இது வணிக வரிக்காக ஏற்பட்ட சட்டம். முதல் தேதியிலிருந்து அமுலுக்கு வருகிறது. அதாவது வியாபாரம் செய்பவர்கள் அனைவரும் விற்பனை வரிச் சட்டத்தின் கீழ்வருகின்றார்கள் அல்லவா? அவர்கள் அனைவரும் இந்த "வாட்" சட்டத்தின் கீழ் வருவார்கள். ஒரு வியாபாரி விற்பனை செய்யும் போது விற்பனைவரியையும் சேர்த்து வாங்குபவர்களிடம் வசூல் செய்து அரசாங்கத்திடம் செலுத்துகின்றார். இது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் மிகப் பெரிய வருமானம். சரி! இதை மத்திய அரசிடம் செலுத்துகின்றார்களா? அல்லது மாநில அரசிடம் செலுத்துகின்றார்களா ?
இது மாநில அரசின் வருமானம்தான். நமது சட்டம் எந்த வருவாய் மத்திய அரசுக்குப் போக வேண்டுமென்றும், எந்த வருவாய் மாநில அரசுக்குப் போக வேண்டுமென்றும் தெளிவாகக் கூறியிருக்கிறது. அரசியல் சட்டப்படி விற்பனை வரியென்பது மாநில அரசுக்குப் போய்ச் சேர வேண்டிய நிதி ஆதாரம்தான். இதில் மத்திய அரசுக்கு எந்தப் பங்கும் கிடையாது. விற்பனை வரியில் இரண்டு பிரிவுகள் உண்டு. 1. தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம். 2. மத்திய விற்பனை வரிச் சட்டம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.
தமிழ்நாடு விற்பனை வரிச் சட்டம் : இது 1937-38-ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கிறது.ஒருவர் வியாபாரம் செய்ய ஆரம்பிக்கும் முன் அரசாங்கத்தில் விற்பனை வரிச் சட்டத்தின் அவர் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்து கொண்டவர் Registered Dealer என்றழைக்கப் படுவார். பதிவு செய்து கொண்டதற்கு அவருக்கு ஒரு எண் கொடுக்கப் படும். அதை வைத்துக் கொண்டுதான் அவர் வியாபாரம் செய்ய வேண்டும்..சிறு வியாபாரிகளுக்கு இவ்வாறு பதிவு செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப் படுகிறது. பதிவு செய்து கொண்டவர் தமிழ்நாட்டில் வியாபாரம் தொடங்கலாம். அவர் செய்யும் விற்பனைகள் தமிழ் நாட்டிற்குள்ளேயே இருக்குமானால் அது உள்ளூர் விற்பனை என்றழைக்கப் படும். அதாவது Sale within Tamilnadu என்றழைப்பார்கள். விற்பனை செய்யும் பொருளுக்கு எவ்வளவு விற்பனை வரி விதிக்க வேண்டும் என்று பட்டியல் கொடுக்கப் பட்டு இருக்கும். அதன்படி வரியை பொருள் வாங்குவோரிடமிருந்து வசூலித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும். ஒருபொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டு மென்று மாநில அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் மத்திய அரசு தலையிடமுடியாது. இது மாநில அரசின் நிதி அல்லவா! ஆகவே இதில் மத்திய அரசு தலையிட முடியாது. இந்த விற்பனை வரியானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். உதாரணமாக நாம் உபயோகிக்கும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு தமிழ் நாட்டில் 10 சதவீதம் விற்பனைவரியானால் அண்டை மாநிலமான ஆந்திராவில் இதற்குக் கூடவோ அல்லது குறையவோ இருக்கலாம். இதைப்போல்தான் மற்றமாநிலங்களும் தன் வசதிக்கேற்ப விற்பனை வரியை விதிக்க முடியும். ஒரு பொருளுக்கு ஒரே மாதிரியான விற்பனை வரி இந்தியா முழுவதும் கிடையாது.
தமிழ்நாட்டில் ஒருவர் தன் தொழிற்சாலையில் ஒரு பொருளை உற்பத்தி செய்கிறார். அதற்கு 10% விற்பனை வரி விதித்து மொத்த கொள்முதலாளருக்கு (Whole sale dealer) விற்பனை செய்கிறார். அவர் வாங்கி சில்லரை விற்பனையாளருக்கு ( Retail seller) விற்பனை செய்கிறார். இந்த விற்பனைக்கு 10% விற்பனை வரி விதிக்க வேண்டுமா வென்றால் இல்லையெண்ற்றுதான் கூற வேண்டும். இது Second Sale என்றழைக்கப் படுகிறது. அவர் இதற்கு 1% வசூலித்தால் போதுமானது. இதற்கு re-sale tax என்று பெயர். சில்லரை விற்பனையாளர் பொருள் வாங்கும் பொது மக்களுக்கு ( Consumer) விற்பனை செய்கிறார். அப்போதும் 1% வரி வசூலித்தால் போதுமானது. இவ்வாறு ஒவ்வொரு விற்பனையின் போதும் வரி வசூல் செய்வதை “Multi-point Tax” என்றழைப்பார்கள். இவ்வாறு உள்ள தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் சில பொருள்களுக்கு விற்பனை வரி கிடையாது. சில பொருள்களுக்கு 1% வரி இருக்கும்; இவ்வாறு பல விதமான வரி விகிதங்கள் இருக்கும். அதன்படி வரிவிதித்து அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும்.
இதைத் தவிர Surcharge, Turnover-tax என்ற வரி விதிப்பும் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்தில் உண்டு. இதைத் ஆண்டுதோறும் இந்த விற்பனை வரிச் சட்டத்தின் கீழ் வணிகர்கள் தங்கள் கணக்குகளை அரசாங்கத்திடம் தணிக்கை செய்து தணிக்கை உத்தரவு பெறவேண்டும்.
இந்த நிலைதான் 31-12-2006 முடிய இருந்து வந்தது. இந்த ஆண்டுமுதல் தமிழ் நாடு விற்பனை வரிச் சட்டத்திற்கு பதில் மதிப்புக் கூட்டு வரி என்ற V.A.T. நடைமுறைக்கு வந்திருக்கிறது. அதை விளக்குமுன்னர் மத்திய விற்பனை வரிச் சட்டத்தையும் பற்றி ஓரளவிற்குத் தெரிந்து கொள்வோம். இந்த விற்பனை வரிச் சட்டம் இன்னும் அமுலில் இருக்கிறது. மாறவில்லை.
(தொடரும்..)
|