Sara’s Law
முதன்முதலாக அமெரிக்கா வரும் எல்லோரையும் கவர்கின்ற ஒரு விஷயம் இங்கே இருக்கும் அகலமான சாலைகளும், அதில் மிகவிரைவாக வரிசையில் செல்லும் வாகனங்களும் தான். அதிலும் நியுஜெர்சியில் 287 சாலையில் பயணிததவர்களுக்கு தெரியும் 65 மைல் அதிகபட்ச வேகத்தடை என்றால், வாகனங்கள் போவது 80ல். அதிக தொழில்நுட்பம் நிறைந்த வாகனங்கள், சீரான சாலைகள், போலீஸ் பட்ரோல் என்றெல்லாம் இருந்தாலும் அந்த வேகத்தில் செல்லும் போது நிகழும் விபத்துக்கள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியன. இங்கே 17 வயதிலேயே வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றுவிடுகிறார்கள் மாணவர்கள். அதன் பிறகு பள்ளிக்குப் பேருந்தில் சென்றால் மற்ற மாணவர்களின் கேலிக்கு ஆளாவதால், கூடிய மட்டும் கார் வாங்குவதில், அல்லது அதற்கான காப்பீட்டை தான் வேலை பார்த்து கட்டிவிடுவதாக சொல்லி, காரில் பள்ளிக்கு வர ஆர்வம் அதிகம் காட்டுகிறார்கள். அதிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும்பாலோர் கார்களில்தான் பள்ளிக்கு வருகிறார்கள்.
சாரா டுபின் 2007 செப்டெம்பரில் காலை கல்லூரிக்கு சென்றிருக்கிறாள். 12 மணி அளவில் அவளின் பெற்றோர்கள் சாராவின் தோழியிடம் இருந்து சாரா எப்படி இருக்கிறாள் என்று கேட்டு வந்த தொலைபேசியால் கலக்கம் அடைந்து, உடனே காவல் நிலையத்திற்கு தொலைபேசி இருக்கிறார்கள். காவல்நிலையத்திலும் ஒரு கார் விபத்துக்குள்ளாகி இருக்கிறது, ஆனால் ஓட்டுநரின் அடையாளம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லி அழைத்துச் சென்ற மருத்துவமனை பெயரை சொல்லி இருக்கிறார்கள். அந்த மருத்துவமனைக்குச் சென்று அவர்கள் விசாரித்து அவர்கள் மகளைப் பார்க்க செல்ல கிட்டதட்ட 2 மணி நேரம் ஆகி இருக்கிறது. அதற்குள் அவர் கோமாவிற்கு சென்று இறந்து போய்விட்டார். அந்த கடைசி நேரத்தில் அந்த முக்கியமான சில நிமிடங்களில் தன் மகளுடன் பேசவோ அவள் வேதனையைப் பகிர்ந்துகொள்ளவோ முடியாமல் போனதால் வருந்திய பெட்டி, சாராவின் தாய் இது குறித்து ஏதேனும் செய்ய முடியுமா என்று வலையில் தேடி தன் முயற்சியால் ஒரு சட்டம் இயற்ற முயன்றிருக்கிறார். கிட்டதட்ட 4 வருடங்களின் முயற்சி, பல அரசியல் தலைவர்களுடன் பேசி கடைசியா அது சாரா லா என்ற பெயரில் நியுஜெர்சியில் சட்டமாகி இருக்கிறது.
இதன் மூலம், நியுஜெர்சி ஓட்டுநர்கள் நியுஜெர்சி அரசு வலைத்தளத்திற்கு சென்று தங்களுக்கு விபத்துநேர்ந்தால் உடனடியா செய்தி சொல்லவேண்டிய தங்கள் நெருங்கிய உறவினர் பெயரைப் பதிந்துகொள்ளலாம். இதன் மூலம் அநாவசிய நேரம் இழப்பு தவிர்கப்படுகிறது. நியுஜெர்சியின் வாகனத்துறை இதற்கான ஒரு ரெஜிஸ்ட்ரி ஏற்பாடு நிறுவ இருக்கிறாகள். சாமானியர்கள் கூட அமெரிக்காவில் சட்டங்கள் திருத்தவும் புதிய சட்டங்கள் இயற்றவும் செய்யக்கூடும் என்பதும் இதுபோன்ற சட்டங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவக்கூடியதாக இருப்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
பின் குறிப்பு : Motor Vehicle Commission இன்னும் 18 மாதங்களில் இதற்கான தொழில்நுட்பத்தை அமல்படுத்தியதும், இந்த சட்டம் நடைமுறைக்கு வரும்.