செல்லாத்தா காளியாத்தா !!

 

கூம்பு வ்டிவ ஸ்பீக்கர்களை கண்டுபிடித்தவனை எங்கிருந்தாலும் பிடித்துக் கொண்டு வந்து கட்டி வைத்து காதருகில் ஸ்பீக்கரை அலற விட வேண்டும்.

ஆடி மாதம் ஆனால் போதும், சந்துக்கு சந்து அலற விட ஆரம்பித்து விடுகிறார்கள்.

எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவின் ‘காளியாத்தா’ பாடல்கள் இன்னமும் பல நூற்றாண்டுகளுக்கு ஒலிபரப்பாகும் போல!

ஆடி மாதமே வெள்ளிக்கிழமை என்றால் கூடுதல் விசேஷமாம். அதிகாலை 4 மணிக்கெல்லாம் எங்கு பார்த்தாலும் பாட்டு ஆரம்பித்து விடுகிறது. 

இது ஒருபுறம் என்றால் இந்த முறை இஸ்லாமியர்களின் நோன்பு நேரமும் சேர்ந்து விட்டது. அவர்கள் மட்டும் விடுவார்களா என்ன?

கிராமப்புறங்களில் மட்டுமல்ல, சென்னையில் கூட பல இடங்களில் இம்சை கட்டி அடித்தார்கள்.

ஒரு வழியாக ஆடி முடிந்ததால் மக்கள் இம்சை இல்லாமல் பக்திப் பரவசமாகிறார்கள்.

ooOoo

போன வாரம் சென்னை கே.கே.நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். திமுக ஆட்சியின் போதெல்லாம் கலைஞர் கருணாநிதி நகர் என்றும் அதிமுக ஆட்சியின் போதெல்லாம் கே.கே.நகர் என்றும் பெயர் மாற்றம் நிகழும் பகுதி இது. போன தடவை திமுக ஆட்சியின் போது அதுவும் சுருங்கி கலைஞர் நகர் என்றானது. “ஐயகோ.. என்னை கருணாநிதி என்று அழைக்கிறார்களே” என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆழ்ந்த வருத்தப்பட்ட நேரம் அது! இதே கதை தான் முகப்பேறுக்கும்! ஜெ.ஜெ.நகர் – முகப்பேறு பெயர் மாற்றம் ஆட்சிக்கு ஆட்சி உண்டு!

சரி.. விஷயத்துக்கு வருவோம்.

கே.கே.நகர் பேருந்து பணிமனைக்கு எதிரில் 4 பேர் கொண்டு டிராஃபிக் போலீஸ் குழாம் அந்த வழியே செல்வோரில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் அதிர்ஷ்டசாலிகள் சிலரை மட்டும் நிறுத்தினார்கள். அதில் நானும் ஒன்று!

ஆச்சரிய அதிசயமாக அதில் இருந்த ஒரு இளைஞர் சிரித்தபடியே, “சார்.. ஹெல்மெட் போட்டுக்கிட்டு போனால் என்ன? உங்க பாதுகாப்புக்கு தானே அது” என்றார். உண்மையிலேயே ஹெல்மெட் அதற்கும் சற்று முன்னர் தான் ஒரு கடை வாசலில் நிறுத்தியிருந்த வண்டியிலிருந்து களவு போனது. ரோட்டில் திரும்பிப் பார்த்தேன். நூற்றுக்கு தொண்ணூற்று ஒன்பது புள்ளி ஒன்பது ஒன்பது பேர்கள் ஹெல்மெட் இல்லாமல் தான் பறந்து கொண்டிருந்தார்கள். “ஸ்பாட் ஃபைன் 50 ரூபாய் கட்ட முடியுங்களா சார்?” என்று பணிவுடன் கேட்டார். அவருடைய பணிவுக்காகவே ஒப்புக் கொண்டேன். கையடக்க மிஷின் ஒன்றில் வண்டி எண் அடித்து எனது லைசன்ஸ் வாங்கி ஸ்கேன் செய்து ஸ்க்ரீனிலேயே கையெழுத்தும் பெற்று கையோடு ரசீது கொடுக்கப்பட்டது. 100 ரூபாய் எடுத்துக் கொடுத்தேன். மீதி 50 ரூபாய் வந்தது!

ஆச்சரியம். ஆனால் இப்படி ஆங்காங்கே ஸ்பாட் ஃபைன் என்ற பெயரில் நம் ஒட்டு மொத்த ஜாதகத்தையும் உருவுகிறார்கள் போல! எந்த டூவீலர் / கார் எந்த லைசன்ஸுடன் சம்பந்தப்பட்டது என்று கொஞ்சம் கொஞ்சமாக டேட்டாபேஸ் தயாராகிறது. நல்ல விஷயம் தான்! 

“ஃபோட்டோ எல்லாம் எடுத்துக்க மாட்டீங்களா சார்?” என்று கேட்டேன். ”அதான் லைசன்ஸ் எடுக்கும் போதே எடுத்திருப்போமே” என்று பதில் வந்தது.

பேச்சுவாக்கில் “சமீபத்தில் தான் லைசன்ஸ் எடுத்திருக்கீங்க போலருக்கு” என்று கேட்டார் அந்த போலீஸ் இளைஞர். “ஆமாம்.. இவ்வளவு ஆண்டுகள் தாய்லாந்தில் இருந்தேன். இப்போது தான் இந்தியா திரும்பியிருக்கிறேன்” என்றேன். “அட.. ஏன் சார் அவசரப்பட்டு வந்தீங்க? இன்னும் நாலஞ்சு வருஷம் கழிச்சு வந்தா அதுக்குள்ளே நம்ம நாடும் நல்லா முன்னேறியிருக்குமே” என்றார் அவர். ”இதில் எதும் உள்குத்து இருக்குதா? நான் வந்ததால அது தடை பட்டுடும்னு நினைக்கிறீங்களா?” என்று கேட்டேன். வாய்விட்டு பலமாகச் சிரித்து வழியனுப்பி வைத்தார்.

காவல்துறையினரும் மாறி வருகிறார்கள்.

oooOooo

“பத்தாயிரம் ரூபாய்க்கு தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா பயணம். தங்குமிடம், உணவு அனைத்தும் சேர்த்து” என்று லோக்கல் பேப்பரில் விளம்பரம் வந்தது. ஒரு சந்தேகத்துடன் தான் ஃபோன் அடித்தேன். ஆறு மாதம் முன்பே முழுத் தொகை கொடுத்து புக் செய்து கொள்ளுங்கள். கல்கத்தா வழியாக ஏர் ஆசியா விமானத்தில் சென்று வர வேண்டும். இங்கிருந்து கல்கத்தாவிற்கு தனித் தொகை. குறைந்தது 5 பேரை நீங்கள் அழைத்து வர வேண்டும் என்று பல கண்டிஷன்கள்.

இந்த மாதிரி டகால்ஜி விளம்பரங்களிலெல்லாம் தொகைக்குக் அருகிலேயே ஒரு * போட்டு விடுகிறார்கள். முன்பெல்லாம் இப்படி * இருந்தால் அதே விளம்பரத்தின் கீழே ஆக பொடி சைஸில் அது என்ன டகால்ஜி என்று விளக்கமளித்திருப்பார்கள். இப்போதெல்லாம் அது கிடையாது. இப்படித்தான் ஒரு புகழ்பெற்ற செல்ஃபோன் விற்பனை நிலையத்தில் ‘பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு எங்கள் நம்பருக்கு மிஸ் கால் கொடுங்கள். உங்களுக்கு ஒரு சஸ்பென்ஸ் பரிசு காத்திருக்கிறது” என்று நாளிதழ்களில் விளம்பரம். பொழுது போகாத பொம்முவாகிய நான் ஒரு மிஸ் கால் கொடுத்துப் பார்த்தேன். “உடனடியாக எங்கள் விற்பனை நிலையத்திற்கு ஓடுங்கள். இந்த எஸ்.எம்.எஸ்.ஸைக் காண்பித்து ஒரு மொபைல் ஃபோன் வாங்கினால் கூடவே ஒரு சாம்ஸங் மொபைல் இலவசம்” என்று கூடவே இலவசத்திற்கு அருகிலேயே * போட்டு வந்தது. அங்கே சென்று கேட்டால் 10,000 ரூபாய்க்கு மேல் ஃபோன் வாங்கினால் 700 ரூபாய் ரேஞ்சுல் ஒரு ஃபோன் இலவசமாகக் கொடுக்கப்படும் என்று பதில் வந்தது. எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கிறார்கள்?!

oooOooo

வடபழனி பகுதியில் ஒரு ஹோட்டலில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது, அருகில் ஒருவர் தன்னுடன் கூட வந்தவரிடம் பேசிக்கொண்டிருந்தார் : “அந்தாளுக்கு சினிமான்னாலே என்னான்னு தெரியாதுபா! நான் அவன் கூடவே இருக்கேன் 17 வருஷமா. என் பேரு என்னைக்காச்சும் வெளில வந்திருக்குமா? ஆனா இண்டஸ்ட்ரியிலே ரகுன்னா சின்ன கொழந்தைக்கு கூட தெரியும். நாளைக்கே நான் தனியா படம் எடுக்கலாம். ஆனா அந்தாளு உப்பைத் திண்ணு வளர்ந்ததால நான் போயிட்டா அவரால ஹிட் படம் கொடுக்க முடியாதேன்னு கூடவே இருந்து தொலைக்கிறேன்” என்று கதை விட்டுக் கொண்டிருந்தார். பேச்சுவாக்கில் அவர் சொல்லும் ‘அந்த ஆள்’ தமிழ்த் திரையுலகின் டாப் 5 டைரக்டர்களில் ஒருவர் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.

கூட அமர்ந்திருந்த நபர் நேற்று முன் தினம் தான் கொட்டாம்பட்டியிலிருந்து சினிமாக் கனவுகளுடன் கோயம்பேட்டில் வந்து இறங்கியிருப்பார் போல! இவர் சொன்னதற்கெல்லாம் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தார்.

யார் கண்டது.. அடுத்த சில வருடங்களில் கோடம்பாக்கத்தின் நம்பர் 1 டைரக்டராக அந்த கொட்டாம்பட்டியார் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை !

தொடர்புடைய படைப்புகள் :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : August 29, 2011 @ 10:52 pm