Tamiloviam
ஜூன் 24 2004
தராசு
க. கண்டுக்கொண்டேன்
மேட்ச் பிக்சிங்
திரையோவியம்
முத்தொள்ளாயிரம்
பருந்துப் பார்வை
காந்தீய விழுமியங்கள்
பெண்ணோவியம்
வானவில்
உங்க.. சில புதிர்கள்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மேட்ச் பிக்சிங் : கிரிக்கெட் தொடர்களைப் பற்றிய ஒரு கண்ணோட்டம்
- பத்ரி சேஷாத்ரி
| Printable version |  

இந்தியாவின் கிரிக்கெட் சீசன் தொடங்கவிருக்கிறது. ஜூலையில் ஏசியா கப். அதைத் தொடர்ந்து ஆகஸ்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் ஹாலந்தில் மும்முனைப் போட்டி ஒன்றில் விளையாடுகின்றனர். ஹாலந்துக்குக் கிரிக்கெட்டைக் கொண்டு போகிறோம் பேர்வழி என்று நடக்கும் இந்தப் போட்டி முழுக்க முழுக்க இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா மூவரும் பணம் செய்வதற்காக மட்டுமே நடைபெறுகிறது. ஹாலந்தின் கிரிக்கெட் அமைப்புக்கு கிடைக்கவிருப்பது வெறும் அரங்க நுழைவுக் கட்டணம் மட்டுமே. தொலைக்காட்சி உரிமம் முதல் மற்ற பணம் கொழிக்கக் கூடிய அனைத்து உரிமங்களையும் விற்றுக் கிடைக்கும் பணத்தை இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மூவரும் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

அதைத் தொடர்ந்து செப்டம்பரில் இந்தியாவும் இங்கிலாந்தும் நாட்வெஸ்ட் கப் - மூன்று ஒருநாள் போட்டிகளில் - விளையாடுகின்றனர். உடனே ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை ஆட்டம் நடக்கிறது. அங்கும் இந்தியா-பாகிஸ்தான் இருவரும் முதல் கட்டத்திலேயே மோதுகின்றனர்.

இந்த நான்கு ஒருநாள் போட்டித்தொடர்களையும் தொடர்ந்து, அக்டோபரில் ஆஸ்திரேலியா இந்தியா வருகிறது. தொடர்ச்சியாக நான்கு டெஸ்டு போட்டிகள் விளையாடுகின்றனர். ஓர் ஒருநாள் ஆட்டமும் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. அடுத்து டிசம்பரில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் இரண்டு டெஸ்டு போட்டிகளில் விளையாடுகின்றது.

இது ஒருவகையில் நல்லதுதான். தொடர்ச்சியாக இந்தியா கிட்டத்தட்ட 10-12 ஒருநாள் போட்டிகளில் விளையாடும். அதைத் தொடர்ந்து வரிசையாக ஆறு டெஸ்டு போட்டிகள். இதனால் விளையாட்டு வீரர்கள் தங்களை ஒவ்வொரு போட்டிக்கும் சரியான முறையில் தயார்படுத்திக் கொள்ள முடியும்.

இப்பொழுதைக்கு ஒருநாள் போட்டிக்காக இந்திய அணியில் உள்ள வீரர்களைப் பற்றி சிறிது பார்ப்போம்.

ஆகாஷ் சோப்ரா ஆட்டத்தைத் துவக்க வேண்டுமா, கூடாதா என்பதைப் பற்றி இங்கு நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அக்டோபரில் பார்த்துக் கொள்ளலாம். இப்பொழுதைக்கு சேவாக், டெண்டுல்கர், கங்குலி மூவரில் இருவர் ஆட்டத்தைத் துவக்குவர். இதில் முக்கியமானவர் சேவாக். கடந்த சீசனில், ஆஸ்திரேலியாவிலும், பாகிஸ்தானிலும் சேவாக்கின் ஆட்டத்தைப் பார்த்தபின், இவர் தனது ஃபார்மைத் தக்க வைத்துக் கொள்வாரா என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கும்.

டெண்டுல்கரின் ஆட்டமும் முக்கியமானது. இவர் இப்பொழுது தனது இயல்பான அடித்தாடும் ஆட்டத்தை நன்கு குறைத்து விட்டு ஆட்டமிழக்காமல் ஆடுவதையே அதிகம் விரும்புகிறார். இதனால் அணியின் ஸ்டிரேட்டஜி எவ்வாறு மாறும் என்பது விளங்கவில்லை. ஒருவேளை டெண்டுல்கரை நான்காவது இடத்தில் விளையாடுமாறும் செய்யலாம். சேவாக், கங்குலி, லக்ஷ்மண், டெண்டுல்கர், திராவிட், யுவராஜ் சிங், மற்றொரு மட்டையாளர், நான்கு பந்து வீச்சாளர்கள் என்று அணியின் வரிசை இருக்கலாம். டெண்டுல்கர் இதை விரும்பமாட்டார் என்றே நினைக்கிறேன்.

லக்ஷ்மண் எவ்வளவுதான் சாதித்தாலும் மீண்டும் மீண்டும் தனது இடம் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது என்று வருத்தம் தெரிவித்திருந்தாராம். பதிலுக்கு கங்குலியும், அணித்தேர்வு நடக்கும்போது முதலில் எழுதப்படும் பெயர் லக்ஷ்மணுடையதுதான் என்று தெரிவித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் லக்ஷ்மண் இன்னமும் அதிகம் சாதித்தாக வேண்டியுள்ளது. அவர் தனது சராசரியையும், அணியில் உள்ள மற்றவர்களின் சராசரியையும் பார்த்தாலே தனது இடம் அவ்வளவு பாதுகாப்பானதில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். லக்ஷ்மணது இடம் டெஸ்டு போட்டிகளில் எவ்வளவுக்கெவ்வளவு உறுதியோ, அவ்வளவு உறுதியற்றது ஒருநாள் போட்டிகளில் என்பதை அவர் தெரிந்து கொள்ள வேண்டும்.

திராவிட் மீது விக்கெட் கீப்பிங் தொடர்ந்து திணிக்கப்படுவது வருந்தத்தக்கது. பார்திவ் படேல் இன்னமும் ஒருநாள் போட்டிகளில் நன்கு விளையாடக்கூடிய அளவுக்கு முன்னேறவில்லை. இப்பொழுதைக்கு இந்திய அணிக்குள் யாராவது இடம் பிடிக்க முயன்றால் விக்கெட் கீப்பிங்/பேட்டிங் இரண்டு திறமையுடனும் உள்ளே நுழையமுயற்சிப்பதே சமயோசிதமாகும்.

யுவராஜ் சிங் தனது இடத்தை தக்க வைத்துக்கொண்டு விட்டார் என்றே தோன்றுகிறது. தினேஷ் மோங்கியா, ஹேமங் பதானி, ரோஹன் காவஸ்கர், மொஹமத் காயிஃப் ஆகியோரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு கிடைக்கப் போகிறது. திறமையின் அடிப்படையில் காயிஃப் மீதுதான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஆனால் காவஸ்கரை அணியில் நுழைக்க அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும். காயிஃப், பதானி, மோங்கியா மூவருமே பந்து வீச்சாளர்கள் கிடையாது. அவ்வப்போது கையைச் சுழற்றி ஓரிரு ஓவர்களை வீசுவார்கள். ரோஹன் காவஸ்கர் பந்து வீச்சிலும் சுமார், பேட்டிங்கிலும் சுமார்தான். இங்கும் புதியதொரு ஆல் ரவுண்டு வீரர் வருவதற்கும் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.

ஜாகீர் கானின் ஃபிட்னெஸ் மிகுந்த கவலையளிக்கிறது. அவர்தான் அணியையே தாங்கப்போகிறார் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆஷீஸ் நேஹ்ரா எப்பொழுதும் நாலைந்து ஓவர்கள் வீசியதும் கையையோ, காலையோ முறித்துக்கொள்வார் என்பது எதிர்பார்த்திருந்தது. ஆனால் இருவரும் இப்பொழுது மருத்துவமனையிலும், மைதானத்திலும் மாறி மாறி காலத்தைக் கழிக்கப்போவதுபோலத் தோன்றுகிறது. எங்கிருந்தோ வந்த இர்ஃபான் பதானும், எதிர்பாராத பாலாஜியும் ஓரளவிற்கு பந்து வீசுகிறார்களோ, பிழைத்தோம். அதிலும் பாலாஜி பாகிஸ்தானில் வீசிய விதம் மனதுக்கு நிறைவைத் தருகிறது. இப்பொழுதைக்கு பாலாஜியே இந்தியாவின் முன்னணிப் பந்து வீச்சாளராக களமிறங்குவார். ஹர்பஜன் சிங் மீண்டும் விளையாட வந்திருப்பதும் இந்திய அணிக்கு மிகுந்த பலத்தைக் கொடுக்கும். அமித் பண்டாரி, முனாஃப் படேல் ஆகிய புது ரத்த வேகப்பந்து வீச்சாளர்களுடன், கும்ப்ளே, கார்திக் சேர்ந்து பந்து வீச்சு டிபார்ட்மெண்ட் தேவலாம்.

என் கணிப்பு: இந்தியா ஏசியா கப்பை வெல்லும். நாட்வெஸ்ட் கப்பிலும் வெற்றியடையும். ஹாலந்த் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை இரண்டிலும் இறுதிப் போட்டிக்குச் செல்லும்!

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |