Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கோடிட்ட இடங்கள் - பாகம் : 8
- சித்ரன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

கிருஷ்ணாவின் டைரி குறிப்பிலிருந்து...

சுந்தரி மாமி. அம்மா பயப்படுகிற ஒரே நபர். பயப்படுவது என்றால் பேசவும் முடியாமல் கேட்கவும் முடியாமல் ஒருவித அவஸ்தை அது. காரணம் சுந்தரி மாமி சொல்லும் மகன் பற்றிய அமெரிக்க புராணங்கள்தான். அங்கே அவனுக்கான வேலை - சம்பளம் - மற்றும் அவனுக்குக் கிடைக்கும் அளவு கடந்த வசதிகள் என்பதே மாமியின் பிரசங்கத்தில் முக்கிய பகுதிகள். இதை ஒரு நாள் கேட்கலாம். ஒவ்வொருநாளும் கேட்க முடியுமா ? அதுவும் நான் இருக்கிறபோது மகனைப் பற்றிய பெருமைகள் மாமியிடம் தாங்க முடியாது. தாங்க முடியாமல்தான் அம்மா அதையும் கேட்டாள். 'எனக்கு ஒண்ணுன்னா என் பையன் உடனே வந்து நிற்பான். நீ செத்தாக்கூட உன் பையன் வருவானான்னு தெரியாது' என்றாள். அம்மா சொன்னதில் இருந்த உண்மை மாமியை அதிர வைக்க உடனடியாய் அழுதுவிட்டது. அம்மா மாமியின் தலையைத் தடவி 'நொந்து போய் சொல்லிட்டேன். உங்களை நோகடிக்கணும்னு சொல்லலே' என்றாள். அதன் பிறகே மாமியின் அழுகையும் மகனின் புராணமும் நின்றது. நான் அம்மாவிடம் கேட்டேன். உன்னால் மட்டும் எப்படியம்மா சண்டையும் போடமுடிகிறது. உடனே சமாதானமும் செய்ய முடிகிறது?



MCF-க்குப் போகிற வழியெல்லாம் ட்ராஃபிக்கிலும், சிக்னல்களிலும் சத்யாவின் கவனம் செல்லவில்லை. மனசு பூரா மலர் இன்டர்காமில் சொன்ன விஷயத்தின்மீதே இருந்தது. அவனோடு அவள் பேசவேண்டும் என்று சொன்னது எதைப்பற்றி என்று திரும்பத் திரும்ப யோசித்துக்கொண்டிருந்தான். என்ன விஷயமாக இருந்தாலும் அதை முன்னறிவித்துவிட்டு என்னைத் தயார்பண்ணிவிட்டாள். இனி சொல்ல வேண்டியதுதான் பாக்கி. அதற்கான சந்தர்ப்பம் தானாக அமையாவிட்டாலும் நாமாக உருவாக்கிக் கொள்ளவேண்டியதுதான். நிச்சயமாய் அவள் சொல்லப்போவது ஒரு முக்கியமான விஷயம்தான். அதைச் அவள் சொல்வதற்கும் நான் கேட்பதற்கும் உரிய ஒரு அழகான சூழல் மட்டும் உருவாகிவிட்டால் ஆஹா.. பின் வேறென்ன வேண்டும் வாழ்க்கையில் என்று தோன்றியது அவனுக்கு.

கிருஷ்ணா தவிர வேறு யாருக்கேனும் இந்த விஷயம் தெரியுமா என்றும் தெரியவில்லை. நான்கூட ஏன் இது குறித்து யாரிடத்திலும் கலந்தாலோசிக்கவில்லை? ஸ்ரீயோ, பிரகாஷோ இதைக் கேள்விப்பட நேர்ந்தால் என்ன ஆகும் என்றும் கூட அவனுக்கு எண்ணம் ஓடியது. அப்புறம் ஒன்றும் சொல்லவே வேண்டாம். பயங்கரமாய் கலாட்டா பண்ணிவிடுவார்கள். அடக்கி வாசிப்பதே நல்லது.

எப்படியோ மலருடன் உரையாடல் இதுவரை வந்தாயிற்று. அவள் கண்களின் பளபளப்பிலேயே அவள் மனது புரிகிறது. அவள் அடிக்கடி நகம் கடிப்பதில் அவள் நெர்வஸாய் இருப்பது தெரிகிறது. அவனுடன் அவள் இண்டர்காமில் பேசும்போது லேசான வார்த்தைத் தடுமாற்றம் தெரிந்ததை அவன் கவனித்திருந்தான். கிருஷ்ணா பொய் சொல்லவில்லை. சும்மா போகிற போக்கில் சொல்லிவிட்டுப்போயிருந்தாலும் வாழ்க்கையை கொஞ்சம் சுவாரஸ்யமாக்கிவிட்டுத்தான் போயிருக்கிறான்.

அவனுக்கு மனதில் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதோ இந்த உணர்வுகள் இனி திரும்பக் கிடைக்காது. இதை அப்படியே அனுபவித்துவிடவேண்டும் என்று அவன் மனதில் நினைப்புத் தோன்றியது. மலர்ர்ர்ர்ர்ர் என்று உடம்பின் நரம்புகள் சந்தோஷக்கூச்சலிட்டு பைக்கின் ஆக்ஸிலரேட்டரை நன்றாய் ஒரு முறுக்கு முறுக்குவதற்குள் MCF வந்துவிட்டது.

ரிசப்ஷனில் சோபாவில் அந்தப் பெண் சத்யாவுக்காகக் காத்திருந்தாள். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். பெயர் மதுளா, MCF-ன் கார்ப்பரேட் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்ட்டில் ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் என்றாள். தேவ் உட்பட எல்லோரும் அவன் கொண்டுவருகிற ஸ்டோரி போர்டுக்காகக் காத்துக்கொண்டிருப்பதாகச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தாள். தனக்குக் கிருஷ்ணாவைத் தெரியும் என்றாள். சத்யாவைப் பற்றி லேசாய்க் கேட்டறிந்து கொண்டாள்.

அவளுடன் முன்பே ஓரிரு முறைகள் தொலைபேசியிருக்கிறான்தான். நேரில் முதன் முறை பார்க்கிறான். குதிரைவால் கொண்டையுடன் தலையை ஆட்டி ஆட்டி அவள் பேசுவது நன்றாகத்தான் இருந்தது. டெலிபோனில் பேசும்போதும் இப்படித்தான் பேசுவாளா என்று சந்தேகம் வந்தது. லேசாய் உறுத்தாத மாதிரி லிப்ஸ்டிக் போட்டிருந்தாள். நீலச்சாம்பல் நிறத்தில் புடவை கட்டியிருந்தாள். கண்ணாடி அணிந்திருந்தாள்.

பம்ப் உதிரி பாகங்கள் வரிசையாய் அடுக்கி வைக்கப் பட்டிருந்த கிரவுண்டு எல்லாம் தாண்டி ஒர்க்ஷாப்புக்கு கூட்டிச் சென்றாள். மதுளாவைப் பின் தொடர்ந்து அவன் நடந்தான். அவள் நடையில் தன்னம்பிக்கை கலந்திருந்தது. காற்றில் கலந்திருந்த எஃகு வாசனையைச் சுவாசித்துக்கொண்டே அவளுடன் ஒர்க்ஷாப் தளத்துக்குப் போனான்.

"ஹாய் தேவ், உங்காளு வந்தாச்சு" என்றாள் சிரித்துக்கொண்டே.

தேவ் சிலிண்ட்ரிகல் கிரைண்டிங் மெஷினின் அருகில் கேமரா செட்டிங்கை வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தார். சத்யாவைப் பார்த்ததும் புன்னகைத்தார். அவனிடமிருந்து ஃபைலை வாங்கிக் கொண்டு தேங்க்ஸ் அ லாட் என்றார். "நீ எங்கூட இன்னிக்கு இங்க இருக்க வேண்டி வரும். காலைல வந்து இங்க ஃபெளண்டரி ஷாட்ஸ் எடுத்து முடிச்சிட்டேன். இங்க ஒர்க்ஷாப் ஷூட் பண்ணிட்டு அப்றம் கார்ப்ரேட் ஆஃபிஸ், CEO ஸ்பீச், ஸ்டாஃப், ஒர்க்கர்ஸ் இதை முடிக்கணும். கஸ்டமர் டெஸ்டிமோனியலும், ப்ராடக்ட்ஸூம் நாளைக்குதான். எப்படியும் நாளைக்கு முடிச்சாகணும். இல்லைன்னா கேமராமேன் டீம் பட்ஜெட் இடிக்கும். நீ கொஞ்சம் கேமராமேனுக்கு அஸிஸ்ட் பண்ணு. இதுக்கு முன்னாடி ஸ்க்ரூ கம்ப்ரஸர் டிவிஷன் ஃபிலிம் பண்ணினப்ப நீ இருந்தியா?"

"இல்ல சார். இதான் ஃபர்ஸ்ட் டைம்"

"ஓகே. நோ ப்ராப்ளம்! இதான் சான்ஸ். கத்துக்கோ! பாரு அந்தப் பொண்ணு மதுளாதான் இந்த கார்ப்பரேட் ஃபிலிம் கோ-ஆர்டினேஷன் எல்லாம் பாத்துக்கறது. எதுன்னாலும் அதுகூட இண்டராக்ட் பண்ணிக்கோ. ஸோ உனக்கும் போரடிக்காம இருக்கும்." என்றார் தேவ் அவளுக்குக் கேட்காதமாதிரி. பின் அவனருகில் வந்து மேலும் குரலைத் தழைத்துக்கொண்டு "என்ன பிஜுரு ஓகேவா?" என்றார் கடைக்கண்ணால் அவளைக் காட்டி.

சத்யா மழுப்பலாய் சிரித்தான்.

"சிரிக்காத மேன். சீக்கிரம் எதையாவது கரெக்ட் பண்ணிட்டு கல்யாணம் கில்யாணம் பண்ணி செட்டிலாயிடு. என்ன புரியுதா?" என்றார். பின்னர் கேமராமேன் மணிவாசகத்தை அறிமுகம் செய்து வைத்துவிட்டு அந்தப்பக்கம் நகர்ந்துவிட்டார்.

சத்யா அவளைப் பார்த்தான். மலரைவிடவும் இரண்டு சதவிகிதம் அழகாகத்தான் இருந்தாள். உதட்டிலேயே பசைபோட்டு ஒட்டியதுபோல் ஒரு புன்னகையை நிரந்தரமாய் முகத்தில் வைத்திருந்தாள். எதற்கெடுத்தாலும் தலையாட்டிப் பேசினாள். சுற்றிலும் நடப்பவைகளை நல்ல உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருந்தாள். சி.கி. மெஷினை ஆபரேட்டர் இயக்க சுற்றிலும் இரண்டாயிரம் வாட்ஸ் விளக்குகளை ஒளிரவிட்டு குட்டி ட்ராலியில் லேசாய் கேமரா நகர்ந்தது.

இதுமாதிரி நிறைய எடுக்கவேண்டும் என்று புரிந்தது அவனுக்கு. அப்படியானால் இன்றைக்கும் சாயங்காலம் ரொம்ப நேரம் இருக்க வேண்டிவரும் என்று தோன்றியது. இங்கே சீக்கிரம் வேலை முடிந்துவிட்டால் உடனே ஓடிப்போய் மலர் ஆஃபிஸிலிருந்து கிளம்புவதற்குள் ஒருமுறை பார்த்துவிடவேண்டும் என்று ஆவலாக இருந்தது. ஒருவேளை அவன் சீக்கிரம் வந்துவிடுவான் என்று அவள்கூட காத்துக்கொண்டிருக்கக்கூடும் என்று நினைத்தான்.

அவனை இப்போது விட்டால் ட்ரு ஃப்யூஷனுக்கு ஓடிப்போய் உட்கார்ந்துகொள்ளலாம் போல் இருந்தது. சரி இன்றைக்கு சமாளிப்போம். நாளைக்கு ஸ்ரீ வந்துவிட்டால் அவனை இங்கே அனுப்பி விடலாம். ஸ்க்ரூ கம்ப்ரஸர் ஃபிலிமுக்குக்கூட அவன்தான் வந்தான் என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருக்கும்போது மதுளா அருகில் வந்தாள்.

"கிருஷ்ணா இப்ப எங்க இருக்கார்?" என்றாள். சத்யா சொன்னான். மதுளா கிருஷ்ணாவைப் பற்றி மேலும் ஒருசில விவரங்கள் கேட்டுவிட்டு திடீரென்று "கிருஷ்ணா ஆளு இன்னும் இக்னிஷன் அட்வர்டைசிங்லதான் இருக்காளா?" என்றாள்.

"யாரு ரஞ்சனியா? ஆமா அவ அங்கதான் இருக்கா! அவளை உங்களுக்குத் தெரியுமா?" என்றான் ஆச்சரியத்துடன்.

"முன்னெல்லாம் ப்ரெஸ் ரிலீஸ்க்கு அங்கதானே குடுத்துட்டிருந்தோம். அப்படித்தான் தெரியும் அவளை. சரி அவங்க ரெண்டுபேரும் எப்ப கல்யாண சாப்பாடு போடப்போறாங்க?"

"யாருக்குத் தெரியும்?" என்று சிரித்தான்.

மதுளா இதுமாதிரி எதையாவது கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தாள். தேவ் சொன்னமாதிரி போரடிக்காமல் பொழுது ஓடிவிடும் போலிருக்கிறது. மணிவாசகம் கிரைண்டிங்கை விட்டுவிட்டு ஸிஎன்ஸி மெஷினுக்கு நகர்ந்துவிட்டார். இது மாதிரி எல்லாம் ஷாட் ஷாட்டாக முடித்து எடிட் பண்ணி, ம்யூசிக் சேர்த்து, K.C. மெய்யப்பன் வாய்ஸ் ஓவர் சேர்த்துவிட்டால் அட்டகாசமான பதினைந்து நிமிட கார்ப்பரேட் ஃபிலிம் ரெடி. தேவின் ஸ்டோ ரிபோர்டுக்கு ஒரு சபாஷ் போடவேண்டும். இதுபோல படங்களுக்கு நல்ல கிரியேட்டிவ் கான்செப்டுடன் அழகான ஆங்கிலத்தில் அவரெழுதுகிற ஸ்கிரிப்ட்டுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.

"எனக்கு இந்த மாதிரி கிரியேட்டிவ் ஒர்க்ஸ்ல எல்லாம் ஆர்வம் ரொம்ப ஜாஸ்தி. CEO-க்கே இது தெரிஞ்சுதானோ என்னவோ கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ல வெச்சிருக்கார். பேசாம நான் தேவ்கிட்ட சொல்லி உங்க கம்பெனில வேலை கேட்டு வந்துரலாம்னு பாக்கறேன்" என்று சிரித்தாள் மதுளா. மேலும் நிறுத்தாமல் அவளே பேசினாள். "என்னோட ஒண்ணுவிட்ட அண்ணா ஒருத்தன் ஆர்ட்டிஸ்ட். கே.ஜி பக்கத்துல ஒரு ஆர்ட் காலரில அவன் பெயிண்டிங்க்ஸ் எக்ஸிபிஷன் வெச்சிருக்கான். போய் பாக்கணும்னு கொள்ளை ஆசை. ஆனா முடியாம இந்த ஒர்க்ல மாட்டிக்கிட்டேன். நாளைக்குத்தான் அது கடைசி. நான்கூட பெயிண்டிங் எல்லாம் பண்ணுவேன். கம்ப்யூட்டர்ல கோரல்ட்ரா, இல்லஸ்ட்ரேட்டர் எல்லாம்கூட தெரியும்"

"ஓ கிரேட்" என்று சத்யா கண்ணாடியைக் கழற்றித் துடைத்துப் போட்டுக்கொண்டான்.

மதுளா இது மாதிரி என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் அட்வர்டைசிங் ஏஜென்ஸியில் வேலை செய்வதற்கு லாயக்கான ஆள்தான். அப்படி இப்படி ஒர்க்ஷாப் தளத்தின் ஷூட்டிங் எல்லாம் முடித்து கேமரா உபகரணங்களைத் தூக்கிக்கொண்டு யூனிட் கார்ப்பரேட் ஆஃபிஸ் பில்டிங்குக்கு நகர்ந்தது. தேவ் நடுநடுவே வருவதும் கொஞ்ச நேரம் கேமராமேனுடன் கலந்தாலோசனை நடத்திவிட்டு பின் எங்கோ மறைவதுமாக இருந்தார். சத்யாவுக்கு சொல்லப்போனால் பெரிதாய் வேலை ஒன்றும் இருக்கவில்லை அங்கே. எல்லாவற்றையும் கேமரா மணிவாசகமே சமர்த்தாகப் பார்த்துக்கொள்கிறார். ஒரு கையில் நோட் பேடும், மறுகையில் ஒரு பால்பாயிண்ட் பேனாவுமாக மதுளாகூட சும்மா கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

அவனுக்கு மத்தியானத்துக்கு மேல் அங்கே இருக்கக்கொள்ளவில்லை. பேசாமல் தேவிடம் சொல்லிவிட்டு ஆஃபிஸூக்குக் கிளம்பிவிடலாமா என்றுகூட யோசித்தான். சரி. எப்படியிருந்தாலும் ஒரு ஆறு மணிக்கெல்லாம் பேக்அப் பண்ணிவிடுவார்கள். இருந்ததே இருந்தோம். இன்னும் கொஞ்ச நேரம் எப்படியாகிலும் சமாளித்துவிடுவோம் என்று மனசை சமாதானப்படுத்திக்கொண்டான்.

குறைந்தபட்சம் ஆஃபிஸூக்காவது ஒரு போன் பண்ணினாலென்ன என்று தோன்றியது அவனுக்கு. மதுளாவிடம் கேட்டபோது அவளே இண்டர்காமில் ரிசப்ஷனுக்குப் பேசி லைன் வாங்கிக்கொடுத்தாள்.

மறுமுனையில் ஜே.ஸி குரல் கேட்டது. "ஹே! ஷூட்டிங் எப்டி போகுது?" என்றான்.

"2 KVA லைட் பாத்து பாத்து கண்ணு போச்சு. சரி. சும்மாதான் கூப்பிட்டேன். அங்க என்ன சேதி?" என்றான் சத்யா பொதுவாய். எதைக் கேட்பது என்ன பேசுவது என்று அவனுக்கே குழப்பமாய்த்தான் இருந்தது. மலர் ஒரு வேளை ட்ரு ஃப்யூஷன் ரிசப்ஷன் டெஸ்கில் இருந்திருந்திருந்தால் எவ்வனவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தான். இந்த சுபாஷிணிகூட எங்கே போனாள்? ஜே.ஸி எதற்கு போனை எடுத்துத் தொலைத்தான் என்று என்னென்னவோ எண்ணம் ஓடியது. இந்த மதுளா வேறு தள்ளி நின்று போன் பேசுகிற என்னை மூக்குக் கண்ணாடி வழியே எக்ஸிபிஷன் பொருளைப் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.

"நியூஸா.. ஹாங்! இருக்கு. கிருஷ்ணா நாளைக்கு சிங்கப்பூர்லேர்ந்து வரானாம். அவன் பெரியம்மாக்கு பி.எஸ்.ஜி ஹாஸ்பிடல்ல ஏதோ க்ரிடிகல் ஆபரேஷனாம். அதனால ஒரு அர்ஜண்ட் விசிட் டு இண்டியா" என்றான் ஜே.ஸி.

(தொடரும்)

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |