180 நூற்றெண்பது
தமிழ்த்திரையுலகிற்கு வசந்தகாலம் என்று சொல்லுமளவிற்குச் சிறந்த திரைப்படங்கள், புத்தம்புது கதைக்களங்கள், வித்தியாசமான முயற்சிகள் என்று சமீபத்திய சில படங்கள் பொலிவு பெற்று வருவது ஆரோக்கியமான விஷயமாகும். மணிரத்னத்தின் பட்டறையிலிருந்து இன்னொரு சிஷ்யர் ஜெயேந்திரா இயக்கத்தில் வெளிவந்துள்ள நூற்றெண்பது வித்தியாசமான படைப்பு. விளம்பரப்படங்கள் எடுப்பது சிறந்த கலை. சில நிமிடங்களுக்குள் தான் சொல்ல வந்ததை நச்சென்று தெரியப்படுத்த தனித்திறமை வேண்டும். அந்த வகையில் ஆயிரம் விளம்பரப்படங்களை எடுத்த பெருமைக்குரியவர் இயக்குனர் ஜெயேந்திரா. அந்த அனுபவமும் சுபாவின் கூட்டணியும் நூற்றெண்பது திரைப்படத்தை அழகாகவும் நேர்த்தியாகவும் செதுக்க உதவி இருக்கிறது.
காசியில் எந்த பில்டப்புகளும் இல்லாமல் கதாநாயகன் சித்தார்த் அறிமுகம். முகத்தில் வெறுமை, எங்கு செல்ல என்று தெரியாத தவிப்பு என்று தவிக்கும் சித்தார்த்திற்கு கள்ளங்கபடமில்லாத சிறுவனின் சிரிப்பு போதிமரமாகத் தன் பாதையைத் தெரிவு செய்கிறார். சென்னைக்கு வரும் சித்தார்த் மெளலி- கீதா வீட்டு மாடியில் மட்டுமில்லாமல் அவர்கள் மனதிலும் குடியேறுகிறார். கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவனை விளையாடச் செய்து விட்டு தான் சுண்டல் விற்கிறார். இஸ்திரிக்காரருக்கு ஓய்வளித்து தானே செய்கிறார். வயதான பாட்டியைத் தன் வண்டியில் கொண்டு விடுகிறார். அட, ஆஹா என்று நம்மைப் போலவே புகைப்படப் பத்திரிகையாளர் நித்யா மேனனிற்கும் ஆச்சரியம் வருகிறது. சில நாட்களில் சித்தார்த்துடன் நட்பாக, நட்போ காதல் பூவாக மலர்கிறது. நித்யா காதலை வெளிப்படுத்தும் வேளையில் சித்தார்த் வீட்டைக் காலி பண்ணிச் செல்ல அவரைத் தொடரும் நித்யாவிற்கு விபத்து ஏற்பட காப்பாற்ற வேண்டிய பொறுப்பு சித்தார்த்திற்கு வருகிறது. மருத்துவரிடம் தன் புலமையைக் காட்டும் போது தான் ரசிகனுக்குத் தெரிய வருகிறது சித்தார்த்தும் மருத்துவர் என்று. இடையிடையே சித்தார்த்தின் பின்னோக்குப் பாதையில் ப்ரியா ஆனந்த்தின் காதல் காட்சிகள் ஓட, ஏன், என்ன? போன்ற மிச்சம் மீதி சுவாரஸ்யங்களுக்கு இடைவேளைக்குப் பின் நேர்த்தியாக விடை தருகிறார் இயக்குனர்.
முன்பாதி சிங்காரச்சென்னையில் நகர, பின்பாதி அமெரிக்காவின் அழகை அள்ளிக் காட்டுகிறது.
இயல்பான நடிப்பால் சித்தார்த் ரசிகர்களின் இதயங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கிறார். தெலுங்கு- தமிழ் என்று இரட்டைச்சவாரி செய்ய இந்தப் படத்தின் வெற்றி உதவட்டும். ப்ரியா ஆனந்திற்கும் சித்தார்த்திற்குமான காதல் காட்சிகள் ஒவ்வொன்றும் அழகான ஹைகூக்கள். அதிலும் ப்ரியாவிற்கு மருத்துவ சோதனை செய்யும் வேளையில் சித்தார்த்தின் காதுகளுக்கு மட்டும் கேட்கும் 'புது வெள்ளை மழை' பாடல் நல்ல ரசனை. ப்ரியாவும் நித்யாவும் கதாநாயகிகள். ப்ரியாவின் நடிப்பு அபாரம். வெளிநாடு வாழ் இந்தியப்பெண்ணின் உடல்மொழியை அச்சுப் பிசறாமல் வெளிப்படுத்தியிருக்கிறார். நடிப்பும் அழகு. கொழுக் மொழுக்கென்று இருக்கும் அமுல் பேபி நித்யா தமிழைக் கடித்துக் குதறியிருக்கிறார். நமீதா தமிழ், குஷ்பூ தமிழ் போல் இதுவும் ஒருவித அழகு தான். சித்தார்த்திடம் காதலைச் சொல்ல முடியாமல் விழிகளால் தவித்தும் மனதிற்குள் பேசியும் வார்த்தைகளின்றியும் நடிப்பில் முதல் வகுப்பில் தேறி விடுகிறார். நித்யாவின் தோழி, மெளலி, கீதா, சித்தார்த்தின் நண்பன் என்று அனைவரும் மனதில் நிற்கிறார்கள். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு அற்புதம். ரெட் ஒன் கேமிராவைப் பயன்படுத்தி அட்ட்காசமான ஒளியைப் பதிவு செய்துள்ளார். இவரையும் இன்னொரு கதாநாயகன் என்று சொன்னால் மிகையன்று.
ஷரத்தின் பின்னணி இசை பிரம்மாண்டம். பாடல்களை விடப் பின்னணி இசையில் அதிக மதிப்பெண்கள் வாங்கிக் கொள்கிறார். சுபாவின் வசனங்கள் அட்டகாசம். படத்தில் சிற்சில குறைபாடுகளும் இல்லாமலில்லை. சித்தார்த்தின் அம்மா இறந்த தடம் மறைவதற்குள் ப்ரியாவைச் சித்தார்த் மணந்து மகிழ்ச்சியாக இருப்பது நெருடல். அதற்கு அம்மாவின் ஆசை என்றெல்லாம் நியாயம் கற்பித்தாலும் ஐயே என்று முகம் சுளிக்கச் செய்கிறது. இரண்டாம் பாதியின் தொய்வும் சரி செய்திருக்க வேண்டிய ஒன்று.
'சாகும் நாட்கள் தெரிந்து விட்டால் வாழும் நாட்கள் நரகமாகி விடும்' 'வாழும் வரை மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்' என்ற இருவரி கருத்துக்களைக் க(வி)தையாக்கிய இயக்குனருக்குப் பாராட்டுக்கள். குறைகளைக் களைந்து விட்டுப் பார்த்தால் நூற்றெண்பது நூற்றுக்கு எண்பது எடுத்து முதல் வகுப்பில் தேறி விடுகிறது.
அன்புத் தம்பி அரவிந்திற்கு,
பொதுவாக எல்லாருமே பணத்தைத் தேடுவதிலும் தன் குடும்பத்தைப் பேணுவதிலுமே நேரத்தையும் பணத்தையும் செலவழிக்கின்றனர். இந்த கதா நாயகனுக்குச் சாகும் நாட்களை அனுபவிக்க வேண்டிய சூழல், வாழும் நாட்களை நரகமாக்கிக் கொள்ளாமல் தன்னால் முயன்ற அளவிற்கு பிறருக்கு உதவ நினைக்கிறார். மேலும் எந்த நேரத்திலும் இறந்து போகும் நோய் இருப்பதால் மனைவியுடனே இருந்து அவளின் மனதை இன்னும் வருத்தப்பட வைக்க விரும்பவில்லை, பச்சாதாபத்தையும் விரும்பவில்லை. அரைத்த மாவை அரைத்து, புளித்த தோசையாக உண்டு கொண்டிர்க்கும் ரசிககக் கண்மணிகளுக்கு இந்தப் படம் புதிய முயற்சி. அந்த வகையில் நல்ல படம்.
என் பாசத்திற்கு உரிய அக்கா அவர்களுக்கு , ஒஸ்திகு வரவேற்பு குடுத்தது எனக்கு மிகவும் வருத்தம் தான். இருந்தாலும் 180 படம் நல்ல படம் என்று சொல்வதும் எனக்கு வருத்தம் கொடுக்கிறது. தான் கான்செர் நோயாளி என்று தெரிந்ததும் மனைவியை விட்டு ஓடி மற்றவுருகெலாம் உதவி செய்ததற்கு மனைவிக்கே செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. எந்த அடிப்படையில் அக்கா நல்ல படம் என்று சொல்றீர்கள் என்பது புதிராகவே இருக்கிறது.
தம்பி அரவிந்த், உங்களைப் போன்ற ரசிகக்கண்மணிகள் ஒரு காட்சியைக் கூட ரசிக்க முடியாத ‘ஒஸ்தி’க்குக் கொடுக்கும் வரவேற்பையும்(ஓபனிங்) ஊக்கத்தையும் நல்ல திரைப்படங்களுக்குக் கொடுக்காததே இவை போன்ற சிறந்த படங்களின் தோல்விக்குக் காரணம் என்று கருதுகிறேன். ஆனால் இன்னும் சிறிது காலம் கழித்துப் பார்த்தால் வசூலில் இல்லா விட்டாலும் காலத்தால் அழியாமல் நல்ல திரைப்படங்கள் நிலைத்து நிற்கும்.
Akka padam 2011 flop listil first place!Unakku teriyuma!