Tamiloviam
அக்டோபர் 7 2004
தராசு
கார்ட்டூன்
மேட்ச் பிக்சிங்
காந்தீய விழுமியங்கள்
சிந்திக்கச்செய்த சில சிங்கைச்செய்திகள்
முத்தொள்ளாயிரம்
சமையல்
நாங்க ரெடி நீங்க ரெடியா ?
திரைவிமர்சனம்
பெண்ணோவியம்
 
  முதல் பக்கம்
தொடர்கள்
யுனிகோடில் தேடல்
சென்ற இதழ்கள்
மேட்ச் பிக்சிங் : கும்ப்ளே 400
- பத்ரி சேஷாத்ரி
| Printable version |  

தன் 85ஆவது டெஸ்டில், அனில் கும்ப்ளே 400 விக்கெட்டுகளைப் பெற்றுள்ளார். இந்தியாவில் கபில்தேவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கிறார். இன்னும் சில வருடங்கள் விளையாட வாய்ப்பு கிடைத்தால் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் என்ற பெருமையை கும்ப்ளே அடைவார்.

ஒருவர் முக்கியமான மைல் கல்லை அடையும்போது பொதுவாக அனைவருமே அவரைப் பாராட்டுவார்கள். கும்ப்ளே பாராட்டுக்குரியவரே. அதில் சந்தேகமில்லை. இந்தியாவிற்காக பல வெற்றிகளை இந்தியாவில் பெற்றுத் தந்திருக்கிறார். கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் வரையில் இவர் வெளிநாடுகளில் குறிப்பிடத்தகுந்த மாதிரி டெஸ்ட் போட்டிகளில் எதுவும் செய்ததில்லை. அந்நேரத்தில் ஹர்பஜன் சிங் இந்தியாவின் முதன்மை ஸ்பின்னராக ஆகியிருந்தார். கேப்டன் கங்குலி, பலமுறை கும்ப்ளேயை அணியிலிருந்து விலக்கி வைத்து ஹர்பஜனை மட்டும் விளையாட வைத்திருந்தார்.

ஆனால் 2003-04இல் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் சுற்றுப் பயணங்களின் போது ஹர்பஜன் கைவிரல் எலும்பு முறிவால் கும்ப்ளே தனக்குக் கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். முதல்முறையாக வெளிநாடுகளில் நிறைய விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்தியா ஜெயிப்பதற்கு முக்கியக் காரணமாகவும் இருந்தார்.

400 விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், ஆடுகளத்தில் கும்ப்ளே ஒரு பிரம்மாண்டமான ஆகிருதியாக இல்லை என்பதே என் எண்ணம். கும்ப்ளே தன்னை எதிர்த்தாடும் மட்டையாளர்கள் மனதில் பயத்தை உண்டு பண்ணக்கூடிய ஒரு நிலையில் இல்லை. முரளிதரனோ, ஷேன் வார்னோ - பந்து வீசும்போதே எப்பொழுது விக்கெட் விழும் என்ற ஒரு நிலையைத் தோற்றுவிப்பவர்கள். அவர்களது ஒவ்வொரு பந்தும், முந்தைய பந்தை விட மாறுபட்டிருக்கும். மட்டையாளரை ஏமாற்றி, முழுவதுமாக அவரைக் குழப்பி, விக்கெட்டைப் பறிப்பார்கள். இந்தியாவில் அதுபோன்று இப்பொழுது பந்து வீசக்கூடியவர் ஹர்பஜன்தான்.

பெங்களூர் டெஸ்டில் கும்ப்ளே எடுத்த மூன்று விக்கெட்டுகளுமே சிறப்பான பந்து வீச்சுக்குக் கிடைத்த விக்கெட்டுகள் அல்ல. தவறான பேட்டிங்கினால் விளைந்தது.

கும்ப்ளே இத்தனை அனுபவம் வாய்ந்தவராக இருந்தாலும் முதல் டெஸ்ட் விளையாடும் மைக்கேல் கிளார்க்கை கட்டி வைக்க முடியாது அவஸ்தைப்பட்டார். பந்துகளை அவ்வப்போது லெக் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருந்தார். கிளார்க்கும் அவற்றை எல்லைக்கோட்டுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார்.

கும்ப்ளே தொடக்கத்திலிருந்து இன்றுவரை பந்தை அதிகமாக சுழற்றக்கூடியவர் இல்லை. ஒரு சுழற்பந்து வீச்சாளருக்குத் தேவையானதை விட அதிகமான வேகத்தில் பந்துகளை வீசக்கூடியவர். ஆடுகளம் மோசமாக இருந்தால், அதன் மேற்பரப்பு உடைந்த மண் துகள்களால் மூடப்பட்டிருந்தால், கும்ப்ளேயை விளையாடுவது மிகக் கடினம். சமச்சீராக பந்துகள் எம்பும் களங்களில் கூட தொடக்கத்தில் கும்ப்ளே நிறைய விக்கெட்டுகளைப் பெற்றார். பின் கும்ப்ளேயின் துல்லியம் குறையத் தொடங்கவும், அவரது பந்துவீச்சை கிட்டத்தட்ட மித-வேகப் பந்து வீச்சாளரின் பந்துகளைப் போல மட்டையாளர்கள் விளையாடத் தொடங்கவும் கும்ப்ளேயின் வெற்றிகள் குறைய ஆரம்பித்தன.

கும்ப்ளேயின் முக்கிய ஆயுதம் அவர் வீசும் பிளிப்பர்கள் (Flippers). சற்றே அளவு குறைவாக வீசப்படும் பந்து இது. காற்றிலே வரும்போதே அதன் உயரம் சடாரென கீழிறங்கி, தரையில் பட்டதும் இன்னமும் வேகமாக ஸ்டம்பை நோக்கி வரும். கிட்டத்தட்ட நேராக வரும் பந்து இது. பந்து ஸ்டம்பில் படாவிட்டாலும், எல்.பி.டபிள்யூ வாவது கிடைக்கும். கும்ப்ளே இந்தப் பந்தை மிக அழகாக வீசுவார். ஆனால் இப்பொழுது அவ்வளவாகக் காணக் கிடைப்பதில்லை.

லெக் ஸ்பின்னர்களின் மற்றுமொரு முக்கிய ஆயுதம் கூக்ளி. ஒரு லெக் ஸ்பின்னரைப் போடும் அதே கையசைவில், கடைசியில் மணிக்கட்டை அதிகமாகத் திருப்பாமல், விரல்களால் பந்தை எதிர்ப்புறத்தில் திருப்புவது. இதனால் பந்து தரையில் பட்டதும் ஆஃப் ஸ்பின்னராக வரும். கும்ப்ளே யின் லெக் ஸ்பின்னர்களே அதிகம் திரும்பாத நிலையில் கூக்ளியால் அவருக்கு என்றுமே அதிகப் பலன் கிடைத்ததில்லை. ஹர்பஜன் சிங்கின் தூஸ்ராவுக்கு இருக்கும் பலன் கும்ப்ளேயின் கூக்ளிக்கு கிடையாது.

என்னடா, ஒரேயடியாக கும்ப்ளேயை மட்டம் தட்டுவதிலேயே நேரத்தை செலவழிக்கிறானே என்று நினைக்காதீர்கள். குறைந்த வீச்சை வைத்துக் கொண்டே கும்ப்ளே ஒழுங்கு, செய்நேர்த்தி ஆகியவற்றாலும், தன் ஸ்டாமினாவாலும் தொடர்ந்து பந்து வீசிக்கொண்டேயிருந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தனக்கு ஆதரவான ஆடுகளம் கிடைக்கும்போது எவ்வளவு விக்கெட்டுகளைப் பெற முடியுமோ, அத்தனையையும் பெற்று விடுவார்.

இப்பொழுதெல்லாம் கும்ப்ளேயின் பந்துகளை வலுவாக எதிர்கொண்டு மட்டையாளர் அடிக்கத் தொடங்கியதும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாது கும்ப்ளே தடுமாறுகிறார். முன்னர் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படாது துல்லியமாகப் பந்து வீசுவது மட்டுமே தன் குறி என்று இருந்தார். இழந்த அந்தத் திறமையை மீண்டும் எப்படியாவது அவர் பெற்றால்தான் இன்னமும் இரண்டு வருடங்கள் இந்தியாவிற்காக விளையாட முடியும். அத்துடன் விடாது லெக் ஸ்டம்பிற்கு வெளியே பந்து வீசுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மிக அதிகமாக ஸ்பின் எடுக்கும் ஆடுகளங்களில் கூட கும்ப்ளே தன் பந்துகளை அதிகமாகத் திருப்பப் போவதில்லை.

ஆஃப் ஸ்டம்ப், அதற்கு வெளியே மட்டும் என்று பந்து வீசுவது, துல்லியமாகப் பந்து வீசுவது, அவ்வப்போது கூக்ளி, பிளிப்பர் ஆகியவற்றைப் பிரயோகித்து எதிராளியைத் தடுமாற வைப்பது, நாலைந்து பவுண்டரிகள் போய்விட்டால் அதைப் பற்றிக் கவலைப்படாது, முகத்தைத் தொங்கப்போடாது காரியத்திலேயே கண்ணாக இருப்பது என்று இருந்தால் கும்ப்ளே வாழ்நாளில் 500 விக்கெட்டுகளைத் தொட முடியும்.

செய்வாரா?

PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |