முன் தீர்மானங்கள்
சீறியபடி போய்க்கொண்டிருந்தது ரயில். ஜன்னலோரத்தில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் அருகில் அவன் தந்தையுடன் அமர்ந்திருந்தான்.
வெளியே வேடிக்கை பார்த்தபடியே வந்த அந்த இளைஞன் முகத்தில் அப்படியொரு பரவசம் ! கைகளை வெளியே நீட்டி, "அப்பா.. இங்க பாருப்பா ! மரமெல்லாம் எல்லாம் பின்னால் போகுது!" என்று சொல்ல, சிரித்தபடியே மகனின் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் வியந்துகொண்டே வந்தார் தந்தை.
அவர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு இளம் தம்பதிகளோ, இவர்கள் இருவருக்கும் இடையிலான உரையாடலையும், அந்த மகனின் செயல்களையும் கவனித்துக் கொண்டே வந்தனர்.
'இருபத்தியஞ்சு வயது பையன் இப்படியா சின்னக் குழந்தை போல் நடந்துக்குவான்!' என்ற முகச்சுளிப்பு அவர்களிடம். திடீரென அந்த இளைஞனிடமிருந்து உற்சாகக் குரல். "அப்பா.. அங்க பாருங்க ! ஒரு குளம் அதுலே ஒரு வாத்து என்ன அழகா நீந்திக்கிட்டிருக்கு, பாருங்களேன்!" தந்தையும் எட்டிப் பார்த்து வியந்தார்.
சில நிமிடங்களில், "அப்பா..மேகமெல்லாம் ரயில் கிட்டவே வருது பாருங்களேன்!" என்றான். ஆகாயத்தை நிமிர்ந்து பார்த்தபடி. தந்தையிடம் மீண்டும் புன்னகை ! தம்பதியோ இப்போது தர்மச்சங்கடத்தில் நெளியவே ஆரம்பித்துவிட்டனர். அப்போது திடீரென மழைத் தூறல் விழவும், சில துளிகள் இளைஞனின் கையில் விழுந்து நனைத்தன. மீண்டும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்த இளைஞன், ஒரு நொடி கண்களை மூடித் திறந்து, "அப்பா..மழை பெய்யுது பாருங்க.. ' என்றான் கண்கள் பிரகாசிக்க.
தம்பதியால் அதற்கு மேலும் பொறுக்க முடியாமல், அந்தத் தந்தையிடம் கேட்டே விட்டனர்.."உங்க மகனை நீங்க என் ஒரு நல்ல ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போய் காட்டக் கூடாது?"
தந்தை அமைதியாக பதில் சொன்னார். "நாங்க இப்போ ஆஸ்பத்திரிலிருந்துதான் வர்றோம். என் மகனுக்கு கண் ஆபரேசன் முடிந்து, இன்னிக்குத் தான் கட்டுப் பிரிச்சாங்க. ரொம்ப வருஷம் கழிச்சு இப்போதான் பார்வை கிடைச்சிருக்கு அவனுக்கு!"
தம்பதி பேச்சற்றுப் போனார்கள்.
பல பிரச்சனைகளுக்குக் காரணமே.. 'இது இப்படித்தான் இருக்கும்..இவர் இப்படித்தான் இருப்பார்' என்ற நம் முன் தீர்மானங்கள்தான். உண்மை என்னவென்று அறிந்துகொள்ளாமல், மேலோட்டமாகப் பார்ப்பதை வைத்து எடுக்கும் முடிவு எப்போதுமே சரியாக இருக்காது.
அறியாமல் ஒரு சொல்லும் சொல்லவேண்டாம் !
Good one but seems like I have read it somewhere in English!
Good to read in Tamil.
இந்த கதை குமுதத்தில் ஒரு பக்க கதையாக வந்துள்ளது. காப்பியாக இருக்கலாம் உடனே கவனியுங்கள்..
நன்றாக இருந்தது….ஆனால் யதார்த்தம் தொலைக்கப்பட்டதை உணர்ந்தேன்
சரியான கரு(த்து) வாழ்த்துக்கள் கார்த்திக்.