ஆயிரத்தில் ஒருவன்

 

'ஆயிரத்தில் ஒருவன்' பல தடைகளைத் தாண்டி பொங்கல் வெளியீடாக வெளிவந்திருக்கிறது. தமிழ்த் திரையுலக வரலாற்றிலேயே நிச்சயம் வித்தியாசமான முயற்சி தான். 

கதைப்படி,சோழர்களின் இருப்பிடத்தைக் கண்டறியச் சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பிரதாப் போத்தன் மாயமாக, அவரைக் கண்டுபிடிக்கவும் சோழர்களின் இருப்பிடத்தைக் கண்டறியவும் ரீமாசென் தலைமையிலான மற்றொரு குழு புறப்படுகிறது. பிரதாப் போத்தனின் மகளும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ஆண்ட்ரியாவும் உதவிக்குக் கார்த்தி தலைமையில் கூலியாட்களும் ரீமாசென் குழுவுடன் பயணிக்கத் தொடங்குகிறார்கள். பயணத்தின் போது ஏற்படும் பேராபத்துகளைச் சமாளித்து ஒவ்வொரு கட்டமாக முன்னேறும் அவர்களின் சாகசப்பயணம் வெற்றி அடைந்ததா? சோழர்களைக் கண்டுபிடித்தார்களா? என்பன மீதி சுவாரஸ்யங்கள். ஹாலிவுட் ஸ்டைலில் நகரும் முதல் பாதி வாவ். அருமையாகச் செல்ல வேண்டிய இரண்டாம் பாதி உவ்வே.

சோழ மன்னனாகப் பார்த்திபன் அசத்தல் தேர்வு, இவரின் கம்பீரமும் நடிப்பும் பிரமாதம். இவரது பாத்திரத்தைப் பற்றி மேலும் விமர்சித்தால் படத்தின் சஸ்பென்ஸ் உடைந்து விடும். கார்த்தி யதார்த்தமான நடிப்பில் அசத்துகிறார். ரீமாவையும் ஆண்டிரியாவையும் அடையத் துடிக்கும் கார்த்தியின் சபல புத்தி செல்வராகவனின் டச். இரண்டாம் பாதியில் கார்த்தியின் நடிப்பிற்குத் தீனி கிட்டவில்லை, இவரது பாத்திரம் அந்தரத்தில் தொங்குவது போல உள்ளது. கவர்ச்சிப்பதுமையாய் வந்து போகும் ரீமா நடிக்கவும் செய்திருக்கிறார். ஆண்டிரியாவிற்கும் அழகம்பெருமாளிற்கும் நடிக்க நல்ல வாய்ப்பு.அதை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர். 

படத்தைப் பிரம்மாண்டமாக உருவாக்க உதவிய தயாரிப்பாளர் ரவீந்திரனைப் பாராட்டியே ஆக வேண்டும். பணத்தை வாரி வழங்கியிருக்கிறார். ஒளிப்பதிவும் கிராபிக்ஸ் விஷயங்களும் கலக்கல்.ஜி.வி.பிரகாஷின் இசையில் 'உன் மேல ஆசை தான்' பாடலும் 'அதோ அந்த பறவை போல' ரீமிக்ஸ் பாடலும் நன்றாக உள்ளன. ஆனால் பாடல்கள் இடைச்செறுகலே தவிர படத்திற்குப் பயன்படவில்லை. 

அம்புலிமாமா கதைகளில் படித்திருக்கும் கற்பனை விஷயங்களைப் படம் பிடித்திருக்கும் முதல் பாதியின் திகிலும் பிரம்மாண்டமும் அற்புதம். இரண்டாம் பாதியின் போக்கும் நோக்கும் இயக்குனரின் குழப்பத்தையும் கதையைக் கொண்டு செல்லும் விதத்தில் அவருக்குண்டான தடுமாற்றத்தையுமே காட்டுகிறது. 

மன்னர்களைப் பற்றிய வரலாறு என்பது அவர்களின் ஆட்சி முறை,வாழ்க்கை,கலாச்சாரம்,பழக்கவழக்கங்களைப் பறைசாற்றுவதாகும். 

திரைப்படம் என்பது உண்மைப்பதிவல்ல, அது இயக்குனரின் ரசனைக்கும் கற்பனைக்கும் ஏற்பச் செதுக்கப்படும். ஆனால் வரலாற்று விஷயங்களைப் படம் பிடிக்கும் முன்பு அது தொடர்பான வரலாற்று விஷயங்களை இயக்குனர் படித்து புரிந்து கொண்டு அதன் பிறகு படத்தை இயக்குவது மிக மிக அவசியம். இல்லையெனில் சரித்திரத்தைப் பற்றிய தவறான செய்தியைப் பரப்பிய செயலுக்கு ஆளாக நேரிடும். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இளைய தலைமுறைக்குப் புத்தகம் படிக்கவே நேரமில்லை. இந்தத் திரைப்படத்தைப் பார்க்கும் மக்களுக்குச் சோழ மன்னர்களைப் பற்றியும் பாண்டிய மன்னர்களைப் பற்றியும் தவறான மதிப்பீடு ஏற்படும் வாய்ப்பே அமைகிறது. 

இக்கதையில் வரும் அனைத்துப் பாத்திரங்களும் இயக்குனரின் கற்பனையே எனும் போது சோழ- பாண்டியர் பெயரை ஏன் பயன்படுத்தி அவர்களின் பெயருக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும். இந்தப் பெயர்களைப் பயன்படுத்துவது ஒன்றே மக்களைச் சென்றடைய சிறந்த வழி என்ற இயக்குனரின் சீரிய சிந்தனை காரணமாக இருக்கலாம்.  சோழர்கள் என்றாலே அவர்களின் சிறந்த ஆட்சிமுறையும் குடவோலை முறையும் நினைவிற்கு வரும். கற்பனை என்றாலும் இத்திரைப்படத்தில் சோழரை நரபலி கொடுப்பவராகவும் முட்டாளாகவும் அந்தப்புரத்தில் கலவியில் ஈடுபடுவராகவும் சித்திரித்திருப்பது வருத்தத்தைத் தருகிறது. தஞ்சை விவசாயிகள் எலிக்கறி உண்ட வேதனையையும் ஈழத்தமிழர்கள் ராணுவத்தினரிடம் படும் இன்னல்களையும் சோழர்களின் மூலம் காட்டியிருக்கிறார். படத்தின் மூலம் சொல்ல வரும் செய்தி என்ன என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். திரைப்படம் என்ற ஆற்றல் வாய்ந்த ஊடகத்தைப் பயன்படுத்தி சோழர்- பாண்டியர் வரலாற்றின் பெருமையை அழகாகப் படமாக்கியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் தவற விட்டு விட்டார்.

படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஒதுக்கிய பணத்தையும் நேரத்தையும் கதைக்கும் திரைக்கதைக்கும் ஒதுக்கியிருந்தால் ஆயிரத்தில் ஒருவனாக ஜொலித்திருப்பான். மற்றபடி திரையரங்கில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய பிரம்மாண்டமான படம்.

தொடர்புடைய படைப்புகள் :

11 thoughts on “ஆயிரத்தில் ஒருவன்

  • March 17, 2012 at 2:54 am
    Permalink

    hats off to Selva sir.. Nobody have the guts to do make a such a great Adventure thriller.. Once again you proved that you r the best Entertainer.. Our people Watch Hollywood movies only and never support if anybody try a different films in Tamil..
    A grt effort from one of young director of tamil cinema..!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 21, 2010 @ 9:48 pm