மாட்டிக்கொண்டது ஷங்கரும் பாப்பையாவும்தான்

 

பொழுது சாயும் நேரத்தில் கலைஞர் டிவியில் வர்த்தகச் செய்திகள். சீரியலுக்கு முன்னர் சிரமப்பரிகாரம் செய்யும் நேரத்தில் வரும நிகழ்ச்சி. முழுக்க முழுக்க வர்த்தகச் செய்திகள். பங்குச் சந்தையில் ஆரம்பித்து எல்லா எகானாமிக் டைம்ஸ் விஷயங்களையெல்லாம் கவர் செய்கிறார்கள். மறுநாள்  வியாபாரம் பற்றிய ஆருடமும் உண்டு. தங்கம் விலை முதல் மஞ்சள் வரை மார்க்கெட் விலை சொல்கிறார்கள். கத்தரிக்காய் விலையிலிருந்து புண்ணாக்கு விலை வரும் சகலமும் தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சி பெயர் பணம் வரும் நேரமாம். பணம் வருகிறதோ இல்லையோ பயம் வருகிறது.     

எந்திரன் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்றாலும் முடியவில்லை. டைம்ஸ் டிவியின் இந்திச் சானலில் ஷேர் மார்க்கெட்டை அலசினார்கள். சன்டிவி ஷேர் பற்றி யாரோ கேள்வி கேட்டார்கள். சன்டிவி படமெடுப்பதிலும் முன்னுக்கு வந்திருக்கிறது என்று ரோபோ பற்றியெல்லாம் சொன்னார்கள். ரிலையன்ஸால் கூட முடியாத விஷயம். சன்டிவி ஷேர் எகிறுகிறதாம். சன்டிவியில் முதலீடு செய்தால் நல்ல ரிட்டர்ன்ஸ் வரும் என்றெல்லாம் பாசிடிவாக சொன்னார்கள். கேட்டவர் ஆர்வத்தில் ஆழ்ந்து போய் சன்டிவி தொடர்ந்து இந்தியில் படமெடுக்கப்போகிறதா என்று கேட்க, போன் பாதியிலேயே கட். அடங்கேப்பா.. எங்கெல்லாம் இண்டர்வெல் விடுகிறார்கள்!

மக்கள் டிவியில் மறுபக்கம் ரிப்போர்ட். பரங்கிமலையில் ஆரம்பித்து சிங்கப்பெருமாள் கோயில் வரையிலான ரயில்வே பாதையில் இதுவரை 150 சொச்சம் பேர் உயிரை விட்டிருக்கிறார்களாம். ஒரு சில ஸ்டேஷன்களில் டிக்கெட் வாங்கக்கூட ரயில் பாதையை கடந்துதான் வரவேண்டும் என்று ஆவேசப்பட்டார் ஒரு பயணி. ஜிஎஸ்டி ரோட்டை ஒட்டியிருககும் பல்லாவரம், குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் அதிகமான விபத்துகள்.இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கையில் மொபைல் சகிதம் பேசியபடியே தண்டவாளத்தைக் கடக்கும் பலரை படம்பிடித்து கருத்து கேட்டார்கள். ராத்திரி பத்து மணிக்கு மேல் மந்திரவாதி,சூனியம் பற்றியெல்லாம் துலாவும் சேனல்களுக்கு மத்தியில் மக்கள் டிவி, இன்னொரு கமலஹாசன்!

போகோ டிவி. சோட்டோ பீம் ஹிட்டை தொடர்ந்து சின்ன வயது பீமாவை மையப்படுத்தி ஏகப்பட்ட தொடர்கள். அத்தனையும் கார்ட்டூன் கலக்கல். சாகசமென்றாலும் ஏதாவது ஒரு குட்டிச் செய்தியை வைத்திருக்கிறார்கள்.கொழு கொழு பீமா, வெண்ணெய் கிருஷ்ணனை ஞாபகப்படுத்தினாலும் கம்பீரமான கேரக்டர். குட்டிப்பெண்ணை கடத்திக்கொண்டு போனவர்களை துவம்சம் செய்து மீட்டு வருகிறார். லாஜிக்கெல்லாம் இல்லாவிட்டாலும் ரசிக்க முடிகிறது. நம்மூரிலேயே ஏகப்பட்ட ஹீரோக்கள் இருக்கும்போது எதற்கு வெளிநாட்டு இறக்குமதி?. அட்வென்ச்சரும் ஆன்மீகமும் ஒரே டோஸில் உருப்படியாகக் கொடுககிறார்கள்.தமிழில் வந்தால் தேவலை.  

ராஜ் டிவியில் ராஜகுமாரன். அங்கவை சங்கவையை ஞாபகப்படுத்திவிட்டார்கள். கவுண்டமணி, செந்தில், வடிவேலு மூவர் கூட்டணி காமெடி பீஸில் முக்கியமான பீஸ். யம்மா என்னை வுட்டுடும்மா…எனக்கு வியாதியோ.. வியாதி என்னும் கவுண்டமணியின் டைமிங் பிரமாதம். பொத்திப் பொத்தி வளர்த்த பொண்ணு என்று வடிவேலு அறிமுகப்படுத்துவதிலேயே அதகளம் ஆரம்பித்துவிடுகிறது. காமெடி தோரணம். வடிவேலுவுக்கு டயலாக்கே தேவையில்லை. அந்த சீரியஸான முகமே போதும். செந்தில் சொல்லும் அந்த கடைசி பன்ச்தான் ஹைலைட். ஓப்பனிங்கை விட அசத்தலான பினிஷிங். கவுண்டமணி, ஆர்.வீ. உதயகுமாரெல்லாம் தப்பிவிட்டார்கள். ஐயோ, பாவம் மாட்டிக்கொண்டது ஷங்கரும் சாலமன் பாப்பையாவும்தான்.  

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 10, 2010 @ 8:43 pm