கண்டேன் காதலை

 

'ஜப் வி மெட்' ஹிந்தி திரைப்படத்தின் தழுவலே 'கண்டேன் காதலை'. காதல் தோல்வியாலும் தன் அம்மாவின் காதல் முடிவினாலும் விரக்தியடையும் இளம்தொழிலதிபர் பரத் மனம் போன போக்கில் போகிறார். மதுரை செல்லும் ரயிலில் ஏறி அமர்கிறார். அங்கே தமன்னாவைச் சந்திக்கிறார். முதலில் தமன்னாவின் வாயாடித்தனத்தை வெறுக்கும் பரத் அவரிடம் கோபப்படுகிறார், போகப் போக தமன்னாவின் துறுதுறு பேச்சும் குறும்புத்தனமும் பரத்தைக் கவர இருவருக்குள்ளும் நட்பு மலர்கிறது. தன்னால் ரயிலைத் தவற விட்ட தமன்னாவை அவரது சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு போய் சேர்க்கிறார். அங்கே தமன்னாவிற்கு அவரது தாய்மாமன் சந்தானத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. தமன்னா காதலிப்பதோ முன்னாவை. பரத்தின் உதவியுடன் வீட்டை விட்டு ஓடி ஊட்டியில் உள்ள காதலனைச் சந்திக்கப் போகிறார். தமன்னாவின் நட்பினால் புத்துணர்ச்சி பெற்று சென்னை திரும்பும் பரத் பிரச்சினைகளைச் சரி செய்து தன் தொழிலில் சாதிக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் பரத்தும் தமன்னாவும் காதலித்து ஓடியதாக நினைத்து பரத்தை அணுக, பரத்திற்கு அதிர்ச்சி. தமன்னாவின் நிலை என்ன? பரத்-தமன்னா நட்பு என்னானது? என்பது மீதி சுவாரஸ்யம். 'பயணத்தின் போது கிடைத்த நட்பு ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றி விடுகிறது' என்ற ஒரு வரிச் செய்தியை அழகாகவும் சுவையாகவும் படமாக்கி கைத்தட்டல்களை அள்ளிக் கொள்கிறார் இயக்குனர் கண்ணன்.

தமன்னா துறுதுறு சுட்டிப்பெண்ணாக அசத்தியிருக்கிறார். இவரைப் பார்த்தாலே பரத்திற்கு மட்டுமில்லாமல் பார்க்கும் எல்லாருக்கும்  உற்சாகமும் குதூகலமும்  தொற்றிக் கொள்கிறது. பரத்துடன் இவர் அடிக்கும் லூட்டி இளமைத்திருவிழா. ஆனால் மூலப்படமான 'ஜப் வி மெட்' நாயகி கரீனாகபூரிடம் இருந்த பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு இவரிடம் கிடைக்காதது ஏமாற்றமே, தேனிக்காரப் பெண் பாத்திரம் மாடர்ன் மங்கையான தமன்னாவிற்குப் பொருத்தமாக இல்லை. பரத் அழகாக இருக்கிறார். நன்றாக ஆடுகிறார்,நன்றாக நடிக்கிறார். (பரத்திற்கு ஒரே ஒரு வேண்டுகோள், உதட்டுச்சாயத்தைக் குறைவாகப் பூசினால் போதும், அது பளிச்சென்று தெரிகிறது) அனைவரையும் ரசிக்க வைக்கும் மற்றொரு அம்சம் சந்தானத்தின் காமெடி, கதையை ஒட்டி அமைந்த இவரது காமெடி படத்தின் மிகப் பெரிய பிளஸ்.வித்யாசாகர் இசையில்,'காற்று புதிதாய்','வெண்பஞ்சு மேகம்','ஒரு நாள் இரவில்' பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் மெட்டுக்கள். கண்களுக்கு விருந்து படைக்கும் ஒளிப்பதிவும் கொள்ளை அழகு.

எல்லாம் சரி தான். பரத் தமன்னாவுடன் ஊட்டி வரை செல்கிறார். பல சிக்கல்களில் இருந்து தமன்னாவைக் காப்பாற்றும் பொறுப்புள்ள பரத் ஐந்து நிமிடங்கள் கூட இருந்து தமன்னாவின் காதலனைப் பார்த்து விட்டு சென்றிருக்கலாமே. தன் வீட்டுப் பெண்ணைக் காணவில்லை, தமன்னா குடும்பத்தினர் ஒன்பது மாதங்கள் கழித்தா தேடி வருவார்கள்? லாஜிக் இடிக்கிறதே. 

கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்கள் வருவதே அரிதான நாட்களில் இந்தப் படம் கதையின் நாயகியைச் சுற்றி வருவது ஆறுதல். அருவாள்,ரெளடியிசம்,ஹீரோயிஸம்,துப்பாக்கி,பஞ்ச் டயலாக் ,குத்தாட்டம்,இரட்டை அர்த்த வசனங்கள்,பார்த்து பார்த்து சலித்த காட்சிகள் போன்ற எந்தத் தொந்தரவுகளும் இல்லாமல் இந்தப் படத்தைக் குடும்பத்துடன் ஜாலியாகப் பார்த்து விட்டு வரலாம்.'கண்டேன் காதலை'- சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம்.

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : January 24, 2010 @ 10:18 pm