நள் எனும் சொல்

7 ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணன் அட்சரம் தமிழ்பதிவில் எழுதிய கட்டுரை, வாசகர்களுக்காக மறுபதிவு.


 

நள்ளிரவில் வரும் நள் என்றால் என்னவென்று திடீரெனத் தோன்றியது. நிகண்டைப் புரட்டி நள் என்ற சொல்லைத் தேடத்துவங்கினேன். நள் என்றால் மத்தியில், நடுவில் என்று பொதுப்பொருள். நள்ளிரவு என்பதை இரவின் நடுவில் இருப்பதாகக் கொள்ளலாம். அதே நள் இன்னொரு பொருளில் நட்பை, அன்பை வேண்டுதல் என்றும் பொருள்படுகிறது. நண்பரை நள்ளுனர் என்று அழைத்திருக்கிறார்கள்.

புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நள்ளெனும் யாமம் என்ற வரி வருகிறது. அதை வாசிக்கும் போது அந்தச் சொல் நாக்கில் ஒட்டிக்கொண்டு சில நாட்களுக்கு ருசித்துக் கொண்டேயிருக்கிறது. நள் என்ற சொல்லை இப்போது அதிகம் நாம் பயன்படுத்துவதில்லை.

சொற்களைத் தேடுவதும், மீட்டு எடுப்பதும், அதன் பொருளை விஸ்தாரணம் செய்வதும், பிரயோகத்தை முன்னில்லாத தீவிரத்தில் செலுத்துவதுமே எழுத்தாளின் முக்கிய வேலைகள். தமிழ் போன்ற வளமிக்க மொழியில் சொற்கள் நிரம்பியிருக்கின்றன. அதை பரிச்சயப்படுத்திக் கொள்வதும், பயன்படுத்துவதும் மிகக்குறைவாகவேயுள்ளது. ஆங்கில அகராதியைப் புரட்டிப் பார்ப்பது போல, தமிழில் உள்ள நிகண்டு, அகராதி போன்றவற்றை நாம் அன்றாடம் புரட்டிப் பார்ப்பதேயில்லை. தமிழில் பத்திற்கும் மேற்பட்ட நிகண்டுகள் இருக்கின்றன. ஆனால் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி வீட்டுக்கு வீடு இருப்பது போல தமிழ் நிகண்டைக் காண்பது அரிது.

முப்பதாவது வயதில் பார்வையிழப்பு அடையத்துவங்கி எண்பதுவயது வரை பார்வையற்றவராக வாழ்ந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான ஜோர்ஜ் லூயி போர்ஹே, அர்ஜென்டினாவின் ப்யூனஸ் அயர்ஸ்ஸில் நு¡லகத்தின் இயக்குனராக வேலை செய்த போது அவரது தினசரி வேலையே உதவியாளர்களை துணைக்கு வைத்துக்கொண்டு சொற்களின் மூலத்தை தேடுவதும், கண்டுபிடித்த சொற்களின் ஆச்சரியமான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் தான். அவரது கதைகளில் அவராக நிறையச் சொற்களை உருவாக்கியிருக்கிறார். அவை எந்தப் பாஷையின் சொற்களுமல்ல, அவரது கற்பனா தேசத்தின் பாஷையது.

எப்படி காலத்திற்கு முடிவிலி என்பது அதன் எல்லையற்ற நிலையைக் குறிக்கிறதோ, அது போல வெளியின் முடிவற்ற நிலையை குறிக்க ஆல்ப் என்ற வார்த்தையை போர்ஹே பயன்படுத்துகிறார். அந்தப் பெயரிலே ஒரு கதை எழுதியிருக்கிறார். அக்கதையில் முடிவிலியில் காலம் எப்படி சுனை போல தீராமல் சுரந்தபடியிருக்கிறதோ அப்படி ஆல்ப் என்ற புள்ளியில் வெளியின் அத்தனை சாத்தியங்களையும் ஒரே இடத்தில் காணமுடியும் என்கிறார். ஆல்ப் என்ற அந்தச் சொல் யூத இறையியலிருந்து தோன்றியிருக்கிறது. இது போலவே அண்ட்ர் என்ற தனிச்சொல் ஒரு கவிதையாக ஒரு இனக்குழுவால் வாசிக்கபடுவதாக இன்னொரு கதையில் எழுதியிருக்கிறார்.

அவரைப் போலவே லு¡யி கரோல் தனது ஆலீஸின் அற்புத உலகம் என்ற குழந்தைகள் கதையில் பல்வேறு அர்த்தமற்ற சொற்பிரயோகங்களை உருவாக்கியிருக்கிறார். அந்தச் சொற்களில் பாதி அதைச் சொல்லும் போது ஏற்படும் ஒசையால் ஏற்படும் கேலிக்காகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் கூட இது போன்ற அறியாச் சொற்களை அதிகம் உபயோகிக்க கூடியவர்தான்.

தமிழில் நகுலன் தன் கவிதைகளிலும், நாவல்களிலும் பயன்படுத்தும் சில சொற்கள் அது போல வெறும் சப்த ருசியாகவே வெளிப்படுகின்றன. குறிப்பாக சூசிப்பெண்ணே என்ற சொல் அவரது கவிதைகளில் பலமுறை இடம் பெற்றுள்ளது. அதன் உண்மையான பொருள் என்னவென்று நகுலனைத் தவிர வேறு எவராலும் சொல்ல முடியாது. நவீன கவிதையில் தனித்துவமான சொல்லாட்சி கொண்டவராக பிரமீளைக் குறிப்பிடலாம். அவரது ஒரு கவிதையின் தலைப்பு முதல்முகத்தின் தங்கைக்கு. இதில் உள்ள முதல்முகம் என்பது காதலி என்பதன் மாற்றுச் சொல்லாகியிருக்கிறது. 

அது போலவே தேவதச்சனின் ஒரு கவிதையில் மத்தியானவேளை என்ற ஒரு சொல் உடைக்கபட்டு மத் / தியானவேளை என்று பிரிக்கபட்டதும் அர்த்தம் மாறிவிடுவதை கவனிக்கும் போது தான் சொற்களின் தாதுக்களைத் தேடும் ஆர்வம் மிகுதியாகிறது.

ஒரு முறை ஆண்டாளின் திருப்பாவையும், திருவாய் மொழியும் வாசித்தபோது ஆண்டாள் பயன்படுத்திய தனித்துவமான சொற்களாக தனியே தொகுக்கத் துவங்கினேன். தனியாக ஒரு அகராதி போடுமளவு விதவிதமான சொற்கள், பிரயோக முறைகள், சொல்லடுக்கு என விரிந்திருந்தது அவரது கவிதையுலகு. பலநு¡று வருடங்களுக்கு பிறகு வாசிக்கப்படும் போதும் நேற்று இரவில் எழுதிய கவிதை போல ஈரம் அப்படியேயிருக்கின்றது. திருப்பாவையின் ஒரு பாடலில் வாச நறுங்குழ லாய்ச்சியர் மத்தினால் ஒசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ என்பதில் வரும் தயிரரவம் என்ற தனிச்சொல் மிக நுட்பமானது. தயிர்கடையும் ஒசை என்று முழுநீளத்திற்கு இன்று உரைநடையில் எழுதுவதை இந்த ஒற்றைச்சொல் வெளிப்படுத்திவிடுவதோடு தயிர்கடையும் ஒசைக்கு புதிதாக ஒரு சொல்லைத் தந்திருக்கிறது.

தமிழில் ஒரு எழுத்துச்சொற்களுக்கென்றே தனி அகராதியிருக்கிறது. அந்த அகராதியில் ஒரு எழுத்துச்சொற்கள் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மா என்ற ஒரு எழுத்திற்கு மாவு, சரஸ்வதி, கறுப்பு, சீலை, வலி, வயல், துகள், அழைப்பு, நஞ்சுக்கொடி, இலக்குமி, செல்வம், மாதா, வெறுப்பு, அழகு என்று பொருட்கொள்ளும் பட்டியல் நீள்கிறது.

சம்மணம் போட்டு உட்கார்ந்திருக்கிறான் என்று நாம் உட்காரும் முறையைச் சொல்கிறோம், அதில் வரும் சம்மணம் என்பது சமணர் போல உட்கார்ந்திருக்கிறான் என்பதில் இருந்து தான் உருவாகியிருக்கிறது என்று சித்தாமூரில் உள்ள சமணஆய்வு மையத்தின் மடல் சொல்கிறது. கணிப்பு சரியானது என்றே தோன்றுகிறது. காலத்தின் பூச்சு படிந்து சொற்கள் எப்படி உருமாறியிருக்கின்றன என்று ஆராயும் போது தான் சமுககலாச்சார சூழலின் பாதிப்பு மொழியின் மீது நிகழ்த்திய விதத்தை அறிய முடியும். அதுவும் எழுத்தாளின் வேலைதானே. 

பின்குறிப்பு

சென்னையில் ஆங்காங்கே கேட்ட சில அருந்தமிழ்ச் சொற்களும் மனதில் நிற்கின்றன. இதற்கு எவராவது விளக்கம் சொன்னால் கேட்டுக்கொள்ளலாம் . 

1) டப்பா டான்ஸ் ஆடிரும்

2) உட்டாலக்கடி உடான்ஸ்

3) கில்மா

4) சூசூபி

5) மஞ்சாசோறு

6) கஸ்மாலம்

7) ரூட்விடுறது, நூல்விடுறது

8) கெக்கே பிக்கே

9) ரவுசு

10) பிகிலு

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

2 thoughts on “நள் எனும் சொல்

 • July 17, 2012 at 12:28 am
  Permalink

  கெக்கே பிக்கே : கிழித்தான் பிய்த்தான் என மொட்டையாக முழு விவரம் சொல்லாமல் பேசுவது, பின்னாளில் கிழிக்க பிய்க்க என மாறி, கடைசியில் கெக்கே பிக்கே என ஆனதாக எங்கோ கேட்ட ஞாபகம். தஞ்சாவூர்ப் பக்கம் இதை அடிக்கடி சொல்வார்கள்… ஏன் இப்டி கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறே என என் அம்மாவே அடிக்கடி கேட்பார்கள்….

  நொரைநாட்டியம் : நூல் நயம் அதாவது ஒரு நூலின் சிறப்பை விளக்கமாக எடுத்துக் கூறுவது என பொருள். அது மருவி நொரைநாட்டியம் ஆனது எப்படி எனதான் புரியவில்லை.

  Reply
 • March 13, 2011 at 11:59 pm
  Permalink

  கெக்கே பிக்கே என்பது தஞ்சை திருச்சி ஏரியாவில் பிரசித்தம். உங்கள் முன்னோர் தஞ்சை/திருச்சி சார்ந்தவர் என்ன்பும் புண்ணியம் இருந்தால்:-) உங்களுக்கு இந்த சொற்றொடர் தெரிந்திருக்கலாம் (என்னடி இது கெக்கேபிக்கேன்னு சிரிச்சிட்டு? எப்ப பாரு கெக்கேபிக்கேன்னு உளறிகிட்டே இரு!)
  கெக்கேபிக்கே பக்கத்தில் இருக்கும் ஸ்பெஷல் ஸ்மைலியை மனதில் கொண்டு ஒரு புராணம்:-)

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 13, 2011 @ 10:01 pm