மைனா

 

'மைனா மைனா நெஞ்சுக்குள்ள வம்பு பண்ணறே' பாடலுக்கேற்ப மனதைப் புரட்டிப் போடுகிறது மைனா. சூப்பர் ஸ்டாரும் உலக நாயகனும் பாராட்டின படம். கல்பாத்தி அகோரம், உதயனிதி ஸ்டாலின் தயாரித்த படம். மாமனாருடன் உறவு கொள்ளும் பாத்திரத்தில் நடித்த அமலாபாலின் இரண்டாவது படம் என்று படத்தின் எதிர்பார்ப்பைக் கூட்டி இருக்கும் ஏகப்பட்ட விஷயங்கள். நாயகனும் நாயகியும் சிறுவயது முதலே பழகி வரும் வழக்கமான காதல் கதையைத் தன் திரைக்கதையால் வேறுபடுத்திக் காட்டுகிறார் இயக்குனர் பிரபு சாலமன்.

 அனாதரவாய் தன் தாயுடன் நிற்கும் மைனாவிற்குத் தன் ஊரிலேயே பணியாரக்கடை வைத்து புதுவாழ்வளிக்கிறான் சிறு வயது சுருளி. படிக்க ஆசைப்படும் மைனாவைப் படிக்கவும் வைத்து உயிருக்குயிராய்க் காதலிக்கவும் செய்கிறார். மாப்பிள்ளை, மருமகனே என்று உசுப்பேத்தி மைனாவுடன் பழக விடும் தாய் குருவம்மாளே அந்தக் காதலைக் குழி தோண்டி புதைக்க நினைக்கிறார்.  விளைவு ஆத்திரத்தில்  குருவம்மாளைப் போட்டுத் தள்ள முயல நாயகனுக்குச் சிறைவாசம். சிறையிலிருந்து தப்பித்து மைனாவைப் பார்க்க முயலும் சுருளியைப் பிடிக்கக் காவலர்கள் இருவர் முயல மைனா- சுருளியின் காதல் பயணம் என்னானது என்பது மிச்சம் மீதி  சுவாரஸ்யங்கள்.

 கிங், லீ, கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படங்களில் இருந்து வேறுபட்டக் கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து திரைக்கதையிலும் அக்கறை காட்டி 'மைனா'வை வெற்றிச்சித்திரமாக்கி இருக்கிறார் இயக்குனர். பாத்திரங்களின் நிறைவான நடிப்பு,அருமையான இயக்கம், அட்டகாசமான இசை, மனதைக் கொள்ளை கொள்ளும் ஒளிப்பதிவு என்று படம் முழுவதும் ரம்மியம். நாயகி அமலாபால் அழகாக இருப்பதுடன் நடிப்பிலும் வெளுத்து வாங்கி இருக்கிறார். அவர் வசனம் பேசும் முன் கண்களே நடித்து விடுவது அருமை. 'சிந்து சமவெளி'யில் நடித்து சர்ச்சைக்குளானார். 'மைனா'வில் அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்திருப்பது பாத்திரத்திற்கான வெற்றி. விதார்த் 'தொட்டுப்பார்' நாயகன். இவரின் நடிப்பும் பாராட்டிற்குரியது. மைனாவிற்காக எதையும் செய்யத் துணியும் பாத்திரம். படத்தின் இறுதிக் காட்சியில் நடிப்புத்திறமையைக் காட்டி இருக்க வேண்டாமா? அடுத்த படத்தில் பார்க்கலாம்.

 இன்ஸ்பெக்டர், ஏட்டு, இன்ஸ்பெக்டரின் மனைவி, மைனாவின் தாய் என்று சிறு சிறு பாத்திரங்களும் நன்றாக நடித்திருப்பது கூடுதல் பலம். பெரியகுளம், மூணாறு, குரங்கணி பகுதிகளில் படம் பிடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் கூடுமான வரை இயற்கை ஒளியிலேயே படம் பிடித்திருப்பது பார்ப்பவரைப் படத்துடன் ஒன்றச் செய்கிறது. இமான் இசையில் அனைத்து பாடல்களும் இதம். 'ஜிங்கு' பாடல் ஆட்டம் போட வைக்கிறது. 'மைனா மைனா' பாடல் அருமையான மெலடி. எல்லாம் சரி. நாயகனுடன் பழக விடும் நாயகியின் தாயே பெண்ணிற்கு வேறு இடம் பார்ப்பது ஏன்? அருமையான கதை இருக்கும் திரைப்படங்களின் முடிவு சோகமாக முடிவதன் அவசியம் என்ன? படத்தின் சிற்சில குறைகளுக்கு இயக்குனரே பொறுப்பு. இருந்தாலும் அழகான காதல் கதையை  யதார்த்தமாகவும் தத்ரூபமாகவும் படம் பிடித்ததால் இயக்குனரை மனதாரப் பாராட்டுவோம். 'மைனா' இனிய பயணம்.

தொடர்புடைய படைப்புகள் :

  • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 1, 2011 @ 10:12 pm