இலவச தேர்தல்
தி.மு.க., – அ.தி.மு.க. இரு கட்சிகளுமே அடுத்து ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் அரிசி, மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், லேப்-டாப், மானியம் என இலவசங்களை தங்கள் தேர்தல் அறிக்கையில் அள்ளி விட்டுள்ளன. ஆனால் இந்த இலவசங்கள் நம்மை எங்கே அழைத்து செல்லப்போகின்றன?
தமிழகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சிகளாக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருபவை தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும். ஆனால் அந்தக் கட்சிகளே தங்களை நம்பாமல் இலவசங்களை நம்பித் தான் களமிறங்குகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிட்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரு கட்சிகளுமே தங்கள் தேர்தல் அறிக்கையில் பொதுமக்களை சுத்த சோம்பேறிகளாக மாற்றும் வகையில் பல்வேறு இலவசத் திட்டங்களை வாரி இறைத்துள்ளன. அரிசி இலவசம், கிரைண்டர் இலவசம், மிக்ஸி இலவசம், வீடுகளுக்கு அரசு கேபிள் இலவசம், பஸ் பாஸ் இலவசம் என்று எத்தனை எத்தனை இலவசங்கள் ?
இவ்வளவு இலவச திட்டங்களை செயல்படுத்த நிதி ஆதாரம் எங்கிருந்து திரட்டப்படும் என்ற கேள்விக்கு, இரு தரப்பிலுமே, "வழவழ' பதில் தான் கிடைக்கிறது. மொத்தத்தில் மக்கள் வரிப்பணத்தை கண்டபடி செலவு செய்து, மேலும் மேலும் கடன் வாங்கி தமிழக மக்களை ஓட்டாண்டியாக்க இவ்விரு கட்சிகளுமே கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகின்றன. குறைந்த பட்சம் இவர்கள் வழங்கும் இலவசங்களாவது மக்களை முழுமையாக சென்றடைகிறதா என்றால் அதுவும் இல்லை.
மொத்தத்தில் தங்கள் குடும்பங்களை வளப்படுத்திக்கொள்ளவும், தங்கள் கட்சியினர் பெருமளவில் ஆதாயம் அடையவும் மட்டுமே இத்திட்டங்கள் பயன்படுகின்றன. கடந்த தேர்தலில் வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்துப் பட்டியலையும் இந்த முறை தாக்கல் செய்துள்ள சொத்துப்பட்டியலையும் பார்த்தாலே இது தெளிவாகப் புரியும். அதே நேரத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா என்றால் நிச்சயம் இல்லை. ஏழை ஏழையாகவே இன்னமும் இருக்கிறான்.
கடந்த ஆண்டு பீகார், அதற்கு முந்தைய ஆண்டு குஜராத் மாநிலங்களில் நடந்த தேர்தல்களிலும் தி.மு.க.,வைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி, இலவச அறிவிப்புகளை வெளியிட்டது. குஜராத் முதல்வர் மோடியோ, "ஓசி டிவிக்கு வரி விதிப்பேன்' என, அதிரடியாக மிரட்டினார். நிதிஷ் குமாரோ, "வளர்ச்சி அரசியலைத் தவிர வேறு பேச்சில்லை' என்றார். அந்தத் தேர்தல்களில், காங்கிரஸ் கட்சி காணாமல் போனது. தற்போது குஜராத் மாநிலம் தொழிற்புரட்சியில் முன்னணியில் உள்ளது. சாதாரண மக்களின் வாழ்க்கைத்தரம் தமிழக மக்களைவிட அதிக அளவு முன்னேற்றம் பெற்றுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து கிடையவே கிடையாது.
தி.மு.க அ.தி.மு.க விற்கு மாற்று இப்போது இல்லை – இவர்களில் ஒருவர்தான் ஆட்சி செய்யப்போகிறார்கள் என்றாலும் தமிழக மக்கள் இந்த இலவசங்கள் தங்களை ஒருபோதும் முன்னேறச்செய்யாது என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும். நமக்கும் மோடி மற்றும் நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் எப்போது கிடைக்கிறார்களோ அப்போது தமிழகம் உண்மையான முன்னேற்றத்தைக் காணும். அந்த நாளும் வந்திடாதோ ?
>>>> அதே நேரத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளதா என்றால் நிச்சயம் இல்லை.
அப்படியா?
குருமூர்த்தி சொல்லியிருப்பது இலவசங்கள் – இலவசங்கள் என்கிற போட்டி. இதனை ஈடு கொடுக்காவிட்டால் ‘குடும்ப’ ஆட்சியை மாற்ற முடியாது. மாணவர்களுக்கு மடிக்கணினி நல்ல திட்டம் தான் என நினைக்கிறேன். ஒரு வித சமநிலை ஏற்படும் படிக்கும் மாணவர்களிடையே.
மோடி எல்லாம் எதுக்கு ? அதுக்குத்தான் அம்மா இருக்காங்களே 🙂