பி.ஜே.பி யின் நப்பாசை
2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கித் தற்போது சிறையிலிருக்கும் கனிமொழிக்கு ஜாமின் வழங்க வேண்டுமென்று பா.ஜ.க. தலைவர் ஜஸ்வந்த் சிங் கூறி இருக்கிறார். இதே கருத்தை யஷ்வந்த் சின்ஹாவும் வழிமொழிந்து இருக்கிறார். இது தன் சொந்தக் கருத்துத் தான் என்றும் கட்சியின் கருத்தல்ல என்றும் ஜஸ்வந்த் சிங் மேலும் கூறியுள்ளார்.
ஜாமின் மறுக்கப்பட்டது நீதி மன்றங்களால். நீதியை நிலை நாட்டத்தான் நீதி மன்றங்களே இருக்கின்றன. அப்படி இருக்கையில் நீதி மன்ற நடவடிக்கைகளில் குறைகாண்பது முதிர்ந்த அரசியல்வாதிகளுக்கு அழகல்ல; ஜாமின் வழங்கக் கூடாது; அது அவர்கள் வழக்கை பாதிக்கும் என்று சி.பி.ஐ. உறுதியாக இருக்கையில் அவர்களின் நடவடிக்கைகளை முழுதும் தெரிந்து கொள்ளாத இந்த பி.ஜே.பி.த் தலைவர்கள் வாய்க்கு வந்தபடி அறிக்கைகள் விடுவது அவர்களுக்கு அழகல்ல; வழக்கிற்கும் குந்தகம் விளைவிக்கும்.
தமிழ்நாட்டில் யாருமே கூட்டணி வைத்துக் கொள்ள விரும்பாத நிலையில் தன்னுடன் தி.மு.க கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நப்பாசையில் அறிக்கை விடுகிறார்களோ என்னவோ இந்த பி.ஜே.பி. தலைவர்கள்.