இதுதான் காதல் என்பதா?

 

நான் ஓய்வெடுக்கப் போவது என் வீட்டு காலிங் பெல்லிற்கு எப்படியோ தெரிந்துவிடும். இன்றும் அப்படித்தான். எழுந்து வர்றீயா இல்லையா என்பது போல தொடர் டிர்ர்ர்ரிங்.. கடுப்புடன் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தபோது ஒரு இளம்பெண்ணும் ஆணும்.

"சார் ஒரு நிமிஷம்" என்றாள் அவள்.

 "எனக்கு எதுவும் வேண்டாம்மா", என்று ஒரே வாக்கியத்தில் அவளை துரத்தப் பார்த்தேன்.

"சார். . . நான் சென்சஸ் எடுக்க வந்திருக்கேன்", என்றாள். பட்டென என் மூடு மாறியது. படி இறங்கி வந்தேன்.

"ஓ . . . மன்னிக்கணும். நான் யாரோ சேல்ஸ் கேர்ள் என நினைத்துவிட்டேன்"

"பரவாயில்ல சார்.. ஒரு சேர் கொடுங்க சார்", அவளிடம் பல நாள் பழகிய பெண்ணைப் போல, புன்னகை கலந்த இயல்பு.

சேரை எடுத்துப் போட்டு விட்டு, "தண்ணீர் வேண்டுமா?" என்றேன்.

"வேண்டாம் சார். ஆனால் வேணுமான்னு கேட்டதுக்கு ரொம்ப நன்றி சார்", இம்முறை அந்த ஆண் பேசினார். அவரது குரலும் என்னை உடனே நண்பனாகு என்றது. என்னை அறியாமல் ஒரு புன்னகை பிறக்க, அவர் அப்பெண்ணிடமிருந்து சில தாள்களை வாங்கிக் கொண்டு, "நான் எதிர் வீட்டுக்குப் போய் வேலையை முடிக்கறேன்", என்றபடி சென்றுவிட்டார்.

 "சார் உங்க பேரு", என்றாள் அப் பெண்.

சொன்னேன்.

"பிறந்த தேதி"

சொன்னேன்.

தொடர்ந்து அவள் கேட்ட பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே இருந்தேன்.

"அவ்வளவுதான் சார். இந்த இடத்துல உங்க பேர் எழுதி கையெழுத்துப் போடுங்க", என்று கூறியபோது, அந்த ஆண் உள்ளே நுழைந்தார். கையில் தண்ணீர் பாட்டில்.

"இவங்க வெளியில தண்ணி குடிக்க மாட்டாங்க சார், அதான் கடையில போய் வாங்கிட்டு வந்தேன்", என்றவர் அந்தப் பெண்ணைப் பார்த்து "இந்த பிஸ்கெட்டையும் கொஞ்சம் சாப்பிட்டா தெம்பா இருக்கும்", என்றார்.

உடன் வேலைசெய்யும் பெண்ணின் மேல் இவ்வளவு கரிசனமா? என்ற எண்ணம் எழுந்த போதே,

"சார் இவங்க என் கணவர்", என்றாள் அப்பெண்.

எனக்குள் பட்டென ஒரு ஆச்சரியம் பூத்தது.

"நீங்க ரெண்டு பேருமே டீச்சர்ஸா?"

"இல்ல சார். நான் மட்டும்தான் டீச்சர். பாரதி வித்யாலயாவில ஒர்க் பண்றேன். இவரு ஆட்டோ ஓட்டறார்."

"பாவம் சார் இது. தினம் 7 மணிக்கெல்லாம் சென்சஸ் எடுக்க கிளம்பிடுது. சரியா சாப்பிடறது கூட இல்ல. வெயில்ல சுத்துது. நாலு நாளா பாக்கறதுக்கே மனசு கேட்கல சார். அதான் இன்னைக்கு ஆட்டோ ஓட்டறத விட்டுட்டு, நானும் கூடவே வந்துட்டேன்."

"கூடவே நீங்களே சென்சஸ் எடுக்கறதெல்லாம் இருக்கட்டும். ஆனா அதுக்கு பணம் கிடைக்காதே, ஆட்டோ வருமானமும் போயிடுமே"

"அட போனா போகுது சார். பணம் யாருக்கு சார் வேணும். என்னை நம்பி வந்த பொண்ணு, என் முன்னாடி கஷ்டப் படாம இருந்தால், எனக்கு அதுவே போதும். பாருங்க வெயில்ல சுத்தி எவ்வளவு கருத்துடுச்சு", குரலில் அப்படியொரு வாஞ்சை!

அதைக் கேட்ட அடுத்த வினாடி மளுக்கென்று ஒரு விசும்பல். அந்தப் பெண்ணின் கண்களில் ஈரம்.

"ஏய்.. நீ ஏம்மா அழற?", என்றபடி அவர் அவளை அணைத்துக் கொள்ள, அவரின் கண்களில் இருந்தும் அடங்கமாட்டாமல் கண்ணீர் பெருக்கெடுத்தது.

உலகமே காதலர் தினத்தை வாழ்த்து அட்டைகளிலும், அர்த்தமற்ற சேட்டைகளிலும் கொண்டாடிக் கொண்டிருக்க, இங்கே இரு அன்பான ஜீவன்கள் காதலர் தினத்துக்கு அர்த்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

"அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!"

 

என் கண்களிலும் ஈரம் கோர்க்கிறதோ…! இருக்கட்டும்!

அனைவருக்கும் இந்த தம்பதியினரின் சார்பாக, காதலர் தின வாழ்த்துகள்!

 

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : February 14, 2011 @ 11:03 am