Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
ஈழப்பிரச்சினை - ஒரு பார்வை - பாகம் : 2
- ஆருரான்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

தமிழர்களின் பாரம்பரிய மண்ணில், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்கள் சிறுபான்மையினராக்கப் படுவதைக் கண்டு கொதித்தெழுந்த ஈழத்துக்காந்தி செல்வநாயகம் 'சுவர் இருந்தால் தான் சித்திரம் கீறலாம், முதலில் எமது மண்ணைக் காப்போம், அதற்குப் பின்னால் மற்றவற்றைப் பார்ப்போம்" என 1976 ஆம் ஆண்டு தமிழீழக் கோரிக்கையைத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் நிறைவேற்றி ஈழத்தமிழர்களைத் தமிழீழம் மலரப் போராடுமாறு வேண்டினார்.

ஆனால், 1977.04.27 இல் உடல்நலங்குன்றியிருந்த தந்தை செல்வநாயகம் இயற்கை எய்தினார். செல்வநாயகம் இறந்த பின்னர் அ. அமிர்தலிங்கம் த.வி.கூ தலைவரானார். 1977 யூலை மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கு தமிழ் மக்களின் அங்கீகாரத்தைக் கோரிப் போட்டியிட்டு, வடக்குக்கிழக்கு மாகாணங்களில் இருந்த 19 தொகுதிகளில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றார்கள். அந்தப் பொதுத்தேர்தலிலே ஈழத்தமிழர்கள் தமிழீழம் மலர்வதற்கான தமது மனதார்ந்த
ஒப்புதலை அளித்தார்கள். ஆகவே, இன்று பிரபாகரனை விமர்சனம் செய்து, வார்த்தைகளால் தாக்கும், ஈழத்தமிழர்களின் தமிழீழ போராட்ட வரலாற்றையுணராத அரைவேக்காடுகள், பிரபாகரன் சுமப்பது ஈழத்தமிழர்களின் சிலுவையைத் தான் என்பதை உணர்வதில்லை.

இன்று, ஈழத்தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டம் எண்ணற்ற தடைகளையும் துயர்களையும், உயிர், உடைமை இழப்புக்களையும் தாங்கிய மக்கள் போராட்டமாக உருவெடுத்துள்ளது. அரசியலைக் நன்றாகப் படித்துக் கரைத்துக் குடித்த பல அரசியல் விமர்சகர்களும், அனைத்தும் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளும் ஆலோசகர்களுக்கும், தமக்குப் புரியாத ஈழவிடுதலையைத் திரித்து அசிங்கப்படுத்தும் அலங்கோலத்தை நாம் காணலாம். ஈழத்தமிழர்களை இல்லாதொழிக்கத் துடிக்கும் சிங்கள அரசுக்குத் துணை போகும் இந்தியாவின்
தமிழெதிர்ப்புப் பத்திரிகையாளர்களையும் ஈழவிடுதலைப் போராட்டத்தை வக்கிரப்படுத்தி, தமிழர்களை இழிவு படுத்தி, தமிழைப் பேசிக் கொண்டே, தமிழர்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டே, தமிழர்களின் முதுகில் குத்தும் வஞ்சகரையும் தமிழினம் நன்கு அறியும்.

ஈழத்தமிழர்களுக்கு விடிவு காண ஒரே வழி தமிழீழம் மலர்வது தான் என்ற முடிவு, ஈழத்தின் பல கல்விமான்களாலும் சனநாயகவாதிகளாலும், பல்வேறு சனநாயக வழிகளில் போராடித் தோற்றுப் போன பின்னர், தீர ஆலோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும். இன்று தமிழர்களின் நலன்களில் அக்கறையுள்ளவர்களும், ஈழத்தமிழர்கள் பாதுகாப்புடன் வாழவேண்டும் என விரும்புகிறவர்களும் கூடத் தமீழீழக் கோரிக்கையின் சிக்கலான பரிமாண வளர்ச்சியை உணரத்தவறி விடுவதை நாம் காண்கிறோம்.

இப்படியான குழப்பநிலைகளால் சில வேளைகளில், ஈழத்தமிழர்களின் நலன் விரும்பிகளின் தமிழீழப் போராட்டம் பற்றிய கருத்துக்கள் கூட தவறானதாகத் துன்பப்படும் தமிழர்களின் துயரம் புரியாது, 'பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது" போன்று ஈழத்தமிழர்களின் மனதைப் புண்படுத்துவதாக அமைந்து விடுவதுண்டு. அதனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஈழத்தமிழர்கள் எப்படி தனிநாடு கேட்குமளவுக்குத் உந்தப்பட்டார்கள் என்பதையும், தமிழர்களின் பாதுகாப்புக்கும் நல் வாழ்வுக்கும் தமிழீழம் மலர்வது தான் ஒரேயொரு வழி
என்பதையும் ஒரளவாவது புரிய வைப்பது மட்டுமே.

இந்தியாவின் முற்போக்கான இனவெறியற்ற சில தலைவர்களின் தொலைநோக்கான நடவடிக்கைகளால், இந்தியாவின் தமிழர்கள் தமது மண்ணையும், மொழியையும்
கலாச்சாரத்தையும் காப்பதற்கு மொழிவாரி மாநிலங்கள் வழிவகுத்தன. அதனால், இந்தியத் தமிழர்கள் தமது தனிநாட்டுக் கோரிக்கையை இந்திய ஒருமைப்பாட்டையும், இந்தியாவின் இறைமையையும் காப்பதற்காக விட்டுக் கொடுத்தார்கள். ஆனால், இலங்கையின் சிங்கள பௌத்த இனவாதிகளின், 'ஈழத்தீவு முழுவதும் தமக்குரியது" எனச் சரித்திரத்தைத் திரிக்கும் சிங்கள இனவெறியால் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதையும், தமிழர்களுக்கும் தமிழுக்கும் ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையையும் நீக்கத் தமிழீழம் மலர்வது
அவசியமாகின்றது. எனவே, தனித் தமிழீழம் உருவாகினால்தான் ஈழத்தமிழர்களின் வாழ்வில் நிம்மதியும் விடிவும் ஏற்படுமென்பதை நாற்பது ஆண்டு அறவழியில்,
அமைதியாகப் போராடிய பின்னர் தமிழர் பட்டறிந்ததன் விளைவே தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம்.

சிங்களவர்களின் தமிழருக்கெதிரான மூர்க்கத்தனமான இனவெறியைக் கண்ட சில ஈழத்தமிழ்த் தலைவர்கள் அதிலும் குறிப்பாக சேர். பொன்னம்பலம் அருணாசலம் 1924 களிலேயே தமிழீழக் கோரிக்கையை முன்வைத்த போதும், தம்மைத் தமிழராக அன்றி, இலங்கையராக நினைத்த ஈழத்தமிழர்கள், அவரது குரலுக்குச் செவிசாய்க்கவில்லை. அவ்வாறு தம்மை இலங்கையராக எண்ணி 'மாவலி சூழ் இலங்கை நாடெங்கள் நாடே" என்று கும்மியடித்த ஈழத்தமிழர்களை, அன்னியப்படுத்தி அழகிய இலங்கைத்தீவை அசிங்கமாக்கியது சிங்கள இனவாதமும், பௌத்த பிக்குகளின் இன, மத வெறியும் தான் என்பதை யாவரும் அறிவர்.

(தொடரும்...)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |