பாவம் தமிழ் மக்கள்!

 

அண்மையில் கோடம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து வளசரவாக்கம் வரையில் காலை 6.30 மணியளவில் ஆட்டோவில் செல்லும்படியான இக்கட்டான சூழல் நேரிட்டது. ”180 ரூபாய் தாங்க” என்று கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் கேட்டார்கள். பதில் சொல்லாமல் நகர்ந்தவுடன், “எவ்வளவுதான் தருவீங்க?” என்றார்கள். “15 ரூபாய்” என்று பதில் சொன்னேன்.

குழுமி நின்ற ஆட்டோ ஓட்டுநர்களில் பாதிப்பேர் காணோம்.

“15 ரூபாய்க்கு ஷேர் ஆட்டோ கூட வர மாட்டான்” என்று கேலி பேசினார்கள்.

“180 ரூபாய் பில் கேட்ஸ் கூட தர மாட்டாரு” என்று பதில் சொன்னேன்.

சற்றே நகர்ந்து வந்த உடன் எதிரில் வந்த ஆட்டோவை நிறுத்தி பேச ஆரம்பித்த உடன், பின்னாடியிலிருந்து குரல் வந்தது. “யோவ்.. ஸ்டாண்ட் ஆட்டோவெல்லாம் நிக்குறோம். நீ ஏத்தாத!”. குரல் விடுத்தது ஏற்கனவே பேசிய ஆட்டோக்காரர்கள்.

வந்த ஆட்டோ பதிலேதும் சொல்லாமல் திரும்ப போய் விட்டது.

நானும் எதுவும் பேசாமல் நடந்து வந்தேன். சற்று தூரத்தில் திருப்பத்தில் ஏற்கனவே எதிரே வந்த ஆட்டோ நின்று கொண்டிருந்தது. 

“சார்.. 70 ரூபாய் தாங்க… வாங்க” என்று அழைத்தார்.

சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் தான் இருக்கும். வெகு நியாயமான தொகை அது.

ஏறி அமர்ந்து பயணித்தேன். வீடு வந்திறங்கி நூறு ரூபாயாக கொடுத்து அனுப்பியது தனிக் கதை!

“இந்த மாதிரி ஆட்டோக்காரங்களால தான் என்ன மாதிரி நல்ல ஆளுங்களுக்கும் பிரச்னை” என்று புலம்பினார் அந்த ஆட்டோ ஓட்டுநர். “பேரு மாணிக்கமா?” என்று கேட்க மறந்து விட்டது!

ooOoo

அண்மையில் 'தொடுவானம்' (www.thoduvanam.com) துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரயிலில் மதுரை செல்ல நேரிட்டது. அது என்னவோ நமக்கு லோயர் பர்த் கிடைத்தால் அருகில் பயணிப்பவர் நெஞ்சு வலி பேஷண்டாகவே எப்போதும் மாட்டுகிறார். போதாக்குறைக்கு நாம் ரயில் பெட்டியினுள் ஏறி நமது சீட்டை பார்க்கும் போதே காச நோய் முற்றிய நிலையில் இருப்பது போல இருமி வேறு காட்டுவார்கள். நாமாகவே, “சரி சரி.. நீங்களே லோயர் பர்த்தில் படுத்துக் கொள்ளுங்கள்” என்று அவருடைய அப்பர் பர்த்தில் ஏறித் தொலைக்க வேண்டியிருக்கும். இதே நமக்கு அப்பர் பர்த் கிடைத்து அன்றைக்கென்று பார்த்து லோயர் பர்த் கேட்டுப் பார்த்தால் போதும், “முடியாதுங்க, லோயர் பர்த்துக்காகத் தான் நான் நேத்தைக்கு போக வேண்டிய ஆளு, இன்னைக்கு ரிசர்வ் செஞ்சு வந்திருக்கேன்” என்று பதில் வரும்.

வழக்கம் போல ஒரு ஆள், அவர் மனைவி, மாமியார் மூவரும்.. கூடவே ஒரு கைக்குழந்தை. “உங்களுடைய லோயர் பர்த்தை நாங்கள் உபயோகித்துக்கொள்ளலாமா” என்று மருந்துக்குக் கூட கேட்கவில்லை. அப்படியே படுத்து விட்டார்கள். கூடவே கைக்குழந்தை இருந்ததால் கிளம்பிய ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அப்பர் பர்த்தில் ஏறிப் படுத்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் எதிரில் இருந்த ‘சைடு லோயர்’ பர்த்தில் வந்து அமர்ந்தார் டி.டி.ஆர்.

கிட்டத்தட்ட சென்னையிலிருந்து விழுப்புரம் வரும் வரை அவர் லைட்டை அணைக்கவேயில்லை. போதாக்குறைக்கு அடுத்த சந்தில் ஒரே பர்த்தில் அமர்ந்து கொண்டு 4 கல்லூரி மாணவர்கள் ‘பீட்டர்’ விட்டுக் கொண்டிருந்தார்கள். “சார்.. பர்த் ரிசர்வ் செஞ்சுட்டு வரதே படுத்து தூங்குறதுக்கு தான். லைட்டை கொஞ்சம் ஆஃப் பண்ணிடுங்களேன்” என்றதற்கு அந்த டி.டி.ஆர்., “எனக்கு வேலை இருக்கு” என்று முறைத்தவாறு பதில் அளித்தார்.

மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்து கடைசியில் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல், ”உங்களுக்கு வேலை இருந்தால் கதவுக்குப் பக்கத்திலே லைட் இருக்கும் அங்கே போய் பாருங்க. இன்னும் 5 நிமிஷத்திலே லைட்டை அணைக்கலைன்னா நான் ரயிலை நிப்பாட்டிடுவேன்” என்று எச்சரித்த அடுத்த நொடி லைட் அணைக்கப்பட்டது. அதே போல அடுத்த சந்தில் அமர்ந்திருந்த மாணவர்களிடம் பேச்சை நிறுத்துமாறு சொல்லிப் பார்த்தேன். பிறகு தான் சப்தம் அதிகமானது. இறங்கி வந்து சப்தம் போட்டவுடன் பேசாமல் படுத்துக் கொண்டார்கள்.

இந்த ஆட்களுக்கெல்லாம் இவர்களுக்கு வந்தால் தான் ரத்தம். அடுத்தவர்களுக்கு என்றால் தக்காளி ஜூஸ் தான் போல!

ooOoo

அன்னா ஹசாரேவை ஹீரோவாக்கி கோடம்பாக்கத்தில் எத்தனை கதைகள் இந்நேரம் உருவாகியுள்ளதோ! கொஞ்சம் கொரியக் குழம்பையும், ஹாலிவுட் மசாலா பொறியலையும் இணைத்து தமிழ் கூட்டாக பரிமாற வேண்டியது தான் பாக்கி!

‘இந்தியன்’ தாத்தா பாணியில் பல தாத்தாக்கள் அடுத்த சில மாதங்களில் ரெடியாகிவிடுவார்கள்.

ஐயோ பாவம் தமிழ் மக்கள்!

தொடர்புடைய படைப்புகள் :

 • தொடர்புடைய படைப்புகள் எதுவும் இல்லை !

2 thoughts on “பாவம் தமிழ் மக்கள்!

 • August 25, 2011 at 5:42 am
  Permalink

  இது எல்லா இடத்திலும் நடப்பது. ஸ்டாண்ட் ஆட்டோவைத் தவிர்த்து மற்றவர்களை ஏற்ற விடமாட்டார்கள்

  Reply
 • August 24, 2011 at 9:23 pm
  Permalink

  அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை உங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடனும் கருத்தோடும் எடுத்து உரைத்துள்ளீர்கள்.நன்றி. ஆமாம் தமிழ் பேப்பர் என்பது ? அது என்ன?

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 24, 2011 @ 1:53 pm