Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
பில்லியன் டாலர் கனவுகள் - பாகம் : 3
- சசிகுமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}


Lenin & Stalinஜோசப் ஸ்டாலின், சோவியத் யுனியனின் தலையெழுத்தை மட்டுமல்லாமல் உலகின் தலையெழுத்தையே மாற்றிய பெருமைக்குரிய சரித்திர நாயகன். ஸ்டாலினின் உண்மையான பெயர் ஜோசப் டிஜுகாஸ்வில்லி. சிறு வயது முதலே கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனினின் சத்தாந்தங்கள் மீது அதிக ஈடுபாடு கொண்டு பல புரட்சி இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றியவர். இதனால் 8 முறை கைது செய்யப்பட்டு சைபீரியா சிறையில் அடைக்கப்பட்டார். 7 முறை சிறையில் இருந்து தப்பித்து பல புனைப் பெயர்களில் புரட்சி இயக்கங்களில் தொடர்ந்து ஈடுபட்டார். அவர் சூட்டிக் கொண்ட பல புனைப் பெயர்களில் ஒன்று தான் ஸ்டாலின். ஸ்டாலின் என்ற பெயருக்கு இரும்பைப் போன்றவன் என்று பொருள். தனக்கு ஏற்ற கம்பீரமான பெயர் இது தான் என்று ஸ்டாலின் முடிவு செய்தார். பின் அதுவே நிலைத்தும் விட்டது.

1917ல் நடந்த ரஷ்ய புரட்சியில் ஸ்டாலினின் பங்களிப்பு பற்றி பல கருத்துக்கள் நிலவுகிறது. அவருடைய பங்களிப்பு மிகவும் குறைவு என்று ஸ்டாலினின் எதிர்ப்பாளர்களும், அவர் பங்கு மிகவும் முக்கியமானது என்று ஸ்டாலின் ஆதரவாளர்களும் கருதுகின்றனர். அந்த விவகாரத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை என்றாலும் லெனினுக்கு அடுத்த நிலையில் இருந்த பலரில் ஸ்டாலினும் ஒருவர் என்பது தான் உண்மை. 1917ல் நடந்த மத்திய கமிட்டி (Central Commitee) தேர்தலில் ஸ்டாலின் மூன்றாவது பெரும்பான்மையான வாக்குகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1922ல் ஸ்டாலின் கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அன்றைக்கு கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி என்பது ஒரு சாதாரண பதவி. கட்சிக்கு உறுப்பினர்களை சேர்ப்பது தான் அந்தப் பதவியின் முக்கியமான வேலை. லெனின் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பொழுது, ஸ்டாலின் இந்தப் பதவியைக் கொண்டு தன்னுடைய ஆதரவாளர்களை கட்சிக்குள் அதிக அளவில் சேர்த்தார். சாதாரணமான பொதுச் செயலாளர் பதவியை சர்வ வல்லமை கொண்ட ஒரு பதவியாக மாற்றினார். ஸ்டாலினின் மறைவுக்கு பிறகும் அந்தப் பதவியின் முக்கியத்துவம் குறையவே இல்லை. கம்யுனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தான் சோவியத் யுனியனின் அதிபர் என்ற வழக்கம் இப்படி தான் ஆரம்பமாகியது.

Stalin1924ல் லெனினின் மறைவுக்கு பிறகு கம்யுனிஸ்ட் கட்சியில் நடந்த அதிகாரப் போட்டியில் ஸ்டாலின் கை ஓங்கியது. போல்ஷ்விக் கட்சியில் உள்ள மிதவாதிகளுக்கும், தீவிர இடதுசாரிகளுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டது. ஸ்டாலினின் முக்கிய எதிர்ப்பாளரான லியான் ட்ராஸ்கி கம்யுனிச புரட்சி உலகளவில் ஏற்பட்டால் தான் ஒரு சமத்துவமான சமுதாயத்தை அமைக்க முடியும் என்று வலியுறுத்தினார். ஆனால் ஸ்டாலின் சோவியத் யுனியனில் மட்டும் சோசலிசம் உருவானால் போதுமானது என்று கருதினார். ரஷ்ய புரட்சிக்கு முந்தைய காலங்களில் இருந்த மோசமான வாழ்க்கைத் தரம், ரஷ்ய புரட்சிக்கு பின்பும் எந்த வித பெரிய முன்னேற்றம் இல்லாத சூழல் இவற்றுக்கிடைய லியான் ட்ராஸ்கியின் "உலகளவில் புரட்சி" என்ற கருத்து மக்களிடையே எடுபடவில்லை. ஸ்டாலின், தற்போதைய சூழலில் சோவித் யுனியனை முன்னேற்றுவது தான் முக்கியம் என்ற மிதவாத கருத்து உடையவர். சோவியத் யுனியனை முன்னேற்ற வேண்டுமானால் அண்டை நாடுகளுடன் நல்லுறவை வளர்த்து கொள்ள வேண்டும், உலகப் புரட்சி சரியான உத்தி அல்ல என்பது ஸ்டாலினின் நிலை. அதற்குத் தான் அதிக ஆதரவு இருந்தது.

1927ல் நடந்த கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் அவரது எதிர்ப்பாளரான லியான் ட்ராஸ்கி மற்றும் அவரது ஆதரவாளர்களை கம்யுனிஸ்ட் கட்சியில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றினார். ஸ்டாலின் தன் எதிர்ப்பாளர்களை அழிக்கத் தயங்கியதில்லை. லியான் ட்ராஸ்கி பிறகு நாடு கடத்தப்பட்டார். ஸ்டாலினின் ஏஜண்ட்களால் அவர் மெக்ஸிகோவில் கொலை செய்யப்பட்டார் என்றும் நம்பப்படுகிறது.

கம்யுனிஸ்ட் கட்சியின் அதே கூட்டத்தில் ஸ்டாலின் "அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளை விட சோவியத் யுனியன் சுமார் 100 ஆண்டுகள் பிந்தங்கி இருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் சோவியத் யுனியனை முன்னேறிய நாடாக மாற்றா விட்டால் பிற நாடுகளால் நசுக்கப்படுவோம். சோவியத் யுனியனை முன்னேற்ற வேண்டுமானால் கனரகத் தொழில்கள் (Heavy Industires) உருவாக்கப்பட வேண்டும். தொழில் துறை முன்னேற வேண்டும். சோவியத் யுனியனை ஒரு முன்னேறிய நாடாக மாற்றுவது தான் தனது லட்சியம்" என்று முழங்கினார். அதன்படி லெனினின் புதிய பொருளாதார கொள்கைகளை ( New Economic Policy ) மாற்றி ஐந்தாண்டு திட்டங்களை (5 - Year Plan) கொண்டு வந்தார். இந்த ஐந்தாண்டு திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டக் கமிஷன் ( Planning commission) அமைக்கப்பட்டது. இதற்கு கோஸ்ப்ளான் (Gosplan) என்று பெயர்.

இதன்படி சோவியத் யுனியனில் எந்த தொழில் தொடங்கப்படும், எந்த தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும், தொழில்களுக்கு எந்தளவுக்கு முதலீடு செய்யப்படும், எந்தளவுக்கு அந்த தொழிலில் இருந்து உற்பத்தி இருக்க வேண்டும் என்ற அனைத்தையும் திட்டக் கமிஷன் முடிவு செய்யும். இந்த தொழில்களை நடத்த ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்து மேலாளர்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு ஆலைக்கும் ஒரு உற்பத்தி இலக்கு வழங்கப்படும். அதன் மேலாளர்கள் அந்த இலக்கை அடைந்தே தீர வேண்டும். இதன்படி கொண்டு வரப்பட்ட முதல் ஐந்தாண்டு திட்டத்தால் சோவியத் யுனியனில் கனரகத் தொழில்கள் பெரும் வளர்ச்சி பெற்றன.

1928 முதல் 1940 வரையிலான 22 ஆண்டுகளில் சோவியத் யுனியனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP - Gross Domestic Product) 13-14% என்ற அளவுக்கு உயர்ந்தது. 1928க்கு முந்தைய நிலையை விட எண்ணெய் உற்பத்தி 3மடங்கு, இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி 4மடங்கு, நிலக்கரி உற்பத்தி 5மடங்கு என பிரமிக்கத்தக்க அளவுக்கு உயர்ந்தது. இந்தக் காலக்கட்டத்தில் சோவியத் யுனியன் பெற்ற வளர்ச்சி போன்று இது வரை வேறு எந்த நாடும் அடைந்ததில்லை. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இந்த வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடோ, பிற நாடுகளின் உதவியோ காரணம் அல்ல. இது முழுக்க முழுக்க சோவியத் யுனியனின் தனிப்பட்ட உயர்வு.

இந்த உயர்வுக்கு காரணம் ஸ்டாலினின் தலைமை என்பதில் சிறிதும் ஐயமில்லை. தொழில் துறை பெருக வேண்டுமானால் விவசாயம் பெருகி அதன் உற்பத்தியும் அதிகரிக்க வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்தார். விவசாயத்தில் உற்பத்தி பெருகினால் தான் உணவுப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைக்க முடியும். உணவுப் பொருள்களின் விலை கட்டுக்குள் இருந்தால் தான் வாழ்க்கைத் தரம் மலிவாக இருக்கும். தொழில் துறையில் முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்று ஸ்டாலின் கருதினார். அதன்படி விவசாயத்தில் கூட்டுப் பண்ணைத்திட்டம் (collectivisation) கொண்டு வரப்பட்டது.

ஸ்டாலினின் பல திட்டங்களில் அதிகம் விமர்சிக்கப்பட்டது கூட்டுப் பண்ணைத் திட்டம் தான். இந்த திட்டத்தின் படி பல விவசாய நிலங்கள் ஒன்று சேர்க்கப்பட்டு கூட்டுப்பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தப் பண்ணையில் நவீன இயந்திரங்கள் மற்றும் ட்ராக்டர்கள் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க முடியும் என்று ஸ்டாலின் நினைத்தார். இதில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் இருக்காது. ஆனால் உற்பத்தியில் ஒரு பங்கு அவர்களுக்கு வழங்கப்படும். ஸ்டாலின் பல எதிர்ப்புகளை இந்த திட்டம் மூலம் எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது. ஆனால் எதிர்ப்புகளை ஸ்டாலின் நசுக்கினார். இந்த திட்டம் பற்றி எழுதிய பல வெளிநாட்டு எழுத்தாளர்கள் இந்த திட்டத்தின் வெற்றியை குறித்து அதிகம் எழுதவில்லை. ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த ஸ்டாலின் மேற்கொண்ட சர்வாதிகார நடவடிக்கைகளை பற்றி தான் அதிகம் எழுதியுள்ளனர். கூட்டுப் பண்ணைத் திட்டம் மூலம் தானிய உற்பத்தி அடுத்த வந்த ஆண்டுகளில் பெருகியது.

சோவியுத் யுனியன் பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டுமெனில் கல்வியறிவு, சுகாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவையும் உயர வேண்டும் என்று ஸ்டாலின் நினைத்தார். கல்வித் திட்டம் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல் தொழில்துறைக்கு தேவைப்படும் வகையில் உருவாக்கப்பட்டது. கல்லுரிகளில் இருந்து நிறைய பொறியாளர்கள் உருவாக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு அறிவியல் முன்னேற்றத்தில் சோவியத் யுனியன் மிகவும் பிந்தங்கி இருப்பதை ஸ்டாலின் உணர்ந்தார். அறிவியல் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

1928க்கு முன்பு வரை ஒரு ஏழை நாடாக, அறிவியல் வளர்ச்சியில் பிந்தங்கிய நாடாக இருந்த சோவியத் யுனியனை ஸ்டாலின் தனது திறமையான தலைமையின் மூலம் ஒரு அல்ட்ரா மார்டன் நாடாக, உலகின் வல்லரசாக உருவாக்கினார். பொருளாதாரம், கல்வி, அறிவியல், சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளிலும் சோவியத் யுனியனை உலக நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக ஸ்டாலின் மாற்றினார். ஸ்டாலின் அமைத்த வலுவான அடித்தளத்தில் தான் அவரது மறைவுக்கு (1953) பின்பும் சோவியத் யுனியன் உலகின் வல்லரசாக நீடித்தது. அதற்கு முக்கிய உதாரணம் சோவியத் யுனியன் விண் மற்றும் ஏவுகணை வளர்ச்சியை கூறலாம்.

Sputnik Satellite1957, அக்டோபர் 4, சோவியத் யுனியன் "ஸ்புட்னிக்" செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பியது. விண்ணுக்கு அனுப்பப்பட்ட உலகின் முதல் செயற்கைகோள் இது தான். உலகையே அச்சரியப்படுத்திய நிகழ்வு அது. சோவியத் யுனியனின் இந்த வளர்ச்சி அமெரிக்காவை மிரள வைத்தது. இதன் எதிரொலியாகத் தான் NASA அமைப்பு அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்டு சோவியத் யுனியனுக்கு எதிரான தனது ஆராய்ச்சியை அமெரிக்கா துரிதப்படுத்தியது. இதன் பிறகு சோவியத் யுனியன் தொடர்ந்து விண் ஆராய்ச்சியில் தனது வெற்றியை பல முறை நிருபித்துக் கொண்டே இருந்தது.

ஸ்டாலின் தன் எதிரிகளையும், தன் கருத்துக்கு எதிராக இருந்தவர்களையும் கொன்று குவித்த சர்வாதிகாரி தான் என்றாலும் அவர் நிகழ்த்திய பொருளாதார சாதனையை வேறு எந்த நாட்டின் தலைவரும் இது வரை சாதிக்கவில்லை.

ஸ்டாலினின் வெற்றி பல நாடுகளின் பொருளாதாரக் கொள்கையை மாற்றியது. சீனா கம்யுனிச சித்தாந்தத்தை தன் கொள்கையாக அறிவித்தது. ஸ்டாலினின் ஐந்தாண்டு திட்டங்களை பின்பற்ற தொடங்கியது. இது போன்று பல நாடுகள் தங்கள் நாட்டின் வெற்றிக்கு கம்யுனிசம் தான் ஏற்றது என்று முடிவு செய்தன. இந்தியாவிலும் ரஷ்யாவின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.


இந்திய விடுதலைப் போராட்டத்தின் பொழுது எதிர்கால இந்திய பொருளாதாரக் கொள்கை குறித்து இரு வேறான கருத்து நிலவியது. ஐரோப்பா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த ஜவர்கர்லால் நேரு அங்கு வளர்ந்து வரும் கனரகத் தொழில் மேல் அதிக நாட்டம் கொண்டிருந்தார். சோவியத் யுனியனின் வெற்றியும் அதன் திட்டங்களும் அவரை மிகவும் கவர்ந்தது. இந்தியாவிற்கு ஏற்ற கொள்கை சோசலிசம் தான் என்று நேரு நினைத்தார்.

ஆனால் மகாத்மா காந்தி இதனை ஏற்க வில்லை. இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தியாவின் ஜீவனான கிராமப்புற பொருளாதாரம் முன்னேற வேண்டும் என்பது தான் காந்தியின் எண்ணம். இந்தியாவின் கிராமப்புற கைராட்டினம் போன்ற சிறு தொழில்கள் முன்னேறி கிராமங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்று நினைத்தார். அது தவிர ஸ்டாலினின் வன்முறை, சர்வாதிகாரம் போன்றவற்றை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கருத்துச் சுதந்திரம் இல்லாத கம்யுனிசம் இந்தியாவிற்கு தேவையில்லை. இந்தியாவின் பலமான கிராமங்களை கொண்டே நாம் முன்னேற முடியும் என்று காந்தி நம்பினார்.

நேருவுக்கு காந்தியின் இந்தக் கொள்கைகளை ஏற்க முடியவில்லை. கிராமங்கள் வளர்ச்சி, கைராட்டினம் என்பது அவருக்கு மிகவும் பிற்போக்கான கருத்துகளாக தோன்றியது. இந்தியாவை காந்தியின் கருத்துக்கள் இன்னும் பின்நோக்கி கொண்டு சென்று விடும் என்று நேரு நம்பினார். இந்தியா முன்னேற வேண்டுமெனில் ஐரோப்பாவின் தொழில் வளர்ச்சியை நாம் எட்டிப் பிடிக்க வேண்டும், ஐரோப்பாவின் கனரகத் தொழில்களை அப்படியே இந்தியாவிற்கு கொண்டு வருவது தான் அதற்கான வழி என்று நேரு நினைத்தார். ஸ்டாலின் ஐரோப்பாவின் கனரகத் தொழிலை ரஷ்யாவில் புகுத்தி பெற்ற மாபெரும் வெற்றி அவரது நம்பிக்கையை அதிகரித்தது. இந்தியாவை ரஷ்யாவின் பாணியில் முன்னேற்ற முடியும் என்று நம்பினார்.

இந் நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு 1946ல் தேர்தல் நடந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமருக்கான தேர்தல். காந்தியின் கிராமப் புற கொள்கை பற்றிய திட்டத்தில் முழு உடன்பாடு கொண்ட சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் காந்தியின் பொருளாதாரக் கொள்கைக்கு நேர் எதிரான கொள்கை கொண்ட ஜவகர்லால் நேரு இருவரும் களத்தில் இருந்தனர்.

எல்லோரும் சர்தார் வல்லபாய் பட்டேல் தான் இந்தியாவின் முதல் பிரதமர் என்று முடிவு செய்திருந்தனர். ஆனால் ஒரு சராசரி இந்தியராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராக முடியாமல் ஒரு பிரிட்டிஷ்காரராகவே இருந்த நேரு பிரதமரானார். இந்தியாவின் அதிகாரம் பிரிட்டிஷ் ராணியிடம் இருந்து கைமாறி ஒரு "இந்திய பிரிட்டிஷ்காரரிடம்" போய் விட்டது என்று அப்பொழுது கூறினார்களாம். ஆம், நேருவை ஒரு வெள்ளைக்காராகத் தான் காங்கிரசில் பலர் பார்த்தனர். அவரது கொள்கைகளும் அவ்வாறு தான் பலருக்கு தோன்றியது. காங்கிரசில் நேரு தனித்து காணப்பட்டாலும் காந்தியிடம் நெருங்கிய நேசம் அவருக்கு இருந்தது. நேருவிடம் காந்தி கொண்டிருந்த அந்த நெருங்கிய நட்பு தான் நேருவை பிரதமராக மாற்றியது

காந்தி - நேரு பாசப்பிணைப்பை அடுத்த வாரம் பார்க்கலாம்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |