அறிவியல் திருவிழா

 

பொதுவாக அமெரிக்கவாழ் இந்தியர்களிடையே இருக்கும் ஒரு அனுமானம் இங்கிருக்கும் பள்ளிப்படிப்பின் தரம் இந்திய அளவிற்கு கிடையாது என்பது. இது ஒருவகை ‘அக்கரை பச்சை’ மனோபாவம் என்ற எண்ணம் எனக்கு உண்டு. இதைப் பற்றி விரிவாக ஆராய்வதற்கான அனுபவம் கிடையாது என்பதால் பெரும்பாலும் நண்பர்களின் கூற்றுக்கு ஒத்துப்பாடி விடுவேன்.  

நமது ஜூனியர் இப்பொழுதுதான் அருகாமையில் இருக்கும் ப்ரஸ்பட்டேரியன் சர்ச் நடத்தும் பால்வாடியில் சேர்ந்து கலரிங், கட்டிங், ஒட்டிங் வேலைகள் கற்றுக் கொண்டு வருகிறார். இன்னும் நான்கு வயது நிறையவில்லை என்பதால் எழுத்துப் பாடங்கள் எதுவும் கிடையாது.  

‘என்னடாது காதர் ஃபாதர்னு பாட்டு?’

’சாப்பிடறதுக்கு முன்னாடி எல்லாரும் பாடுவோம். மிஸஸ் டாஸன் சொல்லிக் கொடுத்தாங்க’

இது என்னடா மதுரைக்கு வந்த சோதனை.  யாரோ காதரை, எல்லா குழந்தைகளும் ஃபாதர்னு பாடனுமா? ஒருவேளை, மிஸஸ் டாஸனின் அப்பாவாக இருக்குமோ என்று விசாரித்துப் பார்த்தால்…. அது ‘God Our Father’ என்னும் தோத்திர பாடலாம். நல்லவேளை. என் தலை தப்பியது.

சென்ற வாரம் அமெரிக்க பள்ளிகளின் தரத்தை ஒரு துளி நேரில் காணும் வாய்ப்பு அமைந்தது. பென்சில்வேனியா சிறார்கள் அறிவியல் அரங்கில் (Pennsylvania Junior Academy of Science) இருந்து ஓர் அழைப்பு. வருடா வருடம் நடக்கும் சிறார்கள் சந்திப்பில்  அறிவியல் ப்ராஜெக்டுகளை மதிப்பிட தன்னார்வலர்கள் தேவை என்று சொல்ல உடனே மனுப் போட்டு விட்டேன்.

கிட்டத்தட்ட 1500 மாணவர்கள் பௌதியல், வேதியல், உயிரியல், கணிணிவியல், கணிதம், பூமி மற்றும் விண்வெளி என்று பல்வேறு பிரிவுகளில் ப்ராஜ்கெட்டுகள் செய்து பிரசண்டேஷனுக்கு தயாராக வந்திருந்தார்கள்.  ஒரே நாளில் இரு அமர்வுகளாக நிகழ்ந்தது. காலையில் எட்டாம் கிரேடு மாணவர்களும், பிற்பகலில் ஒன்பதாம் கிரேடு மாணவர்களும் பங்கேற்றார்கள்.

அலுவலகத்திற்கே சாவதானமாக ஒன்பது-ஒன்பதரை மணிக்கு (எத்தனை பேர் காதில புகை வரப்போகுதோ) செல்லும் வழக்கமுடைய நான் கடந்த சனிக்கிழமை காலை ஏழரை மணிக்கே தயாராகி Easton பகுதி உயர்நிலைப் பள்ளிக்கு சென்றேன்.

வாயிலின் அருகேயே தன்னார்வல ஜட்ஜ்களுக்கு பதிவு கௌண்ட்டர் இருந்தது. 

’கம்ப்யூட்டர் சைன்ஸுக்கு ஒரே ஒரு யூனிட்தான். ஏற்கெனவே 5 ஜட்ஜ் இருக்காங்க. நீங்க வேற ஏதாவது தேர்ந்தெடுங்க’ என்று சொல்லி விட்டார்கள்.

துணிச்சலாக ’ஃபிஸிக்ஸ் செய்யறேன்’ என்று சொல்லி பதிவு செய்துகொண்டேன். எப்பவோ கல்லூரிக் காலத்தில் படித்தது… 

வேலை கொஞ்சம் சுலபம்தான். எனக்களிக்கப்பட்ட யூனிட்டில் மொத்தம் பதினான்கு மாணவர்கள் இருந்தார்கள்.  எல்லாம் எட்டாவது கிரேடு மாணவர்கள்.  இயற்பியல் விதிகளின் பிரகாரம் ஒரு ஹைபோதீஸிஸ் தீர்மானித்துக் கொண்டு தாங்கள் நிகழ்த்தி பார்த்த சோதனையைப் பற்றி 10 நிமிடம் பேசுவார்கள்.  5 நிமிடம் நாம் கேள்விக் கேட்டு அவர்களின் பிரசண்டேஷனை எடை போட்டு மதிப்பெண் அளிக்க வேண்டும்.

மிகவும் ஆச்சரியமளித்த விஷயம் இதன் ஒருங்கிணைப்புதான். மிக எளிமையான, அதே சமயம் மிகத் தெளிவான பிராசஸ்களை எந்தவித குழப்பமுமின்றி நிகழ்த்தினார்கள்.  நாள் முழுவதும் நான் பார்த்தவரை ஒரு முணுமுணுப்பு இல்லை. சர்ச்சைகள் இல்லை. அவரவர் வேலையை அவரவர் வெகு திறமையாக செய்து பங்காற்றினார்கள்.  

முதல் அமர்வு கிட்டத்தட்ட 75 அறைகளில் நிகழ்ந்தது. நான் 57ம் அறையில் இன்னும் இரு ஜட்ஜ்களுடன் பங்கேற்றேன். மாணவர் திறமையை கணிப்பதைப் பற்றி எவ்வித முன்முடிவும் செய்து கொள்ளாமல் அமர்வை துவக்கினோம்.

ஏறக்குறைய எல்லா மாணவர்களுமே சமயோசிதமான, நடைமுறை மதிப்பு அதிகம் இருக்கும் சோதனைகளையே சமர்ப்பித்தார்கள்.  முதல் மாணவன் சூரிய சக்தியின் மேல் வெப்பம் ஏற்படுத்தும் பாதிப்புகளை பற்றி ஆராய்ந்திருந்தான். அடுத்து ஒரு மாணவி ஸ்கீயிங் போர்டுகளில் மெழுகை சேர்த்தால் ஏற்படும் பயன்கள் பற்றிய சோதனையை செய்ததாக சொன்னாள். கொஞ்சம் எடக்குமடக்கான அடிப்படை கேள்விகளை திறமையாக எதிர்கொண்டாள்.

கோல்ஃப் மட்டைகளின் வளைவுகள் ‘U’ வடிவத்தில் இருந்தால் நல்லதா ‘V’ வடிவத்தில் இருந்தால் நல்லதா என்று ஒரு மாணவன் சோதனை செய்திருந்தான்.  ஏகபட்ட தகவல்களுடன் வெகு திறமையாக ப்ரெஸ்ண்ட் செய்தான்.

என்னை மிகவும் கவர்ந்த பிராஜெக்ட் ஜோசஃப் மேலான் என்னும் மாணவனின் Buyoancy பற்றிய பிராஜெக்ட்.  எளிமையான ஹைப்போதீஸிஸ். பல்வேறு மரங்களின் மிதக்கும் தன்மைப் பற்றிய சோதனை.  மேப்பிள், ஓக், பைன் போன்ற ஐந்தாறு மரங்களை வெவ்வேறு அழுத்தத்தில் நீரில் மிதக்கவிட்டு கிடைத்த தகவல்களை தொகுத்து திறம்பட பேசினான்.  

ஒரே ஒரு மாணவன் மட்டும் கொஞ்சம் அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டுவிட்டான். வெவ்வேறு எடைகொண்ட பந்துகள், ஒரே நேரத்தில் விடப்பட்டால் (Drop) வெவ்வேறு வேகத்தில் பயணிக்கும் என்பது போலச் சொல்லி மாட்டிக் கொண்டான். கலிலியோ தன் கல்லறையில் சற்றே முகம் சுளித்திருப்பாரோ என்னவோ. 

கவண்கல்லிலிருந்து விடப்படும் பந்துகள் பற்றி; Coefficient of restitution; வீசியெறியப்படும் பந்தின் மேல் சுற்றுபுற ஈரப்பதம் ஏற்படுத்தும் விளைவுகள்; இசையினால் இயக்கமுறைகள் மாறுபடுமா; ராம்ப்பின் சாய்மானத்தினால் ஓடும் காரில் ஏற்படும் விளைவுகள்; கட்டுமாணத்திற்கு பயன்படுத்தப்படும் மரங்களின் தாங்கும் சக்தி; பிளேன்களின் இறக்கை வடிவமைப்பு பற்றி; Coefficient of Friction  போன்ற பல தலைப்புகளில் மாணவர்கள் சோதனை நிகழ்த்தியிருந்தார்கள்.

இதில் சிறப்பு என்னவென்றால், இந்த சோதனையை ஏன் தேர்ந்தெடுத்தேன், இதை இன்னோர் முறை செய்தால் என்ன மாற்றங்கள் செய்வேன், இம்முறை நிகழ்ந்த தவறுகள் என்னென்ன… இதன் நடைமுறை சாத்தியங்கள் என்னென்ன என்பது போன்ற பல விஷயங்களையும் சேர்த்தே தொகுத்து வழங்கினார்கள். ஏரோபிளேன் இறக்கை பற்றி பேசிய பையனை ‘நீ ஏரோபிளேனில் பயணம் செய்திருக்கிறாயா?’ என்று கேள்வி கேட்டபோது ‘இல்லை’ என்று பதிலளித்தான். ‘பின் ஏன் அதன் பாதுகாப்பைப் பற்றி ஆராய்கிறாய்?’ என்று நண்பர் விளையாட்டாய் கேட்க ‘I don’t want them to fall on my head” என்றான். சமயோசிதம்.

முடிவாக மூன்று ஜட்ஜ்களும் கூடி அலசி நான்கு மாணவர்களை முதல் வகுப்பில் தேறியதாக கண்டறிந்தோம். இது அவர்களுக்கு PSTS ஸ்காலர்ஷிப் பெற முக்கிய தேவையாகும்.  

பெரும்பாலான தன்னார்வல ஜட்ஜக்ள் இந்த அறிவியல் திருவிழாவில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோராக இருந்தார்கள். அதாவது அவர்கள் குழந்தை அல்லாது மற்ற மாணவர்களின் திறமையை எடைபோடும் பொறுப்பில். நான் ஒருவன்தான் வெறும் ஆர்வத்தினால் உந்தப்பட்டு பங்கேற்றிருந்தேன் என்று நினைக்கிறேன்.

மதியம் பள்ளி கேண்டீனிலேயே சாண்ட்விச், சாலட், ப்ரௌனி, சோடாவெல்லாம் கொடுத்தார்கள். ஏதோ வைட்டமின் தண்ணீர் வைத்திருக்கிறார்களே என்று ஆசைபட்டு இரண்டு டாலர் கொடுத்து வாங்கினால் அது இருமல் சிரப் போல மருந்துவாடை அடித்தது. பாவம் இந்த தலைமுறை மாணவர்கள். குச்சி ஐஸ், இலந்தபழம், கொடுக்காப்புளி, மாங்கா பத்தையில்லாமல் எப்படி தங்கள் பள்ளிக்கால அனுபவங்களை நாளை நினைவு கூரப்போகிறார்களோ… 

அடுத்த அமர்விற்கு பிஸிக்ஸை எடுக்காமல் புதியதாக பூமி மற்றும் விண்வெளி (Earth & Space) பாடப்பிரிவைக் கேட்டு வாங்கிக் கொண்டேன். 

இது ஒன்பதாம் கிரேடு மாணவர்களுக்கான அமர்வு. பிற்பகல் ஒன்றரை மணிக்கு துவங்கும் என்று போட்டிருந்தார்கள். அறைக்கு வெளியில் மாணவர்களின் சளசளப்பு சத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறதே தவிர, வேறு ஜட்ஜ்கள் யாரையும் காணோம். ஒன்று இருபத்தொன்பதிற்கு ஒரு Metallurgist அம்மையார் அதிரடியாக நுழைந்தார். சம்பிரதாய அறிமுகம் முடிந்தவுடனே ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டு, நான் கணிணி சம்பந்தமான துறையில் பணியாற்றுபவன் என்றதும் முகம் சுருங்கிவிட்டது.

எனக்கு விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் பிடிக்கும்… ஸ்டார் வார்ஸ் அத்தனை எபிஸோட்களையும் பார்த்திருக்கிறேன் என்று அவரை தேற்றப் போக இன்னமும் பேஜாராகிவிட்டார். 

இம்முறை 12 மாணவர்கள்.  ஒன்பதாம் கிரேடு என்றாலும் சில மாணவிகள் ஏதோ மாடலிங் பரேடு வந்தது போல படாடோபமாக வந்திருந்தார்கள்.  இம்முறை முதலிலேயே சக ஜட்ஜ் அம்மணி சொல்லிவிட்டார். கடுமையாக மதிப்பிடாமல், நல்ல ஸ்பார்க் தெரிந்தால் நல்ல மதிப்பெண்கள் கொடுக்க வேண்டும் என்று.  

முதலில் வந்த ஸ்பானியப் பெண் சுடுமணலில் தாவரம் வளர்ப்பதைப் பற்றிய சோதனையை விளக்கினார். நல்ல தலைப்புதான் என்றாலும் பாவம் ஆங்கிலம் கொஞ்சம் தகராறு. கையில் வைத்திருந்த பேப்பர்களைப் பார்த்தே படித்ததினால் அவ்வளவு சிறப்பாக எடுபடவில்லை. அடுத்த மாணவர் வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஆவியாதலைப் பற்றிய சோதனை செய்திருந்தார். மேலுக்கு சாதாரண விஷயமாக இருந்தாலும் நடைமுறையில் நிறைய பயண்பாடுகள் உள்ள ஹைப்போதீஸிஸாக தோன்றியது. நல்ல முறையில் கேள்விகளுக்கு பதிலளித்து எங்கள் வேலையை சுவாரசியமாக்கினார்.

அடுத்து ஒரு மாணவர், டீ, காப்பி, சோடாக்களில் தாவர வளர்ச்சியைப் பற்றி விவரித்தார். அடிப்படையான சில விஷயங்களில் தடுமாறியது போல் இருந்தது.  ஆரன் என்கிற மாணவர் கடலின் அமிலத்தன்மைக்கு ஏற்ப எப்படி கிளேசியர் உருகுகிறது என்பதை நிரூபிக்க சிறிய சோதனை செய்திருந்தார்.  ஆனால் விளக்கத்தின் போது ஐஸ் பெர்க் மற்றும் அதன் அமிலத்தன்மைப் பற்றி விளக்க ஆரம்பித்து Metallurgist அம்மையாரை குழப்பிவிட்டார். ஆனாலும் அவருடைய சோதனையை நிகழ்த்திய விதமும் அதை தன்னம்பிக்கையோடு தொகுத்தளித்ததும் நன்றாக இருந்தது. 

அடுத்து வந்த பெண் மாடலிங் ஷோவிலிருந்து நேரடியாக வந்தது போன்ற தோற்றத்தோடு இருந்தார். வெவ்வேறு வகையான வெப்பத்தில் நீரில் வளரும் கிரிஸ்டலைப் பற்றிய ஆய்வு.  தனக்குத் தெரிந்ததை மட்டும் அழகாக பேசி நிறைவாக செய்திருந்தார். தொடர்ந்து பூமியின் மேண்டிலில், Convection Currentsல் ஏற்படும் பாதிப்புகளை பற்றி; கிராமப்புற, நகர்புற சீதோஷ்ணத்தில் ஈரப்பதத்தின் வேறுபாடுகள்; நீர் பிடிப்பான்களின் வகைகளும், அவை மேல் சூரிய வெப்பம் ஏற்படுத்தும் பாதிப்புகளும்; நிலவின் பிறைநிலைகளால் நட்சத்திரங்களின் தோற்றத்தில் ஏற்படும் மாறுதல்கள்; வெளிப்புற நிறத்தினால் ஏற்படும் உட்புற வெப்ப நிலை மாறுதல்… இப்படிப் பல சோதனைகளைப் பற்றி மாணவர்கள் விளக்கினார்கள். 

இந்த அமர்வின் ஹைலைட் BP எண்ணெய் கசிவு விபத்தால் உந்தபட்டு சேத் மில்லர் என்ற மாணவன் செய்த சோதனை.  கடல் நீரில் கலந்துவிட்டிருந்த எண்ணெயை வெளியேற்ற மனித தலைமுடிகளினால் நெய்யப்பட்ட வலையை பயண்படுத்தினார்களாம். மனித தலைமுடியை விட நாய் முடி இன்னமும் அடர்த்தியானதே. நீரிலிருந்து எண்ணெய்யை வெளியேற்ற மனித முடியைவிட நாய் முடி சிறந்தது என்ற ஹைப்போதீஸிஸுடன் சோதனையை நிகழ்த்தியிருந்தான். மில்லரின் டேட்டாக்கள் எல்லாம் சரியாகத்தான் இருந்தன. ஆனால் கடைசிவரை எப்படி நாய்முடி வைத்து வலை நெய்தான் என்று சொல்லாமல் டபாய்த்து விட்டான்.  

இம்முறை 5 மாணவர்கள் முதலிடம் பெற்று Penn Stateக்கு செல்கின்றனர். மிகவும் நிறைவான நாளாக இருந்தது. முடிவில் மதிப்பெண்களை கூட்டிப் போடும்போது சக ஜட்ஜ் அம்மணி மிகவும் பொறுப்பாக முதலிடம் பெற்ற ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நோட் எழுதினார். கிறிஸ்டல் வளர்ப்பதைப் பற்றி பேசிய பெண்ணுக்கு 

‘Don’t play with your hair much என்று குறிப்பு எழுதுவோம்’ என்றார்.

‘ஐயோ… அதெல்லாம் பர்சனலான கமெண்ட் ஆகிவிடுமே’ என்று சிரித்தேன்.

‘பார்…அந்த கடைசிப் பெண் (வெளிப்புற நிறத்தினால் ஏற்படும் உட்புற வெப்ப வேறுபாடுகள்) ஸ்கர்ட்டை இழுத்து இழுத்து விட்டுக் கொண்டிருந்தாள்’

அப்பொழுதுதான் உணர்ந்தேன். நான் பேசிக் கொண்டிருப்பது ஒரு Metallurgist மட்டுமில்லை. ஒன்பதாம் கிரேடு படிக்கும் ஒரு டீன்ஏஜ் பையனின் அம்மா. 

‘உன் பையனுக்கு மூன்றரை வயதுதானா… கவலைப்படாதே. திடுமென வளர்ந்து நின்றுவிடுவார்கள். உனக்குத் தெரியுமா? இன்றைக்கு இரவு ஸ்கூல்  பார்ட்டியில், என் பையனுடன் நடனமாட விருப்பம் தெரிவித்திருக்கிறாள் ஒரு பெண். என் பையனுக்கு என்ன சொல்வதென்று கூட தெரியவில்லை. பாவம்’ என்று அங்கலாய்த்தார்.

ஆமாம். எல்லா அம்மாக்களுக்கும் அவர்கள் பையன்கள் அப்பாவிகளாகவே இருக்க வேண்டும் என்றுதான் விருப்பம். ஹ… நாங்க எப்படி? 🙂

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “அறிவியல் திருவிழா

 • July 20, 2011 at 12:45 am
  Permalink

  Good writeup. BEngineering students dreaming to IT/foreign/money. Intelligent people not ready to choose academic profession, Then what about school?

  Reply
 • March 1, 2011 at 9:54 pm
  Permalink

  நல்ல ரைட் அப். பொறாமையாக இருக்கிறது – டெக்ஸ்ட்புக் படித்து, ஞாபகத்தையே மையமாக வைத்த நம் கல்விமுறையையும் இதையும் நினைத்தால்.

  Reply

Leave a Reply to Gopi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 1, 2011 @ 9:38 pm