பாவம், தமிழ் பிழைத்துப் போகட்டும்

நாட்டில் வரவர தமிழ் படுத்தும் பாடு தாங்கமுடியவில்லை! 

"அடேய் தமிழ் துரோகி, உன்னை விட்டேனா பார். நீ பச்சைத் தமிழனா, சிவப்புத் தமிழனா? நீ தமிழ்ப்பால் குடித்தவன்தானா அல்லது புட்டிப்பால் குடித்தாயா?"

"அவனா நீயி? ஓஹோ, கைபர், போலன் கணவாய் வழியாக வந்தவனா?" 

என்றெல்லாம் மீசையை முறுக்கி, லுங்கியை மடித்துக்கட்டி உதார் விட்டு என்னை யாராவது பயமுறுத்துவதற்குமுன், கொஞ்சம் இருங்கள். சொல்லவந்ததை சரியாகச் சொல்லிவிடுகிறேன். 

அதாகப்பட்டது, தமிழ் சமர்த்தாக தன் வேலையைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.  தமிழை நாம் படுத்தும் பாடுதான் தாங்கவே முடியவில்லை!

தமிழ் தொன்மையான மொழி என்பதிலோ, உலகளாவிய பழக்கவழக்கத்தில் இருக்கிற பழம் மொழி என்பதிலோ யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ்தான் என் தாய்மொழி என்பதிலோ, பள்ளிப் பருவத்தில் தமிழில்தான் நான் பல பாடங்களையும் கற்றேன் என்பதிலோ யாருக்கும் சந்தேகம் வரத் தேவையும் இல்லை! 

தமிழ் மட்டுமல்ல, இன்னும் சில மொழிகளையும் நானே விரும்பிக் கற்றவன், இன்னமும் கற்றுக் கொண்டிருப்பவன். தமிழ் உட்படப் பல மொழிகளின்மேலும் எனக்குக் காதலே உண்டு!

தமிழ்மொழி விஷயத்தில், யாரோ நம்மீது படையெடுத்து வந்து நம்மையும் நம் மொழியையும் கலாசாரத்தையும் அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்டு சண்டைக்கு வருவது போலவும், எதிரிநாட்டிடமிருந்து நாம் நம் நாட்டைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்பது போலவும், "வீறுகொண்டெழுந்து வாரீர் தினவெடுத்த தமிழ்த்தோழர்காள்!" என்றொரு பம்மாத்து நாடகம் இங்கே பலகாலமாகவே ஆடப்பட்டு வருகிறது.

ஏன்? எதற்காக இதெல்லாம்? இத்தனை உணர்ச்சிமயமான கண்டனங்கள், ஆர்ப்பாட்டங்கள் எதற்கு? இதெல்லாம் தேவைதானா?

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மிகச் சரியான, மிகவும் லாபகரமான காரணங்கள் இருக்கவே செய்கின்றன.

மொழி என்பது இனம், உணர்வு சம்பந்தப்பட்டது அல்லவா? அதனால் அவற்றை சுலபமாகத் தூண்டிவிட்டு டிராமா போட்டுக் கன்னாபின்னாவென்று பலரும் காசு பார்க்கமுடிகிறது.

ஆனால் இதெல்லாம் என்னவோ தமிழ்நாட்டில் மட்டும் நடக்கிறதென்று எண்ணாதீர்கள். சும்மா இருந்த நம்மைக் கிளப்பிவிட்டதே ஹிந்தி வெறியர்கள்தான். கர்நாடகாவில் கன்னடத்தைக் காப்பாற்றியே தீருவோம் என்றொரு கூட்டம் கிளம்பி, கடைப் பலகைகள், பேருந்துகளை எல்லாவற்றையும் போட்டு உடைத்துக்கொண்டு இருக்கிறது. ஆந்திராவிலும் அவ்வாறே என்று அறிகிறேன். பீஹாரியை விரட்டு என்று மும்பையிலும், தமிழனை, மலையாளியைத் துரத்து என்று பல இடங்களிலும் போராட்டங்கள் பற்றிப் படிக்கிறோம். 

சென்ற வருடம், தமிழ்நாட்டு அரசாங்க பஸ் ஒன்று கர்நாடகாவில் ஒரு பெங்களூர் லைசென்ஸ் ப்ளேட்டுடன் இருந்த வேன் மீது லேசாக உரசியது. ஒருவருக்கும் கொஞ்சம் கூடக் காயமில்லை. ஆனால் எந்த சமரசத்துக்கும் யாரும் தயார் இல்லை. உடனே அது கன்னடியன் வெர்சஸ் தமிழன் தகராறாக மாற்றப்பட்டது. அங்கே ஒரு மொழிவாரி ரத்தக்களரியே நடக்க இருந்த அவலத்தை நான் கண்கூடாகப் பார்த்து நொந்துபோனேன். ஒரே தள்ளுமுள்ளு, அடியாட்கள், அசிங்கமான திட்டுகள். மொத்த டிராஃபிக்குமே அந்த ஹைவேயில் மூன்று மணி நேரம் ஸ்தம்பித்துப் போனது. சமாதானம் பேசப்போன NRI எனக்கு foreigner பட்டம்! கடைசியில் நான் ஒரு விமானமேறி சென்னை வந்து சேர்ந்தேன். இந்த வெறுப்பெல்லாம் எந்த அளவுக்கு இந்தியாவெங்கும் ஊறிப்போய்க் கிடக்கிறது, ஒரே நொடியில் பற்றி எரியத் துடிக்கிறது என்பது என்னை அதிரவைத்த நிகழ்வு. 

எல்லாமே அரசியல்வியாதிகள் செய்யும் அட்டீழிய வியாபாரங்கள் என்பதை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இந்தியாவைத் துண்டாடுவதற்கு 'மொழிவாரி மாகாணங்கள்' என்று நம்மைப் பிரித்த வெள்ளைக்காரன் நமக்கு வைத்துவிட்டுச் சென்றிருக்கும் ஆப்பு லேசுப்பட்டதல்ல. இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு அது செம்மையாகச் செயல்பட்டு நம்மைத் துண்டாடித் திண்டாடித் தெருப் பொறுக்கவல்லது. பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லாம் இதற்கு முன் வெறும் ஜுஜுபி!

இந்திய அரசாங்கமும் 'நாம் இந்தியர், நாமெல்லோரும் ஓரினம்" என்பதையெல்லாம் வலியுறுத்திப் பரவலாகச் சொல்லாமல் மெத்தென இருப்பது மிகப்பெரிய தேச துரோகம். கொள்ளை அடிக்கவும் அடித்த கொள்ளையைப் பதுக்கவுமே அவர்களுக்கு நேரம் போதாதபோது நாட்டு ஒற்றுமை, தேசபக்தி, ஒழுக்கம், சேவை பற்றியெல்லாம் அவர்களுக்குக் கவலை இருக்கவேண்டும் என்று நினைப்பதே தவறுதான்!

அதனால்தான் மொழியைக் காக்கிறோம் பேர்வழி என்று சொல்லிச் சொல்லியே சுரண்டல் நடத்துவது ஒரு மிகப்பெரிய லாபகரமான மல்டி-ஸ்டேட் நெட்வொர்க்கிங் வியாபாரம் ஆகிப்போய் விட்டிருக்கிறது. தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அதிகமுள்ள ஆங்கிலம், ஹிந்தி போன்ற இதர மொழிகளை கற்பித்துத் தத்தம் தமிழ் விசுவாசத்தை நிலைநாட்டும் அரசியல்வாதிகள் பற்றியெல்லாம் நாம் நன்றாகவே அறிவோம்.

தமிழ் என்னவோ குறிப்பிட்ட ஒரு சிலருக்கு மட்டும்தான் சொந்தம் போலவும், மற்றவர்கள் ஏதோ தூய தமிழில் சோடாவைக் கலந்து அதை 'வீக்'காகச் செய்வதற்கென்றே பிறந்த கயவர்கள் போலவும் ஒரு மாயை இங்கே கற்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது! 'இந்தி அரக்கி ஒழிக! தமிழ் வாழ்க!' என்றெல்லாம் கோஷம் போட்டு, ரயில் நிலையங்களில், தபால் நிலையங்களில் ஹிந்தி எழுத்துகள் மீது தார் பூசி, அதீத உணச்சிவசத்தில் தனக்குத்தானே நெருப்பூட்டிக்கொண்டு மாண்டுபோனவர்களின் கல்லறைக் கதையெல்லாம் காலப்போக்கில் அரசியல்வாதிகளின் மாளிகை ஏணிப்படிகள் ஆயின.

ooOoo

தற்போதைய இளம் தலைமுறையும் சரியாக வரலாறு புரியாமல் இந்த மாயையில் சிக்கிச் சுழலப் பார்ப்பது வருந்தத்தக்கது.

அதுவும் சமீப காலமாக, ஆளுக்கொரு கணினி, வீட்டுக்கொரு ப்ராட்பேண்ட் என்று வந்துவிட்டபிறகு, 'அ'னா 'ஆ'வன்னா எழுதத் தெரிந்த அனைவருமே தமிழ்க் காவலர் தான்!

சற்றேறக்குறைய பதினைந்து வருடங்களாக நானும் விகடன், கலைமகள், கல்கி போன்ற வெகுஜனப் பத்திரிகைகளிலும், 'நெட்'டிலும் தமிழில் எழுதி வருகிறேன். தமிழ் நெட், ராயர் காபி கிளப், மரத்தடி, தமிழ் உலகம், அகத்தியம் போன்ற பல இடங்களில் கதைகள், கவிதைகள், அரசியல் கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறேன். 

"நீங்கள் இந்த வார்த்தைக்குப் பதிலாக அந்த சொல்லைப் பாவித்திருக்கவேண்டும்" அல்லது "அந்த வடமொழிக்கலப்புள்ள சொற்றொடருக்குப் பதிலாக இந்த சொல்வடையைக் கையாண்டிருக்கலாமே" என்றெல்லாம் முதலில் யாராவது பதில் எழுதுவார்கள். நான் சொல்லவந்த கருத்துக்கு மாற்றுக் கருத்தோ அல்லது ஆமோதிப்போ இருந்தால் அதைச் சொல்லாமல், 'நானும் உள்ளேன் ஐயா, என் பெயரையும் அச்சில் பார்க்கவேண்டாமா?' ரேஞ்சுக்கு ஏதாவது ஒரு பின்னூட்டம் வரும். 

அதாவது பரவாயில்லை. இதை ஒரு சாக்காக வைத்து ஏதாவது சாதிச் சண்டையை ஊதிவிட்டு வெறுப்பு மோதல்களை ஆரம்பிப்பார்கள் சிலர். 'தமிழ் எனக்கும் தாய்தான்' என்று ஒரு கவிதை எழுதி அவர்கள் வாயை நான் அடைக்க நேர்ந்தது! வடமொழிச் சொற்களை நான் வேண்டுமென்றே ஊக்குவிக்கிறேனாம். "இப்ப இன்னான்ற நீயு? பேஜார் பண்ணாத நைனா. ஒய்ங்குமொறயா ஒரு தபா ஸொன்னா பிரியலய்?" என்று இதே 'தமிழோவிய'த்தில் என் 'கலக்கல் கபாலி' சென்னைத் தமிழ் நகைச்சுவைக் கட்டுரைகள் தொடராக வெளிவந்தன. என்னுடைய பில் கேட்ஸ் 'கானா'வை குருஜி சுஜாதாவே பாராட்டி எழுதினார்.

என்னைப் பொறுத்தவரை, எழுதும்போது எந்த வார்த்தையை உபயோகித்தால் நாம் சொல்லவந்த கருத்து வாசகனை முழுவதுமாகச் சென்றடையும் என்பதுதான் எனக்கு முக்கியம். சில சமயங்களில் சிரிப்புக்காகவோ, இன்னும் செம்மையாகச் சொல்வதற்காகவோ பிறமொழிக் கலப்புள்ள, ஆனால் நடைமுறையில், புழக்கத்தில் உள்ள வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் உண்டு. 

நாம் மிக மிக சுத்தத் தமிழில், தொல்காப்பிய ரேஞ்சில்தான் எழுதுகிறோமா, மறந்தும் வேற்றுமொழிக் கலப்புள்ள வார்த்தைகளை உபயோகிக்காமல்தான் இருக்கிறோமா என்றெல்லாம் ஒவ்வொரு வார்த்தையாகச் சரிபார்த்துக் கொண்டிருந்தால் எழுதவந்த விஷயமே மறந்து போய்விடும். அப்படியே எழுதினாலும், அந்த ஹைதர் கால நடையைப் பார்த்து வாசகன் அவசர அவசரமாக ஓடியே போயிருப்பான். 

எத்தனை பேரால் இன்றைக்கு மு. வரதராசனாரையும் திரு.வி.கவையும் படித்துப் புரிந்துகொள்ள முடியும்? 

'யாயும் ஞாயும் யாயாகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்' கூட வைரமுத்துவும் ரஹ்மானும் சேர்ந்து 'இருவ'ரும் சொன்னாலும் இன்னமும் சரியாகப் பிடிகொடுக்கவில்லை.

"பூ இடைப்படினும் ஆண்டு கழிந்தன்ன நீருறை மகன்றிற் புணர்ச்சி போல…." படிக்க சூப்பராய்த்தான் இருக்கிறது. ஆனால் பக்கத்திலே ஒரு பாப்பையா வேண்டுமெ பொருள் சொல்ல?

பஸ் ஸ்டாண்டில் ஒரு தமிழ்ப் பண்டிதர் அங்கே நின்ற ஒரு ஆளைக் கேட்டாராம் "அரசு குளிர்பதன கனரகதாழ்தள விரைவுவண்டிப் பேருந்து சென்றாயிற்றா?"

"தெரியலீங்களே, ஆனா எக்ஸ்பிரஸ் வண்டி பூட்டுது!" என்றானாம் அவன்!

ooOoo

எழுத்தின் முழுமுதற்காரணமே exchange of thought தான்!

சன் டீவி தமிழாகி எத்தனையோ வருஷமாகி விட்டது!

ஆனால், இப்போது என்னடாவென்றால் பெயர்ச்சொற்களையெல்லாம் கூட தமிழ்ப்'படுத்த' ஒரு திருக்கூட்டமே கிளம்பி இருக்கிறது.

'ப்ரௌசருக்கு'  உலாவி , 'சாஃப்ட்வேரு'க்கு மென்பொருள் என்று ஆளாளுக்கும் 'முழிபெயர்க்க' ஆரம்பித்த அபத்த ஆறு இப்போது கட்டற்று ஓடுகிறது.  Open Source Software கட்டற்ற திறமூல வணிகமயமற்ற நிரலியாம்.

பிராண்ட் நேம்ஸையும் இவர்கள் விட்டுவைப்பதாயில்லை!

Facebook முக நூலாம், Firefox நெருப்பு நரியாம்,

'buzz' – முரல்,  'tweet' – கீச்சு,  'நியூஜெர்சி'க்கு புதுயேர்சி என்றெல்லாம் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள் இந்த ஆர்வலர்கள்.

கிங்பிஷர் – மரங்கொத்தியா? அரசமீனவனா? என்று பட்டிமன்றமே நடக்கிறது. 

மைக்ரோசாஃப்டுக்கு சின்னஞ்சிறுமென்பொருளாம். வேலை கிடைக்குமா அப்படியெல்லாம் அங்கேபோய் அப்படிப் பிதற்றினால்!

Kentucky Fried Chicken கெண்டகி வறுத்த கோழியகம் என்று படித்தேன், அப்படியென்றால் McDonalds, Coca Cola, Fanta Orange, Sprite ?!

'ராமசாமியை' தமிழ்ப்படுத்துகிறேன் என்று ஆரம்பித்து "என்னைப்பார்த்தவில்லோன்' என்று சொல்வது எப்படி சிரிப்பூட்டுகிறதோ, அப்படித்தான் இருக்கிறது இது போன்ற பல உதாரணங்கள்:

யோவ், என்னய்யா இப்படி படுத்தறீங்க!

'கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தே முன் தோன்றி மூத்த மொழி'யெல்லாம் சரிதாங்ணா! யாராச்சும் அதெல்லாம் இப்ப இல்லேன்றாங்களா? மொதல்ல நாம பேசறதும் எழுதறதும் அடுத்த 

ஆளுக்குப் 'பிரியணும்'னு நெனக்கறியளா இல்லியா?!

இல்லாட்டி விடுங்க. என்னைத் திட்ட இருக்கவே இருக்கிறது 'ஆரிய மாயை', 'பார்ப்பன சூழ்ச்சி' இன்னபிற அடாவடி நான்சென்ஸ்!

தமிழை விட்டுவிடுங்கள், பாவம், அது பிழைத்துப் போகட்டும் !

தொடர்புடைய பக்கங்கள்

கூகுள் ஆங்கிலம் – தமிழ் 

அகராதி

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

10 thoughts on “பாவம், தமிழ் பிழைத்துப் போகட்டும்

 • November 25, 2010 at 11:39 am
  Permalink

  அன்புள்ள மயூரேசன்,

  சற்றே தவறாகப் புரிந்துகொண்டீர்கள் என நினைக்கிறேன். தமிழரிடம் தமிழ் பேசுவதைப் பற்றிய புதிய அழகிய தமிழ்ச்சொற்கள் வருவதிலோ எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை. அமெரிக்காவிலே இருந்தாலும் என் குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிப்பதை, தமிழில் பேச சொல்லித்தருவதை தலையாய கடமையாகச் செய்து முடித்திருக்கிறேன்.

  மற்றபடி பெயர்ச்சொற்களை தமிழ்ப்படுத்துதலிலோ, இன, மொழி உணர்வுகளைத் தூண்டிவிட்டு லாபம் பார்த்து அரசியல் செய்வதிலோ எனக்கு உடன்பாடு இல்லை.

  அன்புடன்,

  லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

  Reply
  • January 31, 2011 at 5:25 pm
   Permalink

   \\தமிழரிடம் தமிழ் பேசுவதைப் பற்றிய புதிய அழகிய தமிழ்ச்சொற்கள் வருவதிலோ எனக்கு எந்தவிதமான வெறுப்பும் இல்லை\\
   இதுக்குத்தான் சண்டைப்பிடிக்க இருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.

   கட்டுரையின் அடிநாதம் அரசியலாக்குவதையும் அதீத ஆர்வக்கோளாரு அபதத்தையும் அலச ஆரம்பித்து கொஞ்சம் தடம்மாறிவிட்டீர்கள் போல். (உ.ம்; கொடுந்தமிழ் தமிழாசிரியர், மொழிவாரி மாகாண அரசியல் போல் மொழிவாரியா பிரிக்கலைன்னா இன்னும் என்னவெல்லாம் ஆயிருக்குமோ? )

   Reply
 • November 25, 2010 at 10:45 am
  Permalink

  உங்களை இந்த விவாதத்தில் டுவிட்டரில்(கீச்சில் அல்ல) ஆதரித்தேன் என்பதை முதலில் பதிவு செய்து விட்டு தொடர்கிறேன்.

  //ப்ரௌசருக்கு’ உலாவி , ‘சாஃப்ட்வேரு’க்கு மென்பொருள் என்று ஆளாளுக்கும் ‘முழிபெயர்க்க’ ஆரம்பித்த அபத்த ஆறு இப்போது கட்டற்று ஓடுகிறது//

  facebook and browser are same? மென்பொருள் –> அருமையான வார்த்தை. தமிழில் என் பெயரை எழுதும் பொழுது, பக்கத்தில் செய்யும் வேலையை எழுத நேர்ந்தால் பெருமையாய் “மென்பொருள் வல்லுநர்’ என்றே எழுதுகிறேன். “சாப்ட்வேர் இன்ஜினியர்” என்பதை விட அது எவ்ளோ நல்லா இருக்கு.

  நீங்கள் விவாதத்தை விட்டு வெகு தொலைவில் சென்று விட்டதை தோன்றியது. மன்னிக்கவும். கட்டுரை பல இடங்களில் மொத்தமாய் ஒரு தலைபட்ச்சமாய் இருக்கிறது.

  புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்,
  செந்தில் நாதன்

  Reply
 • November 25, 2010 at 5:05 am
  Permalink

  பிராண்ட் பெயர்களைத் நேரடியாகத் தமிழ் மயப்படுத்துவது பிழை. உதாரணம் முகநூல் மற்றும் கீற்று போன்றவை. அதற்காக திறந்த மூலம் மென்பொருள், கணனி போன்ற அடிப்படைச் சொற்களைத் தமிழில் எழுதாவிட்டால் எதிர்காலத்தில் தமிழ் மொழி தமிங்கலம் ஆகும்.

  //’ப்ரௌசருக்கு’ உலாவி , ‘சாஃப்ட்வேரு’க்கு மென்பொருள் என்று ஆளாளுக்கும் ‘முழிபெயர்க்க’ ஆரம்பித்த அபத்த ஆறு இப்போது கட்டற்று ஓடுகிறது. Open Source Software கட்டற்ற திறமூல வணிகமயமற்ற நிரலியாம்.//

  மிகச் சிறப்பாக ஆரம்பித்த கட்டுரை கடைசில் மிகவும் மோசமாக முடிந்தது கண்டு மனம் நொந்தேன். தமிழைத் தமிழாய் தமிழரிடம் பேச நினைப்பதொன்றும் தப்பில்லை. விருப்பமிட்டால் ஒதுங்கிவிடலாம். அதற்காக உழைப்பவர்களைக் கேலி பேச வேண்டாம்.

  மா.சிவகுமாரின் சிறப்பான பதில் கண்டு மகிழ்ந்தேன்.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : November 24, 2010 @ 9:01 pm