Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 12
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

கடலில் ஆழம் அதிகம் இருக்கும் இடங்களில் அலைகள் இருக்காது. மேற்புறம் ஒரு குளம் போலத்தான் தோற்றமளிக்கும். ஆனால் அத்தகைய இடங்களில் நீரில் அழுத்தம் அதிகம் இருக்கும். நீச்சலில் மிகுந்த தேர்ச்சி உள்ளவர்கள் மட்டுமே நீந்திக் கடக்க இயலும். அலை இருந்தாலாவது ஒரு பக்கமாக இழுத்துப்போகும். அலையும் இல்லாத இடம் என்றால் ஒரே அழுத்து! அவ்வளவுதான்.

குண்டர்களின் படகிலிருந்து பாலு குதித்த இடம் அத்தனையொன்றும் ஆழமானதல்ல. அதே சமயம், அலையடிக்கும் இடமும் அல்ல. சுமாராக நீந்தத் தெரிந்த ஒருவர் கொஞ்சம் கஷ்டப்பட்டு நீச்சலடித்தால் பக்கத்தில் சற்றுத்தொலைவில் இருந்த கட்டுமரத்தை நெருங்கி ஏறிவிடமுடியும். ஆனால் நீச்சல் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கக்கூடிய பாலுவால் என்ன செய்துவிட முடியும்? மேலும் அவனது உடம்பு வேறு ஒரு கொழுத்த பூசணிக்காய் போல இருக்கும். தரையில் நடந்தாலே மேல்மூச்சு வாங்கக்கூடியவன். சாப்பிட்ட உருளைக்கிழங்கு போண்டாக்களும் வெஜிடபிள் சமூசாக்களும் ஐஸ் கிரீம்களும் கொஞ்சநஞ்சமா? வாத்தியார் கிண்டல் செய்தபோதெல்லாம் அது அத்தனை பெரிய விஷயமாகத் தெரியவில்லை. சக மாணவர்கள் கேலி செய்தபோதெல்லாம் 'போடா சர்தான்' என்று விட்டுவிட்டான். 'சாப்டா பரவால்லடா பாலு. கூடவே எக்ஸஸைஸ் பண்ணிடணும்' என்று அப்பாவும் அம்மாவும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார்கள். கேட்டால்தானே?

கடவுள் ஏன் என்னை மட்டும் குண்டு பையனாகப் படைத்தான்? எனக்கு மட்டும் ஏன் இத்தனை பெரிய உடம்பு? தூக்கமாட்டாமல்? எனக்கு மட்டும் ஏன் இப்படி வினோதமான சங்கடங்களெல்லாம் வருகின்றன? அதுசரி. இப்போது வீராதி வீரனாக நடுக்கடலில் குதித்துவிட்டேனே, எப்படிக் கரை சேரப்போகிறேன்? எந்தக் கடல்தேவதை வந்து என்னைக் காப்பாற்றப் போகிறது?

ஒரு வினாடிக்கும் குறைவான நேரம்தான் இருக்கும். பாலு படகின் மீது ஏறி நின்று, தொபுக்கட்டீரென்று குதித்து நீரில் அமிழத் தொடங்கும் நேரத்துக்குள் இத்தனையையும் யோசித்துப் பார்த்தான். கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. ஆனாலும் எப்படியும் தப்பித்துவிடுவோம் என்று ஒரு சின்ன துணிச்சலும் இருந்தது. நீச்சலில் தேர்ந்த டில்லிபாபு தன்னைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் குதித்து, அதோ நீந்தி வந்துகொண்டிருக்கிறான். எப்படியும் காப்பாற்றிவிட மாட்டானா என்ன?

ஆனால் டில்லி அவனை நெருங்குவதற்குள் அவன் கடலின் அடியாழத்தைத் தொட்டுவிடுவான் போல இருந்தது. முதலில் எப்படி மூச்சு விடுவது என்று தெரியவில்லை. நீச்சலின் பாலபாடமே மூச்சை அடக்குவதுதான்! ஆனால் எத்தனை நேரம் அடக்குவது? எப்படி அடக்குவது? வாயைத் திறந்தால் உப்புநீர் உள்ளே போய்விடும். சனியன், இந்த நேரத்தில் அறிவியலெல்லாம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. உள்ளே நீரைக் குடிக்கக் குடிக்க உடலின் கனம் அதிகமாகும். மேற்கொண்டு கையைக் காலை ஆட்ட முடியாமல் போய் இன்னும் மூழ்க வேண்டிவரும். மேலும் உப்புநீரை சுவைத்தும் குடித்துத் தொலைக்க முடியாது. குமட்டிக்கொண்டு வாந்தி வரும். கடலில் வாந்தி எடுத்தால் ஒரே ஒரு சௌகரியம், துடைத்துக் கழுவவேண்டிய அவசியம் இருக்காது.

சே, நான் ஏன் இப்படி தறிகெட்டு யோசிக்கிறேன்! என்ன ஆயிற்று எனக்கு? புத்தி பிசகத் தொடங்கிவிட்டதா? உயிர் போகும்போது இப்படித்தான் ஆகுமா?

அவனுக்கு முதல் முறையாக பயப்பீதி பிடித்துக்கொண்டது. தன்னால் முடிந்தவரை கால்களை வேக வேகமாக உதைத்துப் பார்த்தான். கைகளை முன்னும் பின்னும் அசைத்து நீரைக் கிழித்து மேலே வர முடியுமா என்று முயற்சி செய்தான். இந்த டில்லிக் கடங்காரன் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கிறான்? இந்நேரம் பாய்ந்துவந்து காப்பாற்றியிருக்க வேண்டாமா?

இவ்வாறு அவன் யோசித்துக்கொண்டிருக்கும்போதே தன் தலைமுடியைக் கொத்தாக யாரோ பிடிப்பது போல உணர்ந்தான். ஆ! டில்லி வந்துவிட்டான்! காக்கும் கடல் தேவதை அவந்தானா?

ஆனால் பாலுவால் கண்ணைத் திறந்து பார்க்க முடியவில்லை. தலை சுற்றி மயக்கத்தின் விளிம்புக்குப் போய்க்கொண்டிருந்தான். தன்னைக் கொத்தாகப் பிடித்த உருவம் அப்படியே இழுத்துக்கொண்டு மேலே போய்க்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவனால் உணரமுடிந்தது. எப்படியும் பிழைத்...

அவ்வளவுதான். பாலுவுக்கு முற்றிலுமாக நினைவு மறைந்துபோனது. முழுமையான மயக்கத்துக்குத் தன்னைத் தந்தவனுக்கு அதன்பின் நடந்தது எதுவுமே தெரியவில்லை.

உண்மையில் பாலுவின் தலைமுடியைப் பற்றித் தூக்கியது டில்லி அல்ல. படகில் அவனை ஏற்றி வந்த குண்டர்களில் ஒருவன் தான். பாலு கடலில் குதித்ததுமே சுதாரித்துக்கொண்டு எழுந்து வந்து பார்த்த குண்டர்கள், தொலைவில் கட்டுமரத்தில் டில்லியும் குடுமிநாதனும் வருவதைப் பார்த்துவிட்டார்கள்.

"டேய், இவனுகளை வெறும் பொடிப்பையன்கள்னு நினைச்சி விட்டது தப்புடா. மூணுபேரையும் சேர்த்துப் பிடிச்சிட்டுப் போயிடணும். நம்ம நாட்டுக் கடல் எல்லை தாண்டினதும் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்" என்று அவர்களில் தலைவன் போலிருந்த பெருங்குண்டன் சொன்னான்.

அவன் சொன்னதை ஆமோதித்த இன்னொரு குட்டி குண்டன் உடனே தான் அணிந்திருந்த சட்டையைக் கழற்றிவிட்டுக் கடலில் பாய்ந்தான். பாலுவை எப்படியாவது தூக்கி வந்துவிடுவதே அவன் நோக்கமாக இருந்தது. அதே சமயம், பாலுவைக் காப்பாற்றுவதற்காகக் கடலில் பாய்ந்து நீந்தி வந்துகொண்டிருந்த டில்லிபாபுவைக் குறிவைத்து இன்னொரு குண்டனும் நீரில் பாய்ந்தான்.

"அந்தக் கட்டுமரத்துல ஒரு பையன் இருக்கான் பாஸ்" என்று இன்னொருவன் சுட்டிக் காட்ட, "இருக்கட்டும், இருக்கட்டும்... ரன்னிங் ரேஸா ஓடமுடியும் இங்க? இவனுகளைப் பிடிச்சிப் போட்டுட்டு அவனைப் போய் அள்ளிப்போம்" என்றான் பெருங்குண்டன்.

இப்படியொரு விபரீதம் நேரலாம் என்று டில்லி எதிர்பார்க்கவில்லை. ஒருகணம் என்ன செய்வது என்றும் அவனுக்குப் புரியவில்லை. டில்லிக்கு நீச்சல் தெரியும். கண்டிப்பாக அவன் ஒருவனாகவே பாலுவை இழுத்துப் போய்க் காப்பாற்றிவிட முடியும். ஆனால் தடி தடியாக குண்டர்கள் நடுக்கடலில் சண்டைக்கு வந்தால், பாவம் சின்னப்பையனால் என்ன செய்துவிட முடியும்? உடனே அவனுக்கு அழுகை வந்துவிட்டது. இத்தனை சிரமப்பட்டு புதையல் தீவின் ரகசியங்களை பாலு தனியொருவனாகக் கண்டுபிடித்திருக்கிறான். அந்த ரகசியம் என்னவென்று வெளியுலகத்துக்குத் தெரியப்படுத்த முடியாமலேயே போய்விடுமா? அட, வெளியுலகம் கிடக்கட்டும். பாலுவின் முயற்சிகளுக்குப் பக்கபலமாகக் கூட வந்த தங்கள் இருவருக்குமே கூடத் தெரியாமல் போய்விடுமா? கடவுளே, இதென்ன சோதனை!

ஒரு குண்டன் பாலுவைப் பிடித்து இழுத்து மேலே கொண்டு வந்துவிட்டான். இன்னொரு குண்டன் டில்லியை கோழி அமுக்குவது போல அமுக்கி இழுத்துக்கொண்டு வந்தான். இருவரையும் பந்துபோலச் சுருட்டித் தூக்கிப் படகில் போட்டுவிட்டு இருவரும் ஏறிக்கொண்டார்கள்.

"ம்.. அந்தக் கட்டுமரத்தாண்ட போய்யா" என்று குரல் கொடுத்தான் பெருங்குண்டன்.

கட்டுமரத்தைத் தள்ளத் தெரியாமல் தள்ளாடிக்கொண்டிருந்த குடுமி, நடந்த காட்சிகளை இருட்டில் அரைகுறையாகப் பார்த்துக்கொண்டிருந்தவன் ஏற்கெனவே பயந்துபோயிருந்தான். அம்மா, அம்மா என்று அழவே ஆரம்பித்திருந்தான். பாலுவையும் டில்லியையும் குண்டர்கள் தூக்கிப் போய்விட்டால், நடுக்கடலில் தன் கதி என்ன என்கிற கவலை அவனுக்கு ஏற்பட்டது. 'குண்டர்களே! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும், என்னையும் அழைத்துக்கொண்டு போய்விடுங்களேன்' என்று கத்தலாமா என்று பார்த்தான்.

சே, எத்தனை அபத்தம்! இப்போது தான் செய்யக்கூடியது என்ன? நண்பர்கள் இருவரும் ஆபத்தில் இருக்கிறார்கள். தன்னால் ஏதாவது உதவ முடியுமா என்று பார்க்க வேண்டும். ம்ஹும். வாய்ப்பில்லை. நடுக்கடல். நீச்சல் தெரியாத நிலைமை. எதிரிகளோ, உருட்டுக் கட்டை பேர்வழிகள். தவிரவும் இருட்டு. என்ன தான் செய்வது?

அவன் அதிகம் யோசிக்க வேண்டியிருக்கவில்லை. ஐந்து நிமிடங்களில் குண்டர்களின் படகு குடுமி இருந்த கட்டுமரத்தின் அருகே வந்துவிட்டது.

"டேய், அந்தப் பொடியனைத் தூக்கிப் போடுங்கடா" என்று ஒரு குரல் கேட்டது. படகிலிருந்து ஒரு கயிறை இறக்கினார்கள். வேறு வழியில்லாமல் குடுமி அதைப் பிடித்துக்கொண்டு மேலே ஏறினான். படகின் விளிம்பை அவன் எட்டிப்பிடித்தபோது தலைமுடியைக் கொத்தாகப் பிடித்த ஒரு தடியன் அப்படியே தோசை திருப்பிப் போடுவது போல அவனைத் தூக்கிப் படகில் போட்டான்.

"மூணு பேர் தானேடா? இன்னும் ஏதாவது சுண்டெலி இருக்கா?" என்று எகத்தாளமாகக் கேட்டான் குண்டர் தலைவன். பாலுவுக்கு அப்போதுதான் லேசாக நினைவு திரும்பத் தொடங்கியிருந்தது. இருப்பினும் தொடர்ந்து மயக்கத்தில் இருப்பது போலவே நடிப்பது என்று முடிவு செய்துகொண்டான். ஏதாவது செய்யவேண்டும். ஏதாவது செய்து தப்பித்தே ஆகவேண்டும். இவர்களது சட்டவிரோத, தேச விரோத நடவடிக்கைகளை உலகுக்குத் தெரியப்படுத்தியே ஆகவேண்டும். விடக்கூடாது என்று மனத்தில் வைராக்கியம் பூண்டான்.

ஆனால் குண்டனின் பேச்சு அவனுக்குக் கவலையளித்தது.

"டேய், இந்த மூணு பேரையும் சும்மா விடக்கூடாது. கரெக்டா நம்ம நாட்டுக் கடல் எல்லை தாண்டினதும் அஞ்சாம் திட்டு நெருங்கறப்ப இவனுகளைக் கழுத்தை நெரிச்சி, கடல்ல தள்ளிடுவோம். கண்டிப்பா இன்னிக்கு சுறாக்களுக்கு நல்ல பிரியாணி விருந்துதான்" என்று பி.எஸ். வீரப்பா போல் சிரித்தான்.

ஆனால் விதி வேறு விதமாகச் சிரித்தது.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |