கீ-போர்டைப் பார்க்காதே

கீ-போர்டைப் பார்க்காமல் எப்படி ஏ.ஆர்.ரஹ்மான் மாதிரி வாசிப்பது என்று அங்கலாய்க்க வேண்டாம். நான் சொல்வது கணினியின் கீ போர்டை.

ரஹ்மான் கூட தன் பத்து விரல்களையும் பயன்படுத்திதான் உலகை மயக்குகிறார். ஆனால் நம்ம கணினிக்காரர்கள், இரு ஆள்காட்டி விரல்களால் கீ-போர்டை பாக்குச்சட்டியைப் போலக் குத்திக்குத்தி உலகையே ஆள நினைக்கிறார்கள்.

இக்கால மென்பொருள் இன்ஜினியர்கள் கணினித்திரையையும், கீ-போர்டையும் மாறி மாறி பார்த்துதான் ப்ரோக்ராம் எழுதுகிறார்கள். காரணம் டைப்பிங் கற்காததே! 

எச்சரிக்கை!  இது இப்படியே காலை மாலை ராத்திரியெனத் தொடர்ந்தால் இவர்களின் கழுத்து, சும்மா இருக்கும்போது கூட தஞ்சாவூர் பொம்மையின் கழுத்தென ஆடிக்கொண்டே இருக்கும். 

நாங்களெல்லாம் பத்தாங் கிளாஸ் முடித்ததுமே டைப்ரைட்டிங் கிளாஸ் சென்று லோயர், ஹையர் இரண்டிலும் தேர்ச்சி பெற்றோம். சற்றே சொரசொரப்பாக, மங்கலாக இருக்கும் டைப்ரைட்டிங் பேப்பரை உருளைபோல் சுற்றி, சைக்கிள் ஹேண்ட்-பாரில் சொருகிக் கொண்டு நகர்வலம் வருவதையே பெருமையாகக் கருதிய காலங்கள் உண்டு.

அந்தப் பயிற்சியால்தான், இன்று ஒரு மணி நேர ப்ரோக்ராம்களை அரைமணியிலேயே கீ-போர்டைப் பார்க்காமலேயே எங்களால் அடித்து நொறுக்க… சாரி… அடித்து முடிக்க முடிகிறது. கீ-போர்டைப் பார்த்துப் பார்த்து அடிப்பதால் நேரம் மட்டும் விரயமாவதில்லை; கடுமையான உடல் உபாதைகளும் ஏற்படும்.

ஒரு பட்டாம்பூச்சிச் சிறகுகளின் அசைவு சங்கிலித் தொடராய் நீண்டு ஒரு பிரளயத்தையே உண்டுபண்ணும் என்று நம் கமலஹாசன் பத்து அவதாரம் எடுத்துச் சொல்லிக் கொடுத்தார் இல்லையா!  அந்தக் கேயாஸ் தியரி மாதிரி இந்தக் கீ-போர்டின் அசைவுகள் சங்கலித் தொடராய் நீண்டு உங்கள் வேலையில், வாழ்க்கையில் ஒரு பிரளயத்தையே உண்டு பண்ணும். அதைப் பட்டியல் இடுகிறேன்.

இன்றைய கணினிக்காரர்கள் எழுத வேண்டிய ப்ரோக்ராம்களை, முதலில் பேப்பரில் எழுதித் திட்டமிடாமல், மனதிற்குள்ளேயே ஒத்திகையிட்டு டைப் அடிக்கத் (வினையைத்) தொடங்குகிறார்கள்.

1. டைப்பிங் தெரியாமல் திரையையும், கீ-போர்டையும் மேலும் கீழும் மாறிமாறிப் பார்க்கும் போது, தொடர்ச்சியான குறுகிய அசைவுகளால் பின் கழுத்துப் பகுதி பெரிதும் பாதிக்கப்படுகிறது. 

2. கழுத்தானது உங்கள் தலைக்கனத்தை(!) தூக்கித்தூக்கி இறக்க வேண்டியிருப்பதால், விரைவிலேயே அது சோர்ந்து போகிறது.  எறும்பு ஊறக் கல்லும் தேயும். உங்கள் கழுத்தில் எதுவும் ஊறவே வேண்டியதில்லை. அப்பகுதியில் இருக்கும் டிஸ்க் போன்ற அமைப்புகள் இப்பவே தேயத் தொடங்கியிருக்கும்.

3. ரத்த ஓட்டமும் பாதிக்கப்பட தலைவலி ஆரம்பமாகும். இவ்வலி கழுத்தைத் தாங்கிப் பிடிக்கும் தோள் பட்டைக்கு பாதரசம் போல் பரவி பின் எல்லாவற்றையும் தாங்கும் முதுகுத் தண்டுவடத்தில் இறங்கி சீக்கிரமே சிலபல கோணங்களில் எதிரொலிக்கத் தொடங்கும்.

4. இதனால் உடலின் நிலைப்பாட்டில் மாற்றங்கள் நிகழ, உடற்பயிற்சிகளும் இல்லாத பட்சத்தில் தசைகள் அப்படி அப்படியே இறுகிவிடும்.  RSI (Repetitive strain injury) போன்றவைகளும் உங்கள் உடலில் வாடகையின்றி குடிபுகும்.

5. டைப்பிங் தெரியாததால், நிறைய எழுத்துப் பிழைகள் ஏற்படும் (ஒரு நாளைக்கு Back space கீயை மட்டும் எத்தனை முறை அடிக்கிறீர்கள்? சற்று கவனித்துதான் பாருங்களேன்!). திரும்பத் திரும்ப ஏற்படும் பிழைகளை சரி செய்யும் செயல்களும், உடல் வலிகளும் உங்கள் மனத்திலிருக்கும் ப்ரோக்ராமிங் லாஜிக்கிலிருந்து கவனத்தை சிதறடிக்கும். விளைவு! லாஜிக் பிழைகள். இவற்றை நேரம் கடந்தே உணர முடியும். இவற்றை சரி செய்ய மீண்டும் பிரத்யேகமாக பல மணி நேரத்தை ஒதுக்க வேண்டியிருக்கும். 

6. இதனால், ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய ப்ரோக்கிராம்கள் ஒரு முழு நாள் கடந்தும் முடிக்க முடியாமல் இழுபடுவது சர்வ சாதாரணமாக நடக்கிறது.

7. ஒரு ப்ராஜெக்டிற்கு இத்தனை மணி நேரம் தேவை எனக் கணக்கிட்டு, பில் கட்டும் கிளையண்ட், தன் நாற் படைகளையும் திரட்டிக்கொண்டு உங்கள் ப்ராஜெக்ட் மேனேஜரிடம் போருக்கு வருவார்.

8. மேனேஜர் உங்கள் மீது ப்ரஷர் போட, உங்களுக்கு டென்ஷன், மெண்டல் டிப்ரஸன், ரத்தக் கொதிப்பு எல்லாம் பம்பர் பரிசுகளாகக் கிடைக்கும்.

9. எல்லாவற்றையும் சரி செய்யப் போய், நேரத்தில் உணவை மறக்க வேண்டியிருக்கும். காலத்தில் உறக்கத்தை தொலைக்க வேண்டியிக்கும். குளிப்பதற்கு மட்டும் வீட்டிற்குப் போய்வர வேண்டியிருக்கும். உடல்நலத்தை ஒட்டு மொத்தமாக கம்பெனி கொடுத்த மெடிக்கல் பாலிஸிகளில் அடகு வைக்க வேண்டியிருக்கும் (இதற்குத்தான் வேலையோடு பாலிஸி ஃப்ரீ என்ற பாலிஸியோ?!).

10. வீட்டிலிருக்கும் நேரம் தேய்பிறையாவதால், வீட்டுக் கடமைகள் தேக்கமடையும். வீட்டுவாசிகள் தங்கள் எரிச்சலைக் கொட்ட, அங்கு குருஷேத்திரமே துவங்கும். 

பணியின் கடுமையால் அதிக நேரம் அலுவலகத்தில் இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் டைப்பிங் தெரியாத காரணத்தினால் இந்த அளவிற்கு கேயாஸ் தியரியை வளரவிட வேண்டுமா?

தினமும் ஒரு அரைமணித் துளியை ஒதுக்கி டைப்பிங் பழகினாலே, இருபது நாட்களுக்குள் விரல்கள் நர்த்தனமாடத் தொடங்கும். 

அதற்குப்பின் கீ-போர்ட் கேயாஸ் தியரி பொய்த்துப் போக, உங்கள் வாழ்வில் நந்தவனத்தின் மணமே வீசும்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : December 28, 2010 @ 9:17 pm