டால்பின்கள்
"நெத்தியில் என்னமோ பட்டிருக்கு." என்றான் எலிவேட்டரில் என்னைப் பார்த்த அமெரிக்க மேலாளன்.
இது அக்கறை இல்லை. ஒரு வித இளக்காரம். அப்பாவி போன்ற தொனியில் கேள்வி கேட்டு, நறுக்கென்று குத்தும் இது எந்த வகை இலக்கண அணி என்று கொத்தனார் நோட்ஸில்தான் தேடிப் பார்க்க வேண்டும்.
"ஹோலி ஆஷ்." என்றேன். "இன்னிக்கு தீபாவளி. இந்தியப் பண்டிகை தினம். வீட்டில் சாமி கும்பிட்டு வரேன்."
"ஓ… ஐயாம் சாரி." – சிரித்துக் கொண்டே ஒரு போலியான சம்பிரதாய வருத்தம்.
அவனுக்கு உறைப்பது போல் இன்னும் கொஞ்சம் விளக்க வேண்டும் என்று தோன்றியது. "நீயும், நானும், இந்த உலகத்தின் ஒவ்வொரு ஜீவராசியும் ஒரு நாள் செத்து இது போல சாம்பலாகப் போவதுதான் சாஸ்வதம்… அதனால் அகந்தையும், திமிரும் கொள்ளத் தேவையில்லை… என்பதை ஞாபகப் படுத்திக்கொள்ளத்தான் நெற்றியில் அணிகிறோம்."
லேசாய் முகம் சுருங்கிப் போனாலும், சமாளித்துக் கொண்டு – அவனுடைய மத நூலில் இதற்கு இணையாக எங்கோ எதுவோ சொல்லப்பட்டிருக்கிறது என்று கோடி காட்ட ஆரம்பித்தபோது பனிரெண்டாவது மாடியில் லிப்ட் நின்றது.
"ஓக்கே. டாக் டு யூ லேட்டர்."
அவன் ஒரு திசையிலும், நான் ஒரு திசையிலுமாக பிரிந்து சென்றோம். காரிடாரில் நடக்கிறபோது தடுப்புக் கண்ணாடிக்கு வெளியே அந்த அமெரிக்க பெரு நகரம் செவ்வகக் குன்றுகளாய்க் கட்டிடங்களோடும், வகிடெடுத்த சாலைகளோடும், அவற்றில் புள்ளிகளாய் நகரும் மனிதர்களும், கார்களுமாய் மிக ரம்மியமாய்… இல்லை… ஒரு காலத்தில் ரம்மியமாய் தெரிந்தது. இன்றைக்கு இல்லை.
மனம் பூராவும் இன்றைக்கு ஊரில் உள்ளது. காலையில் போன் பண்ணியபோது அங்கே எத்தனை உற்சாகம். பட்டாசு சத்தம். அண்ணனுடைய வாண்டுக் குழந்தைகளின் குதூகல இரைச்சல். ஜிலேபி சாப்பிடறிங்களா சித்தப்பா? ஆனா போன் வழியா குடுக்க முடியாதே… ஹெஹ்ஹெஹ்ஹே! டிவியில் இப்பதான் சாலமன் பாப்பைய்யா சிறப்பு நிகழ்ச்சி முடிஞ்சது என்றார் அப்பா. அஞ்சு மணிக்கு திரைக்கு வந்து சில மாதங்களே ஆன டாக்டர் விஜய் படம் என்றாள் உஷா.
டாக்கில் லேப்டாப்பை சொருகி அதை உயிரூட்டியபோது – பக்கத்து க்யூபிலிருந்து எட்டிப் பார்த்த ரமணி, "குட்மார்னிங். ஹேப்பி தீபாவளி!" என்றான்.
"போடா இவனே!" என்றேன்.
"என்னாச்சு?"
"நான் கடுப்பில் இருக்கேன். போதாக் குறைக்கு ரிக்'ஷாக்காரன் வேற எலிவேட்டர்ல என்னை உசுப்பேத்திட்டான்."
"என்ன பிரச்னை?"
"நாள் கிழமை பண்டிகை ஜனங்க எதுவுமில்லாம என்னடா வாழ்க்கை."
"ஓ அதான் பிரச்னையா… நல்லா சாமி கும்பிட்டு நெத்தி நிறைய திருநீறோட ஜெகஜோதியாதானே வந்திருக்கே!"
"ஆமா. ஆனா இதுதான் தீபாவளியா? ரொம்ப போலியா இருக்கு. அதிகாலை நாலு மணிக்கெல்லாம் எழுந்துப்பேன். அவசரம் அவசரமா குளிச்சிட்டு தெருவுலயே பர்ஸ்ட் நாந்தான் வெடி வெடிக்கணும். லட்சுமி வெடி… கையில் பத்த வெச்சு வீசற பிஜிலி… ஆறு மணிக்கு விடியற போது வீட்டு வாசல் பூராவும் காகிதக் குப்பையா இருக்கணும். கந்தக மணம் தூக்கணும். இட்லியும் ஸ்வீட்டும் வாயில் அடைச்சிகிட்டு – பத்து மணிக்கெல்லாம் புதுப்படம் பார்க்க தியேட்டர் கூட்டத்தில் போலிஸ் லத்தியை பயத்தோட பார்த்துகிட்டே க்யூவில் நிக்கணும். "
ரமணி சிரித்தான்.
"கேக்க நல்லாதான் இருக்கு. மலரும் நினைவுகள். ஆனா ரோமில் ரோமனா இருன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்களே! இங்க என்ன சாத்தியமோ அதை செஞ்சிட்டு சந்தோஷப் பட்டுக்க வேண்டியதுதான். ஜூவில் மிருகங்கள் சந்தோஷமா வாழறதில்லையா? கடலில் திரிஞ்ச டால்பின்கள் கண்ணாடித் தொட்டிக்குள்ளே உற்சாகமா துள்ளிக் குதிக்கிறதில்லையா?"
"ஸோ?"
"ரொம்ப ஏக்கமா இருந்தா ஆபிஸுக்கு லீவைப் போட்டுட்டு கவுச்சில் படுத்து சன் டிவி பாரு. தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள். எதையும் மிஸ் பண்ண மாட்டே!"
"எட்டு மணி நேரம். பல நூறு டாலர்கள். பட்ஜெட்ல துண்டு விழும். நான் கேக்கறது சிமுலேஷன் இல்லை. நிஜமான தீபாவளி. பட்டாசு இல்லாம என்ன தீபாவளி? நம்மோட சேர்ந்து குழந்தைகளும் ரொம்ப மிஸ் பண்றாங்களோன்னு தோணுது."
ரமணி சட்டென்று ஏதோ யோசனை வந்தவனாய் செல்போனை எடுத்து ஏதோ எண்ணைத் துழாவினான். ரிங் டோன் போய்க் கொண்டிருக்க – "உனக்கு விஸ்வம் தெரியுமா?"
"காலேஜ்ல நம்ம சீனியர்?"
"ஆமா. கெயின்ஸ்வில்லில் சொந்த வீடு வெச்சிருக்கான். ஒன் ஏக்கர் ஹவுஸ். "
"அவனுக்கு என்ன இப்போ?"
"அவன் எப்பவும் ரொம்ப விமரிசையா தீபாவளி கொண்டாடுவான். பட்டாசெல்லாம் வெடிப்பான்."
"என்னடா சொல்றே?"
"ஜூலை நாலு அமெரிக்க சுதந்திர தினத்தின்போது கடைகளில் பட்டாசு விக்குமே. அப்பவே வாங்கி ஸ்டாக் வெச்சுருவான். தீபாவளி அன்னிக்கு அவன் வீட்டில் குழந்தைகள் புஸ்வாணம், மத்தாப்புன்னு ரொம்ப கோலாகலமா கொண்டாடும்."
"வாட் அபவுட் லட்சுமி வெடி?"
ரமணி என்னை முறைத்தான்.
லைனில் விஸ்வம் வந்து விடவே – அவனுடன் பேசி முடித்து விட்டு சந்தோஷமாய் சொன்னான். "சாயந்தரம் ஆறு மணிக்கு குழந்தைங்களோட வந்துரச் சொன்னான். மத்தாப்பு, புஸ்வாணம் எல்லாம் எக்கச்சக்கமா ஸ்டாக் இருக்காம். நிறைய குழந்தைகள் இருந்தா நல்லா இருக்கும்ன்னு அபிப்ராயப்பட்டான். உனக்கு இமெயிலில் டிரைவிங் டைரக்'ஷன்ஸ் அனுப்பறேன்னான்."
அதற்கப்புறம் ரமணி வேலையில் மும்முரமாகி விட, எனக்கு மட்டும் ஆறவில்லை. வெறும் மத்தாப்பு. சே, காது கிழிய வெடி வெடிக்காத தீபாவளி என்ன இருந்தாலும் குறைபட்ட தீபாவளிதான்.
அரை குறை மனசோடு நான் பணியில் ஈடுபட ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் 'முக்கியம்' என்று சிவப்பில் குறிக்கப்பட்ட இமெயில் வந்தது.
செக்யூரிட்டி அலர்ட். இந்த கட்டிடத்தின் அனைத்து வாயில் கதவுகளும் மூடப்பட்டுள்ளன. கட்டிடத்தின் கிழக்கு மூலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் கிடக்கும் ஒரு பாக்கெட்டில் வெடி குண்டு இருப்பதாக நம்பப்படுகிறது. எலிவேட்டர்கள் இயங்காது. அவசர கால வழியை உபயோகித்து வெளியேறவும்.
அதைப் படிக்கிற போதே – அபாய அலாரம் கட்டிடம் முழுவதும் ரீங்காரமிடத்துவங்க – ஸ்பீக்கர்களில் கரகரத்த குரலில் செக்யூரிட்டி அறிவிப்பு பரபரப்புடன் வெளியாக ஆரம்பித்தது.
அவசரகால படிக்கட்டில் சாரை சாரையாக ஜனங்கள். நெரிசலில் இடித்தபடி படிகளில் இறங்கும்போது, "மத்தாப்பில்லே. வெடி. ஹேப்பி தீபாவளி!" என்றான் ரமணி. ∆
Very nice article.. romba pidichudhu.. :-))
En anubavam enna theriyuma, indha oorukku vandha pudusile, rombave thonithu, pandigai naall ellam amarkalamaa kondaada mudiyalaiyennu, Machinargal, Mamiyaar, kozhandhaigal, marumaangal ellam cherndhu Deepavali naaalle saayandhiram at least I think Kamilathiri koluthi sandhosha paduvom.. later the following saturday, we will have a deepavalli lunch through dinner, hmmm… adhu oru kaalam. Slowly, adhuvun vittu pochu, then christmas kondaada aarambichom.. at least adhudhaan nammakku deepavalli maadhiri.. karthalendhu, rathiri varaikum chapadu, sweet, kaaram nu plus action movie paarkaradhunnu irundhom..
later kids flew away the coop, apparam deepavalli enna christmas enna.. ella naalum oru naale.. 🙂
anbudan
Subhalakshmi 🙂
அட ஒரே மாதிரி பொலம்பி இருக்கோமே 🙂
ரோமில் ரோமனா இரு – வேற வழி?
இதுதான் யதார்த்தம்.
அடுத்த தலைமுறை பாவம்.
ஹ , அட்டகாசம்
கதை நல்லா இருக்கு. என் வயித்தெரிச்சலையும் நினைவு படுத்தியாச்சு:-( நான் ரொம்பவே மிஸ் செய்வது தீவாளி வெடியும், லேகியமும்! எங்கம்மா செய்யும் லேகியம் போல உண்டா?????? :-(((((
சில அமெரிக்க மாநிலங்களில் வெடியோடயே கொண்டாடறோமே! (டப் டபார்)! நாளை இரவு பட்டாசு கோலாகலம் (அடக்கித் தான் வாசிக்கறது).