ஞாயிறு ஒளி மழையில்…

"இன்று 60 டிகிரி போகப் போகிறதாம்" என்ற ஒற்றை வரி அறிவிப்பிலேயே இந்த ஞாயிறு புட்பால் பார்ப்பது நடக்காத காரியம் என்றானது. நவம்பர் மாதத்தில் இப்படி ஒரு நாள் கிடைப்பது அபூர்வம் என்பதால் வெளியே சென்றாக வேண்டும் என்பது முடிவானாலும், எங்கு செல்லலாம் என்று முடிவு செய்ய முடியாத காரணத்தினால் குழந்தைகளை அள்ளிக் காரில் போட்டுக் கொண்டு ஒரு நண்பனின் வீட்டிற்குச் சென்றோம்.  அங்கும் பேச்சு வார்த்தை தொடர்ந்ததில் அரை நாள் ஓடிவிட்டது. நாளை பள்ளி உண்டு எனவே இரவு அதிகம் தாமதம் ஆக முடியாது, நேரத்திற்கு குழந்தைகளை சாப்பிட வைக்க வேண்டும் என்று மேலும் பல கட்டுப்பாடுகள் வர, ஐம்பது மைல் தொலைவை தாண்டாமல் எதேனும் இடத்திற்குச் செல்லலாம் என முடிவாகியது.

அப்பொழுது நண்பர் லாம்பேர்ட்வில் (Lambertville) என்ற இடம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பதாகச் சொன்னார். என்ன இருக்கிறது என்று அதிகம் தெரியாமல் இருந்தாலும், விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தோதாக இருந்ததாலும், அதற்கு மேலும் பேசிக் கொண்டிருந்தால் நிலமை மோசமாகும் என்று தெரிந்ததாலும், மேலும் ஒரு நண்பரின் குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டு கிளம்பிவிட்டோம். ஒரு வேனில் பெரியவர்களும் மற்றொரு வேனில் குழந்தைகளும் அவர்களை மேய்ப்பதற்காக ஒருவருமாக இரண்டு வேன்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். உரத்த குரல்களில் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டு வந்த குழந்தைகள் வேனில் ஒரு திரைப்படத்தைப் போட்டதும் இருக்கும் இடம் தெரியாமல் அமைதியான மாயம் நிகழந்தது.

லாம்பேர்ட்வில் ஒரு அழகிய சிற்றூர். சுமார் 4000 பேர் வசிக்கும் ஒரு கிராமம். டெலவேர் (Delaware) நதிக்கரையில் இருக்கிறது. இந்த நதிதான் நியூஜெர்ஸி மாநிலத்திற்கும் பென்சில்வேனியா மாநிலத்திற்கும் எல்லைக் கோடாக இருக்கிறது. நதியின் ஒரு புறம் லாம்பேர்ட்வில். மறுபுறம் இதற்கு இணை ஊரான நியூ ஹோப் (New Hope). இவை இரண்டையும் இணைப்பது டெலவேர் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு பாலம். இவ்வளவுதான் இடம். ஆனால் இதை எப்படி அழகாக ஒரு உல்லாசப் பயணத்திற்கு ஏதுவான இடமாக மாற்றி இருக்கிறார்கள் என்று பார்த்த பொழுது ஆச்சரியமாகவே இருந்தது.

லாம்பேர்ட்வில்லின் வயது முந்நூறு. 1703ஆம் ஆண்டு செவ்விந்தியர்களிடம் இருந்து வாங்கப்பட்ட நிலத்தில்தான் இந்த ஊரே உருவானது. இன்று பழைய கட்டிடங்களைப் புதுப்பித்து அதை பலரும் வந்து பார்க்கும்படி செய்திருக்கிறார்கள். பழைய பாணி வீடுகள், சிறு தெருக்கள், கடைகள் என ஊரில் நுழைந்த உடனேவே என்னவோ காலப் பயணம் செய்துவிட்ட உணர்வு வருகின்றது. ஆனால் நாங்கள் சென்ற பொழுதே மதியத்திற்கு மேல் ஆகிவிட்டதால் இந்தப் பகுதியில் அதிகம் சுற்றாமால் நேரடியாக டெலவேர் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தை நோக்கி சென்றுவிட்டோம்.

இது ஒரு சிறிய பாலம்தான். வாகனங்கள் சென்று வர இரண்டு லேன்கள். ஒரு பக்கத்தில் நடந்து செல்ல ஏதுவான ஒரு நடைபாதை. கார்கள் செல்லும் பாதை சாதாரணமான சாலை போல் இல்லாமல் இரும்பு ஜல்லிகளால் செய்யப்பட்டு இருந்தது. அதில் இருக்கும் ஓட்டைகள் வழியாக கீழே தண்ணீரைப் பார்க்க முடிந்தது. இந்த பாலத்தின் கீழ் Cliff Swallow என்றழைக்கப்படும் பறவைகளின் கூடுகள் இருந்தன. ஒவ்வொரு வருடமும் வசந்த கால தொடக்கத்தில் இந்தப் பறவைகள் எங்கிருந்தோ வந்து இங்கு முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும். பாலம் புதுப்பிக்கப்படும் பொழுது இந்த கூடுகள் உடைந்துவிட, இவற்றிற்காக பாலத்திற்கு அடியில் செயற்கையாகக் கூடுகள் செய்து வைத்துள்ளனர். அருகி வரும் இனமாக கருதப்படும் இந்தப் பறவைகள் தொடர்ந்து இங்கு வருவதைக் காண அம்மாதங்களில் பல பறவை ஆர்வலர்கள் இங்கு வருவார்கள். பாலத்தைப் பற்றிய தகவல் பலகையில் இந்தப் பறவைகள் பற்றி விரிவாகச் சொல்லியுள்ளார்கள்.

பாலத்தின் மீதிருந்து பார்த்தால் மிகவும் அழகான காட்சிகள். இருமருங்கும் இலைகளைத் தொலைத்துக் கொண்டிருக்கும் மரங்கள், ஆங்காங்கே வீடுகள், சலனமற்ற நதி, படகு துறைகள், தூரத்தில் தெரியும் பாலங்கள் என்று எங்கு திரும்பினாலும் ரம்மியமான காட்சிகள். இலையுதிர் காலத்தில் இன்னமுமே வண்ணமயமாக இருந்திருக்கும். அதிகம் குளிராத இந்த மாலைப் பொழுதில் பெரியவர்கள் அனைவரும் நகரப் பிடிக்காமல் பாலத்திலேயே நின்று கொண்டிருந்தோம். ஆனால் குழந்தைகளுக்கு பாலத்தின் மீது நடந்து ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு செல்கிறோம் என்ற நினைப்பே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணிவிட்டது. வாருங்கள் பென்சில்வேனியாவிற்குப் போகலாம் என கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூட்டிச் சென்றுவிட்டனர்.

நியூ ஹோப், லேம்பேர்ட்வில் போலவே அழகான சிறிய கிராமம். இணை ஊர் என்ற பெயருக்கு ஏற்றார் போல ஆற்றின் அந்தக் கரையில் இருக்கும் லேம்பேர்ட்வில்லை அச்செடுத்து வைத்தார்ப் போலவே இருந்தது. இங்கு 1920களில் இருந்த புகைவண்டிகளை சீரமைத்து, அந்தக் காலத்தில் ரயிலில் செல்லும் அனுபவத்தை அளிக்கின்றனர். அந்தக் காலத்தில் இருந்தது போலவே தகவல் தரும் வண்டி, ரயில் நிலயம் என்று ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளனர். சுமார் 45 நிமிடங்கள் காடு மலை வழியாக சென்று வருகின்றது இந்த ரயில். முன்பே சொன்னது போல் இலையுதிர் காலத்தில் சென்றால் மிக அழகாக இலைகளின் நிறங்கள் மாறி இருப்பதை பார்த்திருக்கலாம். திட்டமிடப்படாமல் சென்றோம் என்பதில் இந்த ரயில் இருப்பதையோ அது கிளம்பும் நேரங்களையோ கூட நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக அன்றைய கடைசி ரயிலுக்கான சமயத்தில் சென்றுவிட்டோம்.

ரயில் பயணத்தைத் தொடர்ந்து அங்கிருந்த கடைகளில் ஒரு சுற்று நுழைந்து கைவினைப் பொருட்களைப் பார்த்துவிட்டு கிளம்பத்தான் நேரம் சரியாக இருந்தது. நாங்கள் பாலத்தில் நின்று கொண்டிருந்த பொழுது வானத்தில் சிறிய க்ளைடர் ஒன்றினைப் பார்த்தோம். அதுவும் சுற்றிப் பார்க்க ஒரு வழியா அல்லது யாரேனும் தனியாருடையாதா எனத் தெரியவில்லை. வானத்தில் இருந்து பார்த்திருந்தால் அருமையாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.  இன்னும் கொஞ்சம் சரியாகத் திட்டமிட்டுக் கொண்டு வந்திருந்தால், பழங்கால கட்டிடங்களுக்குள் சென்று பார்த்திருப்பது, வழிகாட்டியுடன் நடைபயணம், அருகில் இருக்கும் பண்ணைகளில் ஆப்பிள்கள் பறிப்பது என்று மேலும் பலவற்றைச் செய்திருக்கலாம். வழக்கம் போல கேமராவை எடுத்துச் செல்ல மறந்துவிட்டதால் ஐபோனில் எடுத்த படங்களும் விடியோவும்தான் தர முடிந்தது. 

நியூ ஜெர்ஸியில் இருப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் இது. ஒரு நாள் சுற்றுப்பயணத்திற்கு ஏற்ற இடம். காலையில் கிளம்பினால் மாலை வரை இருந்துவிட்டு வரலாம். லேம்பேர்ட்வில்லின் இணைய தளம் – www.lambertvillenj.org. நியூ ஹோப்பின் இணைய தளம் – www.newhopepa.com/. நாங்கள் நேரங்கழித்து சென்றதால் வண்டியை நிறுத்த இடம் தேடி அலையவில்லை. நேரத்தில் சென்றிருந்தால் கொஞ்சம் சிரமமாக இருந்திருக்கும். ஒரு நாள் முழுவதும் அங்கு இருக்கப் போவதாக இருந்தால் நியூ ஹோப் ரயில் நிறுத்தத்தில் கட்டணம் செலுத்தி நிறுத்தி விடலாம். இந்த ரயில் பற்றிய தகவல்களுக்கு அவர்களது இணைய முகவரி – http://www.newhoperailroad.com/. 

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

2 thoughts on “ஞாயிறு ஒளி மழையில்…

  • November 17, 2010 at 10:44 am
    Permalink

    கண்டிப்பா ஒரு தடவை போகனும், நல்லதொரு பதிவு

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 16, 2010 @ 11:29 pm