மங்காத்தா – வெற்று அலப்பறை

 

அறிமுகப் பாடல் இல்லை, எவ்வித ஆக்‌ஷனும் இல்லை, அஜித் அப்படியே வருகிறார். இப்படித்தான் இந்தப் படத்துக்கு விமர்சனம் தொடங்கவேண்டும் என்பது இணைய மரபு. ஆனால் இரண்டுமே பொய். அஜித்தின் அறிமுகமே ஒரு சண்டைக் காட்சியில். அடுத்தது ஒரு பாட்டு, விளையாடு மங்காத்தா. எனவே இது அப்பட்டமான கமர்ஷியல் படமே. கமர்ஷியலுக்கான விறுவிறுப்பைத் தொலைத்துவிட்டு, எங்கே என்ன நடக்கிறது என்று தெரியாமல், யார் யார் எதற்காக என்ன செய்கிறார்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லமுடியாமல், அத்துவானக் காட்டில் அநாதை போலச் சீரழிகிறது படம்.

'வேட்டையாடு விளையாடு’ கமலுக்குப் பிறகு போலிஸ் வேடம் இத்தனை ’கச்சிதமாகப்’ பொருந்துவது அஜித்துக்குத்தான். அச்சு அசல் அமுல் பேபி போல படம் முழுக்க தொப்பையுடன் வருகிறார். நல்லவேளை, ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்பதால் போலிஸ் உடை போடுவதில்லை. தப்பித்தோம். இளமையான அஜித்துக்கு தீனாவிலேயே வயதாகிவிட்டது, த்ரிஷாவுக்கும் வயதாகிவிட்டது, அர்ஜுனுக்கு முகத்தில் சுருக்கம் விழுந்துவிட்டது – இப்படி கிழவர்களை வைத்துக்கொண்டு யூத் படமெடுக்கும் முயற்சி போல இது. படத்தின் ஆரம்பித்தில் ஒவ்வொரு கேரக்டரையாக அறிமுகம் செய்து, ஒவ்வொருவருக்குள்ளும் நட்பு இருக்கிறது என்று இயக்குநர் காண்பித்துத் தீர்ப்பதற்குள் நம் தாவு தீர்ந்துவிடுகிறது. பின்பு எப்படியோ கதைக்குள் வருகிறார்கள்.

சாதாரண கேங் வார் படமாக எடுத்திருக்கவேண்டியதை, ஐபிஎல் மேட்ச் ஃபிக்ஸிங் என்று என்னவெல்லாமோ பூ சுற்றி எடுத்திருக்கிறார்கள். ஐ பில் எல் மேட்ச் ஃபிஸிங் என்று வைத்துக்கொண்டு இவர்கள் படத்தில் சாதித்தது ஒன்றுமில்லை. படத்தின் முதல் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை யாராவது யாரையாவது எதற்காகவாவது சுட்டுக்கொண்டே இருக்கிறார்கள். சீரியஸ்நெஸ்ஸுக்கும் அஜித்துக்கும் சுட்டுப் போட்டாலும் வராது. இப்படத்திலும் அப்படியே. அவர் முகத்தை சீரியசாக வைத்துக்கொள்ளும் காட்சியில்கூட, ஐயோ பாவம் என்னும் ஐயர் பையன் இமேஜ் மட்டுமே வருகிறது. பொருந்தாத முகபாவங்கள், சற்றும் கம்பீரமில்லாத குரல், ஆடவே வராமல் தொப்பையை மட்டும் ஆட்டிவிட்டு கேமராவின் ஃப்ரேமில் இருந்து ஓடும் ஓட்டம் – போன்றவற்றால் எப்போதும்போல் அஜித்தைப் பார்க்க பாவமாக இருக்கிறது. நடிப்பு என்பது இன்னும் எத்தனை படங்கள் கழித்து அஜித்துக்கு வருமோ தெரியவில்லை.

மிக முக்கியமான இரண்டு காட்சிகள் – செஸ் போர்டை வைத்துக்கொண்டு தான் என்ன செய்யப்போகிறேன் எனச் சொல்லும் காட்சி, பணம் தொலைந்தவுடன் கோபத்தில் அடுத்தவனை சந்தேகப்படும் காட்சி – பெரிய அளவில் வந்திருக்கவேண்டிய இந்த இரண்டு முக்கியமான காட்சிகளும் அஜித்தின் ‘நடிப்பால்’ மோசமாக முடிவது பெரிய வருத்தம். தேவையே இல்லாமல் நீள நீளமாகக் காட்சிகள். 

திரிஷா சுத்த வேஸ்ட். நல்லவேளை, கடைசி காட்சியில் அஜித் திரிஷாவை மீண்டும் கைப்பிடிப்பது போல் காண்பிக்காதது ஆறுதல். லக்ஷ்மி ராய் எதற்காக வருகிறார் என்று அவருக்கே தெரியாது. அஞ்சலி தான் இந்தப் படத்தில் வந்தோமா என்ன என்று இன்னும் யோசித்துக் கொண்டிருப்பார் என நினைக்கிறேன்.

யுவன் சங்கர் ராஜா ஒருவர்தான் இப்படத்தின் ஒரே ப்ளஸ். கமர்ஷியல் தேவைக்கான பாடல்கள், ஆக்‌ஷன் படத்துக்குத் தேவையான இசை. தனது ரசனைக்கு ஏற்ற பின்னணி இசை. நண்பனே பாடல் அற்புதம். படத்தில் பாதி பாதியாக குத்தியிரும் குலையுயிருமாக வருகிறது. படத்தில் எல்லா கேரக்டருக்கும் பாடல் உண்டு என்பது இப்படத்தின் புதிய சாதனை. 

’நாளை’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்படுவது இந்தப் படத்தில்தான். எங்கே அர்ஜுனும் அஜித்தும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு என்னை எகிறடிப்பார்களோ என நினைத்தேன்! அதற்குப் பதிலாக, அர்ஜுனும் அஜித்தும் சம்பந்தப்பட்ட ஒரு ப்ளாஷ்பேக்கை கடைசியில் காட்டி கட்டக்கடைசியாய் நம்மையும் ஒரே போடாய் போட்டுவிடுகிறார்கள். எஸ்.வி.சேகர் டிராமா போல கடைசியில் மங்காத்தா பேர் ஏன் வந்தது என்பதற்கு உள்ளே வெளியே என்று ஒரு வசனமும் வைத்திருக்கிறார்கள். இயக்குநர் ‘உயரம்’ தொடும் காட்சி அது!

அஜித்தின் இதுவரையிலான படங்களைப் பார்த்து பார்த்துக் காய்ந்துபோய் கிடந்த அவரது ரசிகர்கள் இந்த ‘தலை’வலியையே சூப்பர் என்று ஆராதிக்கத் தொடங்கிவிட்டார்கள். நீ காதலிக்கிற பொண்ணைவிட உன்னைக் காதலிக்கிற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கோ ரகம்தான்! வேறென்ன செய்யமுடியும். தலை என்றதும் நினைவுக்கு வருகிறது. தல பல இடங்களில் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அர்ஜூனை ஆக்‌ஷன் கிங் என்பதும், இசைஞானி பாடல்தான் பாடணும் என்று சொல்வதும், கடைசியில் அர்ஜுன் ‘இப்ப நான் உன் முதுகு சொறியறேன்’ என்று அஜித்தை தல என்பதும் – குமட்டுகின்றன. 

அஜித் படத்தை முதல் நாளிலேயே பார்க்கவேண்டும் என்றெல்லாம் தோன்றியதில்லை. எப்படியும் படம் நன்றாக இருக்காது என்ற பெரும் நம்பிக்கை எனக்கு உண்டு. அதை முறியடித்ததுதான் இந்தப் படத்தின் வெற்றி. இனிமேல் இது போன்ற எந்த ஒரு விஷப் பரீட்சையும் எடுக்கவேண்டியதில்லை என்பது இதன் விளைவு.

இதெல்லாம் இருக்கட்டும்.

சென்னை – 28, சரோஜா என்ற இரு முக்கியமான திரைப்படங்களை எடுத்த வெங்கட் பிரபு  இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் என்று யோசித்தோமானால், இப்படம் வெங்கட் பிரபுவின் கேரியரில் எப்படிப்பட்ட ஒரு கரும்புள்ளியாக இருக்கும் என்பது புரியும். இரண்டு படங்களில் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்த இளைஞர் வெங்கட் பிரபு, கதையைக்கூட சரியாக யோசிக்கமுடியாமல், ஐபிஎல் ஃபிக்ஸிங், ஒரு கேங்க், போலிஸுக்குள்ளே ஒரு கேங் என்றெல்லாம் ஜல்லி அடித்திருப்பது பெரிய வருத்தம் தருகிறது. இது அஜித் படம் என்று இவர் நினைத்துக்கொண்டிருக்க, இது வெங்கட் பிரபு படம் என்று அஜித் நினைத்துக்கொண்டிருக்க, படம் இரண்டும்கெட்டானாக வெளிவந்திருக்கிறது.

படம் முழுக்க அஜித் கையில் சிகரெட்டுடனும் பாட்டிலுடனும் வருகிறார். நான் அடிப்படையில் குடிப்பதற்கு எதிரானவன். படங்களில் காட்சிகளுக்குத் தேவையற்ற வகையில் புகைப்பதையோ குடிப்பதையோ காண்பிக்கக்கூடாது என்று ஜனநாயக ரீதியில் போராட்டம் நடக்குமானால் அதற்கு நிச்சயம் ஆதரவளிக்கவேண்டும் என்று நினைப்பவன். பாபா திரைப்படம் வந்தபோது ரஜினிக்கு எதிராக பாமக நடத்தியது போராட்டம் அல்ல, அப்பட்டமான மிரட்டல். இத்தனைக்கும் அந்தப் படத்தில் அது கேரக்டருக்குத் தேவை என்னும் வகையில்தான் வந்தது. அதற்கு முன்பு வந்த ரஜினி படங்களில் கேரக்டருக்குத் தேவையில்லை என்ற நிலையில்கூட ரஜினி புகைப்பதையும் குடிப்பதையும் பார்க்கமுடியும். ஆனால் அது அதோடு நின்றுவிடும். இந்தப் படத்தில் அது ஒரு படி மேலே போயிருக்கிறது. குடிப்பது ஒரு கொண்டாட்டம் என்ற வகையில் தொடர்ந்து பல காட்சிகள் இப்படத்தில் வந்தவண்ணம் உள்ளன. இத்தனைக்கும் இது போன்ற காட்சிகள் படத்துக்குத் தேவையே இல்லை என்னும்போதிலும், அஜித்தும் மற்றவர்களும் குடித்துக் கும்மாளம் இடும் நீண்ட காட்சிகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஊற்றிக் கொடுப்பதை பெருமையாகப் பேசும் இணையத்தின் மத்தியில் இதற்கான மறுப்புகளே வரக்கூடும் என்று தெரிந்தும் சொல்கிறேன், இது சரியான போக்கு அல்ல. தனிப்பட்ட அளவில் குடிப்பது வேறு, குடிப்பதை ஒரு கொண்டாட்டமான கலாசாரமாக முன்னிறுத்துவது வேறு.

இன்னொரு விஷயம், முக்கியமான கேரக்டர்கள் உபயோகிக்கும் கெட்ட வார்த்தைகள். படத்தில் ம்யூட் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சியில் அஜித் தேவடியா முண்டை என்று சொல்வது தெளிவாகத் தெரிகிறது. இதுவும் ம்யூட் செய்யப்பட்டுவிட்டது. (இன்னும் இரண்டு நண்பர்களிடம் கேட்டேன், அவர்களும் இதே வார்த்தையைத்தான் அஜித் சொல்வதாகச் சொல்கிறார்கள்.) பொதுவாகவே கெட்ட வார்த்தைகள் பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ‘விக்ரம்’ திரைப்படத்தில் சுஜாதா ‘தேவடியா பசங்க’ என்று எழுதியபோது வந்த விமர்சனங்களை நினைத்துப் பார்க்கிறேன். இப்போது அது முண்ட வரை வந்திருக்கிறது. முண்டை என்னும் வார்த்தையே அடிப்படையில் கேவலமானது. இது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் இயக்குநர்களும், அப்படியே பயன்படுத்தும் நடிகர்களும் இருக்கிறார்கள் என்பதே ஆயாசம் அளிக்கிறது. இதைப் பலர் குறிப்பிட்டு எழுதினால்தான் இதுபோன்ற வார்த்தைகளை இனி வரும் காலத்தில் இயக்குநர்கள் யோசிப்பார்கள் என்பதால்தான் இதனைத் தனியே குறிப்பிடுகிறேன். 

அஜித்துக்கு 50வது படம். தொடர்ந்து ப்ளாப் கொடுத்தாலும் அஜித் எப்படியோ தன்னைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வது ஆச்சரியம்தான். இதில் கொஞ்சம் எளிதாகவே அவர் தக்க வைத்துக்கொள்வார். ஆனால் அஜித்துக்கு வேண்டியது உண்மையான கமர்ஷியல் ஹிட். அது அடுத்த படத்திலாவது அவருக்குக் கிடைக்கட்டும். 

வெங்கட் பிரபுவிடம் இருந்து நாம் எதிர்பார்த்தது இதுபோன்ற வெற்று அரட்டையையோ வெற்று அலப்பறையையோ அல்ல. I am NOT impressed. I expect more! 

தொடர்புடைய படைப்புகள் :

25 thoughts on “மங்காத்தா – வெற்று அலப்பறை

 • September 23, 2011 at 8:52 am
  Permalink

  Ithellam oru vimarsanam. ellarukkum eluthura urimai irukku enpathal enna venalum eluthalama. chellam pathu eluthunga.

  Reply
 • September 17, 2011 at 8:00 am
  Permalink

  Dear Haran,

  Please stop writing such a utter non sense. If u don’t like Ajith. Don’t see his movies. Do write silly things. I haven’t seen the movie. But your review clearly reflects your intention only.

  Reply
 • September 14, 2011 at 10:09 am
  Permalink

  ரஜினி சினிமாவைத்தவிர எந்த சினிமாவும் நல்ல சினிமா இல்லை என்னும் உங்கள் ரசனைக்குப் பாராட்டுக்கள்

  Reply
 • September 12, 2011 at 12:39 am
  Permalink

  // I am NOT impressed. I expect more! // ப்ரச்னை உங்க கிட்ட தான். :))) அஜித் படத்துக்கெல்லாம் எதிர்பார்ப்போட போனா இப்டித்தான்….

  Reply
 • September 7, 2011 at 4:36 am
  Permalink

  Oh very nice that you have gained such numbers of visitors to your blog……your plan was finally achieved….but think will not help to keep updated in Blog world…..always the person who has the real balanced mentality and personality will be there forever…

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கடைசியாக : September 1, 2011 @ 7:52 am