Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கங்கை இல்லாத காசி - பாகம் : 11
- பாஸ்டன் பாலாஜி
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

நிமிர்ந்து பார்த்தேன். கனமான மஞ்சள் கயிறு என் கடமையை, அவள் உரிமையை நினைவுபடுத்தியது.

"கோபம் வரும்னு தெரிஞ்சுதானே கேட்கப் போறே? ஏன் முழுங்கறே? கேட்டுடு"

"யாரோ ஒருத்தி புத்து நோய் வந்து ஆஸ்பத்திரியிலே கிடக்கறாளாம்... ராவாப் பகலா நீங்க அங்கேயே இருக்கறதா..."

"யார் சொன்னது?" என்னை அறியாமல் குரல் உயர்ந்தது.

"அவ யாரு?"

"உங்க அத்தை பையன், மாமா பிள்ளை, பெரியப்பா மச்சினன்னு எத்தனை பேரு வராங்க? எத்தனை வீடுகளுக்கு நீ போறே? நான் என்னிக்காவது இப்பிடி உன்னைக் கேள்வி கேட்டிருக்கேனா? நிஜந்தானான்னு ஆராய்ஞ்சிருக்கேனா? முதல்லே புருஷனை நம்பு. அவ என் சினேகிதி. பால்ய சினேகிதி. அவ்வளவுதான்... இதுக்கு மேலே தூண்டித் துளைச்சே பேசாம காவியைக் கட்டிகிட்டு இமாசலம் போயிடுவேன். சே, என்ன பொம்பளைங்கப்பா..."

நான் செருப்பை மாட்டிக் கொண்டிருந்தேன். அவள் விசும்பிக் கொண்டிருந்தாள். அவள் என் காதலி என்று சொல்வதில் எனக்கு பயமில்லை. ஆனால், என் ப்ருந்தாவின் பெயர் கெட்டு விடக் கூடாதே!

"மோகத்தைக் கொன்று விடு...
அல்லாலென்றன் மூச்சை நிறுத்தி விடு"

மேடையில் ப்ருந்தா பாடிக் கொண்டிருந்தாள். பாடுகிறாளா? அல்லது தன் எண்ணத்தை வெளியிடுகிறாளா என்று நினைத்தேன். அல்லது எனக்குத்தான் அப்படித் தோன்றுகிறதா? கண்கள் மயங்க ரசித்துக் கொண்டிருந்தேன்.

"ஹாய், நீ செல்வம்தானே..." திடுக்கிட்டுப் பார்த்தால் வைதேகி! அப்புறம் பாட்டில் எப்படி கவனம் செலுத்துகிறது?

"அட வைதேகி... என்ன பெரிய மாமி மாதிரி ஆகிவிட்டாய். எங்கே இப்படி?"

பக்கத்து சீட் காலியாக இருந்தது. அங்கேயே உட்கார்ந்து விட்டாள். இந்த வைதேகியோடு எல்லாவித தொடர்பும் உண்டு. அதெல்லாம் கல்யாணம் ஆவதற்கு முன்.

"சாவகாசமாய் ஒரு நாள் வீட்டுக்கு வாயேன்! இதுதான் என் அட்ரஸ்... உன்கிட்ட விபரமாய் பேசணும்". விசிட்டிங் கார்டை வாங்கிக் கொண்டேன். நான் எப்போதுமே முன் வரிசையில் உட்கார மாட்டேன். நாலைந்து வரிசை தள்ளிதான் உட்காருவேன். கச்சேரி முடிந்தது. ப்ருந்தா வந்தாள்.

வைதேகியும் நானும் சம வயசு. ஒரு வேளை சின்னவளோ? நீ, வா, போ என்றுதான் பேசிக் கொள்வோம்.

"பிருந்தா, இது என் பால்ய சினேகிதி. வைதேகி... ப்ருந்தா என் ஃபேமிலி பிரெண்ட்" அறிமுகம் செய்து வைத்தேன்.

இரண்டு பேரும் வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். குசலம் விசாரித்தார்கள்.

"நீங்க வேணா பேசிட்டிருங்களேன். ரொம்ப நாளைக்கப்புறம் பார்க்கிறீங்க... நான் ஆட்டோ  பார்த்துண்டு போறேன்." ப்ருந்தா கிளம்பினாள்.

ஊஹும்... நிலைமை சரியில்லை. இந்த மாதிரி ப்ருந்தா பேசினால் 'மூட் அவுட்' என்று அர்த்தம். கொஞ்சம் கிளறினால் குதறி எறிந்து விடுவாள்.

வைதேகி சரியான அட்டை. அந்த நாளில் நான் காய்ந்த மாடு. பெண்ணில்லாத ஊரிலே கிழவியும் ஒரு மோகினி என்று ரசித்த காலம்! இப்போ... சரீர சுகத்தை விட பார்வை சுகம், ஆத்மீக ராகமே பெரிதென்று நினைக்கிற பதம்!

"அவங்கதான் போய்க்கறாங்களே! அவர் கூட ஊரிலே இல்லே... வாங்களேன்." வைதேகியின் விகல்பமில்லாத ஆனால் விவகாரமான அழைப்பு.

"இல்லே வைதேகி... ப்ருந்தாவைத் தனியா விட முடியாது. அவ புருஷனுக்கு பதில் சொல்லி ஆகணும்! பெண்களைக் கடத்திட்டுப் போற காலம். திருட்டு பயம். அதான் அட்ரஸ் கொடுத்திருக்கியே." மெள்ள கழற்றிக் கொண்டேன்.

மேலே விழுந்து பிடுங்கினால் ஆண்களுக்கு ரசிக்காது என்று ஏன் வைதேகி புரிந்து கொள்ளவில்லை? ஒருவேளை நான்தான் அப்படியோ?

வைதேகியைப் பற்றி முன்பே ப்ருந்தாவிடம் சொல்லி இருந்தேன். வழியில் ப்ருந்தா எதுவும் பேசவில்லை. வீட்டுக்குப் போனதும் சம்பிரதாயப் பேச்சுக்களுடன் விடை பெற்றேன்.

அடுத்த முறை சந்திக்கும்போது கேட்டேன்.

"தேவியாருக்கு என்ன பராமுகம்?"

"நீங்கள் கோகுல கண்ணன். கோபியருக்குப் பஞ்சமா?"

இவள் கோபத்தை நினைத்து எனக்கு சிரிப்பு வந்தது. "சக்களத்திப் போராட்டமோ?"

என்னை எரித்து விடுவதைப் போல் பார்த்தாள்.

"ஆமாம்... என் மனைவியைப் பற்றி ஏன் ஒரு நாள் கூட கோபிப்பதில்லை?"

"அவள் உரிமைப்படி வந்தவள். எனக்கும் முன்பே! அதைத் தடுப்பது எனக்கு நியாயம் இல்லை."

"இவளும் எனக்கு முன்னே வந்தவள்தான்".

"அவளும் நானும் ஒன்றா?" அடேயப்பா கோபத்தில் கூட என் ப்ருந்தா எத்தனை சிம்ரனாய் இருந்தாள்!

வாசுகி அம்மையார் நிறைய ஊடல் செய்திருக்க வேண்டும். வள்ளுவர் கொடுத்து வைத்தவர். என்னமாய் ரசித்து எழுதி இருக்கிறார்.

"சரி, சரி... கண்ணகி அவதாரம் எடுக்காதே! நீ மட்டும் புருஷனோடு வாழ்க்கை நடத்தலாமாக்கும்?" வேண்டுமென்றேதான் சீண்டினேன்.

"நான் சகித்துக் கொள்ளவில்லை!" பாவம், கண்களில் நீர் அரும்பி விழுந்து விடுவேன் என பயமுறுத்தியது.

"நான்... நான் உங்களை சந்தித்த பிறகு... செக்ஸை மறந்து விட்டேன்! குழந்தைகள் மீது பழி போட்டு... நான் துரோகம் செய்வதாய்..." மேலே பேச முடியாதபடி குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்து விட்டனர். உப்பு சப்பற்ற பேச்சுகள். விளையாட்டு வேதனையில் முடிந்தது.

(கங்கை வழியும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |