ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் – அறிந்தும் அறியாமலும் நாடகம்

 

நாடகங்களை பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் ஒவ்வொரு ஷோவிலும் எதாவது வித்தியாசங்களை செய்யும், அசட்டுதனமான காமெடி தோரணங்கள் நிறைந்த நாடகங்கள், சிரிக்க வைக்க மட்டுமே செய்யும் கதை எவ்வளவு கிலோ என்று கேட்டும் நாடகங்கள் எனக்கு பிடித்தே வந்திருக்கிறது. என்னதான் அறிவுசார் நாடக உலக ஜாம்பவான்கள் நாடகத்தை முன்னெடுத்து சென்று அடுத்த கட்டம், வட்டம் என்று நம்மை நகர்த்த முயற்சித்தாலும் அந்த பழைய அஞ்சு செட், 2 மணி நேர டிராமாக்கள் கொடுக்கும் சுகமே தனி. பெரும்ப்பாலும் ஒரு பெரிய திரையில் பின்னனி காட்சிகள், கொஞ்சம் வசதியான ட்ரூப்பாக இருந்தால் சில பல பூச்செடிகள், அவ்வப்போது வாகனங்கள் என்று நாடக செட்டுக்குள் புதுமை புகுத்தியவர்களையும் ரசித்திருக்கிறேன். 

மொத்த தமிழகமும் இப்படியாப்பட்ட நாடகங்களை, மிகை நடிப்புகளை இன்னும் மனதில் இருந்து நீக்கிவிடவில்லை என்பதைத்தான் இன்றைய தொலைக்காட்சி சீரியல்களின் வெற்றி நமக்கு காட்டுகிறது.

நான் கோவையில் வளர்ந்தபொழுது நாடகங்கள் நடக்கும் அரங்கு என்று மாநகராட்சி கலையரங்கம் ஒன்று மட்டுமே உள்ளது. அதில் வருடத்திற்கு அதிகபட்சம் 10 நாடகங்களுக்கு மேல் நடக்காது. அது தவிர அரசு பொருட்காட்சி மற்றும் கைத்தறி கண்காட்சிகளில் திறந்தவெளி அரங்க நாடகங்கள் சில அமெச்சூர் குழுக்களால் நடத்தப்படும். அப்பாவின் அரசாங்க உத்தியோகம் காரணமாக இந்நாடகங்களுக்கான இலவச சீட்டுகள் வீட்டிற்கு வருடந்தோறும் வந்துவிடும். அதில் குறைந்தது 15-20 நாடகங்களை பாப்கார்ன், பொருட்காட்சி அப்பளம் சகிதம் கொரித்துகொண்டே ரசிப்பது வாடிக்கையாகி போனது.

ஆனால் கல்லூரி படிப்பு, அதை தொடர்ந்து வெளியூர் வேலை என்றானபின் நாடகங்களை மறந்தே விட்டிருந்தேன். இப்போது அதன் மறுவடிவங்களை காண ஏதுவாக அமெரிக்காவில் ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் போன்ற குழுக்கள் நாடகங்களை நடத்துகிறார்கள். சாதாரணமாக நாடகம் நடத்துவதற்கு மிகவும் கடின உழைப்பு தேவைப்படும். அரங்க வடிவமைப்பு, ஒளி அமைப்பு, ஒலி அமைப்பு, பின்னணி ஓவியங்கள் என்று ஆயிரம் நகாசு வேலைகள் மற்றும் பர்மிட், மார்கெட்டிங் என்று அமெரிக்காவில் அதை செய்வதற்கு அதிக பட்ச உழைப்பு தேவைப்படும். அதையும் மீறி டெக்னாலஜி வளர்ந்த ஒரு சமூகத்திற்கு சென்ற நூற்றாண்டின் கலை வடிவத்தை வழங்க அசாத்திய பொறுமையும் துணிச்சலும் தேவை.

இதை எல்லாம் கடந்துதான் ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் இருந்து நாடகங்களை நடத்தி வருகிறார்கள் என்ற செய்தி பெரும் மலைப்பையே ஏற்படுத்துகிறது! முதலில் அவர்களில் இந்த அசாத்திய சாதனைகளை பாராட்டியே ஆகவேண்டும்!

சென்றவாரம் ஸ்டேஜ் ப்ரெண்ட்ஸ் குழுவினர் வழங்கிய அறிந்தும் அறியாமலும் நாடகத்தை காண சென்றிருந்தேன். கடந்த சில வருடங்களாக அவர்களின் நாடகங்களை தொடர்ந்து பார்த்து வந்தாலும் இந்த முறை கொஞ்சம் எதிர்பார்ப்பு கூடியே இருந்தது! காரணம் அவர்கள் இந்த முறை சுஜாதாவின் இரண்டு நாடகங்கள் அளிப்பதாக சொன்னதுதான். சுஜாதாவின் சிறுகதைகள் மற்றும் கணேஷ்-வசந்த் டிடெக்டிவ் கதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும் அவரது ஊஞ்சல்கள் நாடகங்களை பார்த்தபிறகுதான் சுஜாதாவால் நாடகங்களிலும் பிரகாசிக்கமுடியும் என்று எனக்கு உறுதியானது. அந்த நாடகங்களின் பாதிப்பே அறிந்தும் அறியாமலும் குறித்த என் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கலாம்.

சுஜாதாவின் முத்திரையான கடைசி நிமிச டிவிஸ்ட்டுகள் அதை அடையும் வகையில் நடையில் ஆங்காங்கே வரும் க்ளூக்கள் – அதை கண கச்சிதமாகவே குழுவினர்  நடத்திகாட்டினார்கள். 

முதல்கதை ஒரு ரயில் கம்பார்ட்மெண்டிற்குள் நடப்பதைப்போல. திருடன் ஒருவன் பயணமுடிவில் மனம்மாறி திருந்தி போவதுதான் ஒன்லைனர். அதற்கு அந்த கம்பார்ட்மெண்டில் அமரும் நபர்கள், ரயிலில் வரும் வியாபாரிகள், பிச்சைக்காரர்கள், போலீஸ், டிடிஆர் என்று கேரக்டர்களை அடுக்கி சுவாரஸ்யப்படுத்தி இருந்தார்கள். அதுவும் அந்த ரயில் செட் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் தங்கள் பாத்திரத்திற்கு பங்கம் வராமல் கச்சிதமாய் நடித்திருந்தார்கள். சீரியஸான கதையில் ஆங்காங்கே சில வசனங்கள் சிரிப்பையும் கைத்தட்டல்களையும் பெற்றுத்தந்ததை சுஜாதாவின் வெற்றி என்றுதான் கொள்ளவேண்டும். இன்றைய ஜெனரேஷன்களுக்கும் சுஜாதாவின் வசனங்கள் பிடித்திருப்பதைதான் இது காட்டுகிறது. ஊனமுற்ற பிச்சைக்காரராக நடித்தவரரும் லாட்டரி சீட்டு விற்பவராக மோகன் ராமும் சில நிமிடங்களே வந்தாலும் பார்வையாளர்களின் கைதட்டல்களை பெருவாரியாக அள்ளிச்சென்றனர். டிடிஆராக கணேஷ் சந்திரா, காதலனாக பாலாஜி ப்ரகாஷ் தங்கள் பாத்திரங்களை கச்சிதமாக செய்திருந்தார்கள். கதாநாயகனாக பாஸ்கர் நிறைய வசனங்கள், பெரும்பான்மையானவற்றை நல்ல உச்சரிப்புடன் சொன்னார், சில இடங்களில் ஸ்லாங் மாறினாலும் நன்றாகவே ஓடியது. சிறுவன் நல்ல புதுவரவு, பிற்காலத்தில் நல்ல நகைச்சுவை பாத்திரங்களை ஏற்று நடிக்கலாம். இரண்டு பெண் கேரக்டர்களும், சாமியாராக நடித்தவரும் குறைகூற முடியாதவாறே நடித்திருந்தனர்.

அடுத்தகதை டிடெக்டிவ் வகை கதை. பார்வையாளர்களை கதை செல்லும் போக்கில் நம்பவைத்து கடைசியில் எப்படி நடந்தது என்று குதுகலிக்கவைக்கும் கதை. சுஜாதாவுக்கு  அக்கார வடிசல் சாப்பிடுவதைப்போல, சாப்பிட்டிருக்கிறார். எதிர்பாராதவிதமாய் ஒரு கொலை நடந்துவிடுகிறது, அதை தொடர்ந்து போலீஸ் விசாரணை என்று நகரும் கதை. கடைசியில் டிப்பிக்கல் சுஜாதா டிவிஸ்ட். பார்வையாளர்கள் ரசித்து கைதட்டி வரவேற்றார்கள். முந்தைய நாடகத்தை காட்டிலும் நகைச்சுவைக்கு ஸ்கோப் கம்மி. ஆனாலும் சுவாரஸ்யம் குறைவில்லை. ரமணி, குரு, மோகன் ராம், சவுந்தரம் என்று கொஞ்சம் வெயிட்டான டீம். வசந்த் பாத்திரத்திற்கு பாலாஜியையோ, மகனாக நடித்தவரையோ போட்டிருக்கலாம். போலீஸ் விசாரணையின் போது முழுகதையையும் சொல்வதை தவிர்த்திருக்கலாம், மேலும் கடைசியில் மகன் ஒவ்வொன்றாய் விளக்கிகொண்டிருக்கவேண்டியதில்லை, சட்டென்று முடித்திருந்தால் பார்வையாளர்கள் அவர்களாகவே உணர்ந்திருப்பார்கள்! மற்றபடி அனைவரும் கொடுத்த பாத்திரத்தை செவ்வனே செய்திருந்தார்கள்.

நாடகத்தைத்காட்டிலும் நாடகத்திற்கு வந்த மக்கள் கூட்டம் என்னை கவர்ந்தது. பல இளையவர்களை காண முடிந்தது. சுமார் 500 – 600 பேர் வந்திருப்பார்கள். முக்கால் அரங்கம் நிரம்பி இருந்தது நிச்சயம் நல்ல விசயம்தான். மேலும் நாடக நடிகர்களில் புதிய முகங்களை காண மகிழ்ச்சியாய் இருந்தது. நாடக முடிவில் இயக்குனர் குருவும் இதையே தெரிவித்து அடுத்த தலைமுறைக்கு அவர்கள் குழு தயாராவதை பெருமிதத்தோடு குறிப்பிட்டார். மணிக்கு நூற்றுக்கணக்கான டாலர் சம்பாதிக்கும் இடத்தில் கை செலவு செய்து, ஊர் ஊருக்கு கட்டுமான சாமான்களையும், ஒளி ஒலி உபகாரங்களையும், நடிக நடிகைகளையும் அழைத்து சென்று இன்றைய தேதியில் நாடகம் நடத்துவது, அதற்காக மாதக்கணக்கில் ஒத்திகை பார்ப்பது என்பது எத்தனை சிரமம் என்று நண்பர் கணேஷ் சொல்லக்கேட்டிருக்கிறேன். அதனால் சிறுசிறு பிசக்குகள் இருந்தாலும் இத்தனை சிரமங்களுக்கிடையேயும் இந்த கலை வடிவத்தை பேணும் ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் குழுவினர்கள் கண்டிப்பாய் பாராட்டுதலுக்குரியவர்களே !

தொடர்புடைய படைப்புகள் :

2 thoughts on “ஸ்டேஜ் ப்ரண்ட்ஸ் – அறிந்தும் அறியாமலும் நாடகம்

 • June 21, 2011 at 3:34 am
  Permalink

  Sujatha printed his impression on everywhere – short stories ,novels, drama,and essays.he is 20th century wonder extended to 21st. His one page articles came in Kumutham, and Kanaiyazhi is very very excellent. stage friends performence to be encouraged.
  nagarajan

  Reply
 • May 2, 2011 at 4:05 pm
  Permalink

  Hi Stage Friends,

  Many congratulation. This is latha. It was great pleasure to watch “Arinthum Ariyamalum” drama.After my college and school, this was the first stage drama ,i attended. It was really nice and felt like we were in india . Each and every characters was did naturally. we are expecting more comedy stage performance from you group. Keep rocking

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : April 29, 2011 @ 12:50 pm