அசோசியேட்டுகள் இல்லாத 2015 உலகக் கோப்பை

 

அடுத்த உலகக் கோப்பை போட்டிகளில் பத்து அணிகள் மட்டுமே இடம் பெறும் என்ற ஐசிசி அறிவிப்பு பெருவாரியான அதிருப்தியைக் கிளப்பி இருக்கின்றது. அது என்ன பத்து நாடுகள், இது ஏன் சில நாடுகளைப் பாதிக்கப் போகிறது என்று பார்ப்பதற்கு ஐசிசியின் கட்டமைப்பை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

 1909ஆம் ஆண்டு இம்பீரியல் கிரிக்கெட் கான்பரென்ஸ் என்ற பெயரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் பிரதிநிதிகளால் துவங்கப்பட்டதுதான் ஐசிசி. இந்த மூன்று நாடுகள் மட்டுமே அதிகாரபூர்வமான கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் விளையாட தகுதி பெற்றவையாகக் கருதப்பெற்றன. 1926ஆம் ஆண்டு இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து நாடுகளும் இந்த கான்பெரன்ஸில் சேர்க்கப்பட்டு அதிகாரபூர்வ டெஸ்ட் போட்டிகள் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. இந்தியாவின் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் ஏழாவது நாடாக சேர்க்கப்பட்டது. இனவெறி காரணமாக தென்னாப்பிரிக்கா நீக்கப்பட்டதால் மீண்டும் ஆறு நாடுகள் கொண்ட கான்பரன்ஸ் ஆனது.

 இதுவரை காமென்வெல்த் நாடுகள் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தது மாறி மற்ற நாடுகளும் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆன பொழுது 1965 ஆம் ஆண்டு இம்பீரியல் என்ற பெயர் மாறி இண்டர்நேஷனல் என்றானது. அப்பொழுது புதிதாகச் சேர்க்கப்படும் உறுப்பினர்கள் அசோசியேட் உறுப்பினர்களாகவே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். முன்பு இருந்த ஆறு நாடுகள் முழு உறுப்பினர்களாக ஆனார்கள்.  இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, பங்களாதேஷ் அணிகள் முழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டதன் மூலம் இன்று பத்து முழு உறுப்பினர்கள் உள்ளனர். இடையே ஐசிசியின் பெயர் இண்டர்நேஷனல் கிரிக்கெட் கவுன்சில் என மாற்றப்பட்டது. இதன் சுருக்கம் தொடர்ந்து ஐசிசி என்றே இருந்து வருகிறது.

 இன்று ஐசிசியில் 105 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களில் பத்து நாடுகள் முழு உறுப்பினர்களாகவும். 35 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்களாகவும், மற்ற 60 நாடுகள் அபிலியேட் உறுப்பினர்களாகவும் இருக்கின்றனர். முழு உறுப்பினர்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தகுதி பெற்றவர்கள். கிரிக்கெட் ஓரளவு பிரபலமாகவும் அதற்கான கட்டமைப்புகள் இருப்பதாகவும் கருதப்படும் நாடுகள் அசோசியேட் உறுப்பினர்கள் என்றும், அதற்கும் கீழே ஐசிசி விதிகளுக்குட்பட்டு விளையாடும் நாடுகள் அபிலியேட் நாடுகள் என்றும் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

 சரி, இப்பொழுது ஏற்பட்டுள்ள குழப்பம் என்னவென்று பார்க்கலாம். இப்பொழுது முடிந்த உலகக் கோப்பையை எடுத்துக் கொண்டால் பத்து முழு உறுப்பினர்களுடன் கனடா, அயர்லாந்து, ஹாலந்து மற்றும் கென்யா ஆகிய நான்கு அசோசியேட் உறுப்பினர்களும் பங்கு பெற்றனர். இதற்காக தகுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பையில் ஆடும் வாய்ப்பினை இந்த அணிகள் பெற்றார்கள். ஆனால் அடுத்த போட்டியில் பத்து முழு உறுப்பினர்கள் மட்டுமே இடம் பெறுவார் என்று ஐசிசி அறிவித்துள்ளது. இதனால் அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு (2011 – 2019) இந்த அசோசியேட் / அபிலியேட் உறுப்பினர்களால் உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத நிலமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நன்றாக முன்னேறி வரும் அசோசியேட் உறுப்பினர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 ஐசிசி இந்த குறைப்புக்கான காரணமாக என்ன சொல்கிறது? 50 ஓவர்கள் கொண்ட ஒரு நாள் போட்டியை திறம் வாய்ந்த பெரிய அணிகள் போட்டியிடும் ஒன்றாக வைத்துக் கொண்டு, வளர்ந்து வரும் நாடுகளில் கிரிக்கெட் பற்றிய புரிந்துணர்வு பெருக அங்கு டி-20 ஆட்டங்களைப் பிரபலப்படுத்த வழி செய்யலாம். அதற்காக அடுத்த டி-20 உலகக் கோப்பையை 16 அணிகள் பங்குபெறும் ஒன்றாக மாற்றிவிடலாம் என்று சொல்லுகின்றனர் ஐசிசி. இதனை ஏற்றுக் கொள்ளாத அசோசியேட் நாடுகள், தங்கள் நாடுகளில் கிரிக்கெட் முன்னேற வேண்டும் என்றால் உலகக் கோப்பையில் இடம்பெற ஒரு வாய்ப்பு இருக்க வேண்டியது அவசியம் என்கின்றன.

 இந்த உலகக் கோப்பைக்கு முன்னால் இது பற்றிக் கேட்கப்பட்ட பொழுது ஆஸ்திரேலிய அணியின் அப்போதைய கேப்டன் பாண்டிங், “உலகில் பல நாடுகளில் கிரிக்கெட் வளர வேண்டும் என்ற கருத்தில் மாறுபாடு இல்லை என்றாலும், அதற்கான தளம் உலகக் கோப்பை இல்லை. பெரிய அணிகள் சிறிய அணிகளை துவம்சம் செய்யும் பொழுது சிறு அணிகள் கற்றுக் கொள்ளப் போவது ஏதுமில்லை. அதனால் நான் ஐசிசியின் முடிவை வரவேற்கிறேன்” எனச் சொல்லியுள்ளார்.

 பாண்டிங் சொல்வதில் ஓரளவு உண்மை இருந்தாலும் சிறு அணிகள் தங்கள் திறமை வளர்ந்து வருவதைக் காட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2003ஆம் ஆண்டு நடந்த போட்டிகளில் கென்யா அரையிறுதி வரை முன்னேறியது. (இதுவரை முழு உறுப்பினர் ஆகாத நாடு அரையிறுதி வரை வந்தது அப்பொழுதுதான். ஆனால் அரசியல் காரணமாக அந்த அணி இடம் தெரியாமல் போய்க்கொண்டு இருப்பது வேறு கதை.) இந்த வருடம் கூட அயர்லாந்து அணி மிகப் பிரமாதமாக ஆடி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அதே போல் சென்ற வருடம் ஹாலந்து அணி பங்களாதேஷ் அணியை தோற்கடித்தது. எனவே வளர்ந்து வரும் நாடுகள் மேலும் முன்னேற உலகக்  கோப்பை போட்டிகளில் பங்கேற்ற வேண்டியது அவசியம் என்று அந்நாடுகள் கூறுகின்றன.

 ஐசிசியின் முடிவுக்குப் பின் வேறு சில காரணங்களும் இருப்பதாக சில குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது, முழு உறுப்பினர்களில் திறமை குறைந்த இரு அணிகளான பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளைக் காப்பாற்றுவதற்காக வலுவான அசோசியேட் உறுப்பினர்களை ஆட விடாமல் தடுக்கும் முயற்சி நடக்கிறது. இரண்டாவது, குறைவான அணிகள் பங்கேற்றால் பெரிய நாடுகள் அதிக போட்டிகளில் விளையாடலாம். வணிகரீதியாக இது பெரும்பலனைத் தரும். உதாரணமாக 1992ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பையில் இடம் பெற்ற அனைத்து அணிகளும் ஒன்றோடு ஒன்று மோதி, இறுதியில் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. அதே போல் செய்தால் இந்தியா போன்ற அதிக விசிறிகள் கொண்ட அணிகள், 9 போட்டிகளில் விளையாடி அதன் பின் அரையிறுதிக்குச் செல்லும்படி இருக்கும். இது வருவாயை அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு என்றும் சொல்லுகின்றனர்.

 இந்த முறை கூட பெரிய அணிகள் போட்டியிட்ட ஆட்டங்களுக்குத்தான் கூட்டம் அதிகமாக இருந்ததே தவிர சிறு அணிகள் விளையாடும் பொழுது மைதானங்கள் காலியாகவே இருந்தன. சுவாரசியம் இல்லாத ஆட்டங்களுக்கு விளம்பரம் முதற்கொண்டு எல்லாமே குறைந்து விடும். அதனை சரி செய்யவே இந்த முடிவு என்றும் சொல்கிறார்கள். உலகக் கோப்பை மூலம் வரும் வருவாயை ஐசிசி பெருமளவு தன் உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறது. இதில் முழு உறுப்பினர்கள் அதிக பங்கு எடுத்துக் கொள்ளவும் இந்த முடிவு ஏதுவானதாக இருக்கிறது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன.

 இந்த முடிவினால் பாதிக்கப்படும் நாடுகளான அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஹாலந்து, கனடா, கென்யா, பெர்முடா போன்ற நாடுகள் நிதமும் தங்கள் எதிர்ப்பை அறிக்கைகள் மூலம் காட்டி வருகின்றனர். பத்து அணிகள் மட்டும் பங்கேற்பதில் எதிர்ப்பு இல்லை, அப்படி இருக்கும் சமயத்தில் கடைசி இரண்டு அல்லது மூன்று இடங்களில் இருக்கும் முழு உறுப்பினர்களுடன் பலம் வாய்ந்த அசோசியேட் உறுப்பினர்கள் ஒரு தகுதி போட்டியில் பங்கேற்று அதில் வெல்லும் அணிகள் பலம் வாய்ந்த முழு உறுப்பினர்களோடு உலகக் கோப்பையில் பங்கேற்கட்டும். தங்களுக்குப் பங்கேற்ற வழியே இல்லாத நிலையைத்தான் எதிர்க்கிறோம் என்ற இவர்கள் கோரிக்கை நியாயமானதாகவே படுகிறது.

 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு இந்நாடுகளில் இப்போட்டி நடந்தது 1992ஆம் ஆண்டு. அதுதான் அசோசியேட் உறுப்பினர்கள் பங்கேற்காமல் நடந்த கடைசி உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.  

அசோசியேட் உறுப்பினர்கள் மட்டுமில்லாமல் பல முன்னணி வீரர்கள், இந்நாள் / முன்னாள் நிர்வாகிகள் என்று பலரும் ஐசிசியின் இந்த முடிவு தவறானது என்றே சொல்கிறார்கள். இவர்களின் கோரிக்கை ஐசிசியை எட்டுமா? இதுவரை தங்கள் முடிவில் மாற்றமில்லை என்று சொல்லும் ஐசிசி நிர்வாகத்தின் நிலை மாறுமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “அசோசியேட்டுகள் இல்லாத 2015 உலகக் கோப்பை

 • April 19, 2011 at 7:26 am
  Permalink

  இன்று வெளிவந்திருக்கும் செய்தியின் படி ஜூன் இறுதியில் ஹாங்காங்கில் நடைபெற இருக்கும் கூட்டத்தில் அசோசியேட் மெம்பர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கு நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கலாம்.

  http://www.espncricinfo.com/ci-icc/content/current/story/511767.html

  Reply
 • April 7, 2011 at 12:02 am
  Permalink

  இந்த விஷயத்தில் ஐசிசி திறமையை மதிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்த உலகக்கோப்பையில் அயர்லாந்து நன்றாகவே ஆடினார்கள். அவர்கள் உறுப்பினர்கள் இல்லை என்பதற்காக அவர்களுக்கு இடம் தர மறுப்பது தவறு. இதே போட்டியில் வெஸ்ட் இண்டீசும் பிரமாதமாக விளையாடவில்லை. அவர்கள் பெரிய அணிகளுக்கு ஒரு சவாலாக கூட இல்லை. 2007 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி விளையாடினார்கள்?

  330+ ரன்களை சேஸ் செய்யக்கூடிய அணி உலகக்கோப்பையில் விளையாடுவதில் என்ன தவறு. குறைந்த அணிகளை கொண்டு விறுவிறுப்பான ஒரு சீரீஸ் நடத்த வேண்டுமென்றால், உலகக்கோப்பைக்கு நடுவில் வரும் ஆண்டுகளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அவர்களில் முதல் பத்து அணிகளுக்கு வாய்ப்பளிக்கலாமே.

  எல்லா போட்டியும் விறுவிறுப்பாக இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு போட்டிக்கும் திரைக்கதை எழுதி செயல்படுத்தினால் மட்டுமே சாத்தியம்.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 6, 2011 @ 11:19 pm