காதல் என்கிற வார்த்தையைப் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க? ரொம்பப் பேர் அந்த வார்த்தையை கேட்கறதே பாவங்கிறது போல முகத்தை வைச்சுப்பாங்க. ஆனா, ரகசியமா செக்ஸ் ஜோக்கை ரசிக்கிறதும், மனசாலே சோரம் போகிறதும்... அது ஒருத்தருக்கும் தெரியாதில்லையா? நான் சொல்லும் காதல் அது இல்லே!
அட, காதலைப் பத்திப் பேசறானே! இள ரத்தம்னு கணக்குப் போட்டா உங்க கணக்கு தப்பு. முதுமையில் இளமைம்பாங்களே? அந்த நாற்பது வயசைக் கடந்தாச்சு. இந்த வயசிலே காதலாங்கறீங்களா? காதலுக்கு வயசு ஏது சார்? பழுத்த பழம்தானே ருசிக்கும்!
சரி, கலியாணமாகாமலே காலத்தைக் கழிச்சவன் போல இருக்கு. போனாப் போகட்டும்னு நினைச்சா, அங்கேயும் தப்பு பண்றீங்க. எனக்கு இருபதிலேயே கலியாணமாகி என் மகளுக்கு இந்த வருஷம் தலை தீபாவளி. அடுத்த பையன் ப்ளஸ்-2 படிக்கிறான். அடுத்தது நாலாம் வகுப்பு.
அட, சண்டாளா... இன்னுமென்னடா காதல்னு திட்டறீங்களா? அவசரப்படாதீங்க... நீங்க நினைக்கிற மாதிரி இல்லே என் காதல்; தெய்வீகக் காதல்! மண்ணாங்கட்டிங்கறீங்களா? பொறுங்க சார்!
எத்தனை ஆழ்வார்கள் இறைவன் மேலே காதலாகி கசிந்துருகி இருக்காங்க? பெம்மான் அவனுக்கே பிச்சியான கதை எத்தனை, எத்தனை?
இங்கிலீஷ்லே லவ்லி சைல்டுன்னா சந்தோஷப்படறீங்க... 'காதலிக்கிற குழந்தை'ன்னா 'அர்த்தம்' பண்ணிக்கிறோம்!
காதல்னதும் ஏன் சார் படுக்கை அறை வரை போறீங்க?
அம்பிகாபதி - அமராவதி மாதிரி உயிரை விட்டாதான் காதலா? நளன் - தமயந்தி மாதிரி கலியாணம் பண்ணிக்கிறதுதான் காதலா?
ரொம்பக் குழப்பறேனா? சரி, முதல்லேயிருந்து சொல்றேன். நான் அவளை எங்கே எப்படி சந்திச்சேன்; எப்படிப் பழகினோம்; எல்லாம் கேட்டுட்டு ஒரு முடிவுக்கு வாங்க!
என் பேரு செல்வம். நான் ஏதோ ஒரு ஆபீஸிலே, ஒரு நடுத்தர வர்க்கத்துக் குடும்பம் நடத்தறதுக்கு தேவையான சம்பளம் வாங்கிண்டு இருக்கேன். அது இந்தக் கதைக்கு அவ்வளவு முக்கியமில்லே! அப்பப்போ பத்திரிகைகளுக்குக் கதை எழுதி அனுப்புவேன். முக்கால்வாசி திரும்பி வந்துடும்; இல்லே அந்தர் தியானமாயிடும். குறிஞ்சி மலர் மாதிரி ஒண்ணு ரெண்டு அச்சுக்கும் போயிடும்! அவ்வளவுதான். காலரை இழுத்து விட்டுண்டு ட்ரிம்மா ஷேவ் பண்ணி, லோஷன், பவுடர் எல்லாம் போட்டுண்டு கையிலே கதை வந்த புஸ்கத்தோட கிளம்பிடுவேன்.
எவனாவது 'என்ன சார், எங்க இப்படீ'ன்னு ஆரம்பிக்க வேண்டியதுதான்! உடனே கதையைக் காட்டி பெருமை அடிச்சுக்க வேண்டியது. அவன் 'எப்படி சார், நீங்க ஆபீஸ் வேலையையும் செய்துண்டு, இந்த மாதிரி உபரி வருமானத்துக்கும் வழி பண்ணிண்டு! அசாத்திய சாமர்த்தியம்; அசுர சாதகம்'ன்னு எல்லாம் ஆச்சரியப்பட வைத்துவிட்டு, அது ஒரு தனிக்கதை. இப்போ ஆரம்பிச்ச கதைக்கே வரேன்.
ஒரு தடவை ஒரு பிரபலப் பத்திரிகையிலே என் கதை வந்துவிட்டது. ஒரு வேளை ஆசிரியர் ஊருக்குப் போய், அந்த இடத்திலே உட்கார்ந்து கொண்டிருந்த 'அரைகுறை' ஏதாவது செலக்ட் பண்ணி இருக்க வேண்டும்.
அதை எடுத்துக் கொண்டு வழக்கம் போல் என் சினேகிதன் பஸ்கரை சந்திக்கப் போயிருந்தேன். அவன் யுஷுவல் டைப். ஏதோ எனக்கு கற்பனை காட்டாற்று வெள்ளமாகப் பெருகி ஓடுகிறதா, என்னை மதிச்சிருந்த ஒரே ஆள். வாங்குகிற இடத்திலேதானே விற்க முடியும். எனக்குத்தான் கால் தரையிலேயேப் படலியே! கதையை அச்சிலே பார்த்ததும் வானத்திலே பறக்கிறதாய் நினைத்துக் கொண்டு; நல்ல வேளையாய் ஆக்ஸிடெண்ட் ஆகாமல், நண்பன் வீடு வந்து சேர்ந்தேன்.
பாரதியார் வீடு மாதிரி அவனுது. அதாவது ஏகப்பட்ட குடித்தனம். அந்த சமயம் பக்கத்துப் போர்ஷனில் யாரோ ஒரு பெண் வயசுக்கு வந்ததை அலங்காரம் செய்து உட்காரவைத்து பாடி விளம்பரம் செய்தார்கள்.
எது எப்படியோ! இனிமையான சங்கீதம். சொல்ல மறந்து விட்டேனே... நான் கொஞ்சம் கீதப்பிரியன். வந்த வேலை மறந்து விட்டது. என் கை தாளம் போடவில்லை. தலை அசையவில்லை. மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகமாக அந்த காரை பெயர்ந்த செங்கல் சுவற்றில் சாய்ந்தது சாய்ந்தபடி இருந்தேன்.
"முந்திப் பிறவிகளில் உன்னை நான் முறையினில் மணந்தேன்... எந்தன் உயிரல்லவோ - கண்மனி!" நிஜமாகவே இந்த வரிகளுக்கு இத்தனை அர்த்தமா? இதென்ன குழைவு? இப்படிக்கூட பாட்டால் உருக முடியுமா? யார் யாரோ இதைப்பாடி நான் கேட்டிருக்கிறேன். ஏன், நானே பாடி இருக்கிறேன். இப்படி ஒரு பாவத்தை உணர்ந்ததில்லை.
முந்தையப்ப் பிறவிகளில் மணந்த காதலி எதிரே வந்து நின்றிருந்தால் வேலவன் கூட இப்படிக் கொஞ்சி இருக்கமாட்டார்!
ஷ்ரேயா கோசலின் குரல் இனிமை; ஸ்னேஹாவின் குரல் வசீகரம்; ஹரிணியின் கம்பீரம்; எம்.எஸ்ஸின் மதுரம்; எல்லாம் கலந்து இது என்ன குரல்? அட, குரல் கிடக்கட்டும்! இதென்ன உணர்ச்சி மயக்கமான சொற் பிராவகம்...
கனவு கண்டு விழிக்கும் வரை நானும் சொப்பன உலகிலேயே இருந்தேன்.
"பாட்டு நல்லா இருந்தது இல்லே?" நண்பனின் குரல் என்னை உசுப்பியது.
"மடையன்... நல்லா இருந்தோமே! நளன் சமையல், ஊட்டியில் பட்டு மெத்தையில் அழகியோடு வாசம், குற்றால அருவியில் பணக்கார மமதையோடு நிற்கிறது; இப்படி எதையுமே ஈடு சொல்ல முடியாத இதைப் போய்... சரி, சரி. நீ ஒரு சராசரி! பாடினவங்களை நான் பார்க்க முடியுமா? ஒரு வார்த்தையாவது பாராட்டத்தான்", அவள் போய் விடப் போகிறாளே என்ற அவசரம்.
(கங்கை வழியும்)
|