சூரியக் கடற்கரையில் வளர்ந்த க்யூபிஸம்

 

தலைப்பையெல்லாம் பாத்து பயந்துடாதீங்க. ஸ்பெயின்லே மலாகான்னு ஒரு கடற்கரை நகரம், அது பற்றிய பயணக்குறிப்பு. அதுக்குதான் இப்படி கடாமுடான்னு ஒரு தலைப்பு!

ஊர் சுற்ற லாயக்கில்லாத ஆசாமி நான்.

ஹைதராபாத் சென்றபோது, நண்பர்களிடம் வளையல் வாங்க உதவி கேட்டேன். அவர்களும் அழைத்துப்போனார்கள்.பேரமெல்லாம் பேசி வளையல் வாங்கி, ஹோட்டலுக்குத் திரும்பும்போது "இந்த சார்மினார்னு சொல்றாங்களே, அங்கே நாளைக்கு கூட்டிகிட்டு போறீங்களா?" என்று கேட்டு அடி வாங்கினேன். ஏன் அடி? வளையல் வாங்கியது சார்மினார் வாசலிலாம். முதலிலேயே சொல்ல வேண்டாமா?

ரயிலில் சாப்பிடமாட்டேன், தூங்கமாட்டேன்  – எல்லாம் அடிபட்டதால்தான். ரயில் சாப்பாட்டினால் பெட்ரோல் எஞ்சினின் எல்லா ஸ்ட்ரோக்குகளும் (சக்‌‌ஷன், கம்ப்ரஷன், பவர், எக்ஸ்ஹாஸ்ட்) வயிற்றுக்குள் நடந்தபிறகு முதல் சபதம். கஸ்டமரைச் சந்திக்கப் போகும்போது வெறும் சாக்ஸுடன் போனதால் – விஜயவாடா கைவினைஞர்களின் விளையாட்டால் – இரண்டாம் சபதம்.

எந்த ஊருக்குப் போனாலும் வெளியே போக விரும்பமாட்டேன். டிவியில் தெரியாத கலாச்சாரமா தெருவில் தெரிந்துவிடப்போகிறது? 

ஆனாலும், வெயில்படாத மேனியுடன் ரிஷ்யசிருங்கராகவே இருந்துவிடமுடிகிறதா, விடுகிறதா இந்தச் சமுதாயம்? 

"எங்கே ஆளைக்காணோம்?"

"வெளியூர் போயிருந்தேன்"

"எந்த ஊர்?" விடமாட்டீங்களாப்பா?

"ஸ்பெயின்லே மலாகான்னு ஒரு ஊர்"

"அங்கே மனுஷங்க எல்லாம் எப்படி? உத்துப்பாத்தா கோவப்படுவாங்களா? சாப்பாடெல்லாம் எப்படி? வத்தக்குழம்பு கிடைக்குமா?"  இப்படிப்பட்ட சமூகச் சிந்தனைமிக்க கேள்விகளுக்குப் பதில் சொல்லவாவது கொஞ்சம் சுற்றிப்பார்க்கத்தானே வேண்டியிருக்கிறது? அதுவும் ஒரு எழுத்தாளனாகப்பட்டவனின் (உள்மனம்: டேய்!!!!!!) உலகம் பற்றிய கருத்துக்களுக்காகவும் அறிவுரைகளுக்காகவும் வாசகர்கள் காத்துக்கிடப்பார்களே, அவர்களைக் கைவிடலாமா?

பிரச்னை என்னவென்றால், பயணக்கட்டுரை எப்படி எழுதுவது? 

"மலாகா என்பது ஸ்பெயினின் தெற்குப்பக்கம் மத்தியத்தரைக்கடலின் கரையில் 36ஆவது அட்சரேகையும், 4ஆவது தீர்க்கரேகையும் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது" ரேஞ்சிலா?

"காரில் செல்பவர்கள் பாதசாரிக்கு நிறுத்தி வழிவிடுகிறார்கள். வூட்லே சொல்லிகினு வண்ட்டியா போன்ற சொலவடைகளைக் கேட்கவே முடிவதில்லை. நம் ஊர் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது? ஏ சமுதாயமே, இனியேனும் திருந்துவாயா?" ரேஞ்சிலா?

"சாப்பாட்டில் உப்பு, காரம் எதுவுமே இல்லை. எல்லா சமையலிலும் வைனைக் கலக்கிறார்கள். சைவமாய் கேட்டால் இலை தழையைக் கொண்டு வருகிறார்கள். சாப்பிட்டு பத்து நாளாச்சு, அம்மா தாயே" ரேஞ்சிலா?

எப்படி எழுதினாலும் நானே கிண்டலடிப்பேன் என்பதால், சிம்பிளாக சில புல்லட் பாயிண்டுகள்:

** 300 நாள் வெயில் இருக்கும் ஊராம் – அதுதான் மலாகாவை சுற்றுலாத்தளமாக்கி இருக்கிறதாம். வருடத்துக்கு 400 நாள் வெயிலாக இருக்கும் வேலூரில் கிளம்பி, 500 நாள் வெயிலாக இருக்கும் துபாயில் இருப்பவனுக்கு தமாஷாக இருந்தாலும் பனிபொழியும் சுற்றுப்புறத்துக்கு இதுதான் குளிர்வாசஸ்தலம். சுற்றுலாவே கடற்கரையை நம்பித்தான் என்பதால் சாய்வுநாற்காலிகள், லைஃப் கார்டுகள், பத்தடிக்கு ஒரு என்கொயரி போஸ்ட், குளிக்க ஷவர்கள்,தினம் கழுவப்படும் பேவ்மெண்டுகள் என்று அரசாங்கமும் ஜொலிக்க வைக்கிறது. இந்தப் பிரதேசத்தையே சூரியக் கடற்கரை என்கிறார்கள் – Coast of the Sun – Costa De Sol என்பது ஸ்பானிஷ்

வெயில் தரும் சுதந்திரம் பிகினியை அதிகபட்ச உடையாக்கிவிட, கடற்கரை பேவாட்சர்களுக்கு சொர்க்கம். ஒருமுறை காற்றாட கடற்கரைக்குச் சென்றவனுக்கு (நம்புங்க சார்) வாழ்நாளுக்கான அதிர்ச்சி – என்னையும் என் பாய்ஃப்ரண்டையும் ஒரு ஃபோட்டோ எடுத்துத் தரீங்களா? என்று கேட்ட இளம்பெண் – இருவரும் சேர்த்து 20 மிமீ ஆடை அணிந்திருந்தார்கள்.

** ஆங்கிலத்தை வெறுக்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை, தவிர்க்கிறார்கள் என்பது உண்மை. ஜிப்ரால்டருக்கு அருகே (100 கிமீ) இருப்பதால், இங்கிலாந்திலிருந்து கணிசமாகவே மக்கள் வருகிறார்கள். (ஜிப்ரால்டர் இங்கிலாந்து ஆளுகைக்குட்பட்ட இடம்). நான் சந்தித்த பெரும்பாலான டூரிஸ்டுகள் ஆங்கிலக்காரர்கள்-  டாக்ஸிக்காரர்கள், கடைக்காரர்களிடம் எல்லாரும் டான்ஸ் ஆடித்தான் வியாபாரம் செய்கிறார்கள். அதனால் ஒன்றும் பெரிய பாதகமில்லை. வார்த்தைகள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலம்தான் – கடைசியில் மட்டும் கோபம் வந்து திருகிவிடுகிறார்கள். University ஐ Universidad என்கிறார்கள். Passaporte, visado எல்லாம் புரியத்தான் செய்கின்றன. என்ன, பிடிவாதமாக J வையெல்லாம் Y என்றே உபயோகிக்கிறார்கள்.  அப்புறம் ஏன் எழுத மட்டும் J?

"லாஸ்ட் இயர் யானைக்கு ராம்  வாஸ் ஹியர் " என்றான் ஆபீஸ் தோழன். யானைக்கு எதாவது விழாவா என்றெல்லாம் குழம்பி என் நண்பன் ஜானகிராம் பற்றிதான் சொல்கிறான் என்று புரிந்துகொள்ள அரைமணி ஆனது.

** மலை சார்ந்த இடம்.சரேலென இறங்கும், ஏறும் மலைப்பாதைகள். குறுகிய சாலைகள். ஏற இறங்க அஞ்சாத மக்கள். யாரும் மூச்சு வாங்கி பார்க்கவில்லை. (என்னைத்தவிர). சுயாட்சி பெற்று சுற்றும் கடிவாளம் இல்லாத குதிரைகள்; இறக்கத்தில் தெரியும் கடல் – கண்ணுக்கினிமை.

** பாடல் பெற்ற திருத்தலம் ஒன்று மலாகாவின் பார்லிமெண்டாக இருக்கிறதாம். முனிசிபாலிட்டிக்கு பார்லிமெண்ட் கொஞ்சம் பெரிய வார்த்தைதான், இருந்தாலும் அப்படிதானே சொல்கிறார்கள்! என்ன பாடலா? ரஜினிப் பெருமாளின் மேல் பா விஜயாழ்வார் அருளிச்செய்த ஒருகூடை சன்லைட் என்னும் பாசுரமே அஃது!

**சாதாரணமாக ஊரில் சென்றாலே கண்ணைப்பறிப்பது மரங்கள். ஆரஞ்சு மரங்கள், மாதுளை மரங்கள் – சாதாரணமாகவே வளர்ந்தாலும் நர்சரிகளிலும் போட்டு ஏக்கரா கணக்கில் வளர்க்கிறார்கள். எல்லாப்பழமும் ஃப்ரெஷ் – அநியாய டேஸ்ட்! திராட்சை சாதாரணமாகக் கண்ணில் படவில்லை, இருந்தாலும் திராட்சைதான் மெயின் உற்பத்தியாம். ஸ்பானிஷ் வைன் என்பதே இந்த ஏரியாதானாமே!

** க்யூபிஸத்தை இவ்வுலகுக்கு அளித்த பாப்லோ பிகாஸோ பிறந்த ஊர்.  ஏர்போர்ட்டுக்கே அவர் பேர்தான். பிகாஸாவுக்கு பிரம்மாண்டமான ம்யூசியம் கட்டிக் கொண்டாடுகிறார்கள். நகரத்தில் காலாற நடந்தால் நாலடிக்கு ஒரு ஆர்ட் கேலரி வருகிறது. கலைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்ன, உள்ளே போய்ப் பார்த்தால் சேறடித்த வேட்டி மாதிரி ஓவியத்தைக் காட்டி 5000 யூரோ என்கிறார்கள். கலை வாழட்டும்!

** ஃபுட்பாலில் வேர்ல்டு கப்பே ஜெயித்தாலும், இங்கே லோக்கலில் முக்கியமான விளையாட்டு ஜல்லிக்கட்டுதான். மிகப்பழமை வாய்ந்த ஸ்டேடியத்துக்குள் ஒருமுறை பார்த்தேன். சிவப்பு ஆடை அணிந்த மெட்டடர்கள் துணியைக்காட்டி மாட்டை விரட்ட, ஓடும் மாட்டிடம் நாசுக்காக விலகி ஓடி ஓடவிட்டு அம்புகுத்தி கொஞ்சம் கொஞ்சமாக கைமா செய்கிறார்கள். மக்கள் உணர்ச்சிவேகமாகிறார்கள். எனக்கு பயமாகி ஓடி வந்துவிட்டேன். முதுகில் குத்திய அம்பைக் கனவில்தான் தேடி எடுத்தேன்.

** சாப்பிடுகிறார்கள் சாப்பிடுகிறார்கள், அப்படிச் சாப்பிடுகிறார்கள்! நம்பினால் நம்புங்கள், நூறு அடி கடற்கரையில், எண்ணினேன், 300 ஹோட்டல்கள்! (ஒரு பயலுக்கும் இட்லின்னா என்னன்னு தெரியலை!)

** பிகாஸா மட்டுமல்ல, ஊர் மக்கள் பெருமையாகப் பேசும் இன்னொரு மண்ணின் மைந்தன் அண்டோனியா பாண்டராஸ். "Once Upon a time in Mexico" பார்த்திருக்கிறேன் என்று சொன்னதுமே ஆஃபீஸ் தோழன் வாஞ்சையானான். 

ஒரு வாரத்தை அட்டகாசமா ஓட்டலாம். நிச்சயம் போரடிக்காது, அதுக்கு நான் உத்தரவாதம்! 

தொடர்புடைய படைப்புகள் :

4 thoughts on “சூரியக் கடற்கரையில் வளர்ந்த க்யூபிஸம்

 • December 7, 2010 at 3:49 am
  Permalink

  manmadan ambaa illa maatukku ambaa? nanna ezudarel. keep it up!

  Reply
 • November 23, 2010 at 7:37 am
  Permalink

  First class.. I wish to write like you Sureshji. But, i know its impossible. You are simply great. Keep it up. Write more.Congrats.

  Reply
 • November 21, 2010 at 10:01 pm
  Permalink

  அட்டகாசமான கட்டுரை. பாராட்டுகள் 🙂 பெனாத்தல் (ராம்?) சுரேஷ் :>

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 21, 2010 @ 9:32 pm