ஈசன்
மர்மமான முறையில் நிகழும் மரணங்கள்.. அதன் பிண்ணனியை நூல்பிடித்து சென்றடையும் நேர்மையான போலீஸ்கார். இருவரும் இணையும் புள்ளியில் "பச்சை கிளிகள் தோளோடு" எனத் துவங்கும் நாயகனின் சந்தோச வாழ்க்கை சொடக்கு போடுவதற்குள் சோகமாக மாறிப்போவதும்.. ( இந்த இடத்தில் நாயகனின் தங்கையை கற்பழித்துவிடுவார்கள் அல்லது குடும்பத்தையே கொன்றுவிடுவார்கள்) ஃபிளாஷ்பேக் முடிய முக்கிய வில்லன்களை முக்கி முக்கி கொல்லும் நாயகன். கிளைமாக்ஸில் அவ்வளவு சிரமத்தை தாண்டி கண்டுபிடித்த குற்றவாளியை , பொசுக்கென "நீங்க போங்க நீங்க ஜெயிலுக்கு போய்ட்டா அவங்களுக்கு பயம் போயிடும்" என தர்க்கம் பேசுகிற போலீஸுமாக ஹீரோ தன் காதலியுடன் ஆடிப்பாட படம் சுபமாகும். இந்த ஃபார்முலா கதையில் நடிக்காத ஆளில்லை. இயக்காத பேரில்லை. இதே கதையை விதவிதமாக எடுப்பதில் வல்லவர் ஷங்கர்.
எம்.சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தை முதல் நாள் சாந்தி தியேட்டரில் பார்த்தது இப்போதும் நினைவில் இருக்கிறது. படம் முடிந்த பிறகு.. இந்தப்படத்திற்கு விமர்சனம் எழுதுமளவிற்கு எனக்கு கொஞ்சம் கூட தகுதியில்லை என நினைத்துக்கொண்டேன். அதே சசிக்குமார், சாந்தி தியேட்டர் , முதல்நாள் காட்சி , கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம் டீம்! இம்முறை "ஈசன்". படம் முடிந்தபிறகு "பாவம் சசிகுமார்" என்று நினைத்துக்கொள்வதை தவிர்த்து வேறேதும் எண்ணமே எழவில்லை. இவர்தான் சுப்ரமணியபுரம் படத்தை இயக்கினாரா என்கிற எண்ணமும் இலவச இணைப்பாக…
சப்பிப்போட்ட மாங்கொட்டை கதையை தேர்ந்தெடுத்தது தப்பேயில்லை.. தமிழின் சிறந்த இயக்குனராக அறியப்படும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட ரமணா எடுத்திருக்கிறார். இப்படிப்பட்ட பவர்ஃபுல் கதைக்கு ஏற்ற வலுவான திரைக்கதையை உருவாக்கியிருக்க வேண்டாமா..? மூளையை சில்லிட வைக்கிற காட்சிகளை அமைத்திருக்க வேண்டாமா?
இதே கதையை வைத்துக்கொண்டு எத்தனை வெற்றிப்படங்களை எடுத்திருக்கிறார்கள் நம் இயக்குனர்கள். இன்றைக்கும் இந்த கதையை வைத்துக்கொண்டு கோடம்பாக்கத்தில் தாடியோடலையும் எந்த இயக்குனரும் சூப்பர்ஹிட் படமொன்றை கொடுத்துவிட இயலும். ஈசன் படத்தின் முதல் பாதி முழுக்க பாத்திரங்களை ஒவ்வொன்றாக விளக்கி முடிப்பதிலேயே கழிந்து விடுகிறது. அதிலும் பப் காட்சிகளும் பாடல்களும் "ஹே ட்யூட்" பீட்டர்களுமாக தமிழர்களுக்கு கொஞ்சமும் அறிமுகமில்லாத பிடிக்காத புதிய உலகத்தை காட்டுகிறார். இது படம் பார்ப்பவருக்கு எரிச்சலூட்டாமல் இருந்தால் அதை விட ஆச்சர்யம் எதுவுமேயில்லை. இரண்டாம் பாதியில் ஏதோ சொல்லப்போகிறார் என்கிற ஆர்வத்துடன் அதற்குமேலும் அமர்ந்திருப்பவர்களை வன்கொடுமை செய்யத்தொடங்கி விடுகின்றனர். அதிலும் சில சித்ரவதை காட்சிகள் படமாக்கப்பட்டவிதம் அருவருப்பையே உண்டாக்குகிறது.
சமுத்திரகனி கம்பீரமாக இருக்கிறார். சில இடங்களில் நன்றாகவே நடிக்கவும் செய்திருக்கிறார். மற்றபடி படத்தில் அனைவருக்குமே நடிப்பு சுத்தமாக வரலேது. பல இடங்களில் மற்ற பாத்திரங்கள் தட்டுமுட்டு சாமான்களை போல செய்வதறியாது நிற்பது காமெடி. இசையும் எடிட்டிங்கும் கேமராவும்.. என எல்லாமே சொதப்பலாக இறுதியில் நமக்கு தலைவலி மிச்சமாக கிடைக்கிறது.. படத்தில் பாராட்டும் படி எதுவுமேயில்லை என்பதும் வருத்தமான உண்மை.
மற்றபடி தவிர்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் ஈசனுக்கு நிச்சயமாக இடமுண்டு.
ஈசன் திரைப்படத்தின் கருத்து என்னவாக இருக்கலாம் என்றால், கல்லூரிக்குச் செல்லும் இளம்பெண்கள் நாகரிகம் என்ற போர்வைக்குள் நடக்கும் கூத்துக்களில் கலந்து கொள்வதும் தங்கள் கற்புகளை இழப்பதும் அதன் மூலம் பாலியல் சித்ரவதைக்குள் ஆளாவதும் தவிர்க்கப்படவும் இதைப் பார்க்கும் பெண்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும் வழி வகுக்கும். காட்சிப்படுத்திய முறைகள் இளம்பெண்களுக்கு அறிவுறுத்த என்று எடுத்துக் கொள்ளலாம்.
((தமிழின் சிறந்த இயக்குனராக அறியப்படும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட ரமணா எடுத்திருக்கிறார்.))
நீங்க ரமணா படத்த பாத்தீங்களாண்ணா? யாராச்சும் திரைக்கத படிச்ச புள்ளகிட்ட கேளுங்ண்ணா, சொல்வாங்க!