Tamiloviam
ஆகஸ்ட் 12 2004
தராசு
வேர்கள்
மேட்ச் பிக்சிங்
பருந்துப் பார்வை
முத்தொள்ளாயிரம்
நியுஜெர்சி ரவுண்டப்
க. கண்டுக்கொண்டேன்
கட்டுரை
காந்தீய விழுமியங்கள்
பேட்டி
3D கதைகள்
கவிதை
புதிய தொடர்
திரையோவியம்
கோடம்பாக்கம்
இசை உலா
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
முத்தொள்ளாயிரம் : சோழன் வீதி உலா
- என். சொக்கன்
| Printable version |  

பாடல் 33

தமிழர்களின் தலைவனாகிய சோழன், வீதி உலா வருகிறான். அவனுடைய தேர் வருகிற வழிநெடுகிலும் கூட்டம் ஏராளமாய்க் கூடியிருக்கிறது, ஆண்களும், பெண்களும் அவனைப் பார்ப்பதற்காக முண்டியடிக்கிறார்கள்.

அந்தக் கும்பலில் ஒரு இளம் பெண் - அவளுடைய மனதைக் கவர்ந்த சோழன் வந்துவிட்டானா என்று தேடுவதுபோல், கூட்டத்தினிடையே அடிக்கடி எகிறிக் குதிக்கிறாள். அவன் இன்னும் வரவில்லை என்று தெரிந்ததும், அவளுடைய முகம் வாடிவிடுகிறது.

'அரசர் பக்கத்துத் தெருவை நெருங்கிவிட்டார், இன்னும் சில நிமிடங்களில் இங்கே வந்துவிடுவார்' என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள், ஆனால் அவளுடைய மனம் அந்தச் சமாதானங்களை ஏற்பதில்லை - எதையோ இழந்துவிட்டவள்போல் சாலையில் தேடிக்கொண்டிருக்கிறாள்.

இதையெல்லாம் கவனித்த அவளுடைய தாய்க்கு, பயம் உண்டாகிறது - அரசன் இல்லாதபோதே, அவன்மீது இத்தனை ஆசையோடு இருக்கிற இந்தப் பெண், உறந்தையர் தலைவனாகிய அவனுடைய கம்பீரத்தைப் பார்த்தபிறகு, அவன் பின்னே போய்விடுவாளோ என்று பயப்படுகிறாள் அந்தத் தாய்.

ஆகவே, அவள் தன்னுடைய மகளைப் பிடித்து இழுத்துக்கொண்டுபோய், வீட்டினுள் அடைத்துப் பூட்டிவிடுகிறாள்.

உள்ளே அடைக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, உயிரே போனதுபோலாகிவிடுகிறது, 'அரசர் வரும் நேரத்தில், இந்த அம்மா என்னை இப்படி அடைத்துவைத்துவிட்டாளே.', என்று பதறுகிறாள் அவள், 'அம்மா, கதவைத் திற. என்னை ஏன் அடைத்துவைக்கிறாய் ?' என்று கதறியபடி, கதவை இடி-இடியென்று இடிக்கிறாள், ஆனால் அப்போதும், தாயின் மனம் இரங்கவில்லை.

இந்தச் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்க்கிறார்கள், 'என்ன ஆச்சு ?' என்று விசாரிக்கிறார்கள், 'உள்ளே யார் அது கதவை உடைப்பது ?'

'என் மகள்தான் - சோழனைப் பார்த்து அவள் மையல் கொண்டுவிடக்கூடாதே என்பதற்காக, அடைத்துவைத்திருக்கிறேன்.', என்கிறாள் அந்தத் தாய்.

'அடி பைத்தியக்காரி. முதலில் கதவைத் திறந்து, அவளை வெளியே விடு !', என்கிறார்கள் வந்தவர்கள்.

'அதெல்லாம் முடியாது.', என்று பிடிவாதம் பிடிக்கிறாள் தாய், 'அவள் சோழனைப் பார்க்கக்கூடாது.'

'ஐயோ, உனக்கு விபரமே புரியவில்லை.', என்று தலையில் அடித்துக்கொள்கிறாள் ஒரு கிழவி, 'நம் ஊர்ப் பெண்கள் சோழனைப் பார்ப்பதும், அவன்மீது காதல் கொள்வதும் வழக்கமான விஷயம்தானே ? அதனால் ஏதும் தப்பாக நடந்துவிடாது, அப்படியே ஏதும் தவறாகிவிட்டாலும், அதைப் பின்னால் பார்த்துக்கொள்ளலாம், இப்போது முதலில் கதவைத் திறந்துவிடு.', என்கிறாள் அவள்.

'ஏம்மா, நீ இப்படிப் பெண்ணை அடைத்துவைத்துவிட்டாய், காதலனைப் பார்க்காத ஏக்கத்தில், அவள் செத்துப்போய்விட்டால் என்ன செய்வாய் ?', என்று அதட்டுகிறாள் இன்னொருத்தி, 'கதவைத் திறந்து, அவளை வெளியே விடு, உறந்தையர்களின் தலைவன் சோழனை அவள் கண் குளிரப் பார்க்கட்டும்.'

இவர்கள் சொல்வதைக் கேட்டதும், தாய் அரை மனதாய்க் கதவைத் திறக்கிறாள். விடுபட்ட இளம்பெண், விறுவிறுவென்று சாலையை நோக்கி ஓடுகிறாள்.

சிறிது நேரத்தில், சோழனின் தேர் அந்தத் தெருவில் நுழைகிறது. குளிர்ந்த மாலை அணிந்த சோழனை மனதாரப் பார்த்து மகிழ்கிறாள் அந்தப் பெண்.


திறந்திடுமின், தீயவை பிற்காண்டும்; மாதர்
இறந்துபடின் ஏதம்தான் என்னாம் - உறந்தையர்கோன்
தண்ணார மார்பின் தமிழ்நர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு.

(திறந்திடுமின் - திறந்துவிடுங்கள்
பிற்காண்டும் - வந்தால், பிறகு பார்த்துக்கொள்வோம்
இறந்துபடின் - இறந்துவிட்டால்
ஏதம் - துன்பம் / குற்றம்
கோன் - தலைவன்
தண் - குளிர்ச்சி
ஆரம் - மாலை
தமிழ்நர் - தமிழர்)


பாடல் 34

சாலையோரமாய் நின்று, சோழன் வளவனைத் தரிசித்துக்கொண்டிருக்கிறாள் ஒரு பெண், நீண்ட இதழ்களைக்கொண்ட நீல நிறக் குவளை மலர்களைத் தொடுத்து, மாலையாய் அணிந்திருக்கிறான் சோழன், அவனுடைய அழகையும், கம்பீரத்தையும் கண்கொட்டாமல் ரசிக்கிறாள் அந்தப் பெண் - ஆனால், அவன் உலா வரும் யானையைப் பார்த்ததும், அவளுக்கு திடீர் கோபம்.

கோபத்துக்குக் காரணம் - அது ஒரு பெண் யானை.

'ஏய், நீயும் ஒரு பெண்தானே ? பெண்மைக்குரிய நாணம் உனக்கில்லையே.', என்று அந்த யானையைப் பார்த்து அதட்டுகிறாள் அந்தப் பெண், 'சோழன் உன்மீது அமர்ந்திருக்கிறான் என்ற திமிரில், இப்படி விறுவிறுவென்று ஓடுகிறாயே. வெட்கங்கெட்டவளே.'

இவள் திடீரென்று இப்படிக் கோபப்படுவதைப் பார்த்ததும், அந்த யானை திகைத்துப்போகிறது. பாவம், ஆடி அசைந்து நடக்கும் அந்த யானை, நினைத்தாலும் அப்படி வேகமாய் ஓடமுடியுமா என்ன ?

ஆகவே, அந்தப் பெண் யானை, 'நான் என்ன தவறு செய்துவிட்டேன் ?' என்பதுபோல் அவளைப் பரிதாபமாய்ப் பார்க்கிறது.

'காவிரி நீர் சூழந்த எங்கள் சோழ நாட்டுப் பெண்களெல்லாம், இப்படி விறுவிறுவென்று வேகமாய் நடக்கமாட்டார்கள். தரைக்கு வலித்துவிடுமோ என்பதுபோல் நிதானமாய் அடியெடுத்துவைத்து நடப்பதுதான் அவர்களின் பழக்கம்.', என்று விளக்குகிறாள் அவள், 'நீயும் சோழ நாட்டைச் சேர்ந்த பெண்தானே ? அந்தப் பெண்மை குணமெல்லாம் உனக்கு ஏன் இல்லை ?'

அவளுடைய இந்த அதட்டலில் கலங்கிப்போன யானை, 'இப்போது நான் என்ன செய்யவேண்டும் ?', என்று அவளைக் கேட்காமல் கேட்கிறது.

'இப்படி தடதடவென்று ஓடாமல், மற்ற எல்லா சோழ நாட்டுப் பெண்களைப்போல, நீயும் கொஞ்சம் மெதுவாக, நிதானமாக நடந்து செல். அது போதும்.', என்கிறாள் அவள்.

இந்த விளக்கத்தையும், கட்டளையையும் கேட்டதும், அந்த யானைக்கு எல்லாம் புரிந்துவிடுகிறது, 'நான் அப்படி மெதுவாக நடந்தால், நீங்களும் சோழனை அதிக நேரம் பார்த்து ரசிக்கலாம், அதுதானே உங்கள் திட்டம் ?', என்று நினைத்துக்கொண்டபடி தனக்குள் சிரித்துக்கொள்கிறது அந்தப் பெண் யானை.


நீள்நீலத் தார்வளவன் நின்மேலான் ஆகவும்,
நாணீர்மை இன்றி நடத்தியால் நீள்நிலம்
கண்தன்மை கொண்டுஅலரும் காவிரி நீர்நாட்டுப்
பெண்தன்மை அல்ல பிடி.

(தார் - மாலை
நின் மேலான் - உன்மேல் அமர்ந்தவன்
நாணீர்மை - வெட்கம்
நடத்தியால் - நடக்கிறாய்
அலரும் - மலரும்
பிடி - பெண் யானை)

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |