அதிகாலை ஆறு மணிக்கு மாணவர்கள் அத்தனைபேரும் கடலோரக் காவல்படையின் அலுவலகத்துக்கு வந்து குழுமிவிட்டார்கள். மகாலிங்க வாத்தியார் காக்கி பேண்ட், சட்டையில், சாரணர் தொப்பி அணிந்து, பார்க்க கம்பீரமாக இருந்தார். காவல்படை அதிகாரிகள் வெள்ளை வெளேரென்று உடை உடுத்தி, மாணவர்களுக்கு சுடச்சுட தேநீர் அளித்தார்கள். பாலுவுக்கு அந்த அனுபவமே புதிதாகவும் பரவசமாகவும் இருந்தது. என்ன புண்ணியம் செய்திருக்கிறார்கள் இந்த அதிகாரிகள்! கடல் அலை தொடும் தூரத்தில் ஆபீஸ்! மரத்தில் சிறு பாலம் கட்டி ஆபீஸின் பின்புறக் கதவைத் திறந்து அப்படியே காலாற நடந்து பத்தடி போனால் படகுகள் காத்திருக்கின்றன. போரடித்தால் ஜாலியாக ஏறி ஒரு ரவுண்டு அடித்துவிட்டுத் திரும்பிவிடலாம்!
எப்பேர்ப்பட்ட வாழ்க்கை இது! அடடா, நான் பெரியவனானால் நிச்சயம் ஒரு கடற்படை அதிகாரியாகத் தான் ஆகவேண்டும்!
"பாய்ஸ்! ஒரு மாறுபட்ட அனுபவத்தை உங்களுக்குத் தரணும்னுதான் பன்றித்தீவுக்கு சாரணர்களைக் கூட்டிக்கிட்டுப் போக ஏற்பாடு செஞ்சோம். இந்த முயற்சிக்கு ஒத்துழைச்ச கடலோரக் காவல்படையினருக்கு நம்மோட நன்றிகளை முதல்ல சொல்லிடணும். பன்றித்தீவு இங்கேருந்து ஆறு கடல்மைல் தொலைவுல இருக்கு. உங்கள்ள சிலர் கட்டுமரம் ஏறிப் போயிருப்பீங்க. ஆள் நடமாட்டம் இல்லாத பன்றித்தீவுல பன்றிகளும் கிடையாது! அப்புறம் எதுக்கு அந்தப் பேர் வந்ததுன்னு இனிமேத்தான் ஆராய்ச்சி பண்ணணும். அந்த வேலையை அப்புறம் வெச்சுக்கலாம். நாம இப்ப எதுக்கு அங்க போறோம் தெரியுமில்லையா?"
"தெரியும் சார். தீவை ஸ்டடி பண்ணணும்னு சொல்லியிருக்கீங்க. அங்க என்னென்ன தாவரங்கள் இருக்கு,மண் எப்படி இருக்கு, என்னென்ன பறவைகள், உயிரினங்கள் நிறைய இருக்கு... இதையெல்லாம் கவனிக்கணும். அப்புறம், நம்ம ஊரைவிட தீவு எப்படி, எதனால, ஏன் சுத்தமானதா இருக்குங்கறதைப் பத்தி ஒரு கட்டுரை எழுதணும்...."
"வெரி குட் பாலு. எல்லாரும் கேட்டுக்கிட்டீங்களா? புறப்படுவோமா?"
பையன்கள் ஹோவென்று உற்சாகக் குரல் எழுப்பியவண்ணம், அந்தக் கடலோரக் காவல்படை அலுவலகத்தின் பின்புறம் அமைக்கப்பட்டிருந்த சிறிய போட் ஜெட்டியின் மரப்பாலத்தின்மீது திமுதிமுவென்று ஓடி, தயாராக நின்றிருந்த ஸ்டீம் போட்டில் ஏறினார்கள்.
"பாத்து!பாத்து! மெதுவா ஏறுங்க" என்றார் வாத்தியார்.
"டோண்ட் ஒர்ரி சார். எங்க சார்ஜண்ட்ஸ் அங்க இருக்காங்க. அவங்க பாத்துப்பாங்க" என்று சொன்னார் வெள்ளை வெளேரென்று உயரமாக, ட்ரிம்மாக இருந்த கடற்படை அதிகாரி.
"தேங்க்யூ வெரிமச் கேப்டன் நாராயணமூர்த்தி! நாங்க கிளம்பறோம்" என்று அவரிடம் விடைபெற்று வாத்தியாரும் வந்து படகில் ஏறிக்கொண்டார். படகு சிறு உறுமலுடன் புறப்பட்டது.
கொஞ்சதூரம் வரை கரை தெரிந்தது. தாங்கள் படகு ஏறிய இடம் கண்ணுக்குப் புலப்பட்டது. சட்டென்று எல்லாம் மறைந்து, நாலாபுறமும் நீலம் பரவி, உலகமே நீராலானது போலத் தோன்றியதை வியப்புடனும், விழிப்புணர்வுடனும் கவனித்துக் குறித்துக்கொண்டான் பாலு.
"கடல்லே எப்படி திசை தெரியும் சார்?" அவன் கேட்பதற்காகக் காத்திருந்தமாதிரி, ஒரு கடற்படை அதிகாரி அவனை அழைத்துக்கொண்டு எஞ்சின் ரூமுக்குப் போனார்.
"பாய்ஸ்! எல்லாரும் வாங்க" என்று அழைத்து, அங்கே படகு ஓட்டுநருக்கு முன்னால் இருந்த திசைகாட்டும் கருவியைச் சுட்டிக்காட்டினார்.
"இதை வெச்சுத்தான் கண்டுபிடிப்போம். இது ஒரு அறிவியல்! சயன்ஸ்! கடல் இயல்னு தனி சப்ஜெக்ட் இருக்கு. கடல் அறிவியல் வேற, கடல் இயல்வேற! ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். உங்கள்ள எத்தனை பேருக்கு கப்பல் கேப்டன் ஆகணும்னு லட்சியம் இருக்கு?" என்று கேட்டார் அந்த அதிகாரி.
பல பையன்கள் கையைத் தூக்கினார்கள்.
"வெரி குட். தண்ணீர்ங்கறது ஒரு சக்தி. மிகப்பெரிய, பிரும்மாண்டமான சக்தி. பாக்கறதுக்கு சாது மாதிரி இருக்கில்லையா? ஆனா அதனோட சக்தி அபரிமிதமானது. கடல் பொங்கறதுன்னு கேள்விப்பட்டிருக்கிங்களா?..."
"ஆமா சார். புயல் வீசும்போது..."
"கரெக்ட். அப்ப தண்ணில உற்பத்தியாகிற சக்தி மின்சாரத்தைவிடப் பலமடங்கு பெரிசு. நாம கடலைப் புரிஞ்சுக்கணும்னா, ஒண்ணு தண்ணியாவே மாறணும் மனசுக்குள்ள. அல்லது மீனா மாறணும்"
"மீனா மாறுவதா! அதெப்படி?" என்றான் பாலு.
"முதல்ல உடம்பைக் குறைச்சு நீச்சல் கத்துக்கணும் புள்ளையாரே!" என்றார் வாத்தியார். பையன்கள் சிரித்தார்கள்.
பாலு திரும்பிப் பார்த்து முறைத்தான். "நீங்க சொல்லுங்க சார்" என்றான்.
"தண்ணீரோட சூட்சுமம் புரிஞ்சுக்கறது கொஞ்சம் கஷ்டம். படிக்கணும். பெரியவனானதும் மெரைன் பயாலஜி படிச்சீங்கன்னா புரியும்." என்றவர், அங்கே எடுத்துவந்திருந்த ஒரு குண்டு புத்தகத்தைப் பிரித்து பாலுவிடம் காட்டினார். கொட்டை கொட்டை எழுத்துகளில் கடலின் இயல்புகளை இரண்டு இரண்டு வரிகளில் அழகாக, மாணவர்களுக்குப் புரியும்விதத்தில் அதில் விளக்கி எழுதப்பட்டிருந்தது. கூடவே அழகழகாக நிறையப் படங்களும் இருந்தன.
பாலு ஆர்வமுடன் அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொண்டு தனியே போனான். அவன் அதைப் புரட்டத் தொடங்கியதும் ஒரு கப்பல் பணியாளர் வந்து அனைத்து மாணவர்களுக்கும் மீண்டும் சுடச்சுடத் தேநீர் அளித்தார்.
"எனக்கு ரெண்டு தம்ளர் வேணும்" என்றான்பாலு.
சிரித்துக்கொண்டே அவனுக்கு இரண்டு கிளாஸ் தேநீர் அளித்தவர், "அங்க நிறைய டீ இருக்கு. எவ்ளோ வேணுமோ எடுத்துக் குடிக்கலாம்" என்று சொன்னார்.
"ரொம்ப தேங்ஸ் சார். ஒரு விஷயம். என்னைமாதிரி குண்டு பையன்கள் நீச்சல் கத்துக்கிட்டு கடலைப் புரிஞ்சுக்க முடியாதா?"
அவர் கனிவாக அவன் தலையைக் கோதிவிட்டு, "தாராளமா முடியும். ஆனா முதல்ல கடல்ல நீச்சல் பழகக் கூடாது. ஸ்விம்மிங் பூல்லெ போய்க் கத்துக்கணும். தொடர்ந்து நீச்சல் அடிச்சா உடம்பு தானா குறையும். அப்புறம் கடல் நீச்சலுக்கு வரலாம்"
பாலுவுக்கு இப்போது கொஞ்சம் தெம்பாக இருந்தது.
முக்கால் மணிநேரக் கடல் பயணம். அவனுக்குப் பரவசம் பிய்த்துக்கொண்டு போனது. எப்பேர்ப்பட்ட அனுபவம்! நாலாபுறமும் கடல். எல்லையற்ற கடல்வெளி. மீன்கள் உள்ளே ஓயாமல் நீந்திக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு யார் நீச்சல் சொல்லிக்கொடுத்திருப்பார்கள்? கடலின் வேகத்தை எதிர்த்துக் கப்பல்களும் படகுகளும் போகின்றன. சாதிக்க முடியாதது என்று ஏதாவது இருக்கிறதா என்ன? சரியான முனைப்புதான் வேண்டும். அது இருந்துவிட்டால், கடலை வெல்லுவது மிகச் சுலபம்!
இப்படித் தோன்றியதுமே அவனுக்குப் புத்துணர்ச்சி உண்டாகிவிட்டது.
சரியாக ஐம்பது நிமிடம் ஆனபோது எதிரே கரை தென்பட்டது.
"பாய்ஸ்! பன்றித்தீவு வந்தாச்சு. இறங்கணும்" என்று மகாலிங்க வாத்தியார் குரல் கொடுத்தார். மீண்டும் பையன்கள் ஓவென்று உற்சாகக் குரல் கொடுத்துக்கொண்டு தத்தம் பைகளை எடுத்துக்கொண்டு தயாராகப் படகின் விளிம்புக்கு வந்து நின்றார்கள்.
இன்றைய தினத்தை என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது என்று பாலு நினைத்துக்கொண்டான். அவனுக்கு அப்போது தெரியாது. அன்றைய தினம் மட்டுமல்ல; அடுத்து வரப்போகிற பத்து நாட்களையும் கூட அவனால் உயிருள்ளவரை மறக்கமுடியாமல் இருக்கப் போகிறது என்று!
மகிழ்ச்சியுடன் அவன் பன்றித்தீவில் கால் வைத்தான். அங்கே அவனுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது!
|