அனைவரும் ஆங்கிலத்திலேயே தங்கள் உரையைப் படித்தார்கள்.  அதனால் பார்வையாளர்கள் பங்களிப்பே இல்லாமலிருந்தது. கடைசியில் என் வாய்ப்பு வந்தபோது தமிழில் பேசத் தொடங்கினேன். உடனே பெருத்த கரகோஷம் எழுந்தது. நான் ஒன்றும் கருத்துச் செறிந்த சொற்பொழிவு எதுவும் ஆற்றவில்லை. ஆனால் அந்தத் தருணத்தில் தமிழ் தான் அங்கு குழுமியிருந்தவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. அன்றிலிருந்து பலர் அதுபோன்ற விழாக்களில் என்னைப் பேச அழைக்க ஆரம்பித்து விட்டார்கள் (குறைந்த பட்சம் நன்றி நவிலலாவது!). இதுபோல் வட இந்தியாவுக்குச்  சென்றால் ஹிந்தி தெரிந்தவர்கள் ஆளுமை ஓங்கும்!

உங்கள்மேல் ஒளிக்கற்றைகள் விழுந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று கூறினேன். அதற்காக உங்கள் மேல் சலிப்பு வரும் வண்ணம் over exposure கூடாது. அதே நேரத்தில் வெற்றி இலக்கை எட்டும்போது உங்களின் பங்கு, அதன் பயனாகக் கிட்டும் புகழ், இவை எள்ளளவும் குறைய நீங்கள் இடம் கொடுக்கக் கூடாது.

வாழ்க்கையில் தோல்விகளையே சந்தித்தவர்கள், தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள், தீவிரமான கருத்துக்களுக்கு அடிமையானவர்கள், இங்கிதம் தெரியாதவர்கள் , அதிர்ஷ்டமற்றவர்கள், மனமகிழ்ச்சியற்ற போங்குகள்  போன்றவர்களை கிட்டச் சேர்க்காதீர்கள். அது உங்கள் பெருமைக்கு ஆபத்து. நீங்கள் அரும்பாடுபட்டு சேர்த்த புகழை அரை நொடியில் தங்கள் ஒவ்வாத நடத்தை மூலம் காலி செய்து விடுவார்கள். தவிர, உங்கள் மனத்திலும் எதிர்மறை உணர்வுகளைப் புகுத்தி, உங்கள் தன்னம்பிக்கையை சிதறடித்து விடுவார்கள்.
 
நீங்களே எல்லாத்துறைகளிலும் வல்லுனராக அமைய முடியாது. உங்களைச் சுற்றியிருக்கும் பல்துறை நிபுணர்களின் சேவையை நீங்கள் முழுதும் பெறவேண்டும். உங்களுக்கு சேவை செய்வதை அவர்கள் தங்களுக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருத வேண்டும். அது போன்ற எண்ண ஓட்டத்தை அவர்கள் மனதில் புகுத்த வேண்டும். வேலை முடிந்தபின் இன்னார்தான் செய்தார்கள் என்ற பெருமையை அவர்களுக்குக் கொடுத்தாலும், அவர்களை தேர்வு செய்து, ஒத்துழைப்பளித்து, மேலாண்மை புரிந்ததற்கான புகழ் உங்களிடம் கட்டாயம் சேரும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். கொஞ்சம் அசந்தால், காடுகளில் வேறு விலங்குகள் வேட்டையாடிப் பெற்றிருக்கும் இரைகளை, கழுகுகளும், ஹையீனாக்களும் திருடிச் செல்வது போல், அப்படியே சுருட்டிவிடுவார்கள்!

உங்களைச் சூழ்ந்த இவ்வுலகம் "எங்கே அவர்" என்று உங்களை எதிர் நோக்கியே இருக்க வேண்டும். வெற்றித் தாயின் அருள் என்னேரமும் உங்களிடம் குறைவின்றி அமைதல் வேண்டும்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : அடி சிறிது, ஏற்றம் பெரிது - எஸ்.கே - {MAR - 31 - 05}  
  உங்களை எளிதில் எனையோர் “கணக்குப் போட்டு” வைக்க அனுமதிக்காதீர்கள். திடீரென்று வேறு விதமான கேள்விகளைக் கேளுங்கள், சற்றே மறுபட்ட கோணங்களில் அணுகுங்கள். எதிர்வினைகளை மாற்றுங்கள். கொஞ்சம் uncertainty இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மை மேய்த்துவிடுவார்கள்.
http://www.tamiloviam.com/unicode/03310503.asp
Expand / Collapse
 

நீங்கள் உங்கள் அலுவலகத்தில் ஒரு பெரிய அதிகாரியாக இருந்தாலும் சரி, ஒரு பொது அமைப்பில் பெரிய பொறுப்பில் உள்ளவராக இருந்தாலும் சரி, அல்லது சமூகத்தில் பெரிய மனிதராக மதிக்கப் பட்டாலும் சரி, சில அடிப்படை நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது மிக அவசியம். இவைகள் உங்களுக்கு மிக “ஸில்லி”யாகத் தோன்றலாம். ஆனால் நாம் அற்பமாக எண்ணும் இத்தகைய அடிப்படை விஷயங்கள்தான் சில முக்கிய தருணங்களில் நம்மைக் கவிழ்த்து விடுகின்றன. ஆகையால் இவற்றின்பால் நாம் குறிப்பாகக் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் நாம் ஒரு முழு நிறைவான நன்மதிப்பைப் பெறமுடியும். Trifles make perfection என்கிறது ஒரு பொன்மொழி.

சரி, இப்போது இவ்வகை “சின்னச் சின்ன செய்திகள்” என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

 1. ஒரு இடத்தில் போய் “நான் இன்னார்” என்று சுய அறிமுகம் செய்து கொண்டு எதேனும் உதவியையோ, சிறப்புச் சலுகையையோ கேட்டுப் பெறுவதைவிட, உங்கள் உதவியாளரை விட்டு கேட்கச் சொல்வது சிறப்பானது. நீங்களே கேட்டால் ஒரு மாற்று கம்மிதான். அப்படி சில இடங்களில் நீங்களே போகவேண்டிய கட்டாயமாக இருந்தால், நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை இன்னொருவரை விட்டு அறிவிக்கச் சொல்லுங்கள். இவ்வாறு செய்தால் உங்கள் செல்வாக்கு தன்னையறியாமல் கேட்பவர் மனதில் பதியும். காவல்துறை மற்றும் அரசு சார்ந்த முக்கிய அதிகாரிகள் இத்தகைய நடைமுறையைக் கையாள்வதை நீங்கள் காணலாம். “ஐயா வர்றார்” என்று கட்டியம் கூறப்படுவதை கண்டிருப்பீர்கள். இது நிச்சயமாக ஒரு effect ஏற்படுத்துகிறது.  இவ்வுலகம் பெரிய மனிதர்களை அதற்குள்ள பந்தாவுடன் இருந்தால்தான் மதிக்கிறது. என்பது மறுக்க முடியாத உண்மை.
 2. அலுவலகத்திலோ அல்லது எந்தப் பொது இடத்திலோ, வராண்டாவில் நடந்துவரும்போதும், ஒப்பனை அறையிலும் யாருடனும் பேச்சுக் கொடுக்காதீர்கள் - முக்கியமாக உங்கள்கீழ் பணியாற்றுபவர்கள், வாடிக்கையாளர்கள், உக்களைக் காண வந்திருப்பவர்கள் போன்றவர்களுடன். அவர்களை உங்கள் அறைக்கு அழைத்துப் பேசுங்கள். இது உங்களைப் பற்றிய அவர்களின் கணிப்பை மேம்படுத்தும்.
 3. உங்கள் அறையில் உங்கள்கீழ் பணியாற்றும் நபர்கள் குழுமியிருக்கும் நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. என்ன செய்வீர்கள்? அவர்கள் பாட்டுக்கு இருக்கட்டும். நாம் பாட்டுக்கு பேசுவோம் என்று உரையாடுவீர்களா? அதுபோல் ஒருபோதும் செய்யாதீர்கள். ஏதாவது மிக முக்கியமான செய்தியை பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும். அது எல்லோருக்கும் தெரியவேண்டியதில்லை. ஆகையால் அவர்களை, “தயவுசெய்து கொஞ்சம் வெளியிலிருங்கள்’ என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை. இத்தகைய நடைமுறையை பலர் கையாண்டு நான் பார்த்திருக்கிறேன். ஏனென்றால் நீங்கள் இன்னொருவருடன் பேசுவது அலுவலக புல்லடினில் பிரசுரம் ஆகவேண்டுமா! விருந்தினர்களோ, நீங்கள் “வெளியே போ” என்று சொல்லமுடியாத ஆசாமிகளோ உள்ளிருந்தால், ஃபோனில் பேசுபவர்களை “அப்புறம் பேசலாம்” என்று சொல்லி சமாளித்துவிடுங்கள். கொசு அளவு மூளையிருந்தால்கூட அடுத்த முனையில் உள்ளவர் நிலைமையைப் புரிந்து கொள்வார்!
 4. முக்கிய விஷயங்களை - குறிப்பாக அலுவலக அரசியல் சார்ந்த விஷயங்களை காரிலோ, வேனிலோ - இதுபோன்று பிரயாணம் செய்யும்போது யாருடனும் விவாதிக்காதீர்கள். Gossip mill-க்குத் தீனி போடுவது போல ஆகும். Sensitive விஷயங்கள் - மாறுதல், பதவி உயர்வு, உங்கள் வணிக சம்பந்தமான ரகசியங்கள் முதலியவை உங்களையறியாமல் இத்தகைய உரையாடல்களின் மூலம் வெளிப்பட்டால், உங்களுக்கு பெரிய இழப்பு வர வாய்ப்புள்ளது. Information is power.
 5. ஒப்பனை அறை (Toilet) ஒன்றில் வெளியேறும் வாயிலின் மேல் “X Y Z” என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்ததை பார்த்தேன். அதற்கு என்ன பொருள் என்று விசாரித்தபோது “Examine Your Zip” என்றார்கள். நீங்களே சொல்லுங்கள், இது சின்ன விஷயமா? பாத்ரூமிலிருந்து வெளியே வரும் முன்னால் “அந்த இடத்தை” ஒரு முறை “செக்” செய்து கொள்வது மிக முக்கியம். இதில் கவனம் செலுத்தாமல் பல பொது நிகழ்ச்சிகளில் பெரிய மனிதர்கள் சிலர் வழிந்த்தை நான் பார்த்திருக்கிறேன்! மேலும் சட்டை, பேண்ட் - பெண்களானால் அவர்களின் மேலாடை முதலியவற்றின் மேல் தண்ணீர் சிந்தியிருந்தால் அதோடு பலர் முன்னால் போகாதீர்கள். அது காயும்வரை காத்திருந்து போங்கள். நம்மை பல கண்கள் கவனிக்கின்றன என்பதை எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.
 6. எப்போதும் உங்கள் நடை, உடை பாவனைகளில் ஒரு “ஸ்டைலை”க் கடைப் பிடியுங்கள். இது நீங்கள் பல முறை ஒத்திகை பார்த்து செம்மைப் படுத்தப் படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும்.  உங்கள் இமேஜை அது மேம்படுத்தவல்லதாக அமைய வேண்டும். உலகம் அதை தலைவர்களிடம் எதிர்பார்க்கிறது.
 7. உங்களை எளிதில் எனையோர் “கணக்குப் போட்டு” வைக்க அனுமதிக்காதீர்கள். திடீரென்று வேறு விதமான கேள்விகளைக் கேளுங்கள், சற்றே மறுபட்ட கோணங்களில் அணுகுங்கள்.  எதிர்வினைகளை மாற்றுங்கள். கொஞ்சம் uncertainty இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நம்மை மேய்த்துவிடுவார்கள்.
 8. எப்போதும் மலர்ச்சியுடனும், இலமையான தோற்றத்துடனும், தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம் அமைந்த முகத்தோற்றதுடனும் இருங்கள். “என்னையா, எனக்கோ வயசாயிடிச்சு, இளமைத் தோற்றத்துக்கு எங்கே போவது? யயாதி கதையெல்லாம் இப்போது எடுபடாது” என்கிறீர்களா? சொற்ப வயதுள்ள பலரே ஈரமான சாக்ஸ் போல முக மலர்ச்சி.யில்லாமல் வயோதிகத் தோற்றத்துடன் “போங்கு” போல இருப்பதைப் பார்க்கலாம். அதே நேரத்தில் வயதான பலர் “விண்’ணென்ற தோற்றத்துடன் இருப்பதையும் காணலாம்!
 9. கூடியவரையில் உங்களுடைய சொந்த வாழ்க்கை பற்றிய உள்விவரங்கள், வங்கிக் கணக்கு மற்றும் சொத்து பற்றிய விவரங்கள் முதலியவை பொதுவில் அறியப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு பெரிய அதிகாரி வங்கிக்கு எந்த உதவியாளரையும் அனுப்ப மாட்டார். தானேதான் போவார். அதுபோல் இல்லாவிட்டாலும் முக்கிய விவரங்களை public domain-ஆக வைக்காமலிருப்பது நல்லது. நீங்கள் ஒரு enigma போன்று, “இன்னும் முழுதும் வாசிக்கப்படாத புத்தகமாக” தோற்றமளிக்க வேண்டும். அப்போதுதான் பிறர் மனத்தில் உயர்வான மதிப்பு இருக்கும். சலிப்புக்கு இடமில்லாமல் “இவரிடம் இன்னும் ஆசாமி ஒளிந்திருக்கிறார்” என்ற உணர்வு எப்போதும் கனன்று கொண்டிருக்க வேண்டும்.
 10. உங்களிடம் ஒட்டுப்புல் போல் “பச்சக்”கென்று ஃபெவிகால் போடுபவர்களை “கறகற”வென்று வெட்டிவிடுங்கள். உங்களுக்கு கேடு வர வேண்டுமென்றால் இவர்களால்தான் வரும். நேர்மையானவர்களை உங்களிடம் அண்டவிடாமல் இவர்கள் விரட்டி விடுவார்கள். சரியான செய்திகள் உங்களை எட்டாமல் ஃபில்டர் செய்து விடுவார்கள். உங்களை “ராடார்” போல் கண்காணிப்பில் வைத்துக் கொள்வதால் அவர்களை நீங்கள் ஏதும் கேள்வி கேட்க இடம் கொடுக்காமல் இருப்பதுதான் அவர்களின் திட்டம். ஜாக்கிறதை!

இன்னும் பெரிய லிஸ்ட் கைவசம் இருக்கிறது. அடுத்த வாரம் பார்ப்போம்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : தலைமை ஒரு திறமை - எஸ்.கே - {MAR - 24 - 05}  
  ஃபோனில் பேசும்போது "வெட்டு ஒன்று, துண்டு இரண்டு" என்றிருக்க வேண்டும். “வழவழா கொழகொழா" என்று நையக்கூடாது. “இவன் என்ன சொல்லப் போகிறானோ" என்ரு எதிராளி கவனத்துடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.
http://www.tamiloviam.com/unicode/03240504.asp
Expand / Collapse
 

ஒவ்வொரு மனிதனும் எந்த நிலையிலும் தன் தனித்தன்மையை நிலைநாட்டவே முனைப்பாக இருக்கிறான். தனக்கென்று ஒரு பெயர், ஒரு identity, ஒரு அங்கீகரிப்பு இருக்கவேண்டும் என்ற விழைவு அவனுடைய வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல்லாயிரம் மனிதத் தலைகளில் என்னுடையதும் ஒன்று என்றில்லாமல், “அதோ, அங்கே புள்ளிபோல் தெரிகிறது பார். அதுதான் நான்" என்று அடையாளம் காட்ட ஏங்குகிறது நம் மனம். டிவி கேமரா நம் பக்கம் திரும்பும் போதெல்லாம் யாராவது பார்க்க மாட்டார்களா என்று கையை ஆட்டுகிறோமே அதுவும் இத்தகைய உந்துதலால் தான். ஏதாவது ஒரு வகையில் தன் சிறப்பை, தன் individuality-ஐ பிறர் அறிய வெளிக்காண்பிக்க வேண்டும் என்ற முனைப்பு உயிருள்ளவரை தொடரும். அந்த ஈகோ வெளிப்பாடு நின்றுவிட்டது என்றால் அவன்மனம் தற்கொலைக்குத் தூண்டும் நிலை ஏற்பட்டுவிடும்.

இதுபோல் நம்மை தனியாக வட்டம் போட்டுக் காண்பிக்க வேண்டும்; நம் மேல் ஒளிக்கற்றைகள் தொடர்ந்து பாய்ந்த வண்ணம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமே, அது நிகழ்வது எப்படி? எதைச் செய்தால் அது சாத்தியமாகும்? அதற்கு முதல்படியாக நீங்கள் ஏதாவதொரு  துறையில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சரி. அது போதுமா? இல்லை. நீங்கள் வெற்றிபெற்றவர் என்பதை உங்களைச் சுற்றியுள்ள உலகம் அறிந்திருக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம்.

இத்தகைய சிறப்பான தனிநிலை அடைவதற்கு முதல் இன்றியமையாத தேவை சுய மதிப்பு (self-esteem) தான். இதைப்பற்றி கீதையிலிருந்து மேற்கோள்காட்டி முன்னமையே எழுதியிருக்கிறேன். தன்னம்பிக்கை, தன் மேன்மையைப் பற்றிய அவதானிப்பு எல்லாம் தெளிவாக இருந்தால்தான் அதனை அடிப்படையாகக் கொண்டு பிறர்மேல் நாம் ஆளுமை செலுத்தமுடியும். நாம் நம்மைப் பற்றி எவ்வலவு தூரம் ஆழமாக அறிந்திருக்கிறோமோ அந்த அளவுக்குத்தான் வெளி உலகத்தையும் கட்டி ஆளமுடியும். இந்த உண்மையை இப்போது பலர் உணரத் தொடங்கியிருகிறார்கள். Enneagram போன்ற முறைகள் மூலம் பலர், "தான் எத்தகையவர்" என்று தோண்டி ஆறாய ஆரம்பித்துள்ளார்கள்.

“Basic self-knowledge” என்ற நூலில் Harry Benjamin என்பவர் கூறுவதைப் பாருங்கள்:
“What we think we have discovered about ourselves is very superficial at first, so that real self-knowledge only comes after years of patient effort. But such effort is immensely worthwhile in every particular, because it not only transforms us, it transforms our whole life for us; because as our level of being changes, so does our life change, too. We become different people inside, and this is reflected by the way life treats us outside.”

“Self-change is the basic pre-requisite for external change. And self-change can only come about as a result of self-knowledge and work on oneself."

நாம் நம்மை மாற்றிக் கொள்வதன் மூலம் வெளி உலகம் நம்மை அணுகும் முறையை மாற்றி நாம் சாதனை புரியலாம். இத்தகைய செயல்பாடுகளை முழுதும் அறிந்த பலர் தம் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நேரு, எம்ஜியார் போன்றவர்கள் மக்கள் மனதைத் தங்கள்பால் திருப்பவும், என்றைக்கும் தன் பர்ஸனாலிடிக்கு சிறிதும் பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும் இதுபோன்ற technique களைத்தான் முழுமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

மக்களால் கொண்டாடப்படும் பெரிய மனிதர்கள் பலர் எல்லோரும் சுலபமாக அணுக முடியாதபடி, எட்டாத தூரத்தில் தங்களை வைத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காண்கிறீர்கள். இது தன்னிச்சையாக நிகழ்வதல்ல. அது போல் ஒரு "தொலைவு" வைத்துக் கொள்வது மிக முக்கியம். Familiarity breeds contempt – இந்தப் பழமொழியை மறக்கக் கூடாது. தூரத்துப் பச்சையாகவே இருக்க வேண்டும். “Playing hard to get” என்பது ஒரு டெக்னிக். அதாவது "நான் உங்களை விடச் சிறந்தவன். என்னை நெருங்குவது எல்லோருக்கும் சுலபத்தில் கிட்டாது"

என்ற செய்தி அடுத்தவருக்கு உணர்த்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் பிறர் மனத்தில் ஒரு சலிப்புத் தோன்றிவிடும். “ஒகோ..., அவரா" என்பார்கள்! எல்லோரையும் உங்கள் வீட்டு அடுக்களைக்கோ, படுக்கையறைக்கோ அனுமதிக்க முடியுமா? சிலரை வாசலிலேயெ பேசி அனுப்பிவிட வேண்டும். சிலரை வரவேற்பறையில் (drawing room, foyer) அமர வைத்து தாகத்திற்கு தண்ணீர் கொடுத்து, சில வார்த்தைகள் சம்பிதாயமாகப் பேசி அனுப்புகிறோம். வெகு சிலரையே நம் வீட்டுக் கூடத்துக்குள் (living room) அழைக்கிறோம். அதுபோல் தரம் பார்த்து, தகுதி பார்த்து, ஒரு குறிப்பிட்ட தூரத்திலேயெ ஒவ்வொருவரையும் நிறுத்த வேண்டும். உங்களைச் சுற்றியுள்ளவர் மனங்களில், “யார் இங்கு ஆளுமை செலுத்துபவர்" (who is in-charge) என்பது ஐயத்துக்கு இடமின்றி உணரப்பட வேண்டும். நீங்களாக முடிவு செய்து குறிப்பிட்ட நபரை அணைக்கவோ, வெட்டவோ செய்ய வேண்டுமேயன்றி, அடுத்தவர் உங்கள்மேல் உரிமை எடுத்துக் கொண்டு தங்கள் முடிவுகளை உங்கள் மேல் திணிக்க இடம் கொடுக்கக் கூடாது.

நீங்கள் பணியாற்றும் நிறுவனத்திலோ, பங்கெடுக்கும் பொது அமைப்பிலோ நீங்கள் ஒரு மேளாண்மை பதவியில் இருந்தால், உங்கள் ஒவ்வொரு அசைவும், உங்கள் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு சொல்லும் கவனமாகக் கண்காணிக்கப் படுகிறது என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். கொஞ்சம் தரம் குறைந்தாலும் உங்களைப் பற்றிய இமேஜ் கீழே சரிந்துவிடும்.

பெரிய பதவியை அடைவதால் மட்டும் ஆளுமை வந்துவிடாது. தன்கீழ் பணியாற்றுபவர்களைக் கட்டுப் படுத்தமுடியாத, மேலாண்மை செலுத்தமுடியாத பல மேலதிகாரிகளை நாம் கண்டிருக்கிறோம். தன்னம்பிக்கையில்லாமலும், பிறர் மனத்தை அடக்கி, அதனைத் தம் ஆளுமைக்குள் கொண்டுவர இயலாதவர்களாகவும் பல பெரிய பதவிகளை வகிப்பவர்கள் இருக்கிறார்கள். ஊன்றிப் பார்த்தால் இவர்களுடைய "மெயின் சுவிட்ச்" இன்னொருவர் கையில் இருக்கும். பதவிக்கேற்ற ஆதிக்கத்தை இவர்கள் செலுத்தவில்லையென்றால், இவர்கள்மேல்

இன்னொருவர் ஆதிக்கம் செலுத்த முற்படுவது திண்ணம்.

நம்மில் பலர் "கித்தாய்ப்பாகப்" பேச ஆரம்பிப்பார்கள். “இப்போது பார். இவனை எப்படி விரட்டறேன் பார். நான் போடற போட்டிலே அவன் கதறிக்கொண்டு ஓடிவருகிறான் பார்" என்று வீராய்ப்பாக டெலிஃபோனை எடுத்து சுழற்றுவார்கள். ஆனால், “தொண்டையிலே 'கீச் கீச்'” விளம்பரத்தில் வரும் MGM சிங்கம் "ம்க்ம்ம்ம்--ர்ர்ர்" என்ற கர்ஜனையுடன் ஆரம்பித்து "மியாவ்" என்று முடிப்பதுபோல "நீங்க பார்த்து செய்யுங்க. ஹி...ஹி" என்று சொணங்கிவிடுவார்கள். இதுபோல் இல்லாமல் நீங்கள் தலைமை வகிக்கும் எந்த நிகழ்விலும் உங்கள் கை ஓங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் பலம், எதிராளியின் பலம், அவர்தம் பின்புலம் எல்லாவற்றையும் துல்லியமாக எடைபோட்டு, நாம் தொடங்கிய விறைப்பிலேயே கடைசிவரை தொடர வேண்டும்.

ஃபோனில் பேசும்போது "வெட்டு ஒன்று, துண்டு இரண்டு" என்றிருக்க வேண்டும். “வழவழா கொழகொழா" என்று நையக்கூடாது. “இவன் என்ன சொல்லப் போகிறானோ" என்ரு எதிராளி கவனத்துடன் கேட்டுக் கொள்ள வேண்டும்.

இன்னொரு முக்கியமான விஷயம்: தலைமையேற்கும் நிலையில் உள்ள உங்கள் சொல்தான் கடைசியாக இருக்க வேண்டும். "தட்டையான அமைப்புமுறை" (flat organization) கொண்ட நிறுவனங்களில்கூட தலைமை என்று ஒருவர் உண்டு. இது எல்லா உரினங்களிலும் உள்ள இயற்கை.

நீங்கள் ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதனை முழுமையும் பிறர் புரிந்துகொள்ளும்படி உரைக்க வேண்டும். உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை சந்தேகத்துக்கு இடமின்றிக் கூறி நிறுத்திவிட வேண்டும். No vacillation, no ambiguity, no hemming and hawing. (ஆனால், உங்கள் முடிவு இன்னதுதான் என்பதை கடைசியில்தான் வெளிப்படுத்த வேண்டும்!)

இதெல்லாம் ஆளுமையின் அடையாளங்கள். நம் வார்த்தைகளில் "குழைவு" வந்துவிடக் கூடாது. இது ஒரு பலவீனத்தின் வெளிப்பாடு. உங்கள் பலவீனங்கள் பிறரால் கணிக்கப்பட்டால் ஆளுமை அவர்கள் கையில் சேர்ந்துவிடும்! So, when you are the chief, play that part!

பதறாமல், உதறாமல், வெளிப்படையாக உணர்ச்சிகளைக் கொட்டாமல், நிதானமான, ஆழமான குரலுடன் உங்கள் கருத்துக்களையும் முடிவுகளையும் எடுத்துக் கூறினால், அதன் தாக்கம் ஏற்றமுள்ளதாக அமையும். உத்தரவுகள் "தொங்கும்" சொற்களாக இருக்கக் கூடாது. உறுதியாக இருக்கவேண்டும். Spoken with deep resonant voice and a measured tone; words delivered with appropriate pause. எந்த உத்தரவு பிறப்பித்தாலும், அது நிறைவேற்றப் பட்டதா -  என்பதைக் கண்காணிக்கவேண்டும். இல்லையெனில் உங்கள் மேல் அசட்டையாக இருக்கத் தொடங்கி விடுவர். “அவர் அப்படித்தான் ஏதாவது சொல்லுவார். ஆனால், செய்யல்லைன்னா கண்டுக்க மாட்டார். பேசாம விடு" என்பார்கள். சொற்கள் தன்னிச்சையாக வந்து விழக்கூடாது. நம் முழு ஆளுமையுடன் வரவேண்டும். ROM-ன் ஆதிக்கமில்லாமல், நம் அறிவுசால் RAM-ன் கட்டுப் பாட்டில் வரவேண்டும்!

பொது இடங்களுச்சென்றால் நீங்கள் நாலுபேர் முன்னால் மதிக்கப்பட விரும்புகிறீர்கள். பிரபலமான கொயில்களுக்குச் சென்றால், முண்டியடித்து, நெட்டித்தள்ளி தரிசனம் செய்யாமல், தனியாக கர்ப்பக் கிரகத்துக்கு அழைத்துச் செல்லப் படுவதை விரும்புகிறீர்கள். எங்கு சென்றாலும் உங்களை சிறப்பாக கவனிக்க வேண்டும் என்று ஆவல்படுகிறீர்கள். இவ்வகை சிறப்பு மரியாதைகள் நீங்கள் பெறவேண்டுமானால், வாழ்க்கையில் வெற்றி பெற்றவராக, ஒரு தலைவனாக, சிறப்பு வாய்ந்தவனாக பிறரால் உணரப்பட வேண்டும். வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அந்த வெற்றி எட்டுத் திக்கும்  எட்டும்படி முரசு கொட்டப்பட வேண்டும்!

Nothing succeeds like success in this world !


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : பெர்ஸனாலிடியும் பொரிவிளங்காய் உருண்டையும் - எஸ்.கே - {MAR - 17 - 05}  
  நன்கறிந்த பலர் ஒரு இடத்தில் குழுமியுள்ளார்கள், அங்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், உங்களையறியாமல் அவர்களில் ஒருவர்பால் ஈர்க்கப் பட்டு அவரிடம் eye contact செய்து உரையாடத் தொடங்குவீர்கள். இது ஏன் அப்படி என்று உங்களால் இனம் கண்டு சொல்ல முடியாது. இதுதான் அந்த நபருடைய ஆளுமையின் வெளிப்பாடு.
http://www.tamiloviam.com/unicode/03170503.asp
Expand / Collapse
 

Personality என்றதுமே அதன் நேரான தமிழாக்கம் "ஆளுமை" என்ற சொல் என்பது தான் பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்ட மொழிபெயர்ப்பு. ஆனால் "பெர்சனாலிடி" என்ற சொல் நம் மனத்தினுள் தோற்றுவிக்கும் ஒரு கருத்துக்கு முழுமையாக இந்த "ஆளுமை" எனுஞ்சொல் ஈடுகொடுக்கிறதா என்பது உடனே எழும் கேள்வி. அதன் வீச்சு சற்றே குறைவாக உள்ளதுபோல் தோன்றுகிறது. ஆனால் நம் பெர்சனாலிடியின் நீள, அகல பரிமாணத்தில் அந்த "ஆளுமை"யின் பங்கு என்ன என்பதை ஆராய்ந்தால் அதன் தாக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்!

இந்த பெர்ஸனாலிடி என்கிற சித்தாந்ததை உட்புகுந்து ஆராய முற்பட்டோமானால், அது எங்கோ இழுத்துச் செல்லும். Sigmund Freud எனும் மனவியல் அறிஞரின் கோட்பாடுகளான Id, ego, super ego என்பவற்றைப் பற்றி முன்னமையே குறிப்பிட்டிருந்தேன். நாம் இப்போது இத்தகைய தத்துவங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கப் போவதில்லை. அவற்றையெல்லாம் கரைத்துக் குடித்து யாராவது டாக்டர் பட்டம் பெறட்டும். நாம் இப்போது செய்ய முனைவதெல்லாம் நம் பெர்ஸனாலிடியை இவ்வுலகில் முன்னிறுத்தி வாழ்க்கையில் வெற்றி எனும் இலக்கை எட்டுவதற்கான வழிமுறைகளைத் தேடுவதுதான்.

இந்த "பெர்ஸனாலிடி" என்றசொல் "முகமூடி" என்று பொருள் கொண்ட "persona” எனும் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து தோன்றியது. ஒருவர் பலவகை "பெர்சனா"வை வெளிக்காண்பிக்கக்கூடும். எவ்வகை மனிதனாகத் தன்னை பிறர் கண்முன் தோற்றுவிக்க  நினைக்கிறோமோ அந்தத் தோற்றத்தை பிறர் மனத்திறையில் அறுதியாக நிறுத்தவேண்டும். You must present a favourable facade before the world. இதுதான் இந்த பெர்ஸனாலிடியின் அடிப்படைத் தத்துவம். 

சரி. இந்த மந்திரச் சொல் எதைத்தான் குறிக்கிறது என்பதை சற்று ஆராய்வோம்:

 1. மற்றவர்களிடமிருந்து நம்மைப் பிரித்து நம் தனித்தன்மையைக் காண்பிக்குமுகமாக நம்மை முன்னிறுத்தல்
 2. நம் பிரத்தியேகமான, நீட்சியுள்ள, முரண்பாடற்ற சிறப்பியல்புகள்

இதையே ஆங்கிலத்தில் குறிப்பிட முற்பட்டால், “Personality can be defined as the complex amalgam of all the attributes that characterize an individual; attributes that are unique to him – behavioral,  temperamental and emotional” என்று கூறலாம். நம்மில் ஒவ்வொருவரும் நம் தனித்தன்மையினால் ஒரு முத்திரையைப் பதிக்கிறோம். அதன் ஆற்றலைப் பொருத்து நம்மைப் பற்றிய புரிதல், கணிப்பு பிறர்பால் அமையப்பெருகிறது. ஆனால் இந்த இயல்புகள் யாவும் நம்முடனே பிறக்கின்றன. ஆகையால் இந்த பெர்ஸனாலிடியும் பிறப்பிலிருந்தே நம்மோடு உள்ளதா, அதனை மாற்றியமைக்க முடியாதா என்று கேட்கலாம். அதற்கு விடையாகத்தான் இந்த "behavioral” என்ற சொல் அமைகிறது. நாம் நடந்து கொள்ளும் முறை, பிறரிடம் கொள்ளும் அணுகுமுறை இவற்றை சற்றே திருத்தி அமைத்துக் கொள்வதன் மூலம் நம்மைப் பற்றிய புரிதலை மாற்றமுடியும். ஆகையால் நம் "பெர்ஸனாலிடி"யின் வெளிப்பாடு நம் கையில் தான் இருக்கிறது என்று அடித்துச் சொல்லலாம்.

நான்கு சுவர்களுக்குள் நீங்கள் வாழ்ந்துகொண்டிருந்தால் உங்கள் பெர்ஸனாலிடி பற்றி நீங்கள் இம்மியளவேனும் கவலை கொள்ள வேண்டாம். நீங்களே உங்களை எப்படி வேண்டுமானாலும் கற்பனை செய்து கொண்டு வாழலாம். ஒரு நிலைக் கன்னாடியை எதிரே வைத்துக் கொண்டு "Mirror mirror on the wall, who is the fairest of all” என்று உங்களை நீங்களே துதி செய்து கொண்டு வாழலாம். ஆனால் இந்த உலகத்தின் ஒரு அங்கமாக சமுதாயத்தில் வாழவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நீங்கள் என்றும் பிறர் பங்களிப்பைப் பெறவேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். பிறரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் பங்கு நீங்கள் விரும்பும் அளவில் அமைவது உங்கள் பெர்ஸனாலிடியைப் பொருத்து அமையும். அதாவது பிறர்மேல் உங்கள் "ஆளுமை" எத்தகையது என்பதைப் பொருத்து அமையும்! இங்கே நிற்கிறார் இந்த "ஆளுமை" அண்ணாச்சி!

“ஆளுமை" என்று நான் அழைக்க முற்படுவது பிறர் மனத்தில் நாம் செலுத்தும் ஆளுமையை. நம்மைச் சூழ்ந்துள்ள சமுதாயத்தில் அங்கம் வகிக்கும் சக மனிதர்களின் எண்ணப்போக்கு மற்றும் நம்மைப் பற்றிய அவர்களின் கண்ணோட்டம் - இவற்றை நம் ஆளுமையால் தன்வசப்படுத்த வேண்டும். நம் செயல்முறைகள், விழுமியங்கள், சொற்கள், சொல்லும் முறை, பலவகை மனிதர்களிடம் நம் அணுகுமுறை, ஒழுகல், பலவித சூழ்நிலைகளில் நாம் வெளிக்காண்பிக்கும் தன்னம்பிக்கை முதலிய ஆளுமை வெளிப்பாடுகள் ஆகிய யாவையும் ஒருங்கே சேர்ந்து நம்மைச் சுற்றி ஒரு ஒளிவட்டத்தைத் தோற்றுவிக்கிறது. இதுதான் அந்த பெர்ஸனாலிடி! இந்த ஒளிக்கதிர்கள் பிறர் மனத்தினுள் புகுந்து அவர்களின் புரிதலையும், அவதானிப்புகளையும் நமக்குச் சாதகமாக மாற்றியமைத்து, நம்மைப் பற்றிய ஒரு உயர்வான பதிப்பை ஆங்கே செதுக்கிவிடக்கூடிய வல்லமை பெற்றது. இந்த வல்லமையைத்தான் பிறர்பால் கொண்ட "ஆளுமை" என்றழைக்கிறோம்.

அதுசரி. பிறர்மனதை ஆட்கொண்டு நம்வசப்படுத்த நாம் ஏதாவது சித்தரிடமிருந்து தீட்சை பெறவேண்டுமா, அல்லது வசிய மந்திரம், தாயத்து, பச்சிலை, லேகியம், கயிறு, தகடு, பில்லி, சூனியம், காலடி மண், உப்பு, மிளகு, மை - இதுபோன்ற வஸ்துக்கள் தேவையா. அல்லது உடான்ஸ் சாமியார் யாருக்காவது சொத்தை எழுதி வைக்க வேண்டுமா? அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். திருவாசகத்தில் "அவனருளாலே அவன்தாள் வணங்கி" என்று கூறியுள்ளதுபோல், நம் எண்ணம், சொல், செயல், நடத்தை முதலியவற்றை நெறிப்படுத்துதல் மூலமே பிறர் மனத்தை ஆளலாம்!

பலவகை மனிதர்கள் கூடியுள்ள ஒரு அவையினுள் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதாவது கலை நிகழ்ச்சிகள் போன்றவை நிகழும் அரங்கு போலல்லாமல், ஒரு கருத்தாய்வுக் கூட்டம் நடக்கும் அமர்வறை - ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளக்கூடிய (லாடம் போன்ற அமைப்புடன்) வகையில் அமைந்தது. நடு நடுவே நீங்கள் ஒரு பேப்பர் வெயிட்டை உருட்டிக் கொண்டோ, பேனாவை ஒரே முறையில் சுற்றிக் கொண்டோ ஆட்டிக் கொண்டோ இருங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் உங்கள் சேட்டைகளை அந்த அறையிலுள்ள பலர் பின்பற்ற ஆரம்பித்திருப்பார்கள்! அவர்கள் அறியாமலேயே உங்கள் செயலால் கட்டுப் படுத்தப் பட்டுள்ளார்கள். பின் நீங்கள் உரையாடும்போது ஒரு குறிப்பிட்ட சொல்லையோ சொற்றொடரையோ தொடர்ந்த்து பயன்படுத்துங்கள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தால் அந்த அவையிலிருக்கும் பலர் வாயில் அந்த சொற்கள் அவர்களறியாமல் ஒலிப்பதைக் காணலாம். இதற்குமேல் ஒருபடி போய், உங்களுக்குத் தோன்றிய ஒரு கருத்தை வேறு ஒருவர் சொல்லிவிட்டது போல் தோற்றமளிக்கும் படி, “அவைத் தலைவர் முன்னமையே கூறியுள்ளபடி" என்ரு ஓரிறு முறை திருப்பித் திருப்பி சொல்லிப்பாருங்கள் (அந்தக் கருத்து அந்த அவைத்தலைவருக்கு சாதகமாக அமைவது முக்கியம்!). அந்த அவைத்தலைவர் அது போல் சொல்லவில்லை என்பதுதான் உண்மை என்றாலும் நீங்கள் சொன்னதையே பலர் வழிமொழிவார்கள் . அந்த அவைத் தலைவரும் "ஒரு வேளை, நாம்தான் சொல்லியிருப்போமோ" என்று எண்ண ஆரம்பித்து விடுவார். நம் சொற்களுக்கு அவற்றை வெளிப்படுத்தும் விதத்தினால் அவ்வளவு சக்தி ஏற்பட்டுவிடுகிறது.

மிகச் சாதாரணச் சொற்கள் கூட இடம், பொருள், ஏவல் மாறுபாட்டால் பல பின்விளவுகளை ஏற்படுத்துகின்றன. அவற்றை பிரயோகிக்கும் விதம், பாதி சொல்லி மீதியைத் தொங்கலில் விடுவது - இதுபோன்றவற்றின் தாக்கம் மிக அதிகம். சொன்னதைவிட சொல்லாமல் விட்டது (untold story) தான் மிக்க பலம் கொண்டது. “மறைமுகச் சுட்டிக் கூறல்" என்னும் ஆயுதம் இவ்வுலகில் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதைக் காணலாம். பல திரைப்பட நடிக,நடிகைகள் தங்கள் பேட்டிகளில் பல தீயவர்கள் தங்களைப் பற்றி அவதூறான செய்திகளைப் பரப்பி அவர்களின் மார்க்கெட்டை சிதைத்து விட்டார்கள் என்று அழுதுள்ளதைக் கண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பல நபர்கள் இதுபோல் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்வே இதுபோன்ற புல்லுருவித்தன்மை நிறைந்தது. ஊன்றிக் கவனித்தால் அது போன்றவர்கள் அந்தச் சூழலில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர்கள். ஆனால் மனிதர்களின் அடிப்படை பலவீனங்களைப் பயன்படுத்தி யாரிடமாவது ஒட்டுப்புல் போல் ஒட்டிக் கொண்டு முகஸ்துதியிலேயே காலம் ஓட்டும் "வேப்பிலை கோஷ்டி" freeloaders. ஆனால் இவர்களின் செல்வாக்கையும், இவர்களுடைய mischief value and negative influence பற்றியும் சிறிதும் குறைவாக மதிப்பிடக் கூடாது. சமயம் பார்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக வார்த்தைகளைச் சிதற விட்டுவிட்டு ஒன்றுமே அறியாதவர்கள்போல், யாருக்கு வெடி வைத்துவிட்டு வந்திருக்கிறார்களோ, அவர்களிடமே போய் ரொம்பவும் வேண்டியவர் போல் நடித்து அவர்கள் வீட்டிலேயே விருந்துண்டு வருவார்கள்! “அந்தப் பெண்ணா, பார்த்துப் போடுங்க. கால்ஷீட்டில ஏதோ குளறுபடி செய்வதாகக் கேழ்வி" என்று பொத்தாம் பொதுவாகக் கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவுதான்! அங்கு விதைக்கப்பட்ட விஷ வித்து வேலை செய்ய ஆரம்பித்துவிடும். இதுபோன்ற நபர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒருவிதமாக compromise செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்திற்குக்கூட பலர் தள்ளப் பட்டுள்ளனர்.

இது போன்ற oblique suggestions பலருக்கு பலவித பாதிப்புகளுக்குக் காரணமாக அமைந்திருக்கின்றன. கிரிக்கெட் உலகில் "கர்னல்' என்று அழைக்கப்படும் திலீப் வெங்சார்க்கர் ஒரு பேட்டியில், தான் பேட்டிங் செய்ய விக்கெட் முன் நிற்கும் நிலை (stance) ஏதோ குறைபாடுள்ளது என்று யாரோ சொல்லப்போக, ஒவ்வொருமுறை பேட்டிங் தொடங்கும்போதும் அதுபோன்ற சந்தேகமும், நிச்சயமற்ற மனநிலையும் தொடர்ந்து ஏற்பட்டதாகக் கூறியிருக்கிறார். இதேபோல் மறைந்த கர்நாடக இசைமேதை ஜி.என்.பி அவர்களிடம் "மேல்ஸ்தாயி சட்ஜம்" வரும்போது சற்று "சுருதி சேரல்லையே" என்று கூறப்பட்டு, அவருக்கு அதன்பிறகு சட்ஜத்துக்கு வரும்போதெல்லாம் ஒரு tentativeness ஏற்பட்டு, தன்னம்பிக்கை போய், நிஜமாகவே அங்கு பிசிரடிக்க ஆரம்பித்துவிட்டது. அவர் ஆரம்ப காலத்தில் பாடிய பதிவுகளையும் பிற்காலத்திய ஒலிநாடாக்களையும் கேட்டால் இந்த மாறுதல் விளங்கும். இதுதான் நம் சொல், செயல் இவற்றின் ஆளுமை!

ஆகையால் நம் செயல்பாட்டை முழுவதும் நம் சுயக் கட்டுப்பாட்டுகுள் கொண்டுவந்து, அவற்றை சரியானபடி வெளிக்காண்பிப்பதன் மூலம், நம் ஆளுமையை நிலைநிறுத்தலாம் என்பது திண்ணம்.

நன்கறிந்த பலர் ஒரு இடத்தில் குழுமியுள்ளார்கள்,  அங்கு நீங்கள் செல்கிறீர்கள் என்றால், உங்களையறியாமல் அவர்களில் ஒருவர்பால் ஈர்க்கப் பட்டு அவரிடம் eye contact செய்து உரையாடத் தொடங்குவீர்கள். இது ஏன் அப்படி என்று உங்களால் இனம் கண்டு சொல்ல முடியாது. இதுதான் அந்த நபருடைய ஆளுமையின் வெளிப்பாடு. 

நாம் மாறுபட்ட சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதை நாம் அறிவதில்லை. நம்மை நாம் காண்பதில்லை. பிறர்தான் காண்கிறார்கள். நாம் மனத்தினுள் அனுமானித்தபடிதான் பிறர்நோக்கிலும் அமையும் என்று எண்ணுகிறோம். ஆனால் உண்மையில் அதற்கு எதிர்மாறாக பிறர் புரிந்துகொள்ளக்கூடும் என்பதை நாம் அறியமாட்டோம். அதனால் நம் அணுகுமுறையும் செயல்படும் விதமும், முற்றிலும் rehearse செய்யப்பட்டு, இப்படிச் செய்தால் எப்படி அதன் விளைவுகளிருக்கும் என்பதை தெளிவாகத் திட்டமிட்டுச் செய்தல் வேண்டும். பொது இடங்களில் கடைப் பிடிக்க வேண்டிய etiquette முதலியவற்றில் கவனிப்பாக இருத்தல் வேண்டும். நம்மை பிறர் அலட்சியம் செய்ய ஒருக்காலும் இடம் கொடுக்கக் கூடாது. அதற்கான சூழ்நிலைகளை நாமே ஏற்படுத்தலும் கூடாது. பேசும்போது நிதானமாக, இடைவெளி கொடுத்து, deep, resonant voice-ல் பேசவேண்டும். High-pitched shrieks கூடாது. சிறுபிள்ளைத் தனமாக ஒருபோதும் நடந்துகொள்ளக் கூடாது. ஒரு பொருட்டாக மதிக்கப்பட லாயக்கில்லாத மனிதர் என்று யாரும் நம்மை கணக்குப் போட்டுவிட அனுமதிக்கக் கூடாது. சின்னச் சின்ன விஷயங்களில்கூட நம் ஆளுமையை வெளிப்படுத்த வேண்டும். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, தெளிந்த சிந்தனை, அறிவார்ந்த உரையாடல் மற்றும் திருவள்ளுவர் பொருட்பாலில் கூறியுள்ள அறிவுரைகளின்படி நடந்தால் இப்பூவுலகம் உங்கள் கையில். மக்கள் மனமும் உங்கள் வசப்படும்!

பின் குறிப்பு:

பொரி விளங்காய் உருண்டை எனப்படும் "பொருள் விளங்கா உருண்டை" (“ஒப்பிலா அப்பன்" உப்பிலியப்பன் ஆனது போல), கொஞ்சம் hard-ஆன ஒரு தித்திப்பு மாவு உருண்டை.. இது அரிசி, கோதுமை, பாசிப் பருப்பு, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய், ஏலக்காய், வெல்லம் சேர்த்துச் செய்யப்பட்டது. இன்ன ingredient-டினால் இன்ன ருசி என்று கணிக்க முடியாததினால் இது அந்தப் பெயரைப் பெற்றது என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்! வேண்டுவோர் அடையாற்றிலுள்ள பிரபல ஸ்வீட் அண்ட் ஸ்னேக்ஸ் கடையில் வாங்கி ருசி பார்க்கலாம்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : இங்கிதம் உடையர் எங்கிலும் உயர்வர் - எஸ்.கே - {MAR - 03 - 05}  
  "சும்மா ஷூவோடவே உள்ளே வாங்க, பரவாயில்லை" என்று சொன்னாலும், ஷூவைக் கழட்டி விட்டு இன்னொருவர் வீட்டுக்குள் செல்லுங்கள். உங்களைப் பற்றிய மதிப்புக் கூடும். நமக்கும் சில value systems இருக்கின்றன என்பதைக் காண்பிப்பதும் ரொம்ப முக்கியம். நம்மிடம் பழக்கம் வைத்துக் கொள்வதை அவர்கள் தமக்கு ஒவ்வாத ஒன்றாக நினைக்கக் கூடாது.
http://www.tamiloviam.com/unicode/03030506.asp
Expand / Collapse
 


பொது இடங்களில் நாம் எப்படி நம்மை அடையாளம் காட்டுகிறோம் என்பதும், ஒரு அலுவலகத்திலோ, நிறுவனத்திலோ, வேறொரு பொது அமைப்பிலோ, குழுவிலோ நாம் எப்படி இங்கிதத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்பதை வைத்துத்தான் நம் personality பிறரால் அறியப்படுகிறது. இது போன்ற பயிற்சி உங்களுக்கு ஏற்பட வேண்டுமென்றால் நீங்கள் ஏதாவது ஒரு பொது அமைப்பிலோ, துறையிலோ, தொண்டு நிறுவனங்களிலோ பங்களிக்க வேண்டும்.அப்போதுதான் பலவகை மனிதர்களிடம் எப்படிப் பழகி வேலைகளை நடத்திச் செல்லவேண்டும் என்பது புரியும். கிணத்துத் தவளையாக இருந்து கொண்டு, நம்மையே நம்பியிருக்கும் மனைவியையும் குழந்தைகளையும் (மட்டும்) விரட்டிக்கொண்டு, அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் "சலாம்" போட்டு "குலாம்" ஆகிக் கொண்டோ, அல்லது அசட்டுத் துணிச்சலுடன் ஏதாவது ஏடாகூடமாக செய்து விட்டு "என்ன நடக்குமோ" என்ற பயத்தில் வீட்டில் இருப்பவர்களிடம் "சள்புள்" என்று விழுந்து கொண்டோ கிடக்காமல், ஒரு 3600 அணுகுமுறையைக் கைக்கொள்ள வேண்டும்.

"இங்கிதம்" என்ற சொல்லுக்குத் தகுந்த பொருளாக திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள், "பாஞ்சாலி சபதம்" காவியத்திற்கு அவர் எழுதியுள்ள உரையில் குறிப்பிடுவது என்ன என்று பார்ப்போம்:-


 1) குறிப்பு (Hint, sign, indication of feeling by gesture)
 2) கருத்து (purpose, object)
 3) இனிமை,
 4) சமயோசிதம் உடைமை (good manners).

இந்த "சமயோசிதம் உடைமை" என்பதை "இன்னதுதான்" என்று வரையறுத்துச் சொல்ல முடியாது. அது அதன் அடிப்படையின்படி "சமயத்"திற்கு ஏற்றாற்போல் மாறுபடும். ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது, அதன் கால, தேச, வர்த்தமானத்தில் (set of circumstances) சரியாக இருக்கும் ஒரு செயல்பாடு, இன்னொரு கால கட்டத்தில் தவறாக அமையும். ஆனால் எக்காலத்திற்கும் பொதுவான சில கோட்பாடுகள் இருக்கின்றன - செயல்முறைகள், ஏற்க வேண்டியவை, தவிற்க வேண்டியவை என்று சில உள்ளன. அவை சின்னஞ்சிறு விஷயங்களாக இருக்கலாம், ஆனால், அவை மனித மனத்தின் ஓட்டங்களைத் திசை திருப்பும் வல்லமை படைத்தவை என்பதால், அவற்றைக் கடைப்பிடித்தல் மிக அவசியமாகிறது. அவற்றில் சிலவற்றை இந்த வாரக் கட்டுரையில் அணுகுவோம்.

முதலில் ஒரு silly விஷயத்தைக் கவனிப்போம். ஷூவை நன்றாக பாலிஷ் செய்து போட்டுக் கொள்வது மட்டும் முக்கியமல்ல. அதன் உள்ளுறைகளையும் (socks) நன்கு துவைத்துச் சுத்தமாக அணிதல் வேண்டும். நம்மில் பலருக்கு "சாக்ஸை" சுத்தம் செய்தல் என்பது மட்டும் கைவராது. ஷூவைக் கழற்றும்போது சாக்ஸை அப்படியே உருவிச் சுருட்டி ஷூவுக்குள் திணித்து விட்டுச் செல்வோமேயன்றி, கையோடு அவற்றை துவைக்கப் போடமாட்டோம். அசுத்தமான உள்ளுறைகளால் நம்மைச் சுற்றி ஒரு துர்நாற்றம் வீசிக் கொண்டேயிருக்கும். உங்கள் "கப்பு" உங்களுக்கு முன்னால் கட்டியம் கூறிக்கொண்டே செல்லும். மேலும் உள்ளுறைகளில் "தொண்டி" இல்லாமலிருந்தால் நலம். ஏனென்றால், நாலு பேருக்கு முன்னால் ஷூவைக் கழட்ட வேண்டிய நிலை வரும்போது மானம் போகாமலிருக்கும்!


உங்களுக்கு "அணில் மார்க்" சுருட்டு மேலும் ("சுருட்டுவதிலும்" என்றா சொன்னேன், இல்லையே!), "தனா பீனா சொக்கலால் ராம்சேட் பீடி" மேலும் காதல் இருக்கலாம். அதற்காக அவற்றை ஒரு "தம்" வலித்து விட்டு, நேர்காணலுக்கோ, மேலதிகாரிகளை மற்றும் வேறு முக்கிய நபர்களைச் சந்திக்கவோ செல்லாதீர்கள். அதிலும் பெண்மணிகள் பெரும்பாலும் இந்த விஷயத்தில் நிறையவே sensitive-ஆக இருப்பார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

பெண்கள் பெரும்பாலும் தங்களுக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று பட்டியலிட்டுக் கொண்டே இருப்பார்கள். எனவே பெண்களிடம் வேலை ஆகவேண்டியிருந்தால், அவர்களுக்கு (உங்களுக்கு இல்லை!) என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்பதையெல்லாம் திருப்பி சொல்லிக் கொண்டேயிருங்கள்! சலிக்காமல் கேட்டுக் கொண்டேயிருப்பார்கள்!

லேசாகப் "பூசின மாதிரி" இருக்கும் ("பூசணி மாதிரி" என்றா சொன்னேன்? ஏதாவது வம்பில மாட்டி விடறதிலேயே குறியா இருக்கீங்களே!) பெண்மணிகளிடம் "லேசாக இளைச்ச மாதிரி இருக்கே", என்று சொல்லுங்கள். புது டிரெஸ் என்று சொன்னால், "it is a bit slimming" என்று கூசாமல் (சிரிக்காமல்) சொல்லுங்கள். பெரும்பாலும் பெண்கள் தன் உடல் பருமன் விஷயத்தில் ஏதாவது குறைப்பட்ட வண்ணம் இருப்பார்கள். இது போல் யாராவது சொல்ல மாட்டர்களா என்று அவர்கள் மனத்தில் எதிர்பார்ப்புக்கள் இருக்கும்.

பெரிய மனிதர்கள் பலர் தன் குரலைத் தானே கேட்டுக் கொண்டு சந்தோஷப்படும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பர் (People who love to hear the sound of their own voice). "I this, I that" என்று அளந்து கொண்டிருப்பார்கள். அதுவும் நீங்கள் அவருக்கு அடங்கியவராகவோ, அல்லது ஏதாவது உதவி கேட்டு வந்தவராகவோ இருந்தால், நீங்கள் ஒரு captive audience ஆகிவிடுவீர்கள். உங்களுக்குக் கொட்டாவியாக வந்துகொண்டிருக்கும். ஆனால் அதை வெளிக்காண்பிக்கக் கூடாது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொள்ள வேண்டும். லேசாக தலையைத் திருப்பி அல்லது அதை செருமலுடன் கலந்து - இது மாதிரி ஏதாவதொரு வழியில் நம் சலிப்பை மறைக்க வேண்டும். என்ன செய்வது அய்யா, இந்தப் பாழும் உலகத்தில் பிறரிடம் பலவித வேலைகள் ஆக வேண்டியிருக்கிறதே!

இதுபோல் எந்தவித உடல் உபாதையையும் பொது இடங்களில் வெளிக்காண்பித்து அவமானப்படாமல் (to avoid such embarrassing situations), மறைத்து விட்டால் நல்லது. Fart file என்ற கோப்பில் சொல்லியிருப்பது போல "அபான வாயு" தன்னையறியாமல் escape ஆக முற்பட்டால், லேசாக இருமி அதை மறைக்க வேண்டும். இதெல்லாம் விவரமாகவா சொல்லிக் கொடுக்க முடியும்? சமயம் பார்த்து புத்திசாலித்தனமாகச் செய்ய வேண்டியதுதான்!

ஒருவரிடம் ஏதாவது உதவி கேட்பதற்காகச் செல்லும் போது, அவரைத் தனியாக இருக்கும்போது சந்தியுங்கள். யாரும் உடனிருக்கும்போது போகாதீர்கள். அவர்கள் ஏடாகூடமாக ஏதாவது குறுக்கு சால் ஓட்டி காரியத்தைக் கெடுத்து விடுவார்கள். "சார், டிரான்ஸ்ஃபர் ஆர்டரை கேன்சல் செய்யுங்க சார். பிள்ளைங்க படிப்பு கெட்டுப் போயிடும் சார்" என்று நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போது, உங்கள் மேலதிகாரி அப்போ தான் "என்னடா இது, இவனை ரொம்ப கஷ்டப் படுத்தி விட்டோமோ" என்று கொஞ்சம் கழிவிரக்கம் கொள்ள ஆரம்பித்திருப்பார். அப்போது, அங்கே கூட இருக்கும் நபர் "ஏன், நீங்கள் போகும் இடத்தில்கூட நல்ல ஸ்கூலெல்லாம் இருக்கே" என்பார். போச்சுடா! என்ன ஆகும்? நல்ல வாய்ப்பு கைநழுவிப் போய்விடும். அந்த அதிகாரிக்கு இதுபோல் ஒரு escape route கிடைத்தால், விடுவாரா! அந்த "கூட இருந்த பிரகிருதி" உங்களுக்கு எதிரியோ, அல்லது அவர் பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற கெட்ட எண்ணம் கொண்டவரோ இல்லை. சில பேரால் வாய் என்னும் ஓட்டையை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. அவ்வளவதுதான். அதனால்தான் சொல்கிறேன். உதவி கேட்கும் போது தனியாகப் பிடியுங்கள் என்று. சில சமயம் இன்னொருவருடன் (as a strategy) பேசி வைத்துக் கொண்டு "நான் அங்கே இருக்கும்போது நீ அங்கே வா, நான் சிபாரிசு செய்து அவர் மனதை மாற்றுகிறேன்" என்ற set up - உடன் செயல் படுவது என்பது வேறு விஷயம்!


குறிப்பறிந்து பேசுங்கள். ஆனால் குறுக்கே பேசாதீர்கள். பெரிய மனிதர்களுக்கு, தான் பெசிக்கொண்டிருக்கும்போது குறுக்கே புகுந்து ("மதுரைப் பக்கம் "ஊடாயில" என்பார்கள்) "கட்" பண்ணி பேச முற்பட்டல் ரொம்பக் கோபம் வந்துவிடும். அவர்கள் ஈகோவை நீங்கள் மிதித்து விட்டது போல் துள்ளுவார்கள். அவர்கள் பேசிக்கொண்டே யிருக்கும்போது ஏதாவது கொஞ்சம் gap கொடுத்தால் இதுதான் சாக்கு என்று நீங்கள் பேச ஆரம்பித்து விடாதீர்கள். அந்த இடைவெளியில் ஏதாவது தன் மேதாவிலாசத்தைக் காண்பிக்க என்ன சொல்லலாம் என்று மூளையைக் கசக்கிக் கொண்டிருப்பார். இது தெரியாமல் நீங்கள் குறுக்கே புகுந்தால் அவர் எண்ணச் சங்கிலி தடைப்பட்டு கோபத்தை உண்டாக்கும். இது ஒரு subtle ஆன விஷயம்; ஆனால் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டியது ஆகும்.


முக்கிய நபரை சந்திக்கச் செல்லும்போது வெறுங்கையுடன் செல்லாதீர்கள். "அவர்களிடம் இல்லாததா, நான் என்ன கொண்டு போக முடியும்" என்று எண்ணாதீர்கள். யாராவது வந்தால் அவர்கள் கையில் என்ன இருக்கிறது என்று பார்ப்பது மனித இயற்கை. "இதெல்லாம் என்ன கெட்ட பழக்கம். எனக்குப் பிடிக்காது" என்றுதான் சொல்வார்கள். சிலர், "வேண்டவே வேண்டாம்" என்று மறுத்து விடுவார்கள். பரவாயில்லை. நீங்கள் கொண்டு போனதாக இருக்கட்டும். அவர் ஏற்காததாகவே இருக்கட்டூம். அதற்காக நீங்கள் கொண்டு போகாமல் இருக்காதீர்கள். இது என்ன நாடகம் என்று கேட்கிறீர்களா? இதுதானய்யா மனித இயற்கை! ஒருவர் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் அவருடன் யார் யார் வசிக்கிறார்கள் என்று விசாரித்து அதற்கேற்றாற்போன்ற பொருளுடன் செல்ல வேண்டும். வேலை, பணம், எதிர்காலத்தை நிர்ணயிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் - இதுபோன்ற முக்கிய சந்திப்புக்களின் போது, நல்ல பழங்களாகக் கொண்டு செல்லுங்கள். ஏதாவது சாலையோரத் தள்ளு வண்டியில் கிடைக்கும் அழுகல், அவிசல், வெம்பல் இதெல்லாம் வாங்கிச் செல்லாதீர்கள். வாங்கிய பொருட்களின் விலைச் சீட்டை கவனமாகப் பிய்த்து விடுங்கள். ஆனால் சில நேரங்களில் நிறைய விலை கொடுத்து வாங்கிய பொருள் என்று தெரிவிப்பது அவசியமாக இருக்கலாம். ஏனென்றால் அதேபோல் தோற்றமளிக்கும் மலிவு "மாலு"ம் கிடைக்கலாம் அல்லவா! இங்குதான் உங்கள் "சமையோசிதம்" வேலை செய்யவேண்டும்!

ரொம்பப் பெரிய மனிதர்கள் வீட்டிலெல்லாம் பெரும்பாலும் காப்பி, டீ முதலியவை அவ்வளவு நன்றாக இருக்காது. ஏனெனில் அங்கு யாராவது வேலைக்காரர்கள்தான் அவற்றைத் தயார் செய்வார்கள். "இதுகளுக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுக்க வேண்டியிருக்கிறதே" என்ற சலிப்புடன் போட்ட காப்பி, பின் எப்படி இருக்கும்! ஆனால் அந்தப் பெரிய மனிதரோ, "எங்க வீட்டுக் காப்பி மாதிரி எங்கேயும் கிடைக்காது. நேத்தைக்குக் கூட ஹைகோர்ட் ஜட்ஜு வந்து, 'உங்க காப்பி குடிக்கணும்னுதான் டில்லியிலேர்ந்து வந்தேன்' என்று ரெண்டு கப் கேட்டு வாங்கி சாப்பிட்டு விட்டுப் போனார்" என்று பட்டம் விடுவார். நீங்கள் அப்போதுதான் அந்த விளெக்கெண்ணையை முழுங்கிக் கொண்டிருப்பீர்கள். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அதை முழுவதும் விழுங்கி விட்டு, அந்த ஜட்ஜை விட ஒரு படி மேலே போய் பொய்மூட்டையை அவிழ்த்து விட்டு, "நானும் இன்னொரு கப் கேட்டிருப்பேன். ஆனால் இந்தப் பாழும் ஆயுர்வேத மருந்து சாப்பிடறேனா, காப்பி சாப்பிட்டாலே ஒத்துக்க மாட்டெனென்கிறது. எங்கேயும் ஒரு சொட்டு கூட செல்லாது, உங்கள் வீட்டுக் காப்பியாயிற்றே என்று ஒரு கப் சாப்பிட்டென்" இந்த மாதிரி முக மலர்ச்சியுடன் convincing - ஆக உங்களால் சொல்ல முடிந்தால், நீங்கள் ஒரு Managing Director material!

சரி இதோடு விட்டுவிடுமா, இதற்கு மேலும் டார்ச்சர் காத்துக் கொண்டிருக்கும். அவர்கள் வீட்டு "மேம் சாஹிப்" பெயிண்ட் பண்ணியிருப்பார்கள். அதையெல்லாம் நீங்கள் பார்வையிட்டு, கண்களை அகல விரித்து, வாயைப் பிளந்து, "ரவி வர்மா, ஹுசைன்" என்று உங்களுக்குத் தெரிந்த பெரிய ஓவியர்களின் கலைவண்ணங்களை "விஞ்சும் வகையில் இருக்கிறது" என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரிப் புகழ்ச்சியில் ஈடுபடுவதிலும் ஒரு கலை நுணுக்கத்துடன் செய்ய வேண்டும். நேரடியாக உப்புத்தாள் கொண்டு தேய்க்கக் கூடாது. இதிலும் ஒரு நிபுணத்துவம் வேண்டும். subtle and suggestive ஆகச் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கிண்டல் செய்கிறீர்கள் என்று எண்ணிவிடுவார்கள். "இன்னும் கொஞ்சம் நேரம் செலவழித்து இதில் இன்னும் ஈடுபட்டால் பெரிய ஓவியர்களை மிஞ்சி விடுவீர்கள்" ("ஜல்ல்ல்ல்ல்'!) என்றொரு பல்லவியைப் போடவேண்டும். உடனே அந்த அம்மாள், "எனக்கு எங்கே நேரமிருக்கிறது இதெற்கெல்லாம்" என்று ஆரம்பிப்பார். அவ்வளவுதானே, அதற்கேற்றாற்போல் சரணம் பாடிவிடவேண்டியதுதான்!

இன்னும் சிலரது வீட்டில் குட்டிப் பிசாசுகள் பாட்டுப் பாடிப் படுத்தும். "என் பெண் கர்நாடக சங்கீதம் கத்துக்கிறாள். சுதா கூட முந்தா நாள் கேட்டுவிட்டு 'உங்கள் பெண்ணுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு' என்று ஆசீர்வாதம் செய்து விட்டுப் போனார்" என்று சொல்லி அந்தப் பெண்ணை அழைத்து, "அம்மா சின்னக் குட்டி, இவருக்கு ரெண்டு உருப்படி பாடிக் காண்பி" என்பார். உடனே அந்த சின்னக் குட்டி (என்னக் குட்டி?) "எனக்கு தொண்டை என்னமோ செய்யறது. இப்போ போய் பாடச் சொல்றீங்களே, இன்னொரு நாள் பார்க்கலாம்" என்பார். இதே கதையை இதுவரை 100 தடவையாவது கேட்டிருக்கிறேன். இந்த பதிலுக்கு என்ன பொருள் தெரியுமா? இது ஒரு cue தான். உடனே நீங்கள், "பரவாயில்லை அம்மா. ஒரு வர்ணமாவது பாடுங்கள். நீங்கள் நன்றாகப் பாடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்" என்று பிடிவாதம் பிடிக்க வேண்டும். ரொம்ப கிராக்கி பண்ணி, ஒரு மாதிரியாக "ஸா பா ஸா"வுடன் ஆரம்பிப்பார்கள். அவ்வளவுதான். நீங்கள் பாவம்! உங்களுக்கு Cacophonix, the bard நினைவுக்கு வருவார்! இந்த டெஸ்டில் பாஸ் செய்து விட்டீர்களானால் இந்த உலகில் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

"சும்மா ஷூவோடவே உள்ளே வாங்க, பரவாயில்லை" என்று சொன்னாலும், ஷூவைக் கழட்டி விட்டு இன்னொருவர் வீட்டுக்குள் செல்லுங்கள். உங்களைப் பற்றிய மதிப்புக் கூடும். நமக்கும் சில value systems இருக்கின்றன என்பதைக் காண்பிப்பதும் ரொம்ப முக்கியம். நம்மிடம் பழக்கம் வைத்துக் கொள்வதை அவர்கள் தமக்கு ஒவ்வாத ஒன்றாக நினைக்கக் கூடாது.

எந்த நேரத்திலும் தம் நிலை மறக்காத மனப்பாங்கு வேண்டும். We must know our bearings. நெருங்கிப் பேசுகிறார்களே என்று பெரிய மனிதர்களிடம் ரொம்பவும் ஈஷிக்கொள்ளக் கூடாது. "இதென்னடா இது, 'தோ தோ' என்றால் மூஞ்சியை நக்குகிறதே" என்று அவர்கள் ஒரு நேரமில்லாவிடாலும் ஒரு நேரம் வெறுப்படையக் கூடும்.

இதெல்லாம் ஒரு deception அல்லவா - இது போல் ஏமாற்று வேலையெல்லாம் எதற்கு என்கிறீர்களா? இதெல்லாம் ஒருவகை மேனேஜ்மெண்ட் டெக்னிக் தான் நண்பர்களே. நம் சுற்றுப்புறத்தை மேனேஜ் பண்ணுவது நம் வேலை தானே. மற்றவர்கள் குண விசேஷத்திற்குத் தகுந்தாற்போல், சிறிய மாறுதல்கள் செய்துகொண்டு raw-வாக இல்லாமல், ஒரு ருசியாக சமைத்த உணவாக நம் personality - ஐ பிறருக்கு அளிக்கிறோம். அவ்வளவுதான்!

 


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : உட்பகை நீக்கின் எப்படை வெல்லும்! - எஸ்.கே - {FEB - 24 - 05}  
  கூட இருந்தே கவிழ்த்து விட்டான்" என்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். கூட இருப்பவர்கள்தானே கவிழ்க்க முடியும், எட்ட இருப்பவர்களாலா முடியும்! Betrayal என்பதை அவர்கள்தான் செய்வார்கள்.
http://www.tamiloviam.com/unicode/02240503.asp
Expand / Collapse
 

"நீ நீயாக இரு" என்று பல அறிஞர்கள் சொல்கிறார்களே, ஆனால் நீங்கள் பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்ளச் சொல்கிறீர்களே என்கிற அடிப்படைக் கேள்வியை பலர் எழுப்புகிறார்கள். உண்மையில் நான் அடிக்கோடிட்டுச் சொல்வதும் "நீயாகவே இரு" என்பதுதான். ஆனால் அதில் ஒரு caveat (மாறுபட்ட புரிதல் கொள்ளக் கூடும் என்ற எச்சரிக்கை) உள்ளது. "நீ" என்பது சரி. ஆனால் எந்த "நீ" என்பதுதான் பிரச்னையே. ஏனென்றால் நீ உண்மையில் யார் என்பதை நீ முழுதும் அறிந்து கொண்டாயா என்ற கேள்விக்கு விடை காண முற்படும்போது தான் நீ உன்னை அறிவது எவ்வளவு கடினம் என்பது புரியும். அதனால்தான் இந்த கட்டுரைத் தொடருக்கு மிகவும் பொருத்தமாக "உன்னையறிந்தால்.." என்ற தலைப்பை நண்பர் கனேஷ் சந்திரா இட்டபோது மிகவும் மகிழ்ந்தேன்.

உண்மையில் தன்னிச்சையாக நிகழும் நம் எண்ணப் போக்கு, செயல்படும் விதம் எல்லாமே நம் மரபணுக்களில் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் உந்துதலால் விளைவது. இதனால்தான் பல நேரம் நம் அறிவுசார்ந்த முடிவுகளுக்கு எதிராக நம் எண்ணமும் செயலும் நிகழ்ந்து விடுகிறது. நம் ஆழ்மனதை நம் ஆளுமைக்குள் கொண்டுவருவதற்கு கடுமையான ஆழ்நிலைத் தியானமும், தொடர்ந்த பயிற்சியும், இன்னும் சிறப்பான மனவியல் சார்ந்த செயல்பாடுகளும் (self-hypnosis) தேவையாக இருக்கிறது.

அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், உங்கள் எண்ணம், சொல், செயல் மூன்றையுமே உங்கள் மனக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து, அவற்றின் செயல்பாட்டில் உங்களைச் சுற்றியுள்ள இந்த உலகத்தின் இயல்புக்கேற்ப சிறிது மாற்றங்கள் செய்துகொண்டு (behavioural modification), சிறப்புற வாழ வேண்டும் என்பதுதான். அத்தகையான மனப் பயிற்சிக்கு அடிப்படையே உங்களை நீங்கள் நன்கு அறிந்து, உங்களையே (சிறிதளவாவது) உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இதனை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் நோக்கம், இதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காண்பிக்க மட்டுமல்லாது, இது எவ்வளவு கடினம் என்பதை உங்கள் மனதில் பதிக்கவேண்டும் என்பதால்தான்.

உங்களுடைய வலிமைகளை மட்டுமல்லாமல்,. பலவீனங்களையும் முழுமையாக அறிதல் மிக அவசியம். உங்களைவிட உங்களுடைய எதிரிகள் உங்களின் பலவீனங்களை சரியாக அடையாளம் கண்டுகொண்டு, அவற்றை அவர்களின் சுயநல இலாபத்திற்கேற்ப எவ்வாறு கைக்கொள்வது என்று ஒரு  திட்டம் வகுத்திருப்பார்கள். நம்மைவிட நம் எதிரிகள் சுறுசுறுப்புடன் செயல்படுகிறார்கள் என்பதை எப்போதும் மனதில் இருத்திக் கொள்ளவேண்டும். எப்போது நீங்கள் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறீர்களோ, அப்போதே எதிரிகள் என்கிற காளான் துளிர்விடத் தொடங்குவதை ஆண்டவனேயானாலும் தடுக்க இயலாது. ஏனென்றால் ஆண்டவனுக்கே எதிரிகள் பஞ்சமில்லாமல் இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்!

நம்முடைய உண்மையான மதிப்பீட்டை அறியவேண்டுமானால், நம் எதிரிகளைக் கேட்டாலே தெரியும். ஏனென்றால் அவர்கள் மிக நுணுக்கமாக நம் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்ந்து அவற்றைப் பட்டியலிட்டிருப்பார்கள். உண்மையில் நீங்கள்தான் அதனைச் செய்திருத்தல் வேண்டும். ஆனால் அது உங்கள் மனதின்பால் தைக்காது. ஏனெனில் நீங்கள்தான் உங்கள் வலிமையின் சிறு வெளிப்பாட்டின்பால் கிட்டிய வெற்றியின் மிதப்பில் கிடக்கிறீர்களே - அப்போது பலவீனத்தைப் பற்றிய எண்ணம் மனதினுள் புக வாய்ப்பேது? ஆனால் இந்தத் தருணம்தான் எதிரிகளின் மைதானம் -புகுந்து விளையாடிவிடுவார்கள்! அவ்வப்போது நிகழும் சிறு வெற்றிகள் தரும் போதை உங்களைப் பற்றிய ஒரு மிகுதியான இமேஜை உங்கள் மனதில் உருவாக்கிவிடும்(megalomaniac). அதனால் உண்மைநிலை மறைக்கப் பட்டுவிடும். அப்போது உங்களைச் சுற்றி ஒரு "வேப்பிலை கோஷ்டி" உங்கள் அனுமதியில்லாமலேயே உண்டாகிவிடும். அவர்கள் உங்களையறியாமல் மனதில் புகுந்து, உங்கள் எண்ணப்போக்கை தன் ஆளுமைக்குள் கொண்டுவந்து விடுவார்கள். பிறகென்ன, உங்கள் மனம் இன்னொருவர் கைகளில் களிமண் உருண்டைபோல் இருக்கும் (putty). அவர்கள் உங்களை அவர்கள் தேவைக்கேற்ற உருவமாக மாற்றிவிடுவார்கள். உங்கள் தீர்மானங்கள், மதிப்பீடுகள், நம்பிக்கைகள், செயல் திட்டங்கள் இவை எல்லாமே பிறருடைய ஆளுமைக்குள் அடிமையாகிப் போகும் அபாயம் உள்ளது. ஆனால் அதுபற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியாது. ஏதோ நீங்கள் உங்களுடைய சிறப்பியல்களினால் வெற்றி கொண்டிருப்பதாக நம்ப வைக்கப் படுவீர்கள்.

ஆங்கிலத்தில் Murphy's Law என்ற நகைச்சுவை கலந்து இந்த உலக உணமைகளை அப்பட்டமாக உரைக்கும் வாக்கியங்கள் உண்டு. அவற்றில் இரெண்டை மட்டும் உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:

If you believe that everything is going on well, it means you do not know what the hell is going on.

Be careful when things are going on well, because that is the time when things start going wrong.

மேற்கண்ட இரு மூதுரைகளும் நிர்வாகம், மேலாண்மை பற்றிய வாசகங்கள். அவற்றை இந்த context-ல் ஏன் கொணர்ந்தேன் என்றால், அங்கு குறிப்பிட்டிருக்கும் நிலைகளை உங்கள் சுற்றுப்புரம் அடைவதற்குக் காரணமே நீங்கள் உங்கள்தம் ஆளுமைக்குள் முழுமையாக இல்லை என்பதுதான்.

பல பெரிய மனிதர்கள், பேரசர்கள் வீழ்ந்ததற்குக் காரணமே அவர்கள் தங்களைத் தன் கட்டுப்பாட்டிற்குல் வைத்திராமல், அவர்களறியாமல் ஒரு "chamcha", "லோட்டா" சுயநலக் கும்பலின் கைப்பாவையாக ஆனதினால்தான் என்பதற்கு சரித்திரத்தில் பல எடுத்துக் காட்டுக்கள் கானக்கிடைக்கின்றன. மீண்டும் சொல்கிறேன், நீங்கள் வாழ்வில் சாதனைகள் புரியத் தொடங்கி வெற்றிகளை ஈட்டத் தொடங்கும்போது உங்களைச் சுற்றி வந்து சேர்பவர்கள்பால் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் மெயின் சுவிச்சை இன்னொருவர் கையில் உங்களையறியாமல் "தாராந்துடக்"கூடாது! பலர் உங்களை subtle-ஆக புகழ்ந்து அப்படியே pulp போல் ஆக்கிவிடுவார்கள். The Emperor's New Clothes என்கிற கதையை நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

உங்களுக்கு இயல்பாக அமைந்த குறிப்பறிதல் போன்ற துடிப்பான வலிமைகள் இருக்கும்போது இன்னொருவர் எவ்வாறு உங்களைத் தன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்கிற கேள்வி எழுவது நியாயம். ஆனால் அதுபோல் நீங்கள் ஆளப்படுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்தால்தானே! நீங்களே சுயமாகச் சிந்தித்து செயல்படுவது போன்ற தோற்றத்தை (facade) உங்கள் மனத்தில் தோற்றுவித்து உங்களை பொம்மலாட்டம் ஆட்டிவிடுவார்கள் சண்டாளர்கள்! வெளிப்படையான எதிரிகளிடமிருந்து உங்கலைக் காப்பாற்றிக் கொள்வது மிகச்சுலபம். ஆனால் உங்களைச் சுற்றியிருக்கும் கோஷ்டிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடிய ஆயுதங்கள் ஏதும் உங்களிடம் கிடையாது. அதனால் எப்போதும் விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டும். வெற்றி என்ற ஏணியில் ஏறும் ஒவ்வொரு படியிலும் உங்களுடன் தொற்றிக் கொண்டிருப்பவர் யார்யார் என்பதில் மிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

கூட இருந்தே கவிழ்த்து விட்டான்" என்று பலர் புலம்புவதைக் கேட்டிருப்பீர்கள். கூட இருப்பவர்கள்தானே கவிழ்க்க முடியும், எட்ட இருப்பவர்களாலா முடியும்! Betrayal என்பதை அவர்கள்தான் செய்வார்கள். கிரேக்கர்கள் ட்ராய் நாட்டை ஒரு மரத்தினாலான குதிரைக்குள் படைவீரர்களை மறைத்துச் சென்று வீழ்த்தினார்கள் என்பதை அனைவரும் படித்திருப்பீர்கள். இதனால்தான் வஞ்சகமாகச் செயல்படுவதை Trojan Horse என்ற பெயர் கொண்டு அழைக்கிறார்கள். நம் கணினியுள்கூட பல ட்ரோஜன்கள் நம்மையறியாமல் உட்புகுந்து அதனைத் தம் கைக்குள் கொணர்ந்து அதன் இஷ்டத்திற்கேற்ப பல தவறான செயல்களுக்கு உட்படுத்துகின்றன. சாதாரண வைரஸ் எதிர்ப்புச் செயலிகள் (Anti-virus programs) இவற்றை அடையாளம் கண்டுகொள்ள இயலாத வகையில் அவைகள் எங்கோ ஒரு மூலையில் ஒளிந்து செயல்படுவதைக் காண்கிறோம்.

இதையேதான் வள்ளுவர் "உட்பகை" என்னும் அதிகாரத்தில் தெளிவாக விளக்கியுள்ளார்.

 வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
 கேள்போல் பகைவர் தொடர்பு.

"கேள்போல் பகைவர்"களின் "தொடர்பு" அஞ்சப்பட வேண்டுமென்கிறார். இதில் "தொடர்பு" என்னும் சொல் மிக முக்கியமானது. ஏனெனில் உறுவிய வாள் போன்ற வெளிப்பகை உங்களுடன் "தொடர்பு" கொண்டிருக்காது. அதனால் அதன் செயல்பாடுகள் வெளிப்படையாகத் தெரியும். ஆனால் உட்பகையோ உங்களுடன் தொடர்பு கொண்டது. உங்கள் அருகாமையில், உங்களிடம் ஊடுருவக்கூடிய தன்மையுடன் ஒழுகுவது. அத்தகைய access கொண்ட நபர்களிடம், அவர்களை நீங்கள் இனம் கண்டு கொள்ளும்வரை எதிர்ப்பு சக்தியே உங்களிடம் இருக்க வாய்ப்பு இல்லை! You are defenceless against those that are too close to you. பிரித்தாளும் தந்திரத்தை செயல்படுத்த முயல்வோரும், தவறு செய்பவர்களைப் பிடிக்கத் திட்டமிடும் புலனாய்வுத்துறையினரும், மனமுறிவு கொண்டு ஆனால் பிரிந்துபோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் முன்னாள் நண்பர்களைக் கொண்டுதான் திட்டம் தீட்டுவார்கள் என்று படித்திருக்கிறோம். இதனை வள்ளுவர்,

 ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
 பொன்றாமை ஒன்றல் அரிது.

என்கிறார்.

என் நண்பரொருவர் வாழ்க்கையில் அடுத்தவரை முழுமையாக நம்பியே கெட்டார். எப்போது கண்டாலும், "அவன் கழுத்தறுத்தாண்டா" என்று புலம்புவார். எப்படிய்யா அறுத்தான் என்று கேட்டால், "குயவர் மண்பானை செய்து முடித்தபின், எப்போ, எதைவைத்து கட் பண்ணினார் என்பது தெரியாது; ஆனால், அவர் அதை எடுக்கும்போது, "சக்"கென்று வெளியே வரும். அதுபோல், அசந்திருந்த நேரத்தில, நூல் போட்டு அறுத்துட்டான்யா" என்பார். இந்த உவமையை வள்ளுவர் கையாண்டிருக்கிறார் பாருங்கள்:

 உட்பகை அஞ்சித் தற்காக்க உலைவிடத்து
 மட்பகையின் மாணத் தெறும்.

Asterix comics-ல் ஒரு ரோமானிய ஒற்றன் தன்னைச் சுற்றியிருப்பவர்களைடையே பகையை மூட்டிவிட்டு தப்பித்துவிடுவான். அவனை சீஸர், சர்க்கஸில் இட்டு சிங்களை விட்டு அழைக்க முயற்சி செய்வார். ஆனால் அந்த ஒற்றனோ சிங்கங்களையே ஒன்றோடு ஒன்றை மோதவிட்டு, தான் ஒடிப்போய்விடுவான்!

திருவள்ளுவர் "நட்பு" என்று ஒரு அதிகாரமும், ஆனால் "தீ நட்பு", "கூடா நட்பு" என்று இரு அதிகாரங்களையும் எழுதியுள்ளார்.

 சீரிடம் காணின் எரிதற்குப் பட்டடை
 நேரா நிரந்தவர் நட்பு

வஞ்சிக்கத் தக்கதொரு வாய்ப்பினை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பகைவர் உங்கள் நண்பராக நடித்துக் கொண்டிருப்பர். அவர்தம் செயல்பாடு சம்மட்டி அடி விழும்வரை தான் தாங்கிக் கொண்டிருப்பதுபோல் தோற்றம் தரும் பட்டறைக் கல் போன்றது என்கிறார். ஆனால் அடியோ உங்கள் மேல்தான் விழும். நீங்கள் கடைசியில் அடிபட்டு விழும்போது அத்தகைய "நண்பர்கள்" காணக் கிடைக்க மாட்டார்கள். உங்கள் வீழ்ச்சியைக் கண்டு கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்.

 சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
 தீங்கு குறித்தமையான்.

 தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
 அழுத கண்ணீரும் அனைத்து.

"ஐயா, நீங்கள்தான் என் கண்கண்ட தெய்வம். உங்களால்தான் ஒரு வயிற்றுக் கஞ்சி குடிக்கறேன்" என்று காலில் விழுந்து வணங்கி நம் மனதை நெகிழ்ச்சியுறச் செய்துவிடுவார்கள். ஆனால் அந்தக் கும்பிடும் கைகளினுள் கூரிய கொடுவாள் மறைந்திருக்கும். கண்ணீருக்குள் கயமை கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். வில்லில் பூட்டி நாணேற்றி, உங்கள்மேல் எய்யக் காத்திருக்கும் கூரிய அம்பு போன்றவை அந்த கூழைக் கும்பிடுகள் என்கிறார் வள்ளுவர்.

தற்புகழ்ச்சி தவறு என்பது தெரியாதவரில்லை. பிறர் முகத்துதியிலும், பொய்ப் புகழ்ச்சியிலும் ஈடுபடுகிறார்கள், அதனை நம்புதல் தவறு என்று என்னதான் நம் அறிவு நமக்கு இடித்துரைத்தாலும், இந்தப் பாழும் மனம் அவற்றை விரும்புகிறதே ஐயா, என்ன செய்வது! இதனைப் பற்றிய விளக்கத்தை Sigmund Freud தான் அளிக்க வேண்டும்! மீண்டும் சொல்கிறேன்: Human beings are creatures of emotion, not of logic!

"மன்ற அடுத்திருந்து மாணாத செய்"வோரை அண்ட விடாமல் உங்கள் அகத்தினைக் காப்பீர்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : நுணங்கிய கேள்வியர் ஆதல்! - எஸ்.கே - {FEB - 03 - 05}  
  ஒரு விஷயத்தில் பத்து நிமிஷங்களுக்கு மேலும் விவாதம் செய்யப் பட்டு ஒரு முடிவும் எட்ட முடியவில்லையென்றால், அங்கே வாதிக்கப்படும் பிரச்னையின் உண்மையான உருவம் பேசப்படவில்லை என்று பொருள். அந்த விவாதம் தொடர்வதால் யாதொரு பயனும் இல்லை. பிரச்னையின் அடித்தளமான சொரூபத்தை கண்டறிந்து அதனை விவாதிக்க வேண்டும்.
http://www.tamiloviam.com/unicode/02030507.asp
Expand / Collapse
 


அடுத்தவரிடம் நம் எண்ணங்களை முழுவதுமாகவும், முறையாகவும் கொண்டு சேர்ப்பதில் வெற்றியடைய வேண்டுமானால் நாம் மெற்கொள்ள வேண்டிய வழிமுறைகளில் சிலவற்றை என் முந்தைய கட்டுரையில் உங்கள்முன் வைத்திருந்தேன். இப்போது இந்தத் துறையில் இன்னும் சிறப்பாக எப்படி நம் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பீட்டர் ட்ரக்கர்  (Peter Drucker) என்னும் மேனேஜ்மெண்ட் துறையின் குரு, "இன்னொருவர் சொல்வதை முழுவதும் காது கொடுத்துக் கேட்டாலே போதும், இந்த உலகத்தில் பாதிப் பிரச்னைகள் தீர்ந்துவிடும்" என்கிறார். Communication-ல் கேட்பது (listening) என்பதன் முக்கிய பங்கு பற்றி முன்னமையே குறிப்பிட்டிருந்தேன். "வாயுணர்வை" விட "செவியின் சுவையுணர்வது" தான் முக்கியம் என்று வள்ளுவரும் உரைத்திருக்கிறார். நம்மைப் படைத்த கடவுளுக்கே தெரியும், பேசுவதைவிட கேட்பதுதான் மிகச் சிரமமான செயல் என்று. அதனால்தான் ஒரே ஒரு வாயும், ஆனால் இரண்டு காதுகளும் வைத்து நம்மைப் படைத்திருக்கிறான் என்கிறார்கள் பெரியோர்!

ஒரு குழந்தை பள்ளியிலிருந்து திரும்பி வந்தவுடன், அந்தக் குழந்தை தன் மனத்தில் மிக முக்கியமாகக் கருதும் அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி பெற்றோருடன் பங்கிட்டுக் கொள்ளத் துடித்துக் கொண்டு (குதித்துக் கொண்டும்) நிற்கிறது. ஆனால் தந்தையோ டி.வியில் ஒரு மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு குழந்தை எதிரில் நிற்பதே மனத்தில் பதிவாகவில்லை. அம்மாகாரியோ யாருடனோ டெலிஃபோனில் பேசுபேசென்று பேசிக்கொண்டிருக்கிறாள்! நீங்கள் எவ்வளவு பொருட்செலவில் அக்குழந்தைக்கு டிரெஸ் வாங்கிக் கொடுத்திருந்தால் என்ன, எவ்வளவு பெத்தப் பேர்கொண்ட ஸ்கூலில் சேர்த்திருந்தால் என்ன, எல்லாம் வீண். குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிற கவனமும், ஈடுபாடும், பரிவும், ஒத்துணர்வும் கிடைக்கவில்லையெனில் அதன் மனம் பெருமளவு பாதிப்புக்கு உண்டாகும்.

இன்னொருவர் சொல்வதை செவிமடுக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய சிலவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன் :

 • முழுக்கவனத்துடன் கேட்பது என்பது ஒரு ஈடுபாட்டுடன் செய்யவேண்டிய செயல். அதற்கு மனமும், உடலும் நன்கு உழைக்க வேண்டும்.
 • ஒருவரின் பேச்சைக் கேட்கும்போது கவனம் சிதறக்கூடாது. அப்படி மனம் வேறெங்கோ சஞ்சாரம் செய்யத் துவங்கினால், நம் உடல் இருக்கும் நிலையை சிறிது மாற்றி முகத்தை பேசுபவர்பால் திருப்பி கவனத்தை நேர்முகப் படுத்த வேண்டும்.
 • இன்னொருவர் பேசி முடிப்பதற்கு முன்னால், பேசப்படும் பொருளின்பால் உங்கள் ஈடுபாடும் வெளிப்பட வேண்டும் என்கிற உந்துதலால், (அல்லது பிறரிடம் எடுத்துரைக்கக்கூடிய அளவில் உங்களிடம் ஏதாவது முக்கிய கருத்து ஒன்று வெளிவரத் துடித்துக் கொண்டிருப்பதால்,) உங்கள் வாய் முந்திரிக் கொட்டை போல் செயல்பட எத்தனிக்கும். அதனைக் கட்டுப் படுத்த வேண்டும். அடுத்தவரின் உரை முடிந்த பின்னால்தான் நீங்கள் வாய் மெஷினை "ஆன்" செய்ய வேண்டும். அதுவரை காது மெஷின் தான் வேலையில் ஈடுபட வேண்டும்!
 • பிறரின் உரையை நீங்கள் கவனமாக செவி மடுக்கிறீர்கள் என்பதை அவருக்கு அறிவிக்கும் வகையில் உங்கள் முகத்தாலும், கண்ணாலும், சொற்களாலும் மற்றும் உடலாலும் எதிர்வினைகளைத் தெரிவித்துக் கொண்டிருங்கள். அப்போதுதான் அந்த உரையாடலில் உங்கள் பங்களிப்பு ஏற்கப்படும். அது வெறு "உம்" கொட்டலாக மட்டும் இருக்கலாம். தலையாட்டலாக இருக்கலாம். அல்லது "அதுதான் சரி", "ரொம்ப சரி", "வெரி குட்", "நல்லது", "பின்ன!", "அப்புறம்" போன்ற சொற்களாகவும் இருக்கலாம். சில சமயம் நீங்கள் ஒரு புன்சிரிப்போ, அல்லது "கலகல"வென்ற சிரிப்போ அளிக்க வேண்டியிருக்கலாம். சிலர் கேட்கப்பட்ட முக்கியமான சொல்லைத் திருப்பிச் சொல்வார்கள் ("ஷயர்" படிக்கப்படும் போது செய்வது போல). எப்படியோ, அந்த இடத்தின் தேவைக்கேற்ப அவை பொருத்தமாக அமைய வேண்டியதுதான் முக்கியம்.
 • சொல்லப் பட்டவை உங்களுக்கு முழுவதும் புரியவில்லையென்றால், அல்லது மேல்விவரம் தேவைப் பட்டால், கேள்வி கேட்டுத் தெரிந்து கொள்வது தான் முறையானது.
 • என்ன சொல்லப் படுகிறது என்பதில் மனம் கொள்ளாமல், சொல்பவரைப் பற்றிய அயிப்பிராயத்தை மட்டும் வைத்து கேட்பவற்றை வடிகட்டாதீர்கள். முழுவதுமாகக் கேட்டு, ஆராய்ந்து முடிவெடுத்தல்தான் முறை.
 • உரையாடலின் பாதியில் விவாதத்தில் ஈடுபடாதீர்கள். உரையாடல் தடம் புரண்டுவிடும். கசப்பு தான் மிஞ்சும்.
 • வெறும் சொற்களை மட்டும் கேட்காதீர்கள். சொற்களின் உட்கருத்துக்களை, உள்ளடங்கிய உணர்வுகளை, கவலைகளை, ஏக்கங்களை, எதிர்பார்ப்புக்களை - எல்லாவற்றையும் உள்வாங்கி, அதற்கேற்ப பின்னூட்டங்களை அளியுங்கள்.
 • எண்ணங்களை எடுத்துரைப்பதில் சிலருக்கு சில சிரமங்கள் இருக்கலாம். அதனால் கேட்பவற்றை குறைத்து மதிப்பிட்டுவிடல் கூடாது.
 • அடுத்தவரின் கூற்றில் பொதிந்திருக்கும் உள்ளர்த்தங்களை விழிப்புடன் அறிந்து கொள்ளுங்கள். சில குறிப்பிட்ட சொற்கள், சொல்லப்படும் வேகம், அழுத்தம் ஆகியவை பல உண்மைகளை வெளிக்கொணரும் வன்மை வாய்ந்தவை. அவற்றை இழத்தல் கூடாது.
 • கேட்பவற்றை மேம்போக்காகப் பொருள் கொண்டு, அதன் அடிப்படையில் முடிவுகள் மேற்கொண்டு செயல்படத் தொடங்காதீர்கள். அவற்றில் பொதிந்திருக்கும் கரு என்ன என்பதையும், சொல்லாமல் விடப்பட்டவை யாவை என்பதையும் கூர்மையாக அறிதல் வேண்டும். சில சமயம் untold story தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். "திரைக்குப் பின்னால்" என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
 • அதற்காக இல்லாத ஒரு பொருளை நீங்களாக assume செய்து கொள்ளாதீர்கள்.


பொதுவாக அடுத்தவரிடம் உரையாடும்போது அவருக்கும் நமக்கும் ஏதாவது இணைப்பு, பொதுவான ஆசைகள், பற்றுக்கள் இது போன்று ஏதாவதொரு தொடுப்பை (பாலத்தை) உறுதிப் படுத்தினால் ஒரு நல்லுறவான சூழ்நிலையில் அந்த உரையாடல் அமையும், அதனால் சம்பத்தப் பட்ட எல்லோரும் பயன் பெறுவர்.

Kare Anderson என்னும் பயிற்சியாளர் அளிக்கும் அறிவுறைகள் :-

 • இன்னொருவருடன் உரையாடும் போது, அவருடைய பக்கத்தில் நின்று கொண்டோ அமர்ந்தோ (sidle) இருங்கள். எதிரெதிரே இருக்காதீர்கள். ஏனென்றால் அப்போதுதான் மனிதர்களின் மனங்கள் பல விதங்களில் ஒத்துப் போகிறது. பெரும்பாலும் அமர்வுகளைவிட, ஒருவர் பக்கலில் ஒருவர் நடந்து கொண்டே விவாதிக்கப்படும் விஷயங்களில்தான் பிரச்னைகள் தீர்க்கப்பட்டு உடன்பாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய்ச்சிகள் மூலம் கண்டறிந்திருக்கிரார்கள். (பெண்கள் பெரும்பாலும் எதிரெதிரே அமர்ந்துதான் பேசுவார்கள். ஆண்கள் பக்கலில்தான் அமர்வார்கள் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்!)
 • ஒரு விஷயத்தில் பத்து நிமிஷங்களுக்கு மேலும் விவாதம் செய்யப் பட்டு ஒரு முடிவும் எட்ட முடியவில்லையென்றால், அங்கே வாதிக்கப்படும் பிரச்னையின் உண்மையான உருவம் பேசப்படவில்லை என்று பொருள். அந்த விவாதம் தொடர்வதால் யாதொரு பயனும் இல்லை. பிரச்னையின் அடித்தளமான சொரூபத்தை கண்டறிந்து அதனை விவாதிக்க வேண்டும்.
 • நம்மிடம் சொல்லப்படும் பொய்யுரைகளை முதலிலேயே கண்டறியுங்கள். பேசுபவர்களின் முகம், பேசும்போது அது போகும் போக்கு, கண்களின் அலைபாயும் தன்மை, உடல் காட்டும் சிக்னல்கள் எல்லாவற்றையும் குறிப்பாகக் கவனித்துப் பகுத்தறிதல் வேண்டும்.
 • நீங்கள் சொல்வதை குறிப்பாக, ஐயத்துக்கோ, வேறு பொருள் கொள்ளவோ இடமிலாமல் உறுதியாகத் தெரிவியுங்கள். பொதுவான சொற்களைத் தவிர்த்து "இதுதான்" என்று நிச்சயத்துடன் உணரும்படியாக உரைத்தல் அவசியம். சிறு குழந்தைகள் இந்த விஷயத்தில் சரியாக உணர்த்துவார்கள். அவர்களுக்கு பொதுவான சொற்களில் நம்பிக்கை கிடையாது. "இன்னது வேண்டும்" என்று அறுதியிட்டுச் சொல்லி விடுவார்கள். வயது ஏற எறத்தான் "பூசி மொழுகி" சுற்றி வளைத்துப் பேச ஆரம்பிக்கிறோம்!
 • உடை, செண்ட், சுத்தம் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.
 • யாரையாவது புகழ வேண்டுமானால், அவரைப் பற்றி நல்லபடியாக யாரிடம் கூறினால் அந்த புகழப்படும் நபருக்கு நன்மை விளையுமோ, அவரிடம் சொல்லுங்கள். இதனால் நட்பு பலப்படும். உங்களைப் பற்றிய புரிதல் சிறப்பாக அமையும்.

சரி, நேர்காணல், பொதுக் கூட்டங்களில் பேசுவது, Presentations இது போன்ற தருணங்களில் கடைப் பிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பற்றி இனிவரும் வாரங்களில் காணுவோம்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : சொல்லும் பொருளும் - எஸ்.கே - {JAN - 20 - 05}  
  உரையாடும்போது "அசை"ச் சொற்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவை கேட்பவர்க்கு ஒரு கவனச் சிதறலையும், சலிப்பையும் உண்டாக்கும். "ம்ம்ம்", "அது வந்து", "அங்கேர்ந்து", "அதாகப் பட்டது", "like...", "you know", "no", "what" இது போன்ற "மலட்டுச் சொற்களை"யும் ஓசைகளையும் தவிர்த்தல் வேண்டும்.
http://www.tamiloviam.com/unicode/01200506.asp
Expand / Collapse
 

அன்னையின் கருவறையில் நிகழும் உயிரணுக்களின் வகுபாடு தொடங்கிய கணத்திலிருந்தே நாம் தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்து விடுகிறோம். மனித உருவமும், தானியங்கு விசையும் அந்தக் கருவுக்கு ஏற்பட்ட பிறகு. சிறுசிறு அசைவுகள், அதிர்வுகள் மூலம் அன்னையுடன் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறது. கருப்பையில் மிதந்து கொண்டிருக்கும்போதே வெளியுலகத்தின் ஓசைகளை செவிமடுக்கிறது என்று கூறுகிறார்கள்.

பின் இந்த உலகத்தின்பால் அம்மகவு தலையெடுத்து (அதுதானே முதலில் வெளியே நீளுகிறது) வைத்தவுடன் பசி, கோபம், வலி எல்லாவற்றையும் அழுகை மூலமாகவே எடுத்துறைக்கிறது. சிறிது சிறிதாக தன்னைச் சுற்றி எழுகின்ற ஓசைகளை செவி வழியாக மூளையினுள் செலுத்திப் பதிவு செய்து கொண்டு, அவற்றை தன் உள்ளுணர்வின் உந்துதல்களுடன் (instinctive urges) சேர்த்து ஒரு படிமத்தை உருவாக்குகிறது. அதன்பின் தன் பசி, மகிழ்ச்சி, கோபம், வலி, பயம், விருப்பு, வெறுப்பு, தோழமை, ஒவ்வாமை போன்ற எல்லா வித உணர்ச்சிகளையும் அழுகையுடன் கூட, உடல் அசைவுகளாலும், பலவித ஓசைகளாலும் பகிர்ந்து கொள்கிறது. இந்தவித பகிர்வுகளை தாய் உணர்வு பூர்வமாகவும், உற்று நோக்குதல் மூலமாகவும் அறிகிறாள். இன்ன காரணத்திற்காக ஒரு மதலை அழுகிறது என்பதை துல்லியமாக கண்டறிவாள் ஒரு தாய். அது பசியா, அல்லது தொடையில் கடித்த எறும்பா, எது காரணம் என்பதை அந்த அழுகையின் வீச்சு, தன்மை இவைகளால் இனம் காண முடிகிறது அத்தாயால்.

இதனால்தான் ஒரு மதலை வளரும் பருவத்தில் அதன் சூழ்நிலை அமைதியானதாக இருத்தல் வேண்டும் என்கிறார்கள். இந்த உலகத்தின் அறிமுகம் அதற்கு சரியான புரிதலுடன் அமைய வேண்டும். ஒரு குழந்தையின் அண்மை சரியான தன்மையுடன் அமைந்தால், அதன் வளர்ச்சி செம்மையாகவும், அதன் காரணமாக அதன் எதிர்காலம் வளமையுடனும், வெற்றி கொண்டதாகவும் அமைகிறது.

இப்படித் தொடங்குகிறது நம் பரிமாறல் பயணம் (Thus commences our journey of communication with the outside world!). அப்போது தொடங்கி நம் வாழ்நாள் முழுதும், நம் ஒவ்வொரு அசைவிலும் வெளி உலகத்துடன் தொடர்பு கொண்டு கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொண்டே இருக்கிறோம். நம் எண்ணங்களை, செய்திகளை, கருத்துக்களை, உணர்வுகளை, தேர்வுகளை, நாம் கொண்டுள்ள அறுதியான கோட்பாடுகளை, நாம் எடுத்த முடிவுகளை - இவற்றை எல்லாம் எவ்வளவு சரியாக, வெற்றிகரமாக பிறர் (target) அறியக் கொண்டு சேர்க்கிறோம் என்பதுதான் இவ்வுலகில் நம் முயற்சிகளின் வெற்றிதோல்வியை நிர்ணயிக்கிறது. நாம் பகிர்ந்து கொள்ள எண்ணியவற்றை சொல்லியாகி விட்டது; புரிந்து கொண்டு அதற்கேற்ப நடத்தல் அந்த இன்னொருவர் கடன்தானே எனலாம். ஆனால் அந்த இன்னொருவரிடம் நாம் சொல்லும் பொருள் முழுதும் சென்றடையும் வகையில் அதனை உரைத்தல் நம் கடன் அல்லவா?

பிறரிடம் நாம்,

திறந்த கண்களுடனும்
திறந்த காதுடனும்
திறந்த மனத்துடனும்

உரையாட வேண்டும். இந்தக் கலையை பெரு முயற்சி செய்து கைக்கொள்ளல் வேண்டும்.

இவ்வுலகில் மனிதர்களுக்குள் தோன்றும் சண்டை, போராட்டம், கருத்து வேற்றுமை, முரண்பாடு அனைவற்றுக்கும் முக்கிய காரணம் இந்த mis-communication தான். ஒவ்வொருவர்

பேசும் மொழியும், அவர்கள் கையாளும் சொற்களும், பொருட்பாடும், படிமங்களும், நடையும் தம்முடைய நடைமுறையையும், பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. மொழி ஒன்றானாலும் அதன் வட்டார வழக்குகள் (dialects) மற்றும் idioms மாறுபடும். அதனால் நாம் கேட்பவர்களின் பின்னணி, வளர்ந்த சூழ்நிலை, கல்வியறிவு இவற்றை அறிந்து, அவற்றுக்கு ஒப்ப உரைத்தால்தானே நான் சொல்லுவது உங்களுக்கும், நீங்கள் சொல்லுவது எனக்கும் புரியும்.

ஒரே சொல் வெவ்வேரு மனிதர்களின் புரிதல் மற்றும் பின்னணிக் கேற்ப பொருள் கொள்ளப்பட்டு அதன் எதிர்வினைகளும் மாறுபடும். சிர சமயம் நேரெதிர் பொருள் கூட கொள்ளப்படும்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒருவர் தன் கட்டுரையில், முரண்டு பிடிக்கும் இரு சாரார் பிணக்கை விட்டு பேசித்தீர்க்க வேண்டும் என்ற பொருளில், "break the ice" என்று எழுதினாராம்.

ஆனால் அதனைப் படித்த ஒரு அதிகாரி, தன் கல்விக்குறைவினால், "break" என்கிற சொல்லை மட்டும் மனதில் கொண்டு, எதனையோ உடைக்கப் போகிறார்கள் என்று எழுதியவரை கைது செய்து விட்டாராம். நாம் சொல்ல முற்படுவதை நேரடியாக, சுற்றி வளைக்காமல் சொல்லுதல் வேண்டும். சொற்களால் தோரணம் கட்டி, பேச்சால் வீதியுலா வந்தோமானால், கெட்பவருக்கு நாம் என்ன சொன்னோம் என்பதே மனதில் பதிந்திருக்காது. "ஏதேதோ சொன்னார்" என்பார்கள். நீங்கள் குறிப்பிட்டு சொல்ல நினைத்த விஷயம் கேட்டவர் மனத்தினுள் பதிவாகியிருக்காது. பிறகு நஷ்டம் உங்களுக்குத்தான். தொலைபேசியில் பேசும்போது கூட துல்லியமாகச் சொல்லவேண்டிய கட்டளைகள், செயல்பாடுகள் முதலியவை பொதுவான விசாரிப்புகளில் மூழ்கி மறைந்துவிடும் அபாயம் உள்ளது. "நீ உடனே வீட்டுக்குப் போய் பாஸ் புக்கை எடுத்து கிட்டு வா. என்ன? அப்பறம், எப்படி இருக்கு நிலைமையெல்லாம்..." இந்த ரீதியில் உங்கள் உரையாடல் தொடர்ந்தால்,

போன் பேச்சு முடிந்தவுடன் நீங்கள் முக்கியமாக எதை செய்யச் சொன்னீர்களோ, அது நினைவில் இருக்காது. குசலம் விசாரித்ததில் ஏதோ ஒன்று கேட்டவர் மனதில் பதிந்து, அதில் ஏதாவது அவர் மனத்தினுள் பதுங்கிக் கிடந்த முள்ளை கிளர்ந்தெடுத்து, அதுவே அவர்தம் மனத்தை ஆக்கிரமித்து, அந்தக் குழப்பத்தில் நீங்கள் அடிக் கோடிட்டுச் சொன்ன கட்டளை பறந்து போயிருக்கும். இது சாதாரணமாக அன்றாடம் நடக்கும் communication gap! இதனால் நீங்கள் எப்போதும் கடைசியாக "வைச்சுடட்டுமா?" என்று மங்களம் பாடுவதற்கு முன்னால் ஒரு முறை அந்த போன் பேச்சின் சாரமான முக்கியச் செய்தியைக் கூறி விடுதல் வேண்டும். அது மனத்தில் தங்க வாய்ப்பு இருக்கிறது.

சொல்ல நினைப்பதை சிறு சொற்றொடர்களாக அனைவருக்கும் புரியும்படியாகச் சொன்னால் நாம் சொல்பவை முழுதும் அதன் இலக்கை எட்டும் சாத்தியம் உள்ளது. அதை விடுத்து உங்கள் மேதா விலாசத்தைக் காண்பிப்பதற்காகவே ஒன்றை திரித்து உரைத்தால், அவை சென்றடையாமலிருத்தல் ஒரு பக்கமெனினும், அதன் பொருட்டு ஏற்படும் எதிர்மறை விளைவுகள் இன்னொரு பக்கமாக அமையும்! இதனையே "K.I.S.S" என்பார்கள் (Keep it short, stupid!). "தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி" என்றார் வள்ளுவர். பதரை நீக்கிப் பக்குவமான நெல்மணிகள் போன்ற பலன் தரும் சொற்களையே கோர்த்து உரைக்க வேண்டும்!

எதனையுமே சுருங்கச் சொல்லுதல் வேண்டும். Brevity is the soul of wit - என்பார்கள். ஆனால் அது எளிதன்று. முன்ணாள் அமேரிக்க அதிபர் தியோடார் ரூஸ்வெல்ட் அவர்களைக் கேட்டார்களாம், "நீங்கள் ஒரு பத்து நிமிட சொற்பொழிவுக்கு தயார் செய்ய எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்வீர்கள்" என்று. அதற்கு அவர், "அரை நாள் தேவை" என்றார். "அரை மணி நேரம் பேச வேண்டும் என்றால்?" என்று கேட்டதற்கு, "இதோ, இப்போதே தயார்" என்றாராம்!

உரையாடும்போது "அசை"ச் சொற்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அவை கேட்பவர்க்கு ஒரு கவனச் சிதறலையும், சலிப்பையும் உண்டாக்கும். "ம்ம்ம்", "அது வந்து", "அங்கேர்ந்து", "அதாகப் பட்டது", "like...", "you know", "no", "what" இது போன்ற "மலட்டுச் சொற்களை"யும் ஓசைகளையும் தவிர்த்தல் வேண்டும்.

உரையாடலின் முக்கிய பகுதி கேட்டல் அல்லது கேள்வியாகும் (Listening).

 சொல்லப் படுவதில் பாதிதான் காதால் கேட்கிறோம்
 அதில் பாதிதான் மனத்தினுள் உறைந்தது
 அதனினும் பாதியையே பொருள் கொண்டுணர்கிறோம்
 உணர்ந்ததில் பாதியே நம்பப் படுகிறது
 நம்பியதில் பாதியே நினைவில் நின்றது!

இப்போது புரிகிறதா, "ஏன் எல்லோரும் நாம் சொன்னதைப் புரிந்து கொண்டு அதன்படி நடக்கவில்லை" என்று அங்கலாய்க்கிறோமே, அதன் காரணம்!

பிறர் சொல்லுதலைக் கேட்டல் என்பது வெறும் காது மட்டும் சம்பந்தப் பட்ட விஷயமல்ல. முழுவதும் உணரப்பட்டு, மனத்தினுள் பதிவு பெறுதல் வரை அதன் வீச்சு உள்ளது. Listening is an art and a science - என்பார்கள். இத்னை செயல் படுத்துவது எப்படி, கேள்வியின் போது செய்யத்தகாதவை எவை என்பதை சிறிது பார்ப்போம்:

* பிறர் உரையாடும் போது முழு ஈடுபாட்டுடன் கேட்க வேண்டும்

* சரியான எதிர்வினைகளை காட்ட வேண்டும். அப்போதுதான் நீங்கள் கேட்கிறீர்கள் என்பது தெரியும்.

* நன்கு கவனித்துக் கேட்பவர்கள் தம் முகம் முழுவதும் பயன் படுத்துவர்.

* பாதி கேட்கையில் எதையுமே முடிவு கட்டாதீர்கள். முழுவதையும் கேளுங்கள்

* இன்னொருவர் நம்மிடம் பேசும்போது கவனம் சிதறி வேறெங்கோ யோசனை செய்யாதீர்கள். சிலர் இப்படி எங்கேயோ "மோட்டு வளையை"ப் பார்த்துக் கொண்டு "குருட்டு யோசனை"

செய்ய ஆரம்பிப்பார்கள். They are all very poor listeners! (சிலர் அப்போது பல்லைக் குத்திக் கொண்டோ, மூக்கை நோண்டிக் கொண்டோ வேறு இருப்பார்கள்!)

* நாம் கேட்டுக் கொண்டிருக்கும் போதே நம் மனதில் ஏற்கனவே பதிவாகியுள்ள விஷயங்கள் (cached data) வேலை செய்ய ஆரம்பித்து விடும். அதனால் மேற்கொண்டு கூறியவை நம் மனத்தினுள் சென்றடைந்திருக்காது. அதனால் assumptions, pre-conceived notions - முதலிய தடுப்புச் சுவர்களை சண்டையிட்டு விரட்டி, புதிய செய்திகளை     உள்வாங்குதல் வேண்டும்.

* உரையாடலினிடையே அடிக்கடி எடுத்துக் கொண்ட பொருளை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது.

* "இவன் என்ன அண்ணாவி, என்னமோ எனக்குத் தெரியாதென்று பேசிக் கொண்டேயிருக்கிறான்" என்ற ஈகோ உந்துதலால், எதனையும் முழுவதுமாய்க் கேட்க பொறுமையிலாமல்,

"அதுதான் எனக்குத் தெரியுமே" (I know. I know) என்று "கட்" பண்ணுதல் கூடாது
 
* கண் பார்த்துப் பேச வேண்டும் (eye contact). இல்லாவிட்டல் உங்கள்மேல் நம்பிக்கை ஏற்படாது.
 
* தன் பங்கீடும் இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் அநாவசியக் குறுக்கீடுகளைத் தவிர்க்க வேண்டும்.
 
* உரையாடலை திசை திருப்பாதீர்கள். முழு விவரமும் உங்களுக்குக் கிட்டாமல் போய்விடும்.
 
* நடு நிலையில் பிறர் சொல்வதைக் கேளுங்கள். அனைத்தும் கேட்டு ஆராய்ந்தறிந்த பின்பே உங்கள் கருத்தை வெளியிடுங்கள். உங்கள் முடிவை பாதியிலேயே கொட்டி விடாதீர்கள்.
 
* வேறொருவர் தன் அநுபவங்களை விவரிக்கும் போது, "ஊடாயில்" புகுந்து உங்கள் கதையை எடுத்து விட ஆரம்பிக்காதீர்கள். ஒரு புதுக் கதை கிடைப்பதை இழப்பீர்கள்! நாம் நம் என்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது நம், உடல், நாம் பேசும் சொல் வளம், ஓசையின் ஏற்ற இறக்கம், பேசும் முறை, நம் முகம் மற்றும் கைகால்களின் அசைவு, நம் பொருத்தமற்ற செயல்கள் முதலிவை எல்லாமே உரக்கப் பேசுகின்றன! இந்த ஜோடிகள் பேசிக் கொள்ளும்போது பாருங்கள், வாய்ச் சொல்லுக்கு வேலையே இல்லை! உண்மையிலேயே, செய்திப் பகிர்தலில் சொற்களின் பங்கு 7 சதம் தான்! சொற்களின் ஓசை 38 சதமும், Body Language 55 சதமும் பங்களிக்கின்றன! உங்கள் கண், முகம், கைகால்களின் பங்கு எவ்வளவு என்பதைக் கண்டீர்களா? அதனால்தான் உங்கள் சொல்லுக்கு ஒப்ப உங்கள் அவயவங்களின் அசைவுகள் அமையவேண்டும். அவைகள் எதிர்மறையான புரிதலை அளிக்கும்படியாக அமைந்தால் கேட்பவர்கள் உங்கள் உடல் சுட்டும் பொருளையே எடுத்துக் கொள்வர். அல்லது அவர்கள் உங்கள்பால் நம்பிக்கை இழப்பர்.

தொலைபேசி உரையாடலில் கூட சொற்களின் பங்கு 18 விழுக்காடுதான். சொல்லும் விதமும், அவற்றின் குரல் ஏற்ற இறக்கங்களும் மீதி 82 பங்கைக் கொண்டு செல்கின்றன. பேசும்போது நாம் காண்பிக்கும் சைகைகளின் பொருள் வெவ்வேறு நாடுகளில் மாறுபட்ட பொருள்களைக் கொடுக்கும். அதை நாம் மனத்தில் கொண்டு கவனமாக இருத்தல் வேண்டும்.

இல்லையெனில் விபரீதமான விளைவுகள் ஏற்படும்.

1. "V" என்று காண்பிக்கும்படியாக இரு விரல்களை உள்ளங்கையை வெளிக்காண்பிக்கும் படியாகக் காட்டினால் "வெற்றி" என்று பொருள். இது எல்லோருக்கும் தெரியும். அதையே புறங்கை வெளியே இருக்கும்படி காண்பித்தால் அது மிக அருவருப்பான பொருளைக் கொடுக்கும் (Shove it up your ....hole!)

2. கட்டை விரலும், ஆட்காடி விரலும் சேர்ந்து வட்டமாகத் தூக்கிக் காண்பித்தால் சில நாடுகளில் "OK" என்றும், மத்திய கிழக்கு போன்ற நாடுகளில் அதுவே "orifice" என்றோ, அல்லது "நான் ரெடி" என்றோ மோசமான கருத்தை அளிக்கும்!

3. கால்களால் எதையுமே சுட்டினால் மரியாதைக் குறைவாக நினைப்பர் பலர். நம்மூரில் வேண்டுமானால் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கலாம்.

4. எதையுமே இரு கைகளையும் கொண்டு அளிப்பதையே ஜப்பானியர்கள் மரியாதையாகக் கருதுவர்.

5. தலையை மேலேயும் கீழேயும் ஆட்டினால் "சரி", "ஆமாம்" என்று தானே பொருள்? ஆனால் கிரீஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் அதற்கு எதிர்மறையான அர்த்தம்!

பிறரால் சொல்லப் படுவைத் தவிர. சொல்லப் படாததையும், சொல்ல முடியாததையும் கேட்கும் திறன் உங்களுக்கு வேண்டும். கண்களையும், உடலசைவையும், குறிகளையும் சுற்றுப்

புறத்தையும் கொண்டு மெய்ப்பொருளை அறிதல் வேண்டும். யூதர்களை அடைத்து வைத்த பகுதியில் சர்வ தேசக் குழு ஒன்று உண்மை அறிய வந்த போது எழுதப் பட்டதாக ஒரு கவிதை

படித்தேன். அதன் சுருக்கம் இது:-

 கவனமாகக் கேளுங்கள்
 நான் சொல்லாததை.
 அதை நான் சொல்ல விரும்புகிறேன்
 நான் உயிர் வாழ அதை சொல்லியே தீர வேண்டும்
 ஆனால் அதை நான் சொல்ல இயலாது!

என் நண்பர் ஒருவர் சென்னை நகரில் படித்துக் கொண்டிருந்த தன் மகனை யாரோ சொன்னார்கள் என்று ஒரு குக்கிராமத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் சேர்த்து விட்டு, "அவனைக் கேட்டேன், அவன் மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் சொன்னான்" என்று சமாதானம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அவன் சொல்லாமல் விட்டதை அவர் செவிமடுக்க வில்லை. ஆறு மாதங்கள் கழித்து நோய்வாய்ப்பட்ட நிலையில் திரும்பிக் கொண்டு வந்து வேறொரு பள்ளியில் சேர்த்தார்!

இனிதாய்ப் பேசி, கருத்துக்களை தகுந்த முறையில் எடுத்துறைக்க வல்லவனின் சொல்லை உடனே கேட்டு உலகம் செயல்படும் என்கிறார் வள்ளுவர் இந்தக் குறளில்:

 விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்தினிது
 சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

மேலும், சொல்வன்மை என்பது மிகச் சிறந்த பேறு என்கிறார் இங்கே:-

 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
 யாநலத்து உள்ளதூம் நன்று

அத்தகைய பெருமை வாய்ந்த நாவன்மையை எல்லோரும் பெருக என்று வேண்டுகிறேன்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : சுற்றம் பேணில் ஏற்றம் உண்டு! - எஸ்.கே - {JAN - 13 - 05}  
  பழம்பெரும் காப்பியங்களில் ஆரம்பித்து, நெடுங்கதை, திரைக் கதை, சின்னத்திரை எங்கெங்கிலும் உறவினர்களினூடேயுள்ள பிணக்குகளாலும் பகையினாலும் தோன்றும் சண்டை சச்சரவு பற்றிய நிகழ்வுகள்தான் சித்தரிக்கப் படுகின்றன.
http://www.tamiloviam.com/unicode/01130503.asp
Expand / Collapse
 

"உன்னையறிந்தால்" என்று தொடங்கும் இந்த வரிசையில் உங்களைச் சுற்றியுள்ள சமுதாயத்தின் ஒரு அங்கமாக "உன்னை" அறிய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேன். உங்களைப் பற்றிய புரிதல் இந்த உலகத்தில் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இதுவரை பார்த்தோம். நம்மைச் சூழ்ந்த சமூகத்தின் முக்கிய அங்கமாகிய நம் உறவினர்கள் மீது கொள்ள வேண்டிய சரியான அணுகுமுறை என்ன என்பதை இப்போது சற்று சிந்திப்போம்.

ஞாயிறைப் போற்றும் நன்னாளாகிய பொங்கல் திருநாளில் "சன்" தொலைக் காட்சியில் ஒரு பட்டிமன்றம் நிகழ்த்தினார்கள். அதன் தலைப்பு, "உறவினர்களால் உண்டாவது நிம்மதியா, தொல்லையா" என்பதுதான். வழமையான நகைச்சுவை இடைச் செருகல்களை நீக்கிப் பார்த்தால், ஆங்கு பேசப்பட்டவற்றின் சாரம், இன்றைய சூழ்நிலையில் உறவுகள் பேணப் படவில்லை, தொல்லையாகவே கருதப்படுகிறது என்பதுதான். மனிதர்களின் நல்லியல்புகளான பாசமும், நேசமும் ஏன் உறவினர்பால் அடைபட்டுப் போய் விட்டது என்று எண்ணலானேன். உடன் பிறப்புக்கள் சிறுவர்களாக இருக்கும் போது மிக்க நெருக்கத்துடன், ஒருவரோடொருவர் உயிருக்குயிராகப் பழகி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வயதுக்கு வந்து, தமக்கென ஒரு தனியான குடும்பம் என்று வந்தபின் சுயநல உணர்வு மேலோங்கி, பூர்ஷ்வாவின் ஆதிக்கம் மிக்கவர்களாக ஆகி அதே உடன்பிறப்பை ஒரு சுமையாக நோக்குகின்றனர். நல்லுறவெனும் ஒரு மெல்லிய நூற்பிணைப்பு அறுபட்டு விடுகிறது.

பழம்பெரும் காப்பியங்களில் ஆரம்பித்து, நெடுங்கதை, திரைக் கதை, சின்னத்திரை எங்கெங்கிலும் உறவினர்களினூடேயுள்ள பிணக்குகளாலும் பகையினாலும் தோன்றும் சண்டை சச்சரவு பற்றிய நிகழ்வுகள்தான் சித்தரிக்கப் படுகின்றன.

இராம காதையில், சின்னம்மாவின் சூழ்ச்சியினால்தானே இராமர் பட்டம் துறந்து காட்டில் வாசம் செய்ய வேண்டி வந்தது? (ஒன்றுக்கு மேல் மனைவிகள் இருந்தால் அது "உறவு" அல்ல, "தவறு"). இது போதாதென்று, பரதன் இராமனின் காலணிகளை கேட்டு வங்கிச் சென்றதே, வெறுங்காலுடன் காட்டின் தரையில் நடந்து, இராமனின் பாதங்களை கல்லும் முள்ளும் பதம் பார்க்கட்டுமே என்ற கெடுமதியினால்தான் என்று, காப்பியத்தில் இல்லாத கோப்பினை ஒரு பேச்சாளர் இணைத்ததை ஒரு சொற்பெருக்கில் கேட்க நேர்ந்தது! அது தவிர, அந்தக் கதையில் காணப்படும் உடன்பிறப்புகளின் நிலைமையைப் பாருங்கள்:

 வாலி x சுக்ரீவன்
 இராவணன் x விபீஷணன்

விபீஷணனின் பங்களிப்பு இல்லாமல் இராவணனை வென்றிருக்க முடியாது என்பதை அந்தக் கதையில் காண முடிகிறது. "தம்பியுடையான் படைக்கஞ்சான்" என்பார்கள். ஆனால் தம்பியே "ஐந்தாம் படை"யானால்? (கும்பகர்ணனையும், விபீஷணனையும் இரு வேறுபட்ட பாத்திரங்களாகப் படைத்துக் காட்டியிருப்பது அக்காவியத்தின் சிறப்பு!)

மகாபாரதக் கதையின் அடிப்படையே சகோதரர்களுக்குள் உண்டாகிய பகைதான்.  அந்த இலக்கியத்தில் உறவுகளின் எதிர்மறை உணர்வுகளும் சூழ்ச்சிகளும் நிறைந்திருப்பதைக் காண்கிறோம். நாடு, அரசியல், நிலம், சொத்து இவை சார்ந்த பிணக்குகள் எவ்வாறு கடும்பகையாக உருவெடுக்கின்றன என்பதை சித்தரிக்கிறது அந்தக் கதை.

நிகழ்காலத் தலைமுறையினருக்கு இந்த "ஒன்று விட்ட" உறவுகளைப் பற்றி எதுவுமே தெரியாது. ஒரு தலைமுறை உறவுகள்தான் அவர்கள் அறிவர். அதுவும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் எல்லோரும் கூடினால் இன்னும் கொஞ்சம் அறிமுகம் ஆவர். ஒரே ஆளை பல குழந்தைகள் சூழ்ந்துகொண்டு, ஒரு குழந்தை "மாமா" என்றும், மற்றொன்று "சித்தப்பா" என்றும், இன்னும் சிலர் "அத்தான்", "அம்மாஞ்சி" என்றும் - இதுபோல் அழைக்கப்படும் காட்சி இனியும் காணக்கிடைக்குமா! இனிமேல் மாமா, சித்தி, பெரியப்பா போன்ற உறவுகளின் பொருள் என்னவென்பதே தெரியாத சூழ்நிலை உருவாகும்போல் தெரிகிறது. மேலும் இப்போது அது போன்ற நிகழ்ச்சிகளில் எல்லோரும் கூடுவதும் கிடையாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வந்து அட்டெண்டென்ஸ் கொடுப்பது வழக்கமாகி விட்டது. நுழைவுத் தேர்வுக்கான 'கோச்சிங்', பாட்டு கிளாஸ், டான்ஸ் கிளாஸ், காராதே கிளாஸ் இவ்வளவையும் விட்டுவிட்டு எங்கே வெளியே கிளம்புவது!

முன்பெல்லாம் பள்ளிகளில் விடுமுறை விட்டவுடன் அத்தை வீடு, பாட்டி வீடு, மாமா வீடு என்று பறந்துவிடுவது வழக்கம். அவர்களும் இவ்வாறு குழந்தைகளின் வருகையை முறுக்கு, சீடையுடன் எதிர்நோக்கி இருப்பர். ஆனால் இன்னாளில் நீங்கள் வருவதாகச் சொன்னால் "நாங்கள் வெளியூர் செல்வதாக இருக்கிறோம். எதற்கும் டெலிஃபோன் செய்துவிட்டு வாருங்கள்" என்று கூறி தவிர்த்து விடுகின்றனர். சம்பிரதாயமான விசாரிப்புகளில் உறவுகள் அடங்கி விடுகின்றன.

உடன்பிறப்புகளிடமும், இன்னும் கொஞ்சம் தள்ளி தாயாதி, பங்காளிகளுடனும் (cousins, once or twice removed) நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதில் சில சிக்கல்கள் தோன்றுகின்றன. ஏனென்றால் அவர்கள் ஒருவித எதிர்பார்ப்புடன்தான் நம்மை அணுகுகின்றனர். உணர்வு பூர்வமாக அல்லாமல் ஒருவித இயற்பொருள் சார்ந்த (materialistic) அணுகுமுறைதான் மேலோங்கி நிற்கிறது. அதனால் காழ்ப்புணர்ச்சியும், பொறாமை, பொச்சரிப்பு போன்றவையும், உறவுகளின் அஸ்திவாரத்தையே பெயர்த்து விடுகின்றன.

சில சமயம் உறவுகள் பல கசப்பான நிகழ்வுகளுக்குக் காரணமாகி விடும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். "தலைக்கறி" தன் இலைக்கு வரவில்லை என்று சண்டையிட்டுக்கொண்டு செல்லும் மாமன்மார்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறேன். திருமணம் மட்டுமில்லாது, இழப்பு நேரங்களிலும் உறவுகளினூடே இருக்கும் பகை வெடிப்பதை கிராமங்களில் கண்டிருக்கிறேன். ஒரு குடியிருப்பில் புதுமனை புகுவிழாவின்போது அண்ணன், தம்பிகளுக்குள் அடிதடி சண்டை மூண்டதைப் பார்த்திருக்கிறேன் - அவர்களின் பெற்றோர் அவர்களில் ஒருவருக்கு அதிகமாகப் பணம் கொடுத்து விட்டார்களாம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் தலையில் அடிபட்டு மூன்று வாரங்கள் நினைவில்லாமல் ஒரு மருத்துவ மனையில் இருந்தார். நெருங்கிய உறவினர் அனைவரும் ஷிப்டு போட்டுக் கொண்டு அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்தோம். நீர்ம உணவு மூக்கில் சொருகப்பட்ட குழாய் மூலம் குறிப்பிட்ட நேர இடைவெளியில் செலுத்தப்பட வேண்டும். ஒரு நாள் இரவு ஷிப்டில் நான் அந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும்போது ஒருவர் வந்தார். அவருடைய வயதான தாயார் அடுத்த வார்டில் நினைவில்லாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். "அவருக்கு முடிந்தால் இரவில் ஒரு முறை இந்த குழாயிலிருக்கும் நீர்ம உணவை செலுத்தி விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். "முடிந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால் பரவாயில்லை" என்றும் சொன்னார்! நான் அவரிடம் வினவினேன், "உங்களைப் பெற்ற தாயார் அல்லவா, அவரை நீங்கள் அருகில் இருந்து கவனியுங்களேன்" என்று. அதற்கு அவர், "எல்லா சொத்தையும் என் தங்கைக்கே கொடுத்து விட்டார். அவள் வந்து செய்யட்டுமே" என்று "நிஷ்டூரமாக"க் கூறிவிட்டுச் சென்று விட்டார். ஆனால் அந்த "சொத்து பெற்ற சகோதரி"யோ, வாரம் ஒரு நாள் பகலில் வந்து, தாயாரின் முகத்தைக் கூடப் பார்க்காமல் நேரே நர்ஸிடம் சென்று "எப்படி இருக்கிறது நிலைமை" என்று சம்பிரதாயமான முறையில் கேட்டுவிட்டுச் சென்று விடுவார். தாய், மக்களிடனூடேயே இதுபோல் உறவு தடுமாறும் நிலைகண்டு கலங்கினேன். ஆனால் இது போன்ற நிலை இன்று வெகுவாகப் பரவி வருவதை என்னால் காணமுடிகிறது.

நீங்கள் பெரிய மனத்துடன் (அவ்விடத்து உத்தரவும் பெற்று) உங்கள் உடன் பிறப்பின் அவசியத் தேவைக்காக, (கடனோ உடனோ வாங்கி) ஒரு தொகையைக் கொடுத்துவிட்டு, நன்றியுணர்வை எதிர்பார்த்து நின்றீர்களானால், உங்களுக்கு மிஞ்சுவது ஏமாற்றம்தான். ஏனென்றால் அந்த உடன்பிறப்பினர் உங்களிடம் இதைவிட மேலதிக எதிர்பார்ப்பில் இருந்திருப்பார்! உங்கள் மனைவிக்கும் சிறிது அர்ச்சனை விழுந்திருக்கும்! "என்ன உலகமடா இது" என்று நீங்கள் அங்கலாய்க்கும் நிலை ஏற்பட்டிருக்கும்!

நான் கூடியவரையில் எல்லோராலும் அடித்துத் துவைக்கப்பட்டு, நூல்நூலாக வெளிவந்து, நைந்து கிடக்கும் சொற்றொடர்களையும், மூதுரைகளையும் (cliche`s) தவிர்க்க முயற்சிக்கிறேன், ஆனாலும் உங்கள் அனுமதியுடன், "குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை" என்கிற வசனத்தை, (வேறு ஒன்றும் இதே பொருளுடன் என் சேமிப்பில் இல்லாத காரணத்தினால்), இங்கு இட்டு விடுகிறேன். (இதற்கொத்த வேறு வசனக்கள் உங்கள் கைவசம் இருந்தால், அவற்றை பின்னூட்டத்தில் தயைகூர்ந்து தெரிவியுங்கள்.) இந்த வசனத்தின் அடிப்படை assumption, சுற்றம் என்றாலே குற்றம் இழைக்கும் என்பதுதான்! ஆனால் அதனைப் பெரிதாகப் பாராட்டினால் - அவற்றையே உங்கள் மனத்தில் மிகையாகக் கொண்டால், உறவே அற்றுப் போய்விடும் என்று இதனால் அறியப்படுகிறது.

தந்தை காலத்தில் தொடங்கிய நிறுவனங்கள் மேலோங்கி "வளர்ந்து", பின் அடுத்த சந்ததிகள்தம் சண்டையில் "தளர்ந்து" போன பல காட்சிகளை நாம் அன்றாடம் காண்கிறோம். அம்பானிகளே இதற்கு சாட்சி! மேலும் பல குடும்பம் சார்ந்த அமைப்புக்களிலும் இதே நிலைதான்.

சரி, உறவுகளை கொண்டாடுவதே ஒரு பிரச்னையான விஷயம் என்பதை விலாவாரியாகப் பார்த்தோம். உறவுகள் வேண்டுமா, வேண்டாமா? இன்றைய சூழ்நிலையில் இது போன்ற உறவுகள் பேணப்பட வேண்டியவையா? அதான் நண்பர்கள் உள்ளனரே, போதாதா - என்று கேட்கலாம். ஆனால், அந்த உறவே நட்பாகும் போது எவ்வளவு நன்மைகள் உண்டாகும் என்பதை சிந்திக்க வேண்டும். உங்கள் மனைவி (கணவன்), பிள்ளைகள் போன்றோரும் உறவுகள்தான், அவர்களும் உங்கள் உறவுகளின் நீள அகலத்தைப் பெருக்குகிறார்கள் என்பதை மறக்காதீர்கள்.

முன்னொருநாள் எங்கள் நிறுவனத்தில் நுகர்வோரை எதிர்கொள்ளும் திறன் பற்றிய கருத்தரங்கம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் பங்கு பெற்ற மனவியல் பேராசிரியர் ஒருவர், உறவுகளின் மேன்மைகள் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரை இடைமறித்து ஒரு அதிகாரி அடிக்கடி உறவுகள் ஒரு மாயை, அவைகளால் உண்டாவது துன்பமே என்று வாதிட்டுக் கொண்டிருந்தார். அவர் மனதில் ஏதோ ஆறாத வடு இருக்கிறது எனக்கண்டுகொண்ட அந்த பேராசிரியர் அவரிடம் அது பற்றி ஆழ்ந்த விசாரணை நடத்தினார். அந்த அதிகாரிக்கு அவருடைய தம்பியுடன் கடந்த பத்து வருடங்களாக பேச்சுவார்த்தை யில்லை. ஏதோ மனஸ்தாபம் - ஒன்றிலிருந்து மற்றொன்று என்று அது கப்பும் கிளையுமாகப் பெரிதாகி, இரு குடும்பங்களுக்குமிடையே யாதொரு தொடர்புமின்றி அறுபட்டுக் போயிற்று. இந்த விவரமெல்லாம் அவர் கூறுகையில், தவறு முழுவதும் அவருடைய தம்பியின் மேல்தான் என்ற முறையில் அடுக்கிக் கொண்டு போனார். இது உலக இயல்புதான் என்றாலும் அவருடைய கூற்றில் கொஞ்சம் conviction கம்மியாயிருந்தது போல் பட்டது!

அவர் மனத்தில் உள்ளதையெலாம் கொட்டியபின், அந்தப் பேராசிரியர் அவரை நோக்கி, "உங்கள் தம்பியை ஒருமுறை தொலைபேசியில் அழையுங்களேன்" என்றார். அவரோ வெகுண்டு, "நான் ஏன் அழைக்க வேண்டும்? தவறு செய்தது அவன்தான். அவன் என்னிடம் மன்னிப்புக் கேட்கும் வரையில் எந்தவொரு தொடர்பும் கொள்ள மாட்டேன்" என்றார். பேராசிரியரோ பிடிவாதமாக, "தவறு அவருடையதாகவே இருக்கட்டும். நீங்கள் வாழ்க்கையில் இவ்வளவு முன்னுக்கு வந்திருக்கிறீர்கள். இது உங்கள் பெருந்தன்மையின் அடையாளமாக இருக்கட்டும். சும்மா கூப்பிட்டு 'ஹலோ' சொல்லுங்கள். போதும்" என்றார். நாங்களும் கோரஸாக அவரை ஊக்குவித்தோம். நம்பர் தெரியாது என்று தவிர்க்கப் பார்த்தார். அவருடைய குடும்ப நண்பர்கள் மூலமாக எப்படியோ அவருடைய தம்பியின் மொபைல் எண் கிடைத்தது. ஒரு மாதிரி தயக்கத்துடன் அவர் எண்களைத் தட்டினார். அவருடைய கைகள் நடுங்குவது எல்லோருக்கும் தெரிந்தது. "ஹலோ" என்று கிணத்தடிக் குரலை அனுப்பினார். பின், "பையா" என்றார் உடைந்த குரலில். அவ்வளவுதான்! அவர் கண்களில் நீர் பொங்கியது. அவர் கையிலிருக்கும் மொபைல் கருவியையே அவருடைய உடன்பிறப்பு போல் பாவித்து அதனை அணைத்துக் கொண்டு அந்த அரங்கத்தை விட்டு வெளியேறினார். அரைமணிநேரம் கழித்து திரும்பி வந்தவர் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி அவர் பெற்ற உறவின் மீட்சியைக் கொண்டாடினார்! உறவுகள் மேம்பட நம் மனத்தில் கொண்டுள்ள அழுக்குகளை அகற்றினாலே போதும்!

இதைத்தான் வள்ளுவர்,

 தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
 காரணம் இன்றி வரும்.

என்று கூறுகிறார். பிரிந்துபோனதன் காரணங்கள் விலகியபின் சுற்றம் ஒட்ட வேண்டியதுதானே!

நான் முன்பே கூறியது போல் உறவினர்களுடன் ஒப்பிட்டுக் கொண்டிராமல் அவர்களை "as is where is" நிலையில் அணுகுங்கள். நம் இரத்த சம்பந்தமான உறவுகளானாலும் சரி, மணம் புரிந்து கொண்ட வகையில் ஏற்பட்ட உறவுகளானாலும் சரி, சமமாகப் பாவித்து நேர்மையுடன் நடந்து கொள்ளுங்கள். உங்கள் நியாய உணர்வு உறவினர்கள்பால் பெரும் மதிப்பை ஏற்படுத்தும். அவர்களுக்கு உங்களாலான உதவிகளைச் செய்யுங்கள். கைம்மாறு எதனையும் எதிர்பார்க்காதீர்கள்.

உறவினர்களின் பிறந்த நாள், திருமண நாள் முதலியவற்றை நினைவில் வைத்து வாழ்த்துத் தெரிவியுங்கள். முடிந்த வரை ஏதாவது பரிசளியுங்கள். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்குப் பிடித்தமான பொருட்களைக் கொடுங்கள். அவர்கள் அவற்றை பயன்படுத்தவில்லையே என்று கவலைப் படாதீர்கள். உங்கள் பிள்ளைகள் நீங்கள் வாங்கிக் கொடுக்கும் பொருட்கள் பலவற்றை தனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வதில்லையா, அது போன்ற சுதந்திரத்தை உறவினர் பிள்ளைகளுக்கும் அளியுங்கள்.

எந்தவித உறவும் செழிப்பதற்கு சில சிறிய தியாகங்களைச் செய்ய நாம் தயாராயிருக்க வேண்டும். "கொள்வதற்கே என் கைகள். கொடுப்பதற்கல்ல" என்ற கோட்பாட்டுடன் இருந்தால் சுற்றமாவது, புடலங்காயாவது! ஆறடிதான் சொந்தம்! "இணைய குசும்பர்" ஒருமுறை எனக்கிட்ட மறுமொழியில் குறிப்பிட்டபடி, "என்னத்தை வாரிக்கட்டிடப் போறோம்", இருக்கிறவரை நல்லபடியா நம் சுற்றங்கள் தழைத்திருக்க நம்மால் முடிந்ததை செய்து விட்டுப் போவோமே! "நெருநல் உளனொருவன் இன்றில்லை" என்கிற நிலையில்,

 ஆறடிக்கு ஆட்டம்போட்ட நம்பரு - மூச்சு
 அடங்கிப்பூட்டா எல்லாமிங்கே சைபரு.

 ஆட்டங்காட்டி துள்ளுகிற டெம்பரு - ஆவி
 அடங்கிப்புட்டா எலக்கடை டிம்பரு!
 
 அப்படிச் சொன்னது நானா? - இல்லை,
 ஆசாத்பாய் கானா! 

சிறு வயதில் சகோதரர்கள்பால் நம் மனதில் தோன்றும் அன்புணர்ச்சியை, வயதான பின்னும் மேன்மேலும் வளர்த்துப் பேணுதல் வேண்டும். When the chips are down எனப்படுகிற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நம் உடன்பிறப்புக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. நீங்களே கூறுங்கள், உங்கள் சகோதருக்கு ஒரு தீங்கு என்றால் உங்களால் நிம்மதியாக இருக்க முடியுமா - மனத்தின் ஏதாவது ஒரு மூலையில் உறுத்துகிறதா இல்லையா!

 சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
 பெற்றத்தால் பெற்ற பயன்.

என்ற வள்ளுவர், மேலும் சுயநல நோக்கில்லத, அன்பு மாறாத சுற்றத்தவர் அமையப் பெற்றால் ஏற்படும் ஆக்கங்களைப் பற்றி இப்படி எடுத்துறைக்கிறார்:

 விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
 ஆக்கம் பலவும் தரும்.

கொஞ்சம் "விட்டுக் கொடு"த்தால்தான் உறவு வளரும். ஆனால் உறவினருக்கு ஒரு நெருக்கடி வருங்கால் அவர்களை "விட்டுக் கொடு"க்காதீர்கள்!

"ஒரு முஸ்லீம் தமது சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுக்கலாகாது. இருவரும் சந்திக்கும்போது அவர் இவரைப் புறக்கணிக்க வேண்டாம். அவ்விருவரில் யார் ஸலாமைக் கொண்டு முந்துகிறாரோ அவரே அவ்விருவரில் சிறந்தவர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவுறை கூறியிருக்கிறார்கள்.

சுற்றமும் நட்பும் சூழ்தரச் சிறந்து, நல்ல மனம் கொண்டு, தொண்டு பல செய்து, இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழிய நீவிர்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஒரு கிராம் இமேஜ் - எஸ்.கே - {JAN - 06 - 05}  
  நம் நாட்டின் சரித்திரத்தில் ஜவஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர் இருவரும் மிகப் பிரபலமானவர்கள், மக்களால் பெருமளவில் விரும்பப் பட்டவர்கள், துதிக்கப் பட்டவர்கள். இவர்களின் பெயர் மட்டுமே மக்கள் மனத்தில் பெரும் உணர்வெழுச்சியை உண்டாக்கும் வல்லமை பெற்றது.
http://www.tamiloviam.com/unicode/01060505.asp
Expand / Collapse
 

உங்கள் மனத்தில் உங்களைப் பற்றிய கணிப்பு என்னவாக இருந்தாலும், பிறர் மனத்தில் உங்களைப் பற்றி எவ்வகைப் பதிவு உள்ளது என்பதைப் பொருத்துத்தான் இவ்வுலகில் உங்கள் வெற்றி அமையும் என்று என் முந்தைய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். அது போல் பிறரால் கணிக்கப் பட்டவைகளில் சில உண்மைக்குப் புறம்பாக இருந்தாலும் , அதுதான் உங்களை இவ்வுலகிற்கு அடையாளம் காட்டும் வண்ணம் அமைகிறது என்பதால் அவற்றை நீங்கள் பொருட்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.

நம் நாட்டின் சரித்திரத்தில் ஜவஹர்லால் நேரு, எம்.ஜி.ஆர் இருவரும் மிகப் பிரபலமானவர்கள், மக்களால் பெருமளவில் விரும்பப் பட்டவர்கள், துதிக்கப் பட்டவர்கள். இவர்களின் பெயர் மட்டுமே மக்கள் மனத்தில் பெரும் உணர்வெழுச்சியை உண்டாக்கும் வல்லமை பெற்றது.

இவர்கள் எவ்வாறு இந்த அளவுக்கு பாபுலாரிடியைப் பெற்றார்கள் என்று சற்றே ஆராய்ந்தோமானால், அத்தகைய நிலை தன்னிச்சையாகத் தோன்ற வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது. அத்தகைய பெருமையை அடைய வேண்டுமானால் அதற்கான சிறப்பு முயற்சியை மேற்கொண்டு, அதற்கேற்ற உழைப்பை அளிக்க வேண்டும்.

மேற்கூறிய இருவரும் systemmatic-காக தங்களைப் பற்றிய ஒரு உயர் நிலை உணர்வினை மக்கள் மனத்தில் பதித்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அத்தகைய படிவத்தை உரம் போட்டு, நீரூற்றி வளர்த்தும் வந்திருக்கிறார்கள். அவர்களின் பெருமைகளை நான் குறைத்துச் சொல்லவில்லை. ஆனால் தகுதி பெற்ற அனைவருமே தக்க பெருமை பெறவில்லை என்ற உண்மையை யாரும் மறுக்க முடியாது. அதனால் தகுதி, சாதனை இவற்றைத் தாண்டி இன்னொன்று தேவைப் படுகிறது என்பதைப் பற்றித்தான் இப்போது உரையாடிக் கொண்டிருக்கிறோம்.

இத்தகைய முயற்சிக்கு முழுமுதல் தேவை - மனித மனத்தின் இயல்புகள், செயல்பாடுகள், நிறைகுறைகள் (idiosyncrasies, susceptibilities, propensities, thought process and patterns of behaviour) முதலியவற்றைப் பற்றிய முழுப் புரிதலும் உங்கள் வசப் பட்டிருக்க வேண்டும். எந்த வகையில் அணுகினால் மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினை ஏற்படும் என்பதைக் கண்டு கொண்டு, அதற்கேற்றதொரு தோற்றத்தை மக்கள் கண்முன் அளிக்க வேண்டும். இந்தக் கலையில் அவர்கள் இருவரும் முழுத் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்கினார்கள் என்பது திண்ணம்!

ஜவஹர்லால் நேருவை எடுத்துக் கொண்டால் அவர் உடை உடுத்துவதில் ஒரு தனித்துவம் பெற்ற ஸ்டைலை மேற்கொண்டார். பளீரென்ற உடை, குல்லாய், ரோஜாப்பூ, சிரித்த முகம் இவை நேருவை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. அவர், திறமை வாய்ந்த செய்தி ஒருங்கிணைப்பாளர்கள் உதவியால் செய்தித் தாள், வானொலி முதலிய ஊடகங்களில் தன்னைப் பற்றிய  படிமம் எப்போதுமே positive-ஆக இருக்கும்படி கவனித்துக் கொண்டார். நம் நாடு விடுதலை பெற பலர் பலவித தியாகங்கள் செய்திருந்தாலும், தன்னலமில்லா உழைப்பை அளித்திருந்தாலும், எல்லோருமே நேரு பெற்ற பெயரைப் பெறவில்லையே! அவரைச் சுற்றி இருந்தவர்கள் தவறு செய்ததாக அறியப் பட்டலும், அதில் சிறிது அழுக்கு கூட நேரு மேல் ஒட்டாது பார்த்துக் கொண்டார்கள். கஷ்மீர் விஷயத்திலும், சீனாவுடனான அணுகு முறையிலும் பெரியதொரு blunder-களை அவர் இழைத்திருந்தாலும், அவருடைய படிமம் அவரைக் காப்பாற்றியது. அவரும் தனக்கு வேண்டிய சிலரை ஏற்றியும், வேண்டாத பலரை காவு கொடுத்தும் தன்னிலையைக் காத்துக் கொண்டார். இன்று வரை நேரு என்றொரு காந்த சக்தி நம்மை ஆட்கொண்டிருக்கிறது!

எம்.ஜி.ஆர் தன் இமேஜை சினிமா மூலம் மிக்க அறிவாற்றலுடன் வளர்த்துக் கொண்டார். அவர் ஒரு போதும் அண்ணனாக நடிக்கமாட்டார். ஏழை பங்காளனாகவே தோன்றுவார். திரையில் தோன்றும் எம்ஜியார் புகை பிடிக்க மாட்டர், மது அருந்த மாட்டார். அவர் ஏழையாகத் தான் நடிப்பார். ஆனால் பணக்காரப் பெண் ஒருவர் அவரைச் சுற்றுவார். அவர் ஏற்கும் பாத்திரங்கள் நற்குணங்களின் முழு உருவகமாக இருக்கும். அவர் தோன்றும் திரைப்படத்தின் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் நுணுக்கமாகக் கவனித்து, தன் இமேஜுக்குக் குந்தகமில்லாமல் பார்த்துக் கொள்வார். பலர் அவரைவிடக் கூடவே தான தருமங்கள் பல செய்திருக்கலாம். ஆனால் எல்லோரும் பொன் மனச் செம்மல் ஆகி விட மிடியாது!

ஆகையால் நாம் எல்லோரும் நம் இமேஜை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிக்க அவசியம். நீங்கள் மிகுந்த தகுதி பெற்றவர்களாக, அறிவுள்ளவராக இருக்கலாம். ஆனால் மற்றவர் மனதில் இடம் பெற வேண்டாமா?

சரி, அதற்கு என்ன செய்ய வேண்டும்? பொதுவான சில செயல்முறைகளைப் பார்ப்போம்.

1. What is invisible, does not exist என்று சொல்வார்கள். மற்றவர் கண்முன் நீங்கள் பெருமை வாய்ந்தவராகத் தோன்ற வேண்டும். உங்கள் மேல் சிறிது வெளிச்சம் படும்படி பார்த்துக் கொள்ளுங்கள். உங்களை முன்னிருத்திக் கொள்ளுங்கள். தொட்டார்ச் சுலுங்கி போல் கூச்சப் பட்டு ஒதுங்காதீர்கள். You can't be in the limelight, if the spotlight is away from you!

2. உங்கள் சாதனைகள் தானாகப் பேசாது. நீங்கள்தான் அவற்றைப் பறை சாற்ற வேண்டும். நீ உன் கடமையைச் செய், அதன் பலனும், பெருமையும் தானாக வரும் என்கிற பழைய பஞ்சாங்கத்தை நம்பாதீர்கள். உங்கள் புலனுக்குப் புலப்பட்டதைத் தானே நீங்கள் கைக்கொள்கிறீர்கள். எங்கே என்ன இருக்கிறது என்று அகழ்வாராய்ச்சி செய்தா ஒவ்வொன்றையும் வாங்குகிறோம்? எது ஊடகங்கள் மூலமாக, அடுத்தவர் பரிந்துரை மூலமாக அறியப்படுகிறதோ, அவைதான் நம் மனத்தை ஆள்கிறது. அது போல் நாமும் ஒரு செலாவணியில் இருக்க வேண்டிய பொருள் (commodity). அதை நாம்தான் முன்னிறுத்தல் வேண்டும்.
Substance and packing - both are important! மற்றவர் வேண்டி, விரும்பி ஏற்றுக் கொள்ளும்படியாக உங்கள் திறனை வெளிக்காண்பிக்க வேண்டும்.

3. அடுத்தவரிடம் உரையாடும்போது சிறுபிள்ளைத் தனமாக (flippant and frivolous) இருக்காதீர்கள். உங்கள் மேல் மதிப்பு  குறைந்துவிடும். சீரியஸில்லாத ஆசாமியாகக் கணித்து விடுவார்கள்.

4. உங்களைப் பற்றிய பெருமைகளை நீங்கள்தான் வெளிச்சம் போட்டுக் காண்பிக்க வேண்டும் என்று கூறினேன். அதற்காக யாரிடமும், எப்போதும் உங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தால் உங்களை ஒதுக்கி விசுவார்கள். எதிலும் ஒரு அளவு, நிதானம் (moderation) தேவை. ஒருவர் தன் வீர சாகசத்தை மீண்டும் மீண்டும் முழங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு என்ன ஆயிற்று பாருங்கள் :-

Once got a cheer
Twice a deaf ear
Thrice a kick in the rear!

தற்பெருமை சிறிது தேவைதான். நீங்கள் சொல்லித்தானே ஏனையோர் உங்களைப் பற்றி அறிய முடியும். ஆனால் அதை நுணுக்கத்துடன், அளவோடு (subtle) செய்ய வேண்டும்.

5. உங்களை நீங்களே ஒரு போதும் குறைத்துப் பேசாதீர்கள். முத்து ஐயர் அவர்கள் வெண்பா வடிவில் செய்துள்ள கீதையின் தமிழாக்கத்தில், இதையே வலியுறுத்துவதைக் காணுங்கள்: (நன்றி: ரா.கா.கி அன்பர். எஸ். பசுபதி)

 தன்னாலே தன்னை உயர்த்திடுக தன் நிலையில்
 தன்னை இழித்தல் தகவன்றே - முன்னில்
 தனக்கொருவன் தானே உறவாவான் ஆங்கே
 தனக்கொருவன் தானே பகை.   (த்யான யோகம் :: ஸ்லோகம் : 5)

6. எங்கு சென்றாலும் அவ்விடத்தில் நீங்கள் நற்பெயரையும் நன் மதிப்பையும் விட்டுச் செல்ல வேண்டும் (leave a lot of good-will). வாழ்க்கையில் நீங்கள் பெறும் வெற்றி, நீங்கள் எவ்வாறாக ஏனையோரால் நினைவில் கொள்ளப்பட விரும்புகிறீர்கள் (what you want to be remembered for) என்பதைப் பொருத்து அமையும் என்கிறார், மேலாண்மைத் துறையில் வல்லுனரான டாம் பீட்டர்ஸ் என்பவர். இதையேதான் வள்ளுவர்,

 தக்கார் தகவிலர் என்ப தவரவர்
 எச்சத்தாற் காணப்படும்

என்று கூறுகிறார்.

7. உங்கள் உரையாடல் நகைச்சுவையுடன் இருத்தல் வேண்டும். அதனால் இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து எளிதில் விடுபடலாம். உங்களைச் சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். மேலும், பெண்கள் பெரும்பாலும் நகைச்சுவை உணர்வுள்ள ஆண்களையே அதிகம் விரும்புவதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஜாதி, இனம், மதம், செக்ஸ் இவைகளைப் பற்றிய ஜோக்கு களைத் தவிருங்கள்.

8. நீங்கள் சந்தித்து கைகுலுக்கும் அனைவருடைய பெயரையும் கட்டாயம் நினைவில் இருத்திக் கொண்டு, விடை பெறும்போதும் , அடுத்த முறை சந்திக்கும் போதும் அவர்களை பெயரிட்டு மரியாதையுடன் விளியுங்கள். அவர்கள் மனது மிகவும் மகிழ்ச்சியுறும். ஏனெனில், ஒருவரின் பெயர்தான் அவர் கேட்க விரும்பும் அனைத்துச் சொற்களிலும் இனிமையானது! (Dale Cornegie in "How to win friends and influence people")

9. பிறரிடம் பேசும்போது அவர்களின் கண்ணை நோக்கிப் பேசுங்கள் (make eye contact). அப்போதுதான் நீங்கள் நம்பிக்கையானவர் என்ற எண்ணம் ஏற்படும்.

10. உங்கள் உடல் சுத்தம் ரொம்ப முக்கியம். Personal hygiene-ன் முக்கியத்துவத்தை பள்ளிகளிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும். நன்கு குளித்து விட்டுத்தான் நேர்காணல் முதலிய முக்கியமான நிகழ்ச்சிகளுக்குச் செல்ல வேண்டும். "கனவான் வருவார் பின்னே, "கப்பு" வீசும் முன்னே" என்றிருக்கக் கூடாது. ஏதேனும் முக்கிய நிகழ்ச்சிக்குப் போகும் முன், அல்லது முக்கிய நபரைச் சத்திக்கு முன், ஒரு முறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் முதலில் அதைத்தான் "ஈ"யென்று காண்பிக்கிறோம். அதில் முதல் நாள் சாப்பிட்ட போண்டாத் துணுக்குகளுடன் பல்லின் மேற் பரப்பில் சகாயமாகப் படர்ந்த மஞ்சற் பாசியுடனும் சென்று ஒருவரை சந்தித்தால் உங்களைக் கண்டு காத தூரம் ஓடுவார்!

11. "நாற்ற விரட்டிகளைப்" பயன் படுத்தினால் அவையே கடுமையான நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டும். Use unscented deodorants. என் அறைக்குள் நுழையும் பலர் மூட்டை பூச்சி வாசம் கொண்ட பிசினைப் பூச்சிக்கொண்டு வருகிறார்கள். அவர்களை ஒரு அறை விடலாமா என்ற எரிச்சல் வரும்!

12. செண்ட் பூசிக் கொண்டு முக்கிய நிகழ்ச்சிகளுக்கு செல்லாதீர்கள். பலருக்கு அவை ஒவ்வாததாக இருக்கும். நம்மில் சிலர் குளிக்கிறார்களோ இல்லையோ முனிசிபாலிடி பினாயில் மாதிரி காட்டமான சென்டின் முழு பாட்டிலையும் கவிழ்த்துக் கொண்டு வந்து நிற்பார்கள். இவர்களின் இமேஜ் எப்படி இருக்கும்!

13. சுருக்கங்களற்ற, மரியாதையான, மடிப்புள்ள, நேர்த்தியான, உங்கள் உடல் வாகுக்கு ஏற்றதான, கறைகள் மற்றும் அழுக்குக் கீற்றுக்களற்ற உடைகளை அணிந்து கொண்டு பொது இடங்களுக்கும், முக்கிய விழாக்களுக்கும் செல்லுங்கள். எல்லா பொத்தான்களையும் போட்டுக் கொள்ளுங்கள். சில சினிமா பிரபலங்கள் டி.வியில் சட்டையின் மேல் பொத்தான்களைத் திறந்து விட்டுக் கொண்டு பந்தா பண்ணுவதைப் பார்த்து விட்டு நீங்களும் அதேபோல் செய்யாதீர்கள். உங்கள் இமேஜ் கெட்டு விடும். பளபளப்பான, பகட்டான, பைத்தியக்காரனின் தோற்றத்தை ஏற்படுத்தும் (flashy, trendy, psychedelic dresses) உடைகளைத் தவிருங்கள். முக்கிய நபரை சந்திக்க செல்லும்போது காஷுவலாக டீ-ஷர்ட், செருப்பு சகிதம் செல்லாதீர்கள். Formals for formal occasions. தலையில் மொட்டை, காதில் வளையம், மெகா சைஸில் குத்திய பச்சை (Tattoo) - இந்தக் கோலத்தில் ஒரு ஆண் உங்களிடம் வந்தால் உங்கள் கணிப்பு என்னவாக இருக்கும்?

14. சரியாக தலை வாரி, பெண்களானால் முடி "பப்பரக்கா" என்று பரக்காமல் பின்னி, உங்கள்பால் மரியாதையைத் தோற்றுவிக்கும்படி வெளிக் கிளம்புதல் வேண்டும். பகட்டான நகைகளை அணிய வேண்டாம். அதே போல் sexy-யான உடைகளும் ஒரு negative இமேஜைக் கொடுத்து விடும். நான் என் இஷ்டப்படிதான் டிரெஸ் செய்து கொள்வேன் என்று நீங்கள் கூறலாம். ஆனால் அதன் பின் விளைவினால் உங்களுடைய குணம், இயல்பு பற்றிய தவறான புரிதல் இன்னொருவரிடம் - அதிலும் மிக முக்கியமானவரிடம், உங்களுக்கு யாரிடம் காரியம் ஆக வேண்டுமோ அவரிடம் - எற்பட்டால் நஷ்டம் உங்களுக்குத் தானே!

15. கூடியவரை நீங்கள் நல்ல உடல்நிலை பெற்றவராக, ஆரோக்கியமானவராக அறியப்படல் வேண்டும். கடுமையான ஜலதோஷம், இருமல் முதலிய உபாதைகள் இருக்கும்போது பொது நிகழ்ச்சிகளைத் தவிர்த்தல் நலம். அப்படி இயலாவிட்டால், சோர்வைத் தரும் anti-histamine போன்ற மருந்துகளை உள்ளிட்டு விட்டு பொது நிகழ்ச்சிகளிலும், நேர்காணலிலும் பங்கெடுக்காதீர்கள். எட்டு ஊருக்கு நாறும் பச்சிலைப் பற்றுடனும் செல்லாதீர்கள். கையில் கைக்குட்டை, டிஷ்யூ முதலியவற்றை கட்டாயம் வைத்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் கோழையைக் காறித் துப்பாதீர்கள் - உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று ஓடிப் போய்விடுவார்கள்.

16. பந்தா, உதார் இல்லாமல் உரையாடுங்கள். கத்திப் பேசினால் மதிப்பு போய்விடும். வாய் துர் நாற்றம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். Mouth freshener, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை பயன் படுத்துங்கள். உரையாடலில் எல்லோருக்கும் பங்கெடுப்பை அளியுங்கள். "நன்றி", "வணக்கம்", "Good morning", "good bye" முதலியவற்றை அவ்வப்போது உரைத்தல் உங்களிடம் மதிப்பை ஏற்படுத்தும்.

17. இன்னொருவருக்கு ஒரு inferiority complex, jealousy இவை உங்களால் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஈகோவை மிதித்து விட்டால் ஜன்மத்துக்கும் உங்களைப் பற்றிய இமேஜ் கெட்டுவிடும்.

18. உங்கள் நடை, உட்காரும் தோரணை, பேசும் முறை, சாப்பிடும் நாகரிகம், தவறு நேர்ந்தால் உடனே மன்னிப்பு கேட்கும் பண்பு, இணக்க மில்லாத அல்லது மலைப்பூட்டுகிற சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு அணுகுகிறீர்கள், எப்படி சமாளிக்கிறீர்கள் போன்றவை உங்கள் இமேஜை நிணயிக்கின்றன (benchmarks). உங்கள் நடையில் தன்னம்பிக்கையுடன் கூடிய ஒரு தீர்மானம், நிமிர்வு, நேர்கொண்ட பார்வை முதலியவை இருத்தல் வேண்டும்.

19. பொதுவாகவே ரிலேக்ஸ்டாக, நிதானத்துடன், ஒரு புன் சிரிப்புடன், தன்னம்பிக்கை ஒளி வீச பிரச்னைகளை அணுகுகிறவர்கள்தான் பெரிதும் பிறரால் விரும்பப் படுகிறார்கள். பதட்டப் படுபவர்களையும் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு "கோ" வென்று கூச்சலிடுபவர்களையும் உலகம் மதிப்பதில்லை.

20. உங்கள் மதிப்பு மிக்க நடை, உடை பாவனையினாலும், உங்கள் அணுகு முறையினாலும் உங்களைச் சுற்றி ஒரு காந்த அலை வீச வேண்டும். அதில் கட்டுண்டு பிறர் கிடக்க வேண்டும்!

21. ஒரு ஏழு செகண்டு நேரத்தில் ஏனையோர் உங்களை எடை போட்டு விடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதை மனத்தில் இருத்திக் கொள்ளுங்கள். You'll have no second chance to make a first impression என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு நாளையும் நல்ல உயர்வான எண்ணங்களுடன் தொடங்குங்கள். தன்னம்பிக்கையுடன் உலகை எதிர் கொள்ளுங்கள். வெற்றி உங்களுக்கே!

"ஒரு கிராம் இமேஜ், ஒரு கிலோ சாதனையை விட பல மடங்கு சிறந்தது!"

- லாரன்ஸ். ஜே. பீட்டர். (அலகு மாற்றத்துடன்!)

 


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : வாதம் விவாதம் - எஸ்.கே - {DEC - 30 - 04}  
  இப்போது இண்டெர்நெட் என்கிற அகண்ட, பரந்த விரிந்த வலையுலகத்தில் மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் மடலாடற்குழுமங்கள், சர்ச்சை மன்றங்கள், வலைப்பூக்களின் கருத்துப் பெட்டிகள், வலை இதழ்கள் முதலியவை கூட இந்த விவாதம் செய்யும் உந்துதல் நோய்க்கு நிறைய தீனி போடுகின்றன.
http://www.tamiloviam.com/unicode/12300405.asp
Expand / Collapse
 

 

கமலா, ரஜனியா?
திமுகவா, (அஇ)அதிமுகவா?
காங்கிரஸா, பிஜேபியா?
இந்து மதமா, இஸ்லாம் மதமா?
ஆணாதிக்கமா, பெண்ணுரிமையா?

இப்படி ஏதாவது தமக்கு சம்பந்த மில்லாத பிரச்னைகள் பற்றி ஓயாமல் விவாதம் செய்து கொண்டு பொழுதையும் வீணடித்து, வம்பையும் விலைக்கு வாங்கி வருவோர் பலர் நம்மிடையே இருக்கிறார்கள். ரயில் பிரயாணங்களிலும், வேறு பல பொது இடங்களிலும் பலர் இந்த வெட்டி வாதங்களில் ஈடுபட்டு கசப்பான விளைவுகளைச் சந்திக்கின்றனர். ஒரு பழைய திரைப்படத்தில் இரு சமையல்காரர்கள், "பாகவதரா, சின்னப்பாவா" என்று தீவிரமாக வாதம் செய்து, பேச்சு முற்றிப் போய் கடைசியில் அவர்களில் ஒருவர் தன் கையில் இருக்கும் பெரிய சட்டுவத்தால் மற்றவரின் தலை மேல் அடித்துக் கொன்று விட்டார். இந்த விவாதப் பேய் உங்களை உணர்ச்சி வசப்பட வைத்து, சிந்தனை செய்து முடிவெடுக்கும் திறனை மழுங்கடித்து, தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பது திண்ணம். இதனால்தான் பல சிகை அலங்கார நிலையங்களில், "இங்கு அரசியல் பேசாதீர்கள்" என்று போர்டு வைத்திருக்கிறார்கள்!

ஒருவர் தன் மனதில் ஒரு தீர்மானமான நிலைப்பாட்டை கொண்டவராக இருந்தால் அதனை எப்பாடு பட்டாவது நிலை நாட்டத்தான் பார்ப்பார். எவ்வளவு செய்திகளையும், காரணங்களையும் முன் வைத்து மணிக்கணக்காக விவாதம் செய்தாலும், அவர் தன் நிலையிலிருந்து மாறப் போவதில்லை. கடைசியில் கசப்பு உணர்வு தான் மிஞ்சும். பின் ஏன் இந்த வீண் விவாதம்?

இந்த விஷயத்தில் உளவியல் சார்ந்த உண்மை ஒன்று உள்ளது. ஒருவர் தன் மனத்தளவில் கொண்டுள்ள வாதத்தினுள் தன்னையே (தற்குறிப்பேற்றி) உருவகப் படுத்திக் கொள்கிறார் (Personification). அதனால் அந்த விவாதத்தில் அவருடைய நிலையை யாராவது எதிர்த்து வாதாடினால், அவர் தன்னையே எதிர்ப்பதாக எண்ணி உணர்ச்சி வசப்படுவார். அதில் அவருடைய ஈகோ உணர்ச்சிகள் எழுச்சியுருவதால், சம நோக்கில் எந்த விதமான வாதங்களையும் மனதில் வாங்கி சீர்தூக்கும் மன நிலையை இழந்து விடுவார். ஆகையால் தான் பெரியோர்கள் வாதப் பிரதி வாதங்களை தவிருங்கள் என்ற அறிவுறையை நமக்கு போதிக்கிறார்கள்.

வாதத்தில் வென்றாரே தோற்றார் ஏனெனில்
அதில் விஞ்சிய மனக்கசப்பைக் காண்.

என்கிறார் ஒரு மனத்தத்துவ அறிஞர்.

ஒருவர் அவர்தம் எண்ண ஓட்டத்துக்கு விரோதமாக, அவருடைய ஒப்புமை யில்லாமல், உரத்து (அடித்து, தடித்து) உரைக்கப் பட்டு அல்லது வேறுவகை மேலாண்மை காரணங்களால் ஒருவகை வாதத்தினை ஒத்துக் கொள்ள வைக்கப் பட்டாலும், தன் வாழ்நாள் முழுவதும், அவர் தன் நிலைப்பாடே முழுவதும் சரி. அநியாயமாக சூழ்நிலைக் கட்டாயத்தால் தான் மாற்றுக் கருத்தை ஒத்துக் கொள்ள வைக்கப் பட்டதாகவே நம்புவார். அவர் மனம் என்றாவது தான் கொண்ட நிலையே சரியானது என்பதை மெய்ப்பிக்க முடியுமா என்று, அத்தகைய வாய்ப்புக்காகக் காத்திருப்பர். (A man convinced against his will, is of the same view still!). ஒரு கனவன், தன் மனையை இவ்வாறு அடக்கி, அவள் செய்தது தவறு என்று ஒப்புக் கொள்ள வைத்தானாகில், என்றாவது ஒரு நாள், அவன் வாதம்தான் தவறு என்பதை சுட்டிக் காட்டாமல் விடமாட்டாள் என்பது திண்ணம்!

சில நேரங்களில் ஏதாவது பொருள் பறறிய விவாதங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது ஆக்க பூர்வமான வாதமாக இருத்தல் வேண்டும். அவை "debate" என்கிற வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமே யல்லாது "argument"-ஆக அமையக்கூடாது. தன் கருத்துக்களை எடுத்துரைக்கும் போது உணர்ச்சி வசப்படாமல், fact-களை முன் வைக்கவேண்டும் - உங்கள் தீர்மானம், நம்பிக்கை, அயிப்பிராயம் இவைகளை அல்ல! தக்க எதிர்வினைகள் அகப்பட வில்லையென்பதற்காக தனி நபர் வசைபாடலில் ஈடுபடக் கூடாது. மேலும், அந்த விவாதம், எடுத்துக் கொண்ட பொருளைப் பற்றி இருக்கவேண்டுமே யல்லாமல், அதில் ஈடுபடும் தனிநபர் பற்றியதாக இருக்கக் கூடாது. "Argumentum ad hominem" என்பதைத் தவிர்த்தால் நலம்!

நம் குடும்பத்திலோ, அல்லது நண்பர்களுடனோ ஒரு சாதாரண உரையாடல், பேச்சு தடித்தனால் கடும் விவாதமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டால், அதில் ஒருவர் சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு வெளியேறுதல் நலம். அல்லது ஏதாவது ஜோக் அடித்து நிலைமையை லேஸாக ஆக்குதல் வேண்டும். மனங்கள் முறுக்கிக் கொண்டு நிற்றலை தவிர்க்க வேண்டும்.

பல குடும்பங்களில் தம்பதிகள் வாழ்நாள் முழுவதும் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வாதம் செய்து கொண்டே இருப்பர். பேரன், பேத்தி எடுத்த பிறகும் கூட ஓயாமல், தான் செய்தது தான் சரி என்று இருவரும் வாதிட்டுக் கொண்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதிலும், பிறந்த வீடு, புகுந்த வீடு மேட்டரில் விவாதம் ஓயவே ஒயாது!

அவ்வாறு நெருங்கிய உறவுக்குள் ஏற்படும் விவாதங்களை சரியான அணுகு முறையால் சமச் சீரான முடிவுக்கு கொண்டு வரவில்லையெனில் உறவுகள் நாடைவில் முறிந்து விட ஏதுவாகும். சில சமயம் உடல் நிலை, மன அழற்சி, வேறிடத்தின்பால் கொண்ட கோபம் போன்ற காரணங்களால் பேச்சு தடிக்கும். அப்போது சரியான காரணத்தை உணர்ந்து மற்றவர் தணிந்து போதல் வேண்டும்.

எப்போதுமே ஒருவரிடம் வாதம் புரியும்போது எதிராளிக்கு ஒரு கௌரவமான வெளியேரல் வாய்ப்பினைத் (honourable exit) திறந்தே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் நல்லெண்ணம் வெளிப்பட்டு, நீங்கள் மெய்ப்பிக்க விரும்பும் கருத்து ஏற்கப்பட வாய்ப்பு இருக்கிறது.

இப்போது இண்டெர்நெட் என்கிற அகண்ட, பரந்த விரிந்த வலையுலகத்தில் மக்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் மடலாடற்குழுமங்கள், சர்ச்சை மன்றங்கள், வலைப்பூக்களின் கருத்துப் பெட்டிகள், வலை இதழ்கள் முதலியவை கூட இந்த விவாதம் செய்யும் உந்துதல் நோய்க்கு நிறைய தீனி போடுகின்றன. சில புகழ் பெற்ற இதழ்ப் பக்கங்களில் பலர் ஒரே பொருளைப் பற்றி "மாங்கு மாங்கெ"ன்று முடிவில்லாமல் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சில Bulletin Board-களில் உள்ளே சென்றாலே கலாய்த்து விரட்டி விடுவார்கள். இதை flaming என்று சொல்வார்கள். எதாவது மென்பொருள் சார்ந்த மன்றங்களில் சென்று ஒரு சந்தேகம் கேட்டால், உடனே ஒரு பிரஹஸ்பதி வந்து "RTFM" (Read The F@#$n Manual) என்று பதில் போடுவார். அவ்வளவுதான், சண்டை சூடு பிடித்துவிடும். சில சிறப்புத் துறைகள் சார்ந்த குழுமங்களில் கூட இத்தகைய வெட்டி சண்டைகள் பல நிகழ்கின்றன. உதாரணமாக IRFCA என்கிற இரெயில்வே பற்றிய குழுவில்கூட டீசல் நல்லதா, மின்சார traction சிறந்ததா என்ற சண்டை வருடக்கணக்காக சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது!

டாக்டர்கள் பற்றி ஒரு ஜோக் உண்டு. டாக்டர் பில்லை கூடப்போட்டு விட்டார் என்று வாதம் செய்யாதீர்கள். ஏனென்றால் அவர் குறைத்துப் போட்டிருந்தால்தான் நீங்கள் கவலைப் பட வேண்டும் - உங்கள் கிட்னியில் ஒன்று குறைந்திருக்க வாய்ப்புண்டு என்பதால்!

வாதங்களைத் தவிருங்கள். தவிர்க்க இயலாவிட்டால், மற்றவருக்கு இடம் கொடுத்து அவருடைய வாதத்தையும் தடுக்காமல் கேட்டு, பெருந்தன்மையுடன் அணுகுங்கள். முக்கியமாக, நம் கருத்தை - அது எவ்வளவுதான் உண்மை மற்றும் பொருள் செறிந்ததாக இருந்தாலும், ஏனையொர் முழு மனத்துடன் (முழுவதையும்) எற்றுக் கொள்ளவேண்டும் என்று எதிர் பார்க்காதீர்கள். ஏனெனில் அது இயற்கைக்கு எதிரான நிகழ்ச்சி! அவரவர்க்கு தான் சொல்வதுதான் பெரிது. அவரவர் வழியே சிறிது சென்றுதான் அவர்களை நம் வழிக்கு திருப்ப முயற்சிக்க வேண்டும்.

நாம் நினப்பது போல் இவ்வுலகம் சுழல்வதில்லை, நண்பரே!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : "லூஸ் டாக்" - எஸ்.கே - {DEC - 23 - 04}  
  ஒரு முறை கிண்டலாக நீங்கள் ஒன்றை உரைத்து அதை மற்றவர் சிறு நகையுடன் சகித்துக் கொண்டார் என்பதற்காக மீண்டும் அதையே சொன்னால், அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் கோபமுறுவதற்கு வாய்ப்புண்டு. அப்போதிருக்கும் மனநிலையைப் பொருத்தது அது.
http://www.tamiloviam.com/unicode/12230404.asp
Expand / Collapse
 

இந்தக் கட்டுரைக்கு நான் முதலில் "பயனில சொல்லாமை" என்றுதான் தலைப்புக் கொடுக்க எண்ணினேன். ஆனால் திருக்குறள் அறத்துப் பாலின் இல்லறவியல் அதிகாரம் ஒன்றின் பெயரை அப்படியே பயன் படுத்தல் தகாது என்ற கருத்தில், வேறொரு தலைப்பைத் தேடியபோது, இக்கட்டுரையில் சொல்ல வந்ததை நேரடியாக எடுத்துறைக்க "லூஸ் டாக்" என்கிற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், ஆங்கிலமானாலும் பரவாயில்லை என்று அதையே இட்டு விட்டேன்.

நாம் எல்லோரும் பல முறை தேவையில்லாத சொற்களைப் பேசுகிறோம். அதனால் எற்படும் தொல்லைகளையும், பின் விளைவுகளையும் அநுபவிக்கிறோம். எங்கு மௌனம் தான் சிறந்த பேச்சாக ஆகுமோ, அங்கு அதைக் கடைப்பிடிக்கத் தவறுகிறோம். அது போன்ற நேரங்களில் நாம் மௌனம் மூலமாகவே ஒரு கருத்துச் செறிந்த சொற்பொழிவை ஆற்ற இயலும்! "Silence can be very eloquent" என்று கூறுவர் பெரியோர். ஒருவரை, "நீங்கள் நிறைய ரகசியங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறீர்களே, உங்களால் மௌனமாக இருக்க முடியுமா" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "என்னால் 127 மொழிகளில் மௌனமாக இருக்க முடியும்" என்றாராம்!

மௌனத்திற்கு இன்னொரு பயனும் உண்டு. இலேசாக நமட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு மௌனமாக இருந்தால், "ஓஹோ, இவர் நிறைய விஷயம் தெரிந்தவர் போலிருக்கிறது. அதனால் தான் நிறை குடமாக மௌனமாக இருக்கிறார்" என்று ஏனையோர் எண்ணிச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அவ்வாறல்லாமல் வாயைத்திறந்து ஓயாமல் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தோமானால், நம் அறியாமை வெட்ட வெளிச்சமாகிவிடும். இதையே இன்னொருவர் கிண்டலாக, "It is better to keep your mouth shut and let others think you are a fool than opening it to confirm their assumption!" என்கிறார்!

ஒருவர் தன் பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கிறார். பையன் வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். எல்லோரையும் வரவேற்று அமரச் செய்தாகி விட்டது. சம்பிரதாயமான உபசரிப்புக்குப்பின், சாதாரணமாக அளவளாவுவதற்கு ஆரம்பித்தனர். அப்போது பையனின் தகப்பனார், அங்கிருந்த ஒரு மாதப் பத்திரிக்கையைப் பிரித்து எதோ மேலெழுந்தவாரியாக பக்கங்களைப் பிரட்ட ஆரம்பித்தார். அதனிடையில் ஒரு பக்கத்தில் இருந்த ஊறுகாய் விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த பெண்ணின் தந்தை, "இந்த பிராண்ட் ஊறுகாய் நல்லாவே இல்லைங்க" என்றார். அதோடு விட்டாரா. "இந்த ஊறுகாய்ங்கறதே ஒரு தேவையில்லாத சமாசாரங்கிறது என் கருத்துங்க" என்றார். பையனைப் பெற்றவர் சிரித்துக் கொண்டு பேசாமலிருந்தார். பெண்ணின் தகப்பன் விடாப்பிடியாக, "ஊறுகாய்க்கு முக்கியத்துவம் கொடுத்து அதைப் போய் நிறைய சாப்பிடறவங்களெல்லாம் முட்டாள்கள்" என்ற தன் தீர்மானமான கருத்தை முன் வைத்தார். அதற்குள் பெண்ணை அழைத்து வந்து மேற்கொண்டு நடக்கும் வழக்கமான டிராமாக்கள் தொடங்கி விட்டதால் இந்தப் பேச்சு அத்துடன் நின்று விட்டது. பையன் வீட்டார் வழக்கம் போல "ஊருக்குப் போய் எங்களுக்குள்ள கலந்து பேசி ஃபோன் பண்றோம்" என்று சொல்லி விட்டுப் போய்விட்டனர்.

கதைகளில் வரும் பல அரக்கர்களின் உயிர் ஏதோ ஒரு குகையில் தொங்கிக் கொண்டிருக்கும் வௌவாலின் மூக்கில் இருக்கும் என்பது போல அந்தப் பையனின் தந்தைக்கு உயிர் பலவித ஊறூகாய்கள் மீதுதான் என்பது பெண்ணின் தந்தைக்கு தெரியாது. அவர்கள் முடிவு என்னவாக இருந்திருக்கும் என்பதை விவரிக்க வேண்டிய அவசியமில்லை! ஆனால் இந்த நிகழ்வுக்கு "லூஸ் டாக்" தானே காரணம்! ஏதாவது பேசியே ஆகவேண்டும் என்பது கட்டாயமா? ஒரு புன்சிரிப்பு சிரித்து விட்டு, தேவைப் பட்டபோது ஓரிரு சொற்கள் பேசினால் போதாதா? அதிலும், தன் அயிப்பிராயங்களை உறுதிப் படுத்தி இவ்வாறு தேவையில்லாத இடங்களில் பறைசாற்றுதல் அவசியமா? சாதாரணமாகவே நாம் நம்முடைய கொள்கைகளையும், நம் உள்ளத்தில் நாம் கொண்டுள்ள முடிவுகளையும் சுலபத்தில் எல்லோரும் கண்டுகொள்ளுமாறு வெளிக்காண்பித்தல் நமக்கு நல்லதல்ல. அவ்வாறிருக்கும்போது அவற்றை இப்படி "கர கர" வென்று உப்புத்தாள் வைத்துத் தேய்ப்பதுபோல் மற்றவர்களிடம் தண்டோரா போட்டுத் தெரிவிக்க வேண்டுமா?

"Discretion is the better part of valour" என்று சேக்ஷ்பியர் போன்றோர் சுட்டிக் காட்டிய கருத்தும் இதையொட்டித்தான் அமைந்திருக்கிறது. அவசரப்பட்டு சொற்களைக் கொட்டாமல், எச்சரிக்கை உணர்வுடன், சிந்தித்து, தேவையானவற்றை மட்டும் பேசி, புத்தி கூர்மையுடன் செயல் படுவது சிறந்த வல்லமையாகும் என்பது இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் கருத்து. அசட்டு வீரத்தை விட அடங்கி இருத்தல் நலம்!

என்னுடன் பணிபுரிந்த ஒருவரை வழியில் பார்த்தேன். சாலையோரத்தில் தன் காரை நிறுத்தி விட்டு அதில் ஏதோ உற்று நோக்கிக் கொண்டிருந்தார். அவரிடம் ஒன்றும் பேசாமல் சென்றால் ஏதாவது நினைத்துக் கொண்டு விடுவாரோ என்று பயந்து, ஏதோ பேச வேண்டுமே என்பதற்காக, "என்னங்க, கார் ஏதாவது ரிப்பேரா?" என்று கேட்டேன். அவ்வளவு தான். சலேரென்று திரும்பியவர், "உங்க சாமர்த்தியமெல்லாம் என்னிடம் காட்டாதீங்க. நீங்க என்ன அர்த்தத்தில கேட்கிறீங்க அப்படீங்கறது எனக்குத் தெரியும்" என்று கடுமையான குரலில் சொன்னார். எனக்கு என்ன மறுமொழி கூறுவது என்று தெரியாமல் அங்கிருந்து சென்று விட்டேன். ஆனால் அவர் ஏன் அவ்வாறு கோபப்பட்டார் என்பது விளங்காமல் அந்த நிகழ்ச்சியே என் மனதில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது. ஏனையோரிடம் அவரைப் பற்றி தீர விசாரித்த பிறகு தான் அவருடைய அத்தகைய எதிர்வினைக்குக் காரணம் எனக்குப் புரிந்தது.

அந்த நபருக்கும் அவருடைய குழுவில் சேர்ந்து பணியாற்றும் இன்னொருவருக்கும் பெரிய சண்டை. கோபப்பட்ட நபர் மற்றவரிடம் போய் மன்னிப்புக் கேட்கப்போகிறார் என்றன அலுவலக புல்லெடின் வதந்திகள். ஆனால் இவர் அந்த வதந்திகளை விறைப்பாக மறுத்திருக்கிறார். அந்த விபரமெல்லாம் எனக்குத் தெரியாது. அன்று அவருடைய  கார் நின்றிருந்த இடம் அவர் சண்டை போட்டிருந்த நபரின் வீட்டுக்கு எதிரில் இருந்தது. அந்தத் தகவலும் நான் அறியவில்லை. ஆனால் ஏனையோர் தன் மனம் என்ணியபடி assume செய்து கொள்வதை நாம் எப்படி தடுக்க முடியும்? அவரென்னமோ தன்னை எதிர் வீட்டில் இருப்பவரிடம் மன்னிப்புக் கேட்க வந்திருப்பதாக நினைத்து, என்னைக் கண்டவுடன் கார் ரிப்பேர் செய்வது போல் பாவனை செய்கிறார் என்று பொருள் தொனிக்க, "என்னங்க, கார் ரிப்பேரா" என்று நான் கிண்டல் செய்வதாக எண்ணிக் கொண்டார். சரி. அவர் செய்தது தவறாகவே இருக்கட்டும். நான் என் வாயை மூடிக்கொண்டு இருந்திருக்கலாமல்லவா? அதை அநாவசியமாகத் திறந்ததால் என் மனத்தையும் ego-வையும் புண்ணாக்கிக் கொண்டேன் அல்லவா? இது தேவையா?

ஆகையால், சம்பிரதாயத்துக்காக எதாவது பேசியேயாக வேண்டும் என்கிற உந்துதலை அடக்குதல் அவசியம். நம் கணிப்பில் சாதாரணமான பொருள் கொண்ட சொற்கள் இன்னொருவர் நோக்கில் வேறு பொருள் கொண்டதாக அமையும் சாத்தியம் உள்ளது. மேலும் ஒரே சொல்லுக்கு அவரவர்கள் தம் (அப்போதைய) மன நிலை, குடும்பச் சூழல், பின்னணி இவற்றைப் பொருத்துப் பொருள் கொள்வர். ஆகையால் நம் மேதா விலாசத்தைக் காண்பிக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது அதிகப்படியாகப் பேசாமல், சொற்களின் எண்ணிக்கையில் கருமியாகவும், ஆனால் அதன் நயத்திலும், பொருட்செறிவிலும் பெருஞ்செல்வராகவும் விளங்குவது சாலச் சிறந்தது!

ஒரு முறை கிண்டலாக நீங்கள் ஒன்றை உரைத்து அதை மற்றவர் சிறு நகையுடன் சகித்துக் கொண்டார் என்பதற்காக மீண்டும் அதையே சொன்னால், அதை அவர் ஏற்றுக் கொள்ளாமல் கோபமுறுவதற்கு வாய்ப்புண்டு. அப்போதிருக்கும் மனநிலையைப் பொருத்தது அது. தவிர, ஒருவர் தனியே இருக்கும்போது சில கேலிப் பேச்சுக்களை சகித்திருப்பார். ஆனால் பலர் முன்னிலையில் அதே கிண்டல் அவருடைய ego-வைப் பாதிக்கலாம். அதனால் பகை மூளலாம். எனவே, எப்போதுமே எந்த வித உரையாடலிலும் என்ன பேசுகிறோம் என்பதை ஆராய்ந்து நிதானத்துடன், தகுந்த சொல்லாட்சியுடன் உரையாடினால் எல்லோராலும் போற்றப் படுவீர்கள். இல்லாவிடில் அடுத்தவர் மனதில் ஒரு பொருட்டிலாத மனிதராக, ஒரு non-serious and flippant type என்கிற image ஏற்பட்டுவிடும்.

Inferiority complex என்கிற தன்மை கொண்ட பலர் தன் குறையை பிறர் அறியாவண்ணம் நிரப்பும் குறிக்கோளுடன் எல்லாம் அறிந்தவராகக் காட்டிக் கொள்ள எண்ணி ஒயாமல் ஏதாவது பேசிய வண்ணம் இருப்பர். இந்தக் குறைப் பாட்டை மனத்திட்பத்துடன் எதிர் கொள்ள வேண்டும். சிலர் கேட்காமலேயே பலருக்கு அறிவுரை கூறுவர். இவர்கள் மதிக்கப் பட மாட்டார்கள்.

என் நண்பரொருவருடன் ஒரு ஓட்டலுக்குச் சென்றேன். எதிரே அமர்ந்திருந்தவரிடம் என் நண்பர் சும்மாயில்லாமல் அவருடைய கவனத்தைத் திருப்பி, "நீங்கள் சாமா தானே?" என்று வினவினார். அவரென்னமோ பைத்தியத்தைப் பார்ப்பது போல் அரைக் கண்ணைத் திருப்பி, இரெண்டு மில்லி மீட்டர் தலையை ஆட்டி இல்லை என்பதாக கோடி காட்டினார். நான் என் நண்பரிடம் கூறினேன், "உமக்கு வேணுமைய்யா இந்த அவமானம்" என்றேன். ஆனால் இவர் விடாமல், 'நிச்சயமாக என்னுடன் திருச்சி ஆண்டார் தெருவில் ரூம் மேட்டாக இருந்த சாமாதான் அவர். என்ன காரணத்தினாலோ இல்லையென்கிறார். ஏதோ குடும்பப் பிரச்னையோ, கடன் தொல்லையோ தெரியவில்லை" என்று சிலம்பிக்கொண்டிருந்தார். பொது இடங்களில் இது போன்ற embarrassing situations - களைத் தவிர்த்தல் நலம்.

இப்போது திருவள்ளுவரை துணைக்கழைக்கிறேன்!

வள்ளுவர் இந்தக் கருத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு முழு அதிகாரமே படைத்திருகிறார்!

 நயனிலன் என்பது சொல்லும் பயனில
 பாரித் துரைக்கும் உரை

எவ்வளவுதான் அறிவாளியாக ஒருவர் விளங்கினாலும், அவர் பயனற்றவைகளைப் பற்றியே விரிவாகப் பேசிக்கொண்டிருந்தால், அவரையே ஒரு பயனற்றவராக எல்லோரும் எண்ணுவர் என்பதை அறிவுருத்துகிறார்.

இதே போன்ற கருத்தை மீண்டும் வலியுறுத்துகிறார் இக்குரளில்:-

 சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
 நீர்மை யுடையார் சொலின்.

இன்னும் ஒரு படி மேலே போய், பயனற்றவைகளைப் பேசுபவன் ஒரு "பதர்" என்று கோபமாக அழைக்கிறார் வள்ளுவர் பெருந்தகை இந்தக் குறளின்பால்:-

 பயனில் சொல் பாராட்டுவானை மகன் எனல்
 மக்கட் பதடி எனல்.

அறிவிற் சிறந்தவர்களுடைய அடையாளச் சின்னமே பொருளற்ற சொற்களை உரைக்காமலிருத்தல் என்று அறுதியிட்டுக் கூறுகிறார் இங்கே:-

 பொருள் தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள் தீர்ந்த
 மாசறு காட்சியவர்.

முத்தாய்ப்பாக திருவள்ளுவரின் இந்த அறிவுரையுடன் முடிக்கிறேன்:-

 சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
 சொல்லிற் பயனிலாச் சொல்.


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : வெற்றி மற்றாங்கே! - எஸ்.கே - {DEC - 16 - 04}  
  இலக்கை வெற்றிகரமாக அடைதல் முக்கியமா, அல்லது அதை அடைவதற்கு எத்தகையான வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறோம் என்று ஆராய்வது முக்கியமா என்கின்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.
http://www.tamiloviam.com/unicode/12160405.asp
Expand / Collapse
 

"அவர் பந்தை உதைத்துத் தள்ளும் லாவகம்தான் எவ்வளவு ஜோரா யிருக்கிறது. பந்தைத் தலையால் முட்டுவதும், தடுப்பதும் மற்றும் dribbling, follow through எல்லாம் ஒரு காவியம்போல் அல்லவா இருக்கிறது!"

"ஆமாம். அவரிடம் பந்து சென்றால் அப்படியே அடிமையாகி விடுகிறதே!"

"அதெல்லாம் சரி ஐயா, எவ்வளவு கோல் போட்டார்? அதைச் சொல் முதலில்!"

இதுதான் இவ்வுலகின் நிதர்சனமான நடைமுறை!

என்னென்ன சாதனைகளை செய்து முடித்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம். அதுதான் நமக்குப் பெயரைப் பெற்றுக் கொடுக்கும். முழுமையாக்கப்படாத எந்த முயற்சியும் கவைக்கு உதவாது. சென்னைத் தமிழில் சொன்னால், "வேலைக்கு ஆகாது"!

Consummation - என்பதன் அவசியத்தை அனைவரும் அறிவார்கள்!

நீங்கள் உங்கள் உதவியாளரைக் கூப்பிட்டு உங்களுடைய முக்கியமான பிரயாணத்திற்கான டிக்கட் வாங்கச் சொல்லி அனுப்புகிறீர்கள். சுமார் மூன்று மணி நேரம் கழித்து திரும்பி வருகிறார்.

"என்னப்பா, டிக்கட் வாங்கிட்டயா?"

"இல்லீங்க, கிடைக்கல்லே"

"பின்னே இவ்வளவு நேரம் என்ன பண்ணிக்கிட்டிருந்தே?"

"கியூவிலே போய் நின்னேன். நிறைய பேர் கியூவை உடைச்சு முந்திப் போய் டிக்கட் வாங்கிட்டதாலே எனக்குக்  கிடைக்கல்ல"

"சரி, எல்லாரும் போன மாதிரி நீயும் முண்டியடிச்சு வாங்கறத்துக்கு என்ன?"

"அதெல்லாம் தப்பில்லைங்களா? மத்தப் பேர் ஊடாயிலெ நுழைஞ்சா நாம்பளும் அதே மாதிரி செய்யலாமா? அடிச்சு பிடுச்சுப் போய் வம்படிக்கறதெல்லாம் எனக்குப் பிடிக்காதுங்க."

இந்த மாதிரி பேர்வழியை உங்களுக்குப் பிடிக்குமா என்ன? கொடுத்த வேலையை வெற்றிகரமாக முடிக்கும் ஆளைத்தானே எல்லோரும் விரும்புவர்!

இலக்கை வெற்றிகரமாக அடைதல் முக்கியமா, அல்லது அதை அடைவதற்கு எத்தகையான வழிமுறைகளைப் பின்பற்றப் போகிறோம் என்று ஆராய்வது முக்கியமா என்கின்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது.

"Means should be as good as the ends" என்று ஒரு சாராரும், "Ends will justify the means" என்ற கருத்தை மற்றொரு சாராரும் வலியுறுத்தி வருகின்றனர்.

செயல்முறைகளைத் திட்டமிட்டு, வெற்றி இலக்கை எப்படி அடைவது என்றாய்ந்து, அதற்கான தந்திரவியல் (strategy) திறனைக் கைக்கொண்டு, முழுமையாக ஒரு வேலையை செய்து முடிப்பவர்கள்தான் சாதனையாளர்கள் என்று போற்றப் படுவர். அவ்வாறில்லாமல், அந்த முயற்சியில் ஈடுபடும்போது கையாளப் போகும் செயல்பாட்டின் கூறுகளைப் பற்றி ஆராய்ந்து கொண்டு, அதிலேயே உழன்று கொண்டிருந்தால் வெற்றி இலக்கை எட்டுவது எங்ஙனம்?

இதைப்பற்றி வள்ளுவர் தீர்மானமான கருத்துக்களை எடுத்துரைக்கிறார்:-

 வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
 தீர்ந்தாரின் தீந்தன்று உலகு.

எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதனைப் பாதியில் நிறுத்தக் கூடாது. முழுமையாகச் செய்து முடிக்க வேண்டும். குறையோடு விட்டோடுபவர்களை இவ்வுலகம் வெறுக்கும் - என்ற கருத்துக்கொப்ப அமைந்தது அந்தக் குறள். 

நம்மால் முடியுமா என்று மலைக்காமல் முடியும் என்ற தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அது வெற்றி பெரும் வலிமையைக் கொடுக்கும் என்பதை இந்தக் குறளில் வலியுறுத்துகிறார்:-

 அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
 பெருமை முயற்சி தரும்.

பாதிக் கிணறு தாண்டுபவர்களை யார் வேண்டுவர்? "எப்படியாவது" காரியத்தை சாதித்துக் கொடுப்பவர்களைத்தான் உலகம் விரும்புகிறது! அதற்காக தவறான வழிகளில் சென்று, சட்டங்களை மதிக்காமல் செயல்பட்டு, தீயவர்களுடன் சேர்ந்து, "வெட்டிக் கொண்டு வா" என்றால் "கட்டிக் கொண்டு வந்து விட்டேன்" என்ற செயல்பாட்டினை நான் வலியுறுத்தவில்லை. இந்த உலகம் எந்த நிலையிலும் ஒரு மிதமான போக்கையே வலியுறுத்துகிறது. ஏந்தவொரு கோட்பாட்டையும் முரட்டுப் பிடியாகப் பிடித்துக் கொண்டு, விளைவைப் பற்றிக் கவலையில்லை என்ற மன நிலை நடைமுறைக்கு ஒவ்வாது.

கே.பாலசந்தரின் "புன்னகை" என்ற திரைப் படத்தில் மூன்று நாயகர்கள். ஒருவர் "கொள்கைப் பிடி, குரங்குப் பிடி" என்றிருப்பவர். இரண்டாமவர் அதன் நேர் எதிர் - கெட்ட வழியில் செல்பவர். மூன்றாமவர் நீரோட்டம் எப்படிச் செல்கிறதோ அதன்படி தன் செயல்பாட்டை மாற்றிக் கொண்டு, தடைகள் வந்தால் அதனுடன் மோதிக் கொண்டு காயப் படாமல், அதனின்று ஒதுங்கி வெற்றி இலக்கை நோக்கிச் செல்லும் "பிழைக்கத் தெரிந்தவர்". யார் இந்த உலகத்தோடு "ஒட்ட ஒழுகுபவர்" என்பதை நீங்களே தீர்மனித்துக் கொள்ளுங்கள்.

அரிச்சந்திரன் கதையை ஒரு பள்ளி மாணவன் படித்தான். ஆசிரியர் அவனிடம் கேட்டார், "அரிச்சந்திரன் கதையிலிருந்து என்ன அறிந்து கொண்டாய்" என்று.

அதற்கு அந்த மாணவனின் பதில், "என்னிலையிலும் ஒரு பொய் கூட பேச மாட்டேன் என்று முரட்டுப் பிடிவாதத்துடன் இருந்தால், அரசு போய், செல்வம் போய், மனைவி இழந்து, மக்களிழந்து, மயானத்தைக் காவல் காத்து வயிற்றைக் கழுவும் நிலைக்குத் தள்ளப்படுவாய் என்று தெரிந்து கொண்டேன்" என்றான்.

அவன் புத்திசாலி! "உண்மை" என்பது ஒரு relative term என்பதை அறிந்து கொண்டான்! வறட்டு வேதாந்தங்கள் வேணுமானால் "அவ்வுலகுக்கு" சாதகமாக இருக்கலாம்; ஆனால் நிச்சயமாக இவ்வுலகில் "பொய்மையும் வாய்மை யிடத்த" என்று சூழ்நிலைக்கொப்ப ஒழுகுதல் அவசியம்.

நீங்கள் வாழும் உலகம் ஒரு Utopia அல்ல என்பதை மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டும்!

கொள்கைப் பிடிப்பு என்பது தேவைதான். ஆனால் அதுவே மிகையாகக் கூடாது. ஏனென்றால், எந்தக் கோட்பாடோ, நூல்களில் எழுதப்பட்ட வாசகங்களோ, இறை வசனங்களோ எல்லா கால கட்டங்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற்போல் அமைவது சாத்தியமில்லை. எனவே நம் அறிவை (robust commonsence) பயன் படுத்தி, மாறுபட்ட சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் செல்லும் பாதையில் அவ்வப்போது திருத்தங்கள் செய்து கொண்டு (course correction), முன்னேறுதல்தான் இயற்கைக்கு ஒத்த செயல்பாடு! அதனால்தான் சட்டங்கள் தொடர்ந்து திருத்தப் படுகின்றன. தீர்ப்புக்கள் மாற்றப் படுகின்றன.

நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்பவராக இருந்தால், உங்கள் மேலதிகாரியின் சுமையைக் குறைப்பவராக, உங்களிடம் ஒன்றை ஒப்படைத்தால் எப்படியாவது செய்து முடித்து விட்டு "வெற்றி" என்ற பதிலை மட்டும் சொல்பவராக இருந்தால்தானே விரும்பப் படுவீர்கள். Management by objectives - என்று சொல்வார்கள். அதாவது focus on result approach - நிச்சயமாக பலன் கொடுக்கும் முயற்சியை மட்டும் மனதில் கொண்டு செயல்பட்டு, இலக்குகளை எட்டுதல். இந்த முறையில் செயல்படுவதால் ஒரு நிறுவனத்தின் செம்மை உயர்கிறது என்று, நிர்வாகத்துறையின் குரு என்று கருதப்படும் பீட்டர் ட்ரக்கர் தன் 'The Practice of Management' என்ற நூலில் விவரித்திருக்கிறார்.

எல்லா நிறுவனங்களுக்கும், அவர்கள் நடை முறையில் அரசு சார்ந்த பலதரப்பட்ட துறைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு அலுவலகங்களின் தொடர்பு தேவை. அங்கு ஆக வேண்டிய வேலைகளை தாமதமில்லாமல் செய்து முடிக்க ஒரு ஆள் தேவைப் படும். ஒவ்வொரு நிறுவனத்திலும் இது போன்ற இடைத் தொடர்பு (liaison) மற்றும் lobbying செய்வதற்கென்றே ஒருவர் திறமை கொண்டவராக இருப்பார். அவருக்கு எப்போதுமே மிகுந்த கிராக்கி இருக்கும்! லைசென்ஸ் வாங்குவது, மோட்டார் வாகன படிமம் பெறுவது, மின்சாரம் மற்றும் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் உள்ள தொடுப்பு, காப்பீட்டுத்துறை, உரிமங்கள் பெறுவது, பாஸ்போர்ட் பெறுவது, பத்திரப் பதிவு செய்தல் இது போன்ற பற்பல வேலைகளை அதிகப்படி செலவில்லாமல் சீக்கிறமே, நூறு சதம் வெற்றிகரமாக முடித்துக் கொடுப்பவர்களை தெய்வமாகக் கூட எற்கத் தயாராக இருப்போம்!

ஹிந்தியில் "ஜுகாட்" என்று சொல்வார்கள் - எப்படியோ ஜித்து வேலை செய்து எடுத்த காரியத்தை முடித்துக் கொடுப்பது! அதே நேரத்தில் தப்புத் தண்டாவில் ஈடுபடாமல், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, கொஞ்சம் "அட்ஜஸ்ட்மெண்ட்" மனப்பான்மை மற்றும் மிதவாத உணர்வுடன் செயற்பட்டோமானால் நம் கடமைகளை பிரச்னையின்றி முடிக்கலாம். நம் வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல் தடையின்றிச் செல்லும்!

இவ்வுலகில் வாழ் மனிதர்களின் மனப்பாங்கைப் புரிந்துகொண்டு, நம் இலக்கு என்ன, நமக்கு வேண்டுவது என்ன என்பதைத் தெளிவாக வரையறுத்து, அதை ஈட்டுவதற்கு வேண்டியவைகளைத் திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு, "எடுத்த காரியம் யாவிலும் வெற்றி" என்று முரசு கொட்டுவோமாக!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : ஒப்பிடாமை - எஸ்.கே - {DEC - 09 - 04}  
  இப்படி நம்மில் பலர் அண்டை, அசல், சுற்றம், சூழல், உடன் பிறந்தோர் எல்லோரிடமும் நம்மை ஒப்பு நோக்கிக் கொண்டே இருப்பர். நம் வாழ்வில் மகிழ்ச்சியை அறவே விரட்டி அடிப்பதற்கு இதைத் தவிர வேறு வினையே வேண்டாம்.
http://www.tamiloviam.com/unicode/12090404.asp
Expand / Collapse
 

நான் கொச்சியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும்போது என்னை ஒரு நண்பர் விருந்துக்கு அழைத்திருந்தார். எர்ணாகுளத்தில் கொஞ்சம் மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் அவர் வீடு இருந்தது. இரவு உணவு முடிந்ததும் என்னை வழியனுப்ப அந்த நண்பரும் அவர் மனைவியும் வீட்டிற்கு வெளியே வந்தார்கள். அப்போது அவர்களின் எதிர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பற்றி என்னவோ தம்பதிகள் இருவரும் மலையாளத்தில் பேசிக்கொண்டார்கள். அது எதிர் வீட்டுக் காரருக்கு கேட்கும் அளவுக்கு இருந்ததோ என்று எனக்குத் தோன்றியது. இந்த சம்பாஷணை கொஞ்சம் நீடித்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அப்படி என்ன விஷயம் என்று கேட்டேன்.

"அந்த எதிர் வீட்டுக் காரர் ரொம்ப ராங்கிப் பேர்வழி. நாங்கள் இங்கு வந்த புதிதில் எங்களிடம் கார் இல்லை. அவர் வீட்டில் கார் வைத்திருந்தார் என்கிற திமிரில் எங்களிடம் பேசுவதுகூட இல்லை. எங்களை வெறுப்பேத்துவதற்காகவே தன் காரை எங்கள் வீட்டு வாசலுக்கு அருகில் இங்கேயும் அங்கேயுமாக விட்டுக் கொண்டிருப்பார். இப்போது நாங்களும் காரில்தான் செல்கிறோம். அதை அவரால் தாங்க முடியவில்லை. எங்களைக் கண்டால் மூஞ்சியைத் திருப்பிக் கொண்டு போகிறார்" என்று மிகவும் animated-ஆக விளக்கினார் என் நண்பர்.

அதற்குள் அவர் மனைவி குறுக்கிட்டு, "இதைச் சொல்லாமல் விட்டு விட்டீர்களே. அவரைவிட நாம் மிகவும் மேலே இருக்கிறோம். அவர் காரை அவரே ஓட்டுகிறார். ஆனால் நாம் டிரைவர் வைத்துக் கொண்டிருக்கிறோம்!" என்றார்!

இப்படி நம்மில் பலர் அண்டை, அசல், சுற்றம், சூழல், உடன் பிறந்தோர் எல்லோரிடமும் நம்மை ஒப்பு நோக்கிக் கொண்டே இருப்பர். நம் வாழ்வில் மகிழ்ச்சியை அறவே விரட்டி அடிப்பதற்கு இதைத் தவிர வேறு வினையே வேண்டாம்.

சாதாரணமாக ஒரே இடத்தில் சேர்ந்து வேலை செய்பவர்கள், தாயாதி, பங்காளி என்று சொல்லப்படும் பூர்விக சொத்தில் பங்கு கேட்கும் அளவுக்கு ரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்கள், ஓரகத்தி எனப்படும் அண்ணன், தம்பிகளின் மனைவிகள், சக்களத்திகள் (இதற்குப் போய் விளக்கம் தேவையா?) இவர்களிடையே இந்த ஒப்பிடும் மனப்போக்கு பெரும்பாலும் மிகையாகக் காணப்படுகிறது. இது தவிர உடன் பிறந்தோரிடம் கூட இந்தக் காய்ச்சல் அதிகமிருக்கிறது. அதுவும் இக்காலத்தில் வாங்குவதற்கு பொருட்கள் பெருகி விட்டதால் தேவையோ இல்லையோ, ஸ்டேடஸுக்காவது எதையாவது வாங்கிச் சேர்க்கும் நுகர்பொருள் மோகம் (consumerism) ஏற்றம் கொண்டு இன்னொருவரிடம் உள்ள பொருட்கள் நம்மிடம் இல்லையே என்ற தாபம் அதிகமாகி விட்டது. அவர்கள் மனத்தினுள் 24/7 ஒரு Universal Comparator கட-கடவென்று வேலை செய்து கொண்டே இருக்கும்!

மஹாபாரதத்தில் குந்திக்கு ஐந்து பிள்ளைகள் பிறந்து விட்டதால், தனக்கு இன்னும் பிறக்க வில்லையே என்று அப்போது கர்ப்பிணியாயிருந்த அவளுடைய ஓரகத்தி காந்தாரி உலக்கையால் தன் வயிற்றின் மேல் இடித்துக் கொண்டதாகவும் அதனால் அவள் வயிற்றிலிருந்த foetus துண்டு துண்டாகி நூறு குழந்தைகளாகப் பிறந்ததாக நாம் அனைவரும் கதை கேட்டிருக்கிறோம். ஆனால் இக்கால காந்தாரிகளோ அந்த உலக்கையை தம் கணவன்மார் மேல் போடுகிறார்கள்!  இன்னொருவரைவிட ஒரு குந்துமணி அளவாவது மேலே எம்பிக் காண்பிக்க வேண்டும் என்கிற one-upmanship எல்லோரையும் எந்தப் பாடு படுத்துகிறது! அடுத்த வீட்டில் 24 அங்குல டி.வி இருந்தால் நம் வீட்டில் 29 அங்குல டி.வி வாங்குகிற வறையில் தூக்கம் கூடப் பிடிக்காத வெறியாக அந்த ஒப்பிடும் நோய் நம்மை முழுவதுமாக ஆட்கொண்டிருப்பதைக் காண்கிறோம். ஆடம்பரப் பொருட்களின் ஆளுமைதான் இதன் வித்து. 

ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் அடுத்தடுத்த அபார்ட்மெண்டுகளில் வசித்த இரு குடும்பங்களில் ஒருவருடைய பையன் பிலானியிலுள்ள BITS-ல் சேர்ந்தான். அவ்வளவுதான், அண்டை வீட்டுக்காருக்கு பிடுங்கல் ஆரம்பித்தது. நம் பிள்ளையை ஏதாவது பொறியியல் கல்லுரியில், அதுவும் வட இந்தியாவில் - சேர்த்தே ஆக வேண்டும் என்ற வெறி பிடித்து ஆட்டியது. அவர்களுடைய பையனும் நன்கு படிப்பவன் தான். அவனை பனாரஸ் ஹிந்து பல்கலைக் கழகத்திலுள்ள பொறியியல் கழகத்தில் சேர்த்தார்கள் (BHU-IT). இந்த ஒப்பு நோக்கு பேயாட்டத்தில் தன்னை மறந்து ஈடுபட்ட நேரத்தில் ஒரு மிக முக்கியமான விஷயத்தில் கோட்டை விட்டார்கள். என்ன நடந்தது? கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாதத்திலேயே பையன் ஓடி வந்து விட்டான். திரும்பி அங்கே போகவே மாட்டென்று கலங்கி நின்று, பெற்றோரின் திட்டுக்களையும் வாங்கிக் கொண்டு ஒரு மன நோயாளி ஆகி விட்டான். அந்தப் பெற்றோர் செய்த தவறு என்ன? அவர்கள் அந்தக் கல்லூரியைப் பற்றியும் முழுமையாக விசாரிக்கவில்லை. தம் பிள்ளையின் மனப் பாங்கைப் பற்றியும் முழுமையாக அறிந்தாரில்லை. அங்கு சேர்ந்தவுடன் அநுபவித்த ராகிங்கைத் தாங்க முடியாமல் சுபாவத்தில் நோஞ்சானான அவன் ஓடி வந்து விட்டான்.

துணிக் கடையில் புடவை செலெக்ட் பண்ணும் தாய்க்குலங்களை நோக்குங்கள். அவர்கள் தன் கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் புடவையை விட அடுத்தவர் கையிலிருக்கும் புடவை மேல் தான் கண் இருக்கும். பல தடவை இந்தப் பெண்கள் தம் கணவரிடம், "நான் இதை எடுத்தவுடன் எவ்வளவு பேர் இதே மாதிரி வேண்டும் என்று கேட்டார்கள் தெரியுமா" என்று பீற்றிக் கொள்வார்கள்.

இரண்டு பெண்களுக்கு கிட்டத் தட்ட ஒரே நேரத்தில் குழந்தை பிறந்தால் போதும். "4 மாதம் ஆயிடுச்சே, இன்னும் குப்புறத்திக்கல்லையா? எங்க சுந்து நீஞ்சவே ஆரம்பிச்சூட்டானே" - இப்படி கம்பேர் பண்ணி வயிற்றெரிச்சலை உண்டாக்கி மன நிறைவு கொள்வர் சிலர்! எனக்குத் தெரிந்த ஒரு பெண் தன் மச்சினியின் குழந்தை ஒரு வயதில் நடக்க ஆரம்பித்து விட்டான், தன் பிள்ளை இன்னும் நிற்கவேயில்லையே என்று வடிச்ச கஞ்சியை குழந்தை காலில் அப்பி நீவி விட ஆரம்பித்து விட்டாள் - அப்போதுதான் காலில் பலம் ஏறுமாம்! சில குழந்தைகள் கொஞ்சம் சாவகாசமாக இதெல்லாம் செய்ய ஆரம்பிக்கும். அதற்குள் ஏனிந்த உலக்கையிசம்!

இரு சகோதரிகள். ஒருவளுக்கு இரண்டும் பையன்கள். இரண்டாமவளுக்கு முதலில் பெண் குழந்தை. சரி ரெண்டாவது ஆண்தான் என்று "சூரிய பிரபை, சந்திர பிரபை" எல்லா கணக்கையும் பார்த்து "உண்டானதில்" கூட, கடைசியில் குரோமோசோம்களின் சதியால் "மீண்டும் கோகிலா" தான்! அந்த அம்மையார் ஆண் குழந்தை பெற்றவளைவிட ஏதோவொரு விதத்தில் ஏற்றமுடையவளாக தன்னைக் காட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காக அன்றாடம் ஏதாவது புதிதாக வாங்கி "பிள்ளையைப் பெற்ற மகராசி"யைக் கூப்பிட்டுக் காட்டி அவள் முகம் போகிற போக்கைக் கண்டு அல்ப சந்தோஷத்தை அநுபவிப்பாள்!

குழந்தைகள் விஷயத்தில் இன்னும் பல ஒப்புமைகள் உண்டு. மார்க்கு வாங்குவதிலிருந்து பிரைஸ் வாங்குவது வரை அந்தத் தாய்மார்கள் தம் பிள்ளைகளின் பெருமைகளைத் தம்பட்டம் அடிப்பதற்கு இன்னொரு பெண்ணைத் தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்களும் சளைக்காமல், "ஏன், எங்க சுப்பிரமணி கூட முதல் மார்க்குதான். அவங்க பிரின்சிபால்கூட டி.சி குடுக்கவே மாட்டேனுட்டாங்க. நம்ப பையனுக்குத் தான் வேற ஸ்கூல்ல சேரணும்னு ஆசை" என்பாள் (உண்மை வேறு திசையில் செல்லும் என்பது வேறு விஷயம்!). இப்படி மாறி மாறி மாற்றுலக்கை போட்டுக் கொண்டிருப்பார்கள். அவரவர் பேச்சை அவரவர் ரசித்துக் கொண்டிருப்பார்கள். இதனால்தான் ஒரு அறிஞர்,

"When two men talk, it is a dialogue;
 but when two women talk, it is a set of two monologues"

என்றார்.

ஒரு நிறுவனத்தின் காலனியில் வசிப்பவர்களிடம் இந்த ஒப்பிடும் மனப்பான்மை மிகுதியாக இருக்கும். அதுவும் "மேம் சாப்" களிடம் இது சற்று மிகுதியாக இருக்கும்!
"உங்களோடயே ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தவர்களெல்லம் எப்படி அநுபவிக்கிறார்கள். என்ன பண்ணறது, நமக்கு பொசிப்பு அவ்வளவதுதான்"! இப்படி!

(சரி. போதும் போதும். அப்புறம் "Male chauvinist pig" என்று பட்டம் கட்டி விடுவார்கள், பெண்ணியல் பேணும் பெருந்தகையர். அதிலும் மறு மொழி, எதிர்வினைக்கென்றே இங்கே ஒரு தொட்டி வேறு கட்டி வைத்துள்ளனர்!!)

அலுவலகத்தில் உடனிருக்கும் colleague என்ன மாதிரி டிரெஸ் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறான், அதெப்படி அவனுக்கு முடிகிறது; நாமும் அதைப்போல் இருந்தாலென்ன என்று மறுகி, தகாத  வழிகளில் வருமானத்தை பெருக்க முனைந்து மாட்டிக் கொள்வார்கள் பலர்.

நாம் தனியாகத் தான் பிறந்தோம். தனியாகத் தான் போகப் போகிறோம். நம் ஆயுட்காலம் இன்னொருவரோடு ஒப்பு நோக்கி வறையறுக்கப் பட்டதல்ல. வாழும் வரை இந்த உலகியல் materialistic possession-களின்பால் பெருமளவு மோகம் கொள்ளாமல், அதனால் அடுத்தவனிடம் போட்டி போட்டு நம் வாழ்வை நரகமாக்கிக் கொள்ளாமல், அற நெறியும் ஒழுக்கமும்தான் உண்மையான பெருமை என்பதை உணர்ந்து, "Simple living, high thinking" என்கிற கோட்பாட்டுடன் வாழ முனைவோம். ஒப்பு நோக்கி நம் மனதைக் குப்பை மேடாக்க வேண்டாம்!


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : மனத்தளவே ஆகும் மகிழ்வு! - எஸ்.கே - {DEC - 02 - 04}  
  மேலதிகாரி இவனை மட்டந்தட்டி ஒரிரு சொற்கள் பேசிவிட்டார் என்பதை விட இன்னொருவர், அதிலும் அலுவலகப் படிநிலை அமைப்பில் அவனினும் தாழ்ந்தவர் முன் அவன் பட்ட அவமானம் அவனால் தாங்க முடிய வில்லை.
http://www.tamiloviam.com/unicode/12020404.asp
Expand / Collapse
 

இராமகிருஷ்ணன் அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை. பிரண்டு பிரண்டு படுத்துப் பார்த்தான். டி.வி முன் உட்கார்ந்து ரிமோட்டை சித்திரவதை செய்து இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை அத்தனை சானலையும் zap செய்து முடித்தான். மூக்கைப் பொத்திக் கொண்டு சாலையில் கொஞ்சம் நடை பழகினான்.  ஒரு தம் அடித்தும் பார்த்தான். ம்ஹூம். தூக்கம் வருவதாக இல்லை. அவன் மனதை ஏதோ ஒன்று அரித்துத் தின்று கொண்டிருக்கும்போது தூக்கம் எப்படி வரும்?

அவன் மனைவிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. சாதாரணமாக ஒவ்வொரு இரவிலும் அவளுக்கு முன்னால் தூங்கும் ராம்கியின் குறட்டை தான் அவளுக்குத் தாலாட்டு. இன்று அவன் அல்லாடுவது தெரியும் என்றாலும், தானும் என்ன பிரச்னை என்று கேட்டு அவனை மேலும் தொந்திரவு செய்ய வேண்டாம் என்று கண்ணை மூடிக் கொண்டாள். ஏனெனில் அவன் அவ்வளவு மனம் விட்டுப் பேசுபவன் இல்லை.

அவனைப் பாதித்திருப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. அவனுடைய மேலதிகாரி ஒரு சிடுமூஞ்சி. இன்றைய வேலையை நேற்றே முடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அதனால் அவருடைய பிடுங்கல் சாதாரணமாக இராமகிருஷ்ணனைப் பாதிப்பதில்லை. ஆனால் இன்று என்ன நடந்தது? தனக்கு ஜூனியரான ரங்கசாமி முன்னால் தன்னை அவர் மட்டந்தட்டிப் பேசி விட்டார் என்பதைத் தான் அவனால் தாங்க முடியவில்லை. அவன் எப்படி இளக்காரமாக புன்சிரித்துக் கொண்டு நின்றான்; உடன் வேலை செய்பவர்களிடம் போய் என்னென்ன பேசி சிரித்துக் கொண்டிருப்பான். இப்படி மனத்துக்குள் பிரட்டி பிரட்டி சிந்தனை செய்து சுமையை அதிகரித்துக் கொண்டேயிருந்தால் எப்படித் தூங்குவது?

ஆனால் இவ்வாறு பெருமூச்சு விட்டுக்கொண்டு அதையே நினைத்து நினைத்து மருகிக் கொண்டிருப்பதால் ஏதாவது பயன் உண்டா என்பதை அந்த இராமகிருஷ்ணன் சிந்திக்கவில்லை. ஏன்? அந்த நிகழ்ச்சி அந்த அளவுக்கு அவன் மனதைப் பாதித்து விட்டது.

சரி, அவனுடைய இந்த நிலைக்குக் காரணம் உண்மையில் அந்த நிகழ்ச்சிதானா? அல்லது அதை நினத்து இவன் மனதில் ஏற்பட்ட எதிர்வினையா (reaction)?

தான் அவமானப் பட்டதாக நினைக்கும் அந்த என்ணம்தான் நம்மை அந்த அளவுக்கு பாதிக்கிறது. இதற்குக் காரணம் நம் மனத்தின் அடித்தளத்தில் தங்கியிருந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் "ஈட்" (id) என்று சொல்லப்படும் நம் மன நிலைதான். இது நம் குழந்தைப் பருவத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றை எப்படியாவது பெறுவதற்காக இயற்கையால் ஏற்படுத்தப்பட்ட மனத் திண்மை. ஆனால் அது மேலும் மேலும் நம்மை ஆட்கொண்டு நம்மை ஒரு சுயநலவாதியாக ஆக்கிக் கொண்டிருக்கும். இதை Sigmund Freud என்கிற மன இயல் விஞ்ஞானி தன் ஆராய்ச்சி மூலம் விளக்கியுள்ளார். ஆனால் இந்த ஈட் (லேசான "ஏட்" என்ற உச்சரிப்பும் இருக்கிறது) எனும் எதிரியை அடக்க நம் மனதில் "ஈகோ" (ego) என்கிற ஒரு கோட்பாடு உருவாகி "ஈட்"டின் செயல்பாட்டை ஒரு கட்டுக்குள் கொண்டு வருகிறது. ஆனால் நம்முடைய தன்னலம் அல்லது தற்பெருமை சார்ந்த மன நிலையில் ஒரு தாழ்வு ஏற்படுத்தும் உணர்வு  வரும்போது மிக அதிகமான மன உளைச்சல் ஏற்படுகிறது.

இப்பொது மறுபடியும் இராமகிருஷ்ணனின் பிரச்னைக்கு வருவோம். அவனுடைய மன உளைச்சலுக்கு மூல காரணம் என்ன? இன்னொருவருடைய செயலா, அல்லது அந்தச் செயல் அவன் மனத்தில் ஏற்படுத்திய பின்விளைவா? அதே நிகழ்ச்சியை அவன் வேறு முறையில் அணுகியிருக்க முடியாதா?

மேலதிகாரி இவனை மட்டந்தட்டி ஒரிரு சொற்கள் பேசிவிட்டார் என்பதை விட இன்னொருவர், அதிலும் அலுவலகப் படிநிலை அமைப்பில் அவனினும் தாழ்ந்தவர் முன் அவன் பட்ட அவமானம் அவனால் தாங்க முடிய வில்லை. ஆனால், "அவன் முன் நடந்தால் என்ன, அவனும் பல முறை அதே மேலாளரிடம் வயிறு ரொம்ப வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறானே. இன்னும் கொஞ்ச நாளில் நிர்வாக மாற்றம் ஏற்படப் போகிறது. அதனாலோ, அல்லது என்னுடைய உழைப்பினாலோ, என்னுடைய சீனியாரிடி அடிப்படையிலோ, டிபார்ட்மென்ட் தேர்வில் தேறுவதாலோ எனக்கு பதவி உயற்வு ஏற்படப்போகிறது. இந்த சின்னச் சின்ன நிகழ்வெல்லாம் என் மனத்தை பாதிக்க இடம் கொடுக்கக் கூடாது" என்பது போல் ஏன் அவன் சிந்தித்திருக்கக் கூடாது?

இது போல் பல நிகழ்ச்சிகள் நம் வாழ்வில் அவ்வப்போது நடந்து நம் மனத்தின் அமைதியை பாதிக்கின்றன. அதற்கெல்லாம் காரணம் நம்முடைய reaction தானே ஒழிய அந்த நிகழ்ச்சிகளே அல்ல. ஆனால் அவற்றை நினைத்து மருகி, அதனால் ஏற்படும் மனத் தடுமாற்றத்தால் நம் உடலிலும் மன நிலையிலும் ஏற்படும் பாதிப்பும், அந்த நேரங்களில் நாம் செய்துவிட்ட தவறான செயல்கள், அல்லது நாம் செய்யாமல் தவற விட்டவை - இது போன்றவைகளால் எற்படும் இழப்புகள்தான் அதிகம்.

ஆகையால் பிறரின் செய்கையால் நம் மனம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட நாமே அனுமதிக்கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். நம் உணர்ச்சிகளின் உந்துதலும் வெளிப்பாடும் நம் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு அதை அறிவு ரீதியான அணுகுமுறைக்குக் கொண்டுவர பக்குவப் படுத்தி விட்டோமானால் இது போன்ற மனக் கலக்கமோ குழப்பமோ எற்படாமல் தடுக்கலாம். மகிழ்வு, சோகம் என்கிற மன நிலைகள் நம் மனத்தில்பால் தானே எற்படுகின்றன? ஏன் அதை நாம் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிக்கக் கூடாது?

ஒருவர் நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருக்கிறார். பக்க வாட்டில் உள்ள ஒரு சிறிய சாலையிலிருந்து திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிள் நெடுஞ்சாலைக்கு வந்து நுழைந்து, அதனால் அந்தக் காரோட்டி சடாரென்று பிரேக் போட்டு நிறுத்த நேர்ந்தது. மோட்டார் சைக்கிள்காரரும் சிறிது தூரத்தில் தன் வண்டியை நிறுத்தி விட்டார். கார் ஓட்டி வந்தவருக்குக் கடும் கோபம். ஏனென்றால் முழுத்தவறும் மோட்டார் சைக்கிள்காரர் மேல் தான். வேகமாக அவரை நோக்கி  மூன்று மொழிகளில் தனக்குத் தெரிந்த அர்ச்சனைச் சொற்களைத் தொடுத்து வீசலாம் என்ற முடிவோடு "தொம், தொம்" என்று வருகிறார். லேசான இருட்டு நேரம். கிட்டே வந்த பின்தான் அடையாளம் தெரிகிறது. அவ்வளவு கோபமாக வந்தவர் சடாரென்று குழைகிறார். அவர் பேச்சில் சிறிதும் கோபம் இல்லை. "ஏதோ நடந்தது நடந்து விட்டது" என்பது போன்ற சமாளிப்பு வார்த்தைகள்தான் பேசுகிறார். இந்த இடத்தை விட்டு சீக்கிரம் போனால்தான் நிம்மதி என்பதைப் போல் "அப்பாடி" என்று அவசர அவசரமாக காரை ஓட்டிச் செல்கிறார். ஏனிந்த மாற்றம்? எங்கே போயிற்று அவருடைய அடக்க முடியாத கோபம்?

இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தவர் ஒரு போலீஸ் அதிகாரி. அவ்வளவுதான்!

இதிலிருந்து என்ன தெரிகிறது? வெளி உலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் உண்மையில் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அந்த நிகழ்ச்சியை நாம் எவ்வாறு அணுகுகிறோம், எத்தகைய உணர்ச்சிகளை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொருத்துதான் நம்மிடம் பாதிப்பு ஏற்படுகிறது.

அலுவலகங்களில் "அவன் என்னை மதிக்க வில்லை", "இவன் என்னை 'விஷ்' பண்ண வில்லை", "என்னைப் பார்க்காதது போல் போய்விட்டான்" - இது போல் காலணா பெறாத காரணங்களால் மனச் சஞ்சலங்கள் கொள்வோர் பலர். குடும்பத்தில் கூட, மருமகள் மதிக்க வில்லை, கல்யாணத்தில் சம்பந்தியை முறையாக சாப்பிடக் கூப்பிடவில்லை, கல்யாணத்துக்கு நேரில் வந்து அழைக்கவில்லை, இது போல் ஏதேதோ காரணங்களால் பலர் மன மாச்சரியங்களால் பாதிக்கப் படுகிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, அந்த நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மரியாதை நிமித்தம் அழைக்கப் பட்டிருந்த போது, தன் ஓய்வுக்கு முந்தைய status-க்கு ஒப்ப வண்டி அனுப்பாமல் ஜீப் வண்டியை அனுப்பி விட்டார்கள் என்று கண்ணில் கண்டவரிடமெல்லாம் ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார். அவரை இனிமேல் எதற்கும் அழைப்பதில்லை என்று முடிவு செய்து விட்டார்கள் என்பது வேறு விஷயம். ஆனால் அவமானம் என்று நாம் கற்பனை செய்து கொள்வது எல்லாமே உண்மையில் அவமானமேயில்லை. அது நம் கற்பனைதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

"வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை" என்ற வள்ளுவர் மேலும்,

            திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
            அறனல்ல செய்யாமை நன்று

(பிறர் செய்திடும் இழிவான காரியங்களுக்காகத் துன்புற்று வருந்தி, பதிலுக்கு அதே போல் செய்யாமைதான் சிறந்த பண்பாகும்) என்கிறார்.

நாம் செல்ல வேண்டிய பாதை எவ்வளவு நீளமானது? நாம் சாதிக்க வேண்டியவை எவ்வளவு இருக்கின்றன? நமக்கும் நம் குடும்பத்தினருக்கும், சமூகத்துக்கும் செய்ய வேண்டியவை எவ்வளவு இருக்கிறது? இது போல் மன இறுக்கத்தினால் பீடிக்கப் பட்டு வாழ்நாளை வீணடிக்கவா நாம் பிறந்திருக்கிறோம்?


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : கேளுங்கள் கொடுக்கப்படும்! - எஸ்.கே - {NOV - 25 - 04}  
  கேட்டல் என்பது இரந்து வேண்டுதல் என்ற வகையில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இவ்வுலகில் இன்னொருவரிடம் ஏதேனும் பெறாமல் யாதொரு இயக்கமும் நடக்காது. ஆதலால் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப யாரிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேட்க முற்படுவதைத் தடுத்து நிறுத்தும் சுவர்களைத் தகர்க்க வேண்டியது நம் கடமை!
http://www.tamiloviam.com/unicode/11250406.asp
Expand / Collapse
 

நீங்கள் ஒருவரிடம் ஏதோவொரு உதவியை எதிர்பார்க்கிறீர்கள். அல்லது உங்களுக்குப் பிறரிடமிருந்து வர வேண்டியதைப்  பெற எண்ணுகிறீர்கள். அதற்கு அடிப்படையாக நீங்கள் செய்யவேண்டியது என்ன?

அதைக் "கேட்க வேண்டும்"!

ஆம். நாம் நமக்கு வேண்டியதை, நமக்கு உரிமையானதைக் கேட்க வேண்டும். கேட்டால்தான் பெற முடியும்.

"Ask, and it shall be given you" (Matt. vii. 7, 8) என்பது தேவ வாக்கு.

இந்த மிக அடிப்படையான விஷயம் எங்களுக்குத் தெரியாதா, இதுக்கு என்ன இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று கேட்கிறீர்களா? அதில்தான் இருக்கிறது சூட்சுமம். இவ்வுலகத்தில் பலர் பலவற்றைக் கோட்டை விடுவது இந்த மிக அடிப்படையான விஷயத்தில்தான். இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இழப்புகளுக்கு பெருமளவு காரணம் சரியான நேரத்தில், சரியான நபரிடம், சரியானபடி கேட்காததுதான்.

ஏனிந்த தயக்கம், சடாரென்று கேட்க வேண்டியதுதானே? அதுதான் இல்லை! தன்னைச் சுற்றி இறுக்கமாக கயிற்றால் பிணைத்துக்கொண்டு அதனால் நம்மையறியாமல் என்னமோ ஒன்று தடுப்பதாக உணர்வார்கள் பலர். இவர்களில் பெரும்பாலோரின் எண்ண ஓட்டங்கள் இது போலிருக்கும்:-

"அவரிடன் எப்படி இதைப் போய் கேட்பது, அவர் ஏதாவது நினைத்துக் கொள்வாரோ"
"எனக்குக் கூச்சமாக இருக்கிறதே"
"தவறாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது"
"நாம் கேட்பதனால் ஏதாவது பின் விளவு ஏற்படுமோ"
"அவராகக் கொடுக்கட்டுமே, நாம் ஏன் கேட்க வேண்டும்"
"அவருக்குத் தெரியாதா, தானாகச் செய்வார்"
"நாம் கேட்டுத்தான் ஒன்றைப் பெற வேண்டுமா, நான் யாரையும் எதையும் கேட்க மாட்டேன். அதனால் எதை இழந்தாலும் பரவாயில்லை"

இவையெல்லாம் இயற்கைக்குப் புறம்பான, மனித இயல்பை ஒட்டாத எதிர்மறை எண்ணங்கள். அநேகமாக அத்தனை மதங்களும் இறைவனிடம் கூட கேட்டுத்தான் வேண்டியதைப் பெறச்சொல்கின்றன. இறைவனை வாழ்த்தும் துதிகள் எல்லாவற்றிலும் "பலஸ்ருதி" என்று ஒன்று இருக்கும். இந்தத் துதியால் நமக்குக் கிட்டும் நன்மைகளைப் பற்றி அதில் பட்டியலிட்டிருப்பார்கள். மேலும் இன்னின்ன நாட்களில் இன்னின்ன நோன்புகளை நூற்றால் என்ன பலன் என்பதும் நடைமுறயில் இருக்கிறது. இறைவனிடம் இறைஞ்சு நின்று எதையும் கேட்கத் தயாராக இருக்கும் நாம் நம்மைச் சுற்றியிருக்கும் மானுடரிடம், அதுவும் தேவையின் போது கேட்பதில் ஏனிந்த தயக்கம்!

ஒருவரிடம் எதேனும் ஒன்றைக் கேட்கும் முன் மனம் சஞ்சலப்படும். தள்ளிப் போடுவோம். கடைசியில் கேட்கவே மாட்டோம். அறிவு ரீதியாக சிந்தித்தோமானால் இந்தத் தயக்கத்துக்கு காரணமேயில்லை. அது கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்பதனாலும் சரி. மேலதிகாரிகளிடம் ஏதாவது சலுகையோ வேறு உதவியோ கேட்பதானாலும் சரி. அரசு சார்ந்த விண்ணப்பமோ, நண்பர்கள் அல்லது உறவினரிடமிருந்து தவிர்க்க முடியாமல் கேட்டுப் பெறவேண்டிய உதவியோ இப்படி எந்த ஒரு சூழ்நிலையிலும் கேட்பதைத் தடுக்கும் சாத்தான் நம்மைச் செயலிழக்க வைக்கிறது. கேட்காமல் விட்டுப் போன கடன்கள் எததனையோ, மீட்காமல் விட்ட பொருட்கள் எத்தனையோ!

கேட்பதை முறையாகவும், சரியான நேரத்திலும், சரியான நபரிடமும் கேட்க வேண்டும். "நேற்றே கேட்டிருக்கப்படாதா. வேறொருவருக்குக் கொடுத்து விட்டேனே" என்பது சதாரணமாக காதில் விழும் வசனம். கேட்பதில் சுணக்கம் கூடாது. நாம் கேட்பதைக் கேட்டுவிடுவோம்; ஆமென்பதும் இல்லையென்பதும் அடுத்தவர் முடிவு. நாமே எதற்கு அவருக்கும் சேர்த்து சிந்திக்க வேண்டும்? கேட்பதற்காக மட்டும் தலையைச் சீவி விடுவார்களா என்ன?

கேட்டல் என்பது இரந்து வேண்டுதல் என்ற வகையில்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. இவ்வுலகில் இன்னொருவரிடம் ஏதேனும் பெறாமல் யாதொரு இயக்கமும் நடக்காது. ஆதலால் அந்தந்த சூழ்நிலைக்கேற்ப யாரிடம் என்ன கேட்க வேண்டுமோ அதைக் கேட்க முற்படுவதைத் தடுத்து நிறுத்தும் சுவர்களைத் தகர்க்க வேண்டியது நம் கடமை!

"Ye ask, and receive not, because ye ask amiss" என்று பைபிளில் ஒரு வசனம் உண்டு. அது போல் சரியானபடி கேட்காததனால் எந்த வாய்ப்பையும் தவற விடாமல் இடம், பொருள், ஏவலுக்கு ஏற்ப சரியாக குறி பார்த்து நம் கோரிக்கையை வைத்தால் கட்டாயம் வாழ்க்கையில் ஜெயம்தான்.


 
 
  உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் : "நீ விரும்பும் நான்" - எஸ்.கே - {NOV - 18 - 04}  
  "ஹித வாதா" என்று சொல்லப்படுவது போல, "இங்கிதம்" அறிந்த நம் நடைமுறையால் நாம் "பிறர் விரும்பும் நாமா"க விளங்கி இந்த உலகமான நாடக மேடையில் நாம் அமைக்கும் காட்சி வெற்றிகரமாக அமையட்டும்!
http://www.tamiloviam.com/unicode/11180409.asp
Expand / Collapse
 

Wilson Foot Ball"கேஸ்டவே" (Castaway) என்னும் ஆங்கிலப் படத்தில் டாம் ஹேங்க்ஸ் பசிபிக் கடலில் உயிரினிம் எதுவும் வாழாத ஒரு தனிமையான சிறு தீவில் ஒதுங்குகிறார். மரம், செடி, கொடிகளுக்குப் பஞ்சமில்லாத அந்தத் தீவில் உணவு, உறைவிடம், குடி நீர் இவைகளுக்கெல்லாம் எப்படியோ சமாளிக்கிறார். ஆனால், மனத்திற்கு உணவு? ஆம், அது தான் அங்கு ஏற்பட்ட தலையாய பிரச்னை. நான்கு ஆண்டுகள் தன்னந்தனியாக எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருக்க முடிந்தது? கடலில் அந்தத் தீவுப் பக்கம் ஒதுங்கிய ஒரு வாலி-பாலின் மேல் தன் ரத்தத்தைக் கொண்டே மனித முகம் ஒன்று வரைந்து கொண்டு அதற்கு "வில்சன்" என்று பெயரிட்டு அந்த வில்சன் கூட பெசிக்கொண்டே நாட்களைக் கடத்தினார். அந்த உக்தியை மட்டும் செய்யாமலிருந்தால் அந்த மனிதன் ஒரு சமநிலையான மனத்துடன் இருந்திருக்க முடியாது. இதுதான் மனித இயற்கை.

ஒரு தனித்தீவில் மனிதன் வாழலாம். ஆனால் அந்த மனிதன், தானே ஒரு தீவாக இருந்து வாழ முடியாது!

Man needs a companion for his emotional survival, because he is a social animal. இதனால்தான் மரண தண்டனையை விடக் கொடுமையானதாக தனிச் சிறையை (solitary confinement - "cooler" என்றுகூடச் சொல்வார்கள்) கருதுகிறார்கள்.

இன்னொருவரின் பங்களிப்பு இல்லாமல் இவ்வுலகத்தில் நம்மால் எதுவுமே ஆகாது என்பதுதான் திட்டவட்டமான உண்மை. அப்படிப்பட்ட மிக முக்கியமான அந்த "இன்னொருவர்", அதாவது நம்மைச் சூழ்ந்துள்ள சமுதாயம் நம்மை எவ்வாறு இனம் கண்டு கொள்கிறது என்பது மிக முக்கியமாகிறது அல்லவா? நான் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வேன், ஏனையோர் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் ஏன் கவலைப் படவேண்டும் என்று நம்மில் சிலர் விதண்டாவாதம் பேசுவர். அவர்கள் எல்லொருமே தம் வாழ்வில் வெற்றி அடைந்திருக்க முடியாது என்பது நிச்சயம். ஏனெனில் எந்தத் துறையிலும் நம் வெற்றியின் அளவுகோல், பிறரிடமிருந்து எவ்வளவு தூரம் நாம் விரும்பியதைப் பெற்றோம் என்பதைப் பொருத்ததுதான் அமைகிறது. மேலாண்மை (management) என்பதன் பொருளே பிற மனிதர்களின் மனத்தை எந்த அளவுக்கு நாம் ஆள்கிறோம் என்பதுதானே!

நம்மில் சிலர் அங்கலாய்ப்பர், "இந்த உலகத்தில் யாருமே என்னைப் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்களே" என்று. அந்த நிலைக்குக் காரணம் என்ன? நம்மைப் பற்றித் தோண்டித் துருவி, முத்துக் குளித்து, நம் ஆழ்மனத்தில் பதுங்கியிருப்பதாக நாம் நம்பும் அந்த உன்னத உனர்வுகளை அறிந்து கொள்ளும் அளவிற்கு எவருக்கும் பொறுமையோ, நேரமோ, உந்துதலோ நிச்சயம் இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நம்முடைய  personality என்பது நாம் எவ்வாறு பிறரால் அறியப்படுகிறோம் என்பதுதான் - நாம் எவ்விதமாக நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம் என்பதல்ல. அதனால் நம்மை நாம் சரியான முறையில் வெளிக்காண்பிப்பது மிக அவசியம். இல்லாவிடில் நாம் முற்றிலும் தவறாக அறியப்பட ஏது உண்டு. ஆகையால் நம் அணுகுமுறையில் தவற்றை வைத்துக் கொண்டு, இந்த உலகத்தை குறை கூறுவதில் எந்தப் பயனும் இல்லை.

இன்னொருவரை எதிர்கொள்ளும் நேரத்தில் (transaction with fellow humans) நாம் கையாள வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

பிறரிடம் பழகும்போது நம் உண்மையான உணர்வுகளை அப்படியே வெளியில் கொட்டிவிடக் கூடாது. உணர்ச்சிப் பெருக்கு நம்மை ஆட்கொண்டு விட்டால் நம் எண்ண ஓட்டம், பேச்சு, செயல் எல்லாமே நம் உணர்வெழுச்சியின் ஆதிக்கத்தில் வந்துவிடும். அந்த இடத்தில் அறிவு பூர்வமான கன்ணோட்டங்கள் மழுங்கி விடும். Logic stops when emotions take over. அதன் விளைவாக கோப தாபங்கள், மன மாச்சரியங்கள், உறவு முறிவுகள் போன்ற விரும்பத் தகாத எதிர்வினைகளைப் பெற நேரிடும். உணர்ச்சி மேலீட்டால் பலர் நரம்பு புடைக்க கத்தி சண்டையிட்டுக் கொள்வதை தினமும் நாம் பார்க்கிறோம். ஆய்ந்து பார்த்தால் ஆதி காரணம் பைசாப் பெறாததாயிருக்கும். ஆனால் control இல்லாமல் வார்த்தைகளைக் கொட்டியதால் சகஜ நிலை திரும்ப முடியாமல் மேன்மேலும் மனஸ்தாபங்களை வளர்த்துக் கொண்டு போவர் பலர். "Asterix in Carcica" என்னும் காமிக்ஸில் பல தலைமுறைகளாக முடியாமல் இருக்கும் family feuds போல் "அவன் அப்படிச் சொன்னான்", "இல்லை, இவள்தான் இப்படிச் சொன்னாள்' என்ற நாவினால் சுடப்பட்ட வடுக்கள் லேசில் ஆராமல் புகைந்து கொண்டே இருக்கும்.

ஆகையால் நாம் பிறரிடம் பேசும்போது, எப்படிப் பேசினால் கேட்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமோ அப்படி உரைத்தால் தான் அவர்களை நம் வசப் படுத்த முடியும். சில நேரம் நாம் சிறிது கடுமையாக இருக்க வேண்டிய சூழ்நிலை வரும். அப்போதெல்லாம் நாம் காண்பிக்கும் கடும் முகம் நம் கட்டுப்பாட்டில் முழுதும் உள்ள ஒரு முகமூடியாக இருக்க வேண்டுமேயன்றி, உண்மையான கோபத்தின் வெளிப்பாடாக அமையக் கூடாது.

ஒரு வியாபார பேரம் பேசும் தருணத்திலோ, அல்லது மேலதிகாரிகளிடம் ஏதாவது உதவி கோரும் நேரத்திலோ நம் மனம் சிறிது புண்படும்படியான, அல்லது நம் அடிப்படை உணர்ச்சிகளுக்கு ஒவ்வாத பேச்சுக்களை கட்டாயம் கேட்க நேரிடும். அதே போல் நீங்கள் ஒரு நிறுவனத்தின் மேலாளராக இருந்தால் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தும்போது நம் மனம் மிகையாக எழுச்சியுறும் நிலைகள் ஏற்படுத்தப்படும். ஒரு provocation-ஐ உண்டு பண்ணி நம்மை ஒரு கொக்கியில் மாட்டி வலிப்பதற்கான strategy-யாகக் கூட நடக்க வாய்ப்புண்டு. அத்தகைய நேரங்களில் பொங்கியெழும் உனர்ச்சிகளை அப்படியே அணைபோட்டு, முகத்தில் ஒரு புன்முறுவலை வரைந்து கொண்டு, நம் வாயிலிருந்து வெளிவரத் துடிக்கும் கடுஞ்சொற்களை உதட்டிலேயே சிறைப்படுத்தி, தீர்மானமான, ஆனால் மிதமான சொற்களால் நம் எண்ணங்களை வெளிப்படுத்தினால்தான் நாம் தொடர்ந்து வெற்றி கொள்ள முடியும். அப்போதுதான் நாம் சிறந்த நிர்வாகியாக முடியும்.

சரி. உங்களில் சிலர் கேட்கலாம், "ஏன் நான் நானாக இருக்கக் கூடாது, ஏன் என் எண்ணங்களை பிறருக்காக மாற்றிக் காண்பிக்க வேண்டும்? ஏன் வேஷம் போட வேண்டும்?" என்று. "யதார்த்தவாதி வெகுஜன விரோதி" என்பார்கள். நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல நீங்கள் யாராக பிறரால் அறியப்படுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். நம் பேச்சுக்களும் செயல்களும் நம்மை எவ்வாறு இந்த சமுதாயத்தில் அடையாளம் காட்டுகின்றன என்பதைப் பொருத்துத்தான் பிறர் நம்மை எந்த விதத்தில் கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்கள் என்பது அமையும். ஆகையால் இந்த உலக நியதியே பிறருக்காக நாம் சிறிது விட்டுக் கொடுக்க வேண்டும் என்பதுதானே!

"ஹித வாதா" என்று சொல்லப்படுவது போல, "இங்கிதம்" அறிந்த நம் நடைமுறையால் நாம் "பிறர் விரும்பும் நாமா"க விளங்கி இந்த உலகமான நாடக மேடையில் நாம் அமைக்கும் காட்சி வெற்றிகரமாக அமையட்டும்!


 
 

  28 results returned for உன்னையறிந்தால் 12.81 (seconds)