Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 5
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

அமாவாசை அன்று இரவு பன்றித்தீவுக்கு மீண்டும் எப்படிச் செல்வது?

தீவிலிருந்து புறப்பட்ட வினாடியிலிருந்தே பாலுவுக்கு இதே சிந்தனைதான். நண்பன் குடுமிநாதனும் அதே விஷயத்தை ஒரு பிரச்னையாக எழுப்பியபோது, அவனது யோசனை இன்னும் தீவிரமடைந்தது. ஒப்புக்கு, தன்னிடம் ஒரு வழி உள்ளதாக அவன் தன் நண்பனிடம் சொல்லியிருந்தாலும் அந்த வழி பலனளிக்குமா என்பது அவனுக்கு சந்தேகம் தான்.

கடற்கரையிலிருந்து சற்று உள்ளடங்கி, பிரதான சாலையின் இடதுபுறம் கிளை பிரியும் ஒற்றையடிப்பாதையின் முடிவில் உள்ள ஓம் முருகா நகரில் பாலுவின் வீடு இருந்தது. மூச்சுப்பிடித்து ஒரு ஓட்டமெடுத்தால் ஐந்தாவது நிமிடத்தில் கடற்கரையை அடைந்துவிடக்கூடிய தூரம் அது. அவனது வகுப்புத் தோழர்கள் பலரும் அங்கேயேதான் இருந்தார்கள் என்கிற படியால் விளையாடுவதெல்லாம் கூட அந்த வீதிகளிலேயேதான் அவனுக்கு சாத்தியம். கடலோர கிராமம் என்றாலும் கடற்கரைக்குப் போகவெல்லாம் அவனது பெற்றோர் அவ்வளவாக அனுமதிக்க மாட்டார்கள். நீச்சல் தெரியாத குண்டுப்பையனை எந்தப் பெற்றோர் தனியாக கடற்கரைக்கு அனுப்புவார்கள்? மேலும் அவனது சோடாபுட்டிக் கண்ணாடி ஒரு பெரும்பிரச்னை. அதைக் காரணம் காட்டியே அவனது அப்பா அவனை வீட்டைவிட்டு இறங்கக்கூடாது என்று எப்போதும் சொல்லுவது வழக்கம்.

ஆனாலும் பாலுவுக்கு டில்லிபாபு என்கிற மீனவச் சிறுவனுடன் ஓரளவு பழக்கம் இருந்தது. டில்லிபாபு, பாலுவின் பள்ளியில் படித்தவன் தான். திடீரென்று ஒருநாள் போதும் படித்தது என்று அவனது பெற்றோர் அவனைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். இது, பாலு உட்பட பள்ளியில் பலருக்கு அதிர்ச்சியளித்தது. யாராவது படிக்கிற பையனைப் பாதியில் நிறுத்துவார்களோ? ஆறவேயில்லை அவனுக்கு.

அன்றுமாலை அவன் நடந்ததை வீட்டில் சொன்னபோது, " என்ன பண்ணறது? சில பேரண்ட்ஸ் இப்படித்தான் ஏதாவது தப்புத்தப்பா செஞ்சிடுவாங்க. படிக்கிற பசங்களை ஸ்கூலுக்குப் போகவிடாம செய்யறதைவிடப் பெரிய கொடுமை வேற இல்லை. பிறக்கும்போதே சம்பாதிக்க ஆரமிச்சிடணும்னு நினைக்கறாங்க." என்றார் பாலுவின் தந்தை.

"அவன் சுமாரா படிப்பாம்பா. எப்படியும் முப்பத்தஞ்சு, நாற்பது மார்க்ஸ் வாங்கிடுவான். புக்ஸ் வாங்க முடியலைன்னு நிறுத்தறாங்களாம். சொல்லி அழுதான்" என்றான் பாலு.

"நாம வேணா புக்ஸ் வாங்கித் தரலாம்டா கண்ணா. நீ சொல்லேன்" என்றாள் பாலுவின் அம்மா.

பாலுவுக்கு டில்லிபாபுவைத் தெரியுமே தவிர, அவன் '௬ப்ரெண்ட்' அல்ல. டில்லிபாபு எப்போதும் வகுப்பில் கடைசி பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பான். பெரும்பாலான வகுப்புகளில் அவன்  கொர்ர் என்று குறட்டை விட்டபடி தூங்க ஆரம்பித்துவிடுவான். வாத்தியார்கள் எழுப்பி பெஞ்ச் மேல் நிற்கவைத்துக் கேட்டால் "நைட்டு கடலுக்குள்ளாற போயிட்டேன் சார். அதான்" என்பான்.

பாலுவுக்கு அதுவே பெரிய அதிசயமாக இருக்கும். தன் வயதொத்த பையன் தான். தினசரி கடலுக்குள் மீன்பிடிக்கப் போய், ஓய்வு நேரத்தில் பள்ளிக்கும் வருகிறான்! எப்படித்தான் இவர்களெல்லாம் இப்படிச் செய்கிறார்கள். தைரியமாக எப்படியொரு சிறு பையனைக் கடலுக்கு அனுப்புகிறார்கள் அவனது பெற்றோர்?

யோசித்து யோசித்துப் பார்த்தாலும் அவனுக்கு விடை தோன்றாது.

"எலேய், நீ கடலுக்கு வேணா போ, நெலவுக்கு வேணா போ. க்ளாசுக்கு வந்தா ஒளுங்கா படிக்கணும். இங்க வந்து தூங்கறவேலை வெச்சிக்கிட்டே, முட்டிக்கு முட்டி தட்டிடுவேன்!" என்று வாத்தியார்கள் எச்சரித்தால் "சரி சார்" என்று விழித்துக்கொள்ளுவான். ஆனாலும் அடுத்த வகுப்பில் மீண்டும் கொர்ர் கொர்ர் தான்!

பலநாள் டில்லிபாபு குளிக்காமல்தான் பள்ளிக்கு வருவான். ஒரே சட்டையை ஒருவாரம் போட்டுக்கொள்வான். முகத்தில் எண்ணெய் வழிவதை ஒருபோதும் துடைக்க மாட்டான். யாருடனும் பழகாமல் வகுப்பில் தனியே அமர்ந்திருப்பது அவன் வழக்கம்.

பாலுவின் அம்மா, 'நாம் வேண்டுமானால் அவனுக்கு புக்ஸ் வாங்கித் தரலாமே' என்று சொன்னதையொட்டி, டில்லிபாபுவின் பெற்றோரிடம் பேச ஒருநாள் பாலு கடற்கரையை ஒட்டியுள்ள மீனவர் குடியிருப்புக்கு அவனைத் தேடிக்கொண்டு போனான்.

டில்லிபாபுவின் பெற்றோரிடம் விஷயத்தைச் சொன்னபோது "ரொம்ப நல்ல மனசு தம்பி உனுக்கு. ஆனா, டில்லி இனிமேங்காட்டியும் பள்ளியோடத்துக்கு வரமாட்டான்னா வரமாட்டான் தான்... எனுக்கு வயசாயிரிச்சி. கடலுக்குள்ளாறப் போவ ஒரு தொணை வேண்டியிருக்கு. அந்த டில்லிக்களுதைக்கும் படிப்பு வரமாட்டேங்குது. எலவசமா சோறு போட்டு படிப்பு சொல்லித்தாராங்கன்னு சொல்லித்தான் போனான். இப்ப என்னான்னா, அஞ்சக்குடு, பத்தக்குடுன்னு அப்பப்ப உசிரை வாங்கறான். முடியலை தம்பி..." என்றார் அவனது அப்பா.

"அவன் கொஞ்சம் கஷ்டப்பட்டா நல்ல மார்க் வாங்கலாம்ங்க. நீங்கதான் கொஞ்சம் உதவி செய்யணும்.. நைட்டுல படிக்க முடியாம கடலுக்குப் போனா எப்பிடி மார்க் வரும்? ஒரு நாலஞ்சு வருஷம் அவனை ஒழுங்கா படிக்க விட்டிங்கன்னா, தேறிடுவானே" என்றான் பாலு.

"அதெல்லாம் சரிப்படாதுப்பா. நீ போ. அவன் வரமாட்டான்" என்று கட் அண்ட் ரைட்டாகச் சொல்லிவிட்டார் டில்லிபாபுவின் அப்பா.

தோல்வியுடன் வீடு திரும்ப வேண்டியதாகிவிட்டது. எப்போதாவது மார்க்கெட்டில் பிறகு அவன் டில்லிபாபுவைப் பார்ப்பான். பார்த்ததும் சிரித்துவிட்டு, ஓரிரு வார்த்தைகள் பேசுவான். பிறகு "நா வரேண்டா. அம்மா தேடும்" என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவான். அவனுக்குப் படிக்கும் ஆர்வம் இருந்தது. ரொம்ப ஆர்வம் என்று சொல்ல முடியாவிட்டாலும் கொஞ்சம் தட்டிக்கொட்டினால் தேர்வுகளில் பாஸாகிவிடக்கூடிய பையன் தான். ஏனோ படிப்பை நிறுத்திவிட்டார்கள்.

பாலுவுக்கு இப்போது அந்த டில்லிபாபுவின் நினைவுதான் வந்தது. நீச்சல் தெரிந்த டில்லிபாபு. கட்டுமரம் ஏறிக் கடலுக்குள் மீன்பிடிக்கப் போகும் டில்லிபாபு. தைரியசாலியான டில்லிபாபு. பள்ளிக்கூடத்துக்கு வராவிட்டால் என்ன? அவனுக்கு கடலின் இயற்கை தெரியும். எப்போது சீறும், எப்போது தணியும், என்னென்ன பிரச்னைகள் வரும், எது வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று எல்லாம் தெரியும். அவனிடம் விஷயத்தைச் சொல்லி உதவி கேட்டால் என்ன?

இதுதான் பாலுவுக்கு வந்த யோசனை. நண்பனிடம் அதை அவன் சொல்லவில்லை. மாறாக, தானே டில்லிபாபுவிடம் பேசி, அவன் ஒப்புக்கொண்டதும் சொல்லலாம் என்று முடிவு செய்துகொண்டான்.

அன்று மாலை சாரணர் மாணவர்கள் அனைவரும் பத்திரமாக கரைக்குத் திரும்பி, மகாலிங்க வாத்தியாரிடம் விடைபெற்று அவரவர் வீடுகளுக்குப் போய்விட்டார்கள். வாத்தியாரும் மீனவக் குடியிருப்போரம் நிறுத்தியிருந்த தன் சைக்கிளில் ஏறிக் கிளம்பிவிட்டார். கடலோரப் பாதுகாப்புப்படை ஆபீஸிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் டில்லிபாபுவின் குடிசை இருந்தது. பாலு ஒருகணம் யோசித்தான். நேரே டில்லிபாபுவைப் போய்ப் பார்த்துவிட்டே வீட்டுக்குப் போவது என்று முடிவு செய்து, விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தான்.

இருட்டத் தொடங்கியிருந்த நேரம். கடலோரக் காற்று சும்மா ஜிலுஜிலுவென்று அள்ளிக்கொண்டு போனது. தென்னை மரங்களின் தாலாட்டு மிகவும் சுகமாக இருந்தது. மாவு மாதிரி காலடியில் மிதிபட்ட மணல் நடப்பதற்குப் பரம சுகமாக இருந்தது. ஓடத்தொடங்கினால் கால் புதைந்தது. அது ஒருவிதமான அனுபவமாக இருந்தது. இயற்கைதான் எத்தனை அற்புதங்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது!

பாலு, டில்லிபாபுவின் வீட்டை அடைந்து, வாசலில் இருந்த வேலிப்படலைத் தள்ளித் திறந்து உள்ளே போய் குரல் கொடுத்தான்.

மூன்று முறை அழைத்ததும் எழுந்து வந்த டில்லிபாபு தூங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. பாலுவைக் கண்டதும் "இன்னாடா, இந்நேரத்துல? எப்பிடி இருக்கே?" என்றான் அவன்.

"உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும் டில்லி. கொஞ்சம் வெளில வரியா?" என்றான் பாலு.

"சொல்லு. நேத்திக்கு கடலுக்குள்ளாற போயி, இப்பத்தான் திரும்பி வந்தோம்.  ரெண்டுநாளா தூங்கலை. மீனும் இன்னிக்கு அத்தனை நல்லா அகப்படலை" என்றான்.

"உங்கப்பா இருக்காரா?" என்றான் பாலு.

"சாராயக்கடைக்குப் போயிருக்காரு" என்று சாதாரணமாகச் சொன்னான்.

திக்கென்றது பாலுவுக்கு. எத்தனை இயல்பாகச் சொல்லுகிறான்! கடவுளே! கெட்ட விஷயங்கள் கூட பழகிவிட்டால் சாதாரணமாகிவிடுமா என்ன?

"டில்லி. நான் சொல்லவந்ததுக்கு முன்னால் உனக்கு ஒண்ணு சொல்லிடறேன். நீ மீன் பிடி. தப்பில்லே. ஆனா பெரியவனானதும் நீயும் இந்தமாதிரி சாராயமெல்லாம் குடிக்க ஆரம்பிச்சிடாதே. உடம்புக்கு ரொம்பக் கெடுதல் அது. நீயும் நேத்து வரைக்கும் ஸ்கூலுக்கு வந்து படிச்சவன் தானே. "

"சேச்சே. எனக்கு அந்த வாடையே பிடிக்காதுரா. ஆனா எங்கப்பாவைத் திருத்த முடியாது. எங்கம்மாவே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு" என்றான் டில்லி.

இருவரும் வெளியே நடந்தார்கள். இருபதடி தூரம் தள்ளியிருந்த மாதாகோயிலின் பின்புறத்திண்ணையில் போய் அமர்ந்ததும் பாலு நேரே விஷயத்துக்கு வந்தான்.

"டில்லி. ஒரு முக்கியமான விஷயம். இன்னிக்கு ஸ்கவுட்ஸ் எல்லாரும் பன்றித்தீவுக்குப் போயிருந்தோம், மகாலிங்க வாத்தியார் அழைச்சிக்கிட்டுப் போனார்" என்று ஆரம்பித்து, மதிய உணவு நேரத்தில் தான் மட்டும் தனியாக காட்டுக்குள் போனதையும் அங்கிருந்த பாழடைந்த கட்டடத்தில் கேட்ட இரு குரல்கள் பற்றியும் எதிர்வரும் அமாவாசை தினத்தன்று அவர்கள் புதையல் தோண்டி எடுத்து, ஸ்டீம் போட் ஏறித் தப்பிக்க இருப்பது பற்றியும் விரிவாகச் சொன்னான்.

"என்னாடா சொல்லுறே?" என்றான் டில்லி.

"ஆமடா. அத்தனையும் உண்மை. நானே என் காதால கேட்டேன். வாத்தியார்கிட்டே சொல்லிடலாம்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா சின்னபசங்க எதையாவது பாத்துட்டு உளறுவாங்கன்னு நினைச்சிடுவாரோன்னு பயம். ஆனா எனக்கு சந்தேகமே இல்லை. அவங்க அப்படித்தான் பேசிக்கிட்டிருந்தாங்க. நான் கேட்டது சத்தியம்!" என்றான் பாலு.

ஒருகணம் மிகத்தீவிரமாக யோசித்த டில்லிபாபு, "நா ஒண்ணு சொன்னா நம்புவியா?'' என்றான்.

"சொல்லு."

" நீ சொன்னேபாரு, ரெண்டுபேரு, அம்மாவாசை அன்னிக்கு வரப்போறாங்க, புதையல் எடுக்கப்போறாங்க அப்பிடின்னு... அதே ரெண்டு ஆளூக, அதே அமாவாசை பேச்சு பேசி நா கேட்டிருக்கேன்!" என்று கண்ணடித்தான்.

"என்னது?" அதிர்ந்துபோனான் பாலு.

"ஆமாடா. அதே பன்றித்தீவுலதான்... ஒருநாள் மீன்பிடிக்கப் போனபோது அங்க இறங்கி சாப்பிட்டுக்கிட்டிருந்தோம். உன்னியமாதிரியே நானும் காட்டுக்குள்ளாற சும்மா நடந்து போனேன். அந்தக் கட்டடம்... முன்னாடி எப்பவோ நேவி ஆபீசா இருந்திருக்கு. ஆளுக வந்து போயிக்கிட்டு இருந்திருக்காங்க. அப்புறம் அங்கிருந்து ஆபீசை இடம் மாத்திட்டாங்க. இப்ப நரித்தீவுல இருக்குது ஆபீசு. இங்க கட்டடத்தை சும்மா பூட்டுபோட்டு வெச்சிருக்காங்க. யாரும் வரதில்ல. ஏன்னா, மீனவருங்க இந்தப் பக்கம் போவுறது கம்மி. மீன் வரத்து எந்தப் பக்கம் அதிகமோ, அங்கத்தான் போவாங்க. யாருமே போவாத ஏரியாங்கறதால, இங்க செயல்பாடுங்க நின்னுபோச்சி. தப்பித்தவறி அன்னிக்கு ஒருநாள் நானும் எங்க சேக்காளிகளும் இந்தப் பக்கம் போகவேண்டியதாயிருச்சி.  அப்பத்தான் கேட்டேன்.... இதே மேட்டருதான். இன்னாடா இது என்னென்னவோ பேசறானுங்களேன்னு நினைச்சேன். எங்க அப்பாராண்ட கூட சொன்னேன். அதெல்லாம் நீ பேசாத; நமக்கு அதெல்லாம் வாணாம், வேலயப்பாருன்னு சொல்லிட்டாரு..."

"அடப்பாவி! இப்படியாடா விடறது? தீவுல அப்ப ஏதோ மர்மம் கண்டிப்பா இருக்குது!"

"ஆமாடா. அதுல சந்தேகமே இல்ல. நாலஞ்சு பேரு அங்க அடிக்கடி போறாங்க. எங்காளுங்க சிலர் மீன் பிடிக்க போவசொல்ல பாத்திருக்காங்க. பேண்ட் போட்ட ஆளுக எதுக்காக அந்தத் தீவுக்குப் போவணும், என்னா பேசறாங்க, என்ன திட்டம் எதும் புரியல. ஆனா ஒண்ணு. புதையலெல்லாம் எதும் அங்க இருக்கும்னு நான் நினைக்கல. இவனுங்க புதையல்னு ரகசிய வார்த்தைதான் சொல்லுறாங்க. வேற எதோதான் மேட்டரு" என்றான் டில்லிபாபு.

ரகசிய வார்த்தை! எனில், புதையல் என்று அவர்கள் குறிப்பிடுவது எதை? பாலுவுக்குப் பதற்றம் அதிகரித்தது.

"எதுவா இருந்தா என்னடா? சட்டவிரோதமாத்தான் அவங்க செயல்படறாங்க. விஷயம் நேவி ஆபீசர்களுக்குத் தெரியும் முன்னாடி நமக்குத் தெரிஞ்சது ஏன்னு கடவுளுக்குத்தான் தெரியும். நாமதான் இதுக்கு ஏதாவது செய்யணும். கண்டும் காணாமலும் விடறது தப்பு. ஒரு தப்பு நடக்குதுன்னு தெரிஞ்சப்புறமும் சும்மா இருந்தா அதுதான் பெரிய தப்பு!" என்றான் பாலு.

"நானும் இப்பிடித்தாண்டா நினைச்சேன். ஆனா சின்னப்பையன் நான். நான் என்ன பண்ணமுடியும்? எங்கப்பாவே சும்மா இருடான்னு சொல்லிட்டாரு..."

" அப்பவே நீ எங்கிட்ட சொல்லியிருக்கலாம்..." என்ற பாலு, சே, அதெப்படி சொல்லுவான்? தானே ஒரு தேவை ஏற்பட்டபோதுதானே இவனிடம் சொல்ல வந்தேன் என்றும் நினைத்துப்பார்த்தான்.

"சரி, இப்ப உன் திட்டம் என்ன?"

பாலு ரகசியக் குரலில் சொன்னான். "நான் தீர்மானமே பண்ணிட்டேன் டில்லி. இதை சும்மா விடக்கூடாது. எப்படியாவது அவங்க யாரு, அவங்க திட்டம் என்னன்னு நாம கண்டுபிடிச்சே ஆகணும். சின்னப்பசங்களால முடியாதுன்னு எதுவும் கிடையாது. நல்ல காரியங்களை செய்ய சின்னப்பசங்க, பெரிய ஆளுங்கன்னு பிரிச்சிப்பாக்கறது அவசியம் இல்லை. நம்மால எல்லாமே முடியும். தைரியம் தான் வேணும்" என்று சொல்லி நிறுத்தினான்.

உத்வேகம் கொண்ட டில்லிபாபு "சொல்லுடா. என்ன செய்யலாம். நானும் உனக்குத் துணைக்கு இருக்கேன். என்ன செய்யலாம், எப்படி செய்யலாம்?" என்றான் ஆர்வமுடன்.

உற்சாகமடைந்த பாலு தன் திட்டத்தை விவரிக்கத் தொடங்கினான்.

"எனக்கு ஒரே ஒரு விஷயம் சொல்லு. உனக்கு படகு ஓட்டத்தெரியுமா?"

"ம்ஹும். போனதில்லை. ஆனா கட்டுமரம் தள்ளத்தெரியும்." என்றான் டில்லி.

"ஒரு அவசரம்னா உன்னால என்னையும் இன்னொருத்தனையும் வெச்சி கட்டுமரத்துல பன்றித்தீவுக்கு கூட்டிக்கிட்டுப் போகமுடியுமா?"

"முடியுமே! அந்த ரூட்டுல ஆழம் கம்மிடா. பயம் வேணாம்" என்றான் டில்லிபாபு.

"எனக்கு நீச்சல் தெரியாது. பரவாயில்லியா?"

"பரவாயில்ல. நான் பாத்துக்குவேன்"

"அப்ப தயாரா இரு. வர அமாவாசை அன்னிக்கு சாயங்காலம் நீ, நான், இன்னொருத்தன் மூணுபேரும் பன்றித்தீவுக்குப் போறோம்!" என்றான் பாலு.

"யாருடா அந்த இன்னொருத்தன்?" என்று ஆர்வத்தை அடக்கமாட்டாமல் கேட்டான் டில்லிபாபு.

"பொறுமை! பொறுமை! அமாவாசை அன்னிக்குத் தெரியும்!" என்று சஸ்பென்ஸ் வைத்துவிட்டு, "நான் வரேண்டா" என்று கிளம்பி ஓடிப்போனான் பாலு.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |