Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
புதையல் தீவு - பாகம் : 7
- பா.ராகவன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 (புதிது)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

பாலு, குடுமிநாதன், டில்லிபாபு குழுவினர் ஏறிய கட்டுமரம் கடலுக்குள் இறங்கி, சீரான வேகத்தில் நகரத்தொடங்கியபோது மணி சரியாக இரவு 9.30.

என்னதான் சாகசம் செய்யும் பரவசம் இருந்தாலும் பாலுவுக்கு உள்ளுக்குள் ஓர் உதைப்பு இருக்கவே செய்தது. மேலும் தான் ஒரு குண்டு பையன் என்கிற எண்ணம் அவனுக்கு அடிக்கடி மனத்துக்குள் எழுந்து எழுந்து அடங்கியது. ஒரு அவசர ஆத்திரத்துக்குப் பத்தடி ஓடக்கூட முடியாதே தன்னால் என்று நினைத்து மிகவும் வருந்தினான்.

"இப்ப வருத்தப்பட்டு என்னடா பிரயோஜனம்? மசால்வடை, போண்டா, ஸ்வீட்டையெல்லாம் லபக் லபக்குனு அமுக்கும்போது யோசிச்சிருக்கணும். நாலு இட்லி சாப்டு பிரேக்பாஸ்டை முடிக்கிறவங்களைப் பார்த்திருக்கோம். இவன் இட்லின்னாலும் இருபது கேக்கறாண்டா" என்று டில்லிபாபுவிடம் சொல்லிச் சிரித்தான் குடுமிநாதன்.

பாலுவுக்கு வெட்கம் கலந்த புன்னகை வந்தது. "போங்கடா. நான் என்ன செய்யட்டும். பசி அப்படி இருக்கு" என்றான் தலை குனிந்தபடி.

"இருக்கட்டும்டா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு குணம். ஒவ்வொருத்தர் ஒவ்வொரு விதம். பாலுவுக்கு உடம்பு மட்டுமா பெரிசு? மனசும்தான் பெரிசு! நீயே சொல்லு. அவனுக்குத்தானே, இந்த பன்றித்தீவு மர்மத்தைக் கண்டுபிடிச்சி சமூக விரோதிகளை அடையாளம் காட்டி பிடிச்சிக்குடுக்கணும்னு தோணியிருக்கு? நானும்தான் பன்றித்தீவுக்கு அடிக்கடி போறவன். அங்க சிலபேர் புதையல் பத்திப் பேசிக்கறதையும் கேட்டிருக்கேன். ஆனா இன்னிய வரைக்கும் அதை ஆராயணும்னெல்லாம் எனக்குத் தோணலையே. பாலுவுக்குத்தானே அந்த யோசனை வந்தது? குண்டா இருந்தா என்ன? குண்டு தைரியமும் ஜாஸ்தியாத்தானே இருக்கு?" என்றான் டில்லிபாபு.

"அது சரிதாண்டா. நம்மால அவங்களைப் பிடிக்க முடியும்னு நினைக்கறே?" என்று சந்தேகமுடன் கேட்டான் குடுமி.

"தெரியலை. ஆனா நம்ம நோக்கம் நல்ல நோக்கம். திட்டமும் தெளிவாத்தான் இருக்கு. நல்லதுதான் நினைச்சிக் கிளம்பியிருக்கோம். கடவுள் நம்ம பக்கம் கண்டிப்பா இருப்பார்டா" என்றான் பாலு.

"விஷயம் தெரிஞ்சவுடனேயே கடற்படை ஆபீசர்கிட்ட சொல்லியிருக்கலாம்தான். ஆனா சின்னப்பசங்க சொல்றதை எவ்ளோதூரத்துக்கு அவங்க நம்புவாங்கன்னும் சந்தேகம் இருந்ததாலதான் முதல்ல நாமளே போய்ப் பார்த்து கன்பர்ம் பண்ணிக்கலாம்னு நினைச்சேன்" என்றும் சொன்னான் கொஞ்சம் இடைவெளி விட்டு.

" நாளைக்கு வீட்டுக்குப் போனா எங்கம்மா என்ன கேப்பாங்கன்னு பயமா இருக்குடா" என்றான் குடுமி, திடீரென்று.

"ஏண்டா?"

"ஒருவேளை நாம க்ரூப் ஸ்டடி பண்ணப் போகலை. இப்படி கடலுக்குத்தான் போயிருந்தோம்னு தெரிஞ்சிடிச்சின்னா?"

"கவலையே படாத. நாம வெற்றி அடைஞ்சாத்தான் நாம பன்றித்தீவுக்குப் போற விஷயம் தெரியும். இல்லாட்டி, க்ரூப் ஸ்டடி பண்ணமாதிரிதான்" என்று கண்ணடித்தான் பாலு.

திடீரென்று சந்தேகம் வந்தவனாக டில்லிபாபுவிடம், "டேய்! கரெக்டா காலைல ஆறு மணிக்கு வீட்டுல இருக்கணும். அதுக்கேத்தாப்பல கிளம்பிடணும் அங்கேருந்து. ஞாபகம் இருக்கில்ல?" என்றான் பாலு.

"அதெல்லாம் வந்துடலாம்டா. அவங்க ப்ளான் பண்ணியிருக்கற டயம் என்ன? சரியா நடுராத்திரி வருவாங்கன்னுதானே சொன்னே? அப்பலேருந்து கணக்கு வெச்சிக்கிட்டாக்கூட ரெண்டு மணிக்குள்ள நமக்கு விஷயம் தெரிஞ்சிடும். முழுக்க தெரிஞ்சிக்கிட்டு மூணு மணிக்குக் கிளம்பினாக்கூட நாலு மணிக்குள்ள கரைக்கு வந்துடலாம். டோண்ட் ஒரி" என்று தைரியம் கொடுத்தான் டில்லி பாபு.

கடலில் அலை மிகவும் குறைவாகத்தான் இருந்தது. காற்றும் மிக மென்மையாகவே வீசிக்கொண்டிருந்தது. பொதுவாக அமாவாசையன்று கடலில் அலை மிகவும் ஓங்கித் தணியும் என்று பாலு படித்திருக்கிறான். அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் அலைகளின் உக்கிரம் மிகவும் அதிகமாகத்தான் இருக்கும் என்று டில்லிபாபுவும் அதை ஆமோதித்திருந்தான். கொஞ்சம் உதறலுடன் தான் அவன் கட்டுமரத்தில் ஏறினான். ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக அன்றைக்குக் கடலின் இரைச்சலேகூட மிகவும் குறைந்திருப்பதாக டில்லிபாபு சொன்னான்.

"அமாவாசை அன்னிக்குக் கட்டுமரத்துல போறதை எங்க ஆட்களே பலர் விரும்பமாட்டாங்க. அலை ரொம்ப உசரமா வரும். அதுமட்டுமில்ல. கடல் கொந்தளிப்புங்கறது கொஞ்சம் பேஜாரான விஷயம். கட்டுமரம் தூக்கித் தூக்கிப் போடும். பேலன்ஸ் சரியா கிடைக்காது. படகுன்னாக்கூடப் பரவால்ல. கட்டுமரம் தள்றது ரொம்பக் கஷ்டம்" என்று அவன் சொல்லியிருந்தான்.

ஆனால் பன்றித்தீவில் பாலு சந்தித்த மர்ம மனிதர்கள் அந்த பாழாய்ப்போன அமாவாசை புதன்கிழமையைத்தானே சொல்லியிருந்தார்கள்? வேறு வழி?

"ஏறி உக்காந்ததும் கெட்டியா பிடிச்சிக்கடா. கொஞ்சம் முன்னப்பின்ன குலுங்கினா பயந்துடாத. ஒரு கட்டுமரத்தை ஆட்டி அசைக்கறது வேணா சுலபமா இருக்கலாம். ஆனா குப்புறக் கவுக்கறது ரொம்பக் கஷ்டம். பெரிய புயலெல்லாம் வந்தாத்தான் பிரச்னை. சாதாரணமான வேகக்காத்தை எனக்கு சமாளிக்கத் தெரியும்" என்றும் அவன் தைரியம் கொடுத்திருந்தான்.

ஒருவேளை முழுக்கவே நீரில் மூழ்கி மூழ்கி எழ வேண்டியிருந்தாலும் கூட பயப்படவேண்டாம் என்று சொல்லியிருந்தான் டில்லிபாபு.

"முதல்ல நமக்கு நீச்சல் தெரியாதுங்கற எண்ணத்தை உதறித்தள்ளு பாலு. ஒரு நாள்ள உன்னால அதைக் கத்துக்கவும் முடியாது. ஆனா மன தைரியம் இருந்தா எந்த இக்கட்டான சூழலையும் சமாளிக்க முடியும்"

ஆனால் அப்படியெல்லாம் பிரச்னை ஏதும் வராததில் பாலுவுக்கு மிகவும் ஆசுவாசமாக இருந்தது. கடல் அமைதியாகவே இருந்தது. இரவு பத்தரைக்கு அப்புறம் தான் கொந்தளிப்பு ஆரம்பிக்கும் என்றும் டில்லி சொல்லியிருந்தான். பத்தரைக்குள் சுலபமாக பன்றித்தீவுக்குப் போய்விடவும் முடியும் என்பதால் பிரச்னையே இல்லை!

"இங்க டால்பினெல்லாம் உண்டாடா?" என்றான் பாலு.

"நீவேற. சாதாரண மீன்களே கம்மி. பன்றித்தீவை அடுத்து இன்னும் நாலு தீவு இருக்கு. முயல்தீவு, முருங்கைத் தீவு, கோயில்தீவு, கோட்டைத்தீவுன்னு பேரு. அந்த நாலு தீவையும் தாண்டினப்புறம்தான் நாப்பது மீனாவது கண்ணுல படும். நம்ம தேசத்தோட கடல் எல்லைன்னு ஒண்ணு இருக்கு. அந்தப் பக்கம் மீன் வரத்து அதிகம். இங்க ஒண்ணுமே கிடையாது. கரை ஒதுங்கினா, சில சிப்பிகள்தான் கிடைக்கும். எங்க பிரச்னையே அதுதான்" என்று வருத்தமுடன் சொன்னான் டில்லி.

"ஏன்?" என்றான் குடுமிநாதன். அவனது குடுமி, கடல் காற்றில் ட்ரியோவென்று எழும்பி எழும்பி ஆடி அடங்கிக்கொண்டிருந்தது. சே, ஒரு ரப்பர்பேண்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் என்று அவனுக்குத் தோன்றியது. அடிக்கடி இழுத்து இழுத்து முடிந்துகொள்ளவேண்டியிருந்தது.

"ஏன்னா, இப்பல்லாம் கடலை யாரும் மதிக்கறது கிடையாது. எல்லா கம்பெனிகளோட கழிவு நீரையும் ஆறு மாதிரி கடலை நோக்கித் தான் திறந்துவிடறாங்க. எல்லாம் வெறும் கெமிக்கல்ஸ். மீன்கள் பாவம் என்ன செய்யும்? வருஷக்கணக்கா கெமிக்கல்ஸ் வந்து தண்ணில கலந்துகிட்டே இருந்தா அதுங்க எப்படி உயிர்வாழ முடியும்? அதான், இடத்தை மாத்திக்கிட்டு வேற பக்கம் போயிடுதுங்க" என்றான் டில்லி.

"சே" என்றான் பாலு. "கடல்நீர் மாசுபடுதல்னு" அப்பப்ப பேப்பர்ல பாப்பேண்டா. இதான் விஷயமா? ரொம்பத் தப்பாச்சே. நம்ம கவர்ன்மெண்ட் ஏதாவது செய்யக் கூடாதா?" என்றான் குடுமிநாதன்.

"போடா.... கவர்ன்மெண்ட் என்ன செய்யணும்? நம்ம கம்பெனின்னா நமக்குத்தானே அக்கறை இருக்கணும். எங்கப்பா அடிக்கடி சொல்லுவார். கம்பெனிக்கழிவுகளைக் கடலுக்கு அனுப்பறதுக்கு முன்னாடி ஓரளவாவது சுத்திகரிச்சிட்டு அனுப்பணுமாம். அவங்க கம்பெனில அப்படித்தான் செய்யறாங்களாம்" என்றான் பாலு.

பேசிக்கொண்டிருந்தாலும் கட்டுமரம் செலுத்துவதில் கண்ணாக இருந்த டில்லிபாபு, இப்போது கட்டுமரம் போய்க்கொண்டிருந்த திசையை மெல்லத் திருப்பத் தொடங்கினான்.

"அவ்ளோதாண்டா. இந்த இடத்துல தெற்கு நோக்கித் திரும்பினா, கண்ணை மூடிக்கிட்டு ஓட்டிடலாம். சரியா ஒன்றரை கிலோமீட்டர் இங்கேருந்து. எங்க மீனவர்கள் கணக்குல சொல்லணும்னா முக்கால் மைல்" என்று சொன்னான்.

"ஒரு காம்பஸ் கூட இல்லாம எப்படிடா கரெக்டா திசை தெரிஞ்சி ஓட்டறே?" என்றான் பாலு.

"பழக்கம்தான். ஒரு விஷயம் தெரியுமா? தரையில புதுசா ஒரு ஊருக்குப் போய் தெரு எதுன்னு தேடறதைவிட, கடல்ல திசை பார்த்து, நாம போகவேண்டிய இடத்தைக் கண்டுபிடிக்கறது சுலபம். தண்ணிலயே அடையாளம் உண்டு. தண்ணியோட நிறம், அலை எழும்பற வேகம், நீர் ஆழம் இதெல்லாமே அடையாளங்கள்தான். கொஞ்சம் அனுபவம் உள்ள மீனவர்கள் காத்து வீசற வேகத்தை வெச்சே எங்க இருக்கோம் இப்பன்னு சொல்லுவாங்க" என்று சொன்னான்.

ஓ" என்றான் பாலு.

"இந்தப் பயணம் வெற்றிகரமா முடிஞ்சா கண்டிப்பா நான் நீச்சல் கத்துப்பேண்டா" என்றான் பாலு.

"கண்டிப்பா உடம்பைக் குறைப்பேன்னு சொல்லு முதல்ல!" என்றான் குடுமி.

மூவரும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.

பன்றித்தீவை அவர்கள் அடையும்வரை எந்தப் பிரச்னையும் வரவில்லை. டில்லிபாபு மிகத் திறமையாகக் கட்டுமரத்தைச் செலுத்தி, சரியாகப் பத்து ஐந்துக்கு பன்றித்தீவின் கரையை நெருங்கிவிட்டான். "வந்துடுச்சிடா" என்று ரகசியமாக அறிவிக்கவும் செய்தான்.

அவர்கள் உடனே பரபரப்பானார்கள்.

"தோபாரு. இனிமே உரக்கப் பேசக்கூடாது. ராத்திரிவேளைல சுவருக்குக் கூடக் காது உண்டுன்னு எங்கம்மா சொல்லுவாங்க. இந்தத் தீவுல ஒண்ணு ரெண்டு ஆள் நடமாட்டம் மட்டும்தான் உண்டுன்னு நாம நம்பறோம். அவங்க கண்ணுல நாம படக்கூடாதுங்கறதுதான் நம்ம முதல் லட்சியம். கவனமா இறங்கி நைஸா காட்டுக்குள்ள போயிடணும்" என்றான் பாலு.

கட்டுமரம் கரையைத் தொடுவதற்குப் பதினைந்து அடி தூரம் இருக்கும்போதே டில்லிபாபு தொப்பென்று அதிலிருந்து நீரில் குதித்தான். ஆழம் அதிகமில்லாத கடல் அது. பாலுவும் குடுமியும் கட்டுமரத்திலேயே இருக்க, "குதிங்கடா, குதிங்கடா" என்று குரல் கொடுத்தான்.

"ஏண்டா?"

"டேய்! கரை வரைக்கும் உன்னை இது இழுத்துட்டுப் போகாது. மண்ணுல மோதிடும். இங்க குதிச்சி, நாமதான் இதை இழுத்துட்டுப் போகணும்" என்றான் டில்லி.

வேறு வழியில்லாமல் அவர்களும் தொப் தொப்பென்று நீரில் குதித்தார்கள். டில்லி கவனமாக பாலு குதிக்கும்போதே அவன் சட்டை காலரைப் பிடித்துக்கொண்டான்.

"குண்டா, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. இங்க நீ மூழ்க முடியாது. ஆனாலும் ஆழம்தான். கவனமா கட்டுமரத்தைத் தள்ளிக்கிட்டே நடந்து வா" என்றான் டில்லி.

மூச்சு வாங்க அவர்கள் கட்டுமரத்தைத் தள்ளிக்கொண்டே நடந்து கரைக்கு வந்து அந்த மரத்தை ஒரு ஓரமாகக் கவிழ்த்துப் போட்டார்கள். பாலுவுக்கு மிகவும் மூச்சு வாங்கியது.

"என்னடா இது! ரொம்ப பேஜார் வேலையா இருக்கே" என்றான் அலுத்துக்கொண்டு.

"ம்ம்? சரிதான். பத்தடி நடக்க முடியலியா உன்னால? பத்துநாள் பட்டினி போடு, சரியாயிடும்" என்றபடியே மற்ற இருவரும் சட்டைகளைக் கழற்றிப் பிழிய ஆரம்பித்தார்கள்.

"இனிமேத்தாண்டா நாம ஜாக்கிரதையா இருக்கணும். யாரும் உரக்கப் பேசாதிங்க. சட்டை கொஞ்சம் காய்ஞ்சதும் கிளம்பிடலாம். அதுவரைக்கும் மண்ணுலயே படுத்திருங்க" என்றான் டில்லி.

மூவரும் அமைதியாக மண்ணில் படுத்தார்கள். வானில் சிறு வெளிச்சம் கூட இல்லை. ஒரு நட்சத்திரம் கூடத் தென்படவில்லை. டில்லி எப்படித்தான் அத்தனை துல்லியமாக கட்டுமரத்தைச் செலுத்தினானோ என்று பாலுவுக்கு வியப்பாயிருந்தது. தன் வயதுப் பையந்தானே அவனும்? எத்தனை புத்திசாலித்தனம்! தன் தொழிலில் எத்தனை தன்னம்பிக்கை! எதைச் செய்தாலும் அந்த நேர்த்தியுடன் செய்யும்போதுதான் சிறக்கிறது.

மனத்துக்குள் அவன் நினைத்துக்கொண்டான். ஒரு லட்சியத்துடன் அவன் அந்தத் தீவுக்கு வந்திருக்கிறான். யார் அந்த சமூக விரோதிகள்? அவர்கள் என்ன திட்டம் போட்டிருக்கிறார்கள்? என்ன புதையலை எடுக்கப் போகிறார்கள்? எத்தனை பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்? இதையெல்லாம் கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதுதான் முதல் வேலை. அவர்களை எப்படி கடற்படை அதிகாரிகளிடம் பிடித்துக் கொடுப்பது என்பது அடுத்த வேலை.

தெளிவான நோக்கம். பொதுநல நோக்கமும் கூட. ஆகவே கடவுள் கண்டிப்பாகத் தன் பக்கம்தான் இருப்பார் என்று அவன் தீர்மானமாக நம்பினான்.

மூவரும் மிக அமைதியாக, ஒரு சொல் கூடப் பேசாமல் அந்தப் பரந்த மணல் வெளியில் சட்டையைக் கழற்றிவிட்டுப் படுத்திருந்தார்கள். கடற்காற்றின் மிக மெல்லிய ஓசையும் அலைகளின் ஓசையும் தவிர வேறு ஒரு சத்தம் இல்லை.

பத்து நிமிடங்கள் கழிந்திருக்கும். "கிளம்பலாமாடா?" என்று பாலு கேட்டான். சட்டை காய்ந்துவிட்டதா என்று தலைமாட்டில் தொட்டுப் பார்க்கக் கழுத்தைத் திருப்பிப் பின்னால் பார்த்தான்; அதிர்ந்தான்!

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |