விதியே கதை எழுது – 1

பகுதி – 1

சாலையில் செல்லும் இளம்பெண்கள் எல்லாம் ஒருநிமிஷம் தடுமாறி நிற்கிறார்கள்  என்றால் அந்த இடத்தில் சாரங்கன்  நடந்து போய்க்கொண்டிருக்கிறான் என்று அர்த்தம்! ஊட்டிகேரட் நிறத்தில் ,ஆறடி-அரை அங்குல உயரத்தில்,  கொஞ்சம் சூர்யா கொஞ்சம் ப்ருத்விராஜ் என்ற கலவையிலான முகத்தில் அனைவரையும் கவரும் புன்னகை கொண்ட சாரங்கன் படித்த (எம்பி ஏ) படிப்புக்கு சிறிதும் அலட்டிக் கொள்ளாத      அடக்கம், எளிமை!

முதல் அத்தியாயத்தின் முதல்பாராவிலேயே சாரங்கனுக்கு முக்கியத்துவம்  கொடுக்கிறபோதே உங்களுக்குத் தெரிந்திருக்கவேண்டுமே?

யெஸ் யு ஆர் கரெக்ட்!

சாரங்கன் தான் இந்தக்கதையின் கதாநாயகன்!

அவனப்பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளுங்கள்..

பெயர்..சாரங்கன் என்னும் சாரங்.

தொழில்..  பெங்களூரில் ராகவ் எண்ட்டர்ப்ரைசஸ் என்றபிரபல கம்பெனியில் தலமைப்பொறுப்பாளர்.

விருப்பம்…உபந்நியாசங்கள் ஆன்மீக சொற்பொழிவுகள் கேட்பது.

கொள்கை..பெண்மையைமதிப்பது அவர்கள் சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பது.

குணங்கள்-வாய்மை நேர்மை பொறுமை,

வயது..மார்ச் பத்தொன்பதாம் தேதிக்கு இருபத்தி ஏழு

நண்பர்கள் ,.. அனைவரும்.

கல்யாணம்… அண்மையில் ஆனது மனைவிபெயர் ராதிகா.

மறந்தது..  காதலித்த மாலதியை

இனி கதைக்குள் செல்லலாம்.

ராகவ் எண்ட்டர்ப்ரைசஸில் அனைவரது அன்புக்கும் நட்புக்கும் பாத்திரமான சாரங்கன், ராகினியை அதிகமாய்க்கவர்ந்தான். அவன்மீது அவளுக்கு ஒருகண் அல்ல இரண்டுகண். "வாட் எ நைஸ் கை ! இவனை மூணுமாசம்முன்னாடி நான் பார்த்திருக்கக்கூடாதா? வளைச்சிப்பிடிச்சிப்போட்டிருப்பேனே என் வலைக்குள்? யாரோ ராதிகாவாமே அவளுக்கு அடிச்சிருக்கு ஜாக்பாட்!" என்று ராதிகாவைப்பார்க்காமலேயே அவள்மீது பொறாமைப்பட்டாள். ராகினி அந்தக்கம்பெனியில் முக்கியபொறுப்பானபதவியில் இருப்பவள். ஷ்ரேயாவின் உடல்வாகில்,ஜோதிகாவின் துறுதுறுப்பான முகவெட்டில் கம்பெனியில் பல ஆண்களின் காதல்தேவதை.

சாரங்கன் சுபாவத்திலேயே சாது என்றாலும் சின்ன வயதில் தாய் தந்தையை விபத்தில் இழந்ததும் அவனை விட பத்துவயது மூத்தவளான அக்கா சுமித்ராவின் வீட்டில் தான் வளர்ந்தான்.

சுமித்ராவின் கணவன் சீனிவாசன் ரேஸ், சீட்டு, போதைப்பொருட்கள் ,குடி என சகல கெட்டப்பழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தான் .சுமித்ராவை அடித்துத்துன்புறுத்துவான் .

ஆனால் சாரங்கனிடம் மட்டும் வெறுப்பைக்காட்டமாட்டான் .தனக்குக்குழந்தை இல்லாததால்  பிற்காலத்தில் சாரங்கன் தனக்கு நன்கு சம்பாதித்து உதவுவான் என்று அவனிடம் குழைவான்.  ஆனாலும் சுமித்ராவை  வார்த்தைகளாலும் தன் செய்கைகளாலும் சித்திரவதை செய்வான். சாடிஸ்ட்.

சாரங்கன் நன்குபடித்து டில்லியில் வேலைகிடைத்துபோகும்போது அக்காவையும் அவள்கணவனையும் தன்னோடுவரும்படி அழைத்தான்.

"டில்லி பாஷை தெரியாத ஊருப்பா.. எனக்கு இங்க வாய் நிறைய வெத்திலபோட்டுக்கிட்டு சீட்டுவிளாடிட்டு ஊரை ஜாலியா சுத்தணும்  நமக்கு  அந்த ஊரு சரிப்படாது  உங்கக்காவை வேணாகூட்டிப்போ.. அவளுக்குத்தான் தஞ்சாவூர்பக்கத்து இந்தகிராமம்  போரடிச்சிருக்கும்"என்றான் சீனிவாசன்.

ஆனால் சுமித்ரா தம்பியோடு டில்லிபோகவில்லை.சினிவாச்னை ஊரில் தனியே விட்டால் இன்னும் கெட்டப்பழக்கங்களில் மூழ்கிவிடுவான் என்று அவள் தங்கிவிட்டாள்.

"சாரங்கா! மாசாமாசம் உன்சம்பளப்பணத்துல பாதி இங்கஅனுப்பணும் தெரிஞ்சுதா?'

'அனுப்பறேன் மாமா..நீங்கமட்டும் அக்காவைஅடிக்காம கொள்ளாம அன்பா வச்சிக்கிட்டால் ,முழுசம்பளமுமே அனுப்பிடறேன்' என்று சொல்ல தைரியமின்றி தலையைமட்டும் ஆட்டினான்.

அக்காவைப்பிரியும்போது கண்ணீர்முட்டியது.

சுமித்ரா அவனின் உச்சந்தலையைக் கோதிவிட்டு,"போய்வா தம்பீ, நல்லாஇருப்பா…கல்யாணம் கட்டிக்கிட்டா உன் மனைவியை  அன்பா அனுசரணையா வச்சிக்கோப்பா.. உன் மாமாமாதிரி சந்தேகப்படறதும் வார்த்தைகளிலும் தீக்குச்சியிலும் சுடறதுகூடாதுப்பா"என்று சொல்லி விசும்பினாள்.

"அக்கா !என் குணம் மென்மைன்னு  உனக்குத்தெரியாதா? அதுசரி, நீ இவரோட 20வருஷம் வாழ்ந்து என்னபலன் கண்டேக்கா?உதறித்தள்ளிட்டு என் கூட டில்லி வந்துடு ..உன்னை தங்கமா வச்சி நான் காப்பத்தறேன்.."

"எப்படி சாரங்கா விடறது? நம்ம அம்மா அப்பா நம்மை அப்படி வளர்க்கலயேப்பா..?அதிகம் படிக்கலேன்னாலும் அன்பினால் ஆகாதது எதுவுமில்ல பொறுத்தார்பூமி ஆள்வார்னு பெரியவங்க சொல்லி கேட்டு இருக்கேனேப்பா? என்னிக்காவது நமக்குவிடியும், ஒளிபிறக்கும்னு நம்பறேன் …நீ போய்வாதம்பி!"

டில்லி சென்ற சாரங்கன் தவறாமல் மாதாமாதம் பணம் அனுப்பினான். லீவில்  ஊருக்குவரும் போதெல்லாம்  நிறைய பொருட்களுடன் வருவான்.

அடுத்தமுறை அவன்வரும்பொழுது அவைஎல்லாம் காணாமல்  போயிருக்கும்.சுமிதரா வேதனையுடன் சொல்வாள் ,: எல்லாம் சீட்டாட்டத்துக்கும் குடிக்குமே பணமா மாறிப் போயிடுதுப்பா.. என்கிட்ட சொல்லமலேயே.."

"ஏன் அக்கா இதை நீ தட்டிக்கேக்ககூடாதா?"

"கேட்டதுக்குக் கிடச்ச பரிசைப்பாருப்பா.."

சுமித்ரா கைகளின் பின்புறத்தையும் பாதங்களையும் காண்பித்தபோது சாரங்கன் காண சகியாமல் கண்களைமூடிக்கொண்டான். ஊருக்குப்புறப்படும்போது சீனிவாசன் ,"சாரங்கா உனக்கு திருவாரூர்ல ஒருபொண்ணு பாத்ருக்கேன்.. டிகிரிபடிச்சிருக்காம்..பாக்க நல்லாவே இருக்கு..உனக்கு சரியான ஜோடிதான் உயரத்திலும் நெறத்திலும்" என்றான்.

"தம்பியும் ஒரு வாட்டி  நேர்ல பாத்துசொல்லவேணாமாங்க?"

"என்னடி அவன்பாக்கணும் ?நாம் வளர்த்தபுள்ளை 'தாலிகட்றா'ன்னா கட்றான்.. பாக்கணுமாமே? ஏன் உனக்குபாக்கணுமா?என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு, நாயே.. ?அடி பின்னிடுவேன்.." மேலும் கெட்டவார்த்தைகளோடு  பெல்ட்டைக் கழற்றினான்.

"மாமா நீங்க சொல்ற பொண்ணையெ கட்டிக்கறேன் .அடுத்தவாட்டி ஊருவரப்போ நிச்சயம் செய்துடுங்க." என்று கலங்கிய கண்களுடன் அக்காவைப்  பார்த்தபடியே சாரங்கன் கிளம்பினான்.

சீனிவாசனுக்கு பயந்தே அவன் டில்லிஅலுவலகத்தில் தன்னை தீவிரமாய்காதலித்த மாலதியை நிராகரிக்கவேண்டிவந்தது.  ஆனால் மாலதி விடவில்லை. மாலதீ?

அவளைப்பற்றி…

(அடுத்த அத்தியாயத்தில்)

தொடர்புடைய படைப்புகள் :

One thought on “விதியே கதை எழுது – 1

  • January 26, 2011 at 12:13 am
    Permalink

    சுவாரசியமான துவக்கம்…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 24, 2011 @ 10:54 pm