Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
கட்டுரை
அடடே !!
சிறுகதை
கவிதை
சிறுகதை
கட்டுரை
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
பில்லியன் டாலர் கனவுகள் - பாகம் : 4
- சசிகுமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

Gandhi Nehru Patelஇந்திய விடுதலைப் போராட்டத்தின் பொழுது காங்கிரசில் பல பிரிவுகள் இருந்தன. இவர்கள் கொள்கை அளவில் மாறுபட்ட கருத்துகளுடன் இருந்தனர். மகாத்மா காந்தி தன் ஆளுமையால் இவ்வாறான பலப் பிரிவுகளை ஒன்றிணைத்து வைத்திருந்தார். இந்தப் பிரிவுகளில் இருந்தவர்கள் கொள்கையால் வேறுபட்டு இருந்தாலும் காந்தியின் தலைமை மீதும், அவரது சித்தாந்தங்கள் மீதும் நம்பிக்கையுடையவர்களாகவே இருந்தனர். ஆனால் அன்றைய இளைய தலைமுறை தலைவர்களான ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றோர் காந்தியின் கொள்கைளை முழுமையாக ஏற்றுக் கொள்ள வில்லை.

அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் காந்தியின் ஆளுமை முழுமையாக நிறைந்திருந்தது. காந்தியின் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் மட்டுமே காங்கிரஸ் கட்சியில் நீடிக்க முடியும். இந்திய சுதந்திர போராட்டத்தை துரிதப்படுத்த வேண்டும், அதற்கு காந்தியின் கொள்கைகள் பொருந்ததது என்ற இளைய தலைமுறையினரின் வாதத்தை பிரதிபலித்த நேதாஜிக்கு காங்கிரசில் கடும் எதிர்ப்பு இருந்தது. நேதாஜி காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பொழுது அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் காந்தி அதனை ஆதரிக்க வில்லை. இந்த கருத்து வேறுபாட்டால் தான் நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி இந்திய தேசிய இராணுவத்தை தோற்றுவித்தார்.

ஜவகர்லால் நேருவும் காந்தியுடன் பல விடயங்களில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார். காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களிடேயே நேருவின் கொள்கைகளுக்கு அதிக ஆதரவு இருக்க வில்லை, என்றாலும் அவரது தோற்றம், ஆங்கிலேயரை போன்ற பேச்சு அவரை காங்கிரஸ் தொண்டர்களிடையே பிரபலம் ஆக்கியது.

1946ல் இந்தியாவின் முதல் பிரதமருக்கான போட்டியில் சர்தார் வல்லபாய் பட்டேல் தான் வெற்றி பெற்று பிரதமராகியிருக்க வேண்டும். ஒட்டுமொத்த காங்கிரசின் விருப்பமும் அது தான். ஆனால் நேருவை பிரதமராக நியமிக்கவே காந்தி விரும்பினார்.

சர்தார் பட்டேல் பிரதமராவதை காந்தி எதிர்த்தார் என்பது இதற்கு பொருள் அல்ல. காந்தியின் இடதுகரம் என்று கூறப்பட்டவர் சர்தார் பட்டேல். காந்திக்கு அடுத்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவரும் சர்தார் பட்டேல் தான்.

பின்பு ஏன் காந்தி நேருவை பிரதமராக்கினார் ?

நேரு மீது காந்தி கொண்ட பாசம் தான் காரணம் என்று அதற்கு ஒரு சுயநல முத்திரையை குத்தி விட முடியாது. ஏனெனில் நேரு, பட்டேல் இருவருமே காந்தியிடம் நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர்.

நேருவின் கொள்கைகள் பலவற்றின் மீது காந்திக்கு நம்பிக்கை இருக்க வில்லை. ஆனால் நேருவின் பிரிட்டிஷ் கல்வி, பிரிட்டிஷாரைப் போன்ற தோற்றம், ஆங்கில அறிவு போன்றவை மேற்கத்திய நாடுகளுடன் இந்தியா நல்லுறவு வளர்த்துக் கொள்ள உதவும் என்று காந்தி நம்பினார்.

அதனால் தான் சராசரி இந்தியரான சர்தார் பட்டேல் பிரதமராக முடியவில்லை. ஆங்கிலப் புலமை பெற்ற நேரு பிரதமரானார். முழுமையாக கிராமங்கள் நிறைந்திருந்த ஒரு நாட்டை முன்னேற்ற ஆங்கில அறிவு மட்டும் போதுமா ?

இந்தக் கேள்வியும் காந்திக்கு எழத் தான் செய்தது. அதனால் தான் சர்தார் பட்டேலை துணைப் பிரதமராக்கினார். பட்டேலின் அனுபவம் நேருவை வழி நடத்தும் என்று காந்தி கருதினார். இது தவிர இந்தியாவிற்கு ஒரு இளைய தலைவர் தான் பிரதமராக வேண்டும் என்று காந்தி நினைத்தார். 70வயதை நெருங்கி விட்ட சர்தார் பட்டேல் வழி நடத்த இளைய வயதுடைய நேரு இந்தியாவை திறம்பட வழி நடத்த முடியும் என்பது காந்தியின் நம்பிக்கை.

ஆனால் இரு வேறு சித்தாங்களில் நம்பிக்கை உடையவர்களால் இணைய முடியுமா ? நிச்சயாக முடியாது. ஆனால் அந்த தவறை தான் காந்தி செய்தார்.

நேரு சோவியத் யுனியனின் சோசலிச சித்தாந்தங்கள் மீது நம்பிகை கொண்டிருந்தார். நவீனமயமாக்கம், நகரங்கள், கனரகத் தொழில்கள் இது தான் அவரது வேதாந்தம். ஸ்டாலினின் கடுமையான பாதிப்பு அவரிடம் இருந்தது.

பட்டேல் காந்தியின் கொள்கையான கிராமங்களை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். பட்டேல் ஒரு சராசரி இந்திய விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர். அதனால் இந்தியா முன்னேற கிராமங்கள் முன்னேற வேண்டும் என்ற கொள்கை உடையவர்.

இந்த இரு வேறு கொள்கை உடையவர்கள் தான் சுதந்திர இந்தியாவை வழி நடத்த ஏற்றவர்கள் என்று காந்தி முடிவு செய்தார். அதனுடைய எதிரொலி இந்தியாவின் முதல் அரசாங்கத்தில் கேட்கத் தொடங்கியது. பல நேரங்களில் இருவரில் ஒருவர் பதவி விலக முடிவு செய்வார். காந்தி சமாதானம் செய்து வைப்பார்.

சரி.. நேருவின் கொள்கைகள் பற்றி ஆராய்வதற்கு முன்பு சமீபகாலங்களில் முன்வைக்கப்பட்ட ஒரு வாதத்தை கொஞ்சம் கவனிக்கலாம்.

சர்தார் வல்லபாய் பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா முன்னேறி இருக்கும் என்ற வாதத்தை பாரதீய ஜனதா கட்சியினர் ஆட்சிக்கு வந்தவுடன் அதிகம் பேசத் தொடங்கினர். காங்கிரல் உள்ளவர்களே மறந்து போன சர்தார் பட்டேலின் பெயரை பாரதீய ஜனதா கட்சியினர் தான் புதுபிக்கத் தொடங்கினர். குறிப்பாக எல்.கே.அத்வானி, நரேந்திர மோடி போன்ற குஜராத் தலைவர்கள் தங்களை மற்றொரு சர்தார் பட்டேலாகவே உருவகப்படுத்திக் கொண்டனர்.

சர்தார் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்றிருந்தால் இந்தியா முன்னேறி இருக்குமா ? இந்திய கிராமங்கள் அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்றிருக்குமா ?

சர்தார் பட்டேல் கம்யுனிசத்திற்கு எதிரான கொள்கைகள் உடையவர். இந்தியா ஒரு இந்து தேசமாக மாற வேண்டும் என்ற எண்ணம் உடையவர். இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்கள் இந்தியா மீது உண்மையான பற்று கொண்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவில் இருந்து வெளியேறி பாக்கிஸ்தான் சென்று விட வேண்டும் என்ற கூறியவர்.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மன்னர்களால் ஆளப்பட்ட பலப் பகுதிகளை பட்டேல் ஒன்றிணைத்தாலும் ஹைதிராபாத், ஜுனாகத், காஷ்மீர் போன்ற பகுதிகள் பிரச்சனைக்குரியதாக இருந்தது. இவற்றில் ஹைதிராபாத் நிஜாம் பகுதிகளை இந்தியாவுடன் இணைக்க இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள நேர்ந்தது. இந்த இராணுவ நடவடிக்கையை நேரு விரும்பவில்லை. ஆனால் இந்தியாவின் பகுதிக்குள் ஒரு அல்சர் உருவாகுவதை நான் விரும்பவில்லை என்று கூறிய பட்டேல் ஹைதிராபாத் மீது படையெடுத்து அதனை இந்தியாவின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தார். பட்டேலின் இந்த நடவடிக்கையை தவறு என்று கூற முடியாது என்றாலும் பல விடயங்களில் இவ்வாறான அதிரடி போர்க்குணம் மிக்க தலைவராகத் தான் அவர் காணப்பட்டார். காஷ்மீர் பிரச்சனையில் கூட முழு காஷ்மீரையும் இந்தியாவின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமுடையவர். நேரு காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா. சபைக்கு கொண்டு சென்றதை பட்டேல் விரும்பவில்லை. இராணுவ நடவடிக்கை மூலம் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க முடியும் என்று பட்டேல் நம்பினார்.

அது போலவே இந்திய அரசியல் சாசனத்தில் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை பட்டேல் கடுமையாக எதிர்த்தார். அவரது எதிர்ப்பாலேயே சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை.

1947 பிரிவினையின் பொழுது பாக்கிஸ்தானில் இருந்து இந்துக்கள் விரட்டப்பட்டதைப் போல இந்தியாவில் இருந்து முஸ்லீம்களும் விரட்டப்பட வேண்டும் என்று பட்டேல் கூறினார். ஆனால் நேரு இத்தகைய கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார். முஸ்லீம்கள் இந்தியாவின் ஒரு அங்கம் என்று வலியுறுத்தி, இத்தகைய கருத்துகளுக்கு நேரு முற்றுப்புள்ளி வைத்தார்.

1947 பிரிவினையை ஒரு இந்து தேசம் உருவாகுவதற்கான வாய்ப்பாக பட்டேல் நினனத்தார். ஆனால் இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைகளில் நேரு உறுதியாக இருந்தார். இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களின் தேசப்பற்று மீது பட்டேலுக்கு நம்பிக்கை இல்லை. இந்திய முஸ்லீம்கள் பாக்கிஸ்தான் மீது தான் அதிக பற்று கொண்டிருப்பதாக பட்டேல் நினைத்தார். அரசாங்கத்தில் இருக்கும் முஸ்லீம் அதிகாரிகள் பாக்கிஸ்தானுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள முன் அனுமதி பெற வேண்டும் என்ற கூட ஒரு அரசு ஆணையை பிரப்பித்தார். ஆனால் நேரு உடனடியாக அதில் தலையிட்டு அத்தகைய மோசமான விதிமுறைகளை விலக்கினார்.

சர்தார் பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா முன்னேறி இருக்கும் என்பது இந்து அடிப்படைவாதிகளின் கருத்து தானே தவிர அதில் சிறிதும் உண்மை இல்லை.

சர்தார் பட்டேல் பிரதமராகி இருந்தால் இந்தியா ஒரு இந்து தேசமாக மாறி இருக்கும். முஸ்லீம்கள் இந்தியாவில் இருந்து விரட்டப்பட்டிருக்கலாம். இந்தியாவின் தேசிய மொழியாக சம்ஸ்கிருதத்தை அறிவித்திருப்பார்கள். வர்ணாசிரமதர்மம் இந்திய சமுதாயத்தில் கட்டாயம் ஆக்கப்பட்டிருக்கும். ஒரு இந்து பழமைவாத அடிப்படைவாத நாடாக இந்தியா மாறியிருக்கும். வர்க்க பேதங்கள் வெடித்திருக்கும். அத்தகைய சூழலில் நிச்சயமாக இந்தியா முன்னேற்றத்தை அடைந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு இந்து அடிப்படைவாத நாடாக மாறுவதில் இருந்து இந்தியாவை காப்பாற்றியவர் ஜவகர்லால் நேரு தான் என்று உறுதியாக சொல்லலாம். மதச்சார்பின்மையும், வர்க்க பேதங்கள் இல்லாத இந்திய சமுதாயமும் தான் நேருவின் கனவு.

நேருவின் அனைத்து கொள்கைகளும் சரியானவை என்று என்னால் கூற முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் முடங்கிப் போனதற்கு முக்கியமான காரணம் நேருவின் சோசலிச கொள்கைகள் தான் என்றாலும் ஒரு சுதந்திரமான, சமத்துவமான, ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவு தான் இந்தியாவிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை கொடுத்தது.

ஜவர்கர்லால் நேருவின் கொள்கைகள் எங்கே தடம் புரண்டன ? ஏன் தடம் புரண்டன ? அவர் நமக்கு என்ன தான் விட்டுச் சென்றார் ? இந்தியாவின் இத்தனை ஆண்டுகள் தடுமாற்றத்திற்கு அவர் மட்டும் தான் காரணமா ?

இதனை அடுத்து வரும் வாரங்களில் கவனிக்கலாம்.

 
உங்கள் கருத்து  
J. Rajni Ramki
9/26/2005 , 6:28:53 AM

Sasi,

Interesting Analysis. Hope you would also descripe the role played by the Finanace Ministers in Nehur Governement.
   
govind
10/2/2005 , 10:51:53 PM

நேரு இந்த தேசத்திற்கு செய்த கெடுதல்களை இன்னும் விலாவாரியாகச் சொல்லவும். ஒரு பிளேபாயிடம் ஒரு விவசாயி தோற்ற வரலாறு நம் சமூகத்திற்கு தெரிய வேண்டும்
   
Thamizh Sasi
10/7/2005 , 1:28:46 PM

கோவிந்த்,

நேரு "பிளே பாய்" என்பது கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட விமர்சனம்
என்றாலும் இந்திய விவசாயி நேருவிடம் தோற்றான் என்பதில் உண்மை இருக்கத் தான் செய்கிறது
அதைப் பற்றியும் கவனிக்கும் எண்ணம் உண்டு

உங்கள் கருத்துக்கு நன்றி
   
hameed
10/14/2005 , 11:25:53 AM

ஜவர்காலல் நேருப்போன்ற தூரனோக்கு சிந்தனையுடைய தலைவர்களை நாம் பெற்றதால்தான் நமது நாடு இன்று உலக அளவில் மதிப்பும் மரியாதயும் பெற்று திகழ்கிறது அவரின் சேவைகளை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது ஒவ்வொரு தலைவர்களிடமும் சில பலகீனன்கள் குறைகள் இருந்துள்ளன அவைகளால் உன்டான இழப்புகளும் அழிவுகளும் ஏராளம் ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து நாம் முன்னேறிவருவதில்தான் நமது பெருமை அடங்கியிருக்கிறது உணர்வு அமீது
   
senthil
11/23/2005 , 1:05:02 AM

தொடர் மிகவும் நன்றாக செல்கிறது. கருத்துக்களை தெரிவிக்கும் முன் நாம் இங்கு மனதில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இது சரித்திரம், இதில் தயவு செய்து யாரை பற்றியும் முறைகேடான கருத்துக்களை வெளியிட வேண்டாம். சரித்திரத்தை தெரிந்து கொள்ள மட்டும் முயற்சி செய்வோம்.
   
Athavan
3/13/2006 , 9:31:29 PM

தொடர் நன்றாகவே உள்ளது மீண்டும் தொடர்தல் நன்று.............. தொடரை தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்
   
ந பிரகாஷ்
1/31/2007 , 11:04:50 AM

சர்தார் பட்டேல் ஒரு இரும்பு மனிதர். இது மட்டுமே தெரிந்த எனக்கு இது அரிய விசயம்
   
k.selva rama rathnam
8/18/2008 , 9:05:25 AM

னன் பர்ததெல இன் தெ நெப் சிடெ தன் அருமியக உலது
   
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |