வரல் ஆற்றின் திட்டுகள்

7 ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணன் அட்சரம் தமிழ்பதிவில் எழுதிய கட்டுரை, வாசகர்களுக்காக மறுபதிவு.


சரித்திரம் எப்போதும் யார் நம்மை ஆட்சிசெய்தார்கள். அவர்களின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதைப் பற்றியதாகவே இருக்கிறது. ஆனால் வாழ்வில் ஒவ்வொரு பொருளுக்கும் சரித்திரமிருக்கிறது. அக்பர், பாபருக்கு மட்டுமல்ல. ஒரு தக்காளிக்குக் கூட கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று மூன்று காலமும் தனித்துவமான சரித்திரமுமிருக்கின்றதே.

சரித்திரம் கல்வெட்டிலும் காகிதங்களிலும் எழுதப்படுவதல்ல.அது எப்போதும் மனித மனதில் தான் எழுதப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் ஒரு சரித்திர ஆவணம் தான் . யாவர் மனதிலும் காலம் தன் வாலைத் தானே கவ்விக்கொண்டு படுத்திருக்கும் பாம்பைப் போல விநோதமாகச் சுருண்டு கிடக்கிறது. சரித்திரச்சான்றுகளைக் கடத்திச்செல்வதில் மனித மனம் தான் முன்னோடியாக உள்ளது.

ஒரு முறை தாஜ்மகாலை யமுனையின் அருகாமை கிராமத்திலிருந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது தோன்றியது. தாஜ்மகால் இப்போதுள்ள இடம் ஒரு காலத்தில் ஆற்றோரத்தில் புல் முளைத்துக் கிடந்திருக்ககூடும், அதில் ஆடுகளை மேயவிட்டபடியே யமுனையின் சலசலப்பைக் கேட்டுக்கொண்டிருந்த ஆட்டு இடையர்கள் இந்த இடத்தில் உலக அதிசயம் உருவாகப்போவதை அறிந்திருப்பார்களா ? ஒருவேளை தாஜ்மகாலே கட்டி முடிக்க பட்டிருந்த போதும் கூட தாங்கள் ஆடுமேய்த்த இடம்தானே என்று அசட்டையாகத் தானே இருந்திருப்பார்கள், இல்லையா?

சரித்திரத்தில் எப்போதும் சலனமற்ற ஒரு இயக்கம் இருந்து கொண்டேயிருக்கிறது. சரித்திரமான சம்பவங்கள் யாவும் ஒரு காலத்தின் அன்றாட நிகழ்ச்சிகள் தானே . மைக்கேல் ஆஞ்சலோ தனது கலைப்பற்றி சொல்லும் போது தான் கல்லில் ஒளிந்திருக்கும் சிற்பத்தை வெளியே கொண்டுவருகிறேன். நான் செய்வதெல்லாம் சிற்பத்தை சுற்றியுள்ள கல்லை வெட்டி அப்புறப்படுத்துவது மட்டும் தான் என்பார். சரித்திரம் பயில்பவனும் கல்லில் ஒளிந்திருக்கும் சிற்பத்தை போல தான் சரித்திர உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டியிருக்கிறது.

சரித்திரம் மனதில் எழுதப்படும் போது அதன் தோற்றம் முற்றிலும் உருமாறிவிடுகிறது. ஆங்கிலேயர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகளில் பாதி இன்று இடிக்கபட்டு சிதைவுற்றுக் கிடக்கின்றது. ஆனால் அவர்கள் ஏற்படுத்திய வலி மனதில் அழியாத சரித்திரமாகப் பதிந்துள்ளது. பெரிய கோட்டைகள், அரண்மனைகள், மண்டபங்களை விட எனக்கு சரித்திரம் படிந்துள்ள சில ரயில்நிலையங்கள், மைதானங்கள். தெருக்கள், கிணறுகள். வீடுகள்,மீது தான் ஈர்ப்பாகயிருக்கிறது.

ஒரு முறை விருதுநகர் ரயில் நிலையத்தின் வெளியே ஒரு கல்வெட்டைப் பார்த்தேன். மகாத்மா காந்தி தமிழகத்தில் வருகை தந்த போது, விருதுநகருக்கு வந்ததை நினைவு கூறும்வகையில் கல்வெட்டை பதித்திருக்கிறார்கள். கல்வெட்டு காந்தியின் வருகைக்குப் பிறகு நடப்பட்டிருக்ககூடும் போலிருந்தது. கல்வெட்டில் காந்தி வந்த அன்று நல்ல மழை பெய்தது. கொட்டும் மழையில் காந்திக்கு வரவேற்புக் கொடுக்கபட்டது என்று தனியாக ஒரு வாசகம் அடிக்கபட்டிருந்தது ஆச்சரியமாகயிருந்தது.

கொட்டும் மழையில் காந்தி அந்த நகருக்கு வந்திருக்கிறார். இன்னொன்று மழை பெய்வது அவ்வளவு முக்கியச் சம்பவமாக இருந்திருக்கிறது. காந்தி கடந்த போன பல ஊர்களிலும் இது போன்ற கல்வெட்டுகள் இருக்கின்றன. அவை தொகுக்கபட்டு புத்தமாக வந்தால் சுவாரஸ்யமான நிறைய விஷயங்கள் வெளிப்படக்கூடும்

சில மாதங்களுக்கு முன்பாக ஒரு நாள் திருநெல்வேலியிருந்து பாசஸ்சர் ரயிலில் மணியாச்சிக்கு போய் இறங்கினேன். அந்த ரயில் நிலையம் எனக்கு மிகவும் விருப்பமானது. பலநாட்கள் அங்கே சென்றிருக்கிறேன். ரயில் நிலையத்தின் பெஞ்சில் அமர்ந்தபடி மாலைவெயிலைப் பார்த்தபடி தனியே உட்கார்ந்திருந்தேன். திருநெல்வேலிக்கும் கோவில்பட்டிக்கும் இடையில் உள்ள அழகான சிறிய ரயில்நிலையம் மணியாச்சி. இங்கு தான் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றான். மிக முக்கியமான சரித்திரசம்பவத்தின் சாட்சியது. அலுமினிய நிற மேகங்கள் திட்டுதிட்டாக படிந்து கிடக்க காற்றில் அமிழ்ந்துகிடந்தது ரயில்நிலையம்.

அக் காலத்தில் ஆஷ் கொலைச்சம்பவம் இங்கிலாந்தையே உலுக்கியது. மேடம் காமா அதை இந்திய சுதந்திரப்போரின் முதல் வெடிச்சப்தம் என்று குறிப்பிடுகிறார். அப்போது ஆஷ் திருநெல்வேலியின் கலெக்டராகயிருந்தான். அவன் சுதந்திரபோராட்டவீரர்களை அடக்கி ஒடுக்கியதற்காகவும், செங்கோட்டை அக்ரஹாரத்திற்குள் யார் வேண்டுமானாலும் நடந்து போகலாம் என்று சாதிகட்டுபாட்டை அழித்ததற்காவும் என இருவேறு காரணங்களை ஒன்று சேர்த்து அவனைப் பழிவாங்குவதற்காக நீலகண்ட பிரம்மசாரியின் வழிகாட்டுதலில். வாஞ்சிநாதன் மணியாச்சி ரயில் நிலையத்தில் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தானும் செத்துப்போனான். 

அந்த சரித்திரசம்பவம் காரணம் தான் முதன்முதலாக மணியாச்சி ரயில் நிலையத்திற்கு என்னை வரச்செய்திருந்தது. ஆனாலும் அன்றும் இன்றும் அங்கு அமர்ந்தவுடன் சரித்திரத்தின் படகு துடுப்பை அசைக்காமலே நகரத்துவங்குவதை உணர்ந்திருக்கிறேன். மணியாச்சி ரயில் நிலையத்தின் எதிரே விரிந்துகிடக்கிறது யாருமற்ற நிலப்பரப்பு. சிறிய ரயில்நிலையக் கட்டிடம். ஒன்றிரண்டு பயணிகள் மட்டுமே காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆஷ் கொலைச் சம்பவத்தின் உதிரமும் வெடிச்சப்தமும் அங்கே தான் எங்கோ புதைந்திருக்கின்றது. கண் பார்வையில் கடந்த காலத்தின் சுவடேயில்லை. சரித்திரத்தின் சிறிய முணங்கல் சப்தம் கூட கேட்கவில்லை. ஆனால் மனம் தானே அக்காலத்தை நெய்யத் துவங்கியது.

சாவைப்பற்றியறியாமல் கொடைக்கானல் போவதற்காக ஆஷ் திருநெல்வேலியிலிருந்து பாசஞ்சர் ரயிலில் புறப்பட்டு வந்து மணியாச்சி ரயில்நிலையத்தில் காத்திருந்தான். காரணம் அப்போது இலங்கையிலிருந்து கப்பலில் வருபவர்களின் வசதிக்காக போட்மெயில் என்ற ரயில்விடப்பட்டிருந்தது. அது து¡த்துக்குடியிலிருந்து கிளம்பி மதுரைவரை செல்லக்கூடியது. அந்த ரயிலைப் பிடிப்பதற்காக ஆஷ் காத்துக்கொண்டிருந்தான்.

viruthunagarஆஷின் மனைவி ஒரு ஆஸ்த்மா நோயாளி. இங்கிலாந்திலிருந்து வந்த அவளால் திருநெல்வேலியில் தங்கியிருக்க முடியவில்லை. அதனால் வந்த சில நாட்களிலே நோய் முற்றிவிடுகிறது. அதற்காகவே ஆஷ் கொடைக்கானல் புறப்படுகிறான். ஆஷைக் கொல்வதெனத் தீர்மானித்திருந்த வாஞ்சிநாதன் முந்தைய இரவில் ஒரு நண்பனுடன் திருநெல்வேலியில் ஒரு வேசியின் வீட்டில் தங்கி சுகிக்கிறான்.( அவள் இந்த வழக்கில் முக்கிய சாட்சியளித்திருக்கிறாள் ) ஆஷின் கொலை திட்டமிட்டபடியே நடக்கிறது. ஆனால் அதன் பின்விளைவுகள் தான் சரித்திரத்தில் பதிவாகாமலே போய்விட்டது.

இந்தக் கொலைக்குத் திட்டமிட்டுத் தந்த நீலகண்ட பிரம்மச்சாரியை காசியில் போலீஸ் கைது செய்தது. அவர் அப்ரூவர் ஆனார். ஆனால் அவர் செங்கோட்டையில் தங்கியிருந்த நாட்களில் ரகசியமாக அச்சடித்து வைத்திருந்த சுதந்திரப் போராட்ட நோட்டீஸ்களை மஞ்சள் பையில் போட்டு ஒரு பலசரக்குகடை செட்டியாரிடம் கொடுத்து வைத்திருந்தார். ஆஷ் கொலையில் தொடர்புடையவர்களைத் தேடி போலீஸ் விசாரணை செய்யும் போது செட்டியாருக்குச் சந்தேகம் வந்து பையைப் பிரித்துப் பார்த்திருக்கிறார். உள்ளே தடைசெய்யப்பட்ட புத்தகங்கள் நோட்டீஸ். தன்னை எப்படியும் பிடித்துவிடுவார்கள் என்று பயந்த செட்டியார். தனது மனைவி குடும்பத்தை காரைக்குடிக்கு அனுப்பிவிட்டு இரவில் கடையிலே து¡க்குமாட்டித் தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணத்திற்குப் பிறகு போலீஸ் அந்தக் கடையிலிருந்த நீலகண்ட பிரம்மச்சாரியின் பொருட்களைக் கண்டறிந்தது. சுதந்திரப் போராட்டத்தில் இது போல அப்பாவிகள் பலியாவது தொடர்ந்து நடந்திருக்கின்றது. அதைப் பற்றி எவ்விதமான பதிவுமேயில்லை.

இன்னொரு புறம் கொலை செய்யப்பட்ட ஆஷின் மனைவி ஆங்கில அரசாங்கத்திற்கு தனது பிள்ளைகளை வளர்ப்பதற்காக உதவிப்பணம் கேட்டு விண்ணப்பம் செய்கிறாள். அதைக் கிழக்கிந்திய கம்பெனி விசாரணை நடத்தி ஆஷின் அத்தையொருத்தி பணக்காரியாக இருக்கிறாள். அவள் தான் ஆஷை வளர்த்திருக்கிறாள். ஆகவே அவளுக்கு உதவித்தொகை தரமுடியாது என்று மறுத்துவிட்டது. ஆஷின் மனைவி அந்த அத்தையோடு தனக்கு உறவில்லை என்று தெளிவுபடுத்திய பிறகே சொற்ப பணத்தை குழந்தைகளின் உதவித்தொகைக்காக பெறுகிறாள்.அது போலவே வாஞ்சிநாதனின் விதவைமனைவி சுதந்திரத்திற்குப் பிந்திய அரசாங்கத்திடம் உதவித்தொகை கேட்டு அவளுக்கும் மறுக்கபட்டுவிட்டது, பின்னாளில் அது பெரிய சர்சையாகி பலவருடங்களுக்கு பிறகு சிறியதொகை வழங்கபட்டது . ஆனால் இந்த இரண்டு பெண்களும் வாழ்நாள் முழுவதும் நிர்கதியாகத் தானிருந்தார்கள்

வாஞ்சிநாதனோடு கொலை நேரத்தில் கூடயிருந்த மாடசாமி என்பவரை போலீஸ் தேடிப் பிடிக்க முடியவேயில்லை. என்ன ஆனார் என்று தெரியவில்லை. தப்பி ஜெர்மனிக்கு போய்விட்டார் என்ற சந்தேகமிருந்தது, சமீபகாலம் வரை வாழ்ந்திருந்த மாடசாமியின் மனைவி அவர் உயிரோடு இருப்பதாகவே நம்பிவந்தாள். அது போலவே அந்த வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் விசாரணைக்காகச் சென்றவர் வீடு திரும்பவேயில்லை. இன்றுவரை என்ன ஆனார் என்று தெரியவில்லை. அவரைக்காணமல் தேடி அலுத்துப்போய் ஆங்கிலேய அதிகாரிகளிடம் அவரது குடும்பம் புகார் அளித்தும் பலனேயில்லை.

நீலகண்டபிரம்மச்சாரி பிடிபட்டு சிறையில் அடைக்கபட்டு வெளியே வந்தபிறகு மெளனசாமியாராகி . மைசூரில் தனியே ஆசிரம் அமைத்துக்கொண்டு வாழ்ந்து இறந்தும் போனார். வைதிக எதிர்பை முன்வைத்து ஆவேசமாக செயல்பட்ட நீலகண்ட பிரம்மசாரி முடிவில் மிகுந்த ஆசாரவாதியாகி. தன் மரணத்திற்கு பிறகு பதினாறு நாட்கள் என்ன சடங்கு சம்பிரதாயங்கள் செய்யவேண்டும் என்பதை பற்றி கூட விரிவாக உயில் எழுதியவராக இருந்திருக்கிறார்.

காந்தி ஒரு முறை மைசூரில் தங்கியிருந்த போது அருகாமை மலைமீது ஏதேவொரு சாமியார் இருப்பதாக கேள்விபட்டு அவரைச் சந்திந்திருக்கிறார். அவர் தான் நீலகண்ட பிரம்மசாரி என்று அவர் தெரிந்து கொள்ளவேயில்லை. அவரும் தன்னைப் பற்றி சொல்லிக்கொள்ளவேயில்லை. ஆனால் காந்தியின் உதவியாளர் அவர் தான் பிரிட்டீஷ் அரசாங்கத்தின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய நீலகண்ட பிரம்மச்சாரி என்று பிறகு சொன்ன போது காந்தியால் நம்ப முடியவேயில்லை.

ஆஷ் கொலை தென்மாவட்ட கிராமங்களில் அந்த நாட்களில் சாகசநிகழ்ச்சியாக பேசப்பட்டிருக்கிறது. அதன் பிறகு அது போல துப்பாக்கியேந்திய புரட்சிக்கு சுப்ரமணிய சிவா கூட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக சிவகிரி கள்ளர்களுக்கு குருவிசுடும் துப்பாக்கியால் பயிற்சி கொடுத்து ஒரே நாளில் தென்மாவட்டம் முழுவதும் துப்பாக்கியேந்திய போராட்டத்திற்கு திட்டமிட்டு செயல்படுத்தபடாமலே போயிருக்கின்றது.

ஆஷ் கொலையைப் பற்றி பாரதியாரிடம் கேட்டபோது மனைவியோடு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த ஆஷைக் கொன்றது தவறு. ஒருவனை அவன் மனைவியின் எதிரில்கொல்லக்கூடாது என்று குறிப்பிட்டது ஆச்சரியமானது. ஆஷ் கொலை போன்ற சம்பவங்கள் இன்னமும் படைப்பிலக்கியங்களில் பதிவாகவேயில்லை.

மணியாச்சி ரயில் நிலையத்தின் கழிப்பறையில் தான் வாஞ்சிநாதன் தன்னை சுட்டுக்கொண்டிருக்கிறான். இப்போது அந்த இடத்தில் அதன் தடயமேயில்லை. இலங்கையிலிருந்து நினைத்த போதெல்லாம் தமிழகம் வரும் பயணிகளும், தமிழகத்திலிருந்து கொழும்பு போய்வரும் வணிகர்களுக்கும் இணைப்பாகயிருந்த போட்மெயிலும் காலத்தில் மறைந்து போய்விட்டது.

சரித்திரத்திலிருந்தும், கடந்தகாலத்திலிருந்தும் நம்மைத் துண்டிப்பதற்குத் தான் ஊடகங்கள் பெரும் முயற்சியெடுக்கின்றன. கடந்தகால நிகழ்வுகள் தான் வாழ்வின் முக்கிய சாட்சி. சரித்திரத்திரப்படுத்துதலில் தான் இன்றைய அரசியல் அடங்கியிருக்கிறது. அதிகாரம் எப்போதும் தனக்கு சாதகமானதொரு சரித்திரத்தை தான் கடந்தகாலச் சான்றாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நிஜத்தில் சரித்திரத்தின் வரலாற்றையே நாம் ஆராய வேண்டிய சூழலிருக்கிறது.

தமிழகத்தில் சமீபமான ஆண்டுகளில் பெருகிவரும் சாதியுணர்வு காரணமாக ஒவ்வொரு சாதியும் தனக்கென தனியான சரித்திரத்தை உண்டாக்கி வருவதையும், அந்தச் சரித்திரத்தை மெய்ப்பிக்க வேண்டி பலசான்றுகளை உருவாக்கிகொள்வதையும் உன்னிப்பாக கவனிக்கும் போது. அந்த அபாயம் தற்போது தீவிரமாக வெளிப்படாமல் இருந்தாலும் எதிர்காலத்தின் அதன் பீறிடல் தொடர்ந்த வன்முறைக்கு களமாக அமையகூடும் என்றேதோன்றுகிறது.

சரித்திர பாடப்புத்தகங்களில் பல ஆண்டுகளாகப் படித்துச் சலித்த மன்னர்களின் கதைகளை விலக்கிவிட்டு வாழ்வியல் நிகழ்வுகளையும், அறியப்படாத சரித்திரத்தையும் வாசிக்கத் துவங்கும் போது தான் வரல் ஆற்றின் சலசலப்பை கேட்க முடியும். 

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

3 thoughts on “வரல் ஆற்றின் திட்டுகள்

 • July 31, 2011 at 11:49 pm
  Permalink

  வன் சுதந்திரபோராட்டவீரர்களை அடக்கி ஒடுக்கியதற்காகவும், செங்கோட்டை அக்ரஹாரத்திற்குள் யார் வேண்டுமானாலும் நடந்து போகலாம் என்று சாதிகட்டுபாட்டை அழித்ததற்காவும்”

  சாதி கட்டுப்பாட்டை அழித்ததற்காக என்பதற்கு உண்மையில் ஒரு சுக்கு முகாந்திரமும் கிடையாது, திராவிடர் கழக காழ்ப்பு துண்டுப்பிரசுரங்களைத்தவிர.

  சாதியம் இல்லாத பலஜாதி சகோதரத்துவம் அபிநவ் பாரத் சமிதி ஆட்களுக்கு இருந்ததை அன்றைய ஆவணங்கள் தெரிவிக்கின்றன. வெள்ளையர்களின் ஆய்வறிக்கையே சொல்லாத விஷயத்தை ஜாதிக்காழ்ப்பும் முற்போக்கு முனைப்பும் கண்டுபிடித்துத் தந்திருக்கிறது எஸ்ராவுக்கு.

  Reply
 • February 18, 2011 at 5:22 am
  Permalink

  வித்யாசனமான பார்வை. பல புதிய தகவல்கள்.
  வரலாறு மற்றும் மொழிப் பாடங்களில் கூட நிறைய மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். இபோதைய வரலாறும் மொழிப் பாடங்களும் மாணவர்களுக்கு மிகுந்த அயர்ச்சியை தந்து வெறுத்து ஒதுக்கவும் வைக்கிறது.

  Reply
 • February 14, 2011 at 12:07 am
  Permalink

  “சரித்திர பாடப்புத்தகங்களில் பல ஆண்டுகளாகப் படித்துச் சலித்த மன்னர்களின் கதைகளை விலக்கிவிட்டு வாழ்வியல் நிகழ்வுகளையும், அறியப்படாத சரித்திரத்தையும் வாசிக்கத் துவங்கும் போது தான் வரல் ஆற்றின் சலசலப்பை கேட்க முடியும்”சரியாகச் சொல்லியிருக்கின்றார்
  சாமான்யர்களின் வரலாற்றை எழுதுவதென்பது மிகச் சிரமமானகாரியம். சக்கரவர்த்திகளைப் பற்றி எழுதுவது எளிது. சாமான்யர்களே தங்களுடைய சரித்திரத்தைப் பற்றி எழுதினால் தான் உண்டு. நாமல்லாம் அதற்கு இடம் கொடுத்துவிடுவோமா என்ன?
  Unless and until we document the history of villages, sustainable development will remain as a dream. Though village histories and policy formulations are closely interlinked, it is not all appreciated. Here and there attempts have been made to write histories from below. For ref. http://cdmissmdu.blogspot.com/2010/12/blog-post.html

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 13, 2011 @ 9:22 pm