உலகக் கோப்பை – இது வரை

நம் அரசியல்வாதிகள் எப்பொழுதும் சொல்லும் நீண்ட நெடும் பயணம் மாதிரி ரொம்ம்ம்ம்ப நாளா இந்த லீக் ஆட்டங்கள் நடந்து கொண்டே இருந்தது. அதுவும் ஒவ்வொரு க்ரூப்பிலுமே எந்த நாலு அணிகள் காலிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறப் போகின்றன என்று முதலிலேயே தெளிவாகத் தெரிந்த ஒன்றாகிப் போன பின் சிறிதும் சுவாரசியமே இல்லாத ஆரம்பம்தான் இந்த உலகக் கோப்பைக்கு. வெகு சில ஆட்டங்களே இதற்கு விதிவிலக்காக அமைந்தன. அயர்லாந்தும் நெதர்லாந்தும் பங்களாதேஷும் கூட சில நல்ல ஆட்டங்களை விளையாடினாலும் தொடர்ந்து அது போல ஆட முடியாமல் திணறியதுதான் நிதர்சனம்.

காலிறுதியில் எந்த அணி யாருடன் மோதப் போகிறார்கள் என்பது மட்டுமே கடைசி ஆட்டம் வரை முடிவு செய்யப்படாமல் இருந்ததுதான் ஒரு ஆறுதல். பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவை வென்று முதலிடத்தைப் பிடித்தது ஒரு ஆச்சரியம்தான். காலிறுதிக்குத் தகுதி பெற்ற அணிகளில் யார் மூன்றே மூன்று ஆட்டங்களைத் தொடர்ந்து ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே கோப்பை என்ற கொஞ்சம் அபத்தமான விதிகளோடே காலிறுதிப் போட்டிகள் தொடங்கின.

இது வரை இல்லாத சுவாரசியங்களோடு நாலு காலிறுதிப் போட்டிகளும் முடிந்திருக்கின்றன. பாகிஸ்தானோடு மோதிய மேற்கிந்திய தீவுகள் அணி நூற்றிச்சொச்சம் ரன்களோடு ஆட்டம் இழந்ததும், இரண்டாவதாக ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட்  எதுவும் இழக்காமல் நிதானமாக வென்றதும் ஆச்சரியம்தான். ஆஸ்திரேலியாவுடம் அபாரமாக ஆடிய பாகிஸ்தான் அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்ற வலுவான வெற்றி இது. மேற்கிந்திய தீவுகள் அணியின் முதன்மை பேட்ஸ்மென்கள் மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது. இதன் நீட்சியாக என்ன நடக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை சந்தித்த இந்திய அணியினர் வென்றாக வேண்டிய பேரழுத்தத்துடன் ஆட்டத்தினைத் தொடங்கினர். மேற்கிந்திய தீவுகள் அணியிருடனான போட்டியின் பொழுது சிறப்பாக இருந்த பௌலிங்  இந்த ஆட்டத்திலும் மிளிர்ந்தது. சொற்ப ஆட்டங்களுக்குள் முடிந்திருக்க வேண்டிய ஆஸ்திரேலிய இன்னிங்க்ஸை 260 ரன்கள் வரை கொண்டு சென்றது பாண்டிங் ஒருவரினால்தான். நன்றாக ஆடியே வேண்டும் என்ற முடிவுடன் வந்து ஆபத்தான ஷாட்கள் ஏதுமின்றி நூறு ரன்கள் அடித்த பாண்டிங்கிற்கு இது கடைசி ஆட்டமாக அமையக் கூடும் என்பதில் எந்த கிரிக்கெட் ரசிகருக்கும் வருத்தமிருக்கும்.

இரண்டாவதாக ஆடிய இந்திய அணியினர் ஒவ்வொருவரும் தமக்கான பங்கை சரியாகச் செய்து வெற்றியைத் தேடித் தந்தனர். நான்காம் முறையாக ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற யுவராஜ், அருமையாக பந்து வீசிய அஷ்வின் மற்றும் சாஹீர்கான் ஆகிய மூவரும் குறிப்பிடத்தக்க வகையில் விளையாடினர். கடைசியில் பொறுப்புடன் ஆடிய ரெய்னாவிற்கு ஒரு சபாஷ். மீண்டும் முதல் சில விக்கெட்டுகள் விழுந்த உடன் களமிறங்கிய தோணி ரன்கள் அதிகம் எடுக்காதது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதே.

உலகக் கோப்பைகளில் வென்று வந்த ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது ஒரு விதத்தில் அதிர்ச்சி என்றால் யாரும் எதிர்பார்க்காத மற்றொரு அதிர்ச்சி மூன்றாவது ஆட்டத்தில் நிகழ்ந்தது. இதுவரை ஆடிய எல்லாப் போட்டிகளிலும் வலுவாக ஆடி வந்த தென்னாப்பிரிக்கா அணியினரைக் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அணிகளில் மிகவும் வலிமை குறைந்த அணியாக கருதப்பட்ட நியூசிலாந்து அணியினர் மிகவும் எளிதாக வீழ்த்தினர்.

சோக்கர்ஸ் என்ற பட்டத்திற்காகவே விளையாடியதைப் போல இருந்தது தென்னாப்பிரிக்க அணியினரின் ஆட்டம். இந்தத் தோல்வியின் காரணமாக ஸ்மித் தனது அணித்தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார். இது முதல் பலி. இந்திய அணியினரின் கோச், கேரி கிர்ஸ்டன், தமது பதவிக்காலம் முடிந்த பின் மீண்டும் தென்னாபிரிக்கா சென்று அவ்வணியின் கோச்சாக பதவி ஏற்றுக்கொள்ளுவார் என நம்பப்படுகிறது. இந்திய அணியின் எழுச்சிக்குப் பின்புலமாக இருந்த இவர், அதே போல தென்னாப்பிரிக்கா அணியினரையும் வெற்றி அணியாக மாற்ற முடியுமா என்பது இவர் முன் இருக்கும் கேள்வி.

கடைசி காலிறுதி ஆட்டத்தில் இலங்கை மிகச் சுலபமாக இங்கிலாந்தை வீழ்த்தியது. இது வரை ஆடிய எல்லா ஆட்டங்களிலுமே வென்றாலும் தோற்றாலும் கடைசி ஓவர் வரை போராடியே வந்திருந்த இங்கிலாந்து அணியினர் இந்த ஆட்டத்தில் அது போன்ற நிலையை அடையவே இல்லை. ஏனோதானோ என்று பேட்டிங் செய்தாலும் கடைசியில் தட்டுத் தடுமாறி 229 ரன்கள் எடுத்ததே ஆச்சரியம்தான். ஆனால் 230 ரன்கள் எடுத்தால் ஜெயிக்கக் கூடிய நிலை என்று விமர்சகர்களால் ஆட்டம் ஆரம்பிக்கும் முன் சொல்லப்பட்ட பிட்ச் என்பதால் ஒரு 10 ரன் கம்மியாக இருந்தாலும் ஆட்டம் களை கட்டும் என நினைத்தேன். ஆனால் ஒரு விக்கெட் கூட விழாமல் இலங்கை வெற்றி பெற்றுவிட்டது.

வென்றாலும், இலங்கை அணியின் விளையாட்டு பாக்கிஸ்தான் அணியினைப் போன்று ஒரு துவம்சம் செய்யக் கூடிய விளையாட்டாக இல்லை என்றுதான் நினைக்கிறேன். முக்கியமாக இன்று சரியாக விளையாடி இருந்தால் இங்கிலாந்து அணியினரால் 200 கூட அடித்திருக்க முடியாது. அளவிட முடியாத அளவு கேட்சுகளை விட்டனர் இலங்கை அணியினர். முரளியின் ஒரே ஓவரில் இரண்டு முறை கேட்சு விட்ட கூத்தெல்லாம் கூட நடந்தது. கடைசியில் வெற்றி தோல்வியே முக்கியம் என்று வந்த பிறகு இவர்கள் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுவிட்ட பின் நமக்குப் பேசுவதற்கு ஒண்ணும் இல்லை.இது வரை ஒரே உலகக்கோப்பையில் இது போன்ற இரண்டு மகத்தான, பத்து விக்கெட் வித்தியாச வெற்றிகள் கிட்டிய போட்டிகள் நடந்ததே இல்லை.

அரையிறுதி ஆட்டங்கள் பற்றிய கணிப்புகள், வேறு சில விஷயங்கள் பற்றி அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.

பி.கு. : உலகக் கோப்பைப் பற்றி எழுத வேண்டாம், மற்றவர்கள் பெறும் திட்டை நானும் பெற வேண்டாம் என்று சும்மா இருந்தவனை விடாமல் துரத்தித் துரத்தி எழுத வைத்த கணேஷ் சந்திராவிற்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : March 28, 2011 @ 11:07 pm